சனி, 16 நவம்பர், 2013

வளமான வாழ்விற்கு உணவே மருந்து -

இயற்கை உணவும் ஆரோக்கியமும்

நாம் அன்றாடம் உண்ணும் அளவில் உள்ள எண்ணற்ற சத்துக்களைப் பற்றிய ஆரோக்கியத்திற்கு தேவையானவற்றைப் பார்ப்போமா!
பல்வேறு மூலிகைகள், காய்கனிகள், கீரை வகைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை. ‘உணவே பிரமன், உணவிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. உணவாலேயே வாழ்கின்றன. இறந்த பிறகு மற்ற உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு’ என உபநிஷத்துக்கள் கூறுவதை
‘தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனில்’
என்று திருவள்ளுவரும், ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோர் கூறியது உணவில்லையேல் வாழ்க்கையே அழியும் என்பதைத்தான் காட்டியுள்ளது. இன்றைய அறிவியல் முன்னேற்றம் நோய்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அதற்குரிய எதிர்ப்பு மருந்துகளைத் தருவதில் அதிக முன்னேற்றம் அடைந்து சிறப்பாக மருத்துவப் புரட்சி ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் புதுப்புது நோய்களும் தோன்றி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை அளித்து வருவதும் நமக்கு தெரிந்ததுதான். அதனை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சி மூலம் புதுப்புது மருந்து வகைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு காரணம் நம் முன்னோர்கள் நோய் வராமலிருக்கும் வழிமுறைகளை சிந்தித்து நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களிலேயே நோய் வருமுன் காப்பதற்கும், வந்ததற்குப் பின் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ வழி வகைகளை எண்ணற்ற வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிய வைத்துள்ளனர். ஆனால் அதை நாம் முறையாக கடைப்பிடிக்கவும், புரிந்து கொண்டு செயல்படுத்தவும் தவறியுள்ளோம் என்பதில்தான் - நாம் நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் என்பதினால்தான் - நாம் நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கம் ஒவ்வாத பிற நாட்டு உணவு, நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டிருப்பததோடு, உடலை பாதிக்கும் தீய பழக்க வழக்கங்களான புகைத்தல் மது மற்றும் கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப் பொருட்களை பாவித்து நமது உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு அதனால் நரை, திரை, மூப்பு சாக்காடுகள் ஆகியவை குறைந்த வயதிலேயே ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கின்றோம். உணவு உடலைப் புஷ்டியாக்குவதை விட அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதே முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நமது உணவிற்கு ஏற்றபடித் தான் உடலும், நமது புத்தி, சக்திகளும் அமையும்.
நாம அனைவரும் பெரும்பாலான உணவு வகைகளை சமைத்தே சாப்பிடுகிறோம். எனினும் பலவித காய்கனி வகைகளை அப்படியே சுத்தம் செய்து பச்சையாகவே சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். நாம் சமையல் செய்யும்போது பலவித ஊட்டச்சத்துகள் அழிந்து போகிறது. எப்படி அழிகிறது, எதனால் அழிகிறது என்பதை பார்க்கலாமா?
முதலாவதாக அரிசியை எடுத்துக் கொள்வோம். முன்காலம் போல் கைக்குத்தல் அரிசி கிடையாது. நாம் இயந்திரத்தில் கொடுத்து நன்றாக தீட்டி அரைத்து விடுவதால் அரிசியில் இருக்கும் தயாமின் பீ வைட்டமின் வீணாக்கப்படுகிறது. இந்த வைட்டமின் தானியத்தின் அடிப்பகுதியில்தான் இருக்கும். இவ்வாறு தீட்டப்பட்ட அரிசியை உண்ணும்போது நமக்கு மாவுச் சத்துதான் கிடைக்கும். உயிர்ச்சத்தும் வைட்டமின்களும் காய்கறி பழங்களிலிருந்து கிடைக்கின்றது. இந்த சத்து நீரினாலும் வெப்பத்தாலும் சுலபமாக அழியக்கூடியவை. சத்துகள் அழியாமலிருக்க சரியான முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
உணவுப் பொருட்களை சமையல் செய்யும் பொழுது, பாதுகாத்து வைக்கும்பொழுது, காற்றில் வைக்கும்பொழுது, சூடாக்கும்பொழுது, கழுவும் பொழுது என பல சமயங்களில் அதன் சத்துகள் வீணாக்கப்படுகிறது. சமைக்கும் விதமும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. குறைந்த அளவு தண்ணீரில் ஒரு தடவை கழுவி அடுத்து முறை கழுவுகின்ற தண்ணீரைச் சமையலில் வேறு பொருட்கள் தயாரிக்க உபயோகிக்கலாம். அதிகமான தண்ணீரில் வேக வைத்துக் கஞ்சியை வடித்துவிடும்போது இருக்கும் சத்தும் போய் விடுகின்றது. அதனால் குக்கரில் சமைக்கும்போது சத்துகள் வீணாவதில்லை. எண்ணெய் வகைகளைத் திரும்பத் திரும்ப சூடு செய்வதால் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடலுக்கு கெடுதல் ஏற்படுகிறது. அடிக்கடி சூடு பண்ணுகிற எண்ணெய் ரத்தத்தில் கொழுப்புச் சக்தியையும் அதிகரிக்கும். அதுபோன்றே பாலை அதிக அளவு சூடுபடுத்துவதால், பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதச் சத்தும் குறையும். நீரில் கரையும் வைட்டமின்கள் சமைக்கும்போது அதிக அளவில் அழிக்கபடுகின்றன. பொதுவாகவே எந்தவித காய்கறிகளாக இருந்தாலும் கழுவிய பிறகு தான் நறுக்க வேண்டும். அதிலும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கும்போது காயின் அத்தனை பரப்புகளும் காற்றில் பட்டு அதில் உள்ள சத்துகளை இழக்கின்றன.
காய்கறிகளை எப்போதுமே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தான் போட வேண்டும். உருளைக் கிழங்கு போன்றவற்றை தோலுரிக்காமல் வேக வைத்ததிற்குப் பின் தான் தோல் நீக்க வேண்டும். இலைக் காய்கறிகளில் நிறையை கரோட்டின் போன்ற வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன என்பதால் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது சிறந்த பலன்களைத் தரும். காய்கனி வகைகளை பொதுவாகவே குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் சத்துகள் பாதுகாக்கப் படுகின்றன. முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவதால் அதில் இருக்கும் அவிட்டின் என்ற புரதம் பயோடின் என்கிற உயிர்ச்சத்தை இழக்கிறது. எனவே வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நல்ல நோக்குடன் நமது அன்றாட உணவு வகைகளை சரியான முறையில் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ருசியும் மணமும் குணமும் நிறைந்ததாக சாப்பிடும்போது, கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகள் அழிந்துவிடுவதோடு, எளிதாக ஜீரணம் ஆகும் தன்மையுடன் நல்ல ஆரோக்கியம் அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
நம்மில் சிலர் செய்வதைப் போல் அதிக நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் கிழங்குகளையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
சாதாரணமாகவே எந்தவித காய்கறிகளாய் இருந்தாலும், முதலில் அவற்றை நல்ல நீரில் அலசி சுத்தப்படுத்தித் தான் சமையலுக்கு உபயோகிக்க வேண்டும். பிரசர் குக்கர் சமையல் நேரத்தை குறைப்பதோடு சமைக்கும் காய்கறிகள் அனைத்தின் சத்துகள் அழிவதை தடுக்கிறது. பழங்களை நறுக்கி வைத்தால் சில நிமிடங்களில் நிறம் மாறி விடுகின்றன. இதைத் தடுக்க சிறிதளவு சர்க்கரை போட்டால் போதும். சில அரிசியைத் தண்ணீரில் கழுவும்போது 40 சதவீதம் தயாமின் சத்து தண்ணீரில் கரைந்து போய் விடுகிறது. குறைந்த அளவு தண்ணீரில் ஒரு தடவை கழுவி அடுத்தமுறை கழுவுகின்ற தண்ணீரை சமையலில் வேறு பொருட்களுடன் உபயோகிக்கலாம். அதிகமான தண்ணீரில் வேகவைத்துக் கஞ்சியை வடிப்பதால் இருக்கும் சத்தும் போய்விடுகிறது. பருப்புகளை வேக வைக்கும்போது சமையல் சோடாவை சேர்ப்பதால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். அதுபோன்றே பாலை அதிக அளவு சூடுபடுத்தும் போது அதிலுள்ள சுண்ணாம்பு சத்து பாத்திரங்களின் ஓரங்களில் படிந்துவிடுகிறது. அதனால் பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதத்தின் தரமும் குறைகிறது. காய்கறிகளை கழுவிய பிறகுதான் பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். சிறிதாக நறுக்கப்பட்டு நீரில் கழுவும்போது அதன் சக்திகள் கரைந்துவிடும். இலைக்காய்கறிகள் நிறைய காரோட்டின் கொண்டவையாக இருக்கின்றன. அது வைட்டமின் ஏ ஆக உடலில் மாறுகிறது. ஆதலால் காய்கறிகளை வறுப்பதை காட்டிலும் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.
சில காய்கறிகளில் புளி சேர்க்கப்படும் போது, அதன் அமிலத் தன்மை வைட்டமின் அழிவை தடுக்கிறது. முட்டையை வேக வைக்காமல் சாப்பிடுதல் கூடாது. தானியங்கள் என்று எடுத்துக் கொண்டால் எல்லா தானியங்களும் ஒவ்வொரு ஊட்டச்சத்தும் மிகுந்தும் குறைந்தும் உள்ளவையாகும். முக்கியமாக பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும், அன்றாடம் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிடுவதையும் பழக்கமாகக் கொள்ள வேண்டும். முக்கியமாக சிறார்களுக்கு பிடித்த மாதிரி விதவிதமான உணவு வகைகளை, முக்கியமாக கீரை, பருப்பு கலந்த சாதம், பழம் ஜூஸ், பால் போன்றவற்றை அவர்களின் பசிக்கேற்ப உட்கொள்ள வைத்து, விளையாட வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முயல வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, ஜலதோசம், ஜுரம் போன்றவற்றிற்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து மற்றும் உணவு வகைகளை தர வேண்டும்.
இப்படியாக நமது உணவு வகைகள் என்பது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து, இராசயனச் சத்து மற்றும் அமிலச்சத்து போன்றவற்றை இயற்கையே அமையப் பெற்ற அனைத்து காய், கனிகள், தானியங்கள் ஆகியவற்றை அளவோடு சேர்த்துக் சுவைபட சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தவறான பழக்கவழக்கங்களான போதை மருந்து உட்கொள்ளுதல், மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவற்றை மேற்கொண்டால் அதன் விளைவு என்ன என்பதைப் பற்றி கூறத் தேவையில்லை.
அதுபோன்றே பாலியல் சம்பந்தமான ஒழுக்கங்களும் நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டும். எனவே இவற்றையெல்லாமம் எளிதில் பெற்று வாழ்க்கை வாழ்வதற்கே என்று உணருகின்ற பக்குவத்தோடு, நமது அன்றாட உணவு என்பது நம் அனைவரின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், பாதுகாக்கவும் என இயற்கை உணவை பழக்கப்படுத்திக் கொண்டால் நீண்ட ஆயுளையும் வளமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம். இந்த உடல் அழிவதற்கு காரணமாய் விளங்குவது ஐந்தில் நான்கு பங்கு ஆகாரமே என்றும், ஒரு பங்கு அளவுக்கு மீறிய தூக்கமும் பயமும் போன்ற தீய உணர்வுகளும் என்கிறார் வள்ளலார்.
இவ்வுண்மையை காட்டும் வகையில், ஒருவன் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பாகம் அவனது உடம்பிலும், மற்ற இரண்டு பாகங்களினால் வியாதி ஏற்பட்டு மருத்துவ செலவிற்குத்தான் உட்படுத்துகின்றன. ‘இறப்பதற்கென்றே உண்ணுகிறார்கள்’ என்ற ஆங்கிலேயப் பழமொழிக்கேற்ப ஒரு மனிதன் பட்டினியால் இறப்பதற்கு முன்பாக நூறு பேர் விருப்பம் போல் உண்டு இறந்துவிடுகிறார்கள். கொழுத்த உணவு, போர்வாளைக் காட்டிலும் அதிகம் பேர்களை கொல்கிறது என்றார் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர். ஒரு வியாதிக்கு எது மூல காரணமாயினும் முறை கேடான உணவுப் பழக்கமே அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படையாகும்.
உடல் ஆரோக்கியமாக வளர, உணவில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது ஒருவன் மூன்று வேளைக்குமேல் சாப்பிடக்கூடாது. “ஒரு வேளை உண்பவன் யோகி; இரு வேளை உண்பவன் போகி (இல்லறத்தில் உள்ளவன்); மூன்று வேளை உண்பவன் நோயாளி; நான்கு வேளை உண்பவனின் உயிர் உடலை விட்டு விரைவில் போய்விடும்” என சித்தர் பாடல் கூறுகிறது. ஆனால் இக்காலத்தில் பெரும்பான்மையோர் நான்கு முறை என்ன, ஆறுமுறைகள் கூட உண்கிறார்கள். காலை பெட் காபியோ தேனீரோ, பின காலை டிபன், மதிய சாப்பாட்டிற்கு முன்பு ஏதாவது நொறுக்குத் தீனி, மாலை சிற்றுண்டி, இரவு உணவிற்கு முன்பு மது அருந்துதல், இரவு டின்னர் என இப்படி பல தடவை உண்பவர்களை நாம் இங்கு காணாததா? வசதி படைத்தவர்கள் சத்து மிகுதியான கனி வகைகளான ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பழரசங்கள், விலை உயர்ந்த பலவிதமான உணவு வகைகள், டானிக்குகள் முதலியவற்றை அருந்தியும் கூட சாதாரண ஏழை மக்களை விட இருதய நோய், இரத்த அழுத்தம், சுகர் கம்பெளையின்ட், கொலஸ்டரால், கொழுபுச் சத்து கூடுதல், புற்று நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்னை, கூடுதல் எடை என்று எண்ணற்ற வியாதிகளால் அவதிப்படுவதைத் தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே. இது தவிர போதை வஸ்துக்கள் பாவித்தல், முக்கியமாக புகைப்பிடித்தல் போன்றவையும் காரணமாகும். சத்துகள் நிறைந்த உணவுகளை உண்ணும் போது ஏன் அகால மரணம் அடைகிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கின்றன நம் முன்னோர்கள் வகுத்த எளியமுறை உணவுப் பழக்க வழக்கங்கள்.
அதாவது ருசிக்காகச் சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் தான் பிணிகளுக்கு காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. இந்தக் காலத்திற்கு இடையிடையே ஏதாவது பழமோ, சிற்றுண்டியோ அருந்தினால் ஜீரணம் ஆவதற்கு 8 மணி நேரம் 9 மணி நேரம் கூட ஆகிறது என்று வாஷிங்டன் சானிடோரியத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலிருந்து அறிந்து இதனால் கல்லீரல், பித்தப்பை போன்ற ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப்புண் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதைத்தான் திருவள்ளுவரும் தனது திருக்குறளில்
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
என்று காட்டியுள்ளார் போலும்.
பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப் பொருள் செரிமானமாவதற்கு உமிழ் நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும். சாப்பிடும்போது அவரச அவசரமாக உட்கொள்ளாது, நிதானமும், மனதில் எந்த வித சஞ்சலங்களுக்கும் இடம் கொடுக்காது மகிழ்ச்சியுடன் உணவு அருந்துதல் வேண்டும். இரவு சாப்பாடு என்பதில் மிகவும் அக்கறையும் கவனமும் தேவை. மதிய உணவை விட ஒரு பிடி குறைத்தே சாப்பிடுதல் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவு, சப்பாத்தி போன்றவையும், ஏதாவது ஒரு பழம், ஒரு டம்ளர் பால் போன்றவற்றை அருந்தி விட்டு சுமார் 15 நிமிடங்களாவது உலாவுதல் வேண்டும். அவ்வாறு நடப்பதால் அருந்திய உணவு நன்றாய் ஜீரணம் ஆவதோடு, இரவு நித்திரையும் நன்றாக அமையும்.
நன்றி:  
வளமான வாழ்விற்கு உணவே மருந்து
டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,
http://www.tamilvanan.com 
(மணிமேகலைப் பிரசுரம்.)

சர்க்கரை நோய்

உடலுழைப்பு குறைந்து உட்கார்ந்த இடத்திலேயே பல மணி நேரம் வேலை பார்க்கும் நிலை தற்போது அதிகம் உள்ளது. எளிதாக வேலை செய்பவர்கள் எடுத்து கொள்ளும் உணவு வகைகள் கொழுப்பு, புரோட்டின்கள் மற்றும் சர்க்கரை நிறைந்தாக மாறி விட்டன.
உண்ணும் உணவு ஜீரணமாவதற்குள் அடுத்தடுத்து தொடர் உணவுகளை சாப்பிடுவதால் மனித உடலில் கலோரிகள் செலவழிக்காமல் மீண்டும் கலோரிகள் சேரும் போது உடல் எடையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சேர்ந்து பல நோய்களுக்கு அடித்தளமிடுகிறது. 

தற்போது சர்க்கரை நோய் 10 வயது சிறுவர்கள் முதல் 70 வயது முதியவர்கள் என எவரையும் விட்டு வைக்கவில்லை. இந்நோயை முழுதும் குணமாக்க முடியாததால் உணவை கட்டுப் பாட்டில் வைத்து காலம் தள்ள வேண்டிய நிலையில் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இதற்கான பல ஆங்கில மருந்துகள் இருந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத மருந்தாக இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் தயாரித்த சித்த மருந்துகள், நாட்டு மருந்துகள் பயன்படுகின்றன. சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு தயாரிக்கும் கூட்டு மருந்துகளில் ஆவாரை மற்றும் நாவற்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. 
ஆவாரையின் அனைத்துப் பகுதிகளும் மருந்து தயாரிக்க பயன்படுகின்றன. இம்மருந்துகள் சர்க்கரை நோய், நாவறட்சி, வெள்ளை படுதல், உடல் சூடு, சிறுநீர் எரிச்சல், நீனைக் கழிச்சல், கற்றாழை நாற்றம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றன. ஆவாரம் பூவை வதக்கி சமைத்தும் சாப்பிடலாம். ஆவாரை பஞ்சாங்கம் எனப்படும் ஆவாரையின் பூ, கொழுந்து, காய், பட்டை, வேர்பட்டை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்களை குணப்படுத்தும். 

நாவல் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை. 
இம்மருந்துகளை சாப்பிட்டால் பசியைத் தூண்டி, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதன் விதையை சூரணம் செய்து பாலில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிற்று போக்கு போன்றவைகளை குணப்படுத்தும்.

சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா?


சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா?

v6010_212.jpg
பல ஆண்டுகளாகச் சத்துணவு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மத்திய தரைக்கடல் நாடுகளின் உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் இதய சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். இதனால் நீண்ட நாள் வாழ முடியும் என்று புகழ்ந்து பாடி வருகிறார்கள்.
இந்தப் புகழ்பாடலில் இதே உணவுத்திட்டம் புற்றுநோய் கோளாறுகளையும் குணமாக்குகிறது என்பதையும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், நீண்ட நாள் வாழ வேண்டுமா? அப்படியானல் இயற்கை வழியையே பின்பற்றுங்கள். உணவு முறைகளின் மூலம் ஆயுளை ஆரோக்கியத்துடன் நீடித்து வாழுங்கள் என்கின்றனர்.
1994 இல் யுனிவர்சிட்டி ஆப் ஸ்டீ எட்டினி மாரடைப்பு வந்து மீண்ட 605 ஆண்-பெண்களைத் தேர்வு செய்தது. இவர்களில் பாதிப்பேர்களை அமெரிக்க இதயக் கழக சிபாரிசு செய்த உணவுத் திட்டப்படி இறைச்சி, ஐஸ்கிரீம், வெண்ணெய் முதலியன சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். இது முழுநலம் தரும் உணவுத் திட்டம்தான்.
மீதிப்பேர்களை இயற்கை உணவைச் சாப்பிடச் சொன்னார்கள்.
அதாவது இறைச்சி, ஐஸ்கிரீம், வெண்ணெய் முதலியவற்றைக் குறைத்துக் கொள்ளச் சொன்னார்கள். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பீன்ஸ், மீன், ஆலிவ் எண்ணெய், சபோலா ஆயில் அல்லது கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். ஆடு, மாடு, கோழி முதலிய இறைச்சி வகைகள் இவர்களுக்குக் கிடையாது.
நான்கு ஆண்டுகள் கழித்து (1998இல்) இவர்களைப் பரிசோதித்தார்கள்.
இயற்கை உணவுத் திட்டக்காரர்களிடம் 7 பேர்களே புற்றுநோய் அறிகுறியுடன் இருந்தார்கள். ஆனால், அமெரிக்க இதயக்கழக உணவுத் திட்டக்காரர்களில் 12 பேர் புற்றுநோய் அறிகுறியுடன் இருந்தார்கள்.
முதல் இரண்டு ஆண்டுகள் கழித்து ஆராய்ந்த முடிவுப்படி இவர்களுக்கு இயற்கை உணவை நன்கு சாப்பிடச் சொல்ல புற்றுநோய் குறைந்தது.
இதய நோயைத் தடுக்கும் இயற்கை உணவில் புற்றுநோயைத் தடுக்கும் அம்சம் எது என்பதையும் நுணுகி ஆராய்ந்தார்கள். மத்திய தரைக்கடல் நாடுகளில் குறிப்பிட்ட வகைப் புற்றுநோய்களே இல்லை என்பதும் தெரிய வந்தது.
இதற்குக் காரணம் இயற்கை உணவில் உள்ள நார்ச்சத்து, நச்சுமுறிவு மருந்து, மரபணுக்கள் உடைவது (டி.என்.ஏ. உடைவது), முதுமைத் தோற்றம் உண்டாவது போன்ற எல்லா பிரச்னைகளையும் தடுக்கும் சி வைட்டமின், முதலியவையே காரணம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
இதயநோய், புற்றுநோய் உட்பட எந்த நோயும் இன்றி வாழ சரியான நேர்வழியான இயற்கை உணவுத் திட்டத்தையே பின்பற்றுவது நலம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
இயற்கை உணவில் என்ன இருக்கிறது? தக்காளியில் உள்ள வைகோப்பன், பழத்தோல்களில் உள்ள ப்ளோவினாய்ட்ஸ், எலுமிச்சை யில் உள்ள வைட்டமின் சி, ஆரஞ்சுப் பழத்தில் உள்ள மெதியோனின் என்ற அமிலம், மீனில் உள்ள டைரோசின் அமிலம் மற்றும் துத்தநாக உப்பு முதலியவையே இத்தகைய உணவில் அதிகம் இருப்பதால் நோயின்றி நீண்ட நாள் வாழ்க்கையைத் தருகிறது. எல்லா நோய்களையும் இவை தடுத்து கட்டுப்பாட்டில் வைப்பதால் வாழ்நாள் நீடிக்கிறது.
நன்றி:
இளமை காக்க எளிய வழிகள் – கே.எஸ்.சுப்ரமணி
http://www.tamilvanan.com

உணவே மருந்து!

எல்லாவிதமான நோய்களுக்கும் சிறந்த மருந்து உணவுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.உணவு என்றால் கண்டபடி தின்பதல்ல; சத்துக்கள் அடங்கிய முறையான சத்துணவைச் சாப்பிடுவதில்தான் குணம்பெற முடியும் என்கிறார்கள்.

அர்கனாஸிஸில் உள்ளது டாக்ஸிகோலாஜிகல் மையம் (Toxicological Center). மருந்து மற்றும் உணவில் உள்ள நஞ்சுப் பொருட்கள் பற்றி ஆராய்வது இதன் பணி.
இங்கே 12 விதமான முறையில் விலங்குகளை அதன் உணவு முறைகளை வைத்துச் சோதித்தனர். இதன் முடிவில் ஒவ்வொரு வேளையும் சிறிது பசி இருக்கும் விதத்தில் குறைவாகச் சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் எளிதாக நீடிக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
குறைவாகச் சாப்பிடுங்கள். ஆனால் அந்த உணவு சிறந்த சத்துணவாக இருக்கட்டும். இதுவே புற்றுநோய் உள்பட எந்த நோயும் வராமல் தடுக்கும் முக்கியமான ஆரோக்கியத் திறவுகோல் என்ற சுலோகம்தான் இனி உலகம் முழுக்க ஒலிக்கும் என்று எதிர் பார்க்கலாம்!
அமெரிக்க ஜனத்தொகையில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுள் 55% கொழுத்த சரீரத்துடன் இருப்பது ஏன் என 1999ஆம் ஆண்டு ஆராய்ச்சி செய்தார்கள். சத்துணவாக இல்லாமல் கண்டவற்றையும் இவர்கள் சாப்பிட்டதால் கொழுத்த சரீரம், இதய நோய், நீரிழிவு நோய் என பல பாதிப்புக்கு ஆளாகிவிட்டனர். புற்றுநோய் ஏற்படவும் இதுவே பலருக்குக் காரணமாகியிருக்கிறது.
நிறையச் சாப்பிட்டும் அது சத்துணவாக இல்லாததால் டி.என்.ஏ. மரபணுக்களும் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்பட்டு விடுகிறது. சத்தில்லாத உணவு செல்களைச் சீரழித்து விடுகிறது. செல்கள் சீரழிந்தால் வெப்பக் கதிர்வீச்சுக்கள் உடலுக்குள் அதிகமாகிப் புற்றுநோய் வளரத்தூண்டும் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்துவிடுகிறது!
அமெரிக்கர்களில் 25% பேர்கள் தான் ஐந்து வேளைகள் பழங்கள், காய்கறி சாலெட்டுகளை சாப்பிடுகின்றனர். இதில் கிடைக்கும் மிக நுண்ணிய தாது உப்புக்களும், வைட்டமின்களும், டி.என்.ஏ. எனும் மரபணுக்களை கெடாமல் பார்த்துக் கொள்கிறதாம்!
சில விலங்குகள் குறிப்பிட்ட காலத்தில் பட்டினி கிடக்கின்றன. அப்போது படிப்படியாக உடலில் உள்ள அழுத்தம் குறைந்து இனப்பெருக்கச் சக்தி அதிகரிக்கிறது. இந்தப் பட்டினி காலத்தில் புற்றுநோய் உருவாகத் தூண்டும் விஷயங்கள் அழிந்து போய்விடுகின்றன. இவை மனிதர்களுக்கும் பொருந்தும்.
எனவே நோய் தொற்றுவது குறைவாக இருக்கவும், நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் முதலியவை குணமாக அல்லது வராமலிருக்க சரிவிகித சத்துணவை அளவாகச் சாப்பிடுவதே நல்லது. முடிந்தால் வாரம் ஒரு நாள் உண்ணாமல் இருப்பது நல்லது. இதனால் நச்சு முறிவு மருந்து நம் உடலில் இயற்கையாகவே இரசாயன மாறுதலால் ஏற்பட்டு, நீண்ட நாள் வாழ முடியும் - நோய்களின் தொல்லை இன்றியே!
நன்றி: 
வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்–கே.எஸ்.சுப்ரமணி 
www.tamilvanan.com


ஆன்டிபாடி! (Antibody)
ஆன்டிபாடி (antibody) என்றால் என்ன ? 
பலருக்குத் தெரிந்திருக்கும்…
நோய் எதிர்க்கும் சக்திகள், நம் இரத்தத்தில் இருப்பவை. இவை புரதத்தால் ஆனவை!

இவை இரத்தத்தில் பாக்டிரியாக்கள், வைரஸுகள், உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு பிடித்து அதைச் சுற்றிவளைக்கின்றன. 
பின்னர் இவற்றை இரத்ததில் உள்ள வெள்ளை அணுக்கள் அழிக்கின்றன. அப்படி அழிக்க முடியாவிட்டால் நாம் அந்தக் கிருமியால் ஏற்படும் நோயால் தாக்கப்படுவோம்.

ஆட்டோ ஆன்டிபாடிகள் என்றால்? 
ஆன்டிபாடிகள் எப்படி உடலுக்கு அன்னியமான பொருட்களைக் சரியாகக் கண்டுகொள்கின்றன என்பது ஒரு ஆச்சரியம். பொதுவாக கிருமிகள், ஒவ்வாத பொருட்களின் மேல் ஆன்டிஜென் என்ற பொருள் காணப்படும். இந்த ஆன்டிஜென்களை இவை எதிரிகள் என்று இனம் கண்டு கொள்கின்றன. 
ஆனால் சிலருடைய உடலில் உள்ள உறுப்புகளையும், திசுக்களையும் கூட இந்த ஆன்டிபாடிகள் தவறுதலாக எதிரிகளாகக் கணித்து விடுகின்றன. இதனால் இவற்றை அவை தாக்க ஆரம்பித்து விடுகின்றன. இத்தகைய ஆன் டிபாடிகளையே ஆட்டோ ஆன்டிபாடிகள் என்கிறோம்.
இப்படி நம் உடல் ஆன்டிபாடிகளே நம் உடலுக்கு எதிராகச் செயல்படும்போது ஏற்படும் நோய்களுக்கு- ஆட்டோ இம்மியூன் வியாதிகள் என்று பெயர்.
சரி! இதெல்லாம் ஏன் சொல்கிறீர்கள் என்கிறீர்களா? ஆட்டோ இம்மியூன் வியாதிகள் பற்றி அறிந்தால் அரண்டு போவீர்கள்!
 • உலகின் 6 பேரில் ஒருவருக்கு ஏதாவதொரு இந்த வகை வியாதி வருகிறது.
 • இதயநோய், கேன்சர் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு அதிகம் துன்பம் ஏற்படுத்துபவை இவ்வகை நோய்கள்தான்.
 • Type 1 சக்கரை நோய்
 • ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்
 • முடக்குவாதம், ஆங்கிலோசிங்க் ஸ்பாண்டிலோசிஸ்
 • குல்லன் பாரி நோய்
 • சில சிறுநீரக வியாதிகள்
 • மயஸ்தீனியா கிரேவிஸ்
 • சொரியாஸிஸ்
 • அல்சரேடிவ் கொலைடிஸ் எனப்படும் குடல் நோய்
 • வாஸ்குலைடிஸ் என்ப்படும் இரத்தக் குழாய் நோய்
 • மல்டிபிள் ஸ்கிளரோசிஸ் என்னும் நரம்பு நோய்
உள்ளிட்ட 40 வகை நோய்கள் இந்த வகைதான். இன்னும் சிக்கலான மனநோய் போன்றவற்றுக்கும் இது காரண்மாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மனிதன் எதிநோக்கும் மிகப்பெரிய பிரச்சினையில் ஆட்டோ இம்மியூன் வியாதிகள் மிக முக்கியமானவை. இவற்றைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் ஆரம்பத்திலேயே அறிந்து அதனால் ஏற்படும் கொடிய விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம்.
(நன்றி:- http://abidheva.blogspot.com)