புதன், 13 ஏப்ரல், 2011

அளவுச் சாப்பாட்டின் அற்புதங்கள்.

மனித உடல், இறைவைனின் அற்புதப் படைப்பாகும். நல்ல கட்டுக் கோப்புடன் வளர்ச்சியடைந்த மனித உடலை விட அழகானதொரு பொருள் வேறெதுவும் இருக்க முடியாது. மனித உடலின் அமைப்பு அதிக நுட்பமும், மிக நுண்மையானதுமாகும். அது வியத்தகு முறையில் கூரிய அறிவாற்றலுடன் மிக நேர்த்தியாக தன் வேலையைச் செய்து கொள்கிறது.


அவ்வுடலுக்கு ஏதுவாக, பொருந்தும் உணவுகளை மருந்து போல நாம் உண்ண வேண்டும். நிறைவான அமைதியான வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பதில் உணவே முதலிடம் பெறுகிறது. அதனாற்றான், உண்டி முதற்றே உலகு, உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றார்கள் நம் முன்னோர்கள்.


எவ்வாறு உண்பது?


அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று என்று வைத்துள்ளனர்.


அளவுக்கு மேல் உண்பது உயிராற்றலைக் குறைக்கும். ஏனெனில், அந்த உணவைச் செரிமானம் செய்வதற்கே உயிராற்றல் அதிகமாகச் செலவாகும்.


அதிகமாக உண்ணத் தூண்டும் விருந்துகளை நாடி ஓடினால் மருந்துகள் நம்மை விரட்டும். நோய்கள் நம்மை மருட்டும்.


தாகம் தீர்க்கவும், உடலுக்கு ஊட்டந்தரவும், உடல் நலன், உடல் உரம், மகிழ்ச்சி, இவற்றைப் பேணவும் தான் உணவுண்பது.


தத்தம் பசியை ஆற்றிக் கொள்ள மக்களும் விலங்குகள் முதலிய ஏனைய உயிரினங்களும் உணவை எந்த முறையில் உட்கொள்ளவேண்டும் என்பதை அறியாமல் உணவு உண்டு வருகின்றனர்.


உணவின் இரகசியங்கள்.


மனிதன் உணவுண்ண பசி தேவை. பசி என்பதை விட, மெய்ப்பசி என்பதே சரியானது. அது என்ன மெய்ப்பசி? நன்றாக பசிஎடுத்து நாவில் சுவை ஊறியிருக்கும் நிலையே மெய்ப்பசி.


அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல

துய்க்க துவரப் பசித்து. (குறள் :944)


முன்பு உண்ட உணவு செரித்த நிலைமைகளை அறிந்து நன்றாகப் பசித்த பின்பு, உடல் நிலைக்கும், கால நிலைக்கும் இடத்திற்கும் மாறுபாடு இல்லாத உணவுகளை உண்ண வேண்டும் என்கிறார் வாழ்வியல் முன்னோடி வள்ளுவப் பேராசான்.


அளவுக்கு மிஞ்சினால்...


அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (குறள்:943)


வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, அளவாகச் சாப்பிடுவதை நாம் அவசியம் கற்க வேண்டும். நம் உணவின் அளவை நாமே தீர்மானிக்க வேண்டும். பிறரின் அன்பிற்காகவோ, வற்புறுத்தலுக்காகவோ நாம் உண்ணுதல் கூடாது. அதிகச் சாப்பாடு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, நாம் உண்ணும் உணவின் அளவை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.


அதிக உணவு உண்டால், அஜீரணமும், மலச்சிக்கலும் ஏற்படும். இவை சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள் என்கிறார் சுவாமி சகஜானந்தா. செரிக்காத உணவால், சளி, நாக்கில் பதிவு, கண்ணில் பீளை, வாந்தி, புளிச்ச் ஏப்பம், ஏற்பட்டு இருதய நோய், சர்க்கரை வியாதி, மூலம் என நோய்களோடு நாம் வாழ்க்கையைக் கழிக்க வேண்டி இருக்கும்.


பசித்து, அதுவும் முன் உண்ட உணவு செரித்து விட்டதா என அறிந்து, துவரப் பசித்த பிறகே சாப்பிட வேண்டும். பசி நீங்கினால் அதுதான் அளவு. பசியோடு உட்கார்ந்து, பசியோடு எழுந்திருத்தல் கூடாது.


மிகு உணவை எப்படித் தவிர்ப்பது?


துணை உணவுகளான சாம்பார், ரசம், மோர்க்குழம்பு போன்றவற்றையும், தொடுகறிகளையும் தவிர்க்கலாம். மென்று சாப்பிட்டால் அதிக உணவு தேவைப்படாது. ஒரு உணவை, அதன் சுவை நாவில் மறையும் வரை சுவைக்க வேண்டும்.


உணவு ஒழுங்கு.

1. முளைக்க வைத்த தானியம் மற்றும் தேங்காய், பழங்கள்.

2. காய்கறிப் பசுங்கலவை.

3. இரண்டு வேளை மட்டுமே ஒரே வகையான உணவு.

4. இருட்டுவதற்கு முன் இரவு உணவு.


நன்மைகள்:

  • அஜீரணம், மலச் சிக்கல் இருக்காது. தொப்பை விழுந்து, இதய நோய் வராது.
  • உண்பதற்காக வாழ்கிறோமா அல்லது வாழ்வதற்காக உண்கிறோமா என்பதை சிந்தனையில் கொள்ள வேண்டும். நம் உடம்பே நமக்குச் சுமையாக ஆகக் கூடாது அல்லவா? இறந்தவன் கனமாக இருந்தாலும் கேலிக்கு ஆவான் அல்லவா?
ஆகவே நாம் உண்ணும் உணவை நாமே நிர்ணயம் செய்து கொள்வோம். நலமாக வாழ்வோம். !

(சிவகாசியில் நடைபெற்ற இயற்கை வாழ்வியல் மாநாட்டில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் திரு இர.இராமலிங்கம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)

நன்றி:
இந்தக் கட்டுரையை அனுப்பித் தந்திருக்கும் கும்பகோணம், திரு மா.உலகநாதன், எம். ஏ, அவர்களுக்கு என் இதய நன்றி. திரு மா.உலகநாதன் அவர்கள் தற்போது வரலாற்றுத் துறை முனைவர் பட்ட ஆய்வாளராக, திருவிக அரசு கலைக்கல்லூரி, திருவாரூரில் செயலாற்றி வருகிறார். மேலும் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் துணை தலைவராகவும் இருக்கிறார். அவரது மின்னஞ்சல்: worldnath_131149@yahoo.co.in

இந்த அருமையான கட்டுரைக்கு உங்கள் பாராட்டுக்களை தெரிவிக்க விரும்பினால் அவருக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது இந்த வலைப்பூவில் பின்னூட்டமாகவோ தெரிவிக்கலாம்.

இயற்கை உணவே
நோய் தீர்க்கும் மருந்து.

குலசேகரன் பட்டினம் இயற்கை நலவாழ்வு மையத்தால்
தேசீய இயற்கை மருத்துவக் கழகம்
(National Institute of Naturopathy-Pune)
ஆதரவுடன் நடத்தப்படும்

ஒரு வார இயற்கை மருத்துவ முகாம்

நாள்:- 01-05-2011 to 07-05-2011


நடைபெறும் இடம்: இயற்கை வாழ்வு நிலையம்
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்)
குலசேகரன் பட்டினம்
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.

கட்டணம் ரூ.600/-அறுநூறு மட்டும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
திரு Dr. மூ.ஆனையப்பன்,
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )
9944042986, 9380873465

இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள வேண்டுகிறேன்.
அஷ்வின்ஜி, சென்னை
Email: ashvinjee@gmail.com

வாழி நலம் சூழ.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

3. கனி இருப்ப
அனைவருக்கும் கர வருஷத்து இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். திருவள்ளுவரின் மற(று)க்க முடியாதகனி இருப்ப என்னும் வார்த்தைகளை அவரிடம் இருந்து இரவல் வாங்கி ஆதி பகவனின் ஆசியுடன் இந்த இயற்கை நலவாழ்வியல் தொடரை துவங்குகிறேன்.
இயற்கை நலவாழ்வியல் ஒரு மருந்தற்ற மகத்துவம்.
இது மருத்துவ முறை அன்று.
ஒன்று ஒரு வாழ்வியல் விஞ்ஞானம்.
வாழ்க்கை முறை.
இயற்கை உணவுகளின் (குறிப்பாக பழ வகை உணவுகளின்) மகத்தான பயன்களை, ஒரு பயனாளர் என்ற முறையில் நான் சொந்தமாக அனுபவித்த நேரடி அனுபவங்கள், கேட்டு அறிந்தவை, பயிற்சிகளில் கற்றவை, மேலும் பல புத்தகங்களில் படித்தவை என பல வகைகளில் எனக்கு புரிய வந்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நலம் அல்லது ஆரோக்கியம் என்றால் என்ன?
உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) நலம் என்பதை இவ்வாறாக விளக்குகிறது.
நலம் என்பது முழுமையான உடல், மனம் மற்றும் சமூகத்தில் சிறப்பாக விளங்கும் ஒரு நிலை. ஊனமற்று இருப்பதோ அல்லது நோயற்று இருக்கும் நிலை மட்டுமே நலம் என்று சொல்லமுடியாது. (Health is a state of complete physical, mental and social well being and not merely the absence of disease and infirmity)
நாம் முன்னெப்போதையும் விட ஆரோக்கியத்துக்காக அதிகமாக செலவழிக்கிறோம். முன்னெப்போதையும் விட அதிக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம். எனினும் முன்னெப்போதையும் விட நோய்களால் பாதிக்கப்படுகிறோம்.
ஆங்கில மருத்துவம் என்று அழைக்கப்படும் நவீன மருத்துவம் இப்போது எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ முறையாக இருக்கிறது. ஆங்கில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் புதிது புதிதான மருந்துகளை கண்டு பிடிப்பதை விட புதிது புதிதான நோய்களை கண்டு பிடிப்பதில் தமது நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவழிக்கின்றன. நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமாக நிறைய கருவிகளைக் கண்டு பிடித்து விட்டார்கள். நாளுக்கு நாள் புதிய அறுவை சிகிச்சை, புதிய நோய்கண்டுபிடிக்கும் கருவிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒருவர் நோய்வாய்ப்பட்டால் மருத்துவரிடம் செல்கிறார். அவருக்கு மருத்துவர் உடனே சில மருத்துவ பரிசோதனைகளை செய்யச் சொல்லி அறிவுரை கூறுகிறார். எல்லாவற்றிற்கும் எக்ஸ்ரே, இரத்த பரிசோதனை, ஈசீஜி, ..ஜீ., ஸ்கான் டெஸ்ட் என்று புதிது புதிதாக நம்மை பரிசோதனை எடுக்கச் சொல்கிறார்கள். நாமும் ஆயிரக் கணக்கில் செலவழித்து அவற்றை எடுத்துக் கொள்கிறோம். ரிப்போர்ட்டை பார்த்ததும் மருத்துவர், உங்களுக்கு இந்த நோய் வந்திருக்கிறது. அதற்கு இந்த அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இந்த மருந்துகளை சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறுகிறார். அவர் சொன்னபடியே எல்லாம் செய்தீர்கள். மாத்திரை சாப்பிட்டதால் வியாதி குணமானதா? நோய் குணமானது போல தோன்றினாலும் விரைவிலேயே பக்க விளைவுகள் உண்டாகின்றன.
டாக்டரிடம் போவீர்கள். மீண்டும் அதை கண்டு பிடிக்க டாக்டர் உங்களுக்கு மேலும் சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்லுவார். மீண்டும் மாத்திரைகள், அறுவை சிகிச்சை என்று தொடர் செலவு.
பூரண குணம் உங்களை வந்து அடைந்ததா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானோர் நிலைமை..
ஏன் இந்த நிலைமை.? அடுத்த தொடரில் பார்ப்போமா?
(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ...
அஷ்வின்ஜி.