செவ்வாய், 12 ஏப்ரல், 2011

3. கனி இருப்ப
அனைவருக்கும் கர வருஷத்து இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். திருவள்ளுவரின் மற(று)க்க முடியாதகனி இருப்ப என்னும் வார்த்தைகளை அவரிடம் இருந்து இரவல் வாங்கி ஆதி பகவனின் ஆசியுடன் இந்த இயற்கை நலவாழ்வியல் தொடரை துவங்குகிறேன்.
இயற்கை நலவாழ்வியல் ஒரு மருந்தற்ற மகத்துவம்.
இது மருத்துவ முறை அன்று.
ஒன்று ஒரு வாழ்வியல் விஞ்ஞானம்.
வாழ்க்கை முறை.
இயற்கை உணவுகளின் (குறிப்பாக பழ வகை உணவுகளின்) மகத்தான பயன்களை, ஒரு பயனாளர் என்ற முறையில் நான் சொந்தமாக அனுபவித்த நேரடி அனுபவங்கள், கேட்டு அறிந்தவை, பயிற்சிகளில் கற்றவை, மேலும் பல புத்தகங்களில் படித்தவை என பல வகைகளில் எனக்கு புரிய வந்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நலம் அல்லது ஆரோக்கியம் என்றால் என்ன?
உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) நலம் என்பதை இவ்வாறாக விளக்குகிறது.
நலம் என்பது முழுமையான உடல், மனம் மற்றும் சமூகத்தில் சிறப்பாக விளங்கும் ஒரு நிலை. ஊனமற்று இருப்பதோ அல்லது நோயற்று இருக்கும் நிலை மட்டுமே நலம் என்று சொல்லமுடியாது. (Health is a state of complete physical, mental and social well being and not merely the absence of disease and infirmity)
நாம் முன்னெப்போதையும் விட ஆரோக்கியத்துக்காக அதிகமாக செலவழிக்கிறோம். முன்னெப்போதையும் விட அதிக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம். எனினும் முன்னெப்போதையும் விட நோய்களால் பாதிக்கப்படுகிறோம்.
ஆங்கில மருத்துவம் என்று அழைக்கப்படும் நவீன மருத்துவம் இப்போது எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ முறையாக இருக்கிறது. ஆங்கில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் புதிது புதிதான மருந்துகளை கண்டு பிடிப்பதை விட புதிது புதிதான நோய்களை கண்டு பிடிப்பதில் தமது நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவழிக்கின்றன. நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமாக நிறைய கருவிகளைக் கண்டு பிடித்து விட்டார்கள். நாளுக்கு நாள் புதிய அறுவை சிகிச்சை, புதிய நோய்கண்டுபிடிக்கும் கருவிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒருவர் நோய்வாய்ப்பட்டால் மருத்துவரிடம் செல்கிறார். அவருக்கு மருத்துவர் உடனே சில மருத்துவ பரிசோதனைகளை செய்யச் சொல்லி அறிவுரை கூறுகிறார். எல்லாவற்றிற்கும் எக்ஸ்ரே, இரத்த பரிசோதனை, ஈசீஜி, ..ஜீ., ஸ்கான் டெஸ்ட் என்று புதிது புதிதாக நம்மை பரிசோதனை எடுக்கச் சொல்கிறார்கள். நாமும் ஆயிரக் கணக்கில் செலவழித்து அவற்றை எடுத்துக் கொள்கிறோம். ரிப்போர்ட்டை பார்த்ததும் மருத்துவர், உங்களுக்கு இந்த நோய் வந்திருக்கிறது. அதற்கு இந்த அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இந்த மருந்துகளை சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறுகிறார். அவர் சொன்னபடியே எல்லாம் செய்தீர்கள். மாத்திரை சாப்பிட்டதால் வியாதி குணமானதா? நோய் குணமானது போல தோன்றினாலும் விரைவிலேயே பக்க விளைவுகள் உண்டாகின்றன.
டாக்டரிடம் போவீர்கள். மீண்டும் அதை கண்டு பிடிக்க டாக்டர் உங்களுக்கு மேலும் சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்லுவார். மீண்டும் மாத்திரைகள், அறுவை சிகிச்சை என்று தொடர் செலவு.
பூரண குணம் உங்களை வந்து அடைந்ததா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானோர் நிலைமை..
ஏன் இந்த நிலைமை.? அடுத்த தொடரில் பார்ப்போமா?
(நலம் தொடரும்)
வாழி நலம் சூழ...
அஷ்வின்ஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக