திங்கள், 2 மே, 2011

6. கனி இருப்ப... மனித உடல் எனும் மாபெரும் 'ஆ'ச்சரியம்

கனி இருப்ப.
(அஷ்வின்ஜி வழங்கும் இயற்கை நலவாழ்வியல் தொடர்.)

முந்திய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்:


கனி இருப்ப... தொடர்கிறது....

பகுதி ஆறு:
'என்னை இறைவன் நன்றாக வைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே' என்பார் திருமூலர். உடம்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதையே மெய்யுணர்வு (அ) மெய்ஞானம் என்றும் கூறலாம். இதைத்தான் 'உள்ளத்திலே சீவன் உறைகின்றானென்று உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்ததேனே' என்பார் திருமூலர். உலகிலேயே மிகப் பெரிய பொய், நிலையாத இந்த உடல்தான் என்னும் மெய்யை உணர்த்துவதால்தான் பொய்யான இந்த உடலை மெய் என்றார்கள் ஞானிகள்.  ஆனால் உலக வாழ்வுக்கு இந்த உடல்தேவையாக இருப்பதினால் உடலை வளர்க்கும் உபாயம் பற்றி எல்லாம் ஞானிகள் கூறுகிறார்கள். மனித உடல் ஒரு அற்புதமான இறையருட்கொடை. உடலின் எல்லா உறுப்புகளும் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்களும் அறிவியலார்களும் வியந்து பாராட்டுகிறார்கள்.பல மில்லியன் ஆண்டுகளாக தொடர் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் மூலம் இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஓயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது.
  • கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது. 
  • மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ 
  • நீரின் அளவு:மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது.
  • இதயம்:இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாக்கும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.
  • பிட்யூட்டரி சுரப்பி:மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. 
  • உடலின் வளர்ச்சி:ஒருமனிதன் 25 வயதில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குருத்தெலும்புகள்   காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். 
  • இதயத் துடிப்பு:ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப்பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது.வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும் நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. 
  • சருமம் (தோல்): மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான்.  வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும் முதுகில் உள்ள குருத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. 
  • ரோமங்கள் (முடி): சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. 
  • எலும்புகள்:குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம். 
இப்படி எண்ணற்ற வேலைகளை ஓயாமல் உடல் செய்து கொண்டே இருக்கிறது.  இந்த வேலைகள் நின்றுவிட்டால் வாழ்க்கை ஓட்டமும் நின்று விடுகிறது. இந்த செய்திகளை நான் திரு வடிவுடையானின் வலைப்பூவில் இருந்து எடுத்தாண்டிருக்கிறேன். அருமையான செய்திகளை தந்தமைக்கு நன்றி: திரு.வடிவுடையான் அவர்களின் வலைப்பூ:http://vcvadivudaiyan.com/blog/archives/282

(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ..
அஷ்வின்ஜி.

ஞாயிறு, 1 மே, 2011

5. கனி இருப்ப... இயற்கை நலவாழ்வியல் தொடர்..

(அஷ்வின்ஜி வழங்கும் இயற்கை நலவாழ்வியல் தொடர்)

முந்தைய இடுகைகளுக்கு:

பகுதி ஒன்று: அறிவிப்பு.

பகுதி இரண்டு: முன்னுரை மற்றும் அறிமுகம்.

பகுதி மூன்று: இயற்கை நலவாழ்வியல் ஒரு மருந்தற்ற மகத்துவம்.

பகுதி நான்கு :- இயற்கை மருத்துவம் என்றால்…?

பகுதி ஐந்து தொடர்கிறது.

இயற்கை நலவாழ்வியல் பற்றி நான் படித்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களின் தொகுப்பாக பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். படித்து பாராட்டி பின்னூட்டி வரும் அனைத்து ஆர்வலர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சீரியசான இந்த தொடருக்குள் செல்லுமுன்பாக ஒரு ஜோக்கை படியுங்கள்.
ஒரு பூங்காவில் வயதான ஒருத்தர் உட்கார்ந்து அழுது புலம்பிக்கிட்டு இருந்தார். 
அவரு கிட்ட போயி "என்னங்க விஷயம்"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர்  "போன மாசம் தான் ரிட்டயரு ஆனேன். ஏகப்பட காசு வந்துச்சி நெறய சொத்து, காரு இருக்கு, அருமையான மனைவி, புள்ளைங்க எல்லாம் இருக்காங்க, வேளாவேளைக்கு அருமையான சாப்பாடு போட்டு என்னை அருமையா கவனிச்சுக்குவாங்க"ன்னாரு. இந்தப் பதிலைக் கேட்டவுடன் நான் அவரைப் பாத்து, "அப்றம் ஏங்க இங்க ஒக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க"ன்னு கேட்டேன் அதுக்கு அவர் என் வீட்டுக்கு போற வழி மறந்து போயிட்டேன்"ன்னாரு.
இந்த ஜோக்குக்கும் கட்டுரைக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து படிக்கும் போது இறுதியில் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
கனி இருப்ப... 
தொடர்கிறது..
சென்னை அண்ணாசாலை, காயிதே மில்லத் கலைக் கல்லூரி வளாகத்தில் நிறைந்திருக்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பல நூறு ஆண்டுகளாக வாழும் மரங்கள் அவை. சென்னையின் அதிகமான வாகனப் போக்குவரத்து புழங்கும் இடம் அண்ணா சாலையின் அந்தப் பகுதி. வாகனப் புகையின் மாசு அதிகம் உள்ள இடம். இந்த மரங்கள் இன்னும் ஆரோக்கியமாக வாழ்வதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? 

அவைகளை சுற்றுப் புற மாசுகள் பாதிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? 

நமது சுவாச கோஷங்களைப் பாதிக்கும் மாசுக்கள், அவற்றை ஏன் பாதிக்க வில்லை? 

நாம் பெறுவது போல அவற்றிற்கு மருத்துவமோ, மருந்துகளோ யார் தருகிறார்கள்? 

அந்த மரங்களால் சுற்றுப் புற சூழல் சீர்கேட்டினை எவ்வாறு எதிர் கொள்ள முடிகிறது? 

அந்த மரங்கள் இயற்கையை நம்பி இருக்கின்றன. அந்த மரங்களுக்கு வாழும் சக்தியை பஞ்ச பூதங்களும் தருகின்றன. 

அவை நிலைத்து நிற்க, மண்ணும், உயிர் வாழ நிலத்தடி நீரும், காற்றும், விண்ணும், சூரியன் தரும் அழலும் (வெப்பமும்) நேரடியாக இயற்கையில் இருந்தே கிடைக்கின்றன. 

அவை செயற்கையாக எவற்றையும் பெறுவதில்லை. இரவு பதினோரு மணியில் இருந்து அதிகாலை நான்கரை மணி வரை அவற்றுக்கு தேவையான ஓசோன் காற்று நேரடியாக கிடைத்து விடுகின்றது. 

அதுவே இந்த மரங்கள் நாம் அவற்றுக்கு எதிராக எத்தனை மாசுப் புகைகளை செலுத்தினாலும் அவற்றை எதிர் கொண்டு ஆரோக்கியமாக உயர்ந்து வளர்கின்றன. நமது தவறான வாழ்க்கை முறை காரணமாக நமது உடலின் மரபு அணுக்களில் கூட சீர் கேடுகள் விளைகின்றன. அதன் காரணமாக நமக்கும், நமது வாரிசுகளுக்கும் இந்த மரபணுக் குறைபாடுகளின் காரணமாக நோய்கள் வருகின்றன. 

ஆனால், அண்ணா சாலையில் நிற்கும் அந்த ஒரு வேப்ப மரம் தனது மருத்துவ குணாதிசயங்களை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவில்லை. அதன் மரபணு சீர் குலையவில்லை. பஞ்ச பூதங்களின் துணையுடன் அவைகள் வாழ்வதால் எந்த ஊறுபாடும் இன்றி நெடிதுயர்ந்து நிற்கின்றன.

இன்றைய கால கட்டங்களில் நாம் நம்மை நான்கு சுவர்களுக்கு மத்தியில் அடைத்துக் கொண்டு வாழப் பழகி விட்டோம். மேலும் நேரத்துக்கு தூங்குவதில்லை. பதினொரு மணிக்கு முன்னர் உறங்காவிட்டால் பிரபஞ்சம் தரும் ஓசோன் மூலமாக வருகின்ற பிராண சக்தி நம்மை அடைவதில்லை. உறங்கி இருக்கும் போது தான் இந்த பிராண சக்தி நமக்குள் ஒன்று பட வாய்ப்பு இருக்கிறது. மரங்கள் இரவு வேளைகளின் பொழுது நாம் மாசுபடுத்திய காற்றினை ஆக்சிஜனைத் தயாரித்து வெளிப்படுத்துவதன் மூலம் சுத்தப் படுத்துகின்றது. 
 மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது மரங்கள்.
படம் : நன்றி : கூகிள் 

இந்த அற்புதமான காற்றை சுவாசிக்காமல் நாம் கதவுகளை அடைத்துக் கொண்டு மின்விசிறியின் காற்றையோ அல்லது குளிர் சாதன பெட்டி தரும் காற்றையோ சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.அதோடு கூட கொசுவிரட்டியின் புகையையும் காசு கொடுத்து சுவாசித்து நம் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். வியாதிகளின் பெருக்கத்திற்கு என்ன காரணம் என்று இப்போது புரிகிறதா?

இன்றும் தயாராகக் கிடைக்கும் இயற்கை அன்னையின் அருட்கொடைகளை விட்டு விலகி போய்க் கொண்டிருக்கிறோம் நாம். 

நவீன வாழ்வின் சுகபோகங்களின் ஆதிக்கத்துக்குள் சிக்கிக் கொண்டு ஆதி சக்தி நமக்கு தர தயாராக வைத்திருக்கும் உன்னத இயற்கை நலவாழ்வியல் வளங்களை மறந்து போய் விட்டோம், இந்த பதிவின் ஆரம்பத்தில் புலம்பிக் கொண்டிருக்கும் வயதான பெரியவர் போல.

நவீன வாழ்க்கைக்கு எதிராக எதுவும் நான் சொல்லவரவில்லை. நம்மால் இந்த வாழ்க்கையை தவிர்க்க முடியாது. ஆனால் இயற்கை நலவாழ்வியல் முறைகளை கடைப் படிப்பதின் மூலம் நவீன வாழ்க்கையின் சுகங்களை, அவை தரும் பாதிப்புக்கள் இன்றி அனுபவிக்க நம்மால் இயலும்.

நமது வாழ்க்கை, தொழில் மற்றும் வாழ்வாதாரங்கள், பொருளாதாரம் போன்றவை பாதிக்காமல் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதின் மூலம் நம்மால் இயற்கை நலவாழ்வியலை மேற்கொள்ள முடியும். 

அவற்றைப் பற்றி மேலும் சிந்திப்போம்..

(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ..
அஷ்வின்ஜி.

முக்கியக் குறிப்பு: இந்தத் தொடர் கட்டுரையின் அடுத்த பகுதி இரண்டு வாரங்கள் கழித்து வெளியாகும். திருச்சி அருகே உள்ள பெருகமணி என்னும் இயற்கை வளம் நிறைந்த காவிரிக் கரையோரத்து ஊரில் மே நான்காம் தேதியில் இருந்து எட்டாம் தேதி வரை நடைபெறும் ஐந்து நாள் முழு நேர இயற்கை நலவாழ்வியல் முகாமில் கலந்து கொள்ள செல்கிறேன். அதிகாலை நாலரை மணியில் இருந்து இரவு ஒன்பதே கால் வரை பயிற்சிகள் தரப் படுகின்றன. முழு இயற்கை சூழலில், யோகாசனப் பயிற்சி, இயற்கை உணவு தயாரிப்பு முறைகள், தியானம், பிராணாயாமம், இயற்கை நலவாழ்வியல் குறித்த அறிஞர்களின் நேரடி பயிற்சி போன்றவைகளை அங்கே பெறலாம். அங்கே நான் கண்டு, கேட்டு, உணர்ந்த விஷயங்களை அடுத்த தொடரில் இருந்து வெளியிடுவேன். நவீன வாழ்க்கையின் இன்னல்களில் இருந்து விடுபடும் இரகசியங்களை அந்தத் தொடர் கட்டுரைகளின் உங்களுக்கு நான் வெளிப்படுத்துவேன். காத்திருங்கள். நன்றி.