வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பகுதி 8 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.


நோய் ஒன்றே; பல அல்ல.

இயற்கை மருத்துவம் உலகில் இப்பொழுது அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

விஞ்ஞானம் வளர்ந்துள்ள மேலை நாடுகளிலும் அறிஞர்கள் இதனை வரவேற்று ஆதரிக்க ஆரம்பித்துள்ளனர். ஆராய்ச்சி மனப்பான்மையுடைய அலோபதி வைத்தியர்கள் கூட இயற்கை முறைகளைக் கையாள ஆரம்பித்துள்ளனர். எனினும் இவர்கள் இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தாலும் அவற்றில் நம்பிக்கை பெருகும் அளவு தெளிவு பெறவோ முயலுவதில்லை. இதன் விளைவாகத்தான் சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் ஊசிபோடுதல், அலோபதி பொது மருந்துகள் ஆகியவைகளைக் கையாளுகிறார்கள். அதைப்போலவே இயற்கை மருத்துவத்தில் உள்ள முறைகளில் சிலவற்றை ஹைட்ரோபதி, குரோமோபதி, பிஸியோதெரபி என்கிற பெயர்களால் ஆங்கில முறை மருத்துவர்களான அலோபதிக் முறை மருத்துவர்களும் கையாளுகின்றனர். இவற்றால் முழுப்பயன் கிடைப்பது அரிதேயாகும். இயற்கை மருத்துவத்திற்கு அதன் அடிப்படைத் தத்துவங்களின் அறிவும் தெளிவும் மிக இன்றியமையாதது

எனவே முந்திய அத்தியாயங்களில் ஒன்றாகிய "நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதெற்கென அமைந்தது" என்பதைப் பற்றிப் பார்த்தோம். இங்கு "நோய் ஒன்றே பல அல்ல" என்னும் இன்னுமொரு அடிப்படை உண்மையைப் பற்றி ஆராய்வோம்.

நோய் ஒன்றுதான் என்றால் யாரும் ஆச்சரியப்படுவார்கள். அனுபவத்தில் தலையிலும், மார்பிலும், வயிற்றிலும் கைகால்களிலும், ஏன் அங்க அவயவங்கள் அனைத்திலும் வலி வந்து நம்மை வாட்டுவதை யார்தான் அறியார்? நோய்கள் பல என்பது தொன்றுதொட்டு பாமரர் முதல் அறிஞர் வரை எவரும் அறிந்த உண்மை இதனை மறுத்து நோய் ஒன்றுதான் என்பதன் பொருள் என்ன? இயற்கை மருத்துவர்கள் உலகை ஏமாற்ற விரும்புகின்றனரா? அப்படி இல்லை அவர்கள் கூட காதில் வலி ஏற்பட்டால் அதைக் காதுவலி என்றும் வயிற்று வலி ஏற்பட்டால் அதனை வயிற்று வலி என்றும் சொல்லுகின்றனர். உள்ளே உள்ள பொருள்கள் வாய்வழியாக வந்தால் அதை வாந்தி என்றும், மலவாய்வழியாக வந்தால் அதைக் கிராணி அல்லது பேதி என்றும், துன்பம் தோன்றும் இடம், இயல்பு முதலியவற்றை ஒட்டிப் பேரிட்டழைக்கின்றனர். ஆனால் பெயர்களே நோய்கள் அல்ல.

(இயற்கை வளரும்)

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

பகுதி 7 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம். 

ஆனால் போதிய வசதியுள்ள சாதாரண மக்கள் நேரம் தவறாது சாப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். உடலில் அழுக்கு சேர்ந்து சிறிது காலம் தாழ்த்தி பிராணசக்தியைக் கொண்டு அதனை வெளியேற்றுகின்ற போது துன்பம் ஏற்படுகிறது.

தும்மல் சாதாரணமாக வரப்போகிற காய்ச்சலுக்கு அறிகுறியாக இருக்கலாம். தும்மலுக்கு மருந்து ஏதும் சாப்பிடாமல் விட்டுவிட்டால் தலைவலி, தூக்கமின்மை, வயிற்றுக் கோளாறுகள் முதலியன வரலாம். காய்ச்சல் வந்துவிட்டால் உடம்பினுள் இருக்கும் வேண்டாப் பொருட்கள் உடம்பு முழுவதையும் போர்த்தியிருக்கும் தோல் வழியாக வெளி வந்துவிடும்.

இந்தக் காய்ச்சல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். இதனை ஹே·பீவர் (hayfever) என்று சொல்கிறார்கள். இதற்கும் வைக்கோலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பொதுவாக இக்காய்ச்சல் மரங்களும், செடிகளும் பூத்துக்குலுங்கும் காலத்தில் வருகிறது. அச்சமயங்களில் காற்றில் பூக்களிலுள்ள மகரந்தத்தூள் பரவலாகக் கலந்திருப்பதால் இதைச் சுவாசிக்கும் சிலருக்கு அழற்சியினால் காய்ச்சல் வருகிறது என்று நினைக்கிறார்கள். தும்மல் வரும் சமயம் மூக்கில் ஒருவித அரிப்பு இருக்கும். அதைப்போக்க எபி டிரைன் சல்பேட் மூக்குத்துளி (Nose drops) சொட்டு மருந்து போட்டு தற்காலிகக் குணம் பெறுகிறார்கள். ஆனால் அழுக்குகள் வெளிவருவதற்கு அவை உதவமாட்டா இதற்கு சிறந்த மருத்துவம் உபவாசம்தான். காய்ச்சல் காலமாகிய மூன்று நாட்களும் முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் இரண்டு வேலை புனர்பாகக் கஞ்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் காய்ச்சலும் நின்று விடும் உடம்பிலுள்ள அழுக்கும் குறைந்து தும்மலுக்கு நிரந்தரப் பரிகாரம் காணலாம்.

தும்மல் என்பது அறிகுறிதான் உடம்பிலுள்ள அழுக்கை வெளியேற்ற பிராணசக்திக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மேலும் உணவு உட்கொண்டு பிராண சக்தியைச் செரிமான வேலையில் ஈடுபடுத்தினால் நோய் அதிகரிக்குமேயொழிய குறையாது.

இந்த உண்மையைத்தான் 'நோய் நமக்கு நண்பன்' அது நாற்சந்தியிலுள்ள கைகாட்டி மரம் போல் நமக்கு வழிகாட்டி உதவுகிறது என்று இயற்கை வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

இது நோயைப்பற்றிய நல்ல ஒரு மனப்பான்மை

இதனைப் புரிந்து கொள்ளாது நோயைக் கண்டு பயப்படுகிறவர்கள் எல்லையற்ற துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

(இயற்கை வளரும்)