கனி இருப்ப.. இயற்கை நலவாழ்வியல் தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனி இருப்ப.. இயற்கை நலவாழ்வியல் தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மே, 2011

5. கனி இருப்ப... இயற்கை நலவாழ்வியல் தொடர்..

(அஷ்வின்ஜி வழங்கும் இயற்கை நலவாழ்வியல் தொடர்)

முந்தைய இடுகைகளுக்கு:

பகுதி ஒன்று: அறிவிப்பு.

பகுதி இரண்டு: முன்னுரை மற்றும் அறிமுகம்.

பகுதி மூன்று: இயற்கை நலவாழ்வியல் ஒரு மருந்தற்ற மகத்துவம்.

பகுதி நான்கு :- இயற்கை மருத்துவம் என்றால்…?

பகுதி ஐந்து தொடர்கிறது.

இயற்கை நலவாழ்வியல் பற்றி நான் படித்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களின் தொகுப்பாக பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். படித்து பாராட்டி பின்னூட்டி வரும் அனைத்து ஆர்வலர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சீரியசான இந்த தொடருக்குள் செல்லுமுன்பாக ஒரு ஜோக்கை படியுங்கள்.
ஒரு பூங்காவில் வயதான ஒருத்தர் உட்கார்ந்து அழுது புலம்பிக்கிட்டு இருந்தார். 
அவரு கிட்ட போயி "என்னங்க விஷயம்"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர்  "போன மாசம் தான் ரிட்டயரு ஆனேன். ஏகப்பட காசு வந்துச்சி நெறய சொத்து, காரு இருக்கு, அருமையான மனைவி, புள்ளைங்க எல்லாம் இருக்காங்க, வேளாவேளைக்கு அருமையான சாப்பாடு போட்டு என்னை அருமையா கவனிச்சுக்குவாங்க"ன்னாரு. இந்தப் பதிலைக் கேட்டவுடன் நான் அவரைப் பாத்து, "அப்றம் ஏங்க இங்க ஒக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க"ன்னு கேட்டேன் அதுக்கு அவர் என் வீட்டுக்கு போற வழி மறந்து போயிட்டேன்"ன்னாரு.
இந்த ஜோக்குக்கும் கட்டுரைக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து படிக்கும் போது இறுதியில் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
கனி இருப்ப... 
தொடர்கிறது..
சென்னை அண்ணாசாலை, காயிதே மில்லத் கலைக் கல்லூரி வளாகத்தில் நிறைந்திருக்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பல நூறு ஆண்டுகளாக வாழும் மரங்கள் அவை. சென்னையின் அதிகமான வாகனப் போக்குவரத்து புழங்கும் இடம் அண்ணா சாலையின் அந்தப் பகுதி. வாகனப் புகையின் மாசு அதிகம் உள்ள இடம். இந்த மரங்கள் இன்னும் ஆரோக்கியமாக வாழ்வதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? 

அவைகளை சுற்றுப் புற மாசுகள் பாதிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? 

நமது சுவாச கோஷங்களைப் பாதிக்கும் மாசுக்கள், அவற்றை ஏன் பாதிக்க வில்லை? 

நாம் பெறுவது போல அவற்றிற்கு மருத்துவமோ, மருந்துகளோ யார் தருகிறார்கள்? 

அந்த மரங்களால் சுற்றுப் புற சூழல் சீர்கேட்டினை எவ்வாறு எதிர் கொள்ள முடிகிறது? 

அந்த மரங்கள் இயற்கையை நம்பி இருக்கின்றன. அந்த மரங்களுக்கு வாழும் சக்தியை பஞ்ச பூதங்களும் தருகின்றன. 

அவை நிலைத்து நிற்க, மண்ணும், உயிர் வாழ நிலத்தடி நீரும், காற்றும், விண்ணும், சூரியன் தரும் அழலும் (வெப்பமும்) நேரடியாக இயற்கையில் இருந்தே கிடைக்கின்றன. 

அவை செயற்கையாக எவற்றையும் பெறுவதில்லை. இரவு பதினோரு மணியில் இருந்து அதிகாலை நான்கரை மணி வரை அவற்றுக்கு தேவையான ஓசோன் காற்று நேரடியாக கிடைத்து விடுகின்றது. 

அதுவே இந்த மரங்கள் நாம் அவற்றுக்கு எதிராக எத்தனை மாசுப் புகைகளை செலுத்தினாலும் அவற்றை எதிர் கொண்டு ஆரோக்கியமாக உயர்ந்து வளர்கின்றன. நமது தவறான வாழ்க்கை முறை காரணமாக நமது உடலின் மரபு அணுக்களில் கூட சீர் கேடுகள் விளைகின்றன. அதன் காரணமாக நமக்கும், நமது வாரிசுகளுக்கும் இந்த மரபணுக் குறைபாடுகளின் காரணமாக நோய்கள் வருகின்றன. 

ஆனால், அண்ணா சாலையில் நிற்கும் அந்த ஒரு வேப்ப மரம் தனது மருத்துவ குணாதிசயங்களை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவில்லை. அதன் மரபணு சீர் குலையவில்லை. பஞ்ச பூதங்களின் துணையுடன் அவைகள் வாழ்வதால் எந்த ஊறுபாடும் இன்றி நெடிதுயர்ந்து நிற்கின்றன.

இன்றைய கால கட்டங்களில் நாம் நம்மை நான்கு சுவர்களுக்கு மத்தியில் அடைத்துக் கொண்டு வாழப் பழகி விட்டோம். மேலும் நேரத்துக்கு தூங்குவதில்லை. பதினொரு மணிக்கு முன்னர் உறங்காவிட்டால் பிரபஞ்சம் தரும் ஓசோன் மூலமாக வருகின்ற பிராண சக்தி நம்மை அடைவதில்லை. உறங்கி இருக்கும் போது தான் இந்த பிராண சக்தி நமக்குள் ஒன்று பட வாய்ப்பு இருக்கிறது. மரங்கள் இரவு வேளைகளின் பொழுது நாம் மாசுபடுத்திய காற்றினை ஆக்சிஜனைத் தயாரித்து வெளிப்படுத்துவதன் மூலம் சுத்தப் படுத்துகின்றது. 
 மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது மரங்கள்.
படம் : நன்றி : கூகிள் 

இந்த அற்புதமான காற்றை சுவாசிக்காமல் நாம் கதவுகளை அடைத்துக் கொண்டு மின்விசிறியின் காற்றையோ அல்லது குளிர் சாதன பெட்டி தரும் காற்றையோ சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.அதோடு கூட கொசுவிரட்டியின் புகையையும் காசு கொடுத்து சுவாசித்து நம் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். வியாதிகளின் பெருக்கத்திற்கு என்ன காரணம் என்று இப்போது புரிகிறதா?

இன்றும் தயாராகக் கிடைக்கும் இயற்கை அன்னையின் அருட்கொடைகளை விட்டு விலகி போய்க் கொண்டிருக்கிறோம் நாம். 

நவீன வாழ்வின் சுகபோகங்களின் ஆதிக்கத்துக்குள் சிக்கிக் கொண்டு ஆதி சக்தி நமக்கு தர தயாராக வைத்திருக்கும் உன்னத இயற்கை நலவாழ்வியல் வளங்களை மறந்து போய் விட்டோம், இந்த பதிவின் ஆரம்பத்தில் புலம்பிக் கொண்டிருக்கும் வயதான பெரியவர் போல.

நவீன வாழ்க்கைக்கு எதிராக எதுவும் நான் சொல்லவரவில்லை. நம்மால் இந்த வாழ்க்கையை தவிர்க்க முடியாது. ஆனால் இயற்கை நலவாழ்வியல் முறைகளை கடைப் படிப்பதின் மூலம் நவீன வாழ்க்கையின் சுகங்களை, அவை தரும் பாதிப்புக்கள் இன்றி அனுபவிக்க நம்மால் இயலும்.

நமது வாழ்க்கை, தொழில் மற்றும் வாழ்வாதாரங்கள், பொருளாதாரம் போன்றவை பாதிக்காமல் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதின் மூலம் நம்மால் இயற்கை நலவாழ்வியலை மேற்கொள்ள முடியும். 

அவற்றைப் பற்றி மேலும் சிந்திப்போம்..

(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ..
அஷ்வின்ஜி.

முக்கியக் குறிப்பு: இந்தத் தொடர் கட்டுரையின் அடுத்த பகுதி இரண்டு வாரங்கள் கழித்து வெளியாகும். திருச்சி அருகே உள்ள பெருகமணி என்னும் இயற்கை வளம் நிறைந்த காவிரிக் கரையோரத்து ஊரில் மே நான்காம் தேதியில் இருந்து எட்டாம் தேதி வரை நடைபெறும் ஐந்து நாள் முழு நேர இயற்கை நலவாழ்வியல் முகாமில் கலந்து கொள்ள செல்கிறேன். அதிகாலை நாலரை மணியில் இருந்து இரவு ஒன்பதே கால் வரை பயிற்சிகள் தரப் படுகின்றன. முழு இயற்கை சூழலில், யோகாசனப் பயிற்சி, இயற்கை உணவு தயாரிப்பு முறைகள், தியானம், பிராணாயாமம், இயற்கை நலவாழ்வியல் குறித்த அறிஞர்களின் நேரடி பயிற்சி போன்றவைகளை அங்கே பெறலாம். அங்கே நான் கண்டு, கேட்டு, உணர்ந்த விஷயங்களை அடுத்த தொடரில் இருந்து வெளியிடுவேன். நவீன வாழ்க்கையின் இன்னல்களில் இருந்து விடுபடும் இரகசியங்களை அந்தத் தொடர் கட்டுரைகளின் உங்களுக்கு நான் வெளிப்படுத்துவேன். காத்திருங்கள். நன்றி.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

3. கனி இருப்ப…
அனைவருக்கும் ‘கர’ வருஷத்து இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். திருவள்ளுவரின் மற(று)க்க முடியாத “கனி இருப்ப” என்னும் வார்த்தைகளை அவரிடம் இருந்து இரவல் வாங்கி ஆதி பகவனின் ஆசியுடன் இந்த இயற்கை நலவாழ்வியல் தொடரை துவங்குகிறேன்.
இயற்கை நலவாழ்வியல் ஒரு மருந்தற்ற மகத்துவம்.
இது மருத்துவ முறை அன்று.
ஒன்று ஒரு வாழ்வியல் விஞ்ஞானம்.
வாழ்க்கை முறை.
இயற்கை உணவுகளின் (குறிப்பாக பழ வகை உணவுகளின்) மகத்தான பயன்களை, ஒரு பயனாளர் என்ற முறையில் நான் சொந்தமாக அனுபவித்த நேரடி அனுபவங்கள், கேட்டு அறிந்தவை, பயிற்சிகளில் கற்றவை, மேலும் பல புத்தகங்களில் படித்தவை என பல வகைகளில் எனக்கு புரிய வந்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நலம் அல்லது ஆரோக்கியம் என்றால் என்ன?
உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) நலம் என்பதை இவ்வாறாக விளக்குகிறது.
நலம் என்பது முழுமையான உடல், மனம் மற்றும் சமூகத்தில் சிறப்பாக விளங்கும் ஒரு நிலை. ஊனமற்று இருப்பதோ அல்லது நோயற்று இருக்கும் நிலை மட்டுமே நலம் என்று சொல்லமுடியாது. (Health is a state of complete physical, mental and social well being and not merely the absence of disease and infirmity)
நாம் முன்னெப்போதையும் விட ஆரோக்கியத்துக்காக அதிகமாக செலவழிக்கிறோம். முன்னெப்போதையும் விட அதிக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம். எனினும் முன்னெப்போதையும் விட நோய்களால் பாதிக்கப்படுகிறோம்.
ஆங்கில மருத்துவம் என்று அழைக்கப்படும் நவீன மருத்துவம் இப்போது எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ முறையாக இருக்கிறது. ஆங்கில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் புதிது புதிதான மருந்துகளை கண்டு பிடிப்பதை விட புதிது புதிதான நோய்களை கண்டு பிடிப்பதில் தமது நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவழிக்கின்றன. நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமாக நிறைய கருவிகளைக் கண்டு பிடித்து விட்டார்கள். நாளுக்கு நாள் புதிய அறுவை சிகிச்சை, புதிய நோய்கண்டுபிடிக்கும் கருவிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒருவர் நோய்வாய்ப்பட்டால் மருத்துவரிடம் செல்கிறார். அவருக்கு மருத்துவர் உடனே சில மருத்துவ பரிசோதனைகளை செய்யச் சொல்லி அறிவுரை கூறுகிறார். எல்லாவற்றிற்கும் எக்ஸ்ரே, இரத்த பரிசோதனை, ஈசீஜி, ஈ.ஈ.ஜீ., ஸ்கான் டெஸ்ட் என்று புதிது புதிதாக நம்மை பரிசோதனை எடுக்கச் சொல்கிறார்கள். நாமும் ஆயிரக் கணக்கில் செலவழித்து அவற்றை எடுத்துக் கொள்கிறோம். ரிப்போர்ட்டை பார்த்ததும் மருத்துவர், உங்களுக்கு இந்த நோய் வந்திருக்கிறது. அதற்கு இந்த அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இந்த மருந்துகளை சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறுகிறார். அவர் சொன்னபடியே எல்லாம் செய்தீர்கள். மாத்திரை சாப்பிட்டதால் வியாதி குணமானதா? நோய் குணமானது போல தோன்றினாலும் விரைவிலேயே பக்க விளைவுகள் உண்டாகின்றன.
டாக்டரிடம் போவீர்கள். மீண்டும் அதை கண்டு பிடிக்க டாக்டர் உங்களுக்கு மேலும் சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்லுவார். மீண்டும் மாத்திரைகள், அறுவை சிகிச்சை என்று தொடர் செலவு.
பூரண குணம் உங்களை வந்து அடைந்ததா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானோர் நிலைமை..
ஏன் இந்த நிலைமை.? அடுத்த தொடரில் பார்ப்போமா?
(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ...
அஷ்வின்ஜி.