சனி, 8 பிப்ரவரி, 2014

நினைத்தது நிறைவேற குபேரத் தியானம் - 3


உங்கள் கவனத்தை இதயத்திற்குக் கொண்டு செல்லுங்கள். உங்கள் இதயத்திலிருந்த இறுக்கமும் மற்ற கோபதாபங்களும் அறவே நீங்கி விடுகின்றன.  உங்கள் இதயம் இப்பொழுது மிக நிதானமாக இயங்குவதை உணருங்கள். அத்துடன் இதயம் முழுவதும் அன்பு  நிறைந்திருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். நுரையீரல்கள் மீது   உங்கள் கவனம் செல்லட்டும். மெதுவாகச் சுவாசம் செய்யுங்கள்; நுரையீரல்கள்  சீராக இயங்குவதை உணருங்கள்.

மார்புப் பகுதி முழுவதும் ஓய்வில் மிக லேசாகி விடுவதை உணருங்கள். 

அங்கிருந்து  உங்கள் கவனம் மெதுவாகத் தோள்களுக்குச் செல்லுகிறது.

நீண்ட காலமாகப்  பல சுமைகளைத் தாங்கிய தோள்கள் அவை. அந்தச் சுமைகள் எல்லாமே மெல்ல மெல்ல நீங்கி விடுகின்றன. தோள்களைத் தளர விடுங்கள். இங்கிருக்கும் இறுக்கம் யாவும் முற்றிலுமாக மறைந்து விடுகிறது. உங்கள் தோள்கள் மிகவும் லேசாகி விடுகின்றன. உங்கள் தோள்கள் ஓய்வில் பாரம் நீங்கிப் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள்.  இந்த உணர்வைச் சற்று அனுபவித்து மகிழுங்கள்.

இதன் பிறகு உங்கள் கவனம் உங்கள் கைகளில் இருக்கட்டும். உங்கள் கைகளில் இருந்த இறுக்கம் எல்லாம் முற்றிலும் விலகி விடுவதை உணருங்கள். உங்கள் கைகள் மிகவும் லேசாகி விட்டன. மெல்ல மெல்ல உங்கள் விரல்களின் வழியே எல்லா இறுக்கமும் வெளியேறி விடுகிறது. முழங்கைகள் முன்கைகள் மணிக்கட்டுகள் உள்ளங்கைகள் விரல்கள் யாவும் மிக லேசாக இருக்கின்றன. அவை யாவும் ஓய்வில் குளிர்ந்து புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். இந்த உணர்வு உங்களுக்குச் சந்தோஷத்தையும், நிம்மதியையும்  தருகிறது.

உங்கள் கவனத்தை மெதுவாகக் கழுத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.  தலையின் பாரம் நீங்கப் பெற்றதை உணருங்கள். தலையை மெதுவாக வலது பக்கம் திருப்பிச் சிறிது நேரத்தில் மீண்டும் நேராக வையுங்கள். அவ்வாறே இடதுபக்கம் திருப்பி மீண்டும் நேராக வையுங்கள். பாரம் இறுக்கம் முற்றிலுமாகக் குறைந்து மறைந்து விடுகிறது.

உங்கள் கழுத்துப் பகுதி மிகவும் லேசாகி விட்டது போல் உணருகிறீர்கள். இப்பொழுது உங்கள் கவனம் உங்கள் தாடை மற்றும் பற்களில் இருக்கட்டும். கோபங்களும் இறுக்கங்களும் நிறைந்த இடம் இது. அவை மெல்ல மெல்ல விலகிப் போவதை உணருங்கள்.  தாடையை விரித்து மூடித் தளர விடுங்கள். பற்களையும் நிம்மதியாக லேசாக வைத்திருங்கள். இப்பொழுது உங்கள் கவனம் உங்கள் வாயில் இருக்கட்டும்.

இறுகிய வாய் மெல்லத் தளரட்டும். இறுக்கம் மறையட்டும். உங்கள் கவனம் நாக்குக்குச் செல்லட்டும். நாக்கைச் சிறிது வெளியே தொங்க விட்டு உள்ளே இழுங்கள். மெதுவாக உங்கள் கவனம் கன்னங்களுக்குப் போகட்டும். கன்னங்களில் இருந்து இறுக்கம் மறைவதை உணருங்கள். உங்கள் கன்னங்களில் லேசான சிலிர்ப்பு ஏற்படலாம்.

இதை அனுபவித்து மகிழுங்கள்.  இறுக்கம் எல்லாம் மறைந்து இந்த இடம் லேசாகி விட்டது. உங்கள் உதடுகளால் புன்னகை செய்யுங்கள். இறுக்கம் மறைந்து மிக லேசாக இருப்பதாக உணருங்கள். இந்தப் புன்னகை அப்படியே இருக்கட்டும்.

மூக்குத் துவாரத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். மெதுவாக மூச்சு விட்டு மூக்கை உணருங்கள்.

இப்பொழுது உங்கள் கவனம் கண்களில் இருக்கட்டும். கண்களை மெதுவாகச் சிறிது திறந்து வானத்தை அல்லது கூரையைப் பாருங்கள். பின் மூடிக் கொள்ளுங்கள்.

கண்மணியைக் கண் இமைக்குள்ளேயே கீழ் நோக்கிச் செலுத்துங்கள். பழைய நிலைக்குக் கொண்டு வாருங்கள். கண்கள் தான் உங்கள் மனத்தின் சன்னல்கள். கண்களுக்கு ஓய்வுதேவை.அந்த இடத்தில் இருந்த இறுக்கம் முற்றிலும் விலகுவதை உணருங்கள். உங்கள் கண்களின் மீதான அழுத்தம் குறைவதை உணருங்கள். முற்றிலும் இறுக்கம் நீங்கி உங்கள் கண்கள் லேசாவதை உணருங்கள். உங்கள் கண்களில் குளிர்ந்த நிம்மதி பரவுகிறது. மெதுவாக உங்கள் கவனத்தைக் கண் இமைகளுக்குக் கொண்டு வாருங்கள். கண் இமைகளில் இருந்த இறுக்கம் முற்றிலும் காற்றாக மறைந்து விட்டது. உங்கள் இமைகள் மிக நிம்மதியாக ஓய்வாக, மலரின் இதழ்கள் போல மென்மையாக இருக்கின்றன. உங்கள் இமைகள் ஓய்வாக இருக்கட்டும். கண்களும் இமைகளும் இதே நிம்மதியான நிலையில் தொடர்ந்து இருக்கட்டும்.

உங்கள் கவனத்தை மெதுவாக உங்கள் புருவத்திற்குக் கொண்டு வாருங்கள். புருவத்தைச் சிறிது உயர்த்திப் பழைய நிலைக்குக் கொண்டு வாருங்கள். புருவங்களில் இருந்த இறுக்கம் எல்லாம் மறைந்து விட்டன. உங்கள் புருவம் மிக நிம்மதியாகச் சலனமற்று இருக்கின்றன.

அங்கிருந்த கவலைகள் எல்லாம் மறைந்து விட்டன. பாரம் குறைந்து விட்டது. உங்கள் புருவங்கள் மிக லேசாக மிக நிம்மதியாக இருக்கின்றன.

உங்கள் கவனத்தை நெற்றிக்குக் கொண்டு வாருங்கள். உங்கள் நெற்றியிலிருந்து இறுக்கம் எல்லாம் வெளியேறுகிறது. உங்கள் நெற்றி.இப்பொழுது மிகவும் மென்மையாக இருக்கிறது இங்கிருந்த கவலையின் ரேகைகள் எல்லாமே மறைந்துவிட்டன.

மனதில் உள்ள எல்லா நினைப்புகளையும் திட்டங்களையும் அகற்றி விட்டீர்கள். உங்கள் நெற்றி இப்பொழுது மிகத் தெளிவாக நிம்மதியாக இருக்கிறது.

உங்கள் கவனத்தைக் காதுகளுக்குக் கொண்டு வாருங்கள். காதுகளுக்கு வரும் ஒலிகளைக் கேளுங்கள். தடுக்கவேண்டாம். ஒலிகளிலிருந்து விலகி அவைகளுக்குச் சாட்சியாக இருங்கள். உங்கள் கவனத்தை மெல்ல உச்சந் தலையில் செலுத்துங்கள். கவனம் அங்கேயே இருக்கட்டும். உச்சந்தலை சிறிது வெதுவெதுப்பாக இருப்பதை உணருங்கள்.

மெல்ல இந்த இடத்தில் இருந்து இறுக்கம் எல்லாம் வெளியேறுவதை உணருங்கள். உச்சந்தலை மிகவும் லேசாகிப் போவதை உணருங்கள். ஓய்வில் உச்சந்தலை குளிர்வதை உணருங்கள். இப்பொழுது உங்கள் முகம் முழுவதும் இறுக்கம் குறைந்து மிக லேசாக, மிக அழகாக ஒளி பொருந்தியதாக இருக்கிறது. புன்னகையுடன்இருக்கிறது.

(தொடரும்)

வருகிற பகுதி நிறைவுப் பகுதி.

நினைத்தது நிறைவேற குபேரத் தியானம் - 2


வசதியாக மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். கைகளை நீட்டித் தொடைகளுக்கு அருகில் அரையடி தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கைகள் மேல் நோக்கி வானத்தைப் பார்த்து இருக்கட்டும். 

கைகள் இரண்டிலும் குபேர முத்திரையை வைத்துக்கொள்ளுங்கள்.

குபேர முத்திரை

கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் நுனியில் சேர்த்து வைத்து மற்ற இரண்டு விரல்களையும் மடித்து உள்ளங்கையைத் தொடுமாறு வைத்துக் கொள்க.

கால்களைச் சற்றுத் தோள்களின் அளவுக்கு [ஒன்றரை அடி அளவுக்கு] அகட்டி வையுங்கள்.

கால் சுண்டு விரல்கள் தரையில் படுமாறு வைத்துக் கொள்ளுங்கள்.கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். அப்படி மூச்சை உள்ளிழுத்து  வெளி விடும் போது உங்கள் உடலைத் தளர்த்துங்கள். 

இப்பொழுது நம் கவனத்தை ஒரு முனைப் படுத்திக் கால் விரல்களில் தொடங்கி உச்சந் தலை வரை செல்ல வேண்டும். மெல்ல மெல்ல உடலிலுள்ள இறுக்கம் குறைந்து கால் முதல் தலை வரை உடல் லேசாவதை உணருங்கள். நிம்மதியாக அமைதியாக இருங்கள்.

உங்கள் கவனத்தை மெல்ல இரண்டு கால் விரல்களின் மீது செலுத்துங்கள்.  கவனம் அங்கேயே இருக்கட்டும்.

மெதுவாகக் கால் விரல்களை அசைத்து விட்டுப்  பழைய நிலையில் வைக்கவும்.

இப்பொழுது மனதால் நினையுங்கள்.  இந்தக் கால் விரல்கள் ஓய்வு பெறுவதை உணருங்கள். மெல்லக் கால்விரல்களில் இருந்த இறுக்கம் எல்லாம் வெளியேறுவதை உணருங்கள். கால் விரல்கள் இருப்பதே தெரியாதது போல மிகவும் லேசாகிப் போவதை உணருங்கள். கால் விரல்கள் முழுதும் குளிர்ந்து ஓய்வில் புத்துணர்வு பெற்றதை உணருங்கள்.

இப்பொழுது உங்கள் கவனம் உங்கள் பாதங்களில் பதியட்டும். உங்கள் உடலைத் தாங்கி நிற்கும். இந்தப் பாதங்களில் இருந்து இறுக்கம் தளர்வதை உணருங்கள். அவையும் பாரத்திலிருந்து நீங்கி ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். அப்படியே உங்கள் கவனம் குதிகால்களுக்குச் செல்லட்டும். உடல் பாரம் நீங்கி ஓய்வில் அவை புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். 

இப்பொழுது உங்கள் கவனத்தைக் கணுக்கால்களில் பதியுங்கள். கணுக்கால்களில் இருந்த இறுக்கம்நீங்கி அவை ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். இப்பொழுது உங்கள் கவனம் உங்கள்கால்களில் இருக்கட்டும். கால்களில் இருந்த இறுக்கம் நீங்கி அவை ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள்.

உங்கள் கால்கள் மிக லேசாக நிம்மதியாக இருப்பதை உணருங்கள். அப்படியே உங்கள் கவனம் முழங்கால்களுக்குச் செல்லட்டும். இங்கிருந்த இறுக்கம் முழுவதும் விலகிப் போவதை உணருங்கள். மெல்ல மெல்ல முழங்கால்கள் மிகவும் லேசாகி விட்டன. இங்குள்ள இறுக்கமும் தளர்ந்து விட்டது. முழங்கால்கள் ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். சற்று நேரம் இதை உணர்ந்து அப்படியே மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்கள் கவனத்தைத் தொடைப் பகுதிக்குக் கொண்டு செல்லுங்கள். அங்கிருந்த இறுக்கம் முழுவதும் விலகி விடுவதை உணருங்கள். தொடைத் தசைகளும் எலும்புகளும்  மிகவும் லேசாகிப் போவதை உணருங்கள். இந்த உணர்வை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்கள் கவனம் இடுப்புப் பகுதிக்குப் போகட்டும். அங்கிருந்த இறுக்கம் முழுவதும் முற்றிலும் விலகுவதை உணருங்கள். இடுப்பில் உள்ள தசைகளும் எலும்புகளும் இவ்வாறே ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். இப்பொழுது உடம்பின் கீழ்ப் பாதி முழுவதும் ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள். சற்றே இந்த உணர்வை அனுபவித்து மகிழுங்கள். ஒரு முறை நினைத்த உறுப்பை மீண்டும் நினைக்காதீர்கள். அப்படியே உங்கள் கவனம் முதுகு எலும்புகளின் மேல் செல்லட்டும். ஒவ்வொரு எலும்பிலிருந்தும் இறுக்கம் நீங்கி ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள்.

உங்கள் கவனம் இப்பொழுது வயிற்றுப் பகுதிக்குப் போகட்டும். அங்கிருந்த இறுக்கம் விலகுவதை உணருங்கள். இந்தப் பகுதி மிகவும் லேசாகி விட்டது. சுவாசிப்பதனால் அடி வயிற்றுப் பகுதி மெதுவாக அசைவதை உணருங்கள். மெல்ல வயிற்றைத் தளர விடுங்கள். இந்தப் பகுதி மிகவும் நிம்மதியாக இருப்பதை உணருங்கள். 

உங்கள் கவனத்தை இப்பொழுது நெஞ்சு விலா எலும்புகளுக்குக் கொண்டு செல்லுங்கள். இங்கிருந்த அழுத்தம் இறுக்கம் எல்லாமே நீங்கி இந்தப் பகுதி மிகவும் லேசாகி விடுவதை உணருங்கள். ஓய்வில் அவை புத்துணர்ச்சி பெற்றதை உணருங்கள்.

(தொடரும்)

நன்றி:
பொறியாளர் அ.மெய்யப்பன், B.E., M.B.A., PG Dip in Yoga
யோகா ஆசிரியர் மற்றும் இயற்கை நல வாழ்வியல் நெறியாளர்.
சென்னை-600004

திங்கள், 3 பிப்ரவரி, 2014

நினைத்தது நிறைவேற குபேர தியானம் - 1

நம் வாழ்க்கையில் நாம் நினைப்பது எல்லாம் நிறைவேறுவது இல்லை. சில ஆசைகள் நிறைவேறுகின்றன. பல ஆசைகள் நிறைவேறாமலேயே போய் விடுகின்றன.

நாம் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள ஒரு மந்திரக்கோல் நம்மிடம் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நாம் நினைப்பதுண்டு. ஹெரால்டு ஷெர்மன் என்னும் அறிஞர் ""மகிழ்ச்சியின் சாவி உங்களிடமே" [YOUR KEY TO HAPPINESS] என்னும் நூலில் அந்த மந்திரக்கோல் நம் மனதிடமே உள்ளது என்று கூறுகிறார்.

மனதின் நான்கு நிலைகள்:

மனித மூளையின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். நம் மூளையிலிருந்து தொடர்ந்து மெல்லிய மின் வீச்சுகள் வெளிப்படுகின்றன. அந்த மின்வீச்சுகளின் வேகம் அவ்வப்பொழுது நமது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்து மாறக் கூடியது. இதுவினாடிக்கு இத்தனை சைக்கிள்கள் என்று கணக்கிடப்படுகிறது. அதனைக் கொண்டு நமது மூளையின் செயல்பாட்டை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளார்கள்.

அவை
1பீட்டாநிலை
2ஆல்ஃபாநிலை
3தீட்டாநிலை
4டெல்ட்டாநிலை
என்பவையாகும்.

நாம் விழித்திருக்கும் நிலையே பீட்டா நிலையாகும். அப்போது நமது மூளையின் மின்வீச்சு வினாடிக்கு 14 சைக்கிள்களுக்கு  மேல் இருக்கும்.

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையே ஆல்ஃபா நிலையாகும். இந்த நிலையில் நமது மூளையின் மின்வீச்சு வினாடிக்கு 7முதல்14  சைக்கிள்கள் வரை இருக்கும்.

நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் நிலையே தீட்டா நிலையாகும். இப்போது மூளையின் மின்வீச்சு வினாடிக்கு 4முதல்7 சைக்கிள்கள் வரையிருக்கும். கோமா நிலையே டெல்ட்டா நிலையாகும். அப்போது மூளையின் மின்வீச்சு வினாடிக்கு 0முதல்4 சைக்கிள்கள் வரை இருக்கும். மூளையின் மின்வீச்சு வினாடிக்கு 0நிலையில் வருவதே இறப்பு நிலையாகும்.

மந்திரக்கோல்

நாம் நினைப்பதை நிறைவேற்றும் மந்திரக்கோல் ஆல்ஃபா நிலையிலே இருக்கிறது. விழித்திருக்கும் போது தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் இடப் பக்க மூளை ஆல்ஃபா நிலையில் சற்று அமைதியடைகிறது. வலது பக்க மூளை அப்போது செயல்படுகிறது.  குட்டியாக இருக்கும்போது பாகனின் சங்கிலிக்குக் கட்டுப்பட்ட யானை வளர்ந்து வலிமை பெற்ற பிறகும் அந்தச் சங்கிலிக்குக் கட்டுப்பட்டு நிற்கிறது. அது போல நம் மனதில் ஏற்கனவே ஆழமாகப் பதிந்துள்ள எண்ணங்களுக்கு ஏற்ப நாம் விழித்திருக்கும் பீட்டா நிலையில் மூளை செயல்படுகிறது. அந்த எண்ணங்களே நம் முன்னேற்றத்திற்குத் தடைச் சங்கிலிகளாக அமைந்து விடுகின்றன. நமது முழு சக்தியையும் வெளிப்படுத்த விடாமல் தடுத்து நிறுத்தி விடுகின்றன.

ஆல்ஃபா நிலையில் நமது வலது பக்க மூளை செயல்பட ஆரம்பித்து நமது முழு ஆற்றலை உணரச் செய்கிறது. நம் ஆழ்மனத்துடன் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. அப்போது தான் நம் மனம் மிகவும் வலிமையாகவும் உள்ளுணர்வுடனும் ஆக்க பூர்வமாகவும் சிந்திக்கிறது. இந்த நிலையில் மனதில் எந்த எண்ணத்தைப் பதித்தாலும் அது கண்டிப்பாக நிறைவேறும்.

குபேர தியானம் செய்வது எப்படி?

குபேர நிலைக்கு [ஆல்ஃபா நிலைக்கு] போக உகந்த நேரம் அதிகாலை நேரமே. அதற்கு அடுத்தது நாம் உறங்கச் செல்லும் இரவு நேரம் ஆகும். அந்த நேரங்களில் குபேர தியானத்தினைக் கீழ்க் கண்டவாறு செய்து நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

குபேர தியானம்

குபேர முத்திரையுடன் உடலை முழுவதும் தளர்த்தி முழு ஓய்வு கொள்ளுதல், மனதை முழுவதும் தளர்த்தி அமைதிப் படுத்துதல் மற்றும் மிகவும் பிடித்த இடத்திற்கு மனதால் சென்று வருதல் ஆகிய  பயிற்சிகளைப் பார்ப்போம்.


இந்தப் பயிற்சியின் முடிவில் நீங்கள் குபேர நிலையை அடைந்து விடுவீர்கள். குபேர நிலையில் உங்கள் மனம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கும். உடலும் உள்ளமும் பூரண அமைதியுடன் இருக்கும். இந்த நிலையில் இயங்கும் போது உங்கள் சிந்தனை மிகுந்த உள்ளுணர்வுடனும் மிகுந்த சக்தியுடனும் தன்னம்பிக்கையுடனும் ஆக்க பூர்வமாகவும் இருக்கும். இந்த நிலையில் இயங்குவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இந்த நிலையில் மனதில் எதைப் பதிய வைத்தாலும் நிச்சயம் உங்கள் வாழ்வில் அது நடைபெறும்.

(தொடரும்)

நன்றி:
பொறியாளர் அ.மெய்யப்பன், B.E., M.B.A., PG Dip in Yoga
யோகா ஆசிரியர் மற்றும் இயற்கை நல வாழ்வியல் நெறியாளர்.
சென்னை-600004

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

தியானம் எனப்படும் மன ஒருமைப்பாடு.

மனஉளைச்சல்களை அதிகம் தருகிற வாழ்க்கை முறையாக நமது வாழ்க்கை முறைகளை தற்போது நாமே மாற்றிக் கொண்டு விட்டோம். ஸ்ட்ரெஸ் (stress) என்னும் இந்த மன உளைச்சல் மனிதனை படாத பாடு படுத்தி கொண்டிருக்கிறது. இல்லாத வியாதிகளை வரவழைக்கச் செய்கிறது இந்த மன உளைச்சல். ஏற்கனவே வியாதியால் பீடிக்கப்பட்டிருப்போரை அதிக வியாதிகளை தந்து மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறது.

மனம் என்கிற இந்த கருவியினை முறைப்படியாக செப்பனிடத் தவறினால் ஏற்படும் துன்பங்களை நாம் உணரத் தவறி விட்டோம். அதனால் மனித வாழ்வில் துன்பங்கள் தொடர்கதைகளாகிப் போயின. மன உளைச்சலை நீக்கிக் கொள்ள மிகச் சிறந்த வழியாக தியானம் போற்றப்படுகிறது. அறிவியல் ரீதியாக தியானம் மிகச் சிறந்த மன ஒருமைப்பாட்டினைத் தரும் முறையாக உலகில் உள்ள எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தத் தியானம் என்கிற அற்புத மன ஒருமைப்பாட்டுக் கலையினை அஷ்டாங்க யோகம் எனும் யோக முறையின் எட்டுப் படிகளில் ஒன்றாக ஏழாவது படியில் வைத்து தமது யோகசூத்திரங்களின் மூலம் விளக்கி அருளி இருக்கிறார் யோகக் கலையின் பிதாமகர் என எல்லோராலும் போற்றி வணங்கப்படும் பதஞ்சலி முனிவர். தலைசிறந்த சிவராஜ யோகியான திருமூலரும் அஷ்டாங்க யோகத்தின் படிநிலைகளை தமது திருமந்திரம் எனும் புகழ் பெற்ற யோகசாத்திர நூலில் விளக்கி உள்ளார்.

யோகம் என்றால் என்ன? என்று கேட்டால் பலரும்  பலவிதமாக சொல்வார்கள்.

ஆனால் யோகம் என்றால் என்ன என்பதை பதஞ்சலி தனது இரண்டாவது சூத்திரமாக இவ்வாறு சொல்லுகிறார்..

யோகஸ்சித்தவ்ருத்தி நிரோதஹ– அதாவது மனதில் தோன்றும் எண்ண அலைகளை நிறுத்துவதே யோகம் எனப்படுவது என்கிறார் பதஞ்சலி.

அப்படி எனில் யோகம் என்பது கையைக் காலை உடலை வளைத்து செய்யும் ஆசனம் இல்லையா? ஆசனம் மட்டுமே யோகம் இல்லை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.  யோகம் என்பது எட்டு நிலைகளை கொண்டது. அதனை அட்டாங்க யோகம் என்று அழைக்கிறார்கள். அட்டாங்க யோகம் எனப்படும் எட்டுப்படி நிலைகளை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

1.  இயமம்.
2.  நியமம்
3.  ஆதனம்
4.  பிராணாயாமம்
5.  பிரத்தியாகாரம்
6.  தாரணை
7.  தியானம்
8.  சமாதி

எனப்படும் எட்டுப் படிநிலைகள் மூலம் ஒரு சாதகன் பெறக் கூடிய பயன் என்பது மனத்தின் (அ) சித்தத்தின் எண்ண அலைகளை நிறுத்துவதே என்கிறார் பதஞ்சலி முனிவர். மனம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு கருவி. அதனை சிந்தனை செய்யாதே! உன் எண்ண அலைகளை நிறுத்தி விடு! என்று அந்த மனத்திடம் நாம் கட்டளையிட்டால் அது கேட்குமா?

தாயுமானவர் எனும் ஞானியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தாயுமானவரின் தந்தை கேடிலியப்ப பிள்ளையின் காலத்திற்கு பிறகு திருச்சிராப்பள்ளியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் பெருங்கணக்கராக இருந்தார் தாயுமானவர். அரசு பணிகளை செவ்வனே செய்து வந்த போதிலும், அவருள்ளம் இறையருள் நாட்டத்திலேயே இருந்தது. அவர் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோயிலுக்கு தினமும் சென்று வழிபடுவது வழக்கம். சுவாமியை தரிசித்து விட்டு வலம் வருகையில் தட்சிணாமூர்த்தி சுவாமியின் சன்னதியில் சென்று வழிபடுவதையும் வழக்கமாக கொண்டவர். ஒரு நாள் அப்படி வலம் வந்து தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு வந்த தாயுமானவரை ஒரு ஞானி கவர்ந்தார். தட்சிணாமூர்த்தி சன்னதியில் தட்சிணாமூர்த்தி திருஉருவுக்கு நேராக எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த அந்த ஞானியின் பெயர் மௌனகுரு ஸ்வாமிகள். மௌனமே வடிவாக இந்த ஞானி அமர்ந்திருப்பது தென்முகக் கடவுள் என்று நாம் வழிபடுகின்ற தட்சிணாமூர்த்தியைப் பார்த்தபடி.

இறைவடிவினரான அந்த தட்சிணாமூர்த்தி எப்படி அமர்ந்திருக்கிறார் தெரியுமா? கல்லாலின் அடியில் சனகாதி முனிவருக்கு ஞானத்தை போதிக்கிறார். அங்கே சொற்கள் இல்லை. சின் முத்திரையைக் காட்டி அருட்பார்வையால் நான்கு வேதங்களையும், உபநிடதங்களையும், அனைத்து தத்துவங்களையும், ஞானத்தையும் சில நொடிகளில் போதிக்கிறாராம் தட்சிணாமூர்த்தி சுவாமி. யோகீஸ்வரன் என்று நாம் வணங்கும் சிவனின் ஒரு வடிவான தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் தான் மௌனகுரு வடிவில் வந்து தாயுமானவரை ஆட்கொள்கிறார். அவர் பின்னாலேயே சென்ற தாயுமானவர் துறவியாகி விட்டார். பதவி, பொன், பொருள், வீடு, மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்ற பந்தங்களை துறந்து அவரும் ஒரு துறவி ஆகிவிட்டார். அந்த தாயுமானவர் மனசைப் பற்றி தனது தேஜோமயானந்தம் எனும் பாடலில் சொல்கிறார்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்; கரடிவெம் புலிவாயையும்கட்டலாம்;
ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்; கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம் விண்ணவரையேவல் கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்;
மற்றொரு சரீரத்தி னும்புகுதலாம்;சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்,
தன்னிகரில் சித்தி பெறலாம்; சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது;
சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே! தேசோமயானந்தமே   
- தாயுமானவர் (கிபி 1608 - 1662)

இந்த அருமையான பாடலின் சுருக்கமான பொருள் இதோ:- குதிரை, மதயானையை நம் வசமாக்கி நடத்தலாம். கரடி, வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின் மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம். பாம்பை (கட்செவி) நம் இஷ்டப்படி ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலோகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம். வேறு யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம். தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம். சதாகாலமும் இளமையோட இருக்கலாம். வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம். நீரின் (சலம் - ஜலம்) மேல் நடக்கலாம். நெருப்பின் (கனன் - கனல்) மேல் தங்கி இருக்கலாம்.  தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம். ஆனால், மிக்க கடினம் யாதெனில் ''மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது' உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே,தேசோமயானந்தமே என்றெல்லாம் பாடுகின்ற தாயுமான சுவாமிகள்  நாம் அட்டமாசித்தியைக் கூட அடைந்து விடலாம். ஆனால் இந்த மனத்தை அடக்கி சும்மா இருப்பது என்பது கடினமே என்கிறார்.

ஆனானப்பட்ட அந்த தாயுமானவரே மனசை அடக்குவது கடினம் என்று சொல்லி விட்டார் நமக்கு எதற்கு இதெல்லாம் என்ற பயந்து விடாதீர்கள். மனசை வசப்படுத்தும் இந்த திறனை யோகத்தின் படிநிலைகளில் ஒன்றான தியானம் மூலமாக அடையலாம்; அட்டாங்க யோகத்தின் மூலம் எண்ண அலைகளின் வளர்ச்சியை நிறுத்துவது இயலும் என்கிறார் பதஞ்சலி முனிவர்.

மனசை வசப்படுத்துவது என்பது கொக்கு பிடிப்பது போலத்தான்.!

கொக்கை எப்படிப் பிடிப்பது?’ என்று ஒருவன் ஒரு அதி புத்திசாலியிடம் கேட்டானாம். கொக்குதானே பிடிக்கணும்? ரொம்ப சுலபம். கொக்கு தலையில் கொஞ்சம் வெண்ணையை வைக்கணும். கொஞ்ச நேரம் கழித்து வெண்ணை உருகி கொக்கின் கண்ணை மறைக்கும். அப்போது கொக்கு திகைத்து போய் பறக்க இயலாமல் நிற்கும். அப்போ கொக்கை கப் என்று பிடித்து விடலாம்என்றானாம் அந்த அதிபுத்திசாலி. அது சரி. கொக்கை வெண்ணை தலையில் வைக்கும் போதே அதைப் பிடித்து விடலாமே. இவனிடம் போய் யோசனை கேட்டோமேஎன்று நினைத்தானாம் கேள்வி கேட்டவன்.

என்னடா இது? இந்த ஆள் கொக்கு வெண்ணை என்று சம்பந்தமே இல்லாமல் சொல்கிறானே என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம். எல்லாவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது. உடல் மனம் ஆன்மா மூன்றையும் இணைப்பதுதான் யோகம் என்று முதலில் பார்த்தோம் அல்லவா?. யோகம் என்றால் மனசின் எண்ண அலைகளை தடுத்து நிறுத்துவது என்று இரண்டாவதாக பார்த்தோம். அட்டாங்க யோகம் என்பது என்ன என்றும் பார்த்தோம்.

எண்ண அலைகளை தடுத்து நிறுத்தும் இந்த படிநிலை ஏழாவது படிநிலையான தியானத்தை அடுத்து வரும் எட்டாவது படியான சமாதி நிலை.

இந்த சமாதி நிலையில் தான். மனசை கட்டவேண்டும் என்றால், அசையாத நிலையை உருவாக்கவேண்டும் என்றால், முதலாவதாக நாம் இயமம் என்கிற சமூக ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்.. இரண்டாவதாக நாம் நியமம் என்கிற தனி மனித ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். மூன்றாவதாக இந்த உடலை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆசனங்களை பயில வேண்டும். நான்காவதாக மனதை கட்டுக்குள் கொண்டு வர பிரணாயாமம் (மூச்சைக் கட்டு), ஐந்தாவதாக பிரத்தியாகாரம் (ஐம்புலன் ஒழுக்கம்), ஆறாவதாக தாரணம்(ஐம்புலன் ஒடுக்கம்), ஏழாவதாக தியானம்(ஏழாவது அறிவு) போன்ற படி நிலைகளைக் கடக்க வேண்டும். அப்போது தான் அந்த மனமற்ற (எண்ணமற்ற) சமாதி நிலை கிட்டும் என்பதால் தான் மனமென்னும் அந்த கொக்கைப் பிடிக்க அட்டாங்க யோகம் எனப்படும் வெண்ணையை அதன் தலையில் வைக்கவேண்டும் என்ற பொருளில் அந்த அதிபுத்திசாலி சொல்லி இருப்பான் என்று நான் நினைக்கிறேன்.

ஆக பதஞ்சலி சொல்கிற மாதிரி எண்ண அலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அட்டாங்க யோகத்தினை பயில வேண்டும். அந்த எட்டுப்படி நிலைகளை கடக்க வேண்டும். தாயுமானவருக்கு கிடைத்தது போல சரியான ஒரு நல்லாசான் கிடைத்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இந்த பிறவியிலேயே மனமற்ற நிலையை அடைய வழி வகுக்கும் சில பயிற்சிகள் உங்களுக்கு கைகூடலாம். இவற்றின் துணை கொண்டு இந்த பிறவியை வெல்லக்கூடிய உபாயங்கள் பிற்காலத்தில் உங்களுக்கு கிடைக்கலாம். அந்த இனிய நிலை அதாவது சமாதி நிலை உங்களது தேவைகளை தேடல்களை அடிப்படையாக கொண்டது. வாழ்க்கையை நலமாக, வளமாக வாழ வேண்டும்... எனக்கு இந்த சமாதி நிலையெல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு நல்ல உடல், நல்ல மனம் என்கிற அருமையான வாழும் கலையை கற்றுக் கொள்ள தியானப் பயிற்சிகள் உதவும். ஒரு புதையலின் அருகே உங்களை அழைத்துச் செல்லும் போது அந்த செல்வத்தை எந்த அளவுக்கு அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதை... கை நிறையவா? பை நிறையவா? மூட்டை மூட்டையாகவா, லாரி லாரியாகவா? நீள நீள கண்டெயினர்களிலா? என்பதையெல்லாம் நீங்கள்தான் முடிவு செய்து கொள்ளவேண்டும்.

எப்படியோ, நாம் கற்றுக் கொள்ளப் போகிற செய்திகள், இது வரை நாம் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்ட விஷயங்களை, நமது பழக்க வழக்கங்களை, சிந்தனை அமைப்புக்களை எல்லாவற்றையும புரட்டிப் போடக் கூடியதாக இருக்கும் என்று மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். 'நன்றிது தேர்ந்திடல் வேண்டும்; இந்த ஞானம் வந்தார்ப் பின்னர் வேறென்ன வேண்டும்? என்பார் மஹாகவி பாரதி. ஞானம் என்கிற அந்த விழிப்புணர்வினை நீங்கள் பெற்று விட்டால் உங்களை நீங்கள் வெற்றி கொள்ள முடியும். உங்களை வெற்றி கொண்ட பின்னரே உலகை வெல்ல முடியும் என்பதுதான் இரகசியம்.

நமது வாழி நலம் சூழ வலைப்பூவில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வரும் யோகாசன ஆசிரியரும், இயற்கை நலவாழ்வியல் நெறியாளருமான பொறியாளர் பிக்ஷுஅடிப்பொடி திரு. .மெய்யப்பன், B.E., M.B.A., PG Dip(Yoga&Naturopathy) அவர்கள் குபேரத் தியானம் எனும் தலைப்பில் எவ்வாறு நீங்கள் மனதில் நினைத்ததை மனதின் துணை கொண்டு தியானத்தின் மூலமாக அடையலாம் என்று எதிர் வரும் தொடர்களில் விளக்கவுள்ளார். நான்கு பகுதிகளில் வர இருக்கும் அந்தத் தொடரின் அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதி, தொடர்ந்து குபேர நிலைத் தியானம் எனும் தலைப்பில் வர இருக்கும் பதிவுகளைப் படித்து பயன் பெற உங்களை அழைக்கிறேன்.

நன்றி.