சனி, 26 ஜூன், 2010

பகுதி 23 
இயற்கை மருத்துவம் 
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

நோய்ப்படைகளுக்கும், சுகப்படைகளுக்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தில் திசுக்கள் தேய்கின்றன. சீழ் அதிகரிக்கிறது இதிலிருந்து கட்டிகள், புண்கள், போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. நிணநீர் அணுக்கள் நுண்மங்கள், குருதி நாளங்கள் திசுக்கள் நாசமடைகின்றன. மக்களிடையே அண்டத்தில் நடக்கும் யுத்தத்தில் ஏற்படும் நாசங்களைப் போலவே பிண்டத்திலும் அழிவு ஏற்படுகிறது. இந்த மூன்றாம் நிலையை தேய்மான நிலை அல்லது உடற்சிதைவு நிலை என்கின்றனர்.

உடற்சிதைவு நிலையினை நெருக்கடி காலம் எனலாம். இது ஒரு பெரிய திரும்புகட்டம். இதனால் நன்மையும் விளையலாம். தீமையும் விளையலாம். இதில் சுகம் விளைவிக்கும் சக்திகளுக்கு உதவுகிற மாதிரி சிகிச்சை நடந்தால் இரத்தமும், பிராணசக்தியும் அதிகரித்து அந்நிய விஷப் பொருள்களும் வெளியேற்றப்படும் யுத்தத்தில் விளைந்த அழிவுப் பொருள்களும் வெளியேற்றப்பட்டு பூரண சுகம் கிடைக்கும். இதனை குறைதல் நிலை (Abatement) எனலாம். இந்நிலையில் நோய்க்கொதிப்பு தணிகிறது. வீக்கம் வற்றும். வேறு நோய்க்குறிகளும் சாந்தமடைகின்றன.

குறைதல் நிலை தனது முழுவேலையையும் செய்த பின்னர் அதாவது உடலில் சேர்ந்திருந்த விஷப்பொருள்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்ட பின் ஆக்கவேலை ஆரம்பமாகிறது. இந்த ஐந்தாவது நிலையை ஆக்கநிலை என்கிறார்கள் தேய்ந்த பகுதிகள் வளர்ந்து முழுமை பெறுகின்றன. உடல் புதுமை பெறுகிறது. அசுத்தங்கள் நீங்கி சுத்தமடைகிறது. தீவிர நோய்களை, மேலே குறித்த ஐந்து நிலைகளையும் பொறுமையோடு கடக்கும்படி செய்வதால் உடல் பழைய நிலையினை விரைவில் அடையும். மாறாக, தவறான சிகிச்சை முறைகளைக் கையாண்டு வீக்கத்தை கடுமையான மருந்துகளால் அமுக்கியோ, தடை செய்தோ வைத்தால் தற்காலிகக் குணம் ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் விஷப்பொருள்கள் உருமாறி உயிரணுக்களுள் நுழைந்து தீராத நாட்பட்ட நோயாக மாறும்.

நோய் நுண்மப் பெருக்க நிலை. தீங்கு பெருக்க நிலை என்ற இரண்டு நிலைகளில் மருந்துகளை உபயோகித்தால் தீவிர நோய் நாட்பட்ட நோயாக வளரும். இதனை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்வோம்.

(இருபத்தி ஐந்தாம் பகுதியுடன் நிறைவு அடைகிறது.)

வெள்ளி, 25 ஜூன், 2010

பகுதி 22இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - மகரிஷி க. அருணாசலம்

தீவிர நோயின் ஐந்து நிலைகள்


'நோய் ஒன்றே; பரிகாரமும் ஒன்றே' 

இது இயற்கை மருத்துவத்தின் ஒரு பொதுக்கோட்பாடு நோய்க்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். பொருந்தா உணவு, மாறான பழக்கவழக்கங்கள், தவறான சிந்தனைப் போக்கு இவை போன்ற இன்னும் பிற காரணங்களால் நோய் ஏற்படலாம். மேற்கூறிய பல காரணங்களால் உடலில் வேண்டாத பொருள்கள் சேருகின்றன. அவை காலாகாலத்தில் வெளியேறி விட்டால் சிக்கல் இல்லை. பல சமயங்களில் வேண்டாத அந்நியப் பொருள்கள் தேங்கி நிற்கின்றன. காலம் கடந்து இவை வெளியேற முயலும் போது வலியோ, வேறு வித சங்கடங்களோ ஏற்படுகின்றன. அவற்றை நோய் என்கிறோம்.

வளர்சிதை மாற்றம் சதா உடம்பில் நடந்து கொண்டிருக்கிறது. திசுக்களிலுள்ள உயிரணுக்கள் சிதைந்து, மடிந்து இரத்தத்தில் கலக்கின்றன. சிலசமயம் அடிபட்டதாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ இரத்தம் உறையலாம். உறைந்த இரத்தம் சிதைவுண்டு சிறுசிறு துண்டுக் கட்டிகளாக இரத்தப் பிரவாகத்தில் கலக்கின்றன. இவை ஏதாவது ஓரிடத்தில் தேங்கி நின்று தாராளனமான இரத்த ஓட்டத்திற்க்கும், பிராணசக்தி இயக்கத்திற்கும் தடையாயிருக்கின்றன. சில சமயம் விபத்துக்கள் ஏற்படும் போது எலும்புகள் உடைந்து அதன் துணுக்குகளும் இரத்தத்தோடு கலந்து நின்று தடை செய்யலாம். சுவாசத்தோடு போகும் கடினமான தூசு தும்புகள் கூட உடம்பின் உள்ளே சென்று இருக்கலாம். இரும்புத் தூசுக்கள், மரத் துணுக்குகள் உடலுள் செல்வதாலும் இயக்கத்திற்குத் தடை ஏற்படலாம் ஒட்டுண்ணிகள், சின்னஞ்சிறு உயிர்ப் பிராணிகள் உட்செல்வதாலும் இது நேரிடலாம். குருதி ஓட்டமோ பிராண இயக்கமோ தடைபடும்பொழுது அவ்வப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதனால் சூடு அதிகரிக்கலாம். இரத்தக் கொதிப்பால் சில உறுப்புகள், அழற்சி அடையலாம்.

அந்நியப் பொருள்கள் உடலில் தேங்கி நிற்கும்போது நோய் உடனடியாகத் தோன்றுவதில்லை. நோய்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறுகின்றன. இது முதல்நிலை இதனை நோய் நுண்மப் பெருக்கநிலை என்கின்றனர். ஆங்கிலத்தில் Incubation state என்று சொல்வார்கள். இந்நிகழ்ச்சி சில நிமிஷங்களிலோ அல்லது நாட்களிலோ நடைபெறலாம். சிற்சில சமயங்களில் இது வாரம், மாதம், வருடம் என்றும் நீளலாம் அந்நியப் பொருள்கள் பெருகி உடலின் சிற்சில பாகங்களில் அல்லது உறுப்புக்களில் வீக்கம் ஏற்படுத்துகின்றன. உடலில் வேலையில் தேக்கமோ, ஆபத்தோ ஏற்படும் சமயம் உயிர் ஆற்றல்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி நோய்க்குக் காரணமாக நுண்மங்களோடு போரிடுகின்றன. அந்த இரண்டாம் கட்டம் 'தீங்கு பெருக்குதல் நிலை' எனப்படுகிறது. இதில் அந்நியப்பொருள் அல்லது நோய் நுண்மங்கள் ஒருபுறமும், உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீர் அணுக்கள் (Phagocytes) மற்றொரு புறமும் அணிவகுத்து போரிடும் நிலையைப் பார்க்கிறோம் இச்சண்டை காலத்தில் படை வீரர்களாகிய நிணநீர் அணுக்கள் பெருக்கத்தால் இரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது நாளங்களிலும். உறுப்புக்கள் சிலவற்றிலும் வீக்கம் அதிகரித்து காய்ச்சல் உச்சிலை அடைகிறது. நோயின் அறிகுறிகள் அனைத்து வெளிப்படுகின்றன.


(படிப்பவர்களின் பொறுமைக்கு நன்றி - ஓரிரு தவணைகளில் நிறைவடையும்)

புதன், 23 ஜூன், 2010

ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 324 -வது மாத கூட்டம்.


கடந்த சில ஆண்டுகளாக நான் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தேன். 
பின்னர் இயற்கை நலவாழ்வு முறைகளை படிப்படியாக பின்பற்றி நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மற்றும் இதய இடது கீழறையில் இருந்த பிறவி குறைபாடு காரணமாக ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு இவற்றை எல்லாம் எவ்வாறு குணப்படுத்திக் கொண்டேன் என்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தமிழகத்தின் முன்னோடி அமைப்புகளில் முதன்மையாக விளங்குகின்ற ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 324 -வது மாத கூட்டத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்களிடையே பேசிட சங்கத்தின் செயலர் திரு.இராமலிங்கம் அவர்கள் வாய்ப்பு தந்தார் . 

அங்கு நான் உரையாற்றியதை இங்கே வாழி நலம் சூழ வாசகர்களுக்காக வெளியிடுகிறேன்.

 20-06-2010-ஆடுதுறை

வணக்கம்.  நான் சென்னையில் தென்னக இருப்புப்பாதை அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியாக பணி புரிகிறேன். இப்போது எனது வயது ஐம்பத்து நான்கு.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு மே மாதம் ஆடுதுறையில் நடைபெற்ற ஒரு வார இயற்கை மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்ற இனிய நினைவுகளை மீண்டும் நன்றியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு பின்னர் தற்போது உங்களிடையே எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கும் திரு மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும் திரு இராமலிங்கம் ஐயா அவர்களுக்கும் அவர்கள் மூலம் இந்த வாய்ப்பினைத் தந்த இறைவனுக்கும் நன்றி செலுத்துகிறேன்.

கடந்த முறை முகாமில் கலந்து கொண்ட போது நான் சந்தித்த திருவாளர்கள் மெய்யப்பன்இராமலிங்கம்யோகி தி.ஆ.கிருஷ்ணன் மற்றும் மூ.ஆ.அப்பன் ஆகியோரின் தொடர்புகளும் மேலான வழிகாட்டல்களும் இன்றளவும் எனக்கு கிடைத்து வருகிறது என்பது பெருமைக்குரிய மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

உங்களிடையே இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு நான் எவ்வாறு எனக்கு ஏற்பட்ட ''நீரிழிவு நோயினை'' மருந்தின்றி குணமாக்கிக் கொண்டேன் என்பது பற்றி.

முன்னரே இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்றிருந்தும் பணி மற்றும் கால மாறுபாடுகளின் காரணமாக என்னால் இயற்கை உணவினை தொடர்ந்து உண்டு வரஇயலாமல் போனது. எனினும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சந்தர்ப்பங்களில் யோகா பயிற்சி மற்றும் இயற்கை உணவுகளை மேற்கொண்டு வந்திருக்கிறேன். எனினும் பணி மும்முரம் காரணமாக ஏழு ஆண்டுகள் 2002 முதல் 2008 வரை இந்தியா முழுமையும் பயணம் செய்து நீண்ட நாட்கள் வெளியில் உணவு உண்ணவேண்டிய சூழ்நிலைகள் உருவானதால் எனக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னரே நான் உயர் இரத்த அழுத்தம்ஹைபர்டென்ஷன் போன்ற பாதிப்புகளால் இரயில்வே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று அங்கு தந்த ஆங்கில மருந்துகளை உண்டு வந்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக அதனுடன் சர்க்கரை வியாதியும் சேர்ந்து கொண்டது.  இரத்த பரிசோதனை செய்து கொண்ட போது கீழ்க் கண்ட அளவுகள் இருந்தன. 22-12-2007 - Blood Sugar (Fasting) 245 mgs/dl (Ref value: 70 to 100). அதன் பிறகு சித்தமருத்துவம் மேற்கொண்டேன். நிறைய லேகியங்கள்பொடிகள்கஷாயங்கள்உணவுக் கட்டுப்பாடுகள் மேற்கொண்ட பின்னர் மீண்டும் பரிசோதனை செய்த போது கிடைத்த அளவுகள்:
09-01-2008 -      Blood Sugar (Fasting) - 275 mgs/dl
         Blood Sugar (PP) - 469 mgs/dl

பிறகு எம்.வி. டையபெடிக் மருத்துவ மனையில் சென்று அங்கு பரிசோதனை செய்து கொண்டேன்.

02-02-2008         Blood Sugar (Fasting) - 217 mgs/dl
   Blood Sugar (PP) - 294 mgs/dl
என்று பரிசோதனை முடிவுகள் வந்தன.

அதன் பிறகு ஆங்கில மருத்துவத்தினை மேற்கொண்டேன். தொடர்ந்து ஒரு மாதம் மருந்துகள்உணவுக் கட்டுப் பாடுகள் கடைப் பிடித்த பின்னர் கிடைத்த பரிசோதனை முடிவுகள்

01-03-2008 -      Blood Sugar (Fasting) - 85 mgs/dll (Ref value: 70 to 100)
Blood Sugar ( P  P)    - 102 mgs/dl (Ref Value: 100 to 140)

மருந்துகளையும்உணவுக் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து வரவேண்டும் என்கிற ஆங்கில மருத்துவரின் அறிவுரை அடிப்படையில் நான் இரத்த அழுத்தத்துக்கும்சர்க்கரை நோய்க்கும் தொடர் சிகிச்சை மேற்கொண்டேன். ஆயினும் எனது உடல் உபாதைகள் குறைந்த மாதிரி தெரியவில்லை. Once a diabetic; always a diabetic. Once a heart patient; always a heart patient, என்று ஆங்கில மருத்துவர்கள் கூறிய சித்தாந்தம் எனக்கு அலுப்பு தட்டலாயிற்று.

ஏனெனில் மருந்துகளை உண்ணத் தவறி விட்டால் தொல்லைகள் அதிகமாக இருந்தன. சிகிச்சையின் போதும்உடல் வலிசோர்வு போன்றவை தொடர்ந்து இருந்தன. உடல் உஷ்ணக் கட்டிகள் போன்றவைகள் அடிக்கடி வந்து தொல்லை தந்தன. சிறுநீர்த் தாரை எரிச்சல் ஒரு தொடர் கதையாகவே இருந்தது.

ஆங்கில மருந்துகள் சிறுநீரகங்களில் கற்களை உண்டாக்கும் என்று வேறு கூறினார்கள். அதுவும் இன்றி தொண்ணூறு கிலோ எடையுடன் இருந்தேன். உணவைக் குறைத்தாலும்  இடர்ப்பாடுசாப்பிட்டாலும் இடர்ப்பாடு என்று இருதலைக் கொள்ளியாய் தவித்தேன்.

இந்த தொடர் தொல்லைகளில் இருந்து விடுபட எண்ணினேன். ஏற்கனவே மேற்கொண்ட இயற்கை உணவு முறைக்கு மாற முடிவு செய்தேன். கடந்த ஆண்டு மே மாதம் கும்பகோணத்தில் நடைபெற்ற இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்தேன். ஆனால் தேர்தல் பணிக்கு என்னை நியமித்ததால் அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. பிறகு திரு யோகி.கிருஷ்ணன் அவர்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்தித்தேன்.

அவர் என்னிடம், ''நீங்கள் மீண்டும் தொடர்ந்து யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்இயற்கை உணவினை எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக சாப்பிடுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குணமடைதல் விரைவாக இருக்கும்'' என்றார். அவரது அறிவுரையின்படி யோகம்மற்றும் இயற்கை உணவு முறைகளை பின்பற்றினேன்.

கடந்த டிசம்பர் மாதம் திரு மூ.ஆ. அப்பன் அவர்கள் பழனியில் நடத்திய ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொண்டேன்.

அப்போது முழு இயற்கை உணவு முறைக்கு மாறியது மட்டும் இன்றி ஆங்கில மருந்துகளை சாப்பிடுவதை அறவே நிறுத்தினேன்.

ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் பெற்ற நேரடி அனுபவங்களும்யோகி கிருஷ்ணன் மாஸ்டரிடம் பெற்று வரும் தொடர் யோகப் பயிற்சிகளும் எனக்கு இரத்த அழுத்தம்உடல் எடைமற்றும் சர்க்கரை வியாதிகளின் பிடியில் இருந்து முழு விடுதலை பெற்று தந்தன.

மேற்குறிப்பிட தொல்லைகளின் சிம்ப்டம்ஸ் என்னிடம் இருந்து முழுமையாக அகன்று விட்டன. ஆகையினால் நான் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்களை ஆலோசிக்காமல் ஆங்கில மருந்துகளை கடந்த டிசம்பரில் இருந்து நிறுத்தி விட்டேன். பின்னர் திருவாளர்கள் கிருஷ்ணன் ஐயா மற்றும் மெய்யப்பன் ஐயா இருவரும் என்னை மருத்துவ பரிசோதனை செய்துபார்க்கும்படி அறிவுறுத்தினார்கள்.

அதன் பேரில் இந்த ஆண்டின் ஏப்ரல்மேஜூன் மாதம் முதல் வாரத்தில் மேற்கொண்ட இரத்தம்மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் முடிவுகள் இதோ:

02-04-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 124 mg/dl
Urine Sugar: NIL
07-05-2010-  Blood Sugar (Fasting) - 97 mg/dl
Blood Sugar (PP) - 126 mg/dl
Urine Sugar: NIL
05-06-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 128 mg/dl
Urine Sugar: NIL

இப்போது முழு இயற்கை உணவு முறைகளை கடைப்பிடிக்கிறேன். வாரம் ஒரு நாள் உபவாசம்தொடர் யோகா பயிற்சிகள் என்னை ஆரோக்கியம் நிறைந்த ஒரு மனிதனாக மீட்டெடுத்து விட்டன.

வெயிலில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள் அதன் பொருளை முழுமையாக உணர்ந்து கொண்டேன். எனது நண்பர்கள் பலர் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து அவர்களும் யோகா/இயற்கை நலவாழ்வு முறைகளை பின்பற்றி பலன் அடைந்து வருகிறார்கள்.

நான் சொல்ல விரும்பும் செய்திகள்:
  • Once a diabetic, always a diabetic. Once a heart patient, always a heart patient எண்ணும் ஆங்கில மருத்துவ சித்தாந்தம் தவறானது.
  • உணவு மற்றும் வாழும் முறைகளிலும்எண்ணங்களிலும்சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுத்தாமல் வெறும் மருந்துகள் மூலமாக எந்த வியாதியையும் குணப் படுத்த முடியாது.
  • நான் எனது சர்க்கரை வியாதிக்கு இயற்கை நலவாழ்வியல் மூலம் குணம் பெற்ற போதுஎனது உடல் எடை குறைந்ததுஇரத்த அழுத்தம் நார்மல் நிலைக்கு வந்தது. அது மட்டுமின்றி எனக்கு பிறவியிலேயே இதயத்தில் எல்.வி.சி.டி எனப்படும் (Left Ventricular Conductivity Defect) குறைபாடு இருந்தது. அதன் காரணமாக யூரிக் ஆசிட் அதிகமாக இரத்தில் கலந்து போகும் தன்மையும் அதனால் எனது சிறுநீரகங்களுக்கு தொடர் தொல்லைகளும் இருந்ததன. யூரிசீமியா எனும் இந்த தொல்லைக்காக சிறுநீர்ப் பிரித்திகளை ஊக்குவிக்கும் மருந்துகளையும் சாப்பிட்டு வந்தேன். ஆனால் முழு இயற்கை உணவுக்கு மாறிய பின்னர் அந்த தொந்தரவும் என்னை விட்டு நீங்கி விட்டது. முன்னர் இந்த மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் சிறுநீர் போகும் இடத்தில் எரிச்சல் அதிகம் ஆகிவிடும். சில சமயம் இரத்தம் கூட வெளியேறும்.
  • ஆங்கில மருந்துகளால் ஏற்படுவன மோசமான பின்விளைவுகள். ஆனால் இயற்கை நலவாழ்வியலில் கிடைக்கும் குணம் பூரணமானது (holistic). ஒரு குறிப்பிட்ட வியாதியை மட்டுமின்றி உடல் முழுவதும் செயல்பட்டு நமக்கு தெரியாமல் இருக்கும் குறைபாடுகளையும் களைந்தெறியும் சக்தி இயற்கை நலவாழ்வியலுக்கு உண்டு என்பதை முழுமையாக நான் உணர்ந்தேன்.
  • அடுத்ததாகவும் நிறைவாகவும் நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. இயற்கை நலவாழ்வியல் உங்களை உங்களுக்கு ஏற்ற மருத்துவராக மாற்றுகிறது. மருந்தில்லா மருத்துவம் என்பதினால் செலவும் இல்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழம்,காய்கறிகளை இயற்கையாக உண்பதினால் நமக்கு பொருளாதார அடிப்படையில்,எரிவாயு (கேஸ்)மசாலா பொருட்கள்எண்ணை வகைகளுக்கான செலவுஉப்பு,சர்க்கரைபால் பொருட்கள் மீதான செலவுகள் குறைகின்றன.
  • நோய் இல்லாமல் செயல் படுவதினால் அலுவலுக்கு விடுப்பு எடுத்தல்அலுவல் நேரங்களில் சோர்வாக இருத்தல்மருத்துவ மனைகளில் மருத்துவருக்காக காத்திருத்தல்தேவையற்ற அறுவை சிகிச்சைகளை பெறும் பொருள் செலவில் மேற்கொள்ளுதல்நோய் வாய்ப்படுபவரை கவனித்துக் கொள்ளுபவருக்கு ஏற்படும் தொல்லைகள்மருந்துக்கான பெறும் பொருள் செலவும்பக்க விளைவுகள்,பின்விளைவுகள் போன்றவற்றை முழுமையாக தவிர்க்கலாம். மக்களின் ஆரோக்கியத்துக்காக அரசுகள் பெருமளவில் பணத்தை செலவு செய்வதை தவிர்ப்பதன் மூலம் மத்திய மாநில அரசுகள் அப்பணத்தை மக்கள் நல பணிகளில் நல்ல வழிகளில் செலவிடலாம்.
  • நல்ல உடல்நல்ல மனம்நல்ல சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் பெருகினால் சமுதாயத்திற்கு அவர்களது பங்களிப்புகள் மேம்பட்டதாக இருக்கும். நாட்டின் உற்பத்தியும் கூடும். மக்களிடையே நற்சிந்தனைகள் வளர்ந்து போட்டி பொறாமை போன்றவைகள் அகன்றுசகோதரத்துவம்அன்பு போன்றவை பெருகும்.
எனது வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனையை தந்திருக்கும் இயற்கை நலவாழ்வியலை பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்ள நல்வாய்ப்பை ஏற்படுத்தி தந்த திரு மெய்யப்பன் ஐயாவுக்கும்திரு.ராமலிங்கம் ஐயாவுக்கும்மற்றுமுள்ள சங்க நிர்வாகிகள் எல்லாருக்கும்மற்றும் இங்கே பெருவாரியாக குழுமி இருக்கும் உங்கள் எல்லாருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி பாராட்டி வணங்கி விடை பெறுகிறேன்.  நன்றி. வணக்கம்.

-அஷ்வின்ஜி, 
 வலைப்பதிவர், வாழி நலம் சூழ, சென்னை.

செவ்வாய், 22 ஜூன், 2010

பகுதி 21 - 
இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

"ஏழு பிராணன்களும், ஏழு சுடர்களும் அவற்றின் எரிபொருளும் ஏழு படையல்களும், இதய குகையில் ஒவ்வோர் உயிரிலும் ஏழாய் இயங்கும் பிராணன்களின் ஏழு உலகும் அவனிடமிருந்தே எழுகின்றன" (முண்டக உபநிடதம் பாகம் 2, அத்தியாயம்-1, 8ஆம் சுலோகம்)

சிருஷ்டிகர்த்தரின் செயல்கள் கூட ஏழு ஏழாய் வருகின்றன என்பதை முண்டக உபநிடதம் விரிவாக விளக்குகின்றது.

இந்த ஏழில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது சமீபத்தில் எனக்கு நோய் வந்தபோது முதுகுத்தண்டு குளியல் எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். தொட்டியில் குறைந்தது 20 நிமிடங்களாவது இருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது இது பல நாட்கள் நடந்தன ஏன் இந்த இருபது நிமிடம்? அரைமணியாக ஏன் இருக்கக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் அடிக்கடி தோன்றியது இதயத்தினின்று வெளியேறும் இரத்தம் உடல் முழுவதும் சுற்றி திரும்பவும் இதயத்தை அடைய மூன்று ஏழுதடவை இரத்தம் போய் வந்தால் அந்த நேரத்திற்குள் ஓரளவு சமநிலையும் தூய்மையும் அடையும் என்பது கருத்தாய் இருக்க வேண்டும். 7 x 3 =21

21 நிமிடங்கள் தொட்டியில் இருங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக 20 நிமிடங்கள் என்று சொல்கிறார்கள்: அவ்வளவுதான்.

சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்து கொடுக்கும் போதே இதை ஒரு மண்டலம் சாப்பிடுங்கள் என்கிறார்கள் 7x6=42 நாற்பது அல்லது நாற்பத்தி இரண்டு நாட்கள் ஒரு மண்டலம். இப்படி ஆறு வாரங்கள் மருந்து சாப்பிட்டபின் ஒரு வாரம் ஓய்வு கொடுத்த பின் கவனித்தால் மருந்தின் வெற்றி தோல்வி தெரியும்.

மனித உடல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் வளர்ந்து வருகிறது. உடலின் கட்டுமானத்திற்கு அடித்த யூனிட்டாக இருப்பது உயிரணுக்கள். இவை ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கில் தோன்றி மடிகின்றன. காலையில் தோன்றி மாலையில் மடிவதில்லை தோன்றுபவை வளர்ந்து அதற்கு உரிய காலம் இருந்து பின் மடிகிறது. அந்த இடத்தைப் புதியவை தோன்றி நிரப்புகின்றன. இந்த மாறுதலைப் பற்றி உடலியல் விஞ்ஞானிகள் இன்றைக்கு இருக்கும் செல்களில் ஒன்றுகூட ஏழாவது ஆண்டில் இருக்காது ஒவ்வொரு ஏழு ஆண்டிலும் மனிதன் புதுமை பெறுகிறான் இதிலும் ஏழின் எழிலைப் பார்க்கலாம். பரு உடலில் சில அங்கங்கள் ஐந்து ஐந்தாக இருக்கின்றன. ஐந்து விரல்கள் ஐந்து பொறிகள், ஐந்து புலன்கள், ஐந்து பிராணன்கள், ஐந்து கோஷங்கள் என்று ஐந்தைந்து இந்த ஐந்தை சூக்கும உடலில் உள்ள இரண்டு தத்துவங்களைச் சேர்த்து ஏழு ஏழாகக் கூறுபவர்களும் உண்டு. இதன் விளக்கங்களை சித்த மருத்துவ நூல்களில் காணலாம்.

இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இந்த ஏழில் விதியை உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் புறக்கணித்து விடக்கூடாது. ஆறு நாள் உணவு உண்டவர்கள் ஏழாம் நாள் உண்ணா நோன்பு ஏற்று வயிற்றுக்கும் பிற ஜீரண உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுப்பவர்கள் நீண்டநாள் நோயின்றி வாழலாம்.
ஏழின் எழில் தொடரும்..
(இயற்கை இன்னும் வளரும்)

திங்கள், 21 ஜூன், 2010

பகுதி 20 - 
இயற்கை மருத்துவம்
(தத்துவங்களும் செயல்முறைகளும்) 
மகரிஷி க.அருணாசலம்.

ஏழின் எழில்

மனிதனின் ஆயுட்காலம் 150 வருடங்கள் 49, வருடங்களாகப் பிரித்தால் இளமை, வயது, பலன்தரும் கிழப்பருவம் என்ற மூன்று வட்டங்களில் இது அமையும். இடையீட்டு ஒழுங்கில் இப்பருவ நிகழ்ச்சிகளை உடலில் தோன்றும் நோய்களிலும் நாம் காண்கிறோம். தசைகள் விரிந்து காய்ச்சல் வந்த ஆறாம்நாள் சிறப்பான அறிகுறிகள் தோன்றுகின்றன. அதன் பிறகு ஒவ்வொரு ஏழுநாள் கழித்தும் நோய் முற்றுகிற அல்லது குறைகிற குணங்களை நாம் காணலாம்.

நாட்பட்ட நோய்களிலும் இதே இடையீட்டு ஒழுங்கை அனுபவமுடையவர்கள் கண்டு கொள்ளலாம். இயற்கை மருத்துவ முறைகளைக் கையாளும் நாட்பட்ட நோயாளி ஒழுங்காக இயற்கை வாழ்வு வாழ்ந்தால் ஐந்து வாரங்களில் நல்ல மாறுதல்களைக் காண்பார். ஆறாவது வாரம் நோய் குணமாகும் அறிகுறிகள் தோன்றும். அதாவது உடலில் பிராணசக்தி அதிகரித்து அதன் பயனாக வெளித்தள்ளும் இயக்கம் தீவிரமாகும். அழுக்குகள் தீவிரமாக வெளியே வரும் பொழுது அதனோடு கூடவே வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு அறிகுறிகளோ தோன்றும் இதனை இயற்கை மருத்துவர்கள் நோயாளி குணமடைந்து வருவதன் அறிகுறிகள் என்று கண்டு கொள்வார்கள். ஆனால் மருந்து மருத்துவர்களோ, இதனை நோயின் அறிகுறிகள் என்று நினைத்துப் புதிய மருந்துகளை கொடுத்து அழுக்கு வெளியேறுதலைத் தடை செய்வார்கள்.

இயற்கை மருத்துவத்தில் ஏழின் எழில் என்னும் விதியை ஒட்டி ஆறாவது வாரம் தோன்றும் நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ற சிகிச்சை முறைகளைக் கையாளுவார்கள். இயற்கையின் இடையீட்டு ஒழுங்கின் நியதிகளை நன்கு உணராத நோயாளிகள் இது எனக்குப் பல மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு முன்னர் வந்த அதே நோய்தான் மறுபடியும் வந்துள்ளது இயற்கை வாழ்வு முறைகள் கொஞ்சம் பயனளித்துள்ளது. ஆனால் இவை நீண்ட பரிகாரமளிக்கவில்லை என்று மனம் தளர்ந்து உடனடியாக உயிர் கொடுக்கும் மருந்து மருத்துவர்களை நாடுகிறார்கள்.

அவை என்னமோ பழைய வலிகள் தான்; இயற்கை மருத்துவ முறை புது நோய்களை உண்டு பண்ணாது நோயில் திரும்பு கட்டம் என்பது உள்ளே பரம்பரைச் சொத்தாகச் சேர்ந்திருக்கும் வேண்டா நச்சுப்பொருள்களை கண்டமாக (crisis) வெளியேற்றுகிறது. இவை பழைய வலிகளே எனினும் விரைவில் மாறும் நோயாளி இயற்கையை ஒட்டி வாழந்தால் பிராணசக்தி பழையனவற்றை வெளியேற்றி புதிய உடலைக் கட்டியமைக்கும். ஒவ்வொரு கண்த்திற்குப் பின்பும் நோயாளி புதுபலம் பெற்றுத் தேறுவார்.

ஹீலிங் கிரைஸிங் (Healing Crisis) எனப்படும் திரும்புகட்டம் ஒவ்வொரு நோயிலும் அவசியம் தோன்றுமா? என்ற கேள்வி எழலாம். இது நோயாளியின் ஆற்றல் நிலையைப் பொறுத்தது பிராணசக்தி மிகவும் குறைந்து தளர்ந்து போன நிலையில் திரும்புகட்டமே வராமல் போய் மேலும் மேலும் பலகீனப்படுத்தும் அறிகுறிகள் தோன்றி எஞ்சிய நச்சுப்பொருள்களை வெளியேற்ற முடியாமல் இக்கட்டான கண்டங்கள் தோன்றலாம். இவை நோயாளியின் முடிவு காலத்தையே வேகப்படுத்துவதாக இருக்கும் ஆனால் பிராணசக்தியை மிச்சப்படுத்தி இயற்கையையொட்டி வாழ்க்கையை அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினால் வாழ்நாளை நீட்டி சுகம் பெற வாய்ப்பு ஏற்படலாம்.

சில நோயாளிகள் தமக்கு எத்தனை திரும்புகட்டங்கள் (Stages) ஏற்படுமென்று கேட்கின்றனர். ஒரு நோயாளி பூரணநலம் பெற எத்தனை கட்டங்கள் அவசியமோ அத்தனைக்கு மேலோ குறைவாகவோ ஒன்றுகூட ஏற்படாது என்று உறுதியாகச் சொல்லலாம். இயற்கை படிப்படியாக முன்னேறுகிறது. ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதனைப் பூர்த்தி செய்த பின்னர் வேறொன்றை எடுத்துக் கொள்கின்றது.

முதலில் ஜீரண உறுப்புக்களை வலிமையுடையனவாக ஆக்குவதற்கான பணி நடைபெறுகின்றது. ஆரோக்கிய வாழ்வு போதுமான உள்ளிழுத்தலையும் அளவிற்குறையாத வெளியேற்றுதலையும் பொறுத்துள்ளது வயிறும், குடலும் திறமையாக வேலை செய்யும் பொழுதுதான் நிரந்தர ஆரோக்கியம் கிடைக்கும். எந்த சிகிச்சை இந்த உண்மையைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறதோ அது வெற்றியடையாது. இந்த உண்மையினை நோயாளிகள் உணர்ந்து ஒத்துழைப்புக் கொடுக்காவிட்டாலும் தோல்வியே கண்டபலனாக இருக்கும்.

(இயற்கை இன்னும் வளரும்)