சனி, 16 அக்டோபர், 2010

நடப்பது நன்மைக்கே.

அண்மைக்காலமாக நகர்ப்புற மக்களிடம் மட்டுமன்றி கிராமப்புற மக்களிடம்கூட ஒரு பழக்கம் பரவத் தொடங்கியிருக்கிறது.


அது, "வாக்கிங்" எனப்படும் நடைப்பயிற்சிப் பழக்கம் பழக்கம்.

நம் முன்னோர்கள் நாள் முழுதும் பல்வேறு வேலைகளையும் அவர்கள் கையாலேயே நடத்தினர்.


இதில், ஆண்கள், பெண்கள் என்ற விதிவிலக்கிருந்ததில்லை.


பெண்கள் கோலம் போடுதல், வீட்டைச் சுத்தப்படுத்துதல், துணிதுவைத்தல், கால்நடைகளைப் பராமரித்தல், சமைத்தல் என இயந்திரங்களின் உதவியின்றியே அனைத்துப் பணிகளையும் செய்தனர்.


விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட ஆண்களும் முடிந்தவரை பணிகளுக்காக இயந்திரங்களைச் சார்ந்திருக்கவில்லை.


ஆனால், நடப்புலகிலோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.


பெரும்பான்மையான மக்களிடம் உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டது. அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோரில் நூறு சதவிகிதம் பேருக்கும் உடல் உழைப்பு ஏறக்குறைய இல்லை என்றே சொல்ல வேண்டும்.


அவர்கள் அலுவலக நேரம்போக மீதிப் பொழுதுகளையும் அமர்ந்தபடியேதான் கழிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர். சும்மாயிருக்கும் பொழுதுகளே அதிகமாகிவிட்டதால் உடலில் பல்வேறு நோய்களின் ஆட்சிதான் நடக்கிறது. அவற்றைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளுடன் இப்படி காலார நடப்பதும்
அவசியமாகிறது.


ஆனால், அதையும்கூடப் பொருள்படுத்தாமல் சிலர், "நடப்பது நடக்கட்டும். நடப்பது நம்ம கையிலா இருக்கு?" எனக் கூறுவதைக் கேட்கலாம்.

வாய்வுப் பிடியில் சிக்கியவர்களுக்கு குனிதலோ, நிமிர்தலோ இயலாது.

அதேபோலத்தான் வ(அ)சதியின் பிடியில் சிக்கியோரும். அவர்களால் குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க இயலாமல் போகிறது. எதற்கெடுத்தாலும் பிறரைச் சார்ந்தே அவர்களின் பணி நடக்கிறது. இயற்கையான விஷயங்களைக் கைவிட்டு செயற்கைக்கு மாறுவதால்தான் நிலைமை "அன்ன நடை கற்கப்போய் தன் நடையும்
இழந்தாற்போல்" ஆகிவிடுகிறது.


நடப்பது மிகவும் நல்ல பயிற்சிதான்.


அதிகாலை மற்றும் அந்திப் பொழுதுகளில் நடப்பதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் பல நன்மைகள் நடக்கின்றன. ஆயினும் அந்தியைவிட அதிகாலைப் பொழுதே சிறந்தது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.


பல்வேறு தொலைக்காட்சிகளின் நேரலைகளிலும் வரும் மருத்துவர்கள்முதல் நூற்றுக்கணக்கில் பீஸ் கொடுப்பதற்காக மணிக்கணக்கில் நாம் காத்துக் கிடந்து பார்க்கும் உள்ளூர் மருத்துவர்கள்வரை, நீரிழிவு உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கும் முதல்அறிவுரை காலார நடக்க வேண்டும் என்பதுதான்.


குறைந்த உழைப்பு, பெருங்குடலும் சிறுகுடலும் திணறத்திணற மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க சாப்பாடு, இடையிடையே காபி, டீ, இத்யாதி பானங்கள், நொறுக்குத்தீனிகள் என சில காலம்வரை பொழுதுகள் சுகமாய் நடக்கின்றன. பின்னர், கொழுப்பு, சர்க்கரை, அழுத்தம் உள்ளிட்டவை கூடியும், குறைந்தும் போவதால் பல்வேறு சிறப்பு மருத்துவர்களைத் தேடி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.


பத்து மாதம் ஆன பின்னும் நடக்காத தங்கள் குழந்தையை நடநட என பெற்றோர் உற்சாகப்படுத்துவர். ஆனால் அதே பெற்றோர், அக் குழந்தை மூன்று, நான்கு வயதை நெருங்கும்போதோ, "அங்க இங்க நடக்காம ஒரு இடத்தில உட்கார்" எனக் கண்டிப்பதையும் காணலாம்.


விளைவு, மாலை முழுதும் விளையாட்டு என்பதைக் கடைப்பிடித்து நடக்க வேண்டிய குழந்தை, அதைக் கைவிட்டு தொலைக்காட்சி முன்போ, கணினி முன்போ அமர்ந்து, அசையும் காட்சிகளை அசையாமல் பார்க்கத் தொடங்குகிறது.


இதனால், அவர்கள் வளர்ந்த பின்னர், "தெருமுனையிலிருக்கும் கடைக்கு ஒரு நடை சென்று வா" என்றால்கூட பெரும்பாலானோரின் கண்கள் முதலில் தேடுவது இரு சக்கர வாகன சாவியாகத்தானிருக்கும்.


தாத்தா, பாட்டிகள் சொன்னபடி நடப்பதைக் கைவிட்டு, அவர்களின் கைகளைப் பிடித்தபடி நடப்பதையும்கூட பழம் பேஷன் என இன்றைய தலைமுறை கேலி செய்யும் காலமாகிவிட்டது.


சாய்வு நாற்காலி, நொறுக்குத்தீனி சகிதமாய் குடும்பத் தலைவிகள் சீரியல்களில் நடப்பதையும், குடும்பத் தலைவர்கள் ஒருநாள் போட்டி என்ற பெயரில் ஆண்டு முழுவதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் கிரிக்கெட்டையும் மணிக்கணக்கிலோ, நாள்கணக்கிலோ பார்க்கப் பழகிவிடுகின்றனர். அவர்களைப் பார்த்துப் பழகும் குழந்தைகள் பிற்காலத்தில் அவர்களைப்போலத்தானே நடக்கும்?


கிராமப்புறங்களில் பல மைல் தொலைவு நடந்து தண்ணீர் பிடித்த காலங்கள் மலையேறிவிட்டன. நகர்ப்புறங்களிலும் அப்படித்தான். ஆனால் சில பகுதிகளில் குழாய்களில் வாரக்கணக்கில் தண்ணீர் வராதபோது, திடீரென லாரித் தண்ணீர் விநியோகிக்கப்படும்.


தண்ணீர் லாரி சப்தம் கேட்டதுமே, எல்லோருக்கும் முன்னதாகப் பிடிக்க வேண்டும் என்ற பரபரப்பில் ஆறேழு குடங்களை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு ஓட்ட நடையா, நடையோட்டமா என திகைக்க வைக்கும் விதத்தில் சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெண்களுக்கும் (சில இடங்களில் ஆண்களுக்கும்) சிறிது நேரம் பரபரப்பாய் வேலை நடந்த திருப்தி. இப்படி வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் பிடிப்பதால் உடற்பயிற்சிக் கூடத்துக்கென தனியாய் நடக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.


தான் பைக்கோ, காரோ வைத்திருப்பதற்காக, "ஒரு சைக்கிள்கூட இல்லையா, எங்க போனாலும் நடந்தா போறீங்க?" என பக்கத்து வீட்டுக்காரரை வேற்றுலக ஜந்துவைப் பார்ப்பதைப்போல ஏளனமாய் கேட்பதும், பார்ப்பதும் சிலரது குணம்.

ஆனால் அந்த நபர் பெருத்த தொந்தியைத் தூக்கிக்கொண்டு காலை, மாலை வேளைகளில்

மூசுமூசென இறைத்தபடி நடக்க முடியாமல் நடந்துபோவதையும், நடக்கப்போவதையும் பார்க்க, எப்போதுமே நடந்துபோகும் பக்கத்து வீட்டுக்காரருக்கு பாவமாகத்தானிருக்கும்.


எது எப்படியோ, என்றும், எங்கும், எப்போதும் "நடப்பது" நன்மைக்கே என நினைத்தால் எல்லாம் நன்மையாகத்தான் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.


மா. ஆறுமுககண்ணன்

நன்றி:- தினமணி