வியாழன், 25 மார்ச், 2010

ஏன் பிடி கத்தரிக்காய் வேண்டாம் ...?

இந்த கட்டுரை துணை எழுத்து என்னும் வலைப்பூவில் வெளியானது. வலைப்பூ உரிமையாளரின் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படுகிறது.

===========================================

ஏன் பிடி கத்தரிக்காய் வேண்டாம் ...?

சில மாதங்களாக இந்திய பத்திரிக்கைகள் விரட்டிக் கொண்டுள்ள பிடி கத்தரிக்காய்க்குப் பின்னால் உள்ள கதை மிக பெரியதும், ஆபத்துமானதும் ஆகும்.பிடி கத்தரிக்காய் என்பது Trans Genetic என்று சொல்லப்படும் மரபணு மாற்றப்பட்ட அல்லது மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் ஆகும்.கத்தரிக்காய் உடன் Cry1Ac என்ற மரபணுவை செலுத்தி இந்த வகை பிடி கத்தரிக்காய் உருவாக்கப்பட்டது.இந்த Cry1Ac என்ற மரபணு Bacillus thuringiensis என்ற, மண்ணில் காணப்படும் பாக்டிரியாவில் இருந்து பெறப்பது ஆகும்.

இந்த மாபெரும் சோதனையை 8 ஆண்டு காலமாக செய்து முடித்த இந்திய நிறுவனம் Maharashtra Hybrid Seeds Company Limited.(Mahyco). ஆனால், இது Monsanto என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து செய்த கண்டுபிடிப்பாகும்.

இந்த கதை தொடங்கியது சென்ற வருடம் அக்டோபரில்.Mayco தனது கண்டுபிடிப்பை Genetic Engineering Approval Committee (GEAC) of India விடம் சமர்பித்து, இந்தியாவில் இந்த பிடி கத்தரிக்காய் விதைகளை விற்பதற்கு அனுமதி வாங்கி விட்டது. எந்த ஒரு செயல் முறை நிரூபணமும் இல்லாத இந்த பிடி கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கியது மிகப்பெரிய கொந்தளிப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

பொதுவாக மரபணு மாற்றப்பட்ட விதைகளினால் ஏற்படும் நன்மைகள் என்று சொல்லப்படுவதில், மிக முக்கியமானவைகள் - பயிர்கள், பூச்சிகளுக்கு எதிரான அதிகப்படியான எதிர்ப்பு சக்தியுடன் வளரும் மற்றும் பல மடங்கு அதிக விளைச்சல் தரும் என்பதேயாகும்.இந்தியளவில் ஆண்டு ஒன்றுக்கு 1000 கோடி ருபாய் வரை பூச்சிகளால் கத்தரிக்காய் விளைச்சலுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகிறது.எனவே இந்த பிடி கத்தரிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்ற மாயை அரசால் உருவாக்கப்பட்டது.

விவசாய துறை அமைச்சர் சரத் பவார் GEAC அனுமதி வழங்கிய பிறகு மத்திய அரசால் இதை ஒன்றும் செய்ய முடியாது என்று மிக சீரியஸ் ஆக காமெடி செய்து பின்னர் இது சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கவனிக்க வேண்டியது என்று சொல்லி ஒதுங்கி விட்டார்.

அதன் பின்னர்தான் இதன் கடுமையான விளைவுகளை சுற்று சூழல் ஆதரவாளர்கள் கத்தி கத்தி சொன்ன பிறகு மீடியாக்கள் விழித்து கொண்டு நாடு முழுவதும் இதன் வீரியம் தெரிய தொடங்கியது.

ஏன் இந்த பிடி கத்தரிக்காய்க்கு இவ்வளவு எதிர்ப்புகள்...?மரபணு மாற்றப்பட்ட உயிர்களில் அது கத்திரிக்காயை இருந்தாலும் காயத்திரியாய் இருந்தாலும், பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆவதர்க்கான சாத்திய கூறுகள் மிக அதிகம்.அதுவும் பிடித்தது பிள்ளையாரா இல்லை குரங்கா இன்று கண்டறிவதற்கே 40-50 வருடங்கள் ஆகலாம்.

அதாவது இப்போது மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பயிர் செய்து, விளைந்த கத்திரிக்காயை நாம் அவியல் வைத்து சாப்பிட்டு, பின் நமக்கு திருமணமாகி, நமக்கு ஒரு குழந்தை பிறந்து அவனுக்கோ அல்லது அவளுக்கோ 20 வயது ஆகும்போது, அவர்களுக்கு தீடீர் என்று வரும் வியாதிக்காக மருத்துவரிடம் செல்லும்போதுதான் அன்று அவியல் சாப்பிட்ட கத்திரிக்காயில் இருந்த பிரச்சனைகள் குறித்து உண்மைகள் வெளிப்படும்.

இந்த பிடி கத்தரிக்காய் மூலம் கிட்னி முதல் நுரையீரல் வரை பாதிக்க வாய்ப்பு உண்டு என்று சர்வதேச நாடுகள் அறிவித்த போதும் இதை GEAC எப்படி அனுமதித்தார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுப்பப்பட்டது.ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இந்த பிடி கத்தரிக்காய்யை தடை செய்து உள்ளது.

இந்த அனுமதிக்குப் பின்னால் GEAC விஞ்ஞானிகளுக்கும், அமெரிக்க நிறுவனமான Monsanto விற்கும் அமெரிக்க அரசின் தூண்டுதலினால் மிக பெரிய லாபி நடந்திருக்கக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டது.

GEAC இதற்கான அனுமதியை, விஞ்ஞானிகளின் வெறும் பேப்பர் நிரூபணங்களை வைத்து கொடுத்ததுதான் ஜீரணிக்க முடியாத ஒன்று.

இந்தியாவில் ஜனநாயகம் தோற்றுபோவது, இது போன்ற இடங்களில் தான்.ஒரு வேளை இது பெரிய பிரச்னை ஆக்கப்படாமல், நாடு முழுவதும் இந்த விதைகள் பயிரிடப்பட்டு நாம் அனைவரும் மரபணு மாற்றப்பட்ட அவியல் உண்டிருந்தால், நமக்கு அடுத்த சந்ததி கண்டிப்பாக அதற்கான விலையை கொடுக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும்.

நம்முடைய சமுதாய பொறுப்பின்மையும், சகிப்புத்தன்மையும் பல இடங்களில் காசாக்கப்படுகின்றன, சில இடங்களில் பல ஆயிரம் உயிர்களை பலி வாங்குகின்றன.

நம்மை சுற்றி நடப்பவற்றை நாம் கேள்வி கேட்காமல் கடந்து போவதால் தான், அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நம்மை மிக சுலபமாக ஏமாற்றுகிறார்கள்.

அதிஷ்டவசமாக பிடி கத்தரிக்காய் விசயத்தில் அப்படி எதுவும் நடக்க வில்லை.ஆனால் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எவ்வளவோ முடிவுகள், நாள் தோறும் நம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு தான் வருகின்றன.அதை வெளியே கொண்டு வந்து தடுக்கும் திறமையும் உரிமையும் ஊடகங்களுக்கு மட்டுமே உள்ளன.
நன்றி: http://thunaiezhuthu.blogspot.com/2010/03/blog-post.html

புதன், 24 மார்ச், 2010

இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - 1

இயற்கை மருத்துவம்
(தத்துவங்களும் செய்முறைகளும்)
- மகரிஷி க. அருணாசலம்

நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கென அமைந்தது. உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் உடம்பைப் போல மனித உடம்பும் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும் தன்மையது. நிலையற்ற தன் இயல்பைக் கண்ட மெய் ஞானியர் சிலரும், சித்தர்கள் பலரும் இதனை இழிவாகவே கருதியுள்ளனர். சைவ சமயக்குரவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் இதனை,

''பொத்தை யூன்கவர் புழுப்பொதிந்துளுத்தகம்
பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதி நின்றிடர் கடற்
கழித்தலைப் படுவேனை.''

என்று பாடுகின்றார். பிறரும் இதனைப் ‘புன்புலால் யாக்கை’ என்றும் காற்றடைத்த பை என்றும் கருதி அலட்சியம் செய்துள்ளனர். திருமூலர் போன்ற யோகியர் கூட ‘உடம்பினை முன்னம் இழுக்கென்றி'ருந்திருக்கின்றனர். அவர்கள் இவ்வுடம்புள்ளே ‘உத்தமன்’ இருப்பதைக் கண்ட பின்னரே 'உடம்பினை ஓம்பும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்து'ள்ளனர். ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பது இவர்கள் கண்ட உண்மை. 'ஊன் உடம்பு ஆலயம்' இதனை உரிய வகையில் போற்றிப் பேண வேண்டுமென்பது இவர்களது உறுதியான முடிவு.

மனித உடல் அற்புதமான இயந்திரம். இது புரதம், மாவுப் பொருள், சர்க்கரை, கொழுப்பு, தாது உப்புக்கள், தண்ணீர் முதலியவைகளாலும் ஓரளவு பலவித வைட்டமின்கள் சேர்க்கையாலும் ஆனது என்று புறக்கருவிகள் கொண்டு ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இந்தப் பொருள்கள் ரசாயன முறையில் கூடுவதாலேயே உயிரும் தோன்றுகிறது. அதற்கு தனியே இருப்புக் கிடையாது என்பது இவர்களது கூற்று. மெய்ஞானியர்களோ இதற்கு மாறாக இப்பொருள்களைக் கூட்டுவதே உயிர்தான் இவ்வுயிரைப் பலரும் பல பெயரிட்டு அழைக்கின்றனர். ஜீவன் என்றும், ஆத்மா என்றும், பிராணசக்தி என்றும் பலர் பலவாறாகக் கூறுகின்றனர். உடல் பஞ்ச பூதங்களாலானது என்பது இவர்கள் கண்டது பஞ்சபூதங்களே புரதம், சர்க்கரைப்பொருள், மாவுப் பொருள், கொழுப்பு, தாதுப்பொருள், வைட்டமின் முதலியவையாக உருவெடுத்துள்ளன. இப்பொருட்கள் எல்லாம் சேர்ந்து 30 சதவிகிதம்தான். உடம்பின் எடையில் எஞ்சிய எழுபது சதவிகிதமும் தண்ணீர் இது மட்டுமல்லாமல் காற்றும் ஆகாயமும் மனித யாக்கையை பிணைத்து வைத்து இயக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

திருவள்ளுவர் போன்றவர்கள் வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள். பஞ்சபூதங்களைத்தான் இவர்கள் முக்கூறிட்டுக் கூறுகின்றனர். ஆகாயமும் காற்றும் சேர்ந்து வாதமாகவும், சூடு, பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும், கபமாகவும் பெயரிடப்படுகின்றன. ஒன்றை ஐந்தாகவும், மூன்றாகவும் பகுத்துப் பேசுவது நமது மரபு. தத்துவங்களை முப்பத்தாறாகவும், தொண்ணூற்றாறாகவும் பேசுவதும் உண்டு. விரிதலும், சுருங்குதலும் வசதி கருதியேயாகும்.

உண்மை என்னவென்றால் நுண்மையிலும் நுண்மையான ஒன்றாகிய இம்முதற்பொருளின் தன்மை அல்லது குணம். அறிவும் ஆனந்தமும் உடையது என்று பருமையிலிருந்து உண்மைக்கு ஆழ்ந்த தியானத்தின் மூலம் சென்ற சித்தர்கள் கண்டு கூறுகின்றனர்.

இந்நுண் பொருளே தனது ஆற்றலினால் அருவப் பொருளாகவும், அருவுருவப் பொருளாகவும், உருவம் தாங்கிய பருப்பொருட்களாகவும் மலர்ந்துள்ளது. இதனைத் திருமூலர் திருமந்திரப் பாடல் ஒன்றில் தெளிவாக விளக்குகின்றார்.

'ஒன்றவன்தானே, இரண்டவன் இன்னருள்
மூன்றுள் நின்றனன், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச்
சென்றனன், தானிருந்தான் உணர்ந்து எட்டேன்’

இவ்வாறு மூலப்பொருளாகிய அவ்வொன்றே பலவாக உருவெடுத்துள்ளது.

இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, ரசம் முதலியவற்றின் கூட்டால் ஆனது இவ்வுடம்பு என்பது சாதாரண மக்களும் பார்த்துத் தெரிந்து கொள்ளக்கூடியது. இதனையே துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்ற அறுசுவைகளின் சேர்க்கையாலும் உண்டாவது எனலாம். துவர்ப்பும் புளிப்பும் வாதம்; உப்பும் கசப்பும் பித்தம்; இனிப்பும் காரமும் கபம் என முப்பொருளாகப் பிரிக்கலாம். இப்படி பிரித்தறிதல் உடல் ஓம்பலுக்கு உதவியாக இருக்கும்.

இந்த உடம்பு தன்னிறைவுடையது; தானியங்கி. இதனுள் நாம் உணவுப்பண்டங்களைப் போட்டால், அவற்றை உயிர் பண்டங்களாக்கி, உடல் வளர்ச்சிக்கும் வேலையால் உண்டாகும், குறைவை நிரப்புவதற்கும் உடல் தானே பயன்படுத்திக் கொள்கின்றது.

உடல் ஒரு அற்புத இயந்திரம். இதனைப் பார்த்தே பிற இயந்திரங்களும் ஆக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையாகாது. இது தனக்கு வேண்டிய பொருள்களைத்தானே உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பெரிய பாக்டரி. இதில் எத்தனையோ பிரிவுகள் இயங்குகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றுவதை எண்ணி எண்ணி வியப்பிலாழ்கின்றனர் அறிஞர் அனைவரும்.

பஞ்சபூதங்கள் அல்லது வாத, பித்த, கபம் என்னும் முப்பொருள்களும் சரியான அளவில் இருப்பதே ஆரோக்கியநிலை. இதில் ஏதாவதொன்று மிகுதியாகவோ, குறைவாகவோ இருப்பது நோயின் அறிகுறி. இதனைத்தான் திருவள்ளுவர் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்கின்றனர். இம்மூன்றின் சமநிலை தவறியபோது உடம்புக்குத் துன்பம் உண்டாகும். மிகுதியானதைக் குறைப்பதும் குறைவை நிறைப்பதும் ஆரோக்கியத்திற்கு வழிகோலும்.

(இயற்கை வளரும்...)

ஞாயிறு, 21 மார்ச், 2010

பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க!

அன்பர்களே. அமெரிக்க மோகத்தில் மேல்நாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு உடல் நலத்தை இந்தியர்களாகிய நாம் கெடுத்துக் கொண்டு வருகிறோம்.
ஆனால் அமெரிக்கர்கள் நமது பாரம்பரிய உணவு வழக்கங்களே சிறந்தவை என்று இந்திய உணவு முறைகளை பின்பற்ற தொடங்கி விட்டார்கள். அவர்களது வியாபாரம் தடை படாமல் இருக்க பெப்சி, கோக், லேய்ஸ், குர்கூரே மற்றும் பர்கர், பீட்சா போன்றவைகளை நம்மிடையே மார்க்கெட் செய்கிறார்கள். கீழே வரும் கட்டுரை உண்மை நிலையை விளக்குகிறது.
====================================================

அமெரிக்காவில், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும், 'பர்கர்' வகை தான், 'ஹாட் டாக்ஸ்' என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிக்கவும், ஒபிசிட்டி என்று உடல் எடை அதிகரிப்பதற்கும் இந்த சிக்கன், மட்டன் பர்கர் தான் காரணம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்த பின், இப்போது குழந்தைகளை இதன் பிடியில் இருந்து மீட்க பெற்றோர் போராடி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது, மதிய வேளையில் சாப்பிடும் உணவுகளில் அதிக கொலஸ்ட்ரால், உறைந்த கொழுப்பு உள்ள உணவு வகைகள் டிபன் பாக்சில் அதிகம் இடம் பிடிக்கின்றன; போதாக் குறைக்கு, 'ஹாட்டாக்ஸ்' பர்கரையும் குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவதால், பள்ளிப் பருவத்திலேயே ஒபிசிட்டிக்கு ஆளாகி விடும் ஆபத்து ஏற்படுகிறது; அதனால், புரோட்டீன், நார்ச்சத்துள்ள உணவுகளுக்கு மாற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதன் விளைவு, இப்போது அமெரிக்கர்கள் பலரும், நம்மைப் போல காய்கறி, பழங்களுக்கு மாறி வருகின்றனர்; கேக், ஐஸ்கிரீம், பர்கர், பிட்சா, கூல் டிரிங்ஸ்களை குறைத்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கான சத்துணவுகளை பட்டியலிட்டுள்ளது அமெரிக்க சுகாதார நலத்துறை. அதில் உள்ளவை—

* அரிசி, கோதுமை உட்பட தானிய வகை உணவு தினமும் முக்கியம்.
* சுகாதாரமான நொறுக்குத்தீனி பாப் கார்ன்.
* கேரட், வெள்ளரி, தக்காளி,வெங்காயம் கொண்டு தயாரிக்கப்பட்ட வெஜ் சாலட்.
* குழந்தைகளாக இருந்தால் பிசைந்த உருளைக்கிழங்கு உணவு.
* திராட்சை, பாதாம் உட்பட உலர்ந்த பழங்கள்.
* பழங்கள் அல்லது பழச்சாறுகள்.
* மீன், முட்டை, பால்.
* புரோட்டீன் தரும் சோயாபீன்ஸ்.
*வேர்க்கடலை போன்ற கடலை வகைகள்.
* பசலைக்கீரை உட்பட கீரை வகைகள்.


அமெரிக்காவில் உள்ள சராசரி மக்கள், தங்கள் வாழ்க்கை முறையை பல வகையில் மாற்றி வருகின்றனர். முந்தைய அதிபர் கிளின்டன், இந்தியா வந்தபோது, நம் திருமண, குடும்ப கலாச்சாரத்தை பார்த்து வியந்தார்.

அதுபோல, 'நான் ஒரு மகளை பெற்ற தந்தையாக கவலைப்படுகிறேன்; அவளை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்' என்று சமீபத்திய மாஜி அதிபர் புஷ் , இந்தியா வந்தபோது கூறினார்.

இப்படி அதிபர்கள் மட்டுமல்ல, சாதாரண அமெரிக்கர்களும், இந்தியாவை பார்த்து தான் தங்களை மாற்றி வருகின்றனர். குறிப்பாக, சத்துணவுகள் என்றால், இந்தியாவின் உணவுப்பழக்கம் தான் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் உணர்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் பல ஆண்டாக கொடிகட்டிப் பறந்த ஹாட் டாக்ஸ் என்ற பர்கர் உணவு வகை, இப்போது குட்டீஸ்களின் லஞ்ச் பாக்சில் இடம் பெறுவதில்லை. அதற்கு பதிலாக, பழங்கள் தான் இடம் பெறுகின்றன.
- எஸ்.ஏ.குருராஜ்
(நன்றி: தினமலர் மார்ச் 20,2010,12:56 IST)
***