நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க..!

ஆரோக்கிய நலவாழ்வு புத்தகம் அறிமுகம்..

பிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க..!

நல வாழ்வியல் ஆர்வலர்களே! வணக்கம்.

உணவே மருந்து-மருந்தே உணவு என்னும் இயற்கை நலவாழ்வியல் தத்துவத்தில் உப்பின் பயன்பாடுகள் குறித்து நிறையவே எதிர்மறைக் கருத்துக்கள் நிலவுகின்றன. உப்பு தப்பு என்கிற சித்தாந்தமும் சர்க்கரை (வெள்ளைச் சீனி), உப்பு, பால் மூன்றுமே வெள்ளை நிறப் பாஷாணம் எனவும் ஆரோக்கியத்தை விரும்பும் ஆர்வலர்கள் மத்தியில் நலவாழ்வியல் அறிஞர்களால் நிறைய பேசப்படுகின்றன. அலோபதி மருத்துவத்திலும் சமையலில் சேர்க்கப்படும் உப்பு இரத்த அழுத்த வியாதியை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிபூர்வமாக கண்டறிந்திருக்கிறார்கள். நமது பாரதத்தின் பாரம்பரிய ஆயுர்வேத, சித்த மருத்துவ அறிஞர்கள் நமது தினசரி உணவில் உப்பினைத் தவிர்க்கவே சொல்கிறார்கள். 

இவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தும் நமது தினசரி வாழ்க்கை முறையில் உப்பின் பயன்பாடு சற்றும் குறைந்தபாடில்லை. மாறாக உப்பின் பயன்பாடு கூடிக் கொண்டே போகிறது. இதிலிருந்து கடல் உப்பின் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடையே இன்னமும் முழுமையாக சென்று சேரவில்லை என தெளிவாக தெரிகிறது. ஏனெனில் மருத்துவ உலகில் இரத்த அழுத்தம் விளைவான சவால்களை முன் எப்போதும் விட அதிகமாக தோன்றி இதன் துன்ப விளைவுகளை மனித குலம் சந்தித்து வருகிறது. 

உணவில் சேர்க்கப்படும் உப்பு எந்தவிதத்திலும் மனித குலத்துக்கு பயனுள்ளதாக அமையவில்லை என்பதினைப் பற்றிய ஆதார பூர்வமான அறிவியல் செய்திகளையும், தீர்வுகளையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்புத் தான் 'பிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க...என்ற இந்த புத்தகம்.

ஆசிரியர் பிரம்மஸ்ரீ கொ.எத்திராஜ் அவர்கள் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு, எந்த அளவுக்கு மனித குலத்துக்கு கடல் உப்பு ஆபத்தானது என்பதை விளக்கி இருக்கிறார். சுருங்கச் சுவைபடச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவரான இவர், சிறிய நூலான இந்த நாற்பது பக்கங்களில் சொல்லி இருக்கும் செய்திகள் மிகவும் பயனுள்ளவை.

ஏன் இந்த நூலை எழுத முன்வந்தார் என்பதற்கான காரணத்தை அவரது முன்னுரையின் துவக்கமே மிக வலிமையாக கூறுகிறது. 'கிரேக்க நாட்டில் கைதிகளை துன்பமின்றி கொல்வதற்கு திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. அதன் படி நாள்தோறும் சிறைக் கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவுகளில் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டது. நாளடைவில் கைதிகளின் இரத்த அழுத்தம் உயர்ந்து, குறுகிய காலத்தில், மாரடைப்பில் துன்பமின்றி இறந்து போயினர். இந்த அதிர்ச்சி தரும் செய்திதான் இச்சிறு நூல் உருவாகக் காரணமாக அமைந்தது.”

புத்தகத்தின் முன்னுரையின் ஆரம்ப வரிகளைப் படிக்கும் போது நாம் வெகுவாகவே அதிர்ந்து போகிறோம். மேலும் படிக்க ஆர்வத்தை தூண்டிடும் ஆரம்பம் இது.

மேலும் சிந்தனையைத் தூண்டும் சில செய்திகள் சுருக்கமாக இதோ:
  • பூமியின் மூன்று பங்கு நீராலும், ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டிருப்பது இயற்கையின் நியதி. இயற்கையின் முயற்சியில் கடலில் மட்டுமே உப்பு இருந்தது! மனித முயற்சியால் உலகம் முழுவதும் ‘உப்பு’ தனது ஆக்கிரமிப்பை உறுதி செய்தது. ‘உப்பின்றி அமையாது உலகு என்ற நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டது. விளைவு.... ‘எங்கெங்கு பார்க்கினும் பிரஷரடா!’ என்ற சூழல் உருவானது. இந்தச் சூழல் மனித இனத்தின் வாழ்வாதாரத்தையும், வாழ்வையும், நாளும் சுருக்கிக் கொண்டே வருகிறது.
  • உண்பது நாழிகை; உடுப்பது ஒரு முழம்! எண்பது கோடி எண்ணி எண்ணி மாய்கின்றாய் மனமே என்ற ஔவைப் பிராட்டியின் வாய்மொழிக்கு இணங்க கலியுக மனிதனும் எண்ணங்களால் சிந்தித்து சிந்தித்து மாய்கிறான்.

புத்தக முழுதும் விரவிக் கிடக்கும் செய்திகளில் இருந்து சிலவற்றை காணலாம்:
  • மூளையில் படியும் நச்சே சிந்தனைகளை சீர்குலைக்கின்றது. கடல் உப்பு மனித மூலையில் நச்சுப் படிவத்தை உண்டாக்குகிறது.
  • மனித சமுதாயத்தின் மங்கலகரமான பொருட்களில் கல் உப்பும் ஒன்றாக இருந்தாலும், அது மனிதனுக்கு தரும் கேடுகள் எண்ணிலடங்கா !.
  • ஓடை நீர் ஆற்றில் சேரும்; ஆற்று நீர் நதியில் சேரும்; நதி நீர் இறுதியில் சமுத்திரத்தை சென்று சேரும். கடல் நீரில் பல்வேறு இரசாயனங்கள் கலந்து இருப்பினும், அளவிற்கு அதிகமாக சோடியம் க்ளோரைடு கலந்திருப்பதால் கடல் நீர் கன நீராக மாற்றி விடுகிறது. 
  • மனித உடலும் எண்பது சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுதான் இருக்கின்றது. இரத்தத்தில் கூட மூன்று பாகம் தண்ணீர்தான் இருக்கின்றது. தினசரி உணவில் உப்பினை சேர்த்து உண்டு வருவதால், மனித உடலில் ஜீரணிக்க முடியாத இந்த உப்புக் கழிவுகள் இறுதியாக இரத்தத்தில் சென்று சேருகின்றன.
  • இவ்வாறு தினசரி இரத்தத்திலும், நீர்ச்சத்திலும் உப்புக் கழிவுகள் சேரச் சேர நாளடைவில் இரத்தம் கடினத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடுகிறது. கடல் நீர் எவ்வாறு மானிட பயன்பாட்டுக்கு உதவிகரமாக அமைவதில்லையோ, அதுபோலவே நாளடைவில் உப்புக் கழிவுகள் அதிகம் கொண்ட மனித இரத்தத்தினையும் ஒரு கால கட்டத்தில் மனித உடலால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகிறது.
  • உப்பிருந்த மண்பாண்டம் அரித்துப் போகும்; உப்புக் காற்றுப்பட்டால் நாளடைவில் கல்லும், இரும்பும் கூட வலுவிழந்து இற்றுப் போகும். அதே போல உப்புக் கழிவுகள் கொண்ட இரத்தமானது நரம்பு மண்டலம், மூளை, எலும்புகள், இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புக்களுக்கு செல்லும் போது அப்பகுதிகளில் நாளடைவில் அரிமானம் ஏற்பட்டு உடல் நலம் குன்றுகிறது. 

பத்து அத்தியாயங்களில் இது போன்ற அறிவியல் பூர்வமான செய்திகளை தொகுத்திருக்கிறார் ஆசிரியர். உப்பைத் தவிர்த்த உணவுகள் தரும் நன்மைகளை பட்டியலிடும் ஆசிரியர் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் முயன்றால் நாளடைவில் உப்புச் சுவை அடிமைத்தனத்தில் முழுமையாக இருந்து விடுபடலாம் என்கிறார்.

சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் சுவைபட சொல்வதில் வல்லவரான ஆசிரியர் ஒரு புத்தகத்தின் நிறைவுப் பகுதியில் ஒரு உரையாடலை உலவ விட்டிருக்கிறார். சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் அந்த உரையாடலில் வெள்ளை உப்பும், பாலும்,வெள்ளைச் சர்க்கரையும் சமயலறையில் உரையாடுகின்றன.

உப்பு: ஏண்ணே! பால் அண்ணே! இந்த மனுஷப் பயலுவ ரொம்ப காலமாகவே ரொம்ப ரொம்ப நல்லவங்களாகவே இருக்கிறதைப் பார்த்தா எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கு.!

பால்: உப்பண்ணே! எதை வச்சு அப்படிச் சொல்றீங்க?

உப்பு: நம்மளால முடிஞ்ச அளவுக்கு இவங்களுக்கு கெடுதல் பண்ணுனாலும், இவனுக இன்னமும் நம்மள ‘ரொம்ப நல்லவங்கன்னு” நம்புறாங்கள்ல! அதை வச்சுத்தான் சொல்றேன்.

சீனி (வெள்ளைச் சர்க்கரை): ரொம்பச் சரியா சொன்னேங்க உப்பண்ணே! நம்ம இங்கே இருக்கிற வரைக்கும் வேறு யாரையும் கெடுதல் பண்ண விட்டுடுவோமா? என்று வெள்ளைச் சீனியும் ஆமோதித்து குரல் கொடுக்கும் நேரத்தில் சமையலறைக்குள் யாரோ வரும் சப்தம் கேட்டு உரையாடல் முடிவுக்கு வருகிறது.

சிந்தையைத் தூதும் உரையாடல் இது. நிறைவாக ஆசிரியர் சொல்கிறார்: “உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி அறிவானது உணர்த்தினாலும், மனமானது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று விடுகிறது. இதனைத்தான் சமூகத்தில் பல பெரிய மனிதர்கள் “அறிவுக்குத் தெரியுது சார்! மனசுக்கு தெரிய மாட்டேங்குது சார்!” என்று கௌரவமாக சொல்லி விடுகிறார்கள். இது மனித குலத்தின் நலவாழ்வின் மீது ஆசிரியர் கொண்டுள்ள ஆதங்கத்தையும், அக்கறையையும் காட்டுகிறது. 

பொறியியல் பட்டதாரியான ஆசிரியர் வடகரை சிவானந்தரின் சித்த வித்தையை முறையாகப் பயின்றவர். ஒரு துறவியை போல இளம் வயதிலேயே பணியில் இருந்து வெளியேறி தவமையம் அமைத்து ஆன்மீக, சமூக வளர்ச்சிக்காக தமது வாழ்நாளை செலவிட்டு வருகிறார். எனவே தகுதி உடைய இவர் சொல்லும் கருத்துக்களுக்கு வலு இருக்கிறது என்பதை புத்தகத்தினைப் படித்து முடித்ததும் நம்மால் உணர முடிகிறது.. 

உங்கள் நலவாழ்வில் அக்கறை காட்டும், உங்கள் வாழ்வில் ஒரு ஆரோக்கிய விடியல் பிறக்க வழிகளை சொல்லும் இந்தப் புத்தகம் எல்லோரும் படித்துப் பின்பற்றிப் பயனடைய வேண்டிய ஒன்று. உங்கள் நலவிரும்பிகளுக்கு பரிசாகவும் தரலாம்.

புத்தகத்துக்கு நீங்கள் விலையாகத் தரும் பணம் ஆசிரியரின் பல்வேறு ஆன்மீகப் பணிகளுக்கும், தவமைய வளர்ச்சிக்கும் பயன்படுவதினால் புத்தகத்தினை வாங்கிய உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கியமும், ஆத்ம திருப்தியும் பலமடங்காக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இயற்கை நல வாழ்வியலை பின்பற்ற விரும்பும் அன்பர்களுக்கு தேவையான பல செய்திகளை உள்ளடக்கிய அருமையான தொகுப்பு. 

இந்த நூல், மூர்த்தி சிறிதாகினும், கீர்த்தி பெரிது என்பார்கள் பெரியோர். அது இந்தப் புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கும் போது உணரலாம்.

புத்தகம் பற்றிய விவரங்கள்.

புத்தகத்தின் தலைப்பு: பிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க..!

ஆசிரியர்: பிரம்மஸ்ரீ கொ.எத்திராஜ்

நூல் வெளியிடுவோர்: 
பிரம்ம வித்தை தவ மையம்,
சித்த வித்தியார்த்தி பவுண்டேஷன்,
சித்தர் வழிச் சாலை, சிவானந்தகிரி,
மல்லையாபுரம்-624707
ஆத்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

நாற்பது பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.40 மட்டுமே (இந்த பணம் தவமைய வளர்ச்சிக்கு பயன்படுத்தவே)

ஒரு வேண்டுகோள்: புத்தகம் தேவைப்படுவோர் ஆசிரியரின் முகவரிக்கு எழுதி பெற்றுக் கொள்ளலாம். பத்து பேர் சேர்ந்து ஒரே வி.பி.பி. ஆர்டரில் புத்தகத்தை வரவழைத்து உங்களுக்குத் தேவையான எண்ணிக்கையை பெற்றுக் கொள்வதே சிறந்த வழி.


வாழி நலம் சூழ...

சனி, 12 பிப்ரவரி, 2011

6. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் 
முனைவர் பொற்கோவின் ''நல்ல உடல் நல்ல மனம்''
(டாக்டர் பொற்கோ சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தராக  இருந்தவர்)


முனைவர் பொற்கோ

1982-ல் வெளியான டாக்டர் பொற்கோவின் ''நல்ல உடல், நல்ல மனம்'' என்னும் இந்த அரிய நூலின் மதிப்புரையில் முனைவர் ந.சஞ்சீவி, (அந்நாளைய சென்னைப் பல்கலைக் கழக தமிழ் துறை தலைமை பேராசிரியர்) இவ்வாறு கூறுகிறார்:
"எண்வகை யோக நிலைகளையும், எண்வகைச் சித்திகளையும் டாக்டர் பொற்கோ அறிவோடும் அனுபவத்தோடும் குழந்தைகளுக்கும் புரியும் வகையில்-முதியவர்களும் குழந்தைகளாகிப் புரிந்து கொள்ளும் வகையில் - விளக்கியிருத்தல் வியப்பும் விம்மிதமும் தருகிறது. படிப்படியாக (Step-by-Step) பதஞ்சலியும் பாராட்டும் வகையில் யோக வாழ்வுக்கு ஒரு பால பாடத்தையே டாக்டர் பொற்கோ அவர்கள் அமைத்திருத்தல் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் குழந்தைகளுக்கும் பெரிய யோகம்தான் ! ஆசிரியரின் பண்பட்ட பகுத்தறிவும், முதிர்ந்த மொழியியல் அறிவும் தகவு சான்ற தனித் தமிழ் உணர்வும் நூலின் பல்வேறு இடங்களிலும் பளிச்சிடுகின்றன." 
இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திரு அ. மெய்யப்பன் (இவர் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் சென்னையில் வாழும் இவர் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் ஆசிரியர்/பயிற்சியாளராக சேவை புரிந்து வருகிறார். இயற்கை நலவாழ்வியல் முகாம்களை நடத்துவதில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்) எழுதுகிறார்:-
"இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயின்று வந்த பயிற்சியையும், பல்வேறு நூல்களை ஆய்ந்து பெற்ற அறிவையும் சாறாகப் பிழிந்து தமிழ் மக்கள் பயன் அடைய வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு அறிஞர் பொற்கோ அவர்கள் கோதமன் என்ற புனைபெயரில் கட்டுரையாக தொடர்ந்து விளையாட்டுக் களஞ்சியம் என்ற மாத இதழில் 'நல்ல உடல் நல்ல மனம்' என்ற தலைப்பில் எழுதி வந்தார்கள். அந்தக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றால் மேலும் பொதுமக்களுக்குப் பயன் தரும் என்பதால் நூல் வடிவம் தந்துள்ளார்கள்....
யோகாசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், அட்டமா சித்திகள் என்னும் மன ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சி என்பன போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கிய யோகக் கலை என்ற அருங்கலை பற்றித் தமிழ் தெரிந்த அனைவரும் படித்துப் புரிந்து கொண்டு பயிற்சி செய்து பயன் பெறத்தக்க வகையில் இந்நூல் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும், சுவை பொருந்தியதாகவும் அமைந்துள்ளது.....  மனத்தை செம்மைப் படுத்தவும், உயர் நிலைக்கு மனத்தைக் கொண்டு செல்லவும், நிம்மதி பெறவும், மனதை நடு நிலையில் வைத்துக் கொள்ளவும், உள்ளொளியில் ஒன்றவும், உள்ளொளியில் ஒன்றியவர்கள் தொடர்ந்து இன்பமயம் என்னும் பேற்றைப் பெறவும் உதவுகின்ற வகையில் அறிஞர் பொற்கோ அவர்கள் உருவாக்கி உலகுக்குத் தந்துள்ள 32 இன்பமயப் பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன." 
"நவில் தோறும் நூல் நயம் போலும்" என்ற மாதிரி, அட்டாங்க யோகம், அட்டமா சித்திகளைப் பற்றி நூலாசிரியர் எளிமையான தமிழில் ஆர்வத்துடன் படிப்பவர் எவரும் புரிந்து கொள்கிற வகையில் விளக்கி இருக்கும் பாங்கு போற்றி வணங்கத்தக்கது.  சான்றாக நூல் ஆசிரியர் அட்டாங்க யோகம் என்னும் எட்டுப் படிநிலைகளை தெளிவான தமிழில் விளக்குகிறார். எண்பதுகளில் நான் யோகம் தியானம், அட்டமாசித்தி பற்றி அறிந்து கொள்ள முயன்று அப்போது கிடைத்த புத்தகங்களில், வடமொழி/தமிழ் மொழிக் கலப்புடன் (மணிப்ரவாள நடையில்) எழுதப் பெற்ற விளக்கங்கள் எனக்கு குழப்பத்தையே தந்தன. யோகம், தியானம் பற்றிய சரியான புரிதல் தோன்ற தடைகள் இருந்தன. ஆனால் இந்த விளக்கங்களைப் படித்த பின்னர்தான் எனக்கு தெளிவு ஏற்பட்டது.  நான் தெளிவு பெற உதவிய அந்த விளக்கங்களை இங்கே காண்போம்.
  1. இயமம் : தக்கனவும் தகாதனவும் (சமூக ஒழுக்கங்கள்)
  2. நியமம் : சரியும் தவறும் (தனி மனித ஒழுக்கங்கள்)
  3. ஆசனம்: ஆதனம் (ஒரு அருமருந்து.)
  4. பிராணாயாமம்: மூச்சு நடை (மூச்சாற்றலை ஒழுங்கு படுத்துதல்)
  5. பிரத்தியாகாரம் : விழிப்பு நிலை (மன ஆற்றலை சிதற விடாமல் ஒரு இலக்கில் திரட்டுவது).
  6. தாரணை : திரட்டிய ஆற்றலை ஒரு இலக்கில் செலுத்துவது.
  7. தியானம் : மன ஆற்றலை அந்த இலக்கிலேயே நிலை நிறுத்துவது.
  8. சமாதி : நிலை கொண்ட மனத்தின் அமைதி அனுபவம்-(பேரின்பநிலை )
இந்த விளக்கங்களை படித்த பின்னர்தான்,  நமது உடல், மன இயக்கங்களை ஆளும் கலையை படித்து உண்மைநிலைதெளிதல் என்பதையே முன்னோர்கள் சச்சிதானந்தம் (சத்து-உண்மை, சித்து-அறிவு, ஆனந்தம்-பேரின்பநிலை) என்று கூறி உள்ளார்கள் என்பதை,  உண்மை அறிவே இன்பமயம் என்பதை நான் புரிந்து கொண்டேன்.  இது போன்றே அட்டமாசித்திகளைப் பற்றி குழந்தைகளும் கூட மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் முனைவர் பொற்கோ ஐயா அவர்கள் விளக்கி எழுதி உள்ளார்கள். 

இந் நூல் பற்றிய விவரம்: 
  • நூலின் தலைப்பு:  நல்ல உடல், நல்ல மனம்.
  • பக்கங்கள்: 150
  • வெளியீடு: பூம்பொழில் வெளியீடு, 16, 6-வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை - 20
  • விலை ரூ.30
  • இந்நூல் கிடைக்கும் இடங்கள்: 
  1. பாரி நிலையம், பிராட்வே, சென்னை 108
  2.  தமிழ் நூலகம், ஆழ்வார்பேட், சென்னை 18
  3.  ஐந்திணைப் பதிப்பகம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5
எனக்கு இந்நூல் அறிமுகமான விதம்: 
நான் 1992இல்  ஆடுதுறை இயற்கை மருத்துவ முகாமில் முதல் முறையாக பயிற்சி பெற்ற போது இந்நூலை திரு மெய்யப்பன் ஐயா அவர்கள் எனக்கு அன்புப் பரிசாக கையொப்பம் இட்டு வாழ்த்திப் பரிசளித்தார்கள். கடந்த திசம்பரில் (2010), முனைவர் பொற்கோ அவர்களை எனது யோகா ஆசான் திரு.தி.ஆ.கிருஷ்ணனின் இல்லத்தில் சந்தித்து அவரிடம் அறிமுகமும், ஆசியும் பெற்ற போது மிகவும் மகிழ்ந்தேன். இந்நூலைப் பற்றி வலைப்பூவில் எழுதலாமா? என்று கேட்டபோது அன்புடன் மகிழ்ந்து வாய்மொழியாகவே அனுமதி தந்து ஆசியும் தந்த பெரியவர், கற்றுணர்ந்த முனைவர் பொற்கோ அவர்கள் எனக்கு நல்ஆசியும் தந்தார்கள்.  பாடல்களை எல்லோரும் படித்து பயன் பெறத் தக்க வகையில் வெளியிட எனக்கு அனுமதி அளித்த முனைவர் ஐயா அவர்களுக்கும், இயற்கை நலவாழ்வியல் துறையில் தக்க அறிவும், பயிற்சியும் பெற்றிட எனக்கு எல்லா வகையிலும் ஊக்கமும், நல்லாதரவும் அளித்து வரும், திரு. மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும் எனது இதய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 


வாழி நலம் சூழ.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

5. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் 
சுவாமி சிவானந்தர் அருளிய 'இயற்கை மருத்துவம்'


இயற்கை நலவாழ்வியல் அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த வலைப்பூவில் பதிவிடுவதில் நீண்ட இடைவெளி நேர்ந்து விட்டது. காக்க வைத்தமைக்கு மன்னியுங்கள். இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக தமிழில் நிறைய நூல்கள் உள்ளன. 


அவற்றை எல்லாம் கண்டெடுத்து உங்களிடையே ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திட பெரிதும் முனைந்து கொண்டிருக்கிறேன். நிறையப் புத்தகங்களை சேகரித்து விட்டேன். அவற்றைப் படித்து ஒவ்வொன்றாக அறிமுகம் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.


அந்த வரிசையில், ஐந்தாவது புத்தகமாக நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கும் புத்தகம், இமயஜோதி ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் அருளிய ''இயற்கை மருத்துவம்'' (Practice of Nature Cure) என்கிற அரியதொரு நூல். 


இந்த புத்தகத்தை கடந்த மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான  பொக்கிஷம் இந்நூல். 

இந்நூல் துவக்கத்தில் படிப்போரை கவரும் வரிகள்:
ஓம் சத்குரு பரமாத்மனே நம:
ஓம்.

எங்கும் நிறைந்துள்ள சிகிச்சை தரும் சக்திக்கு,
நம்மை பாதுகாக்கும் இயற்கை அன்னைக்கு,
இயற்கை மருத்துவத்தை ஊக்குவிப்போர்,
பின்பற்றுவோர் அனைவருக்கும்,
அதுபோலவே
பெரும் அளவில் மனித சமுதாயத்தின்
அனைவரும் உடல் நலமும், நீண்ட ஆயுளும்,
அமைதியும், மகிழ்ச்சியும் பெறுமாறு
இந்நூல் அன்புக் காணிக்கை.
ஓம்.

மேலும் சுவாமி சிவானந்தர் கூறுகிறார்: 

ஓம்.

8, செப்டம்பர் 1951

அமிழ்தத்தின் செல்வா,

உடல் நலமே பெருஞ் செல்வம்.

உன் வாழ்வின் உண்மையான அடித்தளம் உடல் நலமே. 

வலிமை வாய்ந்த உடம்பை வளர்த்துக் கொள்.

இயற்கையுடன் இணக்கம் கொள்.

உடல் நலம் பற்றிய, உடல் நல நூல்களைப் பற்றிய விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பாயாக.

அழியாத பேரின்பத்தை அனுபவிப்பாயாக.

உடல் நலம், அமைதி, நீண்ட ஆயுள், கைவல்யம் ஆகியவற்றை ஆண்டவன் உன் மீது பொழிவாராக.
- சுவாமி சிவானந்தா.

இந்த நூல் 33 அத்தியாயங்களையும், பின் இணைப்பாக இயற்கை மருத்துவக் கொள்கைகள் (ஒரு மீள் பார்வை) பற்றிய ரத்தினச் சுருக்கமான ஒரு கட்டுரையையும் கொண்டது.

இந்நூலை அருளிய சுவாமி சிவானந்தர் ஒரு மருத்துவர் என்பது இப்புத்தகத்திற்கு மேலும் வலிவையும், பொலிவையும், அதிகாரத்தையும் கூட்டுகிறது. ஆன்மீகமும், உடல் நலமும் இணைந்த பேரருளாளர் அல்லவா சுவாமி சிவானந்தர் ?

இந்நூலில் ஒவ்வொரு பக்கமும் அனுபவித்து படிக்க வேண்டிய செய்திகள் நிறைந்திருக்கிறது.

ஆசிரியரின் முகவுரைப் பகுதியில் இருந்து முக்கியமான சாரம்சத்தை மட்டும் இங்கே அன்பர்களின் பார்வைக்கு இடுகிறேன். 

ஒரே ஒரு நோய் தான் உண்டு.

அதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு.

அதற்கு ஒரே ஒரு சிகிச்சை தான் உண்டு.

அந்த ஒரு நோய்:-
தவறான முறையில் வாழ்வதாகும்.

அந்த ஒரு காரணம்:- 
நீரில் உருவாகும் பொருள்களும், நோயை உண்டாக்கும் மலங்களும், உடம்பில் தேங்குவதாகும்.

அந்த ஒரு சிகிச்சை:-
உண்ணா நோன்பு, எனிமா ஆகியவற்றால் அழுக்குகளையும், மலங்களையும் வெளியேற்றல், விவேகமான உணவுத் திட்டம், நீர், கதி ரொளி,காற்று ஆகியவற்றால் குணம் பெறல் முதலியனவாகும்.

இயற்கை மருத்துவம் எப்போதும் இயற்கையான சிகிச்சை முறைகளையே பின்பற்றுகிறது. நீராடல், வெயில், ஓய்வு, பயிற்சி, எனிமா, பட்டினின், தூய காற்று, நீவி விடல் (மசாஜ்), கவனம் மிகுந்த விவேகத்துடன் கூடிய சரியான உணவு முதலிய இயற்கையான செயல்களின் உதவியையே அது பெறுகிறது. மருந்துகளை அது ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை.

வேதங்கள் அல்லது இமய மலை போல இயற்கை மருத்துவ முறையும் மிகவும் தொன்மை வாய்ந்தது. உடல் நலம் பேணவும், சிகிச்சை செய்யவும் (தற்போது) உள்ள முறைகள் எல்லாவற்றைக் காட்டிலும் அதுவே மிகவும் தொன்மை வாய்ந்தது. கிறித்துவுக்கு நான்கு நூற்றாண்டுகட்கு முன்பு (460-377 BC) வாழ்ந்த ஹிப்போ க்ரேடஸ் (Hipocrates)என்பார் இயற்கை மருத்துவ முறையின் உறுதி மிக்க ஆதரவாளராக இருந்தார். கதிரொளி, தூய காற்று, தண்ணீர், பயிற்சி, ஓய்வு, சரியான உணவு, நீராடல், நீவுதல் முதலிய இயற்கை நலவாழ்வியல் சிகிச்சை முறைகளை பயன்படுத்தி, மனித குலத்துக்கு நிகரற்ற பயன்களையும், அழியாப் புகழையும் பெற்றார். அவர் இயற்கை மருத்துவ முறையின் தந்தை ஆவார். (இப்போது கூட மருத்துவப் படிப்பினைத் துவங்கும் முன்னர் மருத்துவ மாணவர்கள் ஹிபோக்ரேடஸ் உறுதி மொழி (Hypocrates Oath) என்ற ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வதை ஒரு மரபாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளுக்கும் இப்போதைய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கும், மருந்துகளுக்கும் இடைவெளி மிகவும் நீண்டு விட்டது என்பதுதான் சோகம்!)

இயற்கை மருத்துவ முறை ஒரு சாதாரண மனிதரை, டாக்டரிடம் சென்று, காத்திருக்கும் அறையில் கடினமும், கவலை மிகுந்த பல மணி நேரங்களைக் கழிப்பதில் இருந்தும், டாக்டருடைய மனிதாபிமானமற்ற கட்டணங்களில் இருந்தும் விடுவிக்கிறது.

இயற்கை மருத்துவம் மிகவும் மலிவானது; அதே நேரத்தில் சிகிச்சை முறைகளில் மிகவும் சிறந்ததும், பாதுகாப்பு மிகுந்ததும் ஆகும்.

இயற்கைக்கு திரும்புக. 
ஊசி, மருந்து வில்லைகள், திரவ மருந்து ஆகியவற்றிகாக காலத்தையும், சக்தியையும், பணத்தையும் வீணாக்க வேண்டாம். 


இயற்கையின் விதிகள் மிகவும் சுலபமானவை. இயற்கை அன்னையிடம் (இயற்கை) மருந்துகள் ஏராளமாக இருக்கின்றன; அவற்றை உட்கொள்வதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவளுக்கு (டாக்டர் ஃ பீஸ்) கட்டணம் எதுவும் தரவேண்டியதில்லை. 


எளிமையான, இயற்கையான வாழ்க்கையை நடத்துக. உடல் நலம் பற்றிய விதிகளையும் பின்பற்றுக. தூய்மையை பேண வேண்டும். தெய்வீகத் தன்மைக்கு அடுத்தபடியாக இருப்பது தூய்மையே. நோய்கள் அணுகாத நிலையைப் பெறுவதுடன், நீங்கள் உயர்ந்த தரம் மிகுந்த உடல் நலத்தையும், வலிமையையும், நீண்ட ஆயுளையும் அனுபவித்து மகிழ்வீர்கள். 

எல்லா நோய்களையும் குணப்படுத்துவது இயற்கைதான் (Doctor treats; Nature cures).ஒரு டாக்டர் தம்முடைய விவேகமற்ற சிகிச்சையினால் ஒரு நோயாளியைக் கொன்று விடக்கூடும்; அல்லது நோயின் உக்கிரத்தை அதிகரித்து விடக்கூடும்.

விவேகமான முறையில் மருந்துகளை பயன்படுத்துவது தான் இயற்கைக்கு உதவியாக இருக்கிறது. உடல் நலத்துடன் இருக்கும் போதும், நோயுற்று இருக்கும்போதும், உயிரின் செயல்களுக்கு தெய்வீக சக்தி ஆதரவாக இருக்கிறது. 

மிகையான உணவாலும், தவறான உணவாலும், விவேகமற்ற உணவாலும், குற்றங்கள் உள்ள உணவாலும், உடம்பில் அழுக்குகளும், மலங்களும் தேங்கி விடுகின்றன. உடம்பில் இருந்து இந்த அழுக்குகளும், மலங்களும் வெளியேற்றப்பட்டால் எல்லா நோய்களும் குணமாகி நிறைவான உடல் நலத்தை மனிதன் அனுபவிக்க முடிகிறது. இதுவே இயற்கை மருத்துவத்தின் நிறைவான கொள்கை.

கதிரொளி சிகிச்சை, நீர் சிகிச்சை, காற்றின் சிகிச்சை, உணவின் சிகிச்சை, பட்டினி கிடத்தல் இவை எல்லாவற்றின் ஒரே நோக்கம் உடம்பில் இருந்து அழுக்குகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி நிறைவான உடல் நலம், வலிமை, சக்தி ஆகியவற்றை நிச்சயப்படுத்துவதே ஆகும்.

இப்புத்தகத்தில் சுவாமி சிவானந்தர் ஒவ்வொரு நோயையும் எவ்வாறு இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என்று விரிவாக அலசியிருக்கிறார். இப் புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், சொல்லும் படித்து, பின்பற்றி அனுபவிக்க வேண்டியவை. அன்பர்கள் இப்புத்தகத்தை சொந்தமாக்கி பயன்படுத்தி நலவாழ்வு வாழலாம். 


அதேபோல, இந்நூலில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி நலவாழ்வு பெற்ற அன்பர்கள், தமது நண்பர்கள், உறவினருக்கு பரிசாக அளித்து அவர்கள் வாழ்விலும் இயற்கை ஒளியை ஏற்றலாம்.

நவில் தோறும் நூல் நயம் போலும், படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் இந்த நூல் பற்றிய விவரங்கள்...

புத்தகத்தின் பெயர்: 'இயற்கை மருத்துவம்'' (Practice of Nature Cure)

ஆசிரியர்: இமய ஜோதி ஸ்ரீ ஸ்வாமி சிவானந்தா (தமிழாக்கம்: திரு.டாக்டர் ப.உருத்திரமணி, M.A., Ph.D.,

பக்கங்கள்: 526 (Hard Bound Edition). எட்டாவது பதிப்பு -2007 

பண்பாளர்கள் நால்வர் கொடுத்த பெறும் பண உதவிகளால் வெளியாகி இருக்கும் விலை மதிப்பற்ற இந்த நூலின் விலை: ரூபாய் நூறு மட்டுமே. (டாக்டருக்கு மீண்டும் மீண்டும் நாம் கொடுக்கும் ஆலோசனை கட்டணத்தை விட இந்நூலின் விலை பல மடங்கு குறைவு என்பதை கவனியுங்கள். இந்த முதலீடு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், டாக்டர்கள் மற்றும் நச்சுக்கள் நிறைந்த செயற்கை மருந்துகளில் இருந்தும் காக்க வல்ல சக்தி கொண்டது)

வெளியிடுவோர்: தெய்வீக வாழ்க்கை சங்கம், சிவானந்தா ஆஸ்ரமம், சுவாமி சிவானந்தா சாலை, இராசிபுரம்-637408, நாமக்கல் மாவட்டம், தமிழ் நாடு.

உங்கள் பொன்னான நேரத்தை இந்தப் பதிவினை படிக்க செலவிட்டமைக்கு என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். 

வாழி நலம் சூழ. 

-- 
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
ஆன்ம நலம் பெற : www.vedantavaihavam.blogspot.com

திங்கள், 10 ஜனவரி, 2011

2. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்

ஒரு நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நமது வாழி நலம் சூழ.. வலைப் பூவில் திருமதி ரதி லோகநாதன் அவர்கள் எழுதி வந்த ஆரோக்கியம், ஆனந்தம் என்கிற இயற்கை நலவாழ்வியல் தொடர் ''ஆரோக்கியமே ஆனந்தம்'' என்ற தலைப்பில் ஒரு அருமையான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. எழுபத்தைந்து பக்கங்களில் இயற்கை நலவாழ்வு பற்றிய சுவையான செய்திகளை ஆசிரியர் வெளியிட்டிருக்கிறார்.  நமது வலைப்பூவில் வெளியிட்ட அவரது முதல் கட்டுரையான ''உலகை மாற்ற உணவை மாற்று'' என்னும் கட்டுரையும் இந்தப் புத்தகத்தில் இணைக்கப் பட்டுள்ளது. 

அச்சுகூலி, மற்றும் காகிதம் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ள இந்தக் கால கட்டத்தில் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், இந்த நல்லதொரு புத்தகத்தின் விலை ரூபாய் இருபது என்று நிர்ணயித்துள்ளதுதான். இந்தத் தொகையைக் கூட மீண்டும் இந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளியிடத்தான் உங்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறேன் என்று ஆசிரியர் தன் முகவுரையில் கூறி இருக்கிறார். சேவை சிந்தனை கொண்ட சகோதரி திருமதி ரதி லோகநாதன் அவர்களை பாராட்டியே தீரவேண்டும். எல்லா வகைகளிலும் அவருக்கு உறுதுணையாக விளங்கும் அன்பர் திரு லோகநாதனுக்கு எனது வாழ்த்துக்கள். அவரது குடும்பம் நலம் சூழ வாழிய என்று வாழ்த்துவோம்.

புத்தகம் வேண்டும் என்று விரும்புபவர்கள் நூல் ஆசிரியர் திருமதி ரதி லோகநாதன் அவர்களை lram12062000@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

அஞ்சலில் தொடர்பு கொள்ள, அவரது இல்ல முகவரி:

திரு. அ.லோகநாதன், 
24, ஆர்.வி. லே அவுட், 
ஒண்டிப்புதூர், 
கோயம்புத்தூர் - Pin: 641016, 
தமிழ்நாடு (இந்தியா).

இன்றைய கால கட்டத்தில் எல்லா தரப்பு மக்களையும் இந்த இயற்கை நலவாழ்வுச் செய்தி போய் சேர வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட அன்பர்கள் இந்த நூலை வாங்கி பரிசளிக்கலாம். மொத்தமாக வாங்கியும் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி.