வியாழன், 6 அக்டோபர், 2011

உணவை மாற்றினால் உலகை மாற்றலாம்!


அது எப்படி உணவை மாற்றினால் உலகை மாற்ற முடியும்?  

புரியவில்லையே என நீங்கள் திகைப்பதை உணர முடிகிறது.  

ஆம்! நிச்சயமாக உலகை மாற்ற முடியும் என்பதைத்தான் இக்கட்டுரை சிந்திக்கிறது.

உலக உயிர்களெல்லாம் இன்ப வாழ்வையே நாடுகின்றன.  இன்பம் துய்க்க ஏதுவான கருவியாக அமைந்துள்ளது நமது உடம்பு.  அறிவு விளக்கமும் இன்பப் பேறும் உடலால் உண்டாகும். 

உடம்பு உயிருடன் இருந்து துணை புரிவதைப் போல வேறெதுவும் துணை புரிவதில்லை. உட ல்நலம் உயிர் நலனாகும் இத்தகைய உடலை நல்வழியில் பேணுதல் நம் தலையாய கடமையல்லவா? 

உடம்பை நல்வழிப் பேணுதல் எவ்வாறு? 
இதற்கான வழித்துறைகள் பலஉண்டு. எனினும் உண்டி முதற்றே உலகு என்பதற்கொப்பவும், உடம்பென்பது உணவின் பிண்டம் என்ற புறநானூற்று வரிகளுக்கேற்பவும், உடலைச் சோற்றுத்துருத்தி என்ற பட்டினத்தாரின் சொல்லுக்கேற்பவும் உணவு வழி நம் உடம்பை ஓம்பலாம்.  

அந்த உணவு எப்படி இருக்க வேண்டும்? 
ஊட்டம் தரும் உணவாகவும், ஊக்கம் தரும் உணவாகவும் இருக்க வேண்டும். 

வெள்ளை உணவு கொள்ளை நோய் :
பிறப்பு முதல் இறப்பு வரை நாம் உணவில் பல தவறுகள் செய்கிறோம்.  ஆகவே தற்போது உண்ணும் வகைகளிலும் முறைகளிலும் நாம்; மாற்றம் கொண்டு வர வேண்டும். நம்முடைய முழுமுதல் உணவாக இருப்பது அரிசிச் சோறு. இது வெண்மை நிறமுடையது.  உள்ளம் வெள்ளையாக இருக்க வேண்டும். ஆனால் உணவு வெள்ளையாக இருக்கக் கூடாது. ஏனெனில் தீட்டிய அரிசி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், மாவு, உப்பு, பால், சீனி முதலிய வெள்ளை உணவுகள் கொள்ளை நோய்களை உண்டாக்குகின்றன.

அரிசி: தீட்டிய அரிசியிலும், மாவிலும் எந்த உயிர்ச்சத்தும் இல்லை. நார்ச்சத்தும் கிடையாது.  எனவே மலச்சிக்கல் தவிர்க்க முடியாதது.

எண்ணெய்:சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று.  அதுவும் சமைத்த எண்ணெயை மீணடும் மீண்டும் பயன்படுத்தினால் அதிலுள்ள மிகுக்கொழுப்பினால் இரத்தக் குழாய்கள் தடிமனாகி மாரடைப்புக்கு வழி வகுக்கும்.

உப்பு: நாம் சுவைக்காகச் சேர்க்கும் கடல் உப்பு காய்கறிகளிலுள்ள தாதுஉப்புகளைக் கெடுத்துவிடும். அதனால் கடல்உப்பைத் தாதுஉப்புகளின் திருடன் என்பார்கள்.

பால்: சளியைப் பெருக்கும் உணவு பால்.  பால் சைவ உணவல்ல.   பாலைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு நெஞ்சக நோய்கள் அதிகம் ஏற்படும்.

சீனி: சீனியை வெண்மையாக்க சோடியம் சல்பானேட் என்ற ரசாயன விஷத்தைச் சேர்க்கிறார்கள்.இது எலும்புக்குள் உள்ள மஜ்ஜையை அழித்துவிடும். மேலும், வெள்ளைச் சீனி நம் உடலிலிருந்து வைட்டமின்களை எடுத்துக் கொண்டு தான் சீரணமாகும். எனவே சீனியை ஒரு வைட்டமின் திருடி என்பார்கள்.

அது சரி! 

இந்த உணவுகள் தானே கடைகளில் நமக்குக் கிடைக்கின்றன.?

இவற்றுக்கு மாற்று உணவுகள் உண்டா? 

அவை நமக்குக் கிடைக்குமா? என்றெல்லாம் நீங்கள் கேட்பது புரிகிறது. 

வெள்ளை உணவுகளுக்கு மாற்று உணவுகள் நிச்சயம் உண்டு.அவை சந்தையில் கிடைக்கும். தேடுங்கள். கிடைக்கும் நல்ல உணவுகளைத் தேடிச் சென்று வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதுதான் அறிவுடைமை!  

இனி நாம் தவறான உணவு எது? சரியான உணவு எது என்பதைப் பார்ப்போம். 

கீழ்க்கண்ட தவறான உணவு (வெள்ளை நச்சு)க்கு மாற்றாக சரியான உணவு (இயற்கை உணவு)களை உண்ணப் பழகலாம்.

தீட்டிய அரிசி (வெண்மை): அரிசிக்குப் பதிலாக வரகு அரிசி, கைக்குத்தல் அரிசி, கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை. இவைகளை குருணையாக உடைத்து வேக வைத்து காய்கறிகள் சேர்த்து கிச்சடியாகவும் தயாரிக்கலாம்.  

உப்பு(வெண்மை): உப்புக்கு பதிலாக பொட்டாசியம், இந்துப்பு, கருப்பு உப்பு, நெல்லிக்காய், நெல்லிப்பொடி, புளி, மாங்காய், எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு சேர்த்து சுவையாக உணவு தயாரிக்கலாம்.  

சீனி(வெண்மை): சீனி(வெள்ளைச்சர்க்கரை)க்குப் பதிலாக பாகுவெல்லம், கருப்பட்டி, அச்சு வெல்லம், பனை வெல்லம்,  நாட்டுச் சர்க்கரை, தேன், பேரீச்சை, உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். 

பால் (வெண்மை): பாலுக்குப் பதிலாக தேங்காய்ப் பால், கேழ்வரகுப் பால், சோயாப் பால், சோளப் பால், வேர்க்கடலைப் பால், உளுந்துப் பால், கம்பு முளைப்பால், தினைமுளைப்பால் போன்ற தானிய வகைகளை முளைக்க வைத்து மிக்சியில் ஆட்டி பால் எடுத்து உண்ணலாம். 

காபிக்குப் பதிலாக  : சுக்குமல்லி காபி, காய்கறி சூப், மூலிகைச் சாறு, தானியச் சாறு, ஓட்ஸ் சாறு, சத்துமா பானம். 

பழக்கடைக்கும், 
காய்கறிக்கடைக்கும் 
செல்லப் பழகிக் கொண்டால் 
மருந்துக் கடைக்குச் 
செல்லத் தேவையில்லை.

நினைவில் கொள்ளுங்கள்:
  • நாள்தோறும் இருவேளை உணவு போதும். 
  • இரு வேளை உணவுகளுக்கு இடையே 7 மணி நேர இடைவெளி தேவை.  
  • இரவு உணவு இருட்டுக்கு முந்தி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • உங்கள் உணவில் அதிக அளவு இயற்கை உணவுகள் பழங்கள், பசுங்கலவைகள்,  சூப்புகள் இடம் பெறட்டும்.
  • அமைதியான சூழலில் மகிழ்வுடன், மெதுவாக நன்றாக மென்று உண்ணுக. 
  • உண்ணும் போது உணவில் மட்டுமே கவனம் செலுத்துக.
  • நாள்தோறும் சுமார் 2 1/2 (இரண்டரை) லிட்டர் தண்ணீரை, 8 வேளைகளில் சுவைத்து அருந்துக. 
  • நாள்தோறும் குறைந்தது 6 அல்லது 7 மணிநேரம் நிம்மதியாக உறங்குக. 
  • காலை எழுந்தவுடன் சிக்கலின்றி மல ஜலம் கழிக்கவும்.
உலகை மாற்றுவது எவ்வாறு? 
  • தனிமனிதன் திருந்தினால் சமுதாயம் திருந்தும். 
  • சமுதாயம் திருந்தினால் நாடு திருந்தும். 
  • ஒழுக்கத்தைத் திருத்தினால் மட்டும் போதாது.  
  • உணவையும் திருத்த வேண்டும். 
இந்த இயற்கை நலவாழ்வியல் சிந்தனைகளை பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு முறையாக உணவுப் பாடங்கள் வழியாக கற்பிக்க வேண்டும். அரசு முன்வந்து செயல்படாவிடினும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. 

சமூக சேவையாக செயல்படும் இயற்கை நல வாழ்வியல் ஆர்வலர்களின் இலவச ஆலோசனை உதவிகளையும் கேட்டுப் பெறலாம்.

குற்றவாளிகள் உருவாகுவதற்கு அவர்களின் உணவும் ஒரு காரணியாகும்.எனவே, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு இயற்கை உணவுகள் வழங்கப்பட்டால். உணவுகள் வழியாக அவர்களின் குணங்களும் மாறும். அவர்கள் நல்லவர்களாக சமூகத்திற்குப் பயன்படுபவர்களாக வெளியே வருவார்கள்.இயற்கை உணவால் பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் திருந்தி நல்வழி நடப்பார்கள்.

கூட்டுக்குடும்பங்கள் சிதையாமலிருக்க இயற்கை உணவு நல்ல தீர்வாகும். 
  • குடும்பத்திலுள்ள பேதங்கள் மறையும். 
  • சிறு சிறு குற்றங்களை மறந்து குடும்பத்தினர் குலவி மகிழ இயற்கை உணவு வழிவகுக்கும். 
இவ்வகையான நடவடிக்கைகளால் உணவை மாற்றி நிச்சயம் உலகையும் மாற்றலாம்! 

நன்றி: 
திரு. மா. உலகநாதன் 
(முனைவர் பட்ட ஆய்வாளர்)
இணைச்செயலாளர், 
ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்
திருநீலக்குடி. 
செல் 9442902334
இமெயில்:
 
worldnath_131149@yahoo.co.in