பகுதி 13 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.
நோய் நீக்கலுக்குக் காரணம்
மருந்து வேண்டாம். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு...
மனிதர்கள் அனைவரும் விரும்புவது நோயற்ற வாழ்வு. இதுவே குறைவற்ற செல்வம்.
நோயற்ற வாழ்வுதான் வாழ்வாங்கு வாழும் உயர் வாழ்வுக்கு அடிப்படையாகும். இதனாலேயே திருமூலரும் 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்று கூறியுள்ளார்.
நோய் நீக்கலுக்குக் காரணம்
"நோய் பல அல்ல" என்றும் "நோய் நமக்கு நண்பன்" என்றும் இதற்குமுன் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் நாம் ஏன் நோயின்றி வாழ முற்பட வேண்டும்? உடம்பு அழிந்து போகும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிதான் நோய். நோய் வந்தபோது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். உடம்பினுள் ஏதோ வேண்டாத பொருளோ, நச்சுப் பொருளோ தங்கி, அது நம் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது என்பதை நோய் காட்டுகிறது. வேண்டாத பொருள்களை வெளியேற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் நச்சுப் பொருள்கள் வெளியேறி விட்டால் உடல் ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்கும். அத்துடன் நீண்டநாள் வாழலாம். நச்சுப் பொருளை வெளியேற்ற முயற்சி செய்யாமல் நோயாளிகள் மருத்துவரிடம் போகின்றார்கள். மருத்துவர்களும் தங்களிடமுள்ள மருந்துகளைக் கொடுத்து நோயினை குணப்படுத்த முயலுகின்றனர்.
மருந்துகளின் தன்மை
ஆங்கில மருத்துவர்களிடமுள்ள மருந்துகளோ பெரும்பாலும் வெறி மயக்கப் பொருள்கள். ஆங்கிலத்தில் இதை 'டிரக்' (Drug) என்று சொல்கிறார்கள். Medicine (மெடிசின்), Drug (டிரக்) என்று ஆங்கிலத்தில் இரு வார்த்தைகள் உண்டு. தமிழில் இரண்டையும் மருந்து என்றுதான் சொல்லுகிறோம். அலோபதிக் மருந்துகளின் பெரும்பாலானவை டிரக்குகளே. மருந்துக் கடைகளில் தகுதி வாய்ந்த டாக்கடர்களுடைய சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை கொடுக்கமாட்டார்கள். இந்த மருந்துகளின் மீது விஷம் (Schedule H) என்று சிவப்பு எழுத்தால் எழுதப் பெற்றிருக்கும். விஷத்தை விஷத்தால் முறியடிக்க வேண்டும் என்ற கோட்பாடுடைய மருத்துவர்களுக்கு பூச்சி(வைரஸ்)களால் நோய் வந்துள்ளது. அப்பூச்சிகளை விஷத்தால்தான் கொல்லமுடியும் என்ற கொள்கையுடையோரும் இந்த நச்சு மருந்துகளை உபயோகிக்கின்றனர்.
மருந்துகள் செய்யும் வேலை.
இம்மருந்துகள் செய்யும் வேலைகளை பார்த்தாலும் இதை விளங்கிக் கொள்ளலாம். சில மருந்துகள் உயிரைக் குடிப்பன. இவை பூச்சி(வைரஸ்)களைக் கொல்வதுடன் மனிதனின் உயிராற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கும்; குடிக்கும்.
ஏற்கனவேயுள்ள நச்சுப் பொருள்களுடன் இந்த நச்சுப் பொருளும் சேர்ந்து கொண்டு உணர்வை மரத்துப் போக செய்கின்றன. கொஞ்ச காலத்திற்கு வலி தெரிவதில்லை. நோய் தீர்ந்து விட்டதென ஒரு பிரமை ஏற்படுகிறது. உண்மையில் நோய் தீருவதில்லை. அது தெரியவில்லை அவ்வளவே. சில சமயங்களில் இந்த நச்சுப் பொருள்கள் இரத்தத்தில் கலந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கிருந்து அவை வெளியேற முயலும்போது துன்பம் ஏற்படுகிறது. மக்கள் அதனைப் புதிய நோய் என்று கருதுகின்றனர். பழைய நோய்தான் புதிய இடத்திற்கு வந்திருக்கிறதென்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. டாக்டர்களும் புதிய நோய்க்கு புதியதொரு சிகிச்சை செய்கிறார்கள்.
(இயற்கை இன்னும் வளரும்..)