வியாழன், 17 ஜூன், 2010

பகுதி 19

இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல் முறைகளும் - மகரிஷி க.அருணாசலம்.

மனிதன் சோம்பலுக்கு ஆட்பட்டு அதிகம் தூங்குவதனாலோ, நாக்குக்கு அடிமையாய் பெரும் திண்டிக்காரனாக ஆவதனாலோ ஜீரண சக்தி குறைந்து, உண்ட உணவு நச்சுப்பொருளாக மாறுகின்றது. அன்னரசம் இரத்தமாக மாறாமல், சளியாக மாறுவதும் அதனால் இயக்கத்தடை ஏற்படுவதும் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ளாதவர்களின் செயல்களிலிருந்து நாம் அறிகிறோம். ஆரம்ப நிலையில் இயக்க நோயாக இருப்பது நாளடைவில் உறுப்பு நோயாக வளரும். இயக்கநோய் நிலையிலேயே பரிகாரம் காண்பது எளிது. ஆனால் நவீன மருத்துவர்கள் இயக்க நோய்க்குக் காரணமாக மலங்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக அவற்றை அடக்கும் விஷமருந்துகளைக் கொடுத்து நோயை வளர்க்கின்றனர். இயக்கநோய் கொடுக்கும் தீவிர வலியும், துன்பமும் தற்காலிகமாகக் குறைந்தாலும் அவை உள்ளே நின்று உறுப்புக்களை அழிக்கின்றன. அந்த நிலையில் உறுப்புக்களுக்கு புத்துயிர் கொடுப்பது எளிதல்ல. இருப்பினும் இயற்கை ஆற்றல்கள் அனைத்தையும் முறையுடன் பயன்படுத்தினால் உடம்புக்கு புத்துயிர் ஊட்டுவது சாத்தியமே.

ஆரம்ப நிலையில் நம்பிக்கையினாலும் சாதகமான எண்ணங்களின் வலிமைகளினாலும் பல நோய்களைப் போக்கலாம். எனினும் இயக்க நோய்க்கும், மனநோய்க்கும் உள்ள வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இதிலுள்ள வேற்றுமை மிகவும் நுண்ணியதே பார்க்கப் போனால் வேற்றுமை இல்லையென்றே கூடச் சொல்லிவிடலாம். இயற்கை மருத்துவர் இதைப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நோயாளியை நல்ல சூழலில் இருக்க வைத்து அவரை சீரிய எண்ணங்களை எண்ணும்படியாகவும் பசியின் நிலையை அறிந்து சாத்வீக உணவுகளை உண்ணும்படியாகவும் செய்தால் நோய் நீங்கி பூரண சுகம் பெறுவர்.

(இயற்கை இன்னும் வளரும்)
அடுத்த பதிவில் ஏழின் ஏழில்....

ஞாயிறு, 13 ஜூன், 2010

பகுதி 18 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்)  மகரிஷி க.அருணாசலம்.

இருவகை நோய்
நோய்களைப் பல பெயரிட்டு அழைக்கிறோம். இவைகளை இரு பெரும் கூறுகளாகப் பிரிக்கலாம். ஒன்று உறுப்பைச் சார்ந்த நோய்கள். மற்றொன்று இயக்க கூறுகளைச் சார்ந்த நோய்கள். இதனை ஆங்கிலத்தில் Organic நோய்களென்றும் Functional நோய்களென்றும் கூறுகின்றனர். இயற்கை மருத்துவர்கள் நோய் ஒன்றே பல அல்ல என்று கூறுவது நமக்குத் தெரியும். மலம் உள்ளே தங்குவதால் ஏற்படுகிற நச்சுப் பொருள்கள் இயக்கத்தை தடை செய்யலாம். அல்லது உறுப்பையே தேய்த்து உருச்சிதைவு உண்டுபண்ணலாம். அந்த நிலையில் உறுப்புக்கள் செயலிழக்கும். இயக்கம் தடைபட்டு அதனால் துன்பம் விளைகிறபோது அதனை இயக்கக்கூறு சார்ந்த நோய்கள் என்று சொல்கிறோம். உதாரணமாக பெருங்குடலில் மலம் தங்கி நின்று உஷ்ணத்தால் காற்று விரிவடைந்து ரத்தத்தோடு கலக்கிறது அத்தகைய கெட்ட ரத்தம் முழங்கை, முழங்கால் போன்ற மூட்டுக்களில் தேங்கி வலியை உண்டு பண்ணுகின்றன. இதனை வாத நோய் என்றும், மூட்டு வலி என்றும் சொல்லி அதற்கான சிகிச்சை செய்கின்றார்கள். பெருங்குடலில் மலம் தங்கியிருக்கின்ற பொழுது அது சிறுகுடல் இயக்கத்தையும் பாதிக்கும் சிறு குடலுக்கும், பெருங்குடலுக்கும் இடையிலுள்ள வால்வின் வேலை தடைபடுகின்றது. பெருங்குடல் அதாவது ஏறு குடல் ஆரம்பமாகின்ற இடத்திலுள்ள குடல் வாலில் அழற்சி ஏற்பட்டு அந்த உறுப்பு வீங்கித் துன்பம் கொடுக்கிறது. இதனை உறுப்புக்கு வந்த நோய் என்கின்றனர். இயக்க நோய் உறுப்பு நோயாகவும், உறுப்பு நோய் இயக்க நோயாகவும் மாறலாம். ஒரு நிலையில் இயக்கத் தடையாக இருப்பது பிரிதொரு நிலையில் உறுப்பு நோயாக மாறிவிடுகிறது. இந்த வித்தியாசத்தை சரியாகப் புரிந்து கொள்வது மிகமிக அவசியம்.

இரத்தத்தில் மலம் கலந்து அது சிறு நீரகத்தின் வழியாகப் போய்வரும்பொழுது சிறுநீரகம் இரத்தத்திலுள்ள மலத்தைப் பிரிக்கும் பணியைச் செய்கிறது. தோல் வழியாகவும், மலக்குடல் வழியாகவும், மூக்கு வழியாகவும், வெளியேற வேண்டிய மலங்கள் அவ்வாயில்கள் அடைபட்டு இருப்பதனால் அவற்றை சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதனால் சிறு நீரகத்திற்கு வேலைபளு அதிகமாகி தளர்ச்சியுறலாம். தனது இயல்பான வேலையைக் கூடச் செய்ய இயலாமல் போகும் நிலை வரலாம். குறிப்பிட்ட மலத்தில் இரசாயன வேகத்தால் சிறுநீரகத்தின் அமைப்புச் சிதையலாம். சிறுநீரகம் வேலை செய்ய முடியாத போது அதனை சிறுநீரக அமைப்பு நோய் என்று கருதி சிகிச்சை செய்கின்றனர். கெட்டுப்போன சிறுநீரகத்தை எடுத்துவிட்டு புதிய சிறுநீரகம் புகுத்தினால் நோய்த்துன்பம் குறைந்து சுகமடையலாம். அறுவைசிகிச்சை நிபுணர்கள் இப்போது இதை இலகுவில் செய்கிறார்கள். சாதாரண இயந்திரங்களில் ஒரு உறுப்பை எடுத்து விட்டு அதற்குப் பதில் புதிய உறுப்பை அமைப்பது எளிதாகலாம். ஆனால் உடம்பின் ஒன்றோடொன்று இயல்பாக இணைந்துள்ளவற்றை எடுப்பது எளிதானாலும், புதிய ஒன்றைப் பொருத்துவது அவ்வளவு சுலபமானதல்ல நிபுணர்கள் சிறு நீரகத்தையோ இதயத்தையோ அல்லது வேறு உறுப்புகளையோ, மாற்றி அமைப்பதை நாம் இப்போது கேள்விப்படுகின்றோம். இதனால் சிலர் குணமடைந்ததாகவும் அறிகின்றோம். அறுவைச்சிகிச்சையால் தற்காலிக குணமடைந்த பலர் வேறு பல உறுப்புக்கள் பாதிக்கப்படுவதையும் நாம் கேள்விப்படுகின்றோம். அறுவைச்சிகிச்சை முறைகளைக் கையாள்வதை விட நோயின் ஆரம்ப காலத்திலேயே இயற்கை முறைகளைக் கையாண்டு மலங்களை உரிய காலத்தில் வெளியேற்றிவிடுவதே சிறந்தது.

(இயற்கை இன்னும் வளரும்)