செவ்வாய், 28 ஜூன், 2011

11. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகள்.

"இந்த உலகத்திலேயே மிகவும் ஆச்சரியமான விஷயம் எது?" என்று தர்மபுத்திரரிடம் யட்சன் கேட்டதற்கு "நாள்தோறும் மக்கள் இறந்துகொண்டிருப்பதைப் பார்த்தாலும், தான் மட்டும் என்றும் அழியாமல் இருப்போம் என்று ஒவ்வொருவனும் நினைப்பது தான் ஆச்சரியமான விஷயம்" என்று தர்மர் விடையளித்ததாக மகாபாரதத்தில் வரும் யக்ஷப் பிரச்னம் என்னும் பகுதி கூறுகிறது.

இந்த ஆச்சரியம் மனிதனின் உடல் நலத்துக்கும் பொருந்தும்.  தனது நலவாழ்வுக்கு சற்றும் பொருந்தா உணவுப் பழக்கங்களை கொண்டிருக்கும் மனிதன், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பொருந்தா உணவுப் பழக்க வழக்கங்களால் உடல் நலிவுற்று உயிர் இழக்கும்போது கூட தனது நலத்தைப் பற்றி எந்த ஒரு கவலையும் கொள்ளுவதில்லை. 


மேலை நாட்டு கலாச்சாரம், மற்றும் உணவு வியாபாரிகளின் விளம்பர மோகம் போன்றவற்றினால் நமது மக்கள் இயற்கைக்கு மாறான உணவுப் பழக்க வழக்கங்களினால் தனது உயிருக்கு தமக்குத் தாமே கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். 


இன்ன செய்கின்றோம் என்று அறியாமல் இவர்கள் செய்கிறார்கள் என்று இறைத் தூதர் இயேசுநாதர் வருந்திய மன நிலையில் நாம் இவர்களைப் பார்த்து வருந்த வேண்டி உள்ளது.


தமது வாரிசுகளின் எதிர் கால நலத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல், ஃபாஸ்ட்ஃபுட்டில் உணவினை தாமும் உண்டு, தம் பிள்ளைகளுக்கும் அதனை பார்சல் செய்து எடுத்துச் செல்கிறார்கள்.  அஜினோ மோட்டோ என்னும் கொடிய மெல்லக் கொல்லும் நச்சு தாம் உண்ணும், உணவினில் கலக்கப்படுகிறது என்பதை அறியாமல் இவர்கள் இருக்கிறார்கள்.


மக்கள் நலம் என்று வாய் கிழியப் பேசும் மத்திய மாநில அரசுகள், மற்றும் அரசியல்வாதிகள் எவரும் எதனையும் கண்டு கொள்வதில்லை. 

"எது மனிதனின் உணவு?" என்ற தமது நலவாழ்வியல் ஆராய்ச்சி நூலில் அமரர் திரு.ம.கி.பாண்டுரங்கனார், சமைத்த உணவை விட பச்சை காய்கறிகள் மேலானவை என்கிறார். பழங்கள் அதைவிட மேலானவை என்று ஆதார பூர்வமாக கூறுகிறார். தேங்காயும் வாழைப்பழமும் மட்டுமே மூன்று வேளை உணவாக இருந்தால் மனிதன் துன்பமில்லா நோயற்ற வாழ்வு வாழலாம் என்று மறுக்க இயலாத விஞ்ஞான பூர்வமான மேற்கோள்களுடன் நிறுவுகிறார் அமரர் ம.கி.பா.

அமரர் ம.கி.பா அவர்களின் பிரதம சீடர்களில் ஒருவரான அமரர் திரு.மூ.ராமகிருஷ்ணன் அவர்களின் தம்பி திரு.மு.ஆ.அப்பன் அவர்களின் இயற்கை நலவாழ்வியல் பற்றிய ''நோயின்றி வாழ'' கட்டுரையின் அடுத்த பகுதி தொடர்கிறது.

நோயின்றி வாழ.. 
மூ.ஆ.அப்பன்.

சமைத்த உணவு.
இயற்கை உணவுக்கு ஒரு வேளை கூட மாற இயலாதவர்கள், சமையல் உணவில் உப்பை படிப்படியாகக் குறைத்து உப்பு (சோடியம் குளோரைடு) அறவே இல்லாத படி உணவு உண்ணப் பழகவேண்டும். உப்பிள்ளது சமைத்துண்டாலே பாதிக்கு மேற்பட்ட நோய்கள் இல்லாது மனிதன் வாழலாம்.  இப்பேருண்மையை அடிப்படியாக வைத்துதான் நாட்டு மருத்துவர்கள், உப்பில்லாப் பத்தியம்த்துடன் நாட்டு மருந்துகளை கொடுத்து நோயைக் குணப்படுத்தினார்கள். உப்பு கொடிது என்பதையறிந்த நம் நுன்னோர்களும் ''உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை பெறுவான்'' எனும் முதுமொழியை ஏற்படுத்து உள்ளனர்.

அடுத்து வெள்ளைச்சீனி(சர்க்கரை) யையும், செயற்கை இனிப்பு உணவுகளையும் (லட்டு, ஜாங்கிரி, அல்வா, பால்கோவா, சாக்லேட், ஆரஞ்சு மிட்டாய், பிஸ்கோத்து (பேக்கரி வகைகள்), மற்றும் பிற செயற்கை உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

அடுத்து அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கருவாடு முற்றிலும் தவிர்ப்பது இன்றியமையாதது. காபி, டீ, சோடா, ஐஸ்க்ரீம், பாட்டிலில் அடைத்த செயற்கை குளிர்பானங்கள் போன்றவைகளை தவிர்த்தல் முக்கியம்.

சமைத்த தானிய உணவுகளின் அளவை குறைத்து, காய்கறி, கீரைகளின் அளவைக் கூட வேண்டும். சூடான உணவுகளை உண்ணக் கூடாது. சூடான திரவங்களையும் அருந்தக் கூடாது. ஓரளவு சூடு தணிந்த பின்னரே உண்ண வேண்டும்; அருந்த வேண்டும். புளி, காரம் போன்றவற்றை மிகவும் குறைவாக சேர்க்க வேண்டும். எண்ணைப் பலகாரங்கள், எண்ணையில் தயாரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 

அவள், நெல்பொரி, அரிசிப்பொறி, ஆவியில் வெந்த உணவுகள் ஆகியன நெருப்பிலிட்ட உணவுகளாக இருப்பினும் அதிகம் தீங்கு தராதவை. 

அனைத்து நோய்களுக்கும் காரணம் எது?
அனைத்து நோய்களுக்கும் காரணம் மலச் சிக்கல்.

மலச்சிக்கலுக்கு காரணம் எது?
மலச்சிக்கலுக்கு காரணம் சமைத்துண்பதே.

மலச் சிக்கல் தீர வழி.
மலச் சிக்கல் தீர சமைத்துண்பதை விட முடியாதவர்கள் தினம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சைத் தண்ணீர் எவ்வளவு அருந்த இயலுமோ (அதாவது 1.2 லிட்டருக்கு (1200 ml) குறையாமல்) அவ்வளவு அருந்தும் பழக்கத்தினை ஏற்படுத்தினால் மலச்சிக்கல் இராது.

(தொடரும்.)

அடுத்து வருவது இயற்கை மூலிகைகளைப்  பற்றி.

வாழி நலம் சூழ..
அஷ்வின்ஜி.

ஞாயிறு, 26 ஜூன், 2011

10. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகள்.


இயற்கை நலவாழ்வியல் பற்றிய திரு. மூ.ஆனையப்பன் அவர்களின் ''நோயின்றி வாழ'' கட்டுரையின் அடுத்த பகுதி:-

மனிதன் நோயின்றி வாழ என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

மனிதன் நோயின்றி வாழ விரும்பினால், சமைத்த செயற்கை உணவுகளான சோறு, இட்டிலி, தோசை, சப்பாத்தி, வடை, ரொட்டி மற்றும் பிற செயற்கை பானங்களான, காப்பி, ஹார்லிக்ஸ், டீ, விவா, சோடா, பாட்டிலில் அடைத்து கடைகளில் விற்கப்படும் அனைத்துவிதமான குளிர் பானங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். 

மேற்கண்ட உணவுகள் இன்றைய வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்கள் ஆகி விட்டனவே. பின்னர் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும்?

மனிதன் உண்மையிலேயே நோயின்றி வாழ விரும்பினால், அவன் இயற்கை உணவுகளை சாப்பிடவேண்டும். அவையாவன:

1. கொட்டைப் பருப்புகள், பழவகைகள், பச்சைக் காய்கறிகள், முளை விட்ட தானியங்கள் போன்றன.

2. இயற்கை பானங்களான நிலத்தடி நீர் (பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் செயற்கை நீர்), இளநீர், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை முதலியவற்றால் தயாரான வெள்ளைச் சர்க்கரை, எசன்ஸ் போன்ற செயற்கை சுவையூட்டிகள் சேர்க்காத சாறுகள்.

மேற்கண்ட நூறு சதவீத இயற்கை உணவுக்கு மாறுதல் எளிது. பயன்களும் கணக்கற்றவை. நோயின்றி வாழ இவை உதவும்.

முழுமையாக மாற இயலாதவர்கள் ஒரு வேளை (நண்பகல்) சமைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு மீதம் இரு வேளைகளிலும் (காலை, இரவு ) மேற்குறிப்பிட்ட வகையில் இயற்கை உணவு வகைகளை உண்டு வரவேண்டும். 

இதுவும் முடியாதவர்கள் சமைத்த சைவ உணவுகளை உண்டு கொண்டு இரவு மட்டுமாவது பழங்கள் நிறைந்த இயற்கை உணவுகளை உண்ணலாம்.

ஏன் சமைத்த உணவு ஆபத்தானது? 


சமைத்த உணவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ளவர் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?

(தொடரும்)
நன்றி: திரு. மூ.ஆ.அப்பன், இயற்கை நலவாழ்வியல் அறிஞர், குலசேகரன்பட்டினம்(திருச்செந்தூர்), தமிழ்நாடு.


வாழி நலம் சூழ..
தொகுப்பு:
அஷ்வின்ஜி