வியாழன், 5 ஆகஸ்ட், 2010

உலகை மாற்ற உணவை மாற்று


இன்றைய உலகம் அழிவுப்பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.நாளுக்கு நாள் குற்றங்களும், இயற்கை சீற்றங்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? மனித குலம் எங்கோ பெரும் தவறு செய்துகொண்டிருக்கிறது. என்ன தவறு? போர், நீதி நூல்கள், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றால் நீதியை நிலைநாட்ட முடியவில்லை. போரினால் அழிவே அதிகம். நீதி நூல்களால் உலகம் திருந்தும் என்றால், திருக்குறள் எழுதியபோதே, உலகம் திருந்தியிருக்கும். அதுவும் திருந்தவில்லை. காவல்துறையும், நீதிமன்றமும் துவங்கினால் உலகம் திருந்தியிருக்கும் என்றால், இப்போது ஒரு குற்றமும் நடக்கக் கூடாது. ஆனால் அதுவும் நடக்க வில்லை. வெறும் சட்டத்தினாலும், கட்டுப்பாடுகளினாலும் உலகை திருத்த முடியாது. சரி, உலகை மாற்ற என்ன செய்யவேண்டும்.

“உலகை மாற்ற உணவை மாற்று”
ஆம், உலகை மாற்ற உணவை மாற்ற வேண்டும். வெறும் உணவை மாற்றினால் உலகம் மாறிவிடுமா? ஆமாம். நம்புங்கள் நண்பர்களே. உணவை மாற்றினால், கட்டாயம் உலகம் மாறிவிடும். நீங்கள் உங்களைக் கொண்டே சோதித்துப் பாருங்கள். பத்து நாளில் மாற்றத்தை உணருவீர்கள்.

சரி. உணவை எப்படி மாற்றுவது. சமைக்காத உணவை சாப்பிட வேண்டும். மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கும் சமைத்து சாப்பிடுவதில்லை. இந்த விடயத்தில்தான், மனித இனத்தில் மாபெரும் தவறு நடக்கிறது. மனித சமுதாயம் செய்த மிகப்பெரும் தவறு, உணவை சமைத்து சாப்பிட ஆரம்பித்தது தான். மனிதன் மட்டும் உணவை சமைத்துண்ணும் பழக்கத்துக்கு அடிமையாகமல் இருந்திருந்தால், பரிணாம வளர்ச்சிப்படி தெய்வ நிலையை அடைந்திருப்பான்.

மனிதன் சைவமா? அசைவமா?
பரம்பரை பரம்பரையாக அசைவ உனவு எடுத்துக் கொள்பவர்களின் நடவடிக்கைகளை கவனித்தால், எளிதாக உணர்ச்சி வயப்படுதலும், மூர்க்கத்தனமும் இருப்பதை கவனிக்கலாம். மேலும் பரிணாம வளர்ச்சி தத்துவப்படி நாம் குரங்கிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. குரங்குகள் பழங்களையே விரும்பி உண்கின்றன. குரங்கைப் போலவே ஏறத்தாழ நாமும் உடல் உறுப்புகளை கொண்டுள்ளோம். எனவே, நாமும் சைவப் பிராணிதான். நமக்கு வேட்டையாடும் விலங்குகளைப்போல மாமிசத்தை கிழித்து சாப்பிட கோரைப்பற்கள் இல்லை. உணவை நன்கு மென்று சாப்பிட கடைவாய் பற்களே உள்ளன. மேலும் அசைவப் பிராணிகள் நீரை நக்கி குடிக்கும். சைவப் பிராணிகள் நீரை உறிஞ்சிக் குடிக்கும். நாம் எந்த வகை என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். மேலும் அசைவ பிராணிகளுக்கு குடலின் நீளம் குறைவாக இருக்கும். சைவப் பிராணிகளுக்கு குடல் நீளமாக இருக்கும். இவை அனைத்தும் மனிதன் சைவம் என்பதை உறுப்படுத்துகின்றது.

எது சரியான உணவு?
நாம் சைவ உணவு உண்ண வேண்டியவர்கள் என்பதை கவனித்தோம். சைவ உணவிலும் சமைத்த உணவுகள், சமைக்காத உணவும் என இரு வகைகள் உள்ளன. இதில் நம்முடைய உணவு என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

1. நிலக்கீழ் உணவுகள்
நிலத்திற்கு கீழ் விளையும் கிழங்கு வகைகள் எலி, பன்றி போன்ற கீழ்வகை விலங்குகளுக்கானவை. பூண்டு, வெங்காயம் மற்றும் ஏனைய கிழங்கு வகைகளும் இதில் அடங்கும். இத்தகைய விலங்குகளின் மூக்கு அதற்கேற்ற தன்மையில் அமைந்துள்ளதை காணலாம்.

2. நிலமேல் உணவுகள்
நிலத்திற்கு மேல் விளையும் செடி வகைகள் ஆடு, மாடு மற்றும் குதிரை போன்ற மேயும் தன்மை கொண்ட விலங்குகளுக்கானவை. அவற்றின் ஜீரண மண்டலம் உணவை அசை போட்டு உண்ணுவதற்கேற்ப அமைந்துள்ளது. அரிசி, பருப்பு போன்ற

3.தானிய உணவுகள்
அரிசி, பருப்பு, சோளம் போன்ற தானிய உணவுகள் பறவைகளுக்கானவை. அவற்றின் மூக்கு மற்றும் வாய் தானியங்களை கொத்தி உண்பதற்கேற்ப அமைந்துள்ளதைக் காணலாம்.

4. பழங்கள் மற்றும் கொட்டை பருப்புகள் (Fruits and nuts)
மனிதர்களின் கையும் முகவாய் அமைப்புகள் பழங்கள் மற்றும் கொட்டை பருப்புகள் (Fruits and nuts) உண்பதற்கேற்ப அமைந்துள்ளதை காணலாம். அதுவும் தென்னை, பனை, வாழை, பப்பாளி போன்ற மரங்கள் புவியீர்ப்பு விசையை எதிர்த்து ஒரே கிளையாக மேல் நோக்கி வளர்வதால் அவற்றில் கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கு உயிராற்றல் மிகவும் அதிகம். அதன்பிறகு வருவன பல கிளைகளுடன் கூடிய மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள். மனிதனின் உணவு, இந்த வகை உணவுகளே.

உணவுகளின் வகைகள்
1. ஒரு கிளை மரங்கள்: தென்னை, பனை, வாழை, பப்பாளி. 
2. பல கிளை மரங்கள்: மா, பலா, சப்போட்டா போன்றன
3. செடிகள் கொடிகள்: திராட்சை, மாதுளை போன்றன
4. காய் வகைகள்: புடல், பீர்க்கன், பாகல், முருங்கை
5. புவி கீழ் உணவுகள்: சேனை, உருளை, பீட்ரூட், முள்ளங்கி போன்ற பூமிக்கடியில் விளையும் கிழங்குகள்
6. பால் பொருட்கள், முட்டை
7. வெள்ளிறைச்சி-(White Meat)- மீன் வகைகள்
8. செவ்விறைச்சி-(Red Meat): ஆடு, மாடு, பன்றி கோழி போன்ற இறைச்சி வகைகள்.

இதில் நாம் எந்த நிலையில் உள்ள உணவுகளை உண்ணுகிறோமோ அதற்கேற்பவே நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் இருக்கும்.

தவறான உணவு:
அசைவம் உண்பது தவறானது என்றும் கெடுதலானது என்றும் இன்று மக்களிடையே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது. ஆனால் பால், முட்டை போன்ற உணவுகள் அதிக கால்சியம், புரதச்சத்துக்கள் கொண்ட ஒரு முழுமையான உணவு என்றும் அதை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து ஆங்கில மருத்துவர்களலால் பரவலாக கூறப்படுகிறது. மக்களும் அதை நம்பி, அவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதில் இரண்டு கருத்துக்களை சிந்தித்துப் பார்த்தால், சந்தேகமின்றி அவை தவறான உணவுகள் என புலப்படும்.

மாடுகள் பால் கறப்பது நமக்காக இல்லை. அவற்றின் கன்றுக்குட்டிகளுக்காகத்தான். மாட்டுப்பால், கன்றுக்குட்டியின் ஜீரண மற்றும் உடல் வளர்ச்சிக்கேற்றவாறான தன்மையையே கொண்டிருக்கிறது. கன்றுக்குட்டிக்கான பாலை, நாம் திருடி உண்பது நிச்ச்யம் இயற்கை அல்ல. குழந்தைகளுக்கு ஏற்றது மாட்டுப்பால் அல்ல. தாய்ப்பால்தான்.

மேலும் பாலில் இருப்பதாகக் கூறப்படும் கால்சியம், புரதச்சத்து மாட்டுக்கு எப்படி கிடைத்தது? இலை, தழைகளை உண்பதால் அவற்றுக்கு கிடைத்தது. நாமே அத்தகைய உணவுகளை நேரடியாக எடுத்துக் கொள்ளலாமே. குழந்தைகளுக்கு, பால் புகட்டுவதை நிறுத்தினால் சளி தொந்தரவுகள் குறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

இயற்கை உணவு உண்டால் பலம் குறைவு என்பவர்கள், யானையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். யானை யாருடைய பாலையும் திருடி உண்பதில்லை. முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடுவதில்லை. சைவ உணவுகளுக்கு தள்ளும் சக்தி (Pulling Strength) உண்டு. அசைவ உணவுகளுக்கு கொல்லும் தன்மைதான்(killing strength) உண்டு. மனிதன் போரினால், தனது இனத்தையே அழித்துக் கொண்டிருக்கும் முட்டாளாக வாழ்ந்து வருகிறான்.

இயற்கை உணவு எவ்வாறு செயல்படுகிறது?
சைவ உனவு வேறு, இயற்கை உணவு வேறு என்பதை நாம் முதலில் உணர வேண்டும். சைவ உணவு என்பது செடி, கொடி, மரங்களிடம் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை அடுப்பிலேற்றி சமைத்து உண்பது. சமைக்கும் போது உணவு செத்துவிடுகின்றது. உயிராற்றல் இழந்த உணவுகளை உண்பதாலேயே, நாமும் அல்ப ஆயுளில் போய் விடுகிறோம்.. வீதிக்கொரு மருத்துவமனை, சந்துக்கொரு மருந்துக் கடை என பெருகி வருகிறது. இதில் சிலர், பால் மற்றும் முட்டையையும் சைவ உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இவை அனைத்தும் உணவுகளே இல்லை. இயற்கை உணவு என்பது, இயற்கை அன்னை தரும் பழங்களும் கொட்டை பருப்புகளுமே. நாமாக எந்த மாறுதலும் செய்யாமல் அப்படியே நன்றாக மென்று சாப்பிடுவது தான் சிறந்த உணவு.

ஒரு சுத்தமான சக்தி நம் உடலில் சேரும்போது நம் உடல் தூய்மை அடைந்து அழுக்குகள் வெளியேறுகிறது. அந்த சுத்த சக்தி என்பது வெயில், மழை, பழங்கள், பச்சை தண்ணீர் என பல விதங்களில் நமக்கு கிடைக்கிறது. மழையில் நனைந்தால் சளி பிடிப்பது, வெளியில் சென்றால் தலை வலிப்பது, பச்சை தண்ணீர் குடித்தால் காய்ச்சல் வருவது, பழங்கள் உண்டால் வயிற்றலைச்சல், வாந்தி, சளி பிடிப்பது ஆகியன கழிவுகள் வெளியேற்றமே ஆகும். இயற்கை உணவு உண்ணும்போது இத்தகைய குறிகள் தோன்றினால், நாம் மகிழ்ச்சியடையவே வேண்டும். மருத்துவ மனைக்குச் செல்லவேண்டியதில்லை. இதற்கு மருத்து சாப்பிட்டால், கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கி விடும். இயற்கை உணவு உண்டால், நோய்கள் முதலில் குணமடைய ஆரம்பிக்கும். பிறகு மனநிலையும் சிறிது சிறிதாக மாற்றம் அடையும். கோபம், காமம், பொறாமை போன்ற தீய குணங்கள் மறைந்து அன்பு, காதல், சகிப்புத்தன்மை போன்ற நல்ல குணங்கள் வளர ஆரம்பிக்கும்.

ஒவ்வொருவரும் இயற்கை உணவிற்கு மாறினால் நாளை உலகம் எப்படி மாறும் என்பதை நாம் எண்ணிப்பார்க்கலாம். பெறுபவர்களை விட கொடுப்பவர்கள் அதிகமானால், உலகில் துன்பமேது.

இயற்கை உணவுக்கு மாறுவது எப்படி?
முழு இயற்கை உணவை உண்டு இன்னும் நம்மில் பெரும்பாலோனோர் பழகவில்லை. எனவே, தீராத வியாதிகள் வந்து உயிருக்கு போராடுபவர்கள் மட்டும், எடுத்த எடுப்பில் முழு இயற்கை உணவுக்கு மாறவேண்டும்.

மற்றவர்கள் சிறிது சிறிதாக ஆரம்பிக்க வேண்டும். நம்மிடம் உள்ள காபி, டீ குடிப்பது, பீடி சிகரெட் குடி, போதை போன்ற பழக்கங்கள் நம்மிடம் சிறிது காலம் மட்டுமே உள்ளவை. அவற்றை மாற்றவே பெரிதும் சிரமப்படுகிறோம். ஆனால் மனிதன் சமைத்துண்ணும் பழக்கத்தை ஆரம்பித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டது. எனவே அவை நம் உடலில் பழக்கமாக பதிந்து விட்டது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை வரும் போது, சமைத்துண்ணும் பழக்கம் வழிவழியாக வந்த ஒன்றாகும். எனவே இதை மாற்ற மிகுந்த தெளிவும் மன வலிமையும் வேண்டும். முதலில் ஒரு வேளை உண்ணலாம். பிறகு சிறிது சிறிதாக இயற்கை உணவை அதிகரித்து சமையலுணவை குறைத்து, இயற்கை உணவுக்கு மாற வேண்டும்.

சமையலுணவின் மேல் ஏக்கம் ஏற்படவே செய்யும். அதிலிருந்து மீண்டு வர யோகா, தியானம், மூச்சு பயிற்சி மற்றும் அக்கு பிரஷர் போன்றன உதவும். இவை யாவும் ஒன்றுக்குகொன்று உதவும் தன்மையன. இயற்கை உணவு, யோகா, தியானத்திற்கு தேவையான மன ஒருமைப்பாட்டையும் உடல் நெகிழ்வு தன்மையையும்(Flexibility) தரும். யோகா மற்றும் தியானம் சமையலுணவின் மேல் ஏக்கம் வராமல் இருக்க உதவும். மன வளக்கலை மன்றங்களில் சொல்லித்தரப்படும் எளிய முறை உடற்பயிற்சிகள் மிகுந்த பயனளிப்பனவாக உள்ளன. முன்பு குறிப்பிட்ட உணவு அட்டவணையில் உள்ள உணவில் கீழிருந்து மேலாக நாம் ஒவ்வொரு உணவையும் விட முயல வேண்டும்.

இயற்கை உணவு அதிக செலவு பிடிக்குமா?
இயற்கை உணவை உண்ணுங்கள் என்று யாருக்கேனும் சொன்னால், அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, அதிக செலவாகுமா? என்பதேயாகும். “வெளி விதி” எனப்படும் space Law என்ன சொல்கிறதென்றால், எங்கு என்ன பொருள் கிடைக்குமோ, அங்கு அதை சாப்பிடவேண்டும். மனிதர்களைத்தவிர வேறு எந்த மிருகமும் உணவை இறக்குமதி செய்வதில்லை. அவை வாழும் பகுதியிலேயே கிடைக்கும் உணவை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறது. நாமும் அதையே பின்பற்றலாம். நம் நாட்டில் சகாய விலைக்கு கிடைக்கும் தேங்காயும், வாழைப்பழமுமே முழுமையான இயற்கை உணவாகும். மற்ற பழங்களை அவரவர் வசதிற்கேற்ப வாங்கி உண்ணலாம்.

இயற்கை உணவுக்கு மாறிவிட்டால், பால், சர்க்கரை, அரிசி, மளிகைப்பொருட்கள், காப்பி, டீ தூள், கேஸ் தேவை இருக்காது. முக்கியமாக மருந்து செலவு குறைகிறது. சிறிது நாட்களில் மருந்தின் தேவை இல்லாமலேயே போகிறது. மன நிலையில் நல்ல மாற்றங்கள் வந்து ஆடம்பர மோகம் குறைந்து, எளிமையான வாழ்வையே மனம் விரும்புகிறது. மேலும் எண்ணைய், சோப்பு, அலங்கார பொருட்கள், ஷாம்பு, கிரீம் போன்றன நாளடைவில் தேவையில்லாமல் போகிறது. சருமம் இயற்கையாகவே பொலிவடைந்து விட்டால், அழகு சாதனப் பொருட்கள் தேவையில்லையே.

இயற்கை உணவை தயார்செய்வது மிகவும் எளிமையான செயலாகும். சமைக்கும் நேரத்தில் கால் பங்கு நேரம் கூட தேவையில்லை. கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் குடும்பங்களில், காலை நேர போராட்டம் முற்றாக மாறிவிடும். சமைத்துண்ணும் உணவை விட, இயற்கை உணவுக்கு செலவு குறைவுதான் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள இயலும்.

ஜீவ காருண்யம்:
இறந்த விலங்குகளை உண்டு, மொபைல் சுடுகாடாக நம் உடலை மாற்றிக் கொண்டுள்ள நிலையில், ஜீவ காருண்யம் என்பது சிரிப்பையே வரவழைக்கும். ஆனால் இன்று செடி கொடிகளுக்கும் உயிரும், உணர்ச்சியும் உள்ளது என்பது விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் பழ உணவை உண்ணூம் போது எந்த மரத்தையும் அழிப்பதில்லை. கீரைக்காகக் கூட நாம் அந்த செடியையே அழிக்கிறோம். ஆனால் பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி இயற்கையன்னை நமக்கு தரும் பழங்களை நாம் உண்ண, நாம் அந்த மரத்தை அழிக்க வேண்டியதில்லை. மேலும் நாமும் உண்டுவிட்டு எறியும் கொட்டையினால் ஒரு உயிர் உருவாகிறது. ஆனால் நாம் சமைத்துண்ணும் போது நாம் மூச்சு விட உபயோக்கும் போது ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடாக மாறி சுற்றுச்சூழலை கெடுப்பதுடன் காற்றில் நம் கண்களுக்கு தெரியாமல் உள்ள எண்ணிலா உயிரினங்களை அழிக்கிறோம். எனவே உண்மையான வள்ளலாரின் ஜீவ காருண்யம் நாம் பழ உணவை உண்பதிலேயே உள்ளது.

உலக பிரச்சினைகள் அனைத்துக்கும் ஒரே தீர்வு: இயற்கை உணவு
இயற்கை உணவு நம் உடலுக்கு என்ன செய்கிறது என்பதை காண்போம். மேலும் அது மனதுக்கு என்ன செய்கிறது என்றும் உலகுக்கு என்ன செய்யும் என்பதையும் காண்போம். நம் உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. நாம் நன்கு தூங்கி எழுந்து காலையில் மலர்ச்சியுடன் இருப்பதும் பணிகளுக்குப் பிறகு மாலையில் அயர்ச்சியுடன் இருப்பதும் நம் அன்றாட வாழ்வில் நடப்பதாகும். அயர்ச்சியும் அலுப்பும் இருக்கும்போது நாம் எளிதில் கோபம், வெறுப்பு, எரிச்சல் போன்ற உணர்வுகளுக்கு ஆளாவோம். இதனால், நம் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் உள்ள தொடர்பை எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.

இயற்கை உணவு நம் மன நலனுக்கு என்ன செய்கிறது? முதலில் நம் உடல் நோய்கள் குணமாகத் தொடங்குகின்றன. உடல் நோய்கள் குணமாக, குணமாக நாம் மனதளவில் வலிமை உடையவர்களாக மாறுகிறோம்.

வெறுப்பு - அன்பாகவும்,
காமம் - காதலாகவும்,
பிடிவாதம் - வைராக்கியமாகவும்,
பொறுமையின்மை - நிதானமாகவும்,
கோபம் - சகிப்புத்தன்மையாகவும்,
ஆடம்பரம் - எளிமையாகவும்,
உலக ஆசைகள் - தெய்வீகமாகவும்

மாற்றம் அடைகின்றன. நம் எண்ணங்கள் வலிமை அடைகின்றன. தனி மனிதனுக்கு இத்தனை நன்மைகள் செய்யும் இயற்கையன்னை உலகுக்கு என்ன செய்யும் என்பதையும் காண்போம்.

நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்

1. உலகில் போர், வன்முறை, தீவிரவாதம், இன, மத, சாதி, நாடுகளுக்கிடையேயான மோதல்கள் குறைந்து, பிறகு இல்லாமல் போய்விடும்.

2. மேற்கண்டது நடந்து விட்டால், பிறகு காவல் துறை, நீதி, சட்டத்துறைகளுக்கு தேவை இருக்காது. எந்த மிருகமும் சட்டம் போட்டு, சட்டப்படி வாழ்வதில்லை.

3. பெண் விடுதலை கிடைக்கும். ஆண்களின் மனநிலையில் ஏற்படும் மாறுதலால் அவர்கள் பெண்களை அடிமை என்று எண்ணாமல், அவர்களையும் ஒரு உயிராக கருதி மதிப்பு தருவர். இல்லறம் நல்லறம் ஆகிவடும். திருமண முறிவுகள் குறைந்து விடும். ஏன் விவாகரத்துகள் இல்லாமல் கூட போய்விடும். பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து அவர்களின் நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கும் சமையல் தொழிலிலிருந்து விடுதலை கிடைக்கும்.

4. உணவுப் பஞ்சம்: ஆப்பிரிக்க நாடுகள் உணவு பஞ்சத்தால் குழந்தைகள் கூட உயிரிழப்பதை காண்கிறோம். அதே சமயம் உலகில் உணவில்லாமல் இறப்பவர்களைவிட உணவுண்டு நோயால் இறப்பவர்களே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. உணவால் ஒரு பக்கமும், உணவில்லாமல் ஒரு பக்கவும் மக்கள் அழிவது இந்த உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இயற்கை உணவு உட்கொள்ள ஆரம்பிக்கும் போது, அதிக உணவு தேவையிருப்பது போல் தோன்றும். பிறகு நம் உடல் நலம் அடைந்த பிறகு உணவின் அளவு பெருமளவு குறைந்து விடுகிறது. சிறிது சிறிதாக குறையும் உணவின் அளவு, 3 (அ) 4 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 2 வேளை என்று வந்து விடும். இது நாம் எந்த அளவு மன வலிமையுடன் கடைபிடிக்கிறோம் என்பதை பொறுத்தது. நமது உணவின் அளவு குறையக் குறைய நம்முடைய உணவு மற்றவர்களுக்குப் போய்ச் சேரும். ஒருவர் உண்ணும் உணவை மூவர் உண்ணலாம். பிறகு உலகில் உணவுப்பஞ்சம் ஏது? அமெரிக்கா போன்ற நாடுகள், பிறர்க்கு கொடுக்க மனமில்லாது, உணவுப் பொருட்களை கடலில் கொட்டும் அவலம் இனி நடக்காது.

5. சுற்றுப்புற சீர்கேடு: நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறினால், சுற்றுப்புறத்தை பாதுகாக்க சங்கம் அமைத்துப் போராட வேண்டியதில்லை. சுற்றுச் சூழல் தானாகவே தூய்மை அடைந்து விடும்.

6. பிளாஸ்டிக்: பழங்களை பேக் செய்ய வேண்டியதில்லை. அப்படியே கடைகளிலிருந்து வாங்கி வந்து பயன்படுத்தலாம். எனவே கேரி பேக், டின் ஃபுட் போன்றவற்றால் உருவாகும் மக்காத குப்பைகள் முற்றிலும் ஒழிந்து விடும். எனவே மண்ணை விஷமாக்கும் பிளாஸ்டிக்கில் இருந்து உலகுக்கு விடுதலை அளிக்கலாம்.

7. மண் அரிப்பு, வெள்ளம்: நாம் காடுகளை அழிப்பதாலேயே மண் அரிப்பு ஏற்படுகிறது. மரங்கள் போதிய அளவு இல்லாததாலேயே வெள்ளத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. நாம் இயற்கை உணவுக்கு மாறினால், இயற்கை பழ உற்பத்திக்கு விவசாயிகளும் பொதுமக்களும் மாறிவிடுவர். பிறகு மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தானிய உற்பத்தி செய்யும் வயல்கள் கனிகள் தரும் சோலையாகிவிடும். மண் அரிப்பு, வெள்ளம் தடுக்கப்படும். பிராண வாயு, வளிமண்டலத்தில் அதிகரித்து நமக்கு சுவாசிக்க அதிகமான காற்று கிடைக்கும் சுவாசக் கோளாறுகள் நெருங்காது.

8. புவி வெப்பமடைதல்: இன்று வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் நச்சுக் காற்றினால் உலகம் வெப்பமடைந்து, துருவ பனிக்கட்டிகள் உருகி, உலகம் நீரில் மூழ்கி விடும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இயற்கை உணவினால் இயற்கையாகவே இதற்கு தீர்வு உண்டாகும். வீடுகளில் அடுப்பே தேவையில்லை எனும்போது எவ்வளவு எரிபொருள் மிச்சமாகும் என்பதை கற்பனை செய்யுங்கள்.உலகம் சோலைகளானால் வெப்பமாவது தவிர்க்கப்படும். மேலும் சமைக்காததால் பிராணவாயு காக்கப்படுகிறது.

9. நில நடுக்கம்: நிலநடுக்கங்கள், நாம் அணைகளில் தண்ணீர் சேமித்து வைப்பதால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. நாம் சோலைகளுக்கு மாறிவிட்டால், விவசாயத்திற்கு தண்ணீர் பெருமளவில் தேவைப்படாது. இலைகள் கீழே விழுந்து மக்குவதால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும். அதிக நீர் தேவைப்படாது. சிறிய தடுப்பணைகளே போதும். இதற்கு வழிகாட்ட இயற்கை விவசாயிகள் பெருகி வருகின்றனர்.

10. இயற்கை வேளாண்மை: தற்போது உரம், மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள்லல் மண் மலடாகி வருகிறது. நாம் உணவுடன் இராசாயனத்தையும் சேர்த்து உண்டு, நம் உடலையும் விஷமாக்கி வருகிறோம். கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட நோய் வரும் அளவுக்கு நாம் சுற்றுச் சூழல் கெட்டு விட்டது. ஆனால் நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள், இயற்கை வித்தால் செலவில்லாமல் “லோ பட்ஜெட்” முறையில் விவசாயம் செய்யமுடியும் என்று சாதித்துக் காட்டியுள்ளனர்.

உலகிற்கு அவசர, அவசிய தேவைகள்

தற்போது உலகை அழிவிலிருந்து காக்க உலகிற்கு அவசர/அவசிய தேவைகள் மூன்று.

1) இயற்கை உணவை பின்பற்றி அறிந்து கொண்டு தானும் பின்பற்றி மற்றவர்களுக்கும் இதை கொண்டு செல்வது.

2) பழ மரங்கள் நட்டு வளர்ப்பது

3) சுற்றுச் சூழல் கெடாமல் இருக்க பெட்ரோல், டீசல், எல்.பிஜி போன்றவற்றின் பயன்பாட்டைக் குறைத்து சூரிய ஆற்றலை பயன்படுத்துவது. அதற்குரிய தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இறங்குவது. மனிதனின் அத்தியாவசிய தேவையயகிய உணவு, உடை இருப்பிடத்துக்கு இவற்றைச் செய்தாலே போதும். மற்றவை எல்லாம் மனிதனின் பேராசைக்கானவை.

நன்றி: -திருமதி ரதி லோகநாதன்
(சில பகுதிகள் விடுபட்டுள்ளன)

புதன், 4 ஆகஸ்ட், 2010

கண்ணை விற்று சித்திரம் வாங்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்...

புவி வெப்பமாதலில் இருந்தும் ஓசோன் மண்டலத்தில் விழுந்த ஓட்டை வழியாக வரும் புறஊதாக் கதிர்களில் இருந்தும் பூமியைக் காப்பாற்றும் வழியைக் கண்டுபிடித்தாயிற்றா? 

துருவப் பனிமலைகள் உருகுவதால் உலகின் ஒருபாகம் விரைவில் கடலில் மூழ்கப் போகிறதே அதற்குத் தீர்வு கண்டாயிற்றா? 

அணுக்கழிவுகளை ஆபத்தில்லாமல் ஆக்குவதில் வெற்றி கண்டு விட்டீர்களா? 

அல்லது புலிவாலைப் பிடித்த கதையாக இன்னும் திணறிக்கொண்டுதான் இருக்கிறீர்களா? 

ஐயா விஞ்ஞானிகளே! நீங்களும் மக்களாகிய நாங்களும் கொஞ்சகாலத்தில் போய்ச்சேர்ந்து விடுவோம். 

நமது அடுத்த சந்ததிகள் வாழ்வதற்கு வழி இல்லாமல் பூமியைக் கெடுத்துவிட்டு செல்லாமல் இருப்பதற்கு முதலில் வழி கண்டு பிடியுங்கள்! 

அடுத்து வரும் காலங்களிலாவது பூமியை மாசுபடுத்தாத அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! 

கண்ணை விற்று சித்திரம் வாங்கும் அறிவியலுக்கு விடை கொடுங்கள்!.

(இணையத்தில் கண்ட குமுறல் வரிகள்..)

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

"மருந்தே உணவு; உணவே மருந்து"

உங்களுக்கு நோய் ஏற்படும்போது மருத்துவரைப் பார்க்கிறீர்கள். மருந்து கொடுக்கிறார்.  நோய் குணமாகி விடுகிறது. 

இப்படி இருக்கும் வரை சரி.


நோய் உருவாகிறது. மருத்துவர் மருந்து கொடுக்கிறார். நோய் தற்காலிகமாக குணமாகிறது. தொடர்ந்து மருந்து சாப்பிடுகிறீர்கள். நோய் தீர்ந்தபாடில்லை. நீண்ட காலம் மருந்து எடுக்கிறீர்கள். மருந்துகளால் வேறு உபாதைகள் வருகின்றன. அதற்கும் வேறு மருந்துகள் எடுக்கிறீர்கள். மருந்துகளின்றி உங்களால் வாழ முடியாத நாள் ஒன்று வந்துவிடும். அப்போதும் விசுவாசத்தோடு அதே மருந்துகளையும் கொஞ்சமும் மாற்றமின்றி அதே உணவுகளையும் உண்டு வருகின்றீர்கள்.

சித்தா, ஹோமியோ பக்கம் போவதற்கு பயம். நோய் தீர்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்று நீங்களே ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள். அறுவை சிகிச்சை, விபத்து காயங்கள் மற்றும் இதய நோய்கள் போன்றவற்றுக்கு ஆங்கில மருத்துவத்திற்கு ஈடு இல்லைதான். ஆனால், சர்க்கரை நோய்? ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்தவே முடியாத ஆனால் எல்லோருக்கும் இருக்கக் கூடிய வியாதி என்றால் இந்த நீரிழிவு நோய்தான். எப்போதாவது மாற்று மருத்துவத்தை நாடியுள்ளீர்களா? இந்த நோயை, வெறும் உணவுக் கட்டுப்பாட்டால், ஒரு மாதத்தில் குணமாக்க முடியும் என்று ஒரு ஆள் அடித்துக் கூறுகிறார். நம்ப முடிகிறதா? சைனஸ் தொல்லையா, கவலையை விடுங்கள், இரண்டு மாதத்தில் குணமாக்குகிறேன் என்கிறார் அவர்.

இத்தனையும் வெறும் உணவுக்கட்டுப்பாட்டால் மக்களே! எந்த மருந்தும் தராமல், உணவையே மருந்தாக்கி சரி செய்கிறேன் என்கிறார்.

(அட! இவர் இன்னொன்று சொல்கிறார். வெறும் இயற்கை உணவு மட்டும் உண்டு வாழ்ந்தால் பல் துலக்க வேண்டாமாம்)

நீங்கள் உடனே, வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் மூ.ஆ.அப்பன் அவர்கள் (மேலே குறிப்பிட்ட 'அந்த ஆள்') எழுதிய "இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து" என்னும் நூல். வெறும் தேங்காய் பழத்தை மட்டுமே உண்டு வாழ்ந்தவர் அவருடைய அண்ணன். தன் மகனுக்கு வயிற்றில் அடிபட்டு காயம் ஏற்பட்ட போது, வெறும் தேங்காய் எண்ணெய், தேன் கொண்டு குணமாக்கியவர் தான் அவரது அண்ணன் திருமிகு ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள். 

இவருடைய அடிப்படை கொள்கை:

இயற்கையாக விளைந்த பழங்கள் மட்டுமே உண்ண வேண்டும். இதுவே ஒவ்வொரு மனிதனுக்குமான ஏற்ற உணவு. எல்லோரும் அதையே உண்ண வேண்டும்.

“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் புரட்சித்தலைவர் சொல்வாரே “நோயில்லா உலகத்தை உருவாக்குவதே என் இலட்சியம்” என்று. இது சாத்தியம் என்கிறார் இந்த மதுரைக்காரர். (திருச்செந்தூர்க்காரர்)

இவருடைய வேண்டுதல்:

• முடிந்தவரை பழங்களே உண்ணுங்கள்.(தேங்காய் உண்ணலாம்).
• இல்லையேல் வேகவைக்காத பருப்புகள், கொட்டைகள் சாப்பிடுங்கள்.
• முடியவில்லை எனில் உப்பில்லாத வேகவைத்தவை. அதுவும் முடியவில்லை எனில் “உப்பு குறைந்த உணவுகள்” உண்ண வேண்டும்.
• அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும்.
• கட்டாயமாக பொரித்த, அசைவ உணவுகளை உண்ணாதீர்கள். கட்டாயமாக வெள்ளைச் சீனி சேர்க்காதீர்கள். கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை நல்லது.

வெறும் உணவினால் நோய் குணமானால் நல்லதுதானே!

நன்மைகள்:

நோய் உள்ளவர்கள் இயற்கை உணவை உண்ணலாம். நோயே வராதவர்கள் எதற்காக உண்ண வேண்டும். இனிமேல் நோய் வராமல் இருக்கவும், கீழ்க்காணும் நன்மைகள் கிடைக்கவும் எல்லோரும் இயற்கை உணவை உண்ண வேண்டும்.

1. ஊளைச் சதை முற்றிலும் மறைந்து விடும். நீங்கள் அழகான வடிவம் பெறுவீர்கள். ஊளைச் சதைக்கு அழகு நிலைய மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை. கூடவே, இதனால் தோன்றும் மூட்டுவலி, இடுப்பு வலி போன்றனவும் மறைந்து விடும்.

2. மலச்சிக்கல் வரவே வராது. மலச்சிக்கல் தான் பல நோய்களுக்கு காரணம்.

3. தோல் நன்றாக பொலிவு பெறும். தோல் கருப்படைதல், புள்ளிகள் தோன்றுதல் போன்றன இருக்காது.

4. நன்றாக பசி எடுக்கும். வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும். உடல் நீங்கள் சொன்னதுபோல் கேட்கும். இளமைத் தோற்றம் மாறாது. (ஆமாம் மக்களே! தோல் சுருக்கம், கண்களுக்கு கீழ் கருவளையம் போன்றன தோன்றாது. நானே கண்கூடாக கண்டிருக்கின்றேன்)

5. எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனம் அமைதியாக இருக்கும். பதற்றம் தோன்றாது.

6. முடி நரைக்காது. முடி உதிராது.
வேறென்ன வேண்டும்.?

உலகப் புகழ் பெற்ற சீன மருத்துவத்தின் கொள்கைகளை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். (கூடவே ஆங்கில மருத்துவத்துவத்தையும், மருத்துவமனைகளையும் செலவுகளையும் எண்ணிப்பாருங்கள்)

ஒரு மருத்துவர் நோயாளியின் நோயை முதலில் உணவின் மூலமே குணப்படுத்த வேண்டும். அது முடியாமல் போகும் போது (அல்லது உணவால் குணப்படுத்த இயலாத நோய் என்று தெரிந்தால்) அக்கு பிரஷர், அக்கு பங்சர், தொடுதல், ஒத்தடம் கொடுத்தல், மசாஜ் செய்தல் முறைகளில் நோயை குணமாக்கிட வேண்டும். இவற்றினாலெல்லாம் முடியாத நிலையில்தான் மருந்து கொடுக்க வேண்டும்.

குறள் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்”
பொருள்: உணவு செரித்த பின்பு உண்டால், உடலுக்கு மருந்து தேவையில்லை.

(நன்றி: இணையம். நீண்ட நாட்களுக்கு முன்பு இணையத்தில் படித்தது.  எதில் என்று நினைவில் இல்லை. இயற்கை உணவு உண்டு சுய அனுபவத்தில் மேற்கண்ட செய்திகள் உண்மை என்று உணர்ந்த பின்னர் இந்த பதிவை வெளியிடுகிறேன். )


இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 

இடம்: இயற்கை வாழ்வு நிலையம் 
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்) 
குலசேகரன் பட்டினம் 
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். 

ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள: 
திரு. மூ.ஆனையப்பன், 
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )
9944042986, 9380873465 

நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.

வெள்ளி, 30 ஜூலை, 2010


இயற்கையை பற்றிய மேலான சிந்தனைகள்..10 Great Quotes On Nature

இரத்தம் ஒரே நிறம் ஆனால் அதிலும் கூட குருதி பேதம் ஏன்?
நான்கு வகையான இரத்த வகைகளுக்கும் ஏற்ற சரியான உணவு எது?

அன்புள்ள வலைப் பதிவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இங்கே எழுதுகிறேன். அமர்நாத்-வைஷ்ணோதேவி புனித யாத்திரையில் இருந்து கடந்த வாரம் தான் இல்லம் திரும்பினேன். பயணம், இறைதரிசனம் அனைத்தும் நலமாய் இருந்தன.

சமீபத்தில் Dr.Peter J.D'Adamo என்பவர் எழுதிய  ''4 Blood Types, 4 Diets - Eat Right 4 your Type'' என்கிற தலைப்பிலான புத்தகத்தை படித்தேன். இவர் ஒரு மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர். இவர் கண்டு பிடித்தது ஒரு சுவாரசியமான விஷயம். அதாவது மனித இரத்தம் O, A, B, AB என்று நான்கு வகைப் பட்டவை. 

மனிதனின் இரத்தம் ஒரே நிறமாக இருந்தாலும் நான்கு வகையிலான குருதி பேதம் ஏன் வந்தது?

ஆரம்பத்தில் மனிதனுக்கு 'ஓ' வகை இரத்தம் மட்டுமே இருந்ததாம். பின்னர் 'ஏ' வகை இரத்தம் கொண்ட மனிதர்கள் உருவானார்களாம். அதன் பின்னர் மாறுபாடுகள் பல ஏற்பட்டு மனித இனத்தில் 'பி' வகை இரத்தமும் உருவாக ஆரம்பித்ததாம். ''ஏபி'' வகை இரத்தமெல்லாம் சமீப காலத்திய ரத்த வகைகள் என்று கூறுகிறார். அதற்கு மருத்துவரீதியான காரணங்களை தகுந்த மருத்துவ ஆதாரங்களுடன் விளக்குகிறார். அப்படிப்பட்ட ஒவ்வொரு வகை மனிதரும் எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும், எந்த வகைகளை தவிர்க்க வேண்டும், எந்த வகையான வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை மட்டும் தமிழாக்கம் செய்து வெளியிடலாம் என்று இருக்கிறேன். விரைவில் அந்த செய்திகளை உங்களிடையே பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.

புதன், 30 ஜூன், 2010

 


பிரபல இதய நோய் மருத்துவர் டாக்டர் பிமல் சாஜர் சொல்கிறார்:-

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
நன்றி:  http://www.pathivu.com

திங்கள், 28 ஜூன், 2010


வலைப் பதிவுலக அன்பர்களுக்கு. 


வணக்கம். இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இயற்கை உணவு முறைகளையும், இயற்கை மருத்துவத்தை பற்றியும் பேசுவது சரியில்லை என்கிற எண்ணத்தில் இயற்கை மருத்துவ தத்துவங்கள் பற்றிய திரு.மகரிஷி க.அருணாசலம் அவர்களது புத்தகத்தினை தட்டச்சு செய்து வெளியிட்டேன். படித்து பின்னூட்டம் தந்தவர்களுக்கு எனது இதய நன்றி. பொறுமையுடனும் ஆர்வத்துடனும் படித்து வரும் அன்பர்களுக்கும் என் நன்றி.

இயற்கை நலவாழ்வியல் சிந்தனைகளை மேலும் எடுத்துச் சொல்லும் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளான அமரர் ம.கி.பாண்டுரங்கன், அமரர் மு.இராமகிருஷ்ணன், மற்றும் இப்போது எனது வழிகாட்டிகளாகவும், இயற்கை நலவாழ்வியல் வாழ்ந்து காட்டிகளாக விளங்கும் திருவாளர்கள் மூ.ஆ.அப்பன், யோகி தி.ஆ.கிருஷ்ணன், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க செயலர் திரு.இர.இராமலிங்கம், திரு.ஸ்ரீராமுலு (மதுராந்தகம் தண்டரைபேட்டை) ஆகியோருடைய படைப்புகள், பேட்டிகள் போன்றவற்றை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

மேலும் வெளிநாட்டு அறிஞர்களின் புத்தகங்களையும் தமிழில் மொழி பெயர்க்க ஒரு ஆசை உண்டு. நேரம் கிடைக்குமா அதற்கான தெம்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. 

ஜூலை மாதம் முதல் வாரத்தில் துவங்கும் அமர்நாத்-வைஷ்ணோதேவி யாத்திரைக்கு சென்று வந்த பின்னர் மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளை துவக்க இருக்கிறேன்.

இறையருள் துணை நிற்க வணங்குகிறேன். 

வாழி நலம் சூழ.

பகுதி 25
இயற்கை மருத்துவம் 
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

தேய்மான நிலை, குறைதல் நிலை, ஆக்க நிலை போன்ற மூன்று நிலைகளிலும் வளர்ந்து குணமடையும்-நோய்ப்போக்கின் நிலையை அறியாது பயத்தினால் அவசரப்பட்டுத் திடீர் சிகிச்சை முறைகளைக் கையாளும் போது முடிவு விபரீதமாக உள்ளது.

ஐந்து விதமான மலங்கள் அதாவது வியர்வை. அபாணவாயு, சளி, சிறுநீர், மலம் ஆகியவை காலாகாலத்தில் அந்தந்த உறுப்புகள் மூலம் வெளிவந்து கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாழ்க்கைச் சிக்கல் நிறைந்த இக்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் மலம் கழிப்பதையோ சிறுநீர் கழிப்பதையோ ஒத்தி வைக்கிறார்கள்.

ஆடை ஆபரண அலங்காரங்களால் வியர்வை வெளிவருவது தடைப் படுகின்றது.  சோப்பு, பவுடர் முதலியவற்றை உபயோகிப்பதால் தோல் தன் செயலை இழக்கிறது. இவற்றால் மலங்கள் உள்ளே தங்கி உள் உறுப்புக்களை இயங்காது திக்குமுக்காடச் செய்கின்றன.

முதல் நிலையில் தீவிரமாக வரும் வீக்கம். ஜுரம் போன்றவைகளை அமுக்கி வைக்கும் சிகிச்சை முறைகளைக் கையாண்டோ, கிருமிநாசினிகள் போன்ற விஷமருந்துகளைக் கொடுத்தோ தீவிர நோயை நாட்பட்ட நோயாக மாற்றி விடுகின்றனர். சாதாரணமாக வந்த ஜுரம் சில நாட்களுக்குப் பிறகு டைபாய்டு அல்லது மலேரியா போன்ற விஷக்காய்ச்சலாக வெளி வருகின்றது. இவற்றிற்கும் மருந்து கொடுத்து அவற்றால் முடிவாக உயிர் கொல்லும் பலனையே கண்ட நவீன மருத்துவர்கள் கூட இப்போது இவற்றிற்கு இயற்கை முறைகளைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள்.

உதாரணமாக டைப்பாய்டு காய்ச்சலுக்கு இப்போதெல்லாம் உபவாசமும் தண்ணீருமே சிகிச்சை முறையாகக் கையாளுகின்றனர். இந்த நோய்களுக்கு மருந்து கொடுப்பது ஆபத்தாக முடியுமென்பது இவர்கள் கண்டறிந்த உண்மை. சிறுகச் சிறுக தண்ணீர் அருந்துவதும். உபவாசம் இருப்பதும் நோயாளிகளை ஆரோக்கிய நிலைக்குக் கொண்டு வருகிறதென்பதைக் கண்டு கொண்டு அதனையே பெரும்பாலும் கையாளுகின்றனர். இதேபோல் சீரழிக்கும் நோயான க்ஷயத்திற்கு நல்ல காற்றை சுவாசித்து ஏற்ற உணவு மாற்றங்களோடு வாழ்ந்து வந்தால் குணம் காணலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நோய் ஐந்து நிலைகளில் வளர்ந்து, தேய்ந்து முடிவடைகிறது. இக்காலத்தில் எளிய இயற்கை முறைகளைக் கையாண்டால் உடல் பழையபடியும் நலம்பெறும். இந்த உண்மையை அறியாமல் தோன்றி வளரும் நிலைகளைக் கண்டு பயந்து நச்சுமருந்துகளைக் கையாளுவதால் நோய் மேலும் சிக்கலாகி உடல் துன்பத்தை அதிகரிக்கிறது. மருந்து முறைகளினால் மேலும், மேலும், பிராணசக்தி குறைவதோடுகூட பணவிரயமும் ஆகிறது. இயற்கை வழியிலேயே நோயை நண்பனாகக் கருதி கொஞ்சம் கொஞ்சமாக உடலிலுள்ள பிராணசக்தியை வளர்த்து, உணவு மாற்றத்தாலும் இயற்கையை ஒட்டி வாழ்வதாலும் நோய்நீங்கி ஆரோக்கியம் பெறலாம். ஆரம்ப நிலையில் தீவிரமாக வெளிவரும் நோய்களைக் குணப்படுத்துவது எளிது இந்த உண்மையை அறியாது மருந்துகளை நாடுவதால் டாக்டர்களின் உதவி கொண்டு நோய்களை அதிகப்படுத்திக் கொள்கின்றோம்.

நோய் ஒன்று தான்; பல அல்ல அதற்கு சிகிச்சையும் ஒன்றுதான் என்ற இந்த அறிவு தெளிவாக வரப்பெற்றால் ஒவ்வொருவரும் தனக்குத் தானே வைத்தியம் செய்துகொண்டு இன்ப வாழ்வு வாழலாம்.

நிறைவு.

ஞாயிறு, 27 ஜூன், 2010

பகுதி 24

இயற்கை மருத்துவம் 
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

சளிப்பிடித்தல் தீவிர நோய். இதற்கு மாத்திரைகளை உட்கொண்டோ அல்லது ஊசி போட்டுக்கொண்டோ பலர் குணம் காண்கின்றனர். 

உண்மையில் நடப்பது என்ன? 
சளிப்பிடித்தவர்கள் அதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்காமல் அதாவது நோய் முதலை நாடாமல் சளியைப் போக்க மருந்து மாத்திரைகளை உட்கொள்கின்றனர். சளிக்குக் காரணமாக உள் அழுக்குகளை வெளியேற்றி இருந்தால் முதல் இரண்டு நிலையிலேயே எளிதில் பூரண உடல் நலம் பெறலாம். 


இந்த நோய்க்கு முதற்காரணம் என்ன? 
பொதுவாகக் காலநிலை மாற்றத்தால் சளி ஏற்படுகிறதென்று கருதுகிறார்கள் அல்லது வாடைக்காற்றில் உலாவி வந்ததால் சளி பிடித்துக் கொண்டது என்று நினைக்கிறார்கள். இதில் ஒரளவுதான் உண்மை இருக்கிறது. உள் உறுப்புக்களான சிறுநீரகங்களோ அல்லது குடலோ நச்சுப் பொருள்கள் உள்ளே தங்குவதால் ஆற்றல் குறைந்து தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்ய முடியாமல் இருக்கின்றன. இதுதான் உண்மை.


நச்சுப்பொருள்களை உபவாசம் மேற்கொண்டு வெளியேற்றி இருந்தால் சளி தானே குறைந்திருக்கும். நச்சுப் பொருள்கள் தங்கி இருப்பதால் உள்உறுப்புகளைச் சார்ந்திருக்கும் மெல்லிய ஜவ்வுகள் விரிந்து அதிலுள்ள உயிரணுக்கள் மாய்ந்தோ அல்லது கெட்டுப்போயோ சளியாக மாறுகின்றது. அது கபமாக வெளிப்படும் பொழுது ஆஸ்த்மா, க்ஷயம் என்ற வேறு நோய்கள் வந்திருப்பதாக நினைத்து அதற்குப் பரிகாரம் தேடுகிறார்கள் புதிய கிருமிகளால் வந்த நோய்கள் இவை என்று நினைத்து மேலும் ஆற்றல் மிக்க விஷமருந்துகளை நாடுகின்றனர். இப்படித் தொடர் சங்கிலி போல் நோய் வளருகிறது.

தோலிலுள்ள மயிர்க்கால்கள் அழுக்கால் அடைபடும் பொழுது உள் உடம்பில் தோன்றிய வெப்பம் வியர்வையாக வெளி வர முடியாமல் மேலும் சூடு அதிகரிக்கிறது. மயிர்க்கால்களைத் திறந்து விடுவதற்கான இயற்கை வழிகளைக் கையாளாமல் மருந்து மூலம் சிகிச்சை செய்தால் தோல் வழியாக வர முயன்ற அழுக்குப் பொருள்கள் உள்ளே சென்று நுரையீரல் வழியாகவோ, கல்லீரல் வழியாகவோ வெளிவர முயலுகின்றன. அவ்வுறுப்புகளும் ஏற்கனவே உடலில் தங்கியுள்ள கழிவுப் பொருள்களின் பளுவினாலோ, அல்லது பிராண சக்திக் குறைவினாலோ தத்தம் வேலைகளைச் செய்ய இயலாமல் இருக்கின்றன. இந்நிலையில் தேங்கியுள்ள கழிவுப் பொருள்களும் மருந்தின் நச்சுகளும் சேர்ந்து உடலைப் பலவீனப் படுத்துகின்றன. உறுப்புகள் சீரழியும் நிலை ஏற்படுகிறது. தீவிர நோய், தீராத நாட்பட்ட நோயாகவும் வளருவதில் வியப்பொன்றும் இல்லை. இயற்கை மருத்துவர்கள் நோய் முதல் நாடி அதற்கு இயற்கை வழியில் பரிகாரம் காண்கின்றனர்.


(அடுத்த பகுதி நிறைவுப் பகுதி..)

சனி, 26 ஜூன், 2010

பகுதி 23 
இயற்கை மருத்துவம் 
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

நோய்ப்படைகளுக்கும், சுகப்படைகளுக்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தில் திசுக்கள் தேய்கின்றன. சீழ் அதிகரிக்கிறது இதிலிருந்து கட்டிகள், புண்கள், போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. நிணநீர் அணுக்கள் நுண்மங்கள், குருதி நாளங்கள் திசுக்கள் நாசமடைகின்றன. மக்களிடையே அண்டத்தில் நடக்கும் யுத்தத்தில் ஏற்படும் நாசங்களைப் போலவே பிண்டத்திலும் அழிவு ஏற்படுகிறது. இந்த மூன்றாம் நிலையை தேய்மான நிலை அல்லது உடற்சிதைவு நிலை என்கின்றனர்.

உடற்சிதைவு நிலையினை நெருக்கடி காலம் எனலாம். இது ஒரு பெரிய திரும்புகட்டம். இதனால் நன்மையும் விளையலாம். தீமையும் விளையலாம். இதில் சுகம் விளைவிக்கும் சக்திகளுக்கு உதவுகிற மாதிரி சிகிச்சை நடந்தால் இரத்தமும், பிராணசக்தியும் அதிகரித்து அந்நிய விஷப் பொருள்களும் வெளியேற்றப்படும் யுத்தத்தில் விளைந்த அழிவுப் பொருள்களும் வெளியேற்றப்பட்டு பூரண சுகம் கிடைக்கும். இதனை குறைதல் நிலை (Abatement) எனலாம். இந்நிலையில் நோய்க்கொதிப்பு தணிகிறது. வீக்கம் வற்றும். வேறு நோய்க்குறிகளும் சாந்தமடைகின்றன.

குறைதல் நிலை தனது முழுவேலையையும் செய்த பின்னர் அதாவது உடலில் சேர்ந்திருந்த விஷப்பொருள்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்ட பின் ஆக்கவேலை ஆரம்பமாகிறது. இந்த ஐந்தாவது நிலையை ஆக்கநிலை என்கிறார்கள் தேய்ந்த பகுதிகள் வளர்ந்து முழுமை பெறுகின்றன. உடல் புதுமை பெறுகிறது. அசுத்தங்கள் நீங்கி சுத்தமடைகிறது. தீவிர நோய்களை, மேலே குறித்த ஐந்து நிலைகளையும் பொறுமையோடு கடக்கும்படி செய்வதால் உடல் பழைய நிலையினை விரைவில் அடையும். மாறாக, தவறான சிகிச்சை முறைகளைக் கையாண்டு வீக்கத்தை கடுமையான மருந்துகளால் அமுக்கியோ, தடை செய்தோ வைத்தால் தற்காலிகக் குணம் ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் விஷப்பொருள்கள் உருமாறி உயிரணுக்களுள் நுழைந்து தீராத நாட்பட்ட நோயாக மாறும்.

நோய் நுண்மப் பெருக்க நிலை. தீங்கு பெருக்க நிலை என்ற இரண்டு நிலைகளில் மருந்துகளை உபயோகித்தால் தீவிர நோய் நாட்பட்ட நோயாக வளரும். இதனை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்வோம்.

(இருபத்தி ஐந்தாம் பகுதியுடன் நிறைவு அடைகிறது.)

வெள்ளி, 25 ஜூன், 2010

பகுதி 22



இயற்கை மருத்துவம் 



(தத்துவங்களும் செய்முறைகளும்) 



- மகரிஷி க. அருணாசலம்

தீவிர நோயின் ஐந்து நிலைகள்


'நோய் ஒன்றே; பரிகாரமும் ஒன்றே' 

இது இயற்கை மருத்துவத்தின் ஒரு பொதுக்கோட்பாடு நோய்க்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். பொருந்தா உணவு, மாறான பழக்கவழக்கங்கள், தவறான சிந்தனைப் போக்கு இவை போன்ற இன்னும் பிற காரணங்களால் நோய் ஏற்படலாம். மேற்கூறிய பல காரணங்களால் உடலில் வேண்டாத பொருள்கள் சேருகின்றன. அவை காலாகாலத்தில் வெளியேறி விட்டால் சிக்கல் இல்லை. பல சமயங்களில் வேண்டாத அந்நியப் பொருள்கள் தேங்கி நிற்கின்றன. காலம் கடந்து இவை வெளியேற முயலும் போது வலியோ, வேறு வித சங்கடங்களோ ஏற்படுகின்றன. அவற்றை நோய் என்கிறோம்.

வளர்சிதை மாற்றம் சதா உடம்பில் நடந்து கொண்டிருக்கிறது. திசுக்களிலுள்ள உயிரணுக்கள் சிதைந்து, மடிந்து இரத்தத்தில் கலக்கின்றன. சிலசமயம் அடிபட்டதாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ இரத்தம் உறையலாம். உறைந்த இரத்தம் சிதைவுண்டு சிறுசிறு துண்டுக் கட்டிகளாக இரத்தப் பிரவாகத்தில் கலக்கின்றன. இவை ஏதாவது ஓரிடத்தில் தேங்கி நின்று தாராளனமான இரத்த ஓட்டத்திற்க்கும், பிராணசக்தி இயக்கத்திற்கும் தடையாயிருக்கின்றன. சில சமயம் விபத்துக்கள் ஏற்படும் போது எலும்புகள் உடைந்து அதன் துணுக்குகளும் இரத்தத்தோடு கலந்து நின்று தடை செய்யலாம். சுவாசத்தோடு போகும் கடினமான தூசு தும்புகள் கூட உடம்பின் உள்ளே சென்று இருக்கலாம். இரும்புத் தூசுக்கள், மரத் துணுக்குகள் உடலுள் செல்வதாலும் இயக்கத்திற்குத் தடை ஏற்படலாம் ஒட்டுண்ணிகள், சின்னஞ்சிறு உயிர்ப் பிராணிகள் உட்செல்வதாலும் இது நேரிடலாம். குருதி ஓட்டமோ பிராண இயக்கமோ தடைபடும்பொழுது அவ்வப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதனால் சூடு அதிகரிக்கலாம். இரத்தக் கொதிப்பால் சில உறுப்புகள், அழற்சி அடையலாம்.

அந்நியப் பொருள்கள் உடலில் தேங்கி நிற்கும்போது நோய் உடனடியாகத் தோன்றுவதில்லை. நோய்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறுகின்றன. இது முதல்நிலை இதனை நோய் நுண்மப் பெருக்கநிலை என்கின்றனர். ஆங்கிலத்தில் Incubation state என்று சொல்வார்கள். இந்நிகழ்ச்சி சில நிமிஷங்களிலோ அல்லது நாட்களிலோ நடைபெறலாம். சிற்சில சமயங்களில் இது வாரம், மாதம், வருடம் என்றும் நீளலாம் அந்நியப் பொருள்கள் பெருகி உடலின் சிற்சில பாகங்களில் அல்லது உறுப்புக்களில் வீக்கம் ஏற்படுத்துகின்றன. உடலில் வேலையில் தேக்கமோ, ஆபத்தோ ஏற்படும் சமயம் உயிர் ஆற்றல்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி நோய்க்குக் காரணமாக நுண்மங்களோடு போரிடுகின்றன. அந்த இரண்டாம் கட்டம் 'தீங்கு பெருக்குதல் நிலை' எனப்படுகிறது. இதில் அந்நியப்பொருள் அல்லது நோய் நுண்மங்கள் ஒருபுறமும், உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீர் அணுக்கள் (Phagocytes) மற்றொரு புறமும் அணிவகுத்து போரிடும் நிலையைப் பார்க்கிறோம் இச்சண்டை காலத்தில் படை வீரர்களாகிய நிணநீர் அணுக்கள் பெருக்கத்தால் இரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது நாளங்களிலும். உறுப்புக்கள் சிலவற்றிலும் வீக்கம் அதிகரித்து காய்ச்சல் உச்சிலை அடைகிறது. நோயின் அறிகுறிகள் அனைத்து வெளிப்படுகின்றன.


(படிப்பவர்களின் பொறுமைக்கு நன்றி - ஓரிரு தவணைகளில் நிறைவடையும்)

புதன், 23 ஜூன், 2010

ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 324 -வது மாத கூட்டம்.


கடந்த சில ஆண்டுகளாக நான் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தேன். 
பின்னர் இயற்கை நலவாழ்வு முறைகளை படிப்படியாக பின்பற்றி நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மற்றும் இதய இடது கீழறையில் இருந்த பிறவி குறைபாடு காரணமாக ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு இவற்றை எல்லாம் எவ்வாறு குணப்படுத்திக் கொண்டேன் என்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தமிழகத்தின் முன்னோடி அமைப்புகளில் முதன்மையாக விளங்குகின்ற ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 324 -வது மாத கூட்டத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்களிடையே பேசிட சங்கத்தின் செயலர் திரு.இராமலிங்கம் அவர்கள் வாய்ப்பு தந்தார் . 

அங்கு நான் உரையாற்றியதை இங்கே வாழி நலம் சூழ வாசகர்களுக்காக வெளியிடுகிறேன்.

 20-06-2010-ஆடுதுறை

வணக்கம்.  நான் சென்னையில் தென்னக இருப்புப்பாதை அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியாக பணி புரிகிறேன். இப்போது எனது வயது ஐம்பத்து நான்கு.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு மே மாதம் ஆடுதுறையில் நடைபெற்ற ஒரு வார இயற்கை மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்ற இனிய நினைவுகளை மீண்டும் நன்றியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு பின்னர் தற்போது உங்களிடையே எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கும் திரு மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும் திரு இராமலிங்கம் ஐயா அவர்களுக்கும் அவர்கள் மூலம் இந்த வாய்ப்பினைத் தந்த இறைவனுக்கும் நன்றி செலுத்துகிறேன்.

கடந்த முறை முகாமில் கலந்து கொண்ட போது நான் சந்தித்த திருவாளர்கள் மெய்யப்பன்இராமலிங்கம்யோகி தி.ஆ.கிருஷ்ணன் மற்றும் மூ.ஆ.அப்பன் ஆகியோரின் தொடர்புகளும் மேலான வழிகாட்டல்களும் இன்றளவும் எனக்கு கிடைத்து வருகிறது என்பது பெருமைக்குரிய மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

உங்களிடையே இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு நான் எவ்வாறு எனக்கு ஏற்பட்ட ''நீரிழிவு நோயினை'' மருந்தின்றி குணமாக்கிக் கொண்டேன் என்பது பற்றி.

முன்னரே இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்றிருந்தும் பணி மற்றும் கால மாறுபாடுகளின் காரணமாக என்னால் இயற்கை உணவினை தொடர்ந்து உண்டு வரஇயலாமல் போனது. எனினும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சந்தர்ப்பங்களில் யோகா பயிற்சி மற்றும் இயற்கை உணவுகளை மேற்கொண்டு வந்திருக்கிறேன். எனினும் பணி மும்முரம் காரணமாக ஏழு ஆண்டுகள் 2002 முதல் 2008 வரை இந்தியா முழுமையும் பயணம் செய்து நீண்ட நாட்கள் வெளியில் உணவு உண்ணவேண்டிய சூழ்நிலைகள் உருவானதால் எனக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னரே நான் உயர் இரத்த அழுத்தம்ஹைபர்டென்ஷன் போன்ற பாதிப்புகளால் இரயில்வே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று அங்கு தந்த ஆங்கில மருந்துகளை உண்டு வந்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக அதனுடன் சர்க்கரை வியாதியும் சேர்ந்து கொண்டது.  இரத்த பரிசோதனை செய்து கொண்ட போது கீழ்க் கண்ட அளவுகள் இருந்தன. 22-12-2007 - Blood Sugar (Fasting) 245 mgs/dl (Ref value: 70 to 100). அதன் பிறகு சித்தமருத்துவம் மேற்கொண்டேன். நிறைய லேகியங்கள்பொடிகள்கஷாயங்கள்உணவுக் கட்டுப்பாடுகள் மேற்கொண்ட பின்னர் மீண்டும் பரிசோதனை செய்த போது கிடைத்த அளவுகள்:
09-01-2008 -      Blood Sugar (Fasting) - 275 mgs/dl
         Blood Sugar (PP) - 469 mgs/dl

பிறகு எம்.வி. டையபெடிக் மருத்துவ மனையில் சென்று அங்கு பரிசோதனை செய்து கொண்டேன்.

02-02-2008         Blood Sugar (Fasting) - 217 mgs/dl
   Blood Sugar (PP) - 294 mgs/dl
என்று பரிசோதனை முடிவுகள் வந்தன.

அதன் பிறகு ஆங்கில மருத்துவத்தினை மேற்கொண்டேன். தொடர்ந்து ஒரு மாதம் மருந்துகள்உணவுக் கட்டுப் பாடுகள் கடைப் பிடித்த பின்னர் கிடைத்த பரிசோதனை முடிவுகள்

01-03-2008 -      Blood Sugar (Fasting) - 85 mgs/dll (Ref value: 70 to 100)
Blood Sugar ( P  P)    - 102 mgs/dl (Ref Value: 100 to 140)

மருந்துகளையும்உணவுக் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து வரவேண்டும் என்கிற ஆங்கில மருத்துவரின் அறிவுரை அடிப்படையில் நான் இரத்த அழுத்தத்துக்கும்சர்க்கரை நோய்க்கும் தொடர் சிகிச்சை மேற்கொண்டேன். ஆயினும் எனது உடல் உபாதைகள் குறைந்த மாதிரி தெரியவில்லை. Once a diabetic; always a diabetic. Once a heart patient; always a heart patient, என்று ஆங்கில மருத்துவர்கள் கூறிய சித்தாந்தம் எனக்கு அலுப்பு தட்டலாயிற்று.

ஏனெனில் மருந்துகளை உண்ணத் தவறி விட்டால் தொல்லைகள் அதிகமாக இருந்தன. சிகிச்சையின் போதும்உடல் வலிசோர்வு போன்றவை தொடர்ந்து இருந்தன. உடல் உஷ்ணக் கட்டிகள் போன்றவைகள் அடிக்கடி வந்து தொல்லை தந்தன. சிறுநீர்த் தாரை எரிச்சல் ஒரு தொடர் கதையாகவே இருந்தது.

ஆங்கில மருந்துகள் சிறுநீரகங்களில் கற்களை உண்டாக்கும் என்று வேறு கூறினார்கள். அதுவும் இன்றி தொண்ணூறு கிலோ எடையுடன் இருந்தேன். உணவைக் குறைத்தாலும்  இடர்ப்பாடுசாப்பிட்டாலும் இடர்ப்பாடு என்று இருதலைக் கொள்ளியாய் தவித்தேன்.

இந்த தொடர் தொல்லைகளில் இருந்து விடுபட எண்ணினேன். ஏற்கனவே மேற்கொண்ட இயற்கை உணவு முறைக்கு மாற முடிவு செய்தேன். கடந்த ஆண்டு மே மாதம் கும்பகோணத்தில் நடைபெற்ற இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்தேன். ஆனால் தேர்தல் பணிக்கு என்னை நியமித்ததால் அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. பிறகு திரு யோகி.கிருஷ்ணன் அவர்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்தித்தேன்.

அவர் என்னிடம், ''நீங்கள் மீண்டும் தொடர்ந்து யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்இயற்கை உணவினை எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக சாப்பிடுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குணமடைதல் விரைவாக இருக்கும்'' என்றார். அவரது அறிவுரையின்படி யோகம்மற்றும் இயற்கை உணவு முறைகளை பின்பற்றினேன்.

கடந்த டிசம்பர் மாதம் திரு மூ.ஆ. அப்பன் அவர்கள் பழனியில் நடத்திய ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொண்டேன்.

அப்போது முழு இயற்கை உணவு முறைக்கு மாறியது மட்டும் இன்றி ஆங்கில மருந்துகளை சாப்பிடுவதை அறவே நிறுத்தினேன்.

ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் பெற்ற நேரடி அனுபவங்களும்யோகி கிருஷ்ணன் மாஸ்டரிடம் பெற்று வரும் தொடர் யோகப் பயிற்சிகளும் எனக்கு இரத்த அழுத்தம்உடல் எடைமற்றும் சர்க்கரை வியாதிகளின் பிடியில் இருந்து முழு விடுதலை பெற்று தந்தன.

மேற்குறிப்பிட தொல்லைகளின் சிம்ப்டம்ஸ் என்னிடம் இருந்து முழுமையாக அகன்று விட்டன. ஆகையினால் நான் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்களை ஆலோசிக்காமல் ஆங்கில மருந்துகளை கடந்த டிசம்பரில் இருந்து நிறுத்தி விட்டேன். பின்னர் திருவாளர்கள் கிருஷ்ணன் ஐயா மற்றும் மெய்யப்பன் ஐயா இருவரும் என்னை மருத்துவ பரிசோதனை செய்துபார்க்கும்படி அறிவுறுத்தினார்கள்.

அதன் பேரில் இந்த ஆண்டின் ஏப்ரல்மேஜூன் மாதம் முதல் வாரத்தில் மேற்கொண்ட இரத்தம்மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் முடிவுகள் இதோ:

02-04-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 124 mg/dl
Urine Sugar: NIL
07-05-2010-  Blood Sugar (Fasting) - 97 mg/dl
Blood Sugar (PP) - 126 mg/dl
Urine Sugar: NIL
05-06-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 128 mg/dl
Urine Sugar: NIL

இப்போது முழு இயற்கை உணவு முறைகளை கடைப்பிடிக்கிறேன். வாரம் ஒரு நாள் உபவாசம்தொடர் யோகா பயிற்சிகள் என்னை ஆரோக்கியம் நிறைந்த ஒரு மனிதனாக மீட்டெடுத்து விட்டன.

வெயிலில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள் அதன் பொருளை முழுமையாக உணர்ந்து கொண்டேன். எனது நண்பர்கள் பலர் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து அவர்களும் யோகா/இயற்கை நலவாழ்வு முறைகளை பின்பற்றி பலன் அடைந்து வருகிறார்கள்.

நான் சொல்ல விரும்பும் செய்திகள்:
  • Once a diabetic, always a diabetic. Once a heart patient, always a heart patient எண்ணும் ஆங்கில மருத்துவ சித்தாந்தம் தவறானது.
  • உணவு மற்றும் வாழும் முறைகளிலும்எண்ணங்களிலும்சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுத்தாமல் வெறும் மருந்துகள் மூலமாக எந்த வியாதியையும் குணப் படுத்த முடியாது.
  • நான் எனது சர்க்கரை வியாதிக்கு இயற்கை நலவாழ்வியல் மூலம் குணம் பெற்ற போதுஎனது உடல் எடை குறைந்ததுஇரத்த அழுத்தம் நார்மல் நிலைக்கு வந்தது. அது மட்டுமின்றி எனக்கு பிறவியிலேயே இதயத்தில் எல்.வி.சி.டி எனப்படும் (Left Ventricular Conductivity Defect) குறைபாடு இருந்தது. அதன் காரணமாக யூரிக் ஆசிட் அதிகமாக இரத்தில் கலந்து போகும் தன்மையும் அதனால் எனது சிறுநீரகங்களுக்கு தொடர் தொல்லைகளும் இருந்ததன. யூரிசீமியா எனும் இந்த தொல்லைக்காக சிறுநீர்ப் பிரித்திகளை ஊக்குவிக்கும் மருந்துகளையும் சாப்பிட்டு வந்தேன். ஆனால் முழு இயற்கை உணவுக்கு மாறிய பின்னர் அந்த தொந்தரவும் என்னை விட்டு நீங்கி விட்டது. முன்னர் இந்த மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் சிறுநீர் போகும் இடத்தில் எரிச்சல் அதிகம் ஆகிவிடும். சில சமயம் இரத்தம் கூட வெளியேறும்.
  • ஆங்கில மருந்துகளால் ஏற்படுவன மோசமான பின்விளைவுகள். ஆனால் இயற்கை நலவாழ்வியலில் கிடைக்கும் குணம் பூரணமானது (holistic). ஒரு குறிப்பிட்ட வியாதியை மட்டுமின்றி உடல் முழுவதும் செயல்பட்டு நமக்கு தெரியாமல் இருக்கும் குறைபாடுகளையும் களைந்தெறியும் சக்தி இயற்கை நலவாழ்வியலுக்கு உண்டு என்பதை முழுமையாக நான் உணர்ந்தேன்.
  • அடுத்ததாகவும் நிறைவாகவும் நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. இயற்கை நலவாழ்வியல் உங்களை உங்களுக்கு ஏற்ற மருத்துவராக மாற்றுகிறது. மருந்தில்லா மருத்துவம் என்பதினால் செலவும் இல்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழம்,காய்கறிகளை இயற்கையாக உண்பதினால் நமக்கு பொருளாதார அடிப்படையில்,எரிவாயு (கேஸ்)மசாலா பொருட்கள்எண்ணை வகைகளுக்கான செலவுஉப்பு,சர்க்கரைபால் பொருட்கள் மீதான செலவுகள் குறைகின்றன.
  • நோய் இல்லாமல் செயல் படுவதினால் அலுவலுக்கு விடுப்பு எடுத்தல்அலுவல் நேரங்களில் சோர்வாக இருத்தல்மருத்துவ மனைகளில் மருத்துவருக்காக காத்திருத்தல்தேவையற்ற அறுவை சிகிச்சைகளை பெறும் பொருள் செலவில் மேற்கொள்ளுதல்நோய் வாய்ப்படுபவரை கவனித்துக் கொள்ளுபவருக்கு ஏற்படும் தொல்லைகள்மருந்துக்கான பெறும் பொருள் செலவும்பக்க விளைவுகள்,பின்விளைவுகள் போன்றவற்றை முழுமையாக தவிர்க்கலாம். மக்களின் ஆரோக்கியத்துக்காக அரசுகள் பெருமளவில் பணத்தை செலவு செய்வதை தவிர்ப்பதன் மூலம் மத்திய மாநில அரசுகள் அப்பணத்தை மக்கள் நல பணிகளில் நல்ல வழிகளில் செலவிடலாம்.
  • நல்ல உடல்நல்ல மனம்நல்ல சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் பெருகினால் சமுதாயத்திற்கு அவர்களது பங்களிப்புகள் மேம்பட்டதாக இருக்கும். நாட்டின் உற்பத்தியும் கூடும். மக்களிடையே நற்சிந்தனைகள் வளர்ந்து போட்டி பொறாமை போன்றவைகள் அகன்றுசகோதரத்துவம்அன்பு போன்றவை பெருகும்.
எனது வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனையை தந்திருக்கும் இயற்கை நலவாழ்வியலை பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்ள நல்வாய்ப்பை ஏற்படுத்தி தந்த திரு மெய்யப்பன் ஐயாவுக்கும்திரு.ராமலிங்கம் ஐயாவுக்கும்மற்றுமுள்ள சங்க நிர்வாகிகள் எல்லாருக்கும்மற்றும் இங்கே பெருவாரியாக குழுமி இருக்கும் உங்கள் எல்லாருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி பாராட்டி வணங்கி விடை பெறுகிறேன்.  நன்றி. வணக்கம்.

-அஷ்வின்ஜி, 
 வலைப்பதிவர், வாழி நலம் சூழ, சென்னை.