திங்கள், 3 டிசம்பர், 2012

யோக நலமே வாழ்வின் வளம் - சங்கப்ரக்ஷாலன க்ரியா மற்றும் இயற்கை நலவாழ்வியல் முகாம்..நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, ஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக  அஜீரணம், வாயு உபத்திரவம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல்(அசிடிடி) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன. 

நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோக வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தரும். 

யோகம் என்ற சொல் பல படிநிலைகளை கொண்டது. அஷ்டாங்க ஆசனம் என்று எட்டு அங்கங்களை கொண்டது. வெறும் ஆசனங்களை செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வகை பிராணாயமம் மட்டுமே செய்வது அல்லது ஒரு தியான வகையை தொடர்ந்து செய்வது போன்றவை சிறப்பான பலன்களைத் தருவதில்லை. 

ஆசனம், பிராணாயாமம், பந்தம், கிரியை, முத்திரை என்று பல முறைகள் உள்ளன. இவற்றில் நல்ல பயிற்சி பெற்ற ஒருவர் செய்யும் தியானம் நல்ல பலன்களைத் தரும்.

முறையாக குருமுகமாக யோகாசனங்களை தொடர்ந்து செய்து வருபவர்கள், மேற்கண்ட முறைகளைப் பற்றியும், க்ரியாக்கள் எனப்படும் சுத்தம் செய்யும் வழி வகைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடம்பினுக்குள்ளே அமைந்திருக்கும் கருவிகளை சுத்தம் செய்ய க்ரியாக்கள் பெருமளவில் பயன்படுகின்றன.

கிரியாக்கள் பல உண்டு: ஜல நேத்தி, சூத்திர நேத்தி, சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா (லகு சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா), வாமன தவுத்தி (குஞ்சால் க்ரியா), பஸ்தி கிரியா, கபாலபாதி, த்ராடகா, அக்னிசாரக்ரியா என பலவகையான கிரியாக்கள் உள்ளன.

இவற்றை நன்கு கற்றுத் தேர்ந்த யோகா மாஸ்டர் மூலமாக பயில்வதே நல்லது.

எல்லோரும் எளிமையாக செய்து பயன் பெற ஜலநேத்தி கிரியா உதவுகிறது. ஜலநேத்தி பற்றி அறிய இங்கே சொடுக்கவும். அதைப்போலவே தங்கும் மலத்தால் ஏற்படும் தீமைகளை களைய அஹிம்சா எனிமா பயன்படுகிறது. அதைப்பற்றிய பதிவு இந்த தளத்தில் முன்பு வெளியானது. அஹிம்சா எனிமா பற்றிய விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.  உடலை சுத்தப் படுத்தி, திரி தோஷங்கள் (வாத, பித்த, கபம்) சரியான விகிதத்தில் உடலில் இயங்கிட சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் பழங்காலத்திய யோகியர் வாழ்க்கை முறை உதவுகிறது.

குடலைக் கழுவி உடலை வளர் என்னும் முதுமொழியின் பயிற்சி வடிவமே சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா எனலாம்.

இரைப்பை, (சிறு-பெருங்) குடல்களை சுத்தப் படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், இரத்த சுத்திகரிப்புக்கும், இந்த கிரியா பயன்படுகிறது.

எளிமையான லகு சங்கப் பிரக்ஷாலனா செய்முறை:

காலையில் உணவு உண்பதற்கு முன்னதாக, தண்ணீர் கூட அருந்தாமல் வெறும் வயிற்றில் இந்த கிரியாவை செய்ய வேண்டும்.

உப்புக் கரைந்த இளம் சூடான தண்ணீரை இரண்டு கப்புக்களை குடித்து விட்டு, கீழ்க்கண்ட ஆசனங்களை செய்ய வேண்டும்:

தாடாசனம், திர்யக தாடாசனம், கடி சக்ராசனம், திர்யக புஜங்காசனம், உதாரகர்ஷானாசனா போன்ற ஆசனகளை செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு இந்த ஆசனங்களை செய்தல். மற்றும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு, இந்த ஆசனங்களை செய்தல். அதாவது மூன்று முறை செய்தல். பின்னர் குடித்த தண்ணீரை வெளியற்ற வேண்டும். இதற்கு சில கிரியாக்கள் உள்ளன.

முன்பே குறிப்பிட்டபடி தேர்ந்த யோகா மாஸ்டரின் உதவியுடன் இந்த கிரியாவை செய்தல் வேண்டும்.

ஒரு இனிய செய்தி:

இம்மாதம் (அதாவது டிசம்பர் இரண்டாயிரத்துப் பன்னிரண்டு) இருபத்தேழு, இருபத்தெட்டு, இருபத்தொன்பது, முப்பது  தேதிகளில் சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ கயிலை மாமுனிவர் கலையரங்கத்தில் நான்கு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமினை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.

நான்கு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும். முக்கியமாக பூரண சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் முழு வயிறு மற்றும் குடல் சுத்திகரணப் பயிற்சி இங்கே சொல்லித் தரப்படும். ஆர்வம் உள்ளவர்கள் சங்கப்ரக்ஷாலனக் கிரியாவைக் கற்றுக் கொள்ளலாம்இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள யோகியர்களும், யோகினிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள் :27-12-2012 (பிற்பகல் இரண்டு மணிக்கு)
முகாம் நிறைவடையும் நாள்: 30-12-2012 (மாலை நான்கு மணிக்கு)

இடம்: குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளி, 
திருப்பனந்தாள் - 612504, 
தஞ்சை மாவட்டம்.

முகாம் கட்டணம்: ரூ.1000 (ஆயிரம்) மட்டுமே.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்பது, முப்பத்துநான்கு, நாற்பத்துநான்கு, இருபத்தேழு, அறுபத்துநான்கு, இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு திசம்பர் திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முகாம் பற்றிய விவரங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.

திரு.இராமலிங்கஅம் அவர்கள்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
கைபேசி: 9486768930 
இல்லம்: 0435-2472816

வாழி நலம் சூழ...

செவ்வாய், 13 நவம்பர், 2012

தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்.இந்நாள் மட்டுமின்றி எந்நாளும்
இனிக்கட்டும் இறையருள் 
நிறையட்டும் சிவனருள். 
  
சிவாய நம.வலைப்பதிவர் 
அனைவர்க்கும் 
என் இதயம்  நிறைந்த 
தீபாவளி நன்னாள் 
 வாழ்த்துக்கள்.

அஷ்வின்ஜி 

புதன், 17 அக்டோபர், 2012

யோக நலமே வாழ்வின் வளம்.


யோக நலமே வாழ்வின் வளம்.

யோகா ஆசான் டாக்டர் தி.ஆ. கிருஷ்ணன் 

தமிழ் நாடு விளையாட்டுக் கல்வி பல்கலைக் கழகம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்து யோகா பாடப் பிரிவுகளையும், சென்னை திருமூலர் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வு மையத்தின் ஸ்தாபகராகவும், இயக்குனராகவும் விளங்கி வரும் யோக ரத்னா, யோக பீஷ்மாச்சாரியா டாக்டர் திரு. தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் மூலமாக நிறையப் பேர் யோகா கற்றுக் கொண்டு  யோகா ஆசிரியர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.  பல்கலையின் இந்த ஆண்டு சேர்க்கை துவங்கி உள்ளது.  

Certificate Course In Yoga
Diploma in Yoga
PGDiploma in Yoga
MSc (Yoga)
MSc (Yoga Therapy)
போன்ற பாடப் பிரிவுகளில் கற்றுத் தேர்ச்சி பெறவும், வேலை வாய்ப்பு பெறவும், சுயமாக வகுப்புகள் நடத்தவும் தலை சிறந்த ஆசிரியர்களின் மேற்பார்வையில் நேரடி பயிற்சி பெற்றிட ஒரு நல்வாய்ப்பு.

யோகா கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளோர் திருமூலர் யோகா மையத்தின் ஸ்தாபகரும், இயக்குனருமான யோகி திரு.தி.ஆ.கிருஷ்ணன் ஆசான் அவர்களை  9444837114 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

யோகா கற்றுக் கொள்வீர்; 
வாழ்வின் வளம் சேர்ப்பீர்.

வாழி நலம் சூழ...

வியாழன், 11 அக்டோபர், 2012

முக்கிய அறிவிப்பு


வாழி நலம் சூழ...

யோக நலமே, வாழ்வின் வளம்.

முக்கிய அறிவிப்பு 

ஆசனா ஆண்டியப்பன்

யோகி தி.ஆ.கிருஷ்ணன் 

12.10.2012 அன்று காலை 06.15 கலைஞர் தொலைக்காட்சியில் தமிழகத்தின் தலைசிறந்த யோகா விற்பன்னர்களாக திகழும் திருவாளர்கள் டாக்டர் ஆசனா ஆண்டியப்பன் அவர்களுடன் யோகி Dr.தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் இணைந்து வழங்கும் யோகாசனம் பற்றிய ஒரு சிறப்பு நேர்முகத்தினை கண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

வாழி நலம் சூழ..

அன்பார்ந்த வலைப்பூ வாசகர்களுக்கு, என் பிரியமான வணக்கங்கள்.

நான் நலமே. நீங்கள் நலமா?


தவிர்க்க இயலாத காரணங்களால் நீண்ட நாட்களாக பதிவுகள் எதுவும் எழுதாமல் விட்டு விட்டேன். 

மன்னியுங்கள். 

விரைவில் பயன் தரு செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன். 

உங்கள் அனைவரின் பொறுமைக்கும், நல் ஆதரவுக்கும், மாறா அன்புக்கும் என் இதய நன்றிகள்.

அஷ்வின்ஜி.

புதன், 13 ஜூன், 2012

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?


இந்தியாவின் பொருளாதாரப் பின்னடைவினைப் பற்றி சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்(S&P) எச்சரித்துள்ளது. இதற்குக் காரணம் என்ன? அமெரிக்காவைவிட இந்திய பொருளாதாரம் முன்னுக்கு சென்றுவிடுமோ என்ற பயம் தான். அதனால் தான் இந்த கோமாளி அமைப்பை (சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்) வைத்து நம்மைப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் பின் தங்க காரணம் நாம் தான். யாரும் அரசாங்கத்தை குறை சொல்ல கூடாது. ஏன் என்றால் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளை உண்டு வந்த நாம் இப்போது, மக்டொனல்ட், கே.எஃப்.சி என்று மாறிவிட்டோம். இயற்கையான ச்த்துக்களைக் கொண்ட ஆப்பிள், மேங்கோ பழச் சாறுகளைக் குடிப்பதற்கு பதிலா பெப்சி, கோக், ஸ்பிரைட் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயற்கை பானங்களைக் குடிக்கிறோம். இவற்றின் உண்மையான விலை வெறும் ௦.90 பைசா தான் ஆனால் இதை 10 ரூபாய்க்கு மேல் வாங்கி குடிக்கிறோம். உங்கள் ஆரோக்கியம் மேம்படவும், இந்தியாவின் பொருளாதாரம் மேம்படவும் சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்குவது என்று நீங்கள் முடிவெடுத்தால் உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா விரைவிலேயே மாறிவிடும். இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள்:

பருகிட ஏற்றவை: இயற்கையான எலுமிச்சம் சாறு, இயற்கையான பழச் சாறுகள், லஸ்ஸி,  மோர், இளநீர், ஜல்ஜீரா, மசாலா பால் போன்றவற்றினை பருகுங்கள்.
தவிர்க்க:- கோகோ கோலா, பெப்சி, லிம்கா, மிரிண்டா, ஸ்ப்ரைட் போன்ற செயற்கையான குளிர்பானங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானவை.

குளியல் சோப்புகள், வாங்க:: சிந்தால் போன்ற காத்ரெஜ் நிறுவனத்தின் பொருட்கள். சந்தூர், விப்ரோ சிகைக்காய், மைசூர் சாண்டல், மார்கோ, எவிட்டா,  மெடிமிக்ஸ், கங்கா, நிர்மா குளியல் சோப் மற்றும் சந்திரிகா.
தவிர்க்க: லக்ஸ், லைபாய், ரேக்சொனா, லிரில், டவ், பியர்ஸ், ஹமாம், லிசான்சி, காமே, பால்மாலிவ் போன்றவற்றை வாங்காதீர்கள்.

பற்பசைகள்:. ப்ரூடன்ட், அஜந்தா, ப்ராமிஸ், நீம், பாபுல், விக்கோ வஜ்ரதந்தி, டாபர், மிஸ்வாக் போன்ற இந்திய தயாரிப்புகளை கேட்டு வாங்கவும்:.
தவிர்க்க: கோல்கெட், க்ளோஸ்அப், பெப்சொடன்ட், போர்ஹான்ஸ், ஓரல்-பி போன்றவை.

சவர பிளேடுகள்: சூப்பர்மாக்ஸ், டோபாஸ், லேசர், அசோகா வாங்கவும்.
தவிர்க்க:- செவன் ஓ கிளாக், 365, ஜில்லட் தயாரிப்புகள்.

முகப்பவுடர் வாங்க: சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோப்லஸ்.
தவிர்க்க: பாண்ட்ஸ், ஓல்ட் ஸ்பைஸ், ஜான்சன்ஸ்& ஜான்சன்ஸ், ஷவர் டு ஷவர்,

பால் பவுடர்: வாங்குக: இந்தியானா, அமுல, அமுலா, ஆவின் தயாரிப்புகள்.
தவிர்க்க:- ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

ஷாம்பூக்கள்: வாங்கவும்:- NIRMA, VELVETTE.
தவிர்க்க:- HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

உணவுப் பொருட்கள்: வாங்கவும்:- Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.
தவிர்க்க:- KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது
இந்தியத் தயாரிப்புக்களை கேட்டு வாங்குங்கள்
இந்தியனாய் இருங்கள்.

BUY INDIAN TO BE AN INDIAN FOR EVER.

வியாழன், 12 ஏப்ரல், 2012

இயற்கை நலவாழ்வியல் முகாம் - மே மாதம் - திருப்பனந்தாள்

நோயில் தள்ளும் உணவுப் பழக்கங்களையும், நவீன வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த நலவாழ்வு வாழ ஓர் அரிய வாய்ப்பு. 

யோகப் பயிற்சி, தீமை தரும் சமையல் உணவுக்குப் பதிலாக பழங்களையும், பச்சைக் காய்கறிகளையும் உண்பதன் மூலம் இயற்கையான முறையில் நலவாழ்வு வாழ, நோயற்ற வாழ்வு வாழக் கற்றுக் கொள்ள வாருங்கள்.  

சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ குமரகுருபரர் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் ஏழு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 
இந்த பயிற்சி முகாமை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இயற்கை வாழ்வியல் பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த பயிற்சி முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள். 

இயற்கை உணவு மற்றும் யோகா பயிற்சிகளை பீஷ்மாச்சார்யா, யோகரத்னா திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் மூலம் நேரிடையாகப் பெற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. 

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், பழங்கள், காய்கறிகள், இயற்கை உணவுடன் வழங்கப்படும். 

இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள ஆண், பெண் எவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு நிறைபயன் பெறலாம்.

முகாம் துவங்கும் நாள் :06-05-2012 ( 2 P.M முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 12-05-2012 ( 2 P.M. வரை)

பயிற்சி நடைபெறும் இடம்: ஸ்ரீகுமரகுருபரர் மெட்ரிக் ஹையர்செகண்டரி பள்ளி திருப்பனந்தாள் - 612504, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

முகாம் கட்டணம்: ரூ.1200 (ஆயிரத்து இருநூறு) மட்டுமே.

இரயிலில் வருபவர்கள் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு செல்லவும். அங்கிருந்து 9, 34, 44, 27, 64 ஆகிய இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

முன்பதிவு செய்து கொள்பவர்க்கே முன்னுரிமை.
எனவே பயிற்சியில் கலந்து கொள்ள விழைபவர் ஒரு கடிதம் மூலம் தங்கள் முகவரியை கீழ்க்கண்ட விலாசத்தில் தெரிவித்து முன்பதிவு செய்துகொள்ளவும். பணத்தை நேரில் செலுத்தினால் போதும். பணத்தை முன் கூட்டியே அனுப்பவேண்டாம். பதிவு செய்யாமல் பயிற்சிக்கு வருவதை தவிர்க்கவும். பயிற்சி முகாமின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். 
அமைப்பாளர் முகவரி: 
திரு.இர.இராமலிங்கஅம் அவர்கள்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
கைபேசி: 94867688930
இல்லம்: 0435-2472816
நலம் நாடி வெளியிடுபவர்:
அஷ்வின்ஜி@A.T.ஹரிஹரன், M.Sc(Yoga)
வாழி நலம் சூழ...

வியாழன், 29 மார்ச், 2012

சாப்பிடுவது எப்படி?

சாப்பிடுவது எப்படி?
மா.உலகநாதன், திருநீலக்குடி

என்னங்க, இதுகூட எங்களுக்குத் தெரியாதா?பெரிசா சொல்ல வந்தீட்டிங்கன்னு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது! 

ஆனால், நாம தெரிஞ்சு வச்சிருக்கிறதெல்லாம் தெரிஞ்சதா ஆகுமா? 

சாப்பிட வாங்க. அம்மா கூப்பிடறாங்க.

இன்னைக்கி இருக்கிற யந்திர உலகத்தில, மணி பாத்து சாப்பிடுறவங்க அதிகமா? பசி பாத்து சாப்பிடுறவங்க அதிகமா? 

மணியைப் பாத்துக்கிட்டே, நேரமாயிடுச்சி, இருக்கறதைக் குடு, நெறைய வேலை கிடக்குன்னு நின்ன நெலயிலேயே சாப்பிடறவங்க ரொம்பப்பேர்! 

அப்புறம் எப்படி ஆரோக்கியம் கிடைக்கும் ?  அதுனாலதான் இந்த முன்னுரை! 

எனவே ஆரோக்கியத்துக்காக உண்ணுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர் கடைப் பிடிக்கவேண்டிய டிப்ஸ்:
 1. உண்ணும உணவை நன்றாக மென்று கூழாக்கி, உமிழ் நீரோடு  உள் இறக்க வேண்டும். பல்லுக்கு நல்லா வேலைகுடுங்க (ஏன்னா வயத்துல பல் கிடையாதுல்ல!) 
 2. சாப்பிடுவதை ஒரு தவமாக, உணவின் மீது கவனம் வைத்து உண்ண வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்!
 3. எனவே, உணவு உண்பதற்கென சாவகாசமாக நேரம் ஒதுக்கி, குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக சாப்பிடலாமே. 
 4. சோறு இரண்டு பங்கும், நீர் ஒரு பங்கும் உண்ணவேண்டும். காற்றுக்காக கால் பங்கு இடம் காலியாக இருக்க வேண்டும். 
 5. சுவையுள்ள உணவு நிம்மதி, வலிமை, உற்சாகம் ஆகியவற்றைத் தரும். 
 6. வறண்ட உணவும், மிகக் குளிர்ச்சியான உணவும் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. இதனால் செரிமானக் கோளாறு வரலாம். மிகச் சூடான உணவு குடல் வலிமையைக் கெடுக்கும்.
 7. சுறுசுறுப்பு, உற்சாகம், பசி, தாகம் உள்ள நேரங்களில் சாப்பிடுவது உகந்தது. 
 8. உணவு உட்கொள்வதையும், மலம் சிறுநீர் கழிப்பதையும் , கலவியையும் தனிமையில் செய்ய வேண்டும்.இந்த விஷயத்துல காக்கை குணம் வேண்டுமாம். அது என்ன காக்கைக் குணம்? 
காலை எழுந்திருத்தல்,காணாமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல்---சால உற்றாரோடு உண்ணல், உறவாடல், இவ் ஆறும்
கற்றாயோ காக்கைக் குணம்.   (பழம் பாடல்) 
உணவு உண்ணும முறைமைகளைப் பற்றிய மேலும் சில பயனுள்ள குறிப்புகள்:
 • தினந்தோறும்,அறுசுவைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
 • அந்தந்தக் காலங்களில் கிடைக்கும் சுவையுள்ள உணவுகளை அதிகப்படுத்தி கொள்ளலாம். 
 • செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கடினமான உணவு பொருட்களை விலக்க வேண்டும்.  
 • சரி! ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை வேளை உண்ண வேண்டும்? .   
ஒரு போது உண்பவன் யோகி!
இரு வேளை உண்பவன் போகி!!
முப்போதும் உண்பவன் ரோகி!!!
அதற்கு மேலும் சாப்பிடுபவன் துரோகி!
ஏனெனில், அடுத்தவன் உணவையுமல்லவா எடுத்துக்கொள்கிறான் ? நம் முன்னோர்கள் உணவின் குணங்களை அறிந்திருந்தார்கள். அதனால், அவர்கள் உணவை வேண்டும் போது கூட்டியும், வேண்டாத போது குறைத்தும், விலக்கியும் மருந்து போலப் பயன்படுத்தி வந்தனர்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள்)

உண்ணும் போது தவிர்க்க வேண்டிய ஒன்று உண்டு: 
உண்ணும் போது சிலர் ஒரு வாய் சோறு ஒரு வாய் தண்ணீர் எனச் சாப்பிடுவர். இதனால் இரைப்பையில் சுரக்கும் செரிமான நீர் நீர்த்துப் போய், செரிமானம் கெடும். எனவே,சாப்பிடுவதற்கு முன்னரோ அல்லது சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்தோ தான் தண்ணீர் அருந்தவேண்டும். 
 • நம் உடலைச் சோற்றுத்துருத்தி என்பார் பட்டினத்தார்.
 • ஐயம் இட்டு உண்! என்று ஆத்திசூடி சொல்லும். 
 • இக் கருத்தையே, மருந்தே ஆயினும் விருந்தோடு உண்  என்று  கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.
 • வேளாளன்  என்பவன் விருந்திருக்க உண்ணாதவன்! என்ற முதுமொழியும் உண்டு..
பார்த்தீர்களா? உணவைப் பற்றி எப்படியெல்லாம், முன்னோர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். 

திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் பெருந்தீனி குறித்து நிறையவே பேசியுள்ளார். சிலர் அறியாமையின் காரணமாக ,கிடைக்கிறதை எல்லாம் வாரி உள்ளே தள்ளுவார்கள். உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ணவேண்டும். இதையே வள்ளுவப் பெருமானார் "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு" என்று தமது குறள் மொழியாக தருகிறார். ஒருவன் நிரம்ப உண்ண வேண்டும்என்னும் ஆசைக்கு இடங்கொடுக்காமல், வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்குமளவுக்கு குறைத்து உண்டால், அவனுக்கு நோயினால் துன்பம் உண்டாவதில்லை என்பார் வள்ளுவர்.  அக்காலத்தில் மன்னர்கள் மண்கலத்தில் சமைத்து, பொன் கலத்தில் உண்பார்களாம்.

சரி! நேரமாச்சு! சாப்பிடப் போகலாமா? ஆனா, சாப்பிடறதுக்கு முன்னே பசிக்குதான்னு   பாத்துக்குங்க!!

நன்றி:
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய முன்னாள் பயிர் நிபுணர் திரு.சு. வைரவன் அவர்கள்  ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தில் ஆற்றிய உரைக்கு கொஞ்சம் சொந்தச் சரக்கும் சேர்த்து நமது வலைப்பூவுக்கு அளித்திருக்கும் திரு.மா.உலகநாதன், திருநீலக்குடி அவர்களுக்கு என் நன்றி. 

ஞாயிறு, 18 மார்ச், 2012

மகளிர் நலம்: கலந்தொடா மகளிர் - பூப்பு முதல் மூப்பு வரை


மகளிர் நலம் சார்ந்த ஆய்வுக் கட்டுரை.

கலந்தொடா மகளிர் 
(பூப்பு முதல் மூப்பு வரை)
திரு. மா.உலகநாதன், எம்.ஏ.


இறைவன் படைப்பில் பெண் அற்புதமானவள். அடுத்த தலைமுறையை அவள்தான் உருவாக்குகிறாள். அவள் தாயாக, தெய்வமாக மதிக்கப்படுகிறாள்; போற்றப்படுகிறாள்.

பொன்னுடையரேனும் புகழுடையரேனும்  மற்
றென்னுடையரேனும் உடையரோ? – இன்னடிசில்
பூக்களையும் தாமரைக் கைப்பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லாதவர். -நளவெண்பா.

இந்த வரத்தைப் பெறுவதற்குள் அவர்கள் படுகின்ற அவத்தைகளோ ஆயிரம் ஆயிரம். அதில் ஒன்றுதான் அவர்கள் உடலாலும் மனதாலும் மாதந்தோறும் அடையும் அவத்தையான மாதவிலக்கு. இதை தூரம், மாதாந்தரம், தீட்டு எனப் பல பெயரிட்டு அழைப்பர். மிக அதிகமாக சேர்ந்து விடுகிற இரத்தத்தை வெளியேற்றி, நல்ல உடல் நலம் ஏற்படச் செய்வது மாதவிடாயின் பணி. மாதவிடாயின் போது வெளிப்படும் குருதியானது சாதாரண குருதியினின்றும் வேறுபட்டது. கருப்பையிலிருந்து கருமை நிறமுடைய, உறையாத தன்மையுள்ள இரத்தம் ஒவ்வொரு மாதவிடாயின் போதும் சுமார் நூறு மி.லி. வெளியேறும்.

மாதவிலக்குக்கு முன்னர் பெண்களுக்கு மனரீதியாக கோபம, எரிச்சல், சிடுசிடுப்பு தோன்றும். உடல்ரீதியாக முதுகு வலி, உடல் வலி ஏற்படும். இதை Pre-Menstrural Syndrom என மருத்துவ அறிவியல் கூறுகிறது. எனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டிலிருந்து விலகி முழு ஓய்வு கொள்வது அவர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் நன்மை பயக்கும். மாதவிலக்கின் போது பெண்களின் சருமத்திலிருந்து மினோகொலின் என்ற நச்சுப் பொருள் சுரக்கும். அந்நச்சுப் பொருள் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் என பிஷோக் என்ற அறிஞர் கூறியுள்ளார். அவர்கள் முன்னிலையில் தயாரிக்கப்படும் அப்பளம், ஊறுகாய் முதலிய உணவுகள் விரைவில் கெட்டுவிடுமாம். அதுமட்டுமல்ல. செடிகொடிகளின் பக்கம் போனாலும் கூட அவை வாடிவிடும் என்கிறார்கள்.

பெண்கள் பூப்புற்று இருக்கும் (மாதவிடாய்க்) காலங்களில் தூய்மையற்றவர்களாகக் கருதப்படுவார்கள். அக்காலங்களில் வீட்டுப் பண்டங்களை தொடாமல் ஒதுங்கி வாழ்ந்தமையால் அவர்கள் கலந்தொடா மகளிர் எனப்பட்டனர். இந்நிலை இன்றும் இருந்து வருகிறது. மாதவிலக்குக் கொண்ட பெண் ஒருத்தி இனிய பழந்தரும் மரத்தினடியில் நின்றால், அம்மரத்தின் பழம் கொடிய கசப்பாக மாறி விடும். அவள் தானியத்தைத் தொட்டால் அது விதைப்பதற்கு உதவாது. வளரும் பூச்செடி அருகில் சென்றால் அவை வாடி வதங்கி விடுகின்றன. கருவேப்பிலை, துளசி முதலிய மூலிகைகளின் அருகில் மாதவிலக்குக்  கொண்ட பெண் சென்றால் அவை காய்ந்து விடும் என்று இன்றும் நம்புகின்றனர். இதனால் இயற்கையின் கூறுகள் மாதவிலக்காகிய பெண்களால் பாதிக்கப்படுகின்றன என்பது பெறப்படுகின்றது. மேலும் மக்களின் நம்பிக்கையை புலப்படுத்துவதாகவும் உள்ளது எனலாம்.

புறநானூற்றுப் பாட்டு ஒன்றில் பூப்புற்ற மகளிர் பற்றிய தெளிவான குறிப்பு ஒன்று காணப்படுகின்றது.
பருத்தி வெளிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல் மண்டு தோணியின் படைமுகாம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்  
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்து
கலந்தொடா மகளிரி னிகழ்ந்து நின்றவ்வே.. 
(புறம்–299:1-7)

பருத்திப் பயிர்களால் சூழப்பட்ட சிற்றூர் மன்னனினின் உழுந்துச் சக்கையை  தின்று வளர்ந்து தளர்ந்த நடையுடைய குதிரை, கடல் நீரைப் பிளந்து கொண்டு செல்லும் தோணியைப் போல பகைவருடையை சேனையினிடையே சென்று போரிட, நெய்யால் அமைத்த உணவை உண்டு ஒழுங்காக கத்தரிக்கப்பட்ட பிடரியினை உடைய பகை மன்னரின் குதிரைகள் முருகன் கோட்டத்தில் பாண்டங்களை தொடுதற்கில்லாமல் விலக்குடைய மகளிரைப் போல போருக்கு அஞ்சி பின்னிட்டன என்று பொன்முடியார் என்ற புலவர் பாடுகிறார்.

சிற்றூர் மன்னனின் குதிரைத் தாக்குதலுக்கு பகை மன்னனின் குதிரை பின்னிட்டதற்கு விலக்குடைய மகளிர் பாண்டங்களைத் தொட பின் வாங்குதலை உவமையாகக் கூறுகின்றார்.

கலந்தொடா மகளிர் என்பது பூப்புற்ற மகளிரைக் குறிக்கும் என்று ஔவை சு.துரைசாமிப் பிள்ளை இப்படி பொருள் விளக்கம் கூறுகிறார். பூப்புற்ற மகளிர் மனைகளில் கலந்தொடாது விலகி நின்று தாம் பூப்புற்றமை தெரிவிப்பது தமிழரது மரபு. பூப்புத் தோன்றும் மகளிருக்கு அதன் வரவு முன்கூட்டி அறிய வாராமையின் அதன் வராமையை தாம் விலகி நின்று நாணிக் காட்டும் இயல்பு பற்றி கலந்தொடா மகளிரினிகழ்ந்து நின்றவ்வே என்று கூறுகின்றார்.

பூப்புக் காலத்தில் பெண்ணை அசுத்தமாகக் கருதினரேனும் அதனை நீக்குதற்கு மேற்கொண்ட வழிகள் ஒன்றும் சங்க இலக்கியங்களில் இல்லையென்பார் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் பிள்ளை. இலக்கியத்தில் சான்றுகள் இல்லையெனினும் பூப்புற்றவர்களை சில நாட்கள் வரை ஒதுக்கி வைத்து பின்னர் நீராட்டிக் குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ளும் நிலை நடைமுறையில் தென்னிந்திய மக்களிடம் இருந்து வருகிறது. ஆதலால் நீராடுவதும், மாற்றாடையுமே தீட்டினை நீக்குதற்குரிய அடையாளங்கள் எனலாம். பெண்கள் பூப்புற்ற காலங்களில் கடல்தாண்டிய பயணம் செல்லக்கூடாது என்பதை  ‘முந்நீர் வழக்கம் மகடுஉ க்கில்லை என்று தொல்காப்பியம் கூறுகின்றது.

மாதவிலக்குப் பிரச்சினைகள்:
மாதவிடாய் தோன்றுவதற்கு இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு முன்னரே தலைவலி, வாந்தி, மனச்சோர்வு, மார்பில் அதிக வலி ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு வலியுடன் கூடிய தடைபட்டு, தடைபட்டு மாதவிலக்கு ஏற்படலாம்.

பொதுவாகவே, மாதவிலக்குக் கோளாறுகள் கொண்டவர்களுக்கு தலைக்குள் எதுவோ நீந்துவது போன்றிருப்பது, முன் நெற்றியில் பாரம், அழுத்தம் தோன்றுவது, இதய படபடப்பு, வயிற்றை இறுக்கிப் பிடிப்பது போன்ற அறிகுறிகள் உருவாகும்.

மாதவிலக்கான மாதர் செய்யத்தக்கன:
 நல்ல ஓய்வும் உறக்கமும் தேவை.
உடலை, உறுப்புக்களை சுத்தமாகப் பேண வேண்டும்.
கழிவுகள் அவ்வப்போது அகற்றப் பட வேண்டும்.
கூடுதல் வேலைகளைத் தவிர்க்கலாம்.
உண்ணும உணவில் உப்பைத் தவிர்க்கலாம்.
காபி, டீ, எண்ணையில் பொரித்த, வறுத்த உணவுகளை விலக்கலாம்.
வாய் வழி உண்ணும் கருத்தடை மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.
சானிடரி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டும்.

மாதவிலக்கான மாதர் செய்யத்தகாதன:
கடும் உஷ்ணத்தின் முன் (அடுப்பு) நிற்கக்கூடாது.
மலச்சிக்கலோ, மனச்சிக்கலோ இருக்கக் கூடாது.
இரத்தப் போக்கை தடைப் படுத்தக் கூடாது.
இந்நாட்களில் நரம்பு மண்டலம் மிகவும் உணர்ச்சி மிக்கதாய் இருக்கும். 
எனவே உணர்ச்சி வசப்படக் கூடாது.
உடலுறவு அறவே கூடாது.

சூதக வயிற்று வலி, மாதவிலக்கு தடைப் படுத்தல், அதிகப்படியான குருதிப்போக்கு, இரத்த சோகை, பெரும்பாடு, வெள்ளைப்படுதல் போன்ற கர்ப்பப்பை கோளாறுகளை முற்றிலும் நீக்க கீழ்க்கண்ட இயற்கை மருத்துவ முறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்களேன்.

இயற்கையோடு இயைந்து வாழுங்கள். 

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நாள் தோறும் ஏதாவது ஒரு மூலிகைச் சாற்றினை அருந்தி உடல் நலத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஐம்பெரும் (பஞ்சபூதம்) ஆற்றல் வழி, மண் சிகிச்சை, நீர்ச் சிகிச்சை, காற்றுச் சிகிச்சை, வெப்பச் சிகிச்சை, ஆகாயச் சிகிச்சை(உண்ணா நோன்பு) ஆகியவற்றைக் கடைப்பிடித்து நோய் வராமல் காத்துக் கொள்ளுங்கள். வந்த நோய்களை நீக்கிக் கொள்ளுங்கள்.

எட்டு வயது நிரம்பிய உடனேயே யோகாசனங்களைக் கற்றுக் கொண்டு தினந்தோறும் யோகாசனங்கள் செய்து உடல் நலனைப் பேணுங்கள். (யோகா என்பது எண்வகை யோகத்தையும், பிராணாயாமம், முத்திரைகள், கிரியைகள், பந்தங்களை உள்ளடக்கியது).

நன்றி:
1.       திரு.அ.மெய்யப்பன், யோகாசன ஆசிரியர், சென்னை அவர்கள் 18.12.2011 அன்று ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
2.       புறநானூற்றில் தமிழர் பண்பாடு என்ற நூலுக்கு.

வாழி நலம் சூழ வலைப்பூவுக்காக இக்கட்டுரையை எழுதி வழங்கியவர்:
திரு. மா.உலகநாதன், எம்.ஏ.,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
வரலாற்றுத் துறை,
திரு.வி.க அரசுக் கல்லூரி.
திருவாரூர் – 610001
அலைப்பேசி: 94442902334

வாழி நலம் சூழ வலைப்பூவுக்காக தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வரும் திரு.மா.உலகநாதன் ஐயா அவர்களுக்கும், வலைப்பூவினை தொடர்ந்து ஆதரித்து வரும் இணைய அன்பர்களுக்கும் எனது பணிவான இதய நன்றி. 

திங்கள், 20 பிப்ரவரி, 2012

பழனியில் நடைபெறும் மாநில அளவிலான யோகா போட்டிகள்

யோக நலமே வாழ்வின் வளம்.

யோகா திறனாளிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு.

தனி நபர் மற்றும் பள்ளிக் கூடமாணவர்களுக்கான மாநில அளவிலான யோகா போட்டிகள்.

தமிழ்நாடு யோகா சங்கத்தின் ஆதரவுடன், 
யோக பூரண வித்யா குருகுலம், 
மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி குருகுலம், பழனி 
இணைந்து நடத்தும் 
மாநில அளவிலான யோகா போட்டிகள் 
வருகிற 25-02-2012 அன்று பழனியில் நடைபெற உள்ளன.

அனைத்து வயதினருக்கான 
குழு அளவிலான போட்டி(Team Competition), 
தனி நபர் திறனறியும் போட்டி(Individual competition)
 மற்றும் சாம்பியன்ஷிப் (Championship) 
போட்டிகளுக்கான 
தகுதிகள், விதிமுறைகள் மற்றும் பதிவு 
செய்வதற்கான விவரங்களை பெற 

யோகாச்சாரியா திரு.முருகன், அவர்களை கீழ்க்கண்ட 
அலைபேசிகளில் தொடர்பு கொள்ளவும்.

09894685500
09965358591

சுவாமி தயானந்த குருகுலம், பழனி 
யோகபூரண வித்யா குருகுலம், பழனி.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

17. கனி இருப்ப - இயற்கை நலவாழ்வியல் தொடர் - உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை செய்வார்.

அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.

இயற்கை நலவாழ்வியல் பற்றிய செய்திகளை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நம்மைப் போலவே நமது நண்பர் சட்ட ஆராய்ச்சியாளர் திரு.வாரண்ட் பாலா அவர்கள் எழுதி 'இந்நேரம் டாட் காம்' தளத்தில் ஆ! முள்ளங்கி..!! என்ற தலைப்பில் 3.2.2012 அன்று வெளியான இந்த கட்டுரையை நமது வலைப்பூவில் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். நண்பர் வாரண்ட் பாலா அவர்கள் நீதியைத்தேடி... எனும் பொதுத்தலைப்பில் ஐந்து சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களை எழுதி பொதுவுடைமையாக அறிவித்து பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவருக்கும் சட்ட விழிப்பறிவினை ஊட்டும் அரியதொரு சமூகப் பணியை கடமையாகச் செய்து வருகிறார். சமூக விழிப்பறிவுணர்வை ஊட்டுவதற்காக முடிந்த வரை மக்களிடம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி செயற்கரிய காரியங்களை செய்து வருகிறவர். இயற்கை நலவாழ்வியலில் ஈடுபாடு கொண்டவர். அன்பரின் கட்டுரையை இங்கே வெளிடுவதில் வாழி நலம் சூழ சார்பில் நான் உவகையும், பெருமையும் கொள்கிறேன். அவருடன் இனைந்து கடமையாற்ற நாமும் முயற்சிக்கலாமே! அவரது கடமை மேன்மேலும் சிறக்க நாமும் வாழ்த்தலாமே!!  

அஷ்வின்ஜி.
-௦-௦-௦-௦-௦-௦-௦-௦-௦-௦-


ஆ.... முள்ளங்கி..

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற நிலை தடம் மாறி உணவும், உழவுத் தொழிலும் நிந்தனையானதாக மாறி விட்டது.


உலகிலேயே மிக மிக ஜாலியாக செய்ய வேண்டிய உழவுத்தொழிலை அதிகபட்சமாக எவ்வளவு கடுமையானதாக மாற்ற முடியுமே அப்படி மாற்றிய பெருமை வேளாண்மை அறிவாளிகள் என மார்தட்டிக் கொள்ளும், தனது பெருமையை தாமே பீற்றிக் கொள்ளும் மெத்தப்படித்த மேதாவி ஆராய்ச்சியாளர்களுக்கே உண்டு.


ஆம்! ஒரு விதையை விதைத்தால் அதற்கு ஈடாக பல நூறாக / பல்லாயிரமாக / பல லட்சமாக விதையைத் தரும் அற்புத இயற்கையின் சக்தியை உணராத முட்டாள்கள் விவசாயத்தில் நஞ்சை கலந்து இயற்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக் கொண்டு வருகின்றனர்.


இதனை உணர்ந்த உண்டு கொழுத்த முதலாளிகள் சிலர் இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்ற வகையில் இயற்கை மற்றும் செயற்கை முறையில் உற்பத்தி செய்த பொருட்களை நவீன வசதிகளுடன் கூடிய சூப்பர் மார்ட்கெட்டில், எதிர் காலத்தில் மார்கெட்டையே விலைக்கு வாங்கும் வகையில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.


இதனை வாங்கி உண்ண முடியாத என்னைப் போன்ற ஏழை மற்றும் நடுத்தர மக்கள் படும் பாட்டை சொல்லிமாளாது. நஞ்சு விலை பொருட்களை தின்று தின்று மக்களின் மூலை மழுங்கி விட்டது என்று நான் சொன்னால், இவன் எப்பவுமே இப்படித்தான் என என்மீது உங்களுக்கு கோபம்தான் வரும். ஆனால், உண்மை இதுதான்.


நீங்கள் காய்கறி வாங்கும் போது மிகவும் நல்லதாக, அழுகாததாக, மிக முக்கியமாக பூச்சி இல்லாததாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறீர்கள் இல்லியா! இது சரியா என்பதுதான் எனது கேள்வி? நல்லதாக, அழுகாததாக தேர்ந்தெடுப்பது சரிதான். ஆனால், பூச்சி இல்லாததாக தேர்ந்தெடுப்பது எப்படி சரியாகும்?


ஒவ்வொரு உயிரினமும் தனக்கு கீழான அறிவுள்ள உயிரினத்தை உட்கொண்டே உயிர் வாழ வேண்டும் என்பதே, இயற்கை தனது படைப்புகளுக்கு விதித்துள்ள உணவு கட்டுப்பாடு.


இந்த வகையில் காய்கறிகளை புழு, பூச்சுக்கள் சாப்பிடுவது இயல்பான, இயற்கையான ஒன்றுதான். ஆனால், அறிவு வறுமை மிக்க விவசாய்களோ, அறிவு வெறுமை ஆய்வாளர்களின் / ஆராய்ச்சியாளர்களின் பேச்சைக் கேட்டு அப்புழு பூச்சுக்களை தடுக்க பூச்சுக்கொல்லி மருந்தை தெளிக்கிறார்கள். அப்படி வளர்ந்த காய்கறிகளைத்தான் நாம் தேடிப் பொறுக்கி வாங்கி வந்து உண்கிறோம்.


ஆமாம், இதனால் என்ன நட்டமாகி விட்டது?


புழுப்பூச்சிகளே உயிர் வாழத் தகுதியில்லாத பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட காய்கறிகளை உண்டு, நீங்கள் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும்? அட, ஆரோக்கியத்தை விடுங்கள். எப்படி உயிர் வாழ முடியும்?


இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது, அல்லது தனக்குதானே குழிவெட்டிக் கொள்வது என்பது. யாராவது தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்வார்களா அல்லது குழிதான் வெட்டிக் கொள்வார்களா? ஆனாலும், நாம் தெரிந்தோ தெரியாமலே சூன்யம் வைத்துக் கொள்கிறோம் அல்லது குழி வெட்டிக் கொள்கிறோமே!


அப்படியானால், நமக்கும்மெத்தப்படித்த மேதாவி ஆராய்ச்சியாளர்களைப் போல் அறிவு மழுங்கி விட்டது என்பதுதானே உண்மை!


சரி, நாம நம்ம விசயத்துக்கு வருவோம்.


காட்டில் பெருமரம், குறுமரம், சிறுமரம், செடி, கொடி என எல்லாமே தானாக ஒன்றோடு ஒன்றாக உறவாடி, பின்னிப்பினைந்து அனைத்து விதத்திலும் செழித்து வளர்கின்றன. இங்கு யார் விதை விதைத்தது, களைப்பறித்தது, அடியுமும், மேல் உரமும் இட்டது, தண்ணீர் ஊற்றியது?


இப்படிப்பட்ட காட்டைப் போலத்தான் உண்மையான இயற்கை விவசாயம் இருக்க வேண்டும் என்கிறார், இயற்கை விவசாயி திரு.ராமானுஜம். இவர் எனது உற்ற நண்பரும் கூட. தனக்கு சொந்தமாக நிலமில்லாத இவர் தாம் கூறுவதுபடி இயற்கை விவசாயம் செய்ய பல்வேறு நண்பர்களை வலியுறுத்தியும் ஒருவரும் முன் வரவில்லை.


ஆதலால், தனது வசதிக்கு தக்க இடத்தை வாங்கி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திரு.குமார் என்கிற விவசாய நண்பரின் ஒத்துழைப்போடு விவசாயத்தில்  ஆழமான, அறிவுப்பூர்வமான உணர்தலை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டுமென களமிறங்கியவர்கள், அனைவரும் அதிசயப்படத்தக்க வகையில் காய்கறிகளை அறுவடை செய்து வருகின்றனர்.


நாம் பார்த்த அளவில் நாட்டு முள்ளங்கி ஒன்று அரையடிக்கும் சற்றே கூடுதலான நீளத்துடன் அதிகபட்சமாக அரைக்கிலோ எடைக் கொண்டதாக பார்த்திருக்கிறோம். அதுவும் முத்தலாகத்தான் இருக்கும்.


ஆனால், இவ்விவசாய நண்பர்களோ இயற்கை முறையில் சுமார் ஒன்றரை அடிக்கும் கூடுதலான நீளம், இருபத்தி மூன்று சென்டி மீட்டர் சுற்றளவு மற்றும் இரண்டே கால் கிலோ எடை கொண்ட பிஞ்சு முள்ளங்கியை அறுவடை செய்து இயற்கை விவசாயத்தின் மீது நமது கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.
இயற்கை விவசாயி திரு.குமார் தான் அறுவடை செய்த மாபெரும் முள்ளங்கியை உங்களுக்கு காட்டுகிறார்..JPG


இதன் எடை மேலும் 30 சதவிகிதம் உயர்ந்து மூன்று கிலோவை எட்டும் எனவும் நம்புகிறார்கள்.இவர்களின் நோக்கம் வாணிபமல்ல என்பதால், விளையும் காய்கறிகளை நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது. மாறாக, விதையை அன்பளிப்பாகவே தர திட்டமிட்டுள்ளார்கள். அதனை நீங்களே விதைத்து பயிர் செய்து பலனை அடைய வேண்டும் என்பதற்காக, அவ்விவசாய உழைப்பாளிகளின் தேவை போக மீதியை விதைகளாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


உண்மையில் உ(ய)ரிய உடலுழைப்பு இல்லாமல் உண்ணக்கூடாது என்கிற அடிப்படைத் தத்துவம் இதில் அடங்கியள்ளதால் பாராட்டப்பட வேண்டிய நல்லதொரு தொலை நோக்குத் திட்டம். 

  

நமது இந்தியாவில் இருக்கும் விளை நிலங்களில், சரி பாதியில், சரியான முறையில் இயற்கை விவசாயம் செய்தாலே, இன்றைய உலக மக்கள் தொகையைப் போல ஐந்து மடங்கு மக்களுக்கு உணவளிக்க முடியும் என்கிற இயற்கை விவசாயி திரு.ராமானுஜம் அவர்களின் கணிதக்கூற்று மட்டும் எப்படி பொய்யாகி விடும் என்றே எண்ணத்தோன்றுகிறது.


நீங்கள் உலக மக்களுக்கெல்லாம் உணவளிக்க விரும்பும் நபர்களில் ஒருவரா? அதற்கேற்ப விளைநிலங்களை வைத்துள்ளவரா? நீங்களே உழைக்க முன்வருபவரா? இது குறித்து விபரங்களை அறிய விரும்புபவரா? குறைந்த பட்சம் இவர்களின் இவ்வியற்கை விவசாய முயற்சியை ஊக்குவிக்க விரும்புபவர்களா?


திரு.ராமானுஜம் +919444425801, திரு.குமார் +918453557193 ஆகிய உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாமே!

No law, no life. 
Know law, know life!
* * * * * * * * * * * 
Warrant Balaw
Law Researcher, Writer, Critic

சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற, மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியோடு உங்கள் பகுதி நூலகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நீதியைத்தேடி... எனும் தலைப்பிலான ஐந்து நூல்களைப் படியுங்கள்! உற்றார், உறவினர் நண்பர்கள், அக்கம் பக்கத்தார் என அனைவருக்கும் சொல்லுங்கள்!!

மேலும் விபரங்களுக்கு
இணையதளம் http://www.neethiyaithedy.org
வலைப்பூ http://warrantbalaw.blogspot.com
யு டியூப் http://www.youtube.com/watch?v=uGiLHC-0MDw&feature=&p=D4ADE8840D866BB9&index=0&playnext=1

நன்றி: திரு.வாரன்ட் பாலா, சட்ட ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், விமரிசகர்.