மூன்றாம் நாள் நிகழ்வுகள் :- 28-12-2011: புதன்கிழமை முற்பகல்/பிற்பகல்/மாலை
யோகாச்சாரியாவின் அன்புக் கட்டளைக்கிணங்கி நான் கீழ்க்கண்ட செய்திகளை பகிர்ந்து கொண்டேன்.
இந்த அருமையான முகாம் துவங்கி மூன்றாவது நாளுக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். யோகம் எனும் சொல் யுஜ் என்கிற சமஸ்கிருதச் சொல்லில் கிளைத்த சொல்லாகும். ஆங்கிலத்தில் யோக்(yoke) என்ற சொல் இருக்கிறது. அதன் பொருள் இணைத்தல் என்பதாகும். தமிழில் நுகத்தடி இருக்கிறதல்லவா? அது எப்படி ஒரு காளை மாடு அல்லது குதிரையை வண்டியுடன் இணைக்கிறதோ அதைப் போல யோகம் என்ற சொல் ஒருங்கியைவு என்ற பொருளில் அமைந்துள்ளது. இந்த உடல், மனம், ஆன்மா மூன்றையும் ஒருங்கிணைக்கும் அரியதொரு பணியினை யோகம் செய்யவல்லது. தவராஜயோகி திருமூலநாயனாரும், பதஞ்சலி முனிவரும், யோகம் என்பதினை ஒரு ராஜயோகமார்க்கமாக அஷ்டாங்க யோகம் எனும் பெயரில் திருமந்திரம், பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூல்கள் வாயிலாக வழங்கிச் சென்றிருக்கிறார்கள்.
யோகம் என்றால் என்ன? என்று கேட்டால் பலரும் பலவிதமாக சொல்வார்கள். பதஞ்சலி தனது இரண்டாவது சூத்திரமாக சொல்லுகிறார்.. ‘யோகஸ்சித்தவ்ருத்தி நிரோதஹ’ – அதாவது மனதில் தோன்றும் எண்ண அலைகளை நிறுத்துவதே யோகம் எனப்படுவது என்கிறார் பதஞ்சலி. அப்படி எனில் யோகம் என்பது கையைக் காலை உடலை வளைத்து செய்யும் ஆசனம் இல்லையா? ஆசனம் மட்டுமே யோகம் இல்லை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். யோகம் என்பது எட்டு நிலைகளை கொண்டது. அதனை அட்டாங்க யோகம் என்று அழைக்கிறார்கள்.
அட்டாங்க யோகம் எனப்படும் எட்டுப்படி நிலைகளை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
1. இயமம்.
2. நியமம்
3. ஆதனம்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணம்
7. தியானம்
8. சமாதி
எனப்படும் எட்டுப் படிநிலைகள் மூலம் ஒரு சாதகன் பெறக் கூடிய பயன் என்பது மனத்தின்(அ)சித்தத்தின் எண்ண அலைகளை நிறுத்துவதே என்கிறார் பதஞ்சலி முனிவர்.
மனம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு கருவி. அதனை சிந்தனை செய்யாதே! உன் எண்ண அலைகளை நிறுத்தி விடு! என்று அந்த மனத்திடம் நாம் கட்டளையிட்டால் அது கேட்குமா?
தாயுமானவர் எனும் ஞானியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தாயுமானவரின் தந்தை கேடிலியப்ப பிள்ளையின் காலத்திற்கு பிறகு திருச்சிராப்பள்ளியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் பெருங்கணக்கராக இருந்தார் தாயுமானவர். அரசு பணிகளை செவ்வனே செய்து வந்த போதிலும், அவருள்ளம் இறையருள் நாட்டத்திலேயே இருந்தது. அவர் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோயிலுக்கு தினமும் சென்று வழிபடுவது வழக்கம். சுவாமியை தரிசித்து விட்டு வலம் வருகையில் தட்சிணாமூர்த்தி சுவாமியின் சன்னதியில் சென்று வழிபடுவதையும் வழக்கமாக கொண்டவர். ஒரு நாள் அப்படி வலம் வந்து தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு வந்த தாயுமானவரை ஒரு ஞானி கவர்ந்தார். தட்சிணாமூர்த்தி சன்னதியில் தட்சிணாமூர்த்தி திருஉருவுக்கு நேராக எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த அந்த ஞானியின் பெயர் மௌனகுரு ஸ்வாமிகள். மௌனமே வடிவாக இந்த ஞானி அமர்ந்திருப்பது தென்முகக் கடவுள் என்று நாம் வழிபடுகின்ற தட்சினாமூர்த்தியைப் பார்த்தபடி. தட்சிணாமூர்த்தி எப்படி அமர்ந்திருக்கிறார் தெரியுமா? கல்லாலின் அடியில் சனகாதி முனிவருக்கு ஞானத்தை போதிக்கிறார். அங்கே சொற்கள் இல்லை. சின் முத்திரையைக் காட்டி அருட்பார்வையால் நான்கு வேதங்களையும், உபநிடதங்களையும், அனைத்து தத்துவங்களையும், ஞானத்தையும் சில நொடிகளில் போதிக்கிறாராம் தட்சிணாமூர்த்தி சுவாமி. அந்த அழகான கண் கொள்ளாக் காட்சியை நீங்கள் காண விரும்பினால் சுவாமி தயானந்த குருகுலத்துக்கு வாருங்கள். மிக அழகிய படம் ஒன்று இந்த காட்சியை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில் வைத்திருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இதே போன்ற ஒரு முகாமுக்கு வந்திருந்த போது அந்தப் படத்தைக் கண்டு வணங்கி இருக்கிறேன். அந்த தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் தான் மௌனகுரு வடிவில் வந்து தாயுமானவரை ஆட்கொள்கிறார். அவர் பின்னாலேயே சென்ற தாயுமானவர் துறவியாகி விட்டார். பதவி, பொன், பொருள், வீடு, மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்ற பந்தங்களை துறந்து அவரும் ஒரு துறவி ஆகிவிட்டார்.
அந்த தாயுமானவர் மனசைப் பற்றி தனது தேஜோமயானந்தம் எனும் பாடலில் சொல்கிறார்.
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்; கரடிவெம் புலிவாயையும் கட்டலாம்;
ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்; கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம் விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு சரீரத்தி னும்புகுதலாம்; சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம், தன்னிகரில் சித்திபெறலாம்; சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது; சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே! தெசோ மயானனந்தமே
- தாயுமானவர் (கிபி 1608 - 1662)
- குதிரை, மதயானையை நம் வசமாக்கி நடத்தலாம்.கரடி வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின் மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம்.
- பாம்பை (கட்செவி) நம் இஷ்டப்படி ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலோகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம்.
- வேறு யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம்.
- தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம்.
- சதாகாலமும் இளமையோட இருக்கலாம்.
- வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம்.
- நீரின் (சலம் - ஜலம்) மேல் நடக்கலாம்.
- நெருப்பின் (கனன் - கனல்) மேல் தங்கி இருக்கலாம்.
- தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம்.
ஆனால், மிக்க கடினம் யாதெனில் ''மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது'
உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே என்றெல்லாம் பாடுகின்ற தாயுமான சுவாமிகள் நாம் அட்டமாசித்தியைக் கூட அடைந்து விடலாம்.
ஆனால் இந்த மனத்தை அடக்கி சும்மா இருப்பது என்பது கடினமே என்கிறார். ஆனால் இந்த திறனை யோகம் மூலமாக அடையலாம்;
அட்டாங்க யோகத்தின் மூலம் எண்ண அலைகளின் வளர்ச்சியை நிறுத்துவது இயலும் என்கிறார் பதஞ்சலி முனிவர்.
மனசை வசப்படுத்துவது என்பது கொக்கு பிடிப்பது போலத்தான்.
‘கொக்கை எப்படிப் பிடிப்பது?’ என்று ஒருவன் ஒரு அதி புத்திசாலியிடம் கேட்டானாம்.
கொக்குதானே பிடிக்கணும்? ரொம்ப சுலபம். கொக்கு தலையில் கொஞ்சம் வெண்ணையை வைக்கணும். கொஞ்ச நேரம் கழித்து வெண்ணை உருகி கொக்கின் கண்ணை மறைக்கும். அப்போது கொக்கு திகைத்து போய் பறக்க இயலாமல் நிற்கும். அப்போ கொக்கை கப் என்று பிடித்து விடலாம்’ என்றானாம் அந்த அதிபுத்திசாலி.
‘அது சரி. கொக்கை வெண்ணை தலையில் வைக்கும் போதே அதைப் பிடித்து விடலாமே. இவனிடம் போய் யோசனை கேட்டோமே’ என்று நினைத்தானாம் கேள்வி கேட்டவன்.
என்னடா இது? இந்த ஆள் கொக்கு வெண்ணை என்று சம்பந்தமே இல்லாமல் பேசுகிறானே என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம். எல்லாத்துக்கும் தொடர்பு இருக்கு.
உடல் மனம் ஆன்மா மூன்றையும் இணைப்பதுதான் யோகம்னு முதல்லே பார்த்தோம். யோகம்னா மனசின் எண்ண அலைகளை தடுத்து நிறுத்துவது என்று இரண்டாவதாக பார்த்தோம். அட்டாங்க யோகம் என்பது என்னன்னு பார்த்தோம். எண்ண அலைகளை தடுத்து நிறுத்தும் படிநிலை எட்டாவது படியான சமாதி நிலைதான். மனசை கட்டவேண்டும் என்றால், அசையாத நிலையை உருவாக்கணும்னா முதலாவதாக நாம் இயமம் என்கிற சமூக ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்.. இரண்டாவதாக நாம் நியமம் என்கிற தனி மனித ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். மூன்றாவதாக இந்த உடலை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆசனங்களை பயில வேண்டும். நான்காவதாக மனதை கட்டுக்குள் கொண்டு வர பிரணாயாமம் (மூச்சைக் கட்டு), ஐந்தாவதாக பிரத்தியாகாரம் (ஐம்புலன் ஒழுக்கம்), ஆறாவதாக தாரணம்(ஐம்புலன் ஒடுக்கம்), ஏழாவதாக தியானம்(ஏழாவது அறிவு) போன்ற படி நிலைகளைக் கடக்க வேண்டும். அப்போது தான் அந்த மனமற்ற (எண்ணமற்ற) சமாதி நிலை கிட்டும் என்பதால் தான் மனமென்னும் அந்த கொக்கைப் பிடிக்க அட்டாங்க யோகம் எனப்படும் வெண்ணையை அதன் தலையில் வைக்கவேண்டும் என்று அந்த அதிபுத்திசாலி சொல்லி இருப்பான் என்று நான் நினைக்கிறேன்.
ஆக பதஞ்சலி சொல்கிற மாதிரி எண்ண அலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அட்டாங்க யோகத்தினை பயில வேண்டும். அந்த எட்டுப்படி நிலைகளை கடக்க வேண்டும்.
இவ்வளவையும் இந்த ஐந்து நாள் முகாமில் கற்றுத் தேற முடியுமா? என்றால் இயலாது தான். ஐந்து நாட்கள் போதாது தான். ஆனால் ஒரு இனிய துவக்கத்தை இந்த ஐந்து நாள் முகாம் உங்களுக்கு தரப் போகிறது. இயம, நியம, ஆசன, பிராணாயாம பயிற்சிகளை இங்கே நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம். ஷட்க்ரியா எனப்படும் ஆறு கிரியைகள் இங்கே நமக்கு கற்றுத் தரப்போகிறார்கள். சில பயனுள்ள முத்திரைகளை கற்றுக் கொள்ளலாம். அதிர்ஷ்டம் இருந்தால் இந்த பிறவியிலேயே மனமற்ற நிலையை அடைய வழி வகுக்கும் சில பயிற்சிகள் உங்களுக்கு இந்த முகாமிலேயே கூட கைகூடலாம். இவற்றின் துணை கொண்டு இந்த பிறவியை வெல்லக்கூடிய உபாயங்கள் பிற்காலத்தில் உங்களுக்கு கிடைக்கலாம். அந்த இனிய நிலை அதாவது சமாதி நிலை உங்களது தேவைகளை தேடல்களை அடிப்படையாக கொண்டது.
வாழ்க்கையை நலமாக, வளமாக வாழ வேண்டும்... எனக்கு இந்த சமாதி நிலையெல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு நல்ல உடல், நல்ல மனம் என்கிற அருமையான வாழும் கலையை கற்றுக் கொள்ள தேவையான பயிற்சிகளை இங்கே பெறலாம்.
ஒரு புதையலின் அருகே உங்களை அழைத்துச் செல்லும் பணியை ஸ்வாமிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். எந்த அளவுக்கு அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதை... கை நிறையவா? பை நிறையவா? மூட்டை மூட்டையாகவா, லாரி லாரியாகவா? நீளநீள கண்டெயினர்களிலா? என்பதையெல்லாம் நீங்கள்தான் முடிவு செய்து கொள்ளவேண்டும். எது எப்படியோ, இங்கே நாம் இருந்து கற்றுக் கொள்ளப் போகிற செய்திகள், இது வரை நாம் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்ட விஷயங்களை, நமது பழக்க வழக்கங்களை, சிந்தனை அமைப்புக்களை எல்லாவற்றையும புரட்டிப் போடக் கூடியதாக இருக்கும் என்று மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். அந்த விழிப்புணர்வினை நீங்கள் பெற்று விட்டால் உங்களை நீங்கள் வெற்றி கொள்ள முடியும்.
இன்னமும் அதிகம் பேசி நேரத்தை வீணாக்காமல் இந்த முகாமில் எனது எதிர்பார்ப்பு என்ன என்பதைப் பற்றிக் கூறி முடிக்கிறேன். தியானம் என்று நேரடியாக ஒன்றினைப் பயிற்றுவிப்பதாக நிறைய குருமார்கள் எல்லா மீடியாக்களிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பலர் அவர்களிடம் சென்று பயில்கிறார்கள். ஒருநாள் பயிற்சி எனத் துவங்கி விதவிதமான பேக்கேஜ்களில் தியானம் பயிற்றுவிக்கப்படுகிறதை காண்கிறோமே.
இது முறையா? சரியா? எட்டுப் படி நிலைகளில் ஏழாவது படி நிலையான தியானத்தை இயம, நியம, ஆசன, பிரணாயாம, பிரத்தியாகார, தாரணை போன்ற படிகளில் பயிற்சி பெறாமல் நேரடியாக எப்படி பயிற்றுவிக்க முடியும்? பயிலத்தான் முடியுமா? அப்போது யாரோ நம்மை ஏமாற்றுகிறார் என்பது பொருள். முதல் நான்கு படிநிலைகளை சொல்லித் தந்து நாம் அதில் தேர்ச்சி பெற்ற பின்னர் நமக்கு பிரத்தியாகாரமும், தாரணையும் பயிற்றுவிக்காமல் தியானத்தைப் பற்றி பேசுவது முறையா? இது குறித்து யோகாச்சார்யாவோ அல்லது திருச்செந்தில் அடிகளோ தான் நமக்கு விளக்கவேண்டும்.
ஆர்வத்தேடல்களுடன் கற்றுக் கொள்ள காத்திருக்கும் மாணவன் என்ற முறையில் எனது கேள்விகளுக்கு இந்த முகாம் நிறைவேறுவதற்கு முன்னதாக விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் யோகாச்சாரியாவுக்கு நன்றி பாராட்டி அவரது சத்சங்கத்தினை தொடர அழைக்கிறேன்.
எனது சிற்றுரைக்குப் பின்னர் யோகாச்சாரியா இதற்கான விடைகளை மதியம் வருகை தரவிருக்கும் அடிகளாரிடம் கேட்டுப் பெறலாம் என்று கூறி அனைவரையும் தியானப் பயிற்சியில் ஈடுபடுத்தினார்.
அமைதியான இந்த இயற்கைச் சூழ்நிலையின் ஒலிகளை மனத்தில் நிறுத்தி, கண்களை மூடி அமர்ந்திருந்து அனைவரும் தியானம் செய்தோம். பின்னர் அன்பர்கள் அவர்களது தியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். சற்று நேரம் கழித்து அனைவரும் முகாமுக்கு திரும்பினோம். நாங்கள் முகாமுக்கு திரும்பும் போது நண்பர் பிரேமும், குடந்தை ரமேஷும் தடபுடலாக மதிய உணவை தயாரித்து வைத்திருந்தார்கள். சுவாமிஜி நாங்கள் அணைக்கட்டில் இருந்து திரும்பும் போது காரில் வந்து எங்களில் சிலரை ஏற்றிக் கொள்ள மற்றவர் முன்னதாகவே பஸ்சில் சென்றனர். எல்லோருக்கும் நல்ல பசி. மதியம் ஒன்றரை மணியளவில் நாங்கள் அனைவரும் மதிய உணவுக்காக அமர்ந்தோம்.
உணவு பரிமாறப்பட்ட பின்னர் பிரார்த்தனை பாடலைப் பாடி பின்னர் உணவருந்தினோம். இன்று தயாரிக்கப்பட்ட இயற்கை உணவு விருந்து:
- முளை கட்டிய பயிறு.
- சுவையூட்டப்பட்ட வெண்டைக்காய்,
- பசுங்கலவை
- காய்கறிக் கூட்டு.
- இஞ்சி துவையல்
- எள்ளு சுவை சேர்த்த கார அவல்
- மல்லி சுவை சேர்த்த கார அவல்.
- மற்றுமொரு கார அவல்.
- தேங்காய், வெல்லம், முந்திரி, திராட்சை கலந்த இனிப்பு அவல் பாயசம்.
- பழங்கள்.
மதிய உணவு பலமாக இருந்தது. அனைவரும் வேண்டிய அளவுக்கு வாங்கி சாப்பிட்டார்கள். பின்னர் முருகன்ஜி, சுவாமிஜி, பரிமாறிய அன்பர்களை அமர வைத்து உணவு பரிமாறினோம்.
அனைவரும் உணவு அருந்திய பின்னர், சற்று நேரம் ஓய்வு எடுத்த பின்னர் மாலை நிகழ்வாக திருச்செந்தில் அடிகளின் சத்சங்கம் துவங்கியது. அடிகளார் காலையில் வரதமாநதி அணைக்கட்டில் பேசிய போது முன் வைத்த சில கேள்விகளுக்கு விடையாக நிறைய விவரங்களைக் கூறினார்.
பின்னர் அவர் எழுதிய பாடல்களை வாசித்துக் காட்டினார். அப்பாடல்களில் சிலவற்றை அடிகள் பாட நாங்கள் அவருடன் சேர்ந்திசைத்தோம். தொடர்ந்து 'நாத விந்து கலாதி நமோ நம' எனும் திருப்புகழை நான் பாட அடிகளார் உள்பட அனைவரும் சேர்ந்திசைத்தார்கள்.
வங்கக் கவி ரபீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியில் வரும் ஒரு பாடலான 'நின் திரு யாழில் என் இறைவா' என்ற தமிழாக்கப் பாடலை பாடினேன். கோவையைச் சேர்ந்த திருமதி.பரிமளாதேவி தனது இனிய குரலில் ஒரு பாடலைப் பாடி மகிழ்வித்தார். அவர் தொழில் முறை மேடைப் பாடகர் என்று அப்போது தான் தெரியவந்தது. எங்களோடு இருந்த நாட்களில் ஆரம்பத்தில் இருந்தே நிறையப் பாடல்கள் பாடி எங்களை அவர் மகிழ்வித்திருக்கலாம். ஏனோ தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவர் வாளா இருந்து விட்டார்.
இப்படியாக இன்றைய நாள் மிகவும் மகிழ்வுடன் கழிந்தது. மாலை ஐந்தரை ஆகிவிட்ட சூழலில் இனிமேல் நகர்ப்புறம் சென்று கோவில்களுக்கு சென்று திரும்புவது இயலாத என்ற யதார்த்த சூழலில் அனைவரும் முகாமிலேயே இருந்துவிடுவது என தீர்மானித்தார்கள்.
நான்காம் நாளான நாளை நிகழ்வாக குதிரையாறு அணைக்கட்டுக்கு செல்வது என தீர்மானிக்கப்பட்டது. எனவே முகாமை இன்றிரவே காலி செய்து விடுவது எனவும், இரவு ஹாஸ்டலில் தங்கி அதிகாலை புறப்பட்டு பழனி வந்து யோகாச்சாரியாவின் யோகா நிலையத்தில் தங்குவது எனவும், பின்னர் சுமார் எட்டுமணி அளவில் பழனி பஸ் நிலையத்தில் இருந்து குதிரையாறு அணைக்கட்டுக்கு செல்லும் பஸ்சில் அனைவரும் செல்வது என முடிவாயிற்று.
குதிரையாறு அணைக்கட்டுப் பகுதியில் அந்தப் பகுதி நண்பர்கள் மூலமாக இயற்கை உணவு உள்பட விரிவான ஏற்பாடுகளை செய்திருப்பதாக முருகன்ஜி அறிவித்தார்.
இன்று மாலை நேரத்து கடமையாக முகாமுக்குள் கடந்த ஞாயிறு அன்று இரவு நானும், பிரேமும், ரமேஷும், பன்னீர்செல்வம் ஐயாவும், கொண்டு வந்து சேர்த்த பொருட்களை அன்றிரவே ஒரு லாரியில் ஏற்றி பழனிக்கு திருப்பி அனுப்புவதாக ஏற்பாடு ஆயிற்று. பொருட்களைக் கொண்டு செல்ல லாரி இரவு எட்டு மணிக்கு முகாமுக்கு வரும்.
அதற்கு முன்னர் அனவைரும் இரவு உணவை முடித்து பாத்திரங்களை காலி செய்து தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் முடிவாகியது. இதன் அடிப்படையில் எல்லா அன்பர்களும் முகாமை காலி செய்ய அன்புடன் உடனிருந்து உதவி பெரிதும் உழைத்தார்கள்.
இரவு நேரத்து உணவை நாங்கள் அனைவரும் உட்கொண்ட பின்னர் அனைத்துப் பொருட்களும் பட்டியலில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு தோட்டம் பூட்டப்பட்டு சாவி பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. தோட்டப் பொறுப்பாளர் திரு.சுப்பையாவின் உதவிகளை எப்போதும் எங்களால் மறக்க இயலாது. இரவு சுமார் எட்டரை மணியளவில் நாங்கள் அனைவரும் தோட்டத்தில் இருந்து புறப்பட்டு ஹாஸ்டல் சென்றோம்.
ஹாஸ்டல் வார்டனிடம் நாங்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து புறப்பட வேண்டியதிருப்பதை அவருக்கு நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டோம். அதிகாலை ஆறுமணிக்கு பிரார்த்தனை மையத்தில் அனைவரும் கூடுவது என்று தீர்மானித்துக் கொண்டு இரவு ஒன்பது மணி அளவில் அனைவரும் உறங்க சென்றனர்.
ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த எங்களை இரவு ஒன்பதரை மணிக்கு பெங்களூரு அன்பர் இனியன் எழுப்பினார். அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் சென்னையில் சீரியஸ் நிலைமையில் இருப்பதால் உடனே குடும்பத்துடன் புறப்பட்டு சென்னை சென்றாக வேண்டிய நிலைமையில் இருந்தார். நகரை விட்டு காட்டுக்குள் இருப்பதால் எப்படி இவர்களை பஸ் நிலையத்துக்கு அனுப்புவது? யோகாச்சாரியா முருகன்ஜீக்கு செய்தி சொல்லப்பட்டு அவர் ஒரு வாடகைக் காரை எடுத்து கொண்டு வருவதாக கூறினார்.
கார் வரவுக்காக இனியன் குடும்பத்தினர் காத்திருந்த பொழுதில் நானும், நண்பர் நாகராஜனும் அவருக்கு பக்கத் துணையாக கார் வரும் வரை கீழே சென்று காத்திருந்தோம். திரு.இனியன் எனது வலைப்பூவில் வந்த செய்தியைப் பார்த்து விட்டு என்னுடன் மொபைலில் தொடர்பு கொண்டு பேசி இந்த முகாமுக்கு குடும்பத்துடன் வந்தவர். இதற்கு முன்னதாக அவருடன் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை.அவரது அன்புக் குடும்பத்தினர் முகாமின் ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்று மகிழ்ந்திருந்த வேளையில் அவசரஅவசரமாக புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது எங்களை மிகவும் வருந்தச் செய்தது.
நானும் நண்பர் நாகராஜனும், சில மணி நேரம் அவருடன் இருந்து ஆறுதல் சொல்லி கார் வந்த பின்னர் வழியனுப்பி விட்டு உறங்கச் சென்றோம். காரை ஏற்பாடு செய்து வந்த யோகா முருகன்ஜி அதே காரில் அவர்களுடன் திருச்சி வரை சென்று சென்னைக்கு அவர்களை பஸ் ஏற்றி விட்டு வருவதாகக் கூற, இனியன் குடும்பத்தினர் அன்புடன் முருகன்ஜியின் திருச்சி வருகையை மறுத்து விட்டு அவருக்கு நன்றி கூறி எங்கள் அனைவரிடமும் பிரியாவிடை பெற்று சென்றனர். கொடைக்கானல் பயணம் இரத்தாகியதில் வருந்திக் கொண்டிருந்த இவர்கள், நாளைக்கு குதிரையாறு அணைக்கட்டுக்கு செல்லலாம், பின்னர் மலையேறிச் சென்று அருவியில் குளித்து மகிழலாம் என்றெல்லாம் வண்ணக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்த அந்த இரு இளம்பெண்கள் விவரிக்க இயலாத ஒரு சோகத்துடன் விடை பெற்றது இன்னமும் எங்கள் கண்களில் நிழலாடுகிறது.
(பகிர்தல் தொடரும்)
வரவிருப்பது-நான்காம் நாள் நிகழ்வு-வியாழக்கிழமை(29-12-2011) நாள் முழுதும்- குதிரையாறு அணைக்கட்டு-மலை ஏறும் பயிற்சி-அருவியில் குளித்தல்-மலைக் கோவிலில் நிகழ்ந்த மாகேசுவர பூசை.