வெள்ளி, 31 டிசம்பர், 2010

பகுதி 1:- இயற்கை நலவாழ்வியல் புத்தகங்கள்.

இயற்கை நலவாழ்வியல் தொடர்பான புத்தகங்களைப் பற்றி அறிமுகம் செய்வதற்காக இந்த பதிவினை தொடங்கி உள்ளேன்.

நான் படித்த புத்தகங்களில் இருந்து நான் ரசித்த சுவையான சில பகுதிகளை பதிவிடுகிறேன்.

புத்தகத்தின் தலைப்பு, ஆசிரியர் பெயர், புத்தகத்தின் மதிப்பு, மற்றும் கிடைக்கும் முகவரி போன்றவற்றையும் காணலாம்.

இந்த வகையில் நான் படித்து பெரிதும் விரும்பிய ஒரு புத்தகம் பற்றி இங்கே கூற விரும்புகிறேன்.

1.  புத்தகத்தின் பெயர்:  இயற்கை வாழ்வியல் கலை. (An Art of Natural Life)
2 .  ஆசிரியரின் பெயர்: பிரம்மஸ்ரீ கோ.எத்திராஜ் 

3.  பதிப்பக முகவரி: சித்த வித்தை தவ மையம், சித்த வித்யார்த்தி ஃபௌண்டேஷன், சித்தர் வழிச் சாலை, சிவானந்தகிரி, மல்லையாபுரம், ஆத்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.  

4.  புத்தக விவரம்:    இயற்கை நலவாழ்வியல் பற்றிய அற்புதத் தொகுப்பு

5. 103 பக்கங்கள்,

6. விலை ரூ.60 மட்டும். (இந்த பணத்தை தவ மைய வளர்ச்சிக்காக பயன்படுத்தப் போவதாக ஆசிரியர் கூறி உள்ளார்)

புத்தகத்தில் இருந்து சில சுவையான பகுதிகளை வெளியிடுகிறோம்.

இயற்கை அன்னையின் பேராற்றலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சகல ஜீவ ராசிகளுக்கும் இந்நூல் சமர்ப்பணம் என்று துவங்கும் நூல் ஆசிரியரின் முன்னுரையிலிருந்து:

முன்னுரை:
''அன்றாட வாழ்க்கையில் இன்றைய நவீன மனித குலம் நெறியற்ற, முறையற்ற தனது உணவுப் பழக்கத்தினால் தன்னைத் தான் இழந்து கொண்டே வருகிறது.''
''உடல் பிரச்சினைகளோடும், மனக் குழப்பங்களோடும், வியாதியைப் பற்றிய சந்தேகங்கலோடும், பக்குவமில்லாத கேள்விகளோடும், நிறைந்து கிடைக்கும் நிறைவின்மைகளோடும் வாழப் பழகி விட்ட மனித சமுதாயம், அவைகளிலிருந்து தம்மை முழுமையாக விடுவித்துக் கொள்ளவும், வருங்காலத் தலைமுறைகளுக்கு தெளிவான தீர்வினை அளிக்கவும் தவறிவிட்டது.''
மனிதன் ''பொருளாதாரத்தில் சில இலக்குகளை இவனாகவே நிர்ணயம் செய்து கொண்டு, உடல் பற்றியும், உயிர் பற்றியும் எந்த ஒரு சிந்தனையும், ஆலோசனையும் இன்றி வாழ்க்கையை இயந்திரத்தனமாக மாற்றியமைத்துக் கொண்டான். போருலாதாரங்களைத் தேடிக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற தவறான கொள்கையையும் வளர்த்துக்  கொண்டான்....
நிர்ணயித்த பொருளாதார இலக்கை அடைந்த பிறகு, மனிதன் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது, திரும்பப் பெறவே முடியாத பொக்கிஷங்களான அமைதியையும், ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் இழந்ததாகவே அவன் அனுபவத்தில் உணருகிறான்.....''
''இழந்தவற்றைஎல்லா திரும்பப் பெறுகின்ற முயற்சியின் போது, அவன் நம்பியிருந்த பொருளாதாரமும் அவனைக் கைவிட்டு விடுகிறது.'' ......
''வாழ்வதற்கு பொருள் அவசியம் வேண்டும் என்ற மனிதன், ''வாழ்வதிலும் பொருள் வேண்டும்'' என்பதை உணர்ந்திருக்கவில்லை. அதனால் தான் அவனுக்கு இவ்வளவு தொல்லை''.
''சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிப்பதில்லை. தீர்வுகள் இல்லாமல் எந்தப் பிரச்சினைகளும் உருவாவதில்லை. மனித உடல் மற்றும், மனம் சார்ந்த எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் அதற்கு ஒரே தீர்வு.

முழு இயற்கை வாழ்வியல் முறையில்  
வாழ முயற்சிப்பது தான்.
''இயற்கை வாழ்வியல் கலை என்பது 500 வருடங்களோ, அல்லது 1000 வருடங்களோ வாழ்வதற்கான வழி முறை அல்ல. மனிதன் வாழும் வரை எவ்வித நோய்களுமின்றி, மருந்துகளும் இன்றி, துன்பங்களின்றி பேரானந்த வாழ்வு வாழ்வதற்கான முயற்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை.''
''உலகோரைத் திருத்தவோ அல்லது எனது சுயகருத்துக்களை உங்களிடம் திணிப்பதோ இந்நூலின் நோக்கமில்லை! அது நம்முடைய வேலையும் அல்ல! உலகோருக்கு தெரிவிப்பது நமது கடமை ! திருந்துவதும் திருந்தாமல் போவதும் அவர்களது உரிமை! உண்மையில் நம்மை நாம் திருத்திக் கொள்வதில் தான் பிறவியின் இரகசியம் ஒளிந்திருக்கிறது !
அன்புடன்,
கோ.எத்திராஜ்
சின்னாளப்பட்டி.

நூலாசிரியர் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பட்டியலிட்டு விட்டு பின்னர் அதோடு விட்டு விடாமல் எளிய முறையிலான தீர்வுகளையும் இந்த நூலில் சொல்லுகிறார். 

புத்தகம் பற்றிய செய்திகளையும், சில பகுதிகளையும் வெளியிட அனுமதி தந்தபிரம்மஸ்ரீ கோ. எத்திராஜ் அவர்களுக்கு நன்றி.

முக்கியத் தலைப்புகளில் ஆசிரியரின் தீர்வுகள் பற்றிய சுருக்கப்பட்ட விவரங்கள் கொண்ட பதிவுகள் தொடரும். 


 
அன்பான வேண்டுகோள்:

ஆசிரியர் ஒரு பி.இ. பட்டதாரி இளைஞர். வடகரை சிவானந்தரின் தவ வாழ்க்கை நெறியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். திண்டுக்கல் அருகாமையில் ஆத்தூர் அருகே இயற்கை சூழலில், கொடைக்கானல் மலைச் சாரலில் தவமையம் அமைத்து இயற்கை நலவாழ்வினை வாழ்ந்து வருபவர். வடகரை சிவானந்தரின் சித்தவித்தையை ஆர்வம் உள்ளோருக்கு கற்றுத் தந்து வருகிறார்.

இயற்கை நலவாழ்வியல் பற்றிய அரிய கருத்துக்கள் கொண்ட இப்புத்தகத்தினை ஆசிரியர் எந்தக் கடையிலும் விற்க ஏற்பாடு செய்யவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் ஆசிரியரை தபால் மூலம் தொடர்பு கொண்டு புத்தகத்தினைப் பெறலாம். லாப நோக்கில்லாமல் இந்தப் புத்தகத்தினை வெளியிட்டிருப்பதாலும், தவமைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு புத்தகத்தின் விலை குறிக்கப்பட்டிருப்பதாலும், ஆர்வம் கொண்ட நண்பர்கள் பத்து அல்லது இருபது புத்தகங்களாக மொத்தமாக வாங்கி தங்களுக்குள் விநியோகித்துக் கொள்வது ஒரு சிறந்த முறை. மற்றும் பிறந்த நாள், மண நாள் வாழ்த்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் வாழ்த்து சொல்வது போன்ற நேரங்களில் இந்தப் புத்தகத்தை பரிசளிப்பது மற்றொரு சிறந்த முறை.
 
நன்றி.
எளியேனின் 
வலைப்பூவைத் 
தொடர்ந்து பார்வையிட்டு 
ஆசி கூறியும், ஆதரித்தும், 
என்னை வாழ்த்தும்
அன்பு நெஞ்சங்கள் 
அனைவருக்கும் 
எனது நெஞ்சு நிறைந்த 
ஆங்கிலப் புத்தாண்டு  
வாழ்த்துக்கள். 



எதிர் வரும் நாட்களில் 
அன்பர்கள் வாழ்வில் 
அன்பு, ஆனந்தம்,  
தேக நலம்,  ஆன்ம நலம், 
மற்றும் எல்லா வளங்களும், 
அமைதியும், ஆனந்தமும் 
பொங்கிப் பிரவகிக்க 
என் ஈசன் ஆடல் வல்லான் 
அருட்துணையை 
நாடி வணங்குகிறேன். 

அன்புடன்:
 
வாழி நலம் சூழ.
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
 
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com

வியாழன், 30 டிசம்பர், 2010


இயற்கையே இறைவன்;
இயற்கை வழி வாழ்தலே இறை வழிபாடு.


யோகக் கலையின் தமிழ் நூலான திருமந்திரம் அருளிய திருமூலநாயனார். உடல் நலத்தின் சிறப்புகளை பலவாறு பாடியுள்ளார்.
''உள்ளம் பெருங்கோவில்
ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தார்க்கு
சீவனே சிவலிங்கம்''
என்றும்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பிற்குள்ளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஒம்புகின்றனே.
எனவும்,
உடம்பாரழியிர் உயிராலழிவர் 
திடம்பட மெய்ஞானம் சேரவுமாட்டார்
உடம்பினை வழக்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பினை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
எனவும்,
அண்டம் சுருங்கின் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கின் பிராணன் நிலை பெறும்
உண்டி சுருங்கின் உபாயம் பலவுள  
கண்டங் கருத்த கபாலியுமாமே.
என்றெல்லாம் அவர் உடல் நலத்தினை பேணிக்காப்பதைப் பற்றி கூறுகிறார்.
அது போலவே உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரும் மிக அழகாக இதையே
''மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றியுணின்''
எனவும்,
''மாறுபாடில்லா வுண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு''
எனவும் கூறியுள்ளார்.

செய்தியை தந்தவர்: 
திரு மூ.ஆ.அப்பன்,
இயற்கை நலவாழ்வியல் ஆலோசகர் 
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்)

புதன், 29 டிசம்பர், 2010


ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட்ஃபுட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
 நன்றி: வெப்துனியா.
இயற்கை உணவும் இரத்தத்தின் தன்மையும்...
(உங்கள் குடும்ப டாக்டர் உங்களிடம் சொல்லாமல் மறைத்த ரகசியம் இதோ):

இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது. 

இயற்கை உணவும் காரத்தன்மை உடையது.  எனவே இயற்கை உணவு  எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும். 

ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது. எனவே அது  இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும். 

உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும்.  

அந்த போராட்டத்தில் உடல் (நலிவடையும் போது) தோல்வியடையும் போது நாம் நோய் வாய்ப்படுகிறோம்.

அல்லோபதி மருந்துகளும் நச்சத் தன்மை கொண்டிருப்பதினால், உங்கள் இரத்தத்தின் காரத் தன்மையை அமிலத் தன்மையாக மாற்றும் வல்லமை கொண்டவை. 
 
இயற்கை உணவுக்கு மாறுங்கள். உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.  

மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பூவின் மற்ற பகுதிகளைப் படியுங்கள். 

செவ்வாய், 28 டிசம்பர், 2010

யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும்.

“இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” என்பது போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப்படும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் வரையறுக்கப்படுவதற்கு முன்பே யோகம் பற்றிய பல நுட்பங்கள் அறியப் பட்டிருந்திருக்க வேண்டும் என்றே யோக அறிஞர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த நூலில் ஆசனம் பற்றி ஒரே ஒரு சூத்திரம் தான் உள்ளது: “உறுதியானதும், சுகமாயிருப்பதும் ஆன நிலை ஆசனம்”. ஏதாவது ஒரு ஆசனம் செய்யும்போது யாருக்காவது உடல் வலியால் முகம் சுளிப்பது போல் ஆனால் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்று எங்கள் யோக ஆசிரியர் இந்த சூத்திரத்தைச் சொல்லி நினைவூட்டிக் கொண்டே இருப்பார்!

பதஞ்சலிக்குப் பின்னர் வந்த “ஹடயோக ப்ரதீபிகா” போன்ற நூல்களில் இன்று மிகப் பிரபலமாகி நாம் பயின்று வரும் பல ஆசனங்களின் பெயர்களும், அந்த ஆசனத்தில் உடலின் தோற்றம் (posture) எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய சித்திரங்களும் கிடைக்கின்றன. படங்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தாமல் சொற்கள் மூலமே விளக்கினாலும் ஆசனங்களுக்கான தெளிவான கையேடாக இந்த நூல் விளங்கி வந்திருக்கிறது. இது தவிர, வழிவழியாக வந்துள்ள தொடர்ச்சியான குரு சிஷ்ய மரபுகளும் இந்த ஆசனங்களில் உள்ள கலை நுணுக்கத்தை சரியான முறையில் இன்றுவரை எடுத்து வந்துள்ளன.

ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன.

பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது. 2-3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளரும் பருவத்தில் தாங்களாகவே பல ஆசனங்கள் போடுவதைப் பார்க்கலாம். உட்காருவதற்கு வந்து நிற்கத் தொடங்கும் சமயம் பல குழந்தைகளுக்கு வஜ்ராசனம் தானாக வரும். தவழ்வதற்காக அமரும் தோற்றமே ஒரு ஆசனம் தான்! ஆசனங்களின் இந்த இயற்கைத் தன்மை அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

புகழ்பெற்ற யோக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது அவர் கூறினார் “யோகத்தின் ஒரு உயர்ந்த நிலையில் செல்லும்போது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆன்மாவை யோகிகள் உணர்ந்தார்கள். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக அவர்கள் உடல் தானாகவே பல விதமான தோற்றங்கள் கொண்டது. இப்படித்தான் ஆசனங்கள் தோன்றின. பின்னர் அவை ஆய்வுக்கு உட்பட்டு நெறிப்படுத்தப் பட்டன. பிராணாயாம முறைகள் தோன்றியதும் இப்படித்தான்.” ஸ்ரீஸ்ரீ அவர்களது உருவாக்கம் என்று கருதப்படும் புகழ்பெற்ற “சுதர்ஷன் க்ரியா” என்ற பிராணாயாம முறையும் பரிசோதனைகளாலோ, புறவயப்பட்ட முயற்சிகளாலோ தோன்றவில்லை. 

மாறாக, ஆழ்ந்த தியானத்தின் போது தானாகவே அது சித்தித்ததாக அவர் பலமுறை கூறியுள்ளார். உலகெங்கும் உள்ள யோக ஆசிரியர்கள் அடிப்படை யோகப் பயிற்சிகளில் புதிய புதிய பரிமாணங்களை இன்றும் ஆக்கம் செய்து வருகிறார்கள். இவற்றில் எத்தனை முயற்சிகள் அகவயப்பட்டவை என்பது கேள்விக்குரியது. இருந்தாலும் யோகம் என்பது “கணந்தோறும் புதிதாகத்தோன்றும்” ஒரு வாழும் கலை என்பதில் ஐயமில்லை.

யோகாசனங்கள் உருவாக்கும் உடல் தோற்றத்தோடு, அவை தரும் உணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு பின்னர் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!”

என்று திருவாசகம் கூறும் அதீத அனுபவம் பரிணாம அறிவியல் கூறும் வளர்ச்சிப் படிநிலைகளை மட்டுமல்ல, அனைத்து உயிர்களாகவும் ஆகும் ஆன்மாவின் தன்மையையும் குறிக்கிறது. எண்ணிப் பார்த்தால், இந்தப் பேரனுபவத்தின் வெளிப் பாட்டை மனித உடலின் மொழியில் பாடும் அழகிய கவிதைகள் யோகாசனங்கள்!

அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன.













  • தனுராசனம் (வில்)



























































 கீழ் நோக்கும் நாய்
























மேல் நோக்கும் நாய்




































































கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம்.











எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்.











முனிவர்களின் பெயரால்
பரத்வாஜாசனம், மத்ஸ்யேந்திராசனம்.































தெய்வ சக்திகளாக வீரபத்ராசனம், நடராஜாசனம்.























இதயக் கமலத்தில் உறையும் ஆன்ம சக்தியின் உருவகமாகவும், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்று ராஜயோகம் கூறும் சக்தி பீடமான சக்கரத்தின் உருவகமாகவும் விளங்கும் அற்புதமான பத்மாசனம்.


















இப்படி ஆசனங்களிலேயே அனைத்துயிர்களின் உணர்வு நிலைகளும் தோன்றும்படி யோகிகள் இவற்றை வடிவமைத்து பெயரும் இட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது!
ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே
                              - திருமந்திரம் 4.13.23

அடுத்த முறை விருட்சாசனம் செய்யும்போது, சில கணங்கள் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மரமாகவே ஆகிவிட்டதாக உணருங்கள். அற்புதமான உணர்வு அது!

நன்றி -- ஜடாயு.

திங்கள், 27 டிசம்பர், 2010

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 


  
மூன்று நாட்கள் இயற்கை மருத்துவ முகாம்

நாள்:- 21-01-2011 to 23-01-2011 
(வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில்.

நடைபெறும் இடம்: இயற்கை வாழ்வு நிலையம் 
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்) 
குலசேகரன் பட்டினம் 
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். 


 
ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள: 
திரு Dr. மூ.ஆனையப்பன், 
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )
9944042986, 9380873465 


நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.