வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு... பகுதி 5

பகுதி 5

பயனுள்ளவைகளாகக் கருதப்படும் உணவு வகைகள் எல்லாம் ஆல்காலிக் எனப்படும் காரத்தன்மை கொண்டவை. அதே சமயத்தில் நம் உடம்பை சுத்தப்படுத்தி நம்முடைய எடையை குறைக்கும் தன்மை கொண்டவை. பயனற்ற உணவுகளாக கருதப்படுபவை எல்லாம் அமிலத்தன்மை கொண்டிருப்பவை. அதே சமயத்தில் நம்முடம்பில் வேண்டாத கழிவுகள் சேகரமாவதற்கும் எடை கூடுவதற்கும் காரணமாக இருப்பவை. நம்முடைய உடம்பின் செல்களுக்குள் சேகரமாகும் அமிலக் கழிவுகள் நம்முடைய செல்களின் சுவர்களை இறுக வைக்கின்றது. இப்படி இறுகிப் போவதால் செல்களால் ஊட்டச் சத்துக்களை ரத்த ஓட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாமல் போகின்றது. இதனால் நம் உடம்பின் செல்கள் ஊட்டமின்றி பட்டினி கிடக்க நேரிடுகின்றது. இப்படி அமிலக் கழிவுகள் செல்களுக்குள் அதிகமாகச் சேர்வதால் நம்முடைய ஈரல், சிறுநீரகம் போன்றவைகள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கின்றது.

பெரும்பாலானவர்கள் 80% அமிலத்தன்மை கொண்ட உணவுகளையும், 20% தான் காரத்தன்மைக் கொண்ட உணவுகளையும் சாப்பிடுகின்றார்கள். இதன் விளைவாக நம் உடம்பின் செயல்படும் திறன் நாளடைவில் குறைந்து கொண்டே போகின்றது. இந்த விகிதங்களை மாற்றி காரத்தன்மை கொண்ட உணவுகளை 80%ஆகவும், அமிலத் தன்மை கொண்ட உணவை 20%ஆகவும் நாம் மாற்ற வேண்டும். மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதை குறைக்கும் பொழுது அமில உணவுகளை உட்கொள்ளுவது குறைகின்றது. பச்சை காய்கறிகளை நிறைய உண்ணும் பொழுது காரத்தன்மை கொண்ட உணவுகள் நம் உடம்பில் அதிகம் சேருகின்றது.

நார்ச்சத்து: நார்ச்சத்து ஒரு பிரதான ஊட்டச்சத்தாகக் கருதப்படவில்லை. என்றாலும், 7முக்கியமான ஊட்டச்சத்துக்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும் குளுக்கோஸ் லெவலை குறைப்பதற்கு நார்ச்சத்து மிகவும் உதவுகின்றது.

நார்ச்சத்து கரைவது, கரையாதது என்று இரு வகைப்படும்.

கரைகின்ற நார்ச்சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஏனென்றால் நம் உடம்பில் நிகழும் செரிமானத்தை அது நிதானப்படுத்துகின்றது. செரிமானம் நிதானப்படுவதால் சர்க்கரை நம் ரத்த ஓட்டத்தில் கலப்பதும் சீராக இருக்கின்றது. நம்முடைய சிறு குடலில் சேருகின்ற கெமிக்கல்களை இந்த நார்ச்சத்துக்கள் உறிஞ்சிக் கொள்வதால் இந்த கெமிக்கல்களிலிருந்து கொலஸ்ட்ரால் தயாரிக்கப்படுவது குறைகின்றது. கரைகின்ற நார்ச்சத்து வயிறு நிரம்பிவிட்ட உணர்வைக் கொடுப்பதால் நம்முடைய பசியும் அந்த அளவிற்கு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஓட்ஸ், தவிடு மற்றும் சைலியம் தவிடு கரையும் நார்ச்சத்திற்கு சிறந்த மூலப்பொருட்கள் ஆகும். கரையாத நார்ச்சத்து சிறுகுடலில் உள்ள உணவுப் பிண்டத்திற்கு பருமன் சேர்க்கின்றது. அப்படிப் பருமன் சேர்ப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு எளிதாக மலம் கழிக்க முடிகின்றது. முழுத்தானியங்கள், ஆப்பிள் தோல், மற்றும் அரிசித் தவிடு ஆகியவை கரையாத நார்ச்சத்திற்கு சிறந்த மூலப் பொருட்கள் ஆகும்.

சர்க்கரை, உப்பு, சாக்லேட் மற்றும் காபிக்கான மாற்றுப் பொருட்கள்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை,உப்பு, சாக்லேட் ஆகியவற்றிற்கான மாற்றுப் பொருட்கள் என்ன உட்கொள்வது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சர்க்கரை:
இருபதாம் நூற்றாண்டின் பாதியிலேயே சர்க்கரையின் உபயோகம் ஏராளமாக அதிகரித்து விட்து. இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் 5 பவுண்டு சர்க்கரைதான் ஓராண்டிற்கு உபயோகித்து வந்தார். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் பாதியில் இத்தனி நபர் சர்க்கரை உபயோகம் 130 பவுண்டாக அதிகரித்து விட்டது. இது 26 மடங்கு உபயோகம் அதிகரிப்பதைக் காட்டுகின்றது. பால் மற்றும் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. ஆனால் உணவு தயாரிப்பாளர்கள் செயற்கையாக தாங்கள் தயாரிக்கும் எல்லா உணவுகளிலும் சர்க்கரையை சேர்க்கின்றார்கள். கார்ன் சிரப், குளுக்கோஸ், புருக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் ஆகியவை எல்லாம் சர்க்கரையின் பல்வேறு வடிவங்களாகும்.

பதப்படுத்தபட்ட சர்க்கரை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை விரைவில் ஏற்றுவதால், உணவு தயாரிப்பாளர்கள் இப்படி விரைவில் குளுக்கோஸின் அளவை ஏற்றாத செயற்கை இனிப்புகளைத் தயாரித்துள்ளார்கள். இந்த மாற்று இனிப்புப் பொருட்களால் உடல் நலத்திற்கு கெடுதல் வர வாய்ப்புள்ளது. இவற்றிற்கு பதிலாக நாம் சின்னமன், வனிலா, மிண்ட் ஆகியவற்றை சாப்பிடலாம். இவைகளில் இனிப்புச் சுவை இருக்கும். ஆனால் அதே சமயத்தில் இவை நம் உடம்பில் சர்க்கரையையோ, அல்லது கூடுதல் கலோரிகளையோ சேர்க்காது.

உப்பு:
உப்பு என்று நாம் அழைக்கும் சோடியம் குளோரைடு என்பது நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான ஒரு கெமிக்கல் ஆகும். நம்முடைய தற்போதைய உணவுப் பழக்க வழக்கங்கள் தேவைக்கதிகமாக நம்மை உப்பை சாப்பிட வைக்கின்றன. அதே சமயத்தில் தேவையான பொட்டாஸியம் போன்ற கெமிக்கல்களை உட்கொள்ளுவதையும் குறைக்கின்றன. நாம் உப்பு உட்கொள்வதைக் குறைத்து, பொட்டாசியம் உட்கொள்ளுவதை அதிகரிக்க வேண்டும். நம் உடம்பில் ஒரு முறையான உப்பு மற்றும் பொட்டாசியம் விகிதம் இருக்க வேண்டும். விகிதம் அதிகமாக இருந்தால் செல்லுக்குள் உப்பு அதிகமாகத் தங்கிவிடும். அப்படித் தங்கும் பொழுது தண்ணீரும் அதிகமாக செல்லுக்குள் வந்து விடும். இதனால் செல் வீக்கமடைந்து வெடிக்க நேரிடும். கடலில் தயாராகும் உப்பு, இந்த உப்பு மற்றும் பொட்டாசியத்திற்கிடையே உள்ள விகிதத்தை சரியாகக் கொடுக்கின்றது. ஆகவே, நாம் கடல் உப்பை பயன்படுத்துவது நல்லது. அதே சமயத்தில் நாம் கேனில் விற்கப்படும் ஜுஸ் மற்றும் சூப் வகையறாக்களை உட்கொள்ளுவதைக் குறைப்பது நல்லது.

(நலம் தொடரும்)

தர்ப்பூசணி

குறைந்த விலையில் தாகம் தணிக்க பயன்படும் தர்ப்பூசணிக்கு நீரிழப்பை தடுக்கும் சக்தியும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில் சாலையோரத்தில் தர்ப்பூசணிக் கடைகள் வரிசையாக முளைத்து வருகின்றன. வெப்பம் தணிக்க வேறுபானங்களை பருகுவதை விட தர்ப்பூசணி சாப்பிடுவதையே மாணவர்களும், தொழிலாளர்களும் விரும்புகின்றனர். மற்ற பானங்களை விட விலை குறைவு என்பதால் இதன் விற்பனை சூடு பிடித்து வருகிறது. விலைக் குறைவு என்றாலும் இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தர்ப்பூசணியில் பொட்டாசியம், சோடியம் போன்ற எலக்ட்ரோலைட் பொருள்கள் அதிகம்.
இதில் இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
இதனைச் சாப்பிடுவதால் உடலில் சூரியக் கதிர்களின் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
நீரிழப்பும் தடுக்கப்படும்.
மேலும் இது உடலில் உப்பு கலவையை சமநிலைப்படுத்துவதால் சோர்வு ஏற்படாது.

நன்றி தினமணி

புதன், 24 பிப்ரவரி, 2010

ஆறுவகை 'ஹார்ட் அட்டாக்!' 2010ன் புதிய கண்டுபிடிப்புகள்

மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

கோல்டன் ஹவர்
முதல் 2 மணி நேரம் "கோல்டன் ஹவர்' என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

ஆறு வகை மாரடைப்பு

மாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது;

இவற்றில், ஐந்து, ஆறாவது வகை மாரடைப்புகளுக்கு காரணம், ஸ்டென்ட்டையும், பைபாஸ் கிரங்குகளையும் சரியாக பாதுகாக்காததால் தான். பெரும்பாலான சர்ஜன்களும், மருத்துவர்களும் வேறு மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவோர் தான்; இவர்களுக்கு மொழி சரியாக தெரியாது, நோயாளிகளிடம் பேசும் நேரம் குறைவு, நிறைய நோயாளிகளை ஸ்டென்ட், பைபாஸ் செய்து நிறைய எண்ணிக்கையைக் கட்டி பெரும் பணம் பார்க்கும் நோக்கமாகிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை போல மருத்துவர், நோயாளி இவர்களின் ஆலோசனை பல மணி நேரம் ஆகிறது. இதனால், நோயாளிகள் எது எப்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்கின்றனர்.

முதல் வகை மாரடைப்பு
முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்டக்கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது; இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர்; இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.

இரண்டாவது வகை
இந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது; இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும்; ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால், கரோனரி ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.

மூன்றாவது வகை
நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.

நான்காவது வகை
மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் இது, இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்துவிடலாம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக்கும் வசதிகளும் உள்ளன.

ஐந்தாவது வகை
ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும். அதாவது ஸ்டென்ட் வைத்த டாக்டர் அல்லது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகவும் தெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, ஸ்டென்டின் இன்றைய நிலை. அதில், கொழுப்பு படிந்துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணிப்பில் பரிசோதனைகள் செய்து காத்துக் கொள்ள வேண்டும். ஸ்டென்ட் சிகிச்சை செய்து, இருபது ஆண்டுகள் என்னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு. இரண்டு ஆண்டுகளில் ஸ்டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலாமவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்; இரண்டாமவர், தான் தோன்றிய முறையில் வாழ்பவர்; ஸ்டென்ட் முழுவதும் மூடினால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.

ஆறாவது வகை
மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும்.
என்ன செய்யணும்?
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித ஒழுக்கம், மது மங்கை, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்கநெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

"பளீச்' அறிகுறிகள்
* மார்பின் மையப்பகுதியில் வலி ஆரம்பமாகும்; அல்லது, இடது பக்கம் வலி ஏற்படும். அந்த வலி, இடது கையில் பரவலாம்.
* வயிற்றின் மேல் பகுதியில் ஒரு வித எரிச்சல் இருக்கும். இதைத்தான் பலரும், காஸ் டிரபிள் என்று நினைத்து , டைஜின் போட்டு ஏமாந்து விடுகின்றனர்.
* திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும்; திணறலும் இருக்கும். புழுக்கம் தெரியும்.
* உடலில் வியர்வை பெருக்கெடுக்கும்; அதுவும் குளிர்ந்த வியர்வையாக இருக்கும்.

தவிர்க்கலாம் நிச்சயம்
என்ன தான் அறிகுறிகள் இருந்தாலும், அதை நோயாளியால் தான் கண்டுபிடிக்க முடியும். சில சமயம் இந்த அறிகுறிகள் இல்லாமல் கூட பிரச்னை வரலாம்.
அதை தவிர்க்க முடியும்... அதற்கு...
* சிகரெட் பிடிப்பதை விட வேண்டும்.
* உடல் எடையை அதிகரிக்க விடக்கூடாது.
* சர்க்கரை , ரத்த அழுத்தம் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கொழுப்பு, பால், கிரீம், அசைவ உணவை கைவிட வேண்டும்.

டென்ஷன் "நோ'
டென்ஷன் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்; யோகா, தியானம் செய்தால் எந்த டென்ஷனும் போயேபோச்சு தான். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும் மிகவும் நல்லது; கலோரி குறைந்து, உடல் ஒபிசிட்டி இல்லாமல் "ஸ்லிம்'மாக இருக்கும்.

நன்றி தினமலர்!

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

இதயம் ஆரோக்கியமாக இருக்க...

‘‘ஹர்ரி (அவசரம்), கறி (மாமிசம்), வொர்ரி (கவலை) மூன்றையும் நிறுத்தினால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்!’

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

உலகை அழிக்கும் மின்னணுக் கழிவு (ஈ-வேஸ்ட்)

புற்றீசல் போல என்பார்களே அப்படித் தான் இருக்கிறது இன்றைய நவீன உலகில் எலக்ட்ரானிக் பொருட்களின் வளர்ச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கிய கணினி இன்றைக்கு அதரப் பழசு என பெயர் சூட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வாங்கிய கைப்பேசியைக் கைகளில் வைத்திருப்பதே அவமானம் என கருதுகிறது இளைஞர் பட்டாளம். இளசுகளின் கேலிகளும் கிண்டலும் பழைய கைப்பேசிகளை நோக்கி எழுந்து கொண்டே இருப்பதனால் ஆறுமாதம் அல்லது வருடத்துக்கு ஒரு முறை கைப்பேசியை மாற்றுவது என்பதை பிறவிப் பெருங்கடன் போல வழுவாது நிறைவேற்றுகிறது இளைஞர் குழாம்.

கைப்பேசி கணினி என்றில்லை, வீட்டில் பயன்படுத்தும் தொலைக்காட்சிகள் நான்கைந்து வருடமானாலே புதுசாய் வாங்கலாமே என ஒரு உந்துதலும், விவாதமும் வீடுகளில் எழுவதும் வாடிக்கையே. இதே நிலையை குளிர்சாதனப் பெட்டி, குளிர் சாதனக் கருவிகள் என அனைத்திற்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

எங்கேனும் பழசைக் கொடுத்து புதுசு வாங்க முடிந்தால் இவற்றை அவர்கள் தலையில் கட்டிவிடலாம். இல்லையேல் முடிந்த மட்டும் பயன்படுத்திப் பார்த்துவிட்டு என்ன செய்வது ? குப்பையில் தான் போடவேண்டும் என்கிறீர்கள் தானே ? இது தான் இன்றைக்கு உலகையே உலுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாய் உருவெடுத்துள்ளது.

என்னிடமிருக்கும் ஒரு பழைய கைப்பேசியை அல்லது கணினியை குப்பையில் எறிந்தால் என்ன ? அதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது என நீங்கள் நினைக்கக் கூடும் ? அப்படி உலகிலுள்ள எல்லோரும் நினைக்கத் துவங்கியதால் தான் பீலி பெய் சாகாடும் கணக்காக உலகில் இன்றைக்கு மின்னணுக் கழிவு (e-waste) எனப்படும் எலக்ட்ரானிக் கழிவு மாபெரும் அச்சுறுத்தலாய் எழுந்துள்ளது.

இப்படிப் போடப்படும் மின்னணுக் கழிவு மட்கி மண்ணோடு மண்ணாகப் போய்விடும் என நினைத்தால் அது தவறு. இத்தகைய கழிவுகள் மண்ணை மிகப்பெருமளவில் மாசுபடுத்துவதுடன் உடலுக்கும், வாழ்க்கைக்கும் பல்வேறு சிக்கல்களையும் தந்து செல்கிறது. இதற்குக் காரணம் இந்த எலக்ட்ரானிக் பொருட்களில் காணப்படும் விஷத் தன்மையுள்ள பொருட்கள்.

சுமார் ஆயிரம் விஷத்தன்மையுள்ள பொருட்கள் இந்த ஒட்டு மொத்த இ-கழிவில் காணப்படுகின்றன. இதன் மூலம் ஒவ்வாமை நோய் முதல் புற்று நோய் வரையிலான பல்வேறு நோய்கள் மனிதனை ஆக்கிரமிக்கும் என்பதே என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். இந்த மின்னணுக் கழிவை சரியான முறையில் மறு சுழற்சி செய்வதற்கோ அல்லது அழிக்கவோ பரவலான சிறப்பான நடைமுறைகள் இல்லை என்பதால் உலகம் இந்த சிக்கலை உலக வெப்பமாதலுக்கு அடுத்த இடத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக முன் வைத்துள்ளது.

பாதரசம், காட்மியம், ஈயம், பைபேனால் போன்றவை இத்தகைய மின்னணுக் கழிவு களில் பரவலாகக் காணப்படும் விஷத் தன்மையுள்ள பொருட்களாகும். இவற்றை எரித்தால் அதிலிருந்து எழும் புகை காற்றை மாசுபடுத்துவதுடன், சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு விதமான நீண்ட கால நோய்களையும் தந்து செல்கிறது.

இவற்றைப் புதைத்தால் பூமி மாசுபடுகிறது. மண்ணின் வளமும், மண் சார்ந்த நீரும் மாசுக்குள் தள்ளப்படுகின்றன. இவை மனிதனுக்கு பல்வேறு விதமான வடிவங்களில் உபாதையைத் தந்து செல்கின்றன.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்ப அந்த நாடுகளிலுள்ள மின்னணுக் கழிவுகளை அப்பாவி நாடுகளான இந்தியா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளின் தலையில் கொட்டி விட்டுச் செல்கின்றன. வெளிநாட்டுப் பணத்துக்குக் கையேந்தும் நிலையில் பின் தங்கிய நாடுகள் இருப்பதை சாதகமாக்கிக் கொண்டு சுயநலத்தின் முழு உருவான வளர்ந்த நாடுகள் தங்கள் நாடுகளின் விஷத்தை நமது முதுகில் கொட்டும் விஷமத் தனத்தைச் செய்கின்றன.

தினசரி வாழ்க்கையை எப்படியேனும் ஓட்டவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கும் நமது வறுமை வயிறுகளுக்கு மின்னணுக் கழிவு என்ன என்பதே தெரிவதில்லை. அவர்கள் நாட்டின் பல்வேறு மூலைகளில் அமர்ந்து கொண்டு இந்த எலக்டானிக் பொருட்களை பிரித்து, நல்ல பாகங்களை தனியே எடுத்து, தேவையற்ற பாகங்களை எரியூட்டுகின்றனர். இப்படி உயிருக்கே உலை வைக்கும் வேலையைச் செய்யும் பாட்டாளி மக்களுக்குக் கிடைப்பது பசியாற்றுமளவுக்கான பணம் மட்டுமே.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்கள் நாடுகளில் இந்தக் கழிவை அழிக்கச் செலவிடுவதில் 20 விழுக்காடு பணத்தை மட்டுமே செலவிட்டு பிற நாடுகளுக்குக் கழிவுகளை அனுப்புகின்றனர். எண்பது விழுக்காடு லாபம் பெறும் இந்த வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை உலகின் பொதுக் குப்பைத் தொட்டியாக்கி விட்டன என்பது தான் உண்மை.

பல வளரும் நாடுகளும், பின் தங்கிய நாடுகளும் இத்தகைய கழிவுகளால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் இன்னலைக் கருத்தில் கொள்ளாமல் இதை வருமானத்துக்கான வழியாய் பார்ப்பதும் மேலை நாடுகளுக்கு சாதகமாகிப் போய் விட்டது.

இந்த மின்னணுக் கழிவுகளை சரியான முறையில் மறு சுழற்சி செய்வது மட்டுமே இந்த இ-கழிவுகளின் பிரச்சனையிலிருந்து உலகைக் காக்கும் வழியாகும். ஆனால் இதிலுள்ள மிகப்பெரிய சிக்கல் மின்னணுக் கழிவுகள் மற்ற கழிவுகளோடு சேர்த்து குப்பைத் தொட்டிகளிலும், குப்பை மேடுகளிலும் தேங்குவது தான்.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில், கைப்பேசிகளிலுள்ள அனைத்துப் பாகங்களையும் தனித் தனியே எடுத்து மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் சுற்றுச் சூழலையும் காப்பாற்றி, லாபத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இதிலுள்ள தங்கம், வெள்ளி, செம்பு, பிளாஸ்டிக் போன்றவற்றை பல்வேறு விதங்களில் மீண்டும் பயன்படுத்த முடியும்.

சுமார் பத்து கோடிக் கைப்பேசிகளை மறு சுழற்சி செய்தால் அதிலிருந்து சுமார் 3400 கிலோ தங்கம், 16 இலட்சம் கிலோ செம்பு, முப்பத்து ஐயாயிரம் கிலோ வெள்ளி 1500 கிலோ பலாடியம் போன்றவை கிடைக்குமாம். அமெரிக்காவிலுள்ள முன்னணி கைப்பேசி நிறுவனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமெரிக்க சுற்றுப் புற சூழல் பாதுகாப்பு குழுவுடன் இந்த இ-கழிவு முறைப்படுத்தல் பணியில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

உலகில் சராசரியாக ஆண்டுக்கு ஐந்து கோடி டன் எனுமளவில் மின்னணுக் கழிவுகள் சேர வாய்ப்பு இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவற்றில் பத்தோ இருபதோ விழுக்காடு மட்டுமே மறு சுழற்சிக்குள் செல்கின்றன. மிச்சமுள்ள சுமார் எண்பது விழுக்காடு மின்னணுக் கழிவுகள் மற்ற குப்பைகளோடு சேர்ந்து பூமியையும், சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தும் பணியில் இறங்கிவிடுகின்றன என்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று.

இன்றைய உலகின் விஞ்ஞான வளர்ச்சி இந்த மின்னணுக் கழிவுகளின் அளவை ஆண்டு தோறும் அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. கூடவே கடுமையான சந்தைப் போட்டியினால் நாளொரு புது வகை என அறிமுகமாகிக் கொண்டே இருக்கும் கைபேசி, கணினி போன்ற நவீனப் பொருட்கள் இந்த மின்னணுக் கழிவினை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. சுமார் நானூறு விழுக்காடு வரை இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை ஆண்டு தோறும் அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் இரண்டே ஆண்டுகளில் இப்போது இருக்கும் மின்னணுக் கழிவைப் போல மூன்று மடங்கு கழிவுகளால் அப்பாவி நாடுகள் மூச்சுத் திணற வேண்டியிருக்கும் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். எத்தனை மடங்கு விற்பனை அதிகரித்தாலும், கழிவுகள் அதிகரித்தாலும் உலகிலேயே அதிக எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் கழிவுகளை கப்பல்களில் ஏற்றி ஆசியாவுக்கு அனுப்பி விட்டு நிம்மதியாகக் குறட்டை விடுகின்றன.

இப்படிப் பட்ட கழிவுகள் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில் இவற்றைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களே அதன் ஆயுள் காலம் முடிந்தபின் மறு சுழற்சிக்கான வழிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் இத்தகைய அச்சுறுத்தல்களைத் தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த மார்ட்டின் ஹோசிக் என்பவர்.

விற்பனை செய்யும் போதே அதன் மறுசுழற்சிக்கான விலையையும் அந்தப் பொருளில் சேர்த்து விடலாம் என்றும், அந்த பொருளின் ஆயுள் காலம் முடிந்தபின் அவற்றை அந்தந்த நிறுவனங்களே பெற்று மறு சுழற்சி செய்யலாம் எனவும் இந்த அமைப்பு அறிவுறுத்துகிறது.

இதன் மூலம் மின்னணுக் கழிவுகளிலிருந்து பெருமளவுக்கு உலகைக் காக்க முடியும். கூடவே நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் ஆயுளையும் அதிகப்படுத்தி நல்ல தரமான பொருட்களைத் தயாரிக்க முன்வரும். டெல், ஹைச்.பி, ஆப்பிள், கேட்வே போன்ற நிறுவனங்கள் பல நாடுகளில் தங்கள் தயாரிப்புகளை அவற்றின் ஆயுள் முடிந்தபின் பெற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கின்றன என்பது ஒரு நல்ல முன்னுதாரணமாகும்.

நல்ல நிலையிலுள்ள பொருட்களை குப்பைகளில் எறிவதை விட அவற்றை கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளிக்கலாம், இதன் மூலம் கழிவிலிருந்து உலகையும் காக்கலாம். சில ஏழைகளில் தேவையையும் நிறைவேற்றலாம் என்பது இன்னொரு பார்வையாகும்.

மின்னணுக் கழிவுகளை எப்படி அழிப்பது, எங்கே கொடுத்து அவற்றை மறு சுழற்சிக்கு உட்படுத்துவது என்பன போன்ற அடிப்படை விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. தெளிவான வரை முறைகளை வகுத்து, அவற்றின் படி நடக்க மக்களை அறிவுறுத்துவதும் மிகவும் இன்றியமையாததாகும். இல்லையேல் நவீனத்தின் வளர்ச்சி உடலில் ஊனத்தை உருவாக்கும் என்பது திண்ணம்.

நன்றி: திரு சேவியர் - http://xavi.wordpress.com