திங்கள், 26 அக்டோபர், 2015

இயற்கை நலவாழ்வியல் நூல் : உயிர் காக்கும் உணவு மருத்துவம்

சமீபத்தில் நான் படித்து பயன் பெற்ற இயற்கை நலவாழ்வியல் நூல் பற்றிய அறிமுகத்தினை நீங்களும் படித்து பயன் பெற இங்கே தருகிறேன்.

உயிர் காக்கும் உணவு மருத்துவம்
(பஞ்ச பூத சிகிச்சையுடன்)ஆசிரியர்: திரு அ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G. Dip in Yoga

இந்த நூல் 304 பக்கங்களைக் கொண்டது. Rs.266/- விலை மதிப்புள்ள இந்த அழகிய நூல், பதிப்பாளரின் சிறப்பு அறிமுகச் சலுகை விலையாக ரூ.194/- விலையில் கிடைக்கிறது.ஆரோக்கியமும், ஆனந்தமும் தரும் இயற்கை உணவின் பெருமையை விளக்கும் நூல். ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் தூண்களாக விளங்கும், திரு.இர.இராமலிங்கம், திரு.ச.குஞ்சிதபாதம், மற்றும் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளான திருமூலர் யோகா இயற்கை உணவு ஆய்வு அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் யோகி தி.ஆ.கிருஷ்ணன், தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க இணைச் செயலர் திரு.மு.சி.தேவதாஸ் காந்தி, பவித்ரா இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை, மருதமலை, டாக்டர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் டாக்டர் சுமதி குணசாகரன், பிரம்மா ஸ்ரீ கொ.எத்திராஜ் (சித்த வித்தை தவமையம்) ஆகியோரின் கூட்டு முயற்சியால் வெளி வந்துள்ள நூல் இது.

பல ஆண்டுகளாக இவர்கள் நடத்திய இயற்கை நலவாழ்வு முகாம்களில் வழங்கப் பெற்ற செய்திகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிரேது.

இந்த நூலினை மிக அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளார் பதிப்பாசிரியர் திரு.பாபா வள்ளுவன்.

உங்களது சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிப் படிப்பது மட்டுமின்றி, உற்றார் உறவினர்களுக்கு, திருமண/பிறந்த நாள் பரிசாக வழங்கி மகிழ இந்த அழகிய பயன்மிகு நூலை மொத்தமாக வாங்கிப் பரிசளித்து மகிழ பதிப்பாளரின் முகவரியினை கீழே தந்துள்ளோம்.
,
பதிப்பாளர் முகவரி:
பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்,
10/3, எத்திராஜ் தெரு,பத்மநாப நகர், 
சூளை மேடு, சென்னை 94

தொடர்புக்கு: 97875 55182, 95660 63452

வாழி நலம் சூழ...

புதன், 21 அக்டோபர், 2015

தசரா/துர்காஷ்டமி / நவராத்திரி வாழ்த்துக்கள்.தசரா/துர்காஷ்டமி / நவராத்திரி வாழ்த்துக்கள்.வாழி நலம் சூழ... வலைப்பதிவினை தொடர்ந்து பார்வையிட்டு என்னை ஆதரிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது விழாக்கால நல்வாழ்த்துக்கள்.

அம்பிகையின் அருளாசி என்று விளங்கி நீங்கள் பல்லாண்டு வாழி நலம் சூழ.. என பிரார்த்தித்து வாழ்த்தி வணங்குகிறேன்.

இந்த நல்ல நாளில் மற்றொரு இனிய செய்தி. இந்த வலைப்பூவினை ஒரு லட்சம் முறைக்கு மேலாக வாசகர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது.

இதை சாத்தியமாக்கி இருக்கும் உங்கள் அன்பு ஆதரவினை தொடர்ந்து வேண்டுகிறேன். நலம் குறித்த தொடர் பதிவுகளை இனி தொடர்ந்து வெளியிடுவேன் என உறுதி அளிக்கிறேன்.

ஒரு லக்ஷம் பார்வைகள்.
ஸ்க்ரீன் ஷாட்.

அன்புக்கு நன்றி..

அஷ்வின்.
வாழி நலம் சூழ..வலைப்பூ.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சர்க்கரை வியாதிக்கு ஒரு தீர்வு.

தினமணி நாளிதழில் ஞாயிறு தோறும் வெளிவரும் சிறப்புக் கட்டுரைகளில் ஒன்று நியாண்டர் செல்வன் எழுதும் பேலியோ டையட் என்னும் தலைப்பிலான ஆரோக்கியம் மற்றும் உணவு முறை பற்றிய கட்டுரை.

சமீபத்திய பதிவான சர்க்கரை வியாதிக்கு ஒரு தீர்வு எனும் பகுதியை இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன். தொடக்கத்தில் இருந்து கட்டுரைகளை காண http://www.dinamani.com/junction/paleo-diet/ எனும் சுட்டியை சொடுக்கவும்.
---

சர்க்கரை குறைபாடுக்குத் தீர்வுகள் உண்டா? பேலியோ டயட் பற்றிய தொடரில் ஒன்றாக
தினமணியில் இன்று (23, ஆகஸ்ட், 2015) வந்த கட்டுரையின் பகிர்வு....


பகுதி 8 - சர்க்கரை வியாதிக்கு ஒரு தீர்வு!
By - நியாண்டர் செல்வன்
First Published : 23 August 2015 10:00 AM IST


சர்க்கரை வியாதி, ஆயுர்வேத நூல்களில் மதுமேகம் என அழைக்கப்பட்டது. மது என்றால் தேன். தேனைப் போன்ற இனிப்புடன் சர்க்கரை நோயாளிகளின் சிறுநீர் இருந்ததால் இவ்வியாதிக்கு மதுமேகம் எனப் பெயர் வந்தது.
ஒருவருடைய சிறுநீரைக் குடித்து அது இனிப்பாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்குச் சர்க்கரை நோய் உள்ளது என்று அந்தக் காலத்தில் ஒரு வழிமுறை பின்பற்றப்பட்டது. இதைத் தொடங்கி வைத்தவர்கள் இந்தியர்களே. 20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை இதுவே சர்க்கரை நோயைக் கண்டறியும் வழிமுறையாக இருந்தது. இதனால் ஆங்கிலத்திலும் சர்க்கரை நோய்க்கு Diabetes mellitus என்ற ‘தேனின் சுவையுள்ள டயபடிஸ்’ எனும் பெயரே சூட்டப்பட்டது.

சர்க்கரை வியாதி உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக க்ளுகோஸ் கலந்துவிடுவதால் சிறுநீரகத்தால் அதிக அளவில் அந்த க்ளுகோஸை வெளியேற்ற முடிவதில்லை. அதனால் அது அவர்களின் சிறுநீரில் கலந்துவிடுகிறது. சர்க்கரை நோயின் ஒரு அறிகுறி, இடைவிடாத பசி.

சர்க்கரை நோய்க்குக் காரணம் மாவுச்சத்தும், சர்க்கரையும் என்பது இன்றைய சர்க்கரை நோயாளிகளுக்கும், இந்திய டயபடிஸ் அசோசியேஷன், அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் போன்ற அமைப்புகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் 1913-ல் பிரெட்ரிக் ஆலன் எனும் நீரிழிவு மருத்துவர் ‘சர்க்கரை நோய்க்குக் காரணம் மாவும், அரிசியும், சர்க்கரையும் என பண்டைய இந்திய மருத்துவர்கள் நம்பினார்கள். இதில் உண்மை உள்ளது’ எனக் குறிப்பிடுகிறார்.

மேலும் குறிப்பிடும்போது, ‘பண்டைய இந்திய மருத்துவர்கள் இவ்வாறு எழுதுகையில் அவர்களுக்கு மாவுச்சத்து என்ற ஒன்று இருப்பதோ அல்லது அரிசியில் பெரும்பான்மையாக இருப்பது மாவுச்சத்து என்பதோ கூடத் தெரியாது. ஆனால், அதைப் பற்றி எதுவும் தெரியாமலேயே இதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால், சர்க்கரை நோயாளிகளின் உணவை அவர்கள் மிகத் தெளிவாக ஆராய்ந்திருப்பது தெரியவருகிறது’ என்கிறார்.

20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமெரிக்காவில் வெளியான சர்க்கரை நோயாளிகளுக்கான நூல்களில் தானியங்களையும், பருப்புக்களையும், இனிப்புக்களையும், மாவுப்பொருள்களையும், ரொட்டி, பன், பழங்கள் போன்றவற்றைத் தவிர்க்கும்படி எழுதப்பட்டிருந்தன. சர்க்கரை நோயாளிகளுக்கு இறைச்சி, முட்டை, காய்கறிகள் போன்றவையே அன்று பரிந்துரைக்கப்பட்டன. இன்று சொல்வதுபோல 'சர்க்கரை நோய் இருந்தால் சப்பாத்தி சாப்பிடு’ என்கிற அறிவுரைகள் எல்லாம் அன்று கிடையாது. தானியங்களும், பழங்களும், மாவுச்சத்தும் சர்க்கரை நோயாளிகளின் எதிரிகளாக கருதப்பட்ட காலம் அது. (இணைப்பு: 1917-ல் எழுதப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு நூல் - https://archive.org/stream/diabeticcookeryr00oppeiala… )

20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது. இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள மாவுச்சத்தைக் கையாளும் ஹார்மோன் என்பதும் கண்டறியப்பட்டது. மாவுச்சத்துள்ள உணவுப் பொருள்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும் என்பதும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டுவிட்டது.

அன்றைய மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இன்சுலின் கொடுப்பதும், மாவுச்சத்தை நிறுத்துவதும் இரண்டும் ஒன்றே என்பதை அறிந்திருந்தார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்று இன்சுலின் கொடுக்கவேண்டும், அல்லது உணவில் உள்ள மாவுச்சத்தை நிறுத்தவேண்டும் என்பதுதான் அவர்கள் கற்ற பாடம். இரண்டும் ஒரே மாதிரியான விளைவையே அளிக்கும் என்பதால் அதன் அடிப்படையில்தான் அவர்கள் மருத்துவம் பார்த்தார்கள். இப்படி அந்தக் கால மருத்துவர்களுக்குப் புரிந்த இந்த எளிய அறிவியல் இன்று மருத்துவம் பயில்பவர்களுக்கு ஏன் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை?

சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த முடியாத வியாதி என்று சொல்வதில் துளியும் உண்மை இல்லை. நம் மருத்துவ அமைப்புகள், இந்த விஷயத்தில் மக்களுக்குத் தவறான அறிவுரைகளை கூறி வருகின்றன.

ஒருவர் மருந்து கம்பனியை நடத்தி வருகிறார். அந்தத் தொழிலில் லாபம் வருவதை எப்படி உறுதி செய்வது? குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்தவே முடியாது என நோயாளிகளிடம் கூறவேண்டும். அதை மருந்தால் மட்டுமே கட்டுக்குள் வைக்கமுடியும் என்று சொல்லி நோயாளிகளை நம்பவைக்கவேண்டும். நோயாளி சாகவும் கூடாது, நோய் குணமாகவும் கூடாது. இப்படி ஆயுள் முழுக்க நோயுடனும், மருந்துடனும் வாழ்க்கையை நடத்தி வரும் நோயாளிகளால்தானே லாபம் கிடைக்கும்!

சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த வியாதி உள்ளவர்கள் எல்லாருமே இப்படி மருந்து நிறுவனங்களுக்குப் பணம் காய்ச்சி மரமாக ஆண்டுக்கணக்கில் இருந்து வருகிறார்கள்.

சர்க்கரை வியாதியில் இரு வகைகள் உண்டு. ஒன்று, பிறப்பால் வரும் டைப் 1 சர்க்கரை வியாதி. இதை உணவால் குணப்படுத்த இயலாது.

ஆனால், பெரும்பாலானவர்களுக்கு வருவது டைப் 2 சர்க்கரை வியாதி. இது உணவால் வரும் சர்க்கரை வியாதி. இதைச் சரியான உணவுமுறை மூலம் சில மாதங்களில் குணப்படுத்த முடியும். சில மாதங்கள் எனக் கூறினாலும் பேலியோ டயட்டை வலியுறுத்தும் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ என்கிற ஃபேஸ்புக் குழுமத்தில் உள்ள பலரும் ஒரு சில வாரங்களில் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆண்டுக்கணக்கில் உண்டுவந்த மருந்துகளை நிறுத்தியுள்ளார்கள். ஒரு சில மாதங்களில் அவர்களுடைய சர்க்கரை அளவுகள் நார்மல் என்று சொல்லப்படும் இயல்பான அளவை எட்டியுள்ளன. காலை உணவுக்கு முந்தைய ஃபாஸ்டிங் சுகர் அளவுகள், உணவுக்குப் பிந்தைய சுகர் அளவுகள், ஏ1சி அளவுகள் என இந்த மூன்று அளவுகளும் ஒரு சில மாதங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுவில் பரிந்துரைக்கப்படும் டயட்:

அசைவ டயட்

காலை உணவு: 4 முட்டைகள்


மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்

மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால்

இரவு உணவு: பசி அடங்கும் வரை ஏதாவதொரு இறைச்சி (மட்டன், சிக்கன், மீன்)

முட்டை சேர்க்கும் சைவர்களுக்கான டயட்

காலை உணவு: 100 பாதாம் அல்லது பட்டர் டீ

மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்

மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால்

இரவு உணவு: 4 முட்டைகள்

முட்டை சேர்க்காத சைவர்களுக்கான டயட்
காலை உணவு: 100 பாதாம் அல்லது பட்டர் டீ

மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்

மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால்

இரவு உணவு: முழுக் கொழுப்பு நிரம்பிய பாலில் இருந்து எடுத்த பனீரில் பனீர் மஞ்சூரியன், பாலக் பனீர் போன்றவற்றைத் தயாரித்து உண்ணலாம்.

முக்கிய குறிப்பு: இது தவிர சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த வைட்டமின் டி மிக அவசியம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் மதிய வேளையில், நேரடி வெயில் தோலில் படும்வண்ணம் 15 - 20 நிமிடம் வெயிலில் நிற்பது நன்று. மதியம் 11 மணி முதல் 1 மணி வரை உள்ள வெயில் இதற்கு உகந்தது. தலைக்கு வெயில் தாக்காமல் இருக்க தொப்பி அணியவும். வெயில் அதிக அளவில் நம் உடலில் படவேண்டும் என்பதால் கையில்லாத பனியன், அரைக்கால் டிரவுசர் போன்றவற்றை அணிந்து நிற்பது நன்று.

காளிஃபிளவர் அரிசியின் செய்முறை

சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்வதால் அதற்கு மாற்றாக காளிஃபிளவர் அரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காளிஃபிளவர் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். அதன்பின் ஒரு மிக்ஸி அல்லது ஃபுட் ப்ராசசரில் நாலைந்து நொடிகள் ஓடவிட்டு, நிறுத்தி, மறுபடியும் நாலைந்து நொடிகளுக்கு ஓடவிட்டு அரைக்கவேண்டும் (தொடர்ந்து அரைத்தால் கூழாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்). அரிசி போல சின்னஞ்சிறிய துண்டுகளாக ஆனதும் அதைப் புட்டுச்சட்டியில் ஆவியில் வேகவைத்தால் காளிஃபிளவர் அரிசி தயார். இதில் காய்கறிக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். இதில் உள்ள மாவுச் சத்தின் அளவும் மிகக் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளும் அதிகரிக்காது.

முக்கியமான கேள்விக்கு வருவோம். பேலியோ டயட் சர்க்கரை வியாதியை எப்படிக் குணப்படுத்துகிறது?

சர்க்கரை நோயை வரவழைப்பது மாவுச்சத்து நிரம்பிய அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானிய உணவுகள். இந்நிலையில், அரிசி, கோதுமையைத் தொடர்ந்து உண்டுவந்தால் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த முடியுமா?
நாம் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். மாவுச்சத்து உள்ள உணவை உண்டால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும்.
இதனால் ஃபாஸ்டிங் சுகர் அளவு 200 ஆக உள்ள ஒருவர் (இயல்பான அளவு: 100க்குக் கீழ்) காலையில் ஐந்து இட்லியைச் சாப்பிடுகிறார் என வைத்துக்கொண்டால் அதன்பின் அவரது உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு 200-ல் இருந்து 280 ஆக அதிகரிக்கும்.
இந்த 280 எனும் அளவைக் குறைக்க அவர் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும். அதன்பின்பு, சர்க்கரை அளவு 280-ல் இருந்து 230, 220 எனக் குறையும். அடுத்தவேளை உணவாக சாதமும், பருப்பும் சாப்பிட்டால் மீண்டும் உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவுகள் 280, 300 என எகிறிவிடும். மறுபடியும் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டால்தான் அதைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.
இந்தச் சர்க்கரை நோயாளி பேலியோவுக்கு மாறுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்?
ஃபாஸ்டிங் சுகர் அளவு 200 ஆக இருக்கிறது. காலை உணவாக நெய்யில் வறுத்த 4 ஆம்லெட்களைச் சாப்பிடுகிறார். பசி முழுமையாக அடங்கிவிடுகிறது. முட்டையிலும், இறைச்சியிலும் துளியும் மாவுச்சத்து இல்லை என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் ஏறாது. அவரது உடலைப் பொறுத்தவரை அவர் இன்னமும் உண்ணாநிலையில்தான் இருக்கிறார். எனவே இரண்டு, மூன்று மணிநேரம் கழித்து அவரது சர்க்கரை அளவு 200-ல் இருந்து 180, 170 ஆக குறையும்.
மதிய உணவு - காளிஃபிளவர் அரிசி அல்லது 100 பாதாம். இதிலும் மிகக் குறைந்த அளவே மாவுச்சத்து உள்ளது. இரவிலும் பேலியோ டயட்டைப் பின்பற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
பேலியோ உணவால் சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் தொடர்ந்து குறைந்துகொண்டே வரும். ஒருசில நாள்களில் இன்சுலின் ஊசி அளவுகள், சர்க்கரை வியாதி மாத்திரை அளவுகளைக் குறைக்க அல்லது முழுவதும் நிறுத்தவேண்டிய நிலைமை உருவாகும். ஒரு சில மாதங்களில் உடலில் சர்க்கரை அளவுகள் இயல்பானதாக மாறிவிடும்.
சர்க்கரை நோய்க்கு பேலியோ டயட்டைப் பயன்படுத்தமுடியும் என்பதைப் பல மருத்துவ ஆய்வு வெளியீடுகள் (Medical journals) ஒப்புக்கொள்கின்றன.
மருத்துவ ஆய்வு வெளியீடுகளில், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வறிக்கைகள் இடம்பெற்றிருக்கும். மருத்துவத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படும். இதன் சோதனை முடிவுகளே மருத்துவ ஜர்னல்களில் வெளியிடப்படும். இவை மருத்துவத்துறைசார் கருத்தரங்குகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் விவாதிக்கப்படும். பிறகு, முக்கியமான கண்டுபிடிப்புகள் மருத்துவப் பாடபுத்தகங்களில் இடம்பெறும். இதன் தொடர்ச்சியாக சிகிச்சைகளிலும் அந்த ஆய்வுகள் பின்பற்றப்படும்.
எனவே மருத்துவ ஜர்னல்கள் என்பவை அறிவியல் ரீதியாக நிரூபணமான ஆய்வுக்கட்டுரைகள் என்பதை மனத்தில் கொள்வோம்.
Diabetes Metabolism Research and Reviews எனும் அறிவியல் ஜர்னலில் 2011-ம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை எழுதிய மருத்துவப் பேராசிரியர் புசாட்டோ (Busetto) ‘சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குக் குறைவான கொழுப்பு உள்ள டயட் அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டு வந்தாலும், உயர் புரதமும், குறைந்த அளவு மாவுச்சத்தும் நிரம்பிய பேலியோ டயட், சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையைக் குறைத்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகளை குறைத்துயும், இதய நலனையும் மேம்படுத்துகிறது’ என்று கூறுகிறார். (இணைப்பு:http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21309052)
2008-ல், Nutritional Metabolism என்கிற லண்டன் மருத்துவ ஜர்னலில், பேராசிரியர் எரிக் வெஸ்ட்மெனின் (Eric Westman) ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் குறைந்த அளவிலான மாவுச்சத்து உள்ள பேலியோ டயட்டும், சற்று அதிக அளவு மாவுச்சத்து உள்ள லோ-கிளைசெமிக் டயட்டும் (Low Glycemic diet) ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.
இந்த ஆய்வில் 49 பேர் பங்கேற்றார்கள். இந்த 49 பேரும் அதிக உடல் எடை கொண்ட சர்க்கரை நோயாளிகள். அதில் பாதி பேருக்கு பேலியோ டயட் பரிந்துரைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு லோ-கிளைசெமிக் டயட்.
ஆறுமாத ஆய்வுக்குப் பிறகு கிடைத்த முடிவுகள்: பேலியோ டயட்டைப் பின்பற்றிய நோயாளிகளுக்கு எச்பிஏ1சி (HBA1C) அளவுகள் சராசரியாக 1.5 புள்ளிகள் குறைந்திருந்தன. உடல் எடை சராசரியாக 11 கிலோ குறைந்திருந்தது. இதயத்தின் நலனை வெளிப்படுத்தும் நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலின் அளவுகள் 5.6 புள்ளிகள் அதிகமாகியிருந்தன. இதனால் சர்க்கரை நோய்க்கு பேலியோ டயட்டே உகந்தது என இந்த ஆய்வு முடிவு கூறியது. (இணைப்பு:http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2633336/)
Journal of American College Nutrition எனும் மற்றொரு மருத்துவ ஜர்னலில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதிக எடை உள்ள 14 டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு பேலியோ டயட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் உடலின் இன்சுலினைக் கையாளும் திறன், பிளட் சுகர் அளவைக் கையாளும் திறன் மற்றும் மாரடைப்பு அபாயம்/இதய நலன் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மருத்துவ ஆய்வாளர் கிரெப்ஸ் (Krebs) தலைமையில் 2013-ம் ஆண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. 14 டைப் 2 சர்க்கரை நோயாளிகளும் ஆறு மாத காலத்துக்கு பேலியோ டயட்டைப் பின்பற்றினார்கள்.
முடிவில் அனைவருக்கும் சராசரியாக பத்து கிலோ எடை இறங்கியிருந்தது. உடலின் பிளட் சுகர் அளவைக் கையாளும் திறன் (HBA1C) சராசரியாக 1.1 புள்ளிகள் குறைந்திருந்தது. ஃபாஸ்டிங் சுகர் அளவுகள் கணிசமாக குறைந்து காணப்பட்டன. ரத்த அழுத்தம் பத்துப் புள்ளிகள் வரை குறைந்திருந்தது. நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலின் அளவுகள் 10 புள்ளிகள் வரை அதிகரித்திருந்தன. மொத்த கொலஸ்டிரால் அளவும், எல்டிஎல் கொலஸ்டிரால் அளவும் அதிகரித்திருந்தாலும், எச்டிஎல் கொலஸ்டிரால்/ டிரைகிளிசரைட்ஸ் விகிதம் கணிசமாகக் குறைந்து அவர்களின் இதயநலன் மேம்பட்டிருப்பதை வெளிப்படுத்தியது. 
*
பேலியோ டயட்டால் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வருவதையும், இதயநலன் மேம்படுவதையும், உடல்நலன் சார்ந்த இதர அளவுகள் முன்னேற்றம் காண்பதையும் ஆய்வுகளின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. மருத்துவ ஜர்னல்களில் பேலியோ டயட்டின் பலன்கள் குறித்து தொடர்ந்து எழுதப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகின்றன. மருத்துவத்துறை சார் கருத்தரங்குகளில் இவை விவாதிக்கப்படுகின்றன. ஆனால் பேலியோ டயட் தொடர்புடைய ஆய்வுகள் மருத்துவக் கல்லூரி நூல்களிலும், பாடத் திட்டங்களிலும் இடம்பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கான காரணமாக நான் கருதுபவை - பேலியோ டயட்தான் சர்க்கரை நோய்க்கு உகந்த டயட் எனத் தீர்மானம் ஆகி பாடநூல்களில் இடம்பெற்றுவிட்டால், இத்தனை நாள் சொல்லி வந்த ‘குறைந்த கொழுப்பு டயட்டே சிறந்தது’ என்கிற அறிவுரைகளுக்கு எதிரானதாக ஆகிவிடும். பல டயபடிஸ் அசோசியேஷன்கள் மீது வழக்குகள் தொடரப்படலாம். தவிரவும் குறைந்த கொழுப்பு உணவு மாடலை அடிப்படையாகக் கொண்டு பல உணவு நிறுவனங்கள் சீரியல், ஓட்ஸ் போன்ற காலை உணவுகளையும், தானிய அடிப்படையிலான நொறுக்குத் தீனிகளையும் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றன. பேலியோ டயட் ஏற்கப்பட்டுவிட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். அதனால் அவை அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் மூலமாகவும், தம் நிறுவனங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் தான் நடத்தி வரும் அறிவியல் ஆய்வுக்கழகங்கள் மூலமாகவும் பேலியோ டயட்டுக்கு எதிரான தடுப்பணைகளைக் கட்டியுள்ளன. இதனால்தான் மருத்துவ நூல்களில் பேலியோ டயட் குறித்து எதுவும் இடம்பெறுவதில்லை; ஊடகங்களிலும் இதற்கு ஆதரவான கட்டுரைகள் எழுதப்படுவதில்லை.
இத்தடைகளை எல்லாம் தாண்டி பேலியோ இயக்கம், மேற்கத்திய நாடுகளில் நூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெரும் மாற்றங்களை உண்டாக்கி வருகிறது. இதுபோன்ற ஒரு மாற்றம் இந்தியாவிலும் ஏற்படவேண்டும். பேலியோ டயட்டைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பங்களிப்பை அளிக்கவேண்டும். (உதாரணமாக, ஃபேஸ்புக், ட்விட்டர் வழியாக பேலியோ டயட் குறித்த தகவல்களை அளிப்பது).
டைப் 2 சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாதது என்கிற பிரமை உடைக்கப்படவேண்டும். ஆண்டுக்கணக்கில் சர்க்கரை வியாதியால் தவிக்கும் மக்களை, அந்தக் கொடுமையிலிருந்து விடுவிக்கும் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

நன்றி : தினமணி.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

இயற்கை நலவாழ்வியல் அறிஞர் மு.வ.

தமிழ்நாடு தந்த பல அறிஞர்களில் மு.வ. அவர்களும் ஒருவர். அவருடைய பல சிறப்புகளில் முக்கியமான ஒன்று அவர் இயற்கை மருத்துவம் மட்டுமே செய்து கொண்டார் என்பது. அவரது திருக்குறள் தெளிவுரை எல்லோருக்கும் ஏற்புடையது. குறளில் சொல்லியது போல “மருந்தென வேண்டாவாம்” என்று வாழ்ந்தவர். ஆங்கில மருந்து மட்டுமின்றி வேறு எந்த மருந்தும் விரும்பாதவர். பசித்து உண்டு பணிகள் ஆறியவர். கனிகளை அதிகம் உண்டவர். மாறுபாடு இல்லா உண்டியான இயற்கை உணவுகள் ஏற்றவர். காந்தியடிகளின் இயற்கை மருத்துவத்தைக் கற்றவர், பரப்பியவர்.  

தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம் என்கிற சங்கத்தை சென்னையில் நிறுவி அதனை வழி நடத்திச் சென்றவர். அதன் பயனாக இயற்கை மருத்துவ நிலையம் அடையாற்றில் அக்காலத்தில் (1969 ல்) துவங்கப்பட்டது. மதுரை அண்ணாச்சி க.அருணாசலம் முதலானவர்கள் இச்சங்கத்தில் முக்கிய அங்கம் வகித்து வளர்த்தவர்கள். இதன் பயனாக தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம் இன்றும் மதுரையில் உள்ளது. பல கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு இயற்கை மருத்துவ விழிப்புணர்வு வந்துள்ளது. இயற்கை மருத்துவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

மு.வ.அவர்களின் மக்கள் அலோபதி மருத்துவர். எனினும், அவர்களை ஒதுக்கி, மறுத்து இயற்கை நெறிகளையே பிடிமானமாக பின்பற்றினார்.

மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை அன்றே உணர்ந்தவர். மரம் வளராமைக்கு ஆடுகளே காரணம் என்றார். மரம் வளர...வளர... வளரவிடாமல் தளிர்களைக் கடித்து கடித்துச் சிதைத்து விடுகின்றன. ஆடுகள் மட்டும் இல்லாமல் இருந்தால் தமிழகமெங்கும் மரங்கள் தானாக வளர்ந்திருக்கும். ஆகவே மனிதன் தாவர உணவுக்கு மாறினால் தாவரங்கள் செழித்து வளரும்.

வெறும் ராகியை அதிகம் உண்பதால் குடல் முதலியன வறண்டுவிடும். வனப்பும் அறிவும் வராது. ராகியில் வரட்சித் தன்மை உண்டு. கிராம ஏழை மக்கள் பலர் ராகியை உண்டே அவ்வாறு வாழ்ந்தனர். மந்த நிலை ஏற்படும் அக்காலத்து தஞ்சை மாவட்ட மக்கள் ராகியை அறியார். அரிசியையே உண்டனர். அவர்கள் பல துறைகளிலும் மேம்பட்டு விளங்கினர். அதற்கு அரிசியில் உள்ள தவிட்டில் உள்ள நுட்பமான சத்துகளும் (வைட்டமின் பி) தவிட்டில் உள்ள எண்ணெய்க் கொழுப்புகளும் (வைட்டமின் ஏ,டி) முக்கிய காரணம். இது போன்ற நுட்பமான உணவு ஆராய்ச்சிக் குறிப்புகளை மு.வ. அக்காலத்தில் தமது நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஆராய்ச்சிகளும், நுட்பமும் அதனை மக்களுக்குச் சொல்லி மேம்படுத்த வேண்டும் என்கிற வேட்கையும் அவருக்கு இருந்தது. அவர் அறிவுரைகளைப் பின்பற்றியிருந்தால் தமிழர்கள் பல் நோய்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.

- இயற்கை மருத்துவர் இரா.சுப்ரமணியம்

நன்றி: மாரிமுத்து உலகநாதன், தஞ்சாவூர் (முகநூல் பக்கத்தில் இருந்து)

ஞாயிறு, 10 மே, 2015

புற்றுநோய் எனும் சேர்ந்தாரைக் கொல்லி - கேன்சர் நோய் - சிக்கல்கள், தீர்வுகள்.

வலைப்பூ அன்பர்களுக்கு என் வணக்கம்..

நலவாழ்வியல் தொடர்பான செய்தித் தொகுப்புக்களை சேவை எண்ணங்களுடன் நாம் ‘வாழி நலம் சூழ..’ வலைப்பூவில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அந்த வரிசையில் புற்று நோய் தொடர்பாக நான் படித்த பல செய்திகளை வலைத்தளங்களில் இருந்து தொகுத்து ஒரு தொடராக வெளியிட இருக்கிறேன். இந்தத் தொடரில் வழங்கப்படும் செய்திகள் தி இந்து தமிழ்ப் பத்திரிக்கை, பி.பி.சியின் இணைய தளம்., தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நலவாழ்வியல்  தொடர்பான பலவேறு  வலைத்தளங்களில் இருந்து தொகுக்கப்பட்டவை.

புற்று நோயில் இருந்து நிவாரணம் பெற்று மீளக் கூடிய இயற்கை நலவாழ்வியல் தொடர்பான செய்திகளையும், நமது அன்றாட வாழ்க்கை முறையில் செய்யக் கூடிய ஒரு சில மாறுதல்கள் மூலம் எவ்வாறு நாம் புற்று நோயின் தாக்கத்தில் இருந்தும், புற்று நோயின் பிடியில் உள்ளோர் அந்நோயின் தீவிரத்தில் இருந்தும் விடுபடலாம் என ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்..

நலவாழ்வியல் அறிஞர்களில் ஒருவரும், என் நலவாழ்வில் அக்கறை கொண்டவருமான பொறியாளர்.திரு.அ.மெய்யப்பன், B.E., MBA, PG Dip. (Yoga), (யோகா ஆசிரியர் மற்றும் இயற்கை நெறியாளர்) அவர்கள் கான்சர் பற்றி ஒரு தொடரை இந்த வலைப்பூவில் நான் வெளியிட வேண்டும் என்று ஆவல் தெரிவித்தார். அதற்கான பல இணையதள முகவரிகளை அடிக்கடி என்னிடம் தெரிவித்தும், ஒரு தொடரினை எழுதிட தொடர்ந்து ஆதரவினை தெரிவித்து வருகிறார். அவரது ஊக்கம் இல்லையெனில் இந்தத் தொடர் இங்கே வெளியாக வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு நல்அன்பும், பேராதரவும் தெரிவித்து வரும் அவருக்கு எனது நன்றிகளை இங்கே தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

தொடரை தொடர்ந்து படித்து தங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் படி வேண்டுகிறோம்.

புற்று நோய் (கேன்சர்) என்னும் சேர்ந்தாரைக் கொல்லி..
சிக்கலும், காரணங்களும், அதற்கான தீர்வுகளும்.

கான்சர் என்ற கொடிய நோயின் கோரப் பிடியில் சிக்கி மனித குலம் இன்று தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. புற்று நோய் என நமது பண்டைய ஆயுர்வேத, சித்த வைத்தியக் குறிப்புக்களில் இந்த நோய் அறியப்படுகிறது.  பண்டைய காலங்களில் இருந்தே உலகெங்கணும் மிக அரிதாக மனிதனைப் பாதித்துக் கொண்டிருந்த இந்த புற்று நோய் (கேன்சர்) தற்போது வெகு அதிகமாக பரவும் உயிர்க்கொல்லி நோயாக உலகெங்கணும்.அறியப்படுகிறது.

உயிரணுவின் அபரிமிதமான வளர்ச்சியும் அவை கட்டுப்பாடற்ற நிலையை அடைவதும் புற்று நோயின் அறிகுறியாகும். உடலின் பல பகுதிகளில் ஏற்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிப்புக்களை பொதுவான பேரான புற்று நோய் அல்லது கேன்சர் என்று அழைக்கிறார்கள். புற்று நோய் தீவிரமான நோயாக மாறி இறுதியில் உயிரை குடித்துவிடும் அபாயம் கொண்டது.

சாதாரணமாக மனித உடலில் பல லட்சக்கணக்கான செல்கள் இயங்குகின்றன. மனித உடலில் உற்பத்தியாகும் செல்கள் தோன்றி வளரும்.. பின்னர் பலவாக பிரிந்து புதிய செல்கள் உருவாகும், தமக்குரிய பணிகளை செய்துவிட்டு வயதானதின் காரணமாக பின்னர் அவை மடிந்து போகும். இளமைக்காலத்தில் அவற்றின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இதன் காரணமாகவே உடல் வளர்ச்சி ஏற்படுகிறது. மனிதன் வயதுக்கு வந்த பின்னர் இந்த வளர்ச்சி ஒரு உறுப்பின் வளர்ச்சி அல்லது சேதங்களை சரிப்படுத்தல் என அதனதன் தேவைக்கேற்றபடி நடைபெறும்.

உயிரிகளை ஓரணு உயிரி எனவும் பல்லணு உயிரி எனவும் இரு வகைப் படுத்தலாம். பாக்டீரியா போன்றவை ஓரணு கொண்டதாகவும் இருக்கலாம். தாவரங்கள்விலங்குகள், மனித இனம் போன்ற உயிரினங்கள் பல்அணுத் தொகுப்புக்களான உயிரினங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு உயிரினந்த்தின் வகைக்கேற்ப அணுக்களின் எண்ணிக்கை அமையும். மனித உடலில் 100 (1014) ட்ரில்லியன் செல்கள் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது.

உடலில் உள்ள உயிரணுக்கள் உயிர்ச் சக்தியால் இயங்க வல்லவை. அணுக்கள் வளரும் தன்மையும், பிரிந்து பிரிந்து புதிய அணுக்களை உருவாக்கும் தன்மையும், பின்னர் இறந்து போகும் தன்மையும் கொண்டவை.

கேன்சர் எப்படி உருவாகிறது?
உடலின் ஒரு பகுதியில் உள்ள அணுக்கள் உடலின் கட்டுப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டு தன்னிச்சையாக இயங்கத் தொடங்குவதை நாம் புற்று நோய் என்கிறோம். இந்த அணுக்கள் அழிந்துபோவதற்கு மாறாக வளரத் தொடங்கி, புதிய அணுக்களை உருவாக்கி ஒரு தொகுதியாக செயல்படத் தொடங்குகின்றன. அவை உடலின் பாகங்களுக்கு ஊறு விளைவிப்பதாக அமையும் போது அது நோய் விளைவிக்கும் புற்று நோய்க் கட்டிகளாக மாறுகின்றன. 

Cancerous Cell

அவை மற்ற திசுக்களை ஊடுருவி புதிய செயல்பாடுகளை விளைவிக்கத் துவங்குவதையே நாம் புற்று நோய் என்கிறோம். தன்னிச்சையாக இயங்குவதும், கட்டுப்பாடுகளை ஏற்க மறுப்பதும் ஒரு உயிரணுவை கேன்சர் செல் என அடையாளம் காட்டுகிறது. 

கார்சினோமா புற்றுநோய் என்று வழங்கும் மருத்துவச் சொல், எபிதேலியல்தோல் மேல் புறத்து உயிரணுக்களில் தோன்றும் புற்றுப் பண்பு கொண்ட கட்டியை குறிக்கும்.

கார்சினோமா என்ற இந்தப் பெயர் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றதாகும். செல்சஸ் என்பவர் கார்சிநோஸ் என்ற சொல்லை லத்தீன் மொழியில் கான்செர் என்று மொழி பெயர்த்தார், 

லத்தீன் மொழியில் கான்சர் என்ற சொல் நண்டு என்ற உயிரினத்தை குறிப்பிடும் சொல்லாகும். காலேன் என்பவர் "ஆன்கோஸ் " என்ற சொல்லை,அனைத்து வகையான கட்டிகளையும் விளக்க பயன்படுத்தினார்,

புற்றுநோயின் பொதுவான நவீனச் சொல்லான ஆன்கோலோஜியின் மூலம் இதுதான்.. நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போக்ரேடஸ் பலவகையான புற்றுநோய்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.

அவர் தீங்கற்ற கட்டிகளை ஆன்கோஸ் என்று அழைத்தார், கிரேக்க மொழியில் வீக்கம், மற்றும் மாலிக்னன்ட் ட்யுமர்களை (புற்றுப்பண்பு கொண்ட கட்டி கார்சிநோஸ். இது கிரேக்க மொழியில் நண்டு அல்லது க்ரேபிஷ் என்று பொருள்படும்.

ஒரு திடமான புற்றுப்பண்பு கொண்ட கட்டியை வெட்டியெடுத்து அதன் மேல்புறம் பார்க்கையில் கிடைக்கும் தோற்றத்தின் அடிப்படையில், "நண்டு என்ற விலங்கின் கால்களைப்போல அதன் நரம்புகள் எல்லா பக்கங்களிலும் நீட்டி இருந்ததால், அதிலிருந்து இந்தப்பெயர் நிலைத்தது."

(தொடரும்)

ஞாயிறு, 3 மே, 2015

வாழி நலம் சூழ.... சிறு/குறு தானியங்கள்.

நலமுடன் வாழ - குறு/சிறு தானியங்களை நம் அன்றாட உணவில் சேர்ப்போம். 
வரகு, திணை, சோளம், கம்பு, ராகி, குதிரைவாலி இந்தப் பெயர் கொண்ட தானியங்களெல்லாம் ஏழை மக்களின் உணவு தானியங்களாக நகரவாழ் மக்களால் உதாசீனம் செய்யப்பட்டவை.
மேய்ந்த மாட்டை நக்கிய மாடு கெடுத்த கதையாக நாளடைவில் கிராம மக்களும், நகர மக்களது வாழ்க்கை முறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி, சிறு/குறு வகைத் தானியங்களுக்குப் பதிலாக அரிசி, மைதா, சர்க்கரை மற்றும் பலமுறை பதப்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணை/தானியங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள் தாம் இரத்த சர்க்கரை, இரத்தக் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) மற்றும் அதன் பக்க விளைவுகளான இதய நோய்கள், உடற் பருமன், இரத்த அழுத்தம், பக்க வாதம், மூளை அடைப்பு பாதிப்பு நோய்கள், புற்று நோய் என பல வியாதிகள்... 

இவ்வியாதிகளின் பாதிப்பில் இருந்து வெளிவரத் தெரியாமல் மெல்லக் கொல்லும் நஞ்சாகிப் போன இவைகளின்  பிடிகளில் சிக்கிக் கொண்டு மனிதகுலமே தவித்து வருகிறது. 

இந்தச் சிக்கலில் இருந்து விடுதலை பெற என்ன தீர்வு?
சாவி இல்லாத பூட்டுக்களை எப்போதுமே தயாரிப்பதில்லை. சாவியைத் தொலைத்துவிடுவதினால் வரும் கேடுகளே இவை. மீண்டு வர சிறு/குறு தானியங்களை உணவில் சேர்ப்பதே சிறந்த வழி என ஊட்டச் சத்து உணவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். மருத்துவ ரீதியாகவும் இந்த சிறு/குறு தானியங்களை உணவில் சேர்ப்பதன் மூலமாக அரிசி, மைதா, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், எண்ணெய் வகைகளையும் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டே வரவேண்டும். இது ஒன்றே தான் தீர்வு.

அரிசி கொண்டு தயாரிக்கப்படும் அடை, தோசைகளை விட திணை (Foxtail Millet) கம்பு (Pearl Millet) போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் திணை அடை, கம்பு/ராகி தோசை போன்றவை சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் உள்ளன. சென்னை நகரின் பெருவாரியான ஆர்கானிக் (இயற்கை பொருட்கள் அங்காடி)கடைகளில் இப்போது இந்த சிறு/குறு தானிய வகைகள் தாராளமாகக் கிடைக்கின்றன.

வரகு (Kodo Millet), சாமை (little millet), திணை (foxtail millet) மற்றும் குதிரை வாலி (barnyard millet) போன்றவற்றை பயன்படுத்தி பிரபல உணவுவிடுதிகள் உணவுவகைகளை மீண்டும் அறிமுகப்படுத்தி வருவதை காணும் போது இவ்வகை உணவுகளின் தேவையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிகிறது.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் இந்த தானிய வகைகள் தாம் நாற்பது சதவீதம் வரை நமது உணவுகளை ஆக்கிரமித்து இருந்தன. 1960களின் உணவுப் புரட்சி (Green Revolution) காரணமாக நெல் மற்றும் கோதுமை விளைச்சலை அரசு ஊக்குவித்ததின் பயனாக விவசாயிகள் சிறு/குறு தானியங்கள் பயிரிடுதலை குறைத்துவிட நேர்ந்தது.

அரிசி கோதுமை பயிரிட நிறையத் தண்ணீர் மற்றும் இரசாயன உரங்கள் தேவை. சிறு/குறு தானியங்களை பயிரிட மிகக் குறைந்த தண்ணீரே போதுமானது. இவ்வகைத் தானியங்களுக்கு இரசாயன உரமும் தேவையில்லை. இயற்கை உரங்களே போதுமானது. இப்போதைய தண்ணீர் பற்றாக்குறை அரிசி, கோதுமை விளைச்சலை பாதிப்பதுமட்டுமின்றி உரங்களின் தேவைகளும் அதிகமாகிக் கொண்டே போவதினால் உற்பத்திச் செலவும் கூடிக் கொண்டே போகிறது.

அரிசி, கோதுமையினால் செய்யப்படும் பலவித உணவுப் பண்டங்களினால் ஸ்டார்ச் அதிகமாகி இரத்தச் சர்க்கரை நோய் அதிகமாகிறது. பலகாரங்கள் பல எனினும் பயன் படுத்தும் தானியம் ஒன்றேதான். Glycemic Index மிகவும் அதிகம் கொண்டவை அரிசி, மைதா, கோதுமை போன்றவை. அரிசியில் நார்ச்சத்து இல்லை. மாவுச் சத்தே அதிகம் உள்ளது. கோதுமையில் நார்ச்சத்து இருந்தாலும், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் கோதுமை மாவுகள் பலமுறை பதப்படுத்தபட்டு அவற்றில் உள்ள நார்ச்சத்து நீக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

மக்களுக்கும், கோதுமையை வாங்கி அரைத்து பயன்படுத்த நேரமோ, ஆர்வமோ இன்றி பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கோதுமை மாவுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் விளையும் தீமைகளே சர்க்கரை நோய் எனும் கொடிய அறிகுறியாகும். கோதுமையின் நார்ச்சத்து முழுவதுமாக நீக்கப்பட்டு உள்பாகத்தின் மென்மையான மாவுப்பகுதியே மைதாவாக வருகிறது. தற்போதைய உணவுகளில் மைதாவின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. அதுவுமின்றி, பேக்கரியில் கிடைக்கும் அனைத்து உணவுப் பண்டங்களிலும், பரோட்டா போன்ற தின்பண்டங்களிலும் மைதாவின் பயன்பாடே அதிகம். குழந்தைகள் அதிகமாக விரும்பி இவைகளை உண்ணுவதால் அவை அவர்களுக்கு அதிக ஊறு விளைவிப்பனவாக அமைகின்றன.

பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் உண்டாகும் இத்தனை சிக்கல்களுக்கும் தீர்வினை அளிக்கவல்ல விஷயம் இப்போது உங்களுக்கு வந்து விட்டது.

பிரச்சினைகளுக்கு நல்லதொரு மாற்றாக இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடப்படும் சிறு/குறு தானியங்கள் நார்ச்சத்து கொண்டவையாகவும், அதிக ப்ரோட்டீன் சத்து கொண்டவையாகவும் விளங்குகின்றன என்பதுதான் ஆறுதல் அளிக்கும் செய்தி. அரிசி மற்றும் கோதுமை ரவை சார்ந்த உணவு வகைகளான உப்புமா, கேசரி, பொங்கல், தோசை, புலாவ் போன்றவற்றை சிறு/குறு தானியங்களை கொண்டே செய்துவிடலாம்.

சிறு/குறு தானியங்களின் பயன்கள்.
  • சைவ உணவு உண்பவர்களுக்கு தேவையான ப்ரோடீன் சத்துக்கள் இவற்றில் மிகுதியாக கிடைக்கின்றன.
  • இவற்றில் பி விட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், காப்பர் மற்றும் மங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் நிறைய உள்ளன.
  • நோய் எதிர்ப்புத் சக்தியை வளர்க்கும் பினால் (Phenols) எனப்படும் ஆண்டி ஆக்சிடன்ட் இவற்றில் மிகுதியாக உள்ளன. இவை கேன்சர் மற்றும் இதய வியாதிகளை வரவிடாமல் தடுக்க வல்லவை என அறியப்படுகிறது.
  • இவ்வகைத் தானியங்கள் மாவுத் தன்மை அற்றவை (Gluten-free). க்ளூடன் அலர்ஜி மற்றும் கோதுமைப் பொருட்கள் ஒவ்வாமை உள்ளோருக்கு இவ்வகைத் தானியங்கள் வரப்பிரசாதமாக அமையும் என்கிறார்கள் உணவுவல்லுனர்கள்.
  • க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் இந்த தானியங்கள் டயாபெடிக்குகளுக்கு உகந்தவை.
அரிசி, ரவா, மைதா, கோதுமை போன்ற தானிய வகைகளைக் குறைத்து அதற்கு மாற்றாக சிறு, குறு தானியங்களை பயன்படுத்துவதன் மூலம் மனிதகுலம் தம்மை பேரழிவின் பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்..

(நன்றி: மே, 3, 2015 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியான கட்டுரையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)

வாழி நலம் சூழ... வலைப்பூவுக்காக வெளியிட்டவர்: அஷ்வின்ஜி 

சனி, 28 மார்ச், 2015

30வது இயற்கை நல்வாழ்வுப் பயிற்சி முகாம் - திருப்பனந்தாள் (கும்பகோணம்) 1-5-2015 to 7.5.2015


இயற்கை உணவே அருமருந்து.
யோகநலமே வாழ்வின் வளம்.

உங்களுக்கு நீங்களே மருத்துவர்.
இந்நினைவகற்றாதீர்..

இனி வரும் நாட்களில் ஒரு உண்மையான மருத்துவர்
தம்மிடம் உதவி தேடிவரும் நோயாளிகளுக்கு உணவினை நெறிப்படுத்திக் கொள்வதன் மூலமாக நோயில் இருந்து விடுபடும் நலவாழ்வியல் வழிகளை மட்டுமே சொல்லித் தருவார்...

இயற்கை நலவாழ்வுயோகா மற்றும் பிராணாயாமமுத்ரா போன்ற தலை சிறந்த நலவாழ்வியல் முறைகளை கைதேர்ந்த முன்னோடி நிபுணர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுப் பயன்பெற ஒரு அரிய வாய்ப்பு.

01-05-2015 (வெள்ளிக்கிழமை) முதல் 07-05-2015 (வியாழக்கிழமை) வரை சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளியில் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமினை இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களிடையே பரப்பி வரும்முன்னோடி சேவை நிறுவனமான ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

முகாமில் ஏழு நாட்கள் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோக விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு நலவாழ்வுப் பயிற்சியை கற்றுத் தேறபயன் பெற ஒரு நல்வாய்ப்பு.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும்,  முன்னோடிகளுமாக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா, யோகா ஆசான் தி.ஆ.கிருஷ்ணன், போன்றோரின் நெறிப்படுத்தலின் கீழ், பல சிறப்புப் பயிற்சியாளர்களிடம் இருந்து ஒரே இடத்தில், ஒரே அமர்வில் சிறந்த யோக முறைகளைப் பற்றியும், இயற்கை வழியிலான நலவாழ்வியல் நுட்பங்களை பற்றியும் கேட்டறிய நல்வாய்ப்பு.  

யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர்திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம்சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர்,  நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை,  மதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும்இயற்கை உணவுடன் வழங்கப்படும். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள்: 01-05-2015 (பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 07-05-2015 (பிற்பகல் இரண்டு மணி வரை)
ஏழு நாட்கள்.

இடம்: குமரகுருபரர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி,
திருப்பனந்தாள் - 612504,
தஞ்சை மாவட்டம்.

முகாம் நன்கொடை:
(குறைந்த பட்சம்)
ரூ.2600/- (ஆடவருக்கு)
ரூ.2400/- (மகளிருக்கு)
ரூ.2200/- (10 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவியருக்கு)

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து முகாமுக்கு வர: 9, 34, 44, 27, 64 இலக்கமிட்ட அனைத்து டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும்.

சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில விரைவுப் பேருந்துகளில் பயணிப்போர் முகாம் நடைபெறும் இடமான திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.


மயிலாடுதுறையில் இருந்து இலக்கம் 20, 40 பேருந்துகள் மூலமாக முகாமுக்கு வரலாம்.

கடந்த ஆண்டு மே திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். எனவே முகாமில் பங்கு பெறுவதற்கான அனுமதியினை முன்னதாக பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும்.


எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் CAMP REGN என டைப் செய்து உங்கள் பெயர் முகவரியுடன் 9486768930 என்ற அலைபேசி எண்ணுக்கு உங்கள் பதிவுகளை SMS (குறுஞ்செய்தி) அனுப்பிட வேண்டுகிறோம். முகவரி தருபவருக்கு முகாம் விவரத் தொகுப்பு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மேலும் தகவல் தேவைப்பட்டால் மட்டுமே காலை 8 மணி முதல் 9 மணி வரை அலைபேசி மூலம் மேற்கண்ட  தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

முகாம் நெறியாளர்: 
திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)

இயற்கை நல ஆர்வலருக்கான சேவையில்..
வாழி நலம் சூழ...