மனித உடல், இறைவைனின் அற்புதப் படைப்பாகும். நல்ல கட்டுக் கோப்புடன் வளர்ச்சியடைந்த மனித உடலை விட அழகானதொரு பொருள் வேறெதுவும் இருக்க முடியாது. மனித உடலின் அமைப்பு அதிக நுட்பமும், மிக நுண்மையானதுமாகும். அது வியத்தகு முறையில் கூரிய அறிவாற்றலுடன் மிக நேர்த்தியாக தன் வேலையைச் செய்து கொள்கிறது.
அவ்வுடலுக்கு ஏதுவாக, பொருந்தும் உணவுகளை மருந்து போல நாம் உண்ண வேண்டும். நிறைவான அமைதியான வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பதில் உணவே முதலிடம் பெறுகிறது. அதனாற்றான், உண்டி முதற்றே உலகு, உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றார்கள் நம் முன்னோர்கள்.
எவ்வாறு உண்பது?
அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று என்று வைத்துள்ளனர்.
அளவுக்கு மேல் உண்பது உயிராற்றலைக் குறைக்கும். ஏனெனில், அந்த உணவைச் செரிமானம் செய்வதற்கே உயிராற்றல் அதிகமாகச் செலவாகும்.
அதிகமாக உண்ணத் தூண்டும் விருந்துகளை நாடி ஓடினால் மருந்துகள் நம்மை விரட்டும். நோய்கள் நம்மை மருட்டும்.
தாகம் தீர்க்கவும், உடலுக்கு ஊட்டந்தரவும், உடல் நலன், உடல் உரம், மகிழ்ச்சி, இவற்றைப் பேணவும் தான் உணவுண்பது.
தத்தம் பசியை ஆற்றிக் கொள்ள மக்களும் விலங்குகள் முதலிய ஏனைய உயிரினங்களும் உணவை எந்த முறையில் உட்கொள்ளவேண்டும் என்பதை அறியாமல் உணவு உண்டு வருகின்றனர்.
உணவின் இரகசியங்கள்.
மனிதன் உணவுண்ண பசி தேவை. பசி என்பதை விட, மெய்ப்பசி என்பதே சரியானது. அது என்ன மெய்ப்பசி? நன்றாக பசிஎடுத்து நாவில் சுவை ஊறியிருக்கும் நிலையே மெய்ப்பசி.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
துய்க்க துவரப் பசித்து. (குறள் :944)
முன்பு உண்ட உணவு செரித்த நிலைமைகளை அறிந்து நன்றாகப் பசித்த பின்பு, உடல் நிலைக்கும், கால நிலைக்கும் இடத்திற்கும் மாறுபாடு இல்லாத உணவுகளை உண்ண வேண்டும் என்கிறார் வாழ்வியல் முன்னோடி வள்ளுவப் பேராசான்.
அளவுக்கு மிஞ்சினால்...
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (குறள்:943)
வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, அளவாகச் சாப்பிடுவதை நாம் அவசியம் கற்க வேண்டும். நம் உணவின் அளவை நாமே தீர்மானிக்க வேண்டும். பிறரின் அன்பிற்காகவோ, வற்புறுத்தலுக்காகவோ நாம் உண்ணுதல் கூடாது. அதிகச் சாப்பாடு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, நாம் உண்ணும் உணவின் அளவை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
அதிக உணவு உண்டால், அஜீரணமும், மலச்சிக்கலும் ஏற்படும். இவை சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள் என்கிறார் சுவாமி சகஜானந்தா. செரிக்காத உணவால், சளி, நாக்கில் பதிவு, கண்ணில் பீளை, வாந்தி, புளிச்ச் ஏப்பம், ஏற்பட்டு இருதய நோய், சர்க்கரை வியாதி, மூலம் என நோய்களோடு நாம் வாழ்க்கையைக் கழிக்க வேண்டி இருக்கும்.
பசித்து, அதுவும் முன் உண்ட உணவு செரித்து விட்டதா என அறிந்து, துவரப் பசித்த பிறகே சாப்பிட வேண்டும். பசி நீங்கினால் அதுதான் அளவு. பசியோடு உட்கார்ந்து, பசியோடு எழுந்திருத்தல் கூடாது.
மிகு உணவை எப்படித் தவிர்ப்பது?
துணை உணவுகளான சாம்பார், ரசம், மோர்க்குழம்பு போன்றவற்றையும், தொடுகறிகளையும் தவிர்க்கலாம். மென்று சாப்பிட்டால் அதிக உணவு தேவைப்படாது. ஒரு உணவை, அதன் சுவை நாவில் மறையும் வரை சுவைக்க வேண்டும்.
உணவு ஒழுங்கு.
1. முளைக்க வைத்த தானியம் மற்றும் தேங்காய், பழங்கள்.
2. காய்கறிப் பசுங்கலவை.
3. இரண்டு வேளை மட்டுமே ஒரே வகையான உணவு.
4. இருட்டுவதற்கு முன் இரவு உணவு.
நன்மைகள்:
- அஜீரணம், மலச் சிக்கல் இருக்காது. தொப்பை விழுந்து, இதய நோய் வராது.
- உண்பதற்காக வாழ்கிறோமா அல்லது வாழ்வதற்காக உண்கிறோமா என்பதை சிந்தனையில் கொள்ள வேண்டும். நம் உடம்பே நமக்குச் சுமையாக ஆகக் கூடாது அல்லவா? இறந்தவன் கனமாக இருந்தாலும் கேலிக்கு ஆவான் அல்லவா?
3 கருத்துகள்:
@டக்கால்டி
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் இதய நன்றி.
''பசித்த பிறகே சாப்பிட வேண்டும் ''என்று சொல்லிவிட்டு ''பசியோடு உட்கார்ந்து பசியோடு எழுந்திருக்கக்கூடாது'' என்றும் சொன்னால் முன்னுக்குப்பின் முரணாக இருக்கே!
நமஸ்தே லலிதாஜி. பின்னூட்டத்துக்கு நன்றி. உங்களுக்கு எனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பசியோடு சாப்பிட உட்கார்ந்தால் பசியடங்கும் வரை சாப்பிட்டு விட்டு எழுந்திருக்க வேண்டும் என்ற பொருளில் எழுதியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.
வாழி நலம் சூழ.
கருத்துரையிடுக