பகுதி ஐந்து.
முதல் நாள் நிகழ்வுகள்: 26.12.2011(திங்கள்கிழமை)
முகாம் தொடங்கிய நாளான இன்று காலை முகாமில் ஒரு ஹோமம் செய்து விட்டு அனைவரும் பழனி நகரில் உள்ள தயாசதனில் நடந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டபின்னர் அனைவரும் மதிய உணவுக்காக மீண்டும் தவக்குடில் அமைந்திருந்த புளியமரத்துஷெட்டு முகாமுக்குத் திரும்பினோம்.
நாங்கள் வந்து சேர்ந்திருந்த போது குடந்தை ரமேஷ் (இயற்கை உணவுத் தயாரிப்பாளர்) தன்னந்தனியாளாக முப்பது பேருக்கு இயற்கை உணவினைத் தயார் செய்திருந்தார். நாங்கள் அனைவரும் கடும்பசியில் இருந்தோம். எல்லோரையும் வரிசையாக அமரவைத்து இலை போட்டு அதில் ஊறவைத்த பயறு, கார அவல், இனிப்பு அவல், பழக்கலவை, மற்றும் பலவிதமான பழங்கள் பரிமாறப்பட்டன. அனைவரும் இறைவணக்கம் சொல்லி விட்டு உணவை ருசித்துச் சாப்பிட்டோம்.
உணவுக்குப் பின்னர் அனைவருக்கும் ஒரு மணி நேரம் ஓய்வு தரப்பட்டது. மாலை நான்கு மணிக்கு அனைவருக்கும் யோகப் பயிற்சி அளிக்கப்பட்டது. யோகாசார்யா முருகன்ஜி யோகப் பயிற்சி அளித்தார். அவரிடம் யோகா பயிலும் ஹரிபிரசாத் (11வது படிக்கும் பள்ளி மாணவன்) சில கடினமான ஆசனங்களை சுலபமாகச் செய்து காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
யோகாசன வகுப்பிற்குப் பின்னர் சீர்-வளர்-சீர் திருச்செந்தில் அடிகள் (மெய்த்தவம்) பதஞ்சலி யோக சூத்திரத்தில் இருந்து மிக மிக முக்கியமான சூத்திரங்களை அனைவருக்கும் புரியும்படியான எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக விளக்கினார். அனைவரும் ஆர்வத்துடன் குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். பலர் கேள்வி கேட்டு தங்கள் ஐயங்களை தெளிந்து கொண்டார்கள். இரவு முகாமில் தங்க வேண்டாம் எனவும், எதிரில் உள்ள வேலன் விகாஸ் பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் அனைவரும் தங்கிக் கொள்ளலாம் எனவும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடுங்குளிர், சரியான கழிப்பறை வசதி இல்லாமை, யானைகள் அலையும் பகுதி போன்ற காரணங்களால் இந்த மாற்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கிருஸ்துமஸ் விடுமுறை ஆதலால் ஹாஸ்டல் காலியாக இருந்ததாலும், இருபத்தி நான்கு மணி நேரமும் சுடுநீர் உள்பட, பாத்ரூம்-கழிப்பறை வசதியும், பாதுகாப்பான சூழ்நிலையும் என்பதினால் சென்னை, கோவை, பெங்களூரு, ஈரோடு போன்ற பல பகுதிகளில் இருந்து வந்திருக்கும் விருந்தினர்களுக்கு அடிப்படை வசதிகளை அளிக்கும் பொருட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டது. முதல் மாடியில் தனித்தனியாக அமைந்திருந்த ஆடவர் மற்றும் பெண்கள் பகுதியில் டார்மிட்டரி அறைகள் ஒதுக்கப்பட்டன. ஹாஸ்டல் வார்டன் திரு சதீஷ் மற்றும் பள்ளித் தாளாளர் உடன் இருந்து எங்களுக்கான வசதிகளைக் கேட்டு அன்புடன் கவனித்து வழங்கினார்கள்.
மறுநாள் காலையில் பள்ளி வளாகத்திலேயே யோகப் பயிற்சி, பின்னர் அவர்களை புளியமரத்துஷெட்டு முகாமில் இருந்து சுமார் இரண்டு கி.மீ தூரத்தில் இருந்த ரங்கசாமி மலைக்கு ஒட்டியதாக அமைந்திருந்த ரங்கசாமிகரடு என்ற பகுதியில் இருந்த மற்றொரு தோட்டத்தில் வாழைஇலைக் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முற்பகலில் கனமான உணவு ஏதும் இல்லாமல், கிட்டத்தட்ட உபவாச நிலையில் இந்த குளியலை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அனைவருக்கும் நாளைப் பகல் போதில் உணவு வழங்கப்படமாட்டாது என்று சொல்லப்பட்டது. வாலை இலைக் குளியல் மூலம் உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கி கொள்ளலாம். வெயிலில் குறைந்த உடையுடன் தரையில் விரிக்கப்பட்ட இலையில் மல்லாக்க படுத்துக் கொண்டவுடன் உடல் முழுதும் வாழை இலையைச் சுற்றி முகம் உள்பட பார்சல் போல கட்டி விடுவார்கள். குறைந்தது அரைமணி நேரம் அதிகபட்சமாக முக்கால் மணி நேரம் அப்படியே வெய்யிலில் இருக்க வேண்டும். உடல் முழுதும் நன்றாக வியர்க்கும். அதன் பின்னர் பார்சலைப் பிரிக்கச் சொல்லி வெளியே வந்து சற்று நேரம் இளைப்பாறிய பின்னர் குளிக்க வேண்டும். அதன் பின்னர் இளநீர் வழங்கப்படும். இதுதான் நாளைய இயற்கை நலவாழ்வு நிகழ்ச்சி என்று அனைவருக்கும் விளக்கப்பட்டது.
காலை ஆறு மணிக்கு யோகப்பயிற்சி துவக்கப்படும் என்பதால் எல்லோரும் இரவு உணவினை முடித்து கொண்டு அனைவரும் தத்தம் டார்மிட்டரிக்கு செல்லும்படி வேண்டிக்கொள்ளப்பட்டோம். நானும், பிரேமும், குடந்தை ரமேஷும் மட்டுமாவது இரவு தவக்குடிலில் தங்கலாம் என்று இருந்தோம்.அதனைக் கேள்விப்பட்ட அடிகளாரும், முருகன்ஜீயும் எங்களையும் டார்மிட்டரியிலேயேதான் தங்கவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டார்கள்.
எங்களுக்கு இந்த ஏற்பாடு திருப்தி அளிக்கவில்லை. பள்ளியின் இரவுக காவலர் திரு.ஸ்டீபனிடம் இது குறித்து விசாரித்தோம். சோலார் மின்வேலியினால் தோட்டம் பாதுகாக்கப்பட்டு இருந்தாலும், சிலசமயம் வேலிக்கு அந்தப் பக்கமாக உள்ள மரங்களைச் சாய்த்து வேலியின் மேல் தள்ளி மின்தொடர்பைத் துண்டித்து விட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து விடுவது உண்டாம். அப்படி ஒரு அசம்பாவிதம் கொஞ்ச மாதங்களுக்கு முன்னர் இதே தோட்டத்தில் நடந்திருப்பதினால், முன்பின் அனுபவம் இல்லாத வெளியூர்க்காரர்களைத் தோட்டத்தில் இரவுநேரத்தில் அனைவரையும் தங்கவைப்பதில் அமைப்பாளர்களுக்கு தயக்கமும் பயமும் சங்கடமும் இருந்தது.
மேலும் ஒரு ஒற்றை யானை இப்போது இந்தப் பகுதியில் அடிக்கடி தென்படுவதாக ஊர்மக்கள் பேசிக் கொண்டார்கள். எது இ(எ)ப்படி இருப்பினும் முதல் நாள் இரவின் யானைப்பிளிறல்கள் மத்தியில் உறங்கும் த்ரில்லிங் அனுபவத்தை இழந்த சோகத்தில் நாங்கள் உறங்கச் சென்றோம்.