ஞாயிறு, 18 மார்ச், 2012

மகளிர் நலம்: கலந்தொடா மகளிர் - பூப்பு முதல் மூப்பு வரை


மகளிர் நலம் சார்ந்த ஆய்வுக் கட்டுரை.

கலந்தொடா மகளிர் 
(பூப்பு முதல் மூப்பு வரை)
திரு. மா.உலகநாதன், எம்.ஏ.


இறைவன் படைப்பில் பெண் அற்புதமானவள். அடுத்த தலைமுறையை அவள்தான் உருவாக்குகிறாள். அவள் தாயாக, தெய்வமாக மதிக்கப்படுகிறாள்; போற்றப்படுகிறாள்.

பொன்னுடையரேனும் புகழுடையரேனும்  மற்
றென்னுடையரேனும் உடையரோ? – இன்னடிசில்
பூக்களையும் தாமரைக் கைப்பூநாறும் செய்யவாய்
மக்களையிங் கில்லாதவர். -நளவெண்பா.

இந்த வரத்தைப் பெறுவதற்குள் அவர்கள் படுகின்ற அவத்தைகளோ ஆயிரம் ஆயிரம். அதில் ஒன்றுதான் அவர்கள் உடலாலும் மனதாலும் மாதந்தோறும் அடையும் அவத்தையான மாதவிலக்கு. இதை தூரம், மாதாந்தரம், தீட்டு எனப் பல பெயரிட்டு அழைப்பர். மிக அதிகமாக சேர்ந்து விடுகிற இரத்தத்தை வெளியேற்றி, நல்ல உடல் நலம் ஏற்படச் செய்வது மாதவிடாயின் பணி. மாதவிடாயின் போது வெளிப்படும் குருதியானது சாதாரண குருதியினின்றும் வேறுபட்டது. கருப்பையிலிருந்து கருமை நிறமுடைய, உறையாத தன்மையுள்ள இரத்தம் ஒவ்வொரு மாதவிடாயின் போதும் சுமார் நூறு மி.லி. வெளியேறும்.

மாதவிலக்குக்கு முன்னர் பெண்களுக்கு மனரீதியாக கோபம, எரிச்சல், சிடுசிடுப்பு தோன்றும். உடல்ரீதியாக முதுகு வலி, உடல் வலி ஏற்படும். இதை Pre-Menstrural Syndrom என மருத்துவ அறிவியல் கூறுகிறது. எனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டிலிருந்து விலகி முழு ஓய்வு கொள்வது அவர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் நன்மை பயக்கும். மாதவிலக்கின் போது பெண்களின் சருமத்திலிருந்து மினோகொலின் என்ற நச்சுப் பொருள் சுரக்கும். அந்நச்சுப் பொருள் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் என பிஷோக் என்ற அறிஞர் கூறியுள்ளார். அவர்கள் முன்னிலையில் தயாரிக்கப்படும் அப்பளம், ஊறுகாய் முதலிய உணவுகள் விரைவில் கெட்டுவிடுமாம். அதுமட்டுமல்ல. செடிகொடிகளின் பக்கம் போனாலும் கூட அவை வாடிவிடும் என்கிறார்கள்.

பெண்கள் பூப்புற்று இருக்கும் (மாதவிடாய்க்) காலங்களில் தூய்மையற்றவர்களாகக் கருதப்படுவார்கள். அக்காலங்களில் வீட்டுப் பண்டங்களை தொடாமல் ஒதுங்கி வாழ்ந்தமையால் அவர்கள் கலந்தொடா மகளிர் எனப்பட்டனர். இந்நிலை இன்றும் இருந்து வருகிறது. மாதவிலக்குக் கொண்ட பெண் ஒருத்தி இனிய பழந்தரும் மரத்தினடியில் நின்றால், அம்மரத்தின் பழம் கொடிய கசப்பாக மாறி விடும். அவள் தானியத்தைத் தொட்டால் அது விதைப்பதற்கு உதவாது. வளரும் பூச்செடி அருகில் சென்றால் அவை வாடி வதங்கி விடுகின்றன. கருவேப்பிலை, துளசி முதலிய மூலிகைகளின் அருகில் மாதவிலக்குக்  கொண்ட பெண் சென்றால் அவை காய்ந்து விடும் என்று இன்றும் நம்புகின்றனர். இதனால் இயற்கையின் கூறுகள் மாதவிலக்காகிய பெண்களால் பாதிக்கப்படுகின்றன என்பது பெறப்படுகின்றது. மேலும் மக்களின் நம்பிக்கையை புலப்படுத்துவதாகவும் உள்ளது எனலாம்.

புறநானூற்றுப் பாட்டு ஒன்றில் பூப்புற்ற மகளிர் பற்றிய தெளிவான குறிப்பு ஒன்று காணப்படுகின்றது.
பருத்தி வெளிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல் மண்டு தோணியின் படைமுகாம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்  
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்து
கலந்தொடா மகளிரி னிகழ்ந்து நின்றவ்வே.. 
(புறம்–299:1-7)

பருத்திப் பயிர்களால் சூழப்பட்ட சிற்றூர் மன்னனினின் உழுந்துச் சக்கையை  தின்று வளர்ந்து தளர்ந்த நடையுடைய குதிரை, கடல் நீரைப் பிளந்து கொண்டு செல்லும் தோணியைப் போல பகைவருடையை சேனையினிடையே சென்று போரிட, நெய்யால் அமைத்த உணவை உண்டு ஒழுங்காக கத்தரிக்கப்பட்ட பிடரியினை உடைய பகை மன்னரின் குதிரைகள் முருகன் கோட்டத்தில் பாண்டங்களை தொடுதற்கில்லாமல் விலக்குடைய மகளிரைப் போல போருக்கு அஞ்சி பின்னிட்டன என்று பொன்முடியார் என்ற புலவர் பாடுகிறார்.

சிற்றூர் மன்னனின் குதிரைத் தாக்குதலுக்கு பகை மன்னனின் குதிரை பின்னிட்டதற்கு விலக்குடைய மகளிர் பாண்டங்களைத் தொட பின் வாங்குதலை உவமையாகக் கூறுகின்றார்.

கலந்தொடா மகளிர் என்பது பூப்புற்ற மகளிரைக் குறிக்கும் என்று ஔவை சு.துரைசாமிப் பிள்ளை இப்படி பொருள் விளக்கம் கூறுகிறார். பூப்புற்ற மகளிர் மனைகளில் கலந்தொடாது விலகி நின்று தாம் பூப்புற்றமை தெரிவிப்பது தமிழரது மரபு. பூப்புத் தோன்றும் மகளிருக்கு அதன் வரவு முன்கூட்டி அறிய வாராமையின் அதன் வராமையை தாம் விலகி நின்று நாணிக் காட்டும் இயல்பு பற்றி கலந்தொடா மகளிரினிகழ்ந்து நின்றவ்வே என்று கூறுகின்றார்.

பூப்புக் காலத்தில் பெண்ணை அசுத்தமாகக் கருதினரேனும் அதனை நீக்குதற்கு மேற்கொண்ட வழிகள் ஒன்றும் சங்க இலக்கியங்களில் இல்லையென்பார் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் பிள்ளை. இலக்கியத்தில் சான்றுகள் இல்லையெனினும் பூப்புற்றவர்களை சில நாட்கள் வரை ஒதுக்கி வைத்து பின்னர் நீராட்டிக் குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ளும் நிலை நடைமுறையில் தென்னிந்திய மக்களிடம் இருந்து வருகிறது. ஆதலால் நீராடுவதும், மாற்றாடையுமே தீட்டினை நீக்குதற்குரிய அடையாளங்கள் எனலாம். பெண்கள் பூப்புற்ற காலங்களில் கடல்தாண்டிய பயணம் செல்லக்கூடாது என்பதை  ‘முந்நீர் வழக்கம் மகடுஉ க்கில்லை என்று தொல்காப்பியம் கூறுகின்றது.

மாதவிலக்குப் பிரச்சினைகள்:
மாதவிடாய் தோன்றுவதற்கு இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு முன்னரே தலைவலி, வாந்தி, மனச்சோர்வு, மார்பில் அதிக வலி ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு வலியுடன் கூடிய தடைபட்டு, தடைபட்டு மாதவிலக்கு ஏற்படலாம்.

பொதுவாகவே, மாதவிலக்குக் கோளாறுகள் கொண்டவர்களுக்கு தலைக்குள் எதுவோ நீந்துவது போன்றிருப்பது, முன் நெற்றியில் பாரம், அழுத்தம் தோன்றுவது, இதய படபடப்பு, வயிற்றை இறுக்கிப் பிடிப்பது போன்ற அறிகுறிகள் உருவாகும்.

மாதவிலக்கான மாதர் செய்யத்தக்கன:
 நல்ல ஓய்வும் உறக்கமும் தேவை.
உடலை, உறுப்புக்களை சுத்தமாகப் பேண வேண்டும்.
கழிவுகள் அவ்வப்போது அகற்றப் பட வேண்டும்.
கூடுதல் வேலைகளைத் தவிர்க்கலாம்.
உண்ணும உணவில் உப்பைத் தவிர்க்கலாம்.
காபி, டீ, எண்ணையில் பொரித்த, வறுத்த உணவுகளை விலக்கலாம்.
வாய் வழி உண்ணும் கருத்தடை மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.
சானிடரி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டும்.

மாதவிலக்கான மாதர் செய்யத்தகாதன:
கடும் உஷ்ணத்தின் முன் (அடுப்பு) நிற்கக்கூடாது.
மலச்சிக்கலோ, மனச்சிக்கலோ இருக்கக் கூடாது.
இரத்தப் போக்கை தடைப் படுத்தக் கூடாது.
இந்நாட்களில் நரம்பு மண்டலம் மிகவும் உணர்ச்சி மிக்கதாய் இருக்கும். 
எனவே உணர்ச்சி வசப்படக் கூடாது.
உடலுறவு அறவே கூடாது.

சூதக வயிற்று வலி, மாதவிலக்கு தடைப் படுத்தல், அதிகப்படியான குருதிப்போக்கு, இரத்த சோகை, பெரும்பாடு, வெள்ளைப்படுதல் போன்ற கர்ப்பப்பை கோளாறுகளை முற்றிலும் நீக்க கீழ்க்கண்ட இயற்கை மருத்துவ முறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்களேன்.

இயற்கையோடு இயைந்து வாழுங்கள். 

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நாள் தோறும் ஏதாவது ஒரு மூலிகைச் சாற்றினை அருந்தி உடல் நலத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஐம்பெரும் (பஞ்சபூதம்) ஆற்றல் வழி, மண் சிகிச்சை, நீர்ச் சிகிச்சை, காற்றுச் சிகிச்சை, வெப்பச் சிகிச்சை, ஆகாயச் சிகிச்சை(உண்ணா நோன்பு) ஆகியவற்றைக் கடைப்பிடித்து நோய் வராமல் காத்துக் கொள்ளுங்கள். வந்த நோய்களை நீக்கிக் கொள்ளுங்கள்.

எட்டு வயது நிரம்பிய உடனேயே யோகாசனங்களைக் கற்றுக் கொண்டு தினந்தோறும் யோகாசனங்கள் செய்து உடல் நலனைப் பேணுங்கள். (யோகா என்பது எண்வகை யோகத்தையும், பிராணாயாமம், முத்திரைகள், கிரியைகள், பந்தங்களை உள்ளடக்கியது).

நன்றி:
1.       திரு.அ.மெய்யப்பன், யோகாசன ஆசிரியர், சென்னை அவர்கள் 18.12.2011 அன்று ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
2.       புறநானூற்றில் தமிழர் பண்பாடு என்ற நூலுக்கு.

வாழி நலம் சூழ வலைப்பூவுக்காக இக்கட்டுரையை எழுதி வழங்கியவர்:
திரு. மா.உலகநாதன், எம்.ஏ.,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
வரலாற்றுத் துறை,
திரு.வி.க அரசுக் கல்லூரி.
திருவாரூர் – 610001
அலைப்பேசி: 94442902334

வாழி நலம் சூழ வலைப்பூவுக்காக தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வரும் திரு.மா.உலகநாதன் ஐயா அவர்களுக்கும், வலைப்பூவினை தொடர்ந்து ஆதரித்து வரும் இணைய அன்பர்களுக்கும் எனது பணிவான இதய நன்றி.