6. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்
முனைவர் பொற்கோவின் ''நல்ல உடல் நல்ல மனம்''
(டாக்டர் பொற்கோ சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்தவர்)
"எண்வகை யோக நிலைகளையும், எண்வகைச் சித்திகளையும் டாக்டர் பொற்கோ அறிவோடும் அனுபவத்தோடும் குழந்தைகளுக்கும் புரியும் வகையில்-முதியவர்களும் குழந்தைகளாகிப் புரிந்து கொள்ளும் வகையில் - விளக்கியிருத்தல் வியப்பும் விம்மிதமும் தருகிறது. படிப்படியாக (Step-by-Step) பதஞ்சலியும் பாராட்டும் வகையில் யோக வாழ்வுக்கு ஒரு பால பாடத்தையே டாக்டர் பொற்கோ அவர்கள் அமைத்திருத்தல் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் குழந்தைகளுக்கும் பெரிய யோகம்தான் ! ஆசிரியரின் பண்பட்ட பகுத்தறிவும், முதிர்ந்த மொழியியல் அறிவும் தகவு சான்ற தனித் தமிழ் உணர்வும் நூலின் பல்வேறு இடங்களிலும் பளிச்சிடுகின்றன."
இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திரு அ. மெய்யப்பன் (இவர் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் சென்னையில் வாழும் இவர் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் ஆசிரியர்/பயிற்சியாளராக சேவை புரிந்து வருகிறார். இயற்கை நலவாழ்வியல் முகாம்களை நடத்துவதில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்) எழுதுகிறார்:-
"இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயின்று வந்த பயிற்சியையும், பல்வேறு நூல்களை ஆய்ந்து பெற்ற அறிவையும் சாறாகப் பிழிந்து தமிழ் மக்கள் பயன் அடைய வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு அறிஞர் பொற்கோ அவர்கள் கோதமன் என்ற புனைபெயரில் கட்டுரையாக தொடர்ந்து விளையாட்டுக் களஞ்சியம் என்ற மாத இதழில் 'நல்ல உடல் நல்ல மனம்' என்ற தலைப்பில் எழுதி வந்தார்கள். அந்தக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றால் மேலும் பொதுமக்களுக்குப் பயன் தரும் என்பதால் நூல் வடிவம் தந்துள்ளார்கள்....
யோகாசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், அட்டமா சித்திகள் என்னும் மன ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சி என்பன போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கிய யோகக் கலை என்ற அருங்கலை பற்றித் தமிழ் தெரிந்த அனைவரும் படித்துப் புரிந்து கொண்டு பயிற்சி செய்து பயன் பெறத்தக்க வகையில் இந்நூல் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும், சுவை பொருந்தியதாகவும் அமைந்துள்ளது..... மனத்தை செம்மைப் படுத்தவும், உயர் நிலைக்கு மனத்தைக் கொண்டு செல்லவும், நிம்மதி பெறவும், மனதை நடு நிலையில் வைத்துக் கொள்ளவும், உள்ளொளியில் ஒன்றவும், உள்ளொளியில் ஒன்றியவர்கள் தொடர்ந்து இன்பமயம் என்னும் பேற்றைப் பெறவும் உதவுகின்ற வகையில் அறிஞர் பொற்கோ அவர்கள் உருவாக்கி உலகுக்குத் தந்துள்ள 32 இன்பமயப் பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன."
"நவில் தோறும் நூல் நயம் போலும்" என்ற மாதிரி, அட்டாங்க யோகம், அட்டமா சித்திகளைப் பற்றி நூலாசிரியர் எளிமையான தமிழில் ஆர்வத்துடன் படிப்பவர் எவரும் புரிந்து கொள்கிற வகையில் விளக்கி இருக்கும் பாங்கு போற்றி வணங்கத்தக்கது. சான்றாக நூல் ஆசிரியர் அட்டாங்க யோகம் என்னும் எட்டுப் படிநிலைகளை தெளிவான தமிழில் விளக்குகிறார். எண்பதுகளில் நான் யோகம் தியானம், அட்டமாசித்தி பற்றி அறிந்து கொள்ள முயன்று அப்போது கிடைத்த புத்தகங்களில், வடமொழி/தமிழ் மொழிக் கலப்புடன் (மணிப்ரவாள நடையில்) எழுதப் பெற்ற விளக்கங்கள் எனக்கு குழப்பத்தையே தந்தன. யோகம், தியானம் பற்றிய சரியான புரிதல் தோன்ற தடைகள் இருந்தன. ஆனால் இந்த விளக்கங்களைப் படித்த பின்னர்தான் எனக்கு தெளிவு ஏற்பட்டது. நான் தெளிவு பெற உதவிய அந்த விளக்கங்களை இங்கே காண்போம்.
- இயமம் : தக்கனவும் தகாதனவும் (சமூக ஒழுக்கங்கள்)
- நியமம் : சரியும் தவறும் (தனி மனித ஒழுக்கங்கள்)
- ஆசனம்: ஆதனம் (ஒரு அருமருந்து.)
- பிராணாயாமம்: மூச்சு நடை (மூச்சாற்றலை ஒழுங்கு படுத்துதல்)
- பிரத்தியாகாரம் : விழிப்பு நிலை (மன ஆற்றலை சிதற விடாமல் ஒரு இலக்கில் திரட்டுவது).
- தாரணை : திரட்டிய ஆற்றலை ஒரு இலக்கில் செலுத்துவது.
- தியானம் : மன ஆற்றலை அந்த இலக்கிலேயே நிலை நிறுத்துவது.
- சமாதி : நிலை கொண்ட மனத்தின் அமைதி அனுபவம்-(பேரின்பநிலை )
இந்த விளக்கங்களை படித்த பின்னர்தான், நமது உடல், மன இயக்கங்களை ஆளும் கலையை படித்து உண்மைநிலைதெளிதல் என்பதையே முன்னோர்கள் சச்சிதானந்தம் (சத்து-உண்மை, சித்து-அறிவு, ஆனந்தம்-பேரின்பநிலை) என்று கூறி உள்ளார்கள் என்பதை, உண்மை அறிவே இன்பமயம் என்பதை நான் புரிந்து கொண்டேன். இது போன்றே அட்டமாசித்திகளைப் பற்றி குழந்தைகளும் கூட மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் முனைவர் பொற்கோ ஐயா அவர்கள் விளக்கி எழுதி உள்ளார்கள்.
இந் நூல் பற்றிய விவரம்:
- நூலின் தலைப்பு: நல்ல உடல், நல்ல மனம்.
- பக்கங்கள்: 150
- வெளியீடு: பூம்பொழில் வெளியீடு, 16, 6-வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை - 20
- விலை ரூ.30
- இந்நூல் கிடைக்கும் இடங்கள்:
- பாரி நிலையம், பிராட்வே, சென்னை 108
- தமிழ் நூலகம், ஆழ்வார்பேட், சென்னை 18
- ஐந்திணைப் பதிப்பகம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5
எனக்கு இந்நூல் அறிமுகமான விதம்:
நான் 1992இல் ஆடுதுறை இயற்கை மருத்துவ முகாமில் முதல் முறையாக பயிற்சி பெற்ற போது இந்நூலை திரு மெய்யப்பன் ஐயா அவர்கள் எனக்கு அன்புப் பரிசாக கையொப்பம் இட்டு வாழ்த்திப் பரிசளித்தார்கள். கடந்த திசம்பரில் (2010), முனைவர் பொற்கோ அவர்களை எனது யோகா ஆசான் திரு.தி.ஆ.கிருஷ்ணனின் இல்லத்தில் சந்தித்து அவரிடம் அறிமுகமும், ஆசியும் பெற்ற போது மிகவும் மகிழ்ந்தேன். இந்நூலைப் பற்றி வலைப்பூவில் எழுதலாமா? என்று கேட்டபோது அன்புடன் மகிழ்ந்து வாய்மொழியாகவே அனுமதி தந்து ஆசியும் தந்த பெரியவர், கற்றுணர்ந்த முனைவர் பொற்கோ அவர்கள் எனக்கு நல்ஆசியும் தந்தார்கள். பாடல்களை எல்லோரும் படித்து பயன் பெறத் தக்க வகையில் வெளியிட எனக்கு அனுமதி அளித்த முனைவர் ஐயா அவர்களுக்கும், இயற்கை நலவாழ்வியல் துறையில் தக்க அறிவும், பயிற்சியும் பெற்றிட எனக்கு எல்லா வகையிலும் ஊக்கமும், நல்லாதரவும் அளித்து வரும், திரு. மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும் எனது இதய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழி நலம் சூழ.
வாழி நலம் சூழ.