அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.
இயற்கை நலவாழ்வியல் பற்றிய செய்திகளை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நம்மைப் போலவே நமது நண்பர் சட்ட ஆராய்ச்சியாளர் திரு.வாரண்ட் பாலா அவர்கள் எழுதி 'இந்நேரம் டாட் காம்' தளத்தில் ஆ! முள்ளங்கி..!! என்ற தலைப்பில் 3.2.2012 அன்று வெளியான இந்த கட்டுரையை நமது வலைப்பூவில் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். நண்பர் வாரண்ட் பாலா அவர்கள் நீதியைத்தேடி... எனும் பொதுத்தலைப்பில் ஐந்து சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களை எழுதி பொதுவுடைமையாக அறிவித்து பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவருக்கும் சட்ட விழிப்பறிவினை ஊட்டும் அரியதொரு சமூகப் பணியை கடமையாகச் செய்து வருகிறார். சமூக விழிப்பறிவுணர்வை ஊட்டுவதற்காக முடிந்த வரை மக்களிடம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி செயற்கரிய காரியங்களை செய்து வருகிறவர். இயற்கை நலவாழ்வியலில் ஈடுபாடு கொண்டவர். அன்பரின் கட்டுரையை இங்கே வெளிடுவதில் வாழி நலம் சூழ சார்பில் நான் உவகையும், பெருமையும் கொள்கிறேன். அவருடன் இனைந்து கடமையாற்ற நாமும் முயற்சிக்கலாமே! அவரது கடமை மேன்மேலும் சிறக்க நாமும் வாழ்த்தலாமே!!
-௦-௦-௦-௦-௦-௦-௦-௦-௦-௦-
ஆ.... முள்ளங்கி..
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற நிலை தடம் மாறி உணவும், உழவுத் தொழிலும் நிந்தனையானதாக மாறி விட்டது.
உலகிலேயே மிக மிக ஜாலியாக செய்ய வேண்டிய உழவுத்தொழிலை அதிகபட்சமாக எவ்வளவு கடுமையானதாக மாற்ற முடியுமே அப்படி மாற்றிய பெருமை வேளாண்மை அறிவாளிகள் என மார்தட்டிக் கொள்ளும், தனது பெருமையை தாமே பீற்றிக் கொள்ளும் மெத்தப்படித்த மேதாவி ஆராய்ச்சியாளர்களுக்கே உண்டு.
ஆம்! ஒரு விதையை விதைத்தால் அதற்கு ஈடாக பல நூறாக / பல்லாயிரமாக / பல லட்சமாக விதையைத் தரும் அற்புத இயற்கையின் சக்தியை உணராத முட்டாள்கள் விவசாயத்தில் நஞ்சை கலந்து இயற்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக் கொண்டு வருகின்றனர்.
இதனை உணர்ந்த உண்டு கொழுத்த முதலாளிகள் சிலர் இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்ற வகையில் இயற்கை மற்றும் செயற்கை முறையில் உற்பத்தி செய்த பொருட்களை நவீன வசதிகளுடன் கூடிய சூப்பர் மார்ட்கெட்டில், எதிர் காலத்தில் மார்கெட்டையே விலைக்கு வாங்கும் வகையில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.
இதனை வாங்கி உண்ண முடியாத என்னைப் போன்ற ஏழை மற்றும் நடுத்தர மக்கள் படும் பாட்டை சொல்லிமாளாது. நஞ்சு விலை பொருட்களை தின்று தின்று மக்களின் மூலை மழுங்கி விட்டது என்று நான் சொன்னால், இவன் எப்பவுமே இப்படித்தான் என என்மீது உங்களுக்கு கோபம்தான் வரும். ஆனால், உண்மை இதுதான்.
நீங்கள் காய்கறி வாங்கும் போது மிகவும் நல்லதாக, அழுகாததாக, மிக முக்கியமாக பூச்சி இல்லாததாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறீர்கள் இல்லியா! இது சரியா என்பதுதான் எனது கேள்வி? நல்லதாக, அழுகாததாக தேர்ந்தெடுப்பது சரிதான். ஆனால், பூச்சி இல்லாததாக தேர்ந்தெடுப்பது எப்படி சரியாகும்?
ஒவ்வொரு உயிரினமும் தனக்கு கீழான அறிவுள்ள உயிரினத்தை உட்கொண்டே உயிர் வாழ வேண்டும் என்பதே, இயற்கை தனது படைப்புகளுக்கு விதித்துள்ள உணவு கட்டுப்பாடு.
இந்த வகையில் காய்கறிகளை புழு, பூச்சுக்கள் சாப்பிடுவது இயல்பான, இயற்கையான ஒன்றுதான். ஆனால், அறிவு வறுமை மிக்க விவசாய்களோ, அறிவு வெறுமை ஆய்வாளர்களின் / ஆராய்ச்சியாளர்களின் பேச்சைக் கேட்டு அப்புழு பூச்சுக்களை தடுக்க பூச்சுக்கொல்லி மருந்தை தெளிக்கிறார்கள். அப்படி வளர்ந்த காய்கறிகளைத்தான் நாம் தேடிப் பொறுக்கி வாங்கி வந்து உண்கிறோம்.
ஆமாம், இதனால் என்ன நட்டமாகி விட்டது?
புழுப்பூச்சிகளே உயிர் வாழத் தகுதியில்லாத பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட காய்கறிகளை உண்டு, நீங்கள் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும்? அட, ஆரோக்கியத்தை விடுங்கள். எப்படி உயிர் வாழ முடியும்?
இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது, அல்லது தனக்குதானே குழிவெட்டிக் கொள்வது என்பது. யாராவது தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்வார்களா அல்லது குழிதான் வெட்டிக் கொள்வார்களா? ஆனாலும், நாம் தெரிந்தோ தெரியாமலே சூன்யம் வைத்துக் கொள்கிறோம் அல்லது குழி வெட்டிக் கொள்கிறோமே!
அப்படியானால், நமக்கும்மெத்தப்படித்த மேதாவி ஆராய்ச்சியாளர்களைப் போல் அறிவு மழுங்கி விட்டது என்பதுதானே உண்மை!
சரி, நாம நம்ம விசயத்துக்கு வருவோம்.
காட்டில் பெருமரம், குறுமரம், சிறுமரம், செடி, கொடி என எல்லாமே தானாக ஒன்றோடு ஒன்றாக உறவாடி, பின்னிப்பினைந்து அனைத்து விதத்திலும் செழித்து வளர்கின்றன. இங்கு யார் விதை விதைத்தது, களைப்பறித்தது, அடியுமும், மேல் உரமும் இட்டது, தண்ணீர் ஊற்றியது?
இப்படிப்பட்ட காட்டைப் போலத்தான் உண்மையான இயற்கை விவசாயம் இருக்க வேண்டும் என்கிறார், இயற்கை விவசாயி திரு.ராமானுஜம். இவர் எனது உற்ற நண்பரும் கூட. தனக்கு சொந்தமாக நிலமில்லாத இவர் தாம் கூறுவதுபடி இயற்கை விவசாயம் செய்ய பல்வேறு நண்பர்களை வலியுறுத்தியும் ஒருவரும் முன் வரவில்லை.
ஆதலால், தனது வசதிக்கு தக்க இடத்தை வாங்கி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திரு.குமார் என்கிற விவசாய நண்பரின் ஒத்துழைப்போடு விவசாயத்தில் ஆழமான, அறிவுப்பூர்வமான உணர்தலை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டுமென களமிறங்கியவர்கள், அனைவரும் அதிசயப்படத்தக்க வகையில் காய்கறிகளை அறுவடை செய்து வருகின்றனர்.
நாம் பார்த்த அளவில் நாட்டு முள்ளங்கி ஒன்று அரையடிக்கும் சற்றே கூடுதலான நீளத்துடன் அதிகபட்சமாக அரைக்கிலோ எடைக் கொண்டதாக பார்த்திருக்கிறோம். அதுவும் முத்தலாகத்தான் இருக்கும்.
ஆனால், இவ்விவசாய நண்பர்களோ இயற்கை முறையில் சுமார் ஒன்றரை அடிக்கும் கூடுதலான நீளம், இருபத்தி மூன்று சென்டி மீட்டர் சுற்றளவு மற்றும் இரண்டே கால் கிலோ எடை கொண்ட பிஞ்சு முள்ளங்கியை அறுவடை செய்து இயற்கை விவசாயத்தின் மீது நமது கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.
இதன் எடை மேலும் 30 சதவிகிதம் உயர்ந்து மூன்று கிலோவை எட்டும் எனவும் நம்புகிறார்கள்.
இவர்களின் நோக்கம் வாணிபமல்ல என்பதால், விளையும் காய்கறிகளை நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது. மாறாக, விதையை அன்பளிப்பாகவே தர திட்டமிட்டுள்ளார்கள். அதனை நீங்களே விதைத்து பயிர் செய்து பலனை அடைய வேண்டும் என்பதற்காக, அவ்விவசாய உழைப்பாளிகளின் தேவை போக மீதியை விதைகளாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உண்மையில் உ(ய)ரிய உடலுழைப்பு இல்லாமல் உண்ணக்கூடாது என்கிற அடிப்படைத் தத்துவம் இதில் அடங்கியள்ளதால் பாராட்டப்பட வேண்டிய நல்லதொரு தொலை நோக்குத் திட்டம்.
நமது இந்தியாவில் இருக்கும் விளை நிலங்களில், சரி பாதியில், சரியான முறையில் இயற்கை விவசாயம் செய்தாலே, இன்றைய உலக மக்கள் தொகையைப் போல ஐந்து மடங்கு மக்களுக்கு உணவளிக்க முடியும் என்கிற இயற்கை விவசாயி திரு.ராமானுஜம் அவர்களின் கணிதக்கூற்று மட்டும் எப்படி பொய்யாகி விடும் என்றே எண்ணத்தோன்றுகிறது.
நீங்கள் உலக மக்களுக்கெல்லாம் உணவளிக்க விரும்பும் நபர்களில் ஒருவரா? அதற்கேற்ப விளைநிலங்களை வைத்துள்ளவரா? நீங்களே உழைக்க முன்வருபவரா? இது குறித்து விபரங்களை அறிய விரும்புபவரா? குறைந்த பட்சம் இவர்களின் இவ்வியற்கை விவசாய முயற்சியை ஊக்குவிக்க விரும்புபவர்களா?
திரு.ராமானுஜம் +919444425801, திரு.குமார் +918453557193 ஆகிய உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாமே!
No law, no life.
Know law, know life!
Know law, know life!
* * * * * * * * * * *
Warrant Balaw
Law Researcher, Writer, Critic
சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற, மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியோடு உங்கள் பகுதி நூலகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நீதியைத்தேடி... எனும் தலைப்பிலான ஐந்து நூல்களைப் படியுங்கள்! உற்றார், உறவினர் நண்பர்கள், அக்கம் பக்கத்தார் என அனைவருக்கும் சொல்லுங்கள்!!
மேலும் விபரங்களுக்கு
இணையதளம் http://www.
வலைப்பூ http://warrantbalaw.
யு டியூப் http://www.youtube.com/watch?
நன்றி: திரு.வாரன்ட் பாலா, சட்ட ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், விமரிசகர்.