திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சர்க்கரை வியாதிக்கு ஒரு தீர்வு.

தினமணி நாளிதழில் ஞாயிறு தோறும் வெளிவரும் சிறப்புக் கட்டுரைகளில் ஒன்று நியாண்டர் செல்வன் எழுதும் பேலியோ டையட் என்னும் தலைப்பிலான ஆரோக்கியம் மற்றும் உணவு முறை பற்றிய கட்டுரை.

சமீபத்திய பதிவான சர்க்கரை வியாதிக்கு ஒரு தீர்வு எனும் பகுதியை இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன். தொடக்கத்தில் இருந்து கட்டுரைகளை காண http://www.dinamani.com/junction/paleo-diet/ எனும் சுட்டியை சொடுக்கவும்.
---

சர்க்கரை குறைபாடுக்குத் தீர்வுகள் உண்டா? பேலியோ டயட் பற்றிய தொடரில் ஒன்றாக
தினமணியில் இன்று (23, ஆகஸ்ட், 2015) வந்த கட்டுரையின் பகிர்வு....


பகுதி 8 - சர்க்கரை வியாதிக்கு ஒரு தீர்வு!
By - நியாண்டர் செல்வன்
First Published : 23 August 2015 10:00 AM IST


சர்க்கரை வியாதி, ஆயுர்வேத நூல்களில் மதுமேகம் என அழைக்கப்பட்டது. மது என்றால் தேன். தேனைப் போன்ற இனிப்புடன் சர்க்கரை நோயாளிகளின் சிறுநீர் இருந்ததால் இவ்வியாதிக்கு மதுமேகம் எனப் பெயர் வந்தது.
ஒருவருடைய சிறுநீரைக் குடித்து அது இனிப்பாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்குச் சர்க்கரை நோய் உள்ளது என்று அந்தக் காலத்தில் ஒரு வழிமுறை பின்பற்றப்பட்டது. இதைத் தொடங்கி வைத்தவர்கள் இந்தியர்களே. 20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை இதுவே சர்க்கரை நோயைக் கண்டறியும் வழிமுறையாக இருந்தது. இதனால் ஆங்கிலத்திலும் சர்க்கரை நோய்க்கு Diabetes mellitus என்ற ‘தேனின் சுவையுள்ள டயபடிஸ்’ எனும் பெயரே சூட்டப்பட்டது.

சர்க்கரை வியாதி உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக க்ளுகோஸ் கலந்துவிடுவதால் சிறுநீரகத்தால் அதிக அளவில் அந்த க்ளுகோஸை வெளியேற்ற முடிவதில்லை. அதனால் அது அவர்களின் சிறுநீரில் கலந்துவிடுகிறது. சர்க்கரை நோயின் ஒரு அறிகுறி, இடைவிடாத பசி.

சர்க்கரை நோய்க்குக் காரணம் மாவுச்சத்தும், சர்க்கரையும் என்பது இன்றைய சர்க்கரை நோயாளிகளுக்கும், இந்திய டயபடிஸ் அசோசியேஷன், அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் போன்ற அமைப்புகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் 1913-ல் பிரெட்ரிக் ஆலன் எனும் நீரிழிவு மருத்துவர் ‘சர்க்கரை நோய்க்குக் காரணம் மாவும், அரிசியும், சர்க்கரையும் என பண்டைய இந்திய மருத்துவர்கள் நம்பினார்கள். இதில் உண்மை உள்ளது’ எனக் குறிப்பிடுகிறார்.

மேலும் குறிப்பிடும்போது, ‘பண்டைய இந்திய மருத்துவர்கள் இவ்வாறு எழுதுகையில் அவர்களுக்கு மாவுச்சத்து என்ற ஒன்று இருப்பதோ அல்லது அரிசியில் பெரும்பான்மையாக இருப்பது மாவுச்சத்து என்பதோ கூடத் தெரியாது. ஆனால், அதைப் பற்றி எதுவும் தெரியாமலேயே இதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால், சர்க்கரை நோயாளிகளின் உணவை அவர்கள் மிகத் தெளிவாக ஆராய்ந்திருப்பது தெரியவருகிறது’ என்கிறார்.

20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமெரிக்காவில் வெளியான சர்க்கரை நோயாளிகளுக்கான நூல்களில் தானியங்களையும், பருப்புக்களையும், இனிப்புக்களையும், மாவுப்பொருள்களையும், ரொட்டி, பன், பழங்கள் போன்றவற்றைத் தவிர்க்கும்படி எழுதப்பட்டிருந்தன. சர்க்கரை நோயாளிகளுக்கு இறைச்சி, முட்டை, காய்கறிகள் போன்றவையே அன்று பரிந்துரைக்கப்பட்டன. இன்று சொல்வதுபோல 'சர்க்கரை நோய் இருந்தால் சப்பாத்தி சாப்பிடு’ என்கிற அறிவுரைகள் எல்லாம் அன்று கிடையாது. தானியங்களும், பழங்களும், மாவுச்சத்தும் சர்க்கரை நோயாளிகளின் எதிரிகளாக கருதப்பட்ட காலம் அது. (இணைப்பு: 1917-ல் எழுதப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு நூல் - https://archive.org/stream/diabeticcookeryr00oppeiala… )

20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது. இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள மாவுச்சத்தைக் கையாளும் ஹார்மோன் என்பதும் கண்டறியப்பட்டது. மாவுச்சத்துள்ள உணவுப் பொருள்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும் என்பதும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டுவிட்டது.

அன்றைய மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இன்சுலின் கொடுப்பதும், மாவுச்சத்தை நிறுத்துவதும் இரண்டும் ஒன்றே என்பதை அறிந்திருந்தார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்று இன்சுலின் கொடுக்கவேண்டும், அல்லது உணவில் உள்ள மாவுச்சத்தை நிறுத்தவேண்டும் என்பதுதான் அவர்கள் கற்ற பாடம். இரண்டும் ஒரே மாதிரியான விளைவையே அளிக்கும் என்பதால் அதன் அடிப்படையில்தான் அவர்கள் மருத்துவம் பார்த்தார்கள். இப்படி அந்தக் கால மருத்துவர்களுக்குப் புரிந்த இந்த எளிய அறிவியல் இன்று மருத்துவம் பயில்பவர்களுக்கு ஏன் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை?

சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த முடியாத வியாதி என்று சொல்வதில் துளியும் உண்மை இல்லை. நம் மருத்துவ அமைப்புகள், இந்த விஷயத்தில் மக்களுக்குத் தவறான அறிவுரைகளை கூறி வருகின்றன.

ஒருவர் மருந்து கம்பனியை நடத்தி வருகிறார். அந்தத் தொழிலில் லாபம் வருவதை எப்படி உறுதி செய்வது? குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்தவே முடியாது என நோயாளிகளிடம் கூறவேண்டும். அதை மருந்தால் மட்டுமே கட்டுக்குள் வைக்கமுடியும் என்று சொல்லி நோயாளிகளை நம்பவைக்கவேண்டும். நோயாளி சாகவும் கூடாது, நோய் குணமாகவும் கூடாது. இப்படி ஆயுள் முழுக்க நோயுடனும், மருந்துடனும் வாழ்க்கையை நடத்தி வரும் நோயாளிகளால்தானே லாபம் கிடைக்கும்!

சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த வியாதி உள்ளவர்கள் எல்லாருமே இப்படி மருந்து நிறுவனங்களுக்குப் பணம் காய்ச்சி மரமாக ஆண்டுக்கணக்கில் இருந்து வருகிறார்கள்.

சர்க்கரை வியாதியில் இரு வகைகள் உண்டு. ஒன்று, பிறப்பால் வரும் டைப் 1 சர்க்கரை வியாதி. இதை உணவால் குணப்படுத்த இயலாது.

ஆனால், பெரும்பாலானவர்களுக்கு வருவது டைப் 2 சர்க்கரை வியாதி. இது உணவால் வரும் சர்க்கரை வியாதி. இதைச் சரியான உணவுமுறை மூலம் சில மாதங்களில் குணப்படுத்த முடியும். சில மாதங்கள் எனக் கூறினாலும் பேலியோ டயட்டை வலியுறுத்தும் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ என்கிற ஃபேஸ்புக் குழுமத்தில் உள்ள பலரும் ஒரு சில வாரங்களில் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆண்டுக்கணக்கில் உண்டுவந்த மருந்துகளை நிறுத்தியுள்ளார்கள். ஒரு சில மாதங்களில் அவர்களுடைய சர்க்கரை அளவுகள் நார்மல் என்று சொல்லப்படும் இயல்பான அளவை எட்டியுள்ளன. காலை உணவுக்கு முந்தைய ஃபாஸ்டிங் சுகர் அளவுகள், உணவுக்குப் பிந்தைய சுகர் அளவுகள், ஏ1சி அளவுகள் என இந்த மூன்று அளவுகளும் ஒரு சில மாதங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுவில் பரிந்துரைக்கப்படும் டயட்:

அசைவ டயட்

காலை உணவு: 4 முட்டைகள்


மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்

மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால்

இரவு உணவு: பசி அடங்கும் வரை ஏதாவதொரு இறைச்சி (மட்டன், சிக்கன், மீன்)

முட்டை சேர்க்கும் சைவர்களுக்கான டயட்

காலை உணவு: 100 பாதாம் அல்லது பட்டர் டீ

மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்

மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால்

இரவு உணவு: 4 முட்டைகள்

முட்டை சேர்க்காத சைவர்களுக்கான டயட்
காலை உணவு: 100 பாதாம் அல்லது பட்டர் டீ

மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்

மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால்

இரவு உணவு: முழுக் கொழுப்பு நிரம்பிய பாலில் இருந்து எடுத்த பனீரில் பனீர் மஞ்சூரியன், பாலக் பனீர் போன்றவற்றைத் தயாரித்து உண்ணலாம்.

முக்கிய குறிப்பு: இது தவிர சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த வைட்டமின் டி மிக அவசியம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் மதிய வேளையில், நேரடி வெயில் தோலில் படும்வண்ணம் 15 - 20 நிமிடம் வெயிலில் நிற்பது நன்று. மதியம் 11 மணி முதல் 1 மணி வரை உள்ள வெயில் இதற்கு உகந்தது. தலைக்கு வெயில் தாக்காமல் இருக்க தொப்பி அணியவும். வெயில் அதிக அளவில் நம் உடலில் படவேண்டும் என்பதால் கையில்லாத பனியன், அரைக்கால் டிரவுசர் போன்றவற்றை அணிந்து நிற்பது நன்று.

காளிஃபிளவர் அரிசியின் செய்முறை

சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்வதால் அதற்கு மாற்றாக காளிஃபிளவர் அரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காளிஃபிளவர் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். அதன்பின் ஒரு மிக்ஸி அல்லது ஃபுட் ப்ராசசரில் நாலைந்து நொடிகள் ஓடவிட்டு, நிறுத்தி, மறுபடியும் நாலைந்து நொடிகளுக்கு ஓடவிட்டு அரைக்கவேண்டும் (தொடர்ந்து அரைத்தால் கூழாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்). அரிசி போல சின்னஞ்சிறிய துண்டுகளாக ஆனதும் அதைப் புட்டுச்சட்டியில் ஆவியில் வேகவைத்தால் காளிஃபிளவர் அரிசி தயார். இதில் காய்கறிக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். இதில் உள்ள மாவுச் சத்தின் அளவும் மிகக் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளும் அதிகரிக்காது.

முக்கியமான கேள்விக்கு வருவோம். பேலியோ டயட் சர்க்கரை வியாதியை எப்படிக் குணப்படுத்துகிறது?

சர்க்கரை நோயை வரவழைப்பது மாவுச்சத்து நிரம்பிய அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானிய உணவுகள். இந்நிலையில், அரிசி, கோதுமையைத் தொடர்ந்து உண்டுவந்தால் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த முடியுமா?
நாம் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். மாவுச்சத்து உள்ள உணவை உண்டால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும்.
இதனால் ஃபாஸ்டிங் சுகர் அளவு 200 ஆக உள்ள ஒருவர் (இயல்பான அளவு: 100க்குக் கீழ்) காலையில் ஐந்து இட்லியைச் சாப்பிடுகிறார் என வைத்துக்கொண்டால் அதன்பின் அவரது உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு 200-ல் இருந்து 280 ஆக அதிகரிக்கும்.
இந்த 280 எனும் அளவைக் குறைக்க அவர் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும். அதன்பின்பு, சர்க்கரை அளவு 280-ல் இருந்து 230, 220 எனக் குறையும். அடுத்தவேளை உணவாக சாதமும், பருப்பும் சாப்பிட்டால் மீண்டும் உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவுகள் 280, 300 என எகிறிவிடும். மறுபடியும் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டால்தான் அதைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.
இந்தச் சர்க்கரை நோயாளி பேலியோவுக்கு மாறுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்?
ஃபாஸ்டிங் சுகர் அளவு 200 ஆக இருக்கிறது. காலை உணவாக நெய்யில் வறுத்த 4 ஆம்லெட்களைச் சாப்பிடுகிறார். பசி முழுமையாக அடங்கிவிடுகிறது. முட்டையிலும், இறைச்சியிலும் துளியும் மாவுச்சத்து இல்லை என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் ஏறாது. அவரது உடலைப் பொறுத்தவரை அவர் இன்னமும் உண்ணாநிலையில்தான் இருக்கிறார். எனவே இரண்டு, மூன்று மணிநேரம் கழித்து அவரது சர்க்கரை அளவு 200-ல் இருந்து 180, 170 ஆக குறையும்.
மதிய உணவு - காளிஃபிளவர் அரிசி அல்லது 100 பாதாம். இதிலும் மிகக் குறைந்த அளவே மாவுச்சத்து உள்ளது. இரவிலும் பேலியோ டயட்டைப் பின்பற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
பேலியோ உணவால் சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் தொடர்ந்து குறைந்துகொண்டே வரும். ஒருசில நாள்களில் இன்சுலின் ஊசி அளவுகள், சர்க்கரை வியாதி மாத்திரை அளவுகளைக் குறைக்க அல்லது முழுவதும் நிறுத்தவேண்டிய நிலைமை உருவாகும். ஒரு சில மாதங்களில் உடலில் சர்க்கரை அளவுகள் இயல்பானதாக மாறிவிடும்.
சர்க்கரை நோய்க்கு பேலியோ டயட்டைப் பயன்படுத்தமுடியும் என்பதைப் பல மருத்துவ ஆய்வு வெளியீடுகள் (Medical journals) ஒப்புக்கொள்கின்றன.
மருத்துவ ஆய்வு வெளியீடுகளில், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வறிக்கைகள் இடம்பெற்றிருக்கும். மருத்துவத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படும். இதன் சோதனை முடிவுகளே மருத்துவ ஜர்னல்களில் வெளியிடப்படும். இவை மருத்துவத்துறைசார் கருத்தரங்குகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் விவாதிக்கப்படும். பிறகு, முக்கியமான கண்டுபிடிப்புகள் மருத்துவப் பாடபுத்தகங்களில் இடம்பெறும். இதன் தொடர்ச்சியாக சிகிச்சைகளிலும் அந்த ஆய்வுகள் பின்பற்றப்படும்.
எனவே மருத்துவ ஜர்னல்கள் என்பவை அறிவியல் ரீதியாக நிரூபணமான ஆய்வுக்கட்டுரைகள் என்பதை மனத்தில் கொள்வோம்.
Diabetes Metabolism Research and Reviews எனும் அறிவியல் ஜர்னலில் 2011-ம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை எழுதிய மருத்துவப் பேராசிரியர் புசாட்டோ (Busetto) ‘சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குக் குறைவான கொழுப்பு உள்ள டயட் அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டு வந்தாலும், உயர் புரதமும், குறைந்த அளவு மாவுச்சத்தும் நிரம்பிய பேலியோ டயட், சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையைக் குறைத்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகளை குறைத்துயும், இதய நலனையும் மேம்படுத்துகிறது’ என்று கூறுகிறார். (இணைப்பு:http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21309052)
2008-ல், Nutritional Metabolism என்கிற லண்டன் மருத்துவ ஜர்னலில், பேராசிரியர் எரிக் வெஸ்ட்மெனின் (Eric Westman) ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் குறைந்த அளவிலான மாவுச்சத்து உள்ள பேலியோ டயட்டும், சற்று அதிக அளவு மாவுச்சத்து உள்ள லோ-கிளைசெமிக் டயட்டும் (Low Glycemic diet) ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.
இந்த ஆய்வில் 49 பேர் பங்கேற்றார்கள். இந்த 49 பேரும் அதிக உடல் எடை கொண்ட சர்க்கரை நோயாளிகள். அதில் பாதி பேருக்கு பேலியோ டயட் பரிந்துரைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு லோ-கிளைசெமிக் டயட்.
ஆறுமாத ஆய்வுக்குப் பிறகு கிடைத்த முடிவுகள்: பேலியோ டயட்டைப் பின்பற்றிய நோயாளிகளுக்கு எச்பிஏ1சி (HBA1C) அளவுகள் சராசரியாக 1.5 புள்ளிகள் குறைந்திருந்தன. உடல் எடை சராசரியாக 11 கிலோ குறைந்திருந்தது. இதயத்தின் நலனை வெளிப்படுத்தும் நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலின் அளவுகள் 5.6 புள்ளிகள் அதிகமாகியிருந்தன. இதனால் சர்க்கரை நோய்க்கு பேலியோ டயட்டே உகந்தது என இந்த ஆய்வு முடிவு கூறியது. (இணைப்பு:http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2633336/)
Journal of American College Nutrition எனும் மற்றொரு மருத்துவ ஜர்னலில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதிக எடை உள்ள 14 டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு பேலியோ டயட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் உடலின் இன்சுலினைக் கையாளும் திறன், பிளட் சுகர் அளவைக் கையாளும் திறன் மற்றும் மாரடைப்பு அபாயம்/இதய நலன் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மருத்துவ ஆய்வாளர் கிரெப்ஸ் (Krebs) தலைமையில் 2013-ம் ஆண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. 14 டைப் 2 சர்க்கரை நோயாளிகளும் ஆறு மாத காலத்துக்கு பேலியோ டயட்டைப் பின்பற்றினார்கள்.
முடிவில் அனைவருக்கும் சராசரியாக பத்து கிலோ எடை இறங்கியிருந்தது. உடலின் பிளட் சுகர் அளவைக் கையாளும் திறன் (HBA1C) சராசரியாக 1.1 புள்ளிகள் குறைந்திருந்தது. ஃபாஸ்டிங் சுகர் அளவுகள் கணிசமாக குறைந்து காணப்பட்டன. ரத்த அழுத்தம் பத்துப் புள்ளிகள் வரை குறைந்திருந்தது. நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலின் அளவுகள் 10 புள்ளிகள் வரை அதிகரித்திருந்தன. மொத்த கொலஸ்டிரால் அளவும், எல்டிஎல் கொலஸ்டிரால் அளவும் அதிகரித்திருந்தாலும், எச்டிஎல் கொலஸ்டிரால்/ டிரைகிளிசரைட்ஸ் விகிதம் கணிசமாகக் குறைந்து அவர்களின் இதயநலன் மேம்பட்டிருப்பதை வெளிப்படுத்தியது. 
*
பேலியோ டயட்டால் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வருவதையும், இதயநலன் மேம்படுவதையும், உடல்நலன் சார்ந்த இதர அளவுகள் முன்னேற்றம் காண்பதையும் ஆய்வுகளின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. மருத்துவ ஜர்னல்களில் பேலியோ டயட்டின் பலன்கள் குறித்து தொடர்ந்து எழுதப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகின்றன. மருத்துவத்துறை சார் கருத்தரங்குகளில் இவை விவாதிக்கப்படுகின்றன. ஆனால் பேலியோ டயட் தொடர்புடைய ஆய்வுகள் மருத்துவக் கல்லூரி நூல்களிலும், பாடத் திட்டங்களிலும் இடம்பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கான காரணமாக நான் கருதுபவை - பேலியோ டயட்தான் சர்க்கரை நோய்க்கு உகந்த டயட் எனத் தீர்மானம் ஆகி பாடநூல்களில் இடம்பெற்றுவிட்டால், இத்தனை நாள் சொல்லி வந்த ‘குறைந்த கொழுப்பு டயட்டே சிறந்தது’ என்கிற அறிவுரைகளுக்கு எதிரானதாக ஆகிவிடும். பல டயபடிஸ் அசோசியேஷன்கள் மீது வழக்குகள் தொடரப்படலாம். தவிரவும் குறைந்த கொழுப்பு உணவு மாடலை அடிப்படையாகக் கொண்டு பல உணவு நிறுவனங்கள் சீரியல், ஓட்ஸ் போன்ற காலை உணவுகளையும், தானிய அடிப்படையிலான நொறுக்குத் தீனிகளையும் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றன. பேலியோ டயட் ஏற்கப்பட்டுவிட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். அதனால் அவை அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் மூலமாகவும், தம் நிறுவனங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் தான் நடத்தி வரும் அறிவியல் ஆய்வுக்கழகங்கள் மூலமாகவும் பேலியோ டயட்டுக்கு எதிரான தடுப்பணைகளைக் கட்டியுள்ளன. இதனால்தான் மருத்துவ நூல்களில் பேலியோ டயட் குறித்து எதுவும் இடம்பெறுவதில்லை; ஊடகங்களிலும் இதற்கு ஆதரவான கட்டுரைகள் எழுதப்படுவதில்லை.
இத்தடைகளை எல்லாம் தாண்டி பேலியோ இயக்கம், மேற்கத்திய நாடுகளில் நூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெரும் மாற்றங்களை உண்டாக்கி வருகிறது. இதுபோன்ற ஒரு மாற்றம் இந்தியாவிலும் ஏற்படவேண்டும். பேலியோ டயட்டைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பங்களிப்பை அளிக்கவேண்டும். (உதாரணமாக, ஃபேஸ்புக், ட்விட்டர் வழியாக பேலியோ டயட் குறித்த தகவல்களை அளிப்பது).
டைப் 2 சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாதது என்கிற பிரமை உடைக்கப்படவேண்டும். ஆண்டுக்கணக்கில் சர்க்கரை வியாதியால் தவிக்கும் மக்களை, அந்தக் கொடுமையிலிருந்து விடுவிக்கும் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

நன்றி : தினமணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக