பகுதி 16 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.
நோயியல் தத்துவம்
முந்திய அத்தியாயங்களில் பிராண சக்தியின் இயல்பையும் செயலையும் பற்றி அறிந்தோம். இப்போது நோய் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொண்டால் அது உதவியாக இருக்கும். முன்னரே நோய் ஒன்றுதான் பல அல்ல என்றும், அது நமக்கு நண்பனே பகைவன் அல்ல என்பது பற்றியும் ஓரளவு அறிந்து கொண்டுள்ளோம். இப்போது நோய் வளரும் வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம்.
நோய் வளரும் வழிமுறைகள்
நோய் என்னும் விதையை உடம்பில் விதைத்து விட்டால் அது மற்றைய விதைகளைப் போலவே வளர்ந்து செடியாகி மரமாகி, பூத்துக்காய்க்கும். ஆரம்பத்திலேயே அதனோடு ஒத்துழைத்து அது பூரணமாக விரிந்து வெளியேற வழிகாட்டிவிட்டால் உடல் தூய்மையுறும். ஊன் உடல் பொன் உடலாக அருள் உடலாக, ஞான உடலாக வளர்ந்து மனிதவாழ்க்கை பெற்றதன் பயனெல்லாம் அடைய உதவும். மாறாக, நோய் வித்து உடலில் விழுந்த உடனேயே அதைக் கண்டு பயந்தவர்கள் மிரண்டு போய் மருத்துவத்தையே பிழைப்பாகக் கொண்ட சிலரிடம் செல்கிறார்கள். அவர்கள் உடனடியாக உடலுக்கு சுகம் கொடுக்கும் பொருட்டு வெளியேறும் மலத்தினை அதாவது நோய் என்று சொல்வதனை பலம் வாய்ந்த நச்சுப் பொருள்களைக் கொண்டு உள்ளேயே ஆழ்த்தி அமிழ்த்து விடுகிறார்கள். வெளியேற வேண்டிய வேண்டாப் பொருள்களும் திசுக்களிடையே சென்று உருமாறி உயிரணுக்குள்ளே நுழைந்து ஒடுங்கி அடங்கி விடுகின்றன. இச்சமயம் கடலில் அலை ஓய்ந்திருப்பது போல் உடலும் அமைதி எய்துகிறது. தட்ப-வெட்பம் சமனடைந்து ஒழுங்காகி விட்டமாதிரி ஒரு தோற்றமும் மனநிறைவும் ஏற்படுகிறது. நோயாளி நோய் தீர்ந்துவிட்டது என்று எண்ணுகிறார். அது தனது உடலுக்குள்ளே அடிமட்டத்திலுள்ள அணுக்களினுள்ளே உருமாறி ஒளிந்து கொண்டிருப்பது இவர்களது கண்களுக்குப் புலப்படுவதில்லை. வேற புலன்களுக்கும் அவை தென்படுவதில்லை. ஆனால் நடப்பது என்ன? நுண்ணிய வடிவில் ஒடுங்கியிருக்கும் வேண்டாப் பொருள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருகிறது.
நோய் (அன்னியப் பொருள்) முதலில் வெளியேற முயலுவதைக் தீவிர நிலையென்றும் அடக்கிவைத்த பின் வேறு உருக்கொண்டு வளர்ந்து சமயமும் இடமும் கிடைத்த போது வெவ்வேறு வடிவில் வெளியேற முயலும் காலத்தை நாட்பட்ட நோய் என்றும் கூறுகின்றனர். அறிவும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் குறைவாக இருப்பதால் மக்கள் திறமையுடைய சிலரை நாடுவது இயல்பே. ஆனால் திறமையுடைய இச்சிலரோ மக்களின் இப்பரிதாப நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அதனையே வாழும் வழியாகக் கொள்கின்றனர். வந்தவருக்கு உடனடியாக பலன் தெரிவிக்க வேண்டுமென்ற நோக்குடையவர்கள் திருடனைத் தேடிக் கொண்டு தாக்குவதைப் போல் வெளித்தோன்றும் இந்நோயினையும் பலமான மருந்துக்களைக் கொண்டு அமுக்கி விடுகின்றனர். அப்போது நாட்பட்ட நோயும் பலாத்காரத்திற்குப் பயந்து நாடி நரம்புகளுக்குள்ளே ஓடி, ஒளிந்து அங்குள்ள சத்துப் பொருள்களை உண்டு வளர்கிறது. சமயம் வாய்த்த போது சீரழிக்கும் நோயாக, மாறா நோயாக உயிர் குடிக்கும் நோயாக வளர்ந்து முடிவில் மனிதனையே கொல்கிறது.
தீவிர நோய், நாட்பட்ட நோய், மாறா (சீரழிக்கும்) நோய் என்று மூன்று பெரும் நிலைகளில் நாற்று, செடி, மரம் என்பதைப்போல் நோயானது வளர்கின்றது.
இயற்கை முறை சிகிச்சை மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு நிலையிலும் ஒத்ததாக இருந்தால் பாதிக்கப் பட்ட ஒருவர் நோயில் இருந்து குணமடைவது எளிதாகும்.
(இயற்கை இன்னும் வளரும்)