வெள்ளி, 27 டிசம்பர், 2013

பிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க..!

ஆரோக்கிய நலவாழ்வு புத்தகம் அறிமுகம்..

பிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க..!

நல வாழ்வியல் ஆர்வலர்களே! வணக்கம்.

உணவே மருந்து-மருந்தே உணவு என்னும் இயற்கை நலவாழ்வியல் தத்துவத்தில் உப்பின் பயன்பாடுகள் குறித்து நிறையவே எதிர்மறைக் கருத்துக்கள் நிலவுகின்றன. உப்பு தப்பு என்கிற சித்தாந்தமும் சர்க்கரை (வெள்ளைச் சீனி), உப்பு, பால் மூன்றுமே வெள்ளை நிறப் பாஷாணம் எனவும் ஆரோக்கியத்தை விரும்பும் ஆர்வலர்கள் மத்தியில் நலவாழ்வியல் அறிஞர்களால் நிறைய பேசப்படுகின்றன. அலோபதி மருத்துவத்திலும் சமையலில் சேர்க்கப்படும் உப்பு இரத்த அழுத்த வியாதியை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிபூர்வமாக கண்டறிந்திருக்கிறார்கள். நமது பாரதத்தின் பாரம்பரிய ஆயுர்வேத, சித்த மருத்துவ அறிஞர்கள் நமது தினசரி உணவில் உப்பினைத் தவிர்க்கவே சொல்கிறார்கள். 

இவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தும் நமது தினசரி வாழ்க்கை முறையில் உப்பின் பயன்பாடு சற்றும் குறைந்தபாடில்லை. மாறாக உப்பின் பயன்பாடு கூடிக் கொண்டே போகிறது. இதிலிருந்து கடல் உப்பின் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடையே இன்னமும் முழுமையாக சென்று சேரவில்லை என தெளிவாக தெரிகிறது. ஏனெனில் மருத்துவ உலகில் இரத்த அழுத்தம் விளைவான சவால்களை முன் எப்போதும் விட அதிகமாக தோன்றி இதன் துன்ப விளைவுகளை மனித கும் சந்தித்து வருகிறது. 

உணவில் சேர்க்கப்படும் உப்பு எந்தவிதத்திலும் மனித குலத்துக்கு பயனுள்ளதாக அமையவில்லை என்பதினைப் பற்றிய ஆதார பூர்வமான அறிவியல் செய்திகளையும், தீர்வுகளையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்புத் தான் 'பிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க...என்ற இந்த புத்தகம்.

ஆசிரியர் பிரம்மஸ்ரீ கொ.எத்திராஜ் அவர்கள் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு, எந்த அளவுக்கு மனித குலத்துக்கு கடல் உப்பு ஆபத்தானது என்பதை விளக்கி இருக்கிறார். சுருங்கச் சுவைபடச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவரான இவர், சிறிய நூலான இந்த நாற்பது பக்கங்களில் சொல்லி இருக்கும் செய்திகள் மிகவும் பயனுள்ளவை.

ஏன் இந்த நூலை எழுத முன்வந்தார் என்பதற்கான காரணத்தை அவரது முன்னுரையின் துவக்கமே மிக வலிமையாக கூறுகிறது. 'கிரேக்க நாட்டில் கைதிகளை துன்பமின்றி கொல்வதற்கு திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. அதன் படி நாள்தோறும் சிறைக் கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவுகளில் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டது. நாளடைவில் கைதிகளின் இரத்த அழுத்தம் உயர்ந்து, குறுகிய காலத்தில், மாரடைப்பில் துன்பமின்றி இறந்து போயினர். இந்த அதிர்ச்சி தரும் செய்திதான் இச்சிறு நூல் உருவாகக் காரணமாக அமைந்தது.

புத்தகத்தின் முன்னுரையின் ஆரம்ப வரிகளைப் படிக்கும் போது நாம் வெகுவாகவே அதிர்ந்து போகிறோம். மேலும் படிக்க ஆர்வத்தை தூண்டிடும் ஆரம்பம் இது.

மேலும் சிந்தனையைத் தூண்டும் சில செய்திகள் சுருக்கமாக இதோ:
  • பூமியின் மூன்று பங்கு நீராலும், ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டிருப்பது இயற்கையின் நியதி. இயற்கையின் முயற்சியில் கடலில் மட்டுமே உப்பு இருந்தது! மனித முயற்சியால் உலகம் முழுவதும் ‘உப்பு’ தனது ஆக்கிரமிப்பை உறுதி செய்தது. ‘உப்பின்றி அமையாது உலகு என்ற நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டது. விளைவு.... ‘எங்கெங்கு பார்க்கினும் பிரஷரடா!’ என்ற சூழல் உருவானது. இந்தச் சூழல் மனித இனத்தின் வாழ்வாதாரத்தையும், வாழ்வையும், நாளும் சுருக்கிக் கொண்டே வருகிறது.
  • உண்பது நாழிகை; உடுப்பது ஒரு முழம்! எண்பது கோடி எண்ணி எண்ணி மாய்கின்றாய் மனமே என்ற ஔவைப் பிராட்டியின் வாய்மொழிக்கு இணங்க கலியுக மனிதனும் எண்ணங்களால் சிந்தித்து சிந்தித்து மாய்கிறான்.

புத்தக முழுதும் விரவிக் கிடக்கும் செய்திகளில் இருந்து சிலவற்றை காணலாம்:
  • மூளையில் படியும் நச்சே சிந்தனைகளை சீர்குலைக்கின்றது. கடல் உப்பு மனித மூலையில் நச்சுப் படிவத்தை உண்டாக்குகிறது.
  • மனித சமுதாயத்தின் மங்கலகரமான பொருட்களில் கல் உப்பும் ஒன்றாக இருந்தாலும், அது மனிதனுக்கு தரும் கேடுகள் எண்ணிலடங்கா !.
  • ஓடை நீர் ஆற்றில் சேரும்; ஆற்று நீர் நதியில் சேரும்; நதி நீர் இறுதியில் சமுத்திரத்தை சென்று சேரும். கடல் நீரில் பல்வேறு இரசாயனங்கள் கலந்து இருப்பினும், அளவிற்கு அதிகமாக சோடியம் க்ளோரைடு கலந்திருப்பதால் கடல் நீர் கன நீராக மாற்றி விடுகிறது. 
  • மனித உடலும் எண்பது சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுதான் இருக்கின்றது. இரத்தத்தில் கூட மூன்று பாகம் தண்ணீர்தான் இருக்கின்றது. தினசரி உணவில் உப்பினை சேர்த்து உண்டு வருவதால், மனித உடலில் ஜீரணிக்க முடியாத இந்த உப்புக் கழிவுகள் இறுதியாக இரத்தத்தில் சென்று சேருகின்றன.
  • இவ்வாறு தினசரி இரத்தத்திலும், நீர்ச்சத்திலும் உப்புக் கழிவுகள் சேரச் சேர நாளடைவில் இரத்தம் கடினத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடுகிறது. கடல் நீர் எவ்வாறு மானிட பயன்பாட்டுக்கு உதவிகரமாக அமைவதில்லையோ, அதுபோலவே நாளடைவில் உப்புக் கழிவுகள் அதிகம் கொண்ட மனித இரத்தத்தினையும் ஒரு கால கட்டத்தில் மனித உடலால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகிறது.
  • உப்பிருந்த மண்பாண்டம் அரித்துப் போகும்; உப்புக் காற்றுப்பட்டால் நாளடைவில் கல்லும், இரும்பும் கூட வலுவிழந்து இற்றுப் போகும். அதே போல உப்புக் கழிவுகள் கொண்ட இரத்தமானது நரம்பு மண்டலம், மூளை, எலும்புகள், இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புக்களுக்கு செல்லும் போது அப்பகுதிகளில் நாளடைவில் அரிமானம் ஏற்பட்டு உடல் நலம் குன்றுகிறது. 

பத்து அத்தியாயங்களில் இது போன்ற அறிவியல் பூர்வமான செய்திகளை தொகுத்திருக்கிறார் ஆசிரியர். உப்பைத் தவிர்த்த உணவுகள் தரும் நன்மைகளை பட்டியலிடும் ஆசிரியர் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் முயன்றால் நாளடைவில் உப்புச் சுவை அடிமைத்தனத்தில் முழுமையாக இருந்து விடுபடலாம் என்கிறார்.

சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் சுவைபட சொல்வதில் வல்லவரான ஆசிரியர் ஒரு புத்தகத்தின் நிறைவுப் பகுதியில் ஒரு உரையாடலை உலவ விட்டிருக்கிறார். சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் அந்த உரையாடலில் வெள்ளை உப்பும், பாலும்,வெள்ளைச் சர்க்கரையும் சமயலறையில் உரையாடுகின்றன.

உப்பு: ஏண்ணே! பால் அண்ணே! இந்த மனுஷப் பயலுவ ரொம்ப காலமாகவே ரொம்ப ரொம்ப நல்லவங்களாகவே இருக்கிறதைப் பார்த்தா எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கு.!

பால்: உப்பண்ணே! எதை வச்சு அப்படிச் சொல்றீங்க?

உப்பு: நம்மளால முடிஞ்ச அளவுக்கு இவங்களுக்கு கெடுதல் பண்ணுனாலும், இவனுக இன்னமும் நம்மள ‘ரொம்ப நல்லவங்கன்னு” நம்புறாங்கள்ல! அதை வச்சுத்தான் சொல்றேன்.

சீனி (வெள்ளைச் சர்க்கரை): ரொம்பச் சரியா சொன்னேங்க உப்பண்ணே! நம்ம இங்கே இருக்கிற வரைக்கும் வேறு யாரையும் கெடுதல் பண்ண விட்டுடுவோமா? என்று வெள்ளைச் சீனியும் ஆமோதித்து குரல் கொடுக்கும் நேரத்தில் சமையலறைக்குள் யாரோ வரும் சப்தம் கேட்டு உரையாடல் முடிவுக்கு வருகிறது.

சிந்தையைத் தூதும் உரையாடல் இது. நிறைவாக ஆசிரியர் சொல்கிறார்: “உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி அறிவானது உணர்த்தினாலும், மனமானது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று விடுகிறது. இதனைத்தான் சமூகத்தில் பல பெரிய மனிதர்கள் “அறிவுக்குத் தெரியுது சார்! மனசுக்கு தெரிய மாட்டேங்குது சார்!” என்று கௌரவமாக சொல்லி விடுகிறார்கள். இது மனித குலத்தின் நலவாழ்வின் மீது ஆசிரியர் கொண்டுள்ள ஆதங்கத்தையும், அக்கறையையும் காட்டுகிறது. 

பொறியியல் பட்டதாரியான ஆசிரியர் வடகரை சிவானந்தரின் சித்த வித்தையை முறையாகப் பயின்றவர். ஒரு துறவியை போல இளம் வயதிலேயே பணியில் இருந்து வெளியேறி தவமையம் அமைத்து ஆன்மீக, சமூக வளர்ச்சிக்காக தமது வாழ்நாளை செலவிட்டு வருகிறார். எனவே தகுதி உடைய இவர் சொல்லும் கருத்துக்களுக்கு வலு இருக்கிறது என்பதை புத்தகத்தினைப் படித்து முடித்ததும் நம்மால் உணர முடிகிறது.. 

உங்கள் நலவாழ்வில் அக்கறை காட்டும், உங்கள் வாழ்வில் ஒரு ஆரோக்கிய விடியல் பிறக்க வழிகளை சொல்லும் இந்தப் புத்தகம் எல்லோரும் படித்துப் பின்பற்றிப் பயனடைய வேண்டிய ஒன்று. உங்கள் நலவிரும்பிகளுக்கு பரிசாகவும் தரலாம்.

புத்தகத்துக்கு நீங்கள் விலையாகத் தரும் பணம் ஆசிரியரின் பல்வேறு ஆன்மீகப் பணிகளுக்கும், தவமைய வளர்ச்சிக்கும் பயன்படுவதினால் புத்தகத்தினை வாங்கிய உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கியமும், ஆத்ம திருப்தியும் பலமடங்காக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இயற்கை நல வாழ்வியலை பின்பற்ற விரும்பும் அன்பர்களுக்கு தேவையான பல செய்திகளை உள்ளடக்கிய அருமையான தொகுப்பு. 

இந்த நூல், மூர்த்தி சிறிதாகினும், கீர்த்தி பெரிது என்பார்கள் பெரியோர். அது இந்தப் புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கும் போது உணரலாம்.

புத்தகம் பற்றிய விவரங்கள்.

புத்தகத்தின் தலைப்பு: பிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க..!

ஆசிரியர்: பிரம்மஸ்ரீ கொ.எத்திராஜ்

நூல் வெளியிடுவோர்: 
பிரம்ம வித்தை தவ மையம்,
சித்த வித்தியார்த்தி பவுண்டேஷன்,
சித்தர் வழிச் சாலை, சிவானந்தகிரி,
மல்லையாபுரம்-624707
ஆத்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

நாற்பது பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.40 மட்டுமே (இந்த பணம் தவமைய வளர்ச்சிக்கு பயன்படுத்தவே)

ஒரு வேண்டுகோள்: புத்தகம் தேவைப்படுவோர் ஆசிரியரின் முகவரிக்கு எழுதி பெற்றுக் கொள்ளலாம். பத்து பேர் சேர்ந்து ஒரே வி.பி.பி. ஆர்டரில் புத்தகத்தை வரவழைத்து உங்களுக்குத் தேவையான எண்ணிக்கையை பெற்றுக் கொள்வதே சிறந்த வழி.


வாழி நலம் சூழ...

புதன், 25 டிசம்பர், 2013

யோக நலமே வாழ்வின் வளம்: பகுதி நான்கு: சங்கப்ரக்ஷாலனா க்ரியா.

யோக நலமே வாழ்வின் வளம்: பகுதி மூன்று: சங்கப்ரக்ஷாலனா க்ரியா.

இனி வருவது இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி.

சிறப்பான உணவு.
சங்கப்பிரச்சாலனாக் கிரியை முடித்துச் சரியாக 45நிமிடம் கழித்துச் சிறப்பாகச் செய்யப்பட்ட கிச்சடியைக் கண்டிப்பாக உண்ண வேண்டும். இந்த உணவைச் சரியான நேரத்தில் உண்ணுதல் அவசியம்.

இந்தப் பயிற்சியைச் செய்த பின்னர், உடலின் இசைவு [ரிதம்]தற்காலிகமாகக் குழம்பும்;குடலின் செரிமான சக்தி சற்றே பாதிக்கப்படும். ஆயினும் 45நிமிடம் முடிந்த பிறகு செரிமான உறுப்புகள் செயலாற்றத் துவங்கும்.

கிச்சடியில் உள்ள மூன்று பொருள்கள் செரிமானம் சரிவர நடக்கத் துணை செய்யும். நெய் குடல் சுவர்களில் தடவிச் செல்ல உதவும். குடலில் புது லைனிங் உருவாவதற்கு நெய் அவசியம் தேவை. பச்சரிசி எளிதில் செரிக்க உதவும். அதில் உள்ள கார்போஹைடிரேட் குடலில் சளிப்படலம் உண்டாக உதவும். பாசிப் பருப்பு எளிதில் செரிக்கக் கூடிய புரதச் சத்தாகும். கிச்சடி முழுதான சத்துள்ள உணவாகும். போதுமான கிச்சடியை உண்ண வேண்டும். அப்போது தான் குடல் சுவர்களில் லைனிங் உண்டாகவும் குடலில் சுருக்கங்கள் உண்டாகாது  தடுக்கவும் உதவும. குடலில் அதிக அளவு கிச்சடி இருப்பது குடலைச் சீர் செய்வதோடு குடலின் சுருங்கி விரிந்து முன் தள்ளும் இயக்கமான (Peristolic movement)மண்புழு நகர்வதைப் போன்ற குடல் இயக்கத்துக்கும் உதவும். செரிமானமின்மை கழிச்சல் மலச்சிக்கல் இவை வராதிருக்க உதவும்.

மேலும்ஓய்வு.
கிச்சடி உண்டபின் ஓய்வு கொள்க. மூன்று மணி நேரம் தூங்கக் கூடாது. தூங்கினால் உடல் சோம்பலையும் தலைவலியையும் உண்டு பண்ணும். இதற்குப் பிறகு அன்று முழுவதும் ஓய்வு. மறுநாளும் ஓய்வு. அப்போது மௌனம் கடைப்பிடித்து உடல் வேலை மூளை வேலைகளைத் தவிர்ப்பது நல்லது.

இரண்டாம் உணவு.
மாலை உணவிற்கும் கிச்சடி தயார் செய்க. முதல் உணவு உண்ட ஆறு மணி நேரம் கழித்து பசி இல்லையெனினும் வயிறு நிறைய உண்க.

இடம்.
அதிகக் காற்றோட்டமுள்ள இடத்தில் தோட்டத்தில் பயிற்சி செய்க. கழிவறைகள் போதுமானதாக உள்ள இடத்தில் செய்க. நண்பர்கள் குழாம் உள்ள இடத்தில் செய்க. உடலைத் தளர்வாகவும் மனதை லேசாகவும் வைத்துக் கொள்க.

சீதோஷ்ணம்
அதிகக் குளிரோ வெயிலோ இல்லாத சமயம் நல்லது. மழைக் காலம் கூடாது. கோடை காலம் கூடாது. ஆண்டுக்கு இருமுறை செய்யலாம்.தேவையான நேரம்: அன்றும் மறுநாளும் ஓய்வு.

முன்னெச்செரிககை
மலக்குடலில் இருந்து தண்ணீர் தெளிவாக வந்த பின்பும் பயிற்சியைத் தொடரக் கூடாது. மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வெளிவரத் தொடங்கும் போதே சிறிது கலங்கலாக இருக்கும் போதே பயிற்சியை நிறுத்திக் கொள்வது சிறந்தது ஓய்வு கொள்ளும் 45நிமிடம் தூங்கக் கூடாது. தூங்கினால தலைவலி தடுமன் வரலாம். முதல் உணவு உண்டு இரண்டு மணி நேரத்துக்குத் தண்ணீர் குடிக்கக்கூடாது. குளிர்ந்த நீர் செரிமான மண்டலத்தைக குளிர்விக்கும். எனவே குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில் குடலில் புதுலைனிங் உடலால் புதிதாக உருவாக்கப்பட்டது என்பதால் அது லைனிங்கைக் கழுவிக் கொண்டு சென்று விடும். காற்றாடி ஏசி கூடாது.உடலைச் சூடாக வைத்திருக்க வேண்டும்.கம்பளியால் உடலை மூடுக. நடுப்பகல் சூரியஒளி தீ. எனவே உடற்பயிற்சிகூடாது. மற்றும் மன அழுத்தம் கூடாது

உணவுக் கட்டுப்பாடு.
ஒரு மாதத்திற்குத் கீழ்க்கண்ட உணவுப் பொருட்களை உண்பதை தவிர்க்கவும். இரசாயனம் கலந்த உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்பு அதிகக்காரம் கொண்ட உணவு வகைகள். மற்றும் அமில உணவு, மாமிச உணவு, ஊறுகாய், இனிப்பு, சாக்லேட், ஐஸ்கிரீம், இரசாயனம் கலந்த செயற்கை பானங்கள் கூடாது.

பால், தயிர், மோர், புளிப்புப் பழங்கள், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி இவற்றைக் குறைவாக உண்க. கள், சிகரெட், டீ, காபி, வெற்றிலை போன்ற மயக்கம் தருபவை வேண்டாம்.  இயற்கை உணவு கொள்க. தூய உணவு உண்க. ஏனெனில் செரிமான உறுப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

எச்சரிக்கை.
வழிகாட்டு முறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். பின்பற்றுவது பக்க விளைவுகள் இல்லாதிருக்க உதவும்.

நன்மைகள்
செரிமானக கோளாறுகளான செரிமானமின்மை, வாயு, அமிலம், மலச்சிக்கல் ஆகியவை அகலும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் முதலான செரிமான உறுப்புகளைச் சீர்படுத்தும். நீரிழிவு, உடல்பருமன், அதிக கொலஸ்ட்ரால், அதிக லிப்பிட் லெவல்ஸ் ஆகியவை குறையும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். ஒவ்வாமை அகலும். மூட்டு வலி அகலும். ஆஸ்த்துமா, தொடர்  தடுமன், சைனஸ் அகலும்.

ரத்தத்தைச் சுத்தம் செய்து தோல் நோய்களை அகற்றும். பரு கட்டி எக்ஸிமா அகலும். பிராண உடம்பைப் புதுப்பிக்கும். நாடிகளில் உள்ள அடைப்பை அகற்றும். சக்கரங்களைத் தூய்மை செய்யும்.

ஐந்து பிராணன்களின் இயைபு கூடும். சக்தி கூடும் மனம் மேல் நிலைக்குச் செல்லும். இக் கிரியைக்குப் பிறகு ஆன்மீக சாதனை செய்வது பல நன்மைகளைத் தரும்.

பயிற்சிக் குறிப்பு.
மேலே குறிப்பிட்ட ஐந்து ஆசனங்களும் மண்புழு இயக்கத்திற்கும் செரிமான மண்டலத்தில் உள்ள வால்வுகள் நரம்புகள் தசைகள் திறம்பட வேலை செய்ய உதவும். இரைப்பைக்கு வெளியே உள்ள பைலோரிக் வால்வு [PYLORIC VALVE] திறக்கும். பிறகு சிறுகுடல் முடிவில் உள்ள [ILEOCAECAL VALVE] வால்வு திறக்கும் மலக்குடல் முடிவில் குதத்தில் எருவாயில் உள்ள ஸ்பின்க்டர் [SPINCTER] சுருக்குதசை வேலை செய்யும்.

நிறைவு.

அன்பர்களுக்கு வணக்கம். இதுவரை இந்த கட்டுரையை படித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.இக் கட்டுரையை மனமுவந்து இங்கே வெளியிடத் தந்த திருவாளர் மின்பொறியாளர் ஆ.மெய்யப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

'யோகநலமே வாழ்வின் வளம்' எனும் கருத்தை வலியுறுத்தும் வகையிலான  பதிவுகளை இந்த வலைப்பூவில் தொடர்ந்து நீங்கள் காணலாம். யோக நலம் தொடர்பான கட்டுரைகளை வாழி நலம் சூழ வலைப்பதிவில் வெளியிட விரும்பினால் எங்களுக்கு அனுப்பலாம். சேவையை நோக்கமாகக் கொண்டு இந்த வலைப்பூ செயல்படுவதினால் அதே மனப்பான்மை கொண்டோர் மட்டுமே கட்டுரைகளை அனுப்பவும். சன்மானம் நன்றியறிதல் வடிவில் மட்டுமே தரப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். அன்பர்கள் அனைவருக்கும் வாழி நலம் சூழ...வின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செவ்வாய், 24 டிசம்பர், 2013

யோக நலமே வாழ்வின் வளம். பகுதி மூன்று: சங்கப்பிரக்ஷாலனக் கிரியா.

முந்தைய பகுதிக்கு செல்ல, கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்குக.
பகுதி 2: சங்கப்பிரக்ஷாலனக் கிரியா.

ஒரு வேண்டுகோள்: யோகாசனங்களை  கற்றுத் தேர்ந்த ஆசிரியர் ஒருவரின் துணையுடன் செய்யவும்.  புத்தகங்களின் துணை கொண்டு செய்தல் தவறான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம்.


பகுதி 3: சங்கப் பிரக்ஷாலனக் கிரியா.

4. திரியகபுஜங்காசனம்

புஜங்காசனத்தின் இறுதி நிலைக்குச்சென்று கால்களை அரைமீட்டர் அகட்டி வைக்கவும். கால் விரல்களில் இருக்கவும். குதிகால்களை உயர்த்தவும். முன்னால் தலை உயர்த்திப் பார்க்கவும். பின்னர் மெதுவாக தலையைத் திருப்பவும். மேல் முதுகெலும்பு திரும்பி இருக்கட்டும். பின்னர் இடது தோளைப் பார்க்கவும்.வலது குதிகாலைப் பார்க்கவும். கைகள் சிறிது வளைந்தும் இருக்கலாம். வயிற்றின் மூலை மட்டப் பக்க நீட்டத்தை உணரவும். முதுகைத் தளர்வாகவும் தொப்புள் தரையில் படும்படியும் வைத்துக்கொள்ளவும் சிறிதுநேரம் கடைசிநிலையில் இருக்கவும் அடுத்த பக்கமும் திரும்பிச் செய்யவும். நடுநிலைக்கு வந்து உடலைக்கீழே இறக்கவும்.

இது ஒரு சுற்று.

மூச்சு: மேலே வரும் போது உள்மூச்சு. உடலைத் திரும்பிப் பார்க்கும் போது மூச்சை வெளிவிடுக.
முதுகுத்தசை குடல்களின் மேல் நினைவை வைக்கவும். ஸ்வாதிஸ்டானச் சக்கரத்தில் நினைவை வைக்கவும்.


முதுகந்தண்டில் எலும்புகளுக்கு இடையில் உள்ள வில்லைகளை நல்ல நிலையில் வைக்கும். முதுகுவலியை அகற்றும் முதுகெலும்பை வளையுந்தன்மையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். விறைப்பான முதுகெலும்பு மூளையிலிருந்து நரம்புகள் வழியாகச் செல்லும் செய்திகள் உடலுக்குச் செல்வதற்கு இடையூறாக உள்ளது. முதுகை வளைப்பதால் முதுகில் இரத்தஓட்டம் கூடி நரம்புகள் பலப்பட்டு நல்ல செய்தித்தொடர்பு மூளைக்கும் உடல் உறுப்புகளுக்கும் ஏற்படும். கருப்பை மாதவிலக்கு மற்ற பெண்கள் நோய்கள் அகலுகின்றன பசியைத் தூண்டுகிறது. கல்லீரல் சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. அட்ரினல் சுரப்பி சிறப்பாகச் செயல்படுகிறது. தைராய்டுசுரப்பி சுரக்கும் கார்டிசான் நன்கு சுரக்கிறது.ஸ்வாதிஸ்டானம் மணிபூரகம் அனஹாதம் விசுத்தி ஆகிய சக்கரங்களில் பிராணசக்தி கூடுகிறது. குடல்கள்மேல் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது.

5. உதரகர்சனாசனா[ABDOMINAL STRETCH]
போர்ட்டர் உட்காருவதுபோல் உட்காரவும். கால்களை அகட்டி வைக்கவும். முழங்கால்கள் மேல் கைகளை வைக்கவும்.

மூச்சு: ஆழ்ந்தமூச்சு. வெளி மூச்சு விட்டு வலது முழங்காலை இடது பாதத்திற்கு அருகில் தரையைத் தொடுமாறு கொண்டு வருக. இடது கையை நெம்பு கோலாகப் பயன்படுத்தி இடது முழங்காலை வலப்பக்கம் திருப்புக.

அதேசமயம் உடலை இடப்பக்கம் திருப்புக. தொடைகள் இரண்டினாலும் அடிவயிற்றை அழுத்தவும்.அடி வயிற்றைப் பிழியவும். இடது தோளைப் பார்க்கவும். வெளிமூச்சு பகீரக கும்பகம். இந்த நிலையில் ஐந்து விநாடி இருக்கவும்.
பழைய நிலைக்கு தொடக்க நிலைக்குச் செல்லும் போது மூச்சை உள்ளே இழுக்கவும். அதே போல் வலப்பக்கம் திரும்புக. இரண்டும் சேர்த்து ஒரு சுற்று.

நினைவு: மூச்சுடன் இயைபுபடுத்தி இடம் வலம் திரும்புக. சுவர் அருகிலிருந்தும் செய்யலாம். 20செமீ தள்ளி அமரலாம்.

நன்மை:வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். வயிற்றில் உள்ள உறுப்புகளையும் தசைகளையும் அழுத்தும். நீளச்செய்யும். மலச்சிக்கல் அகலும். மேற்சொன்ன ஆசனங்களை வரிசைப்படி விரைவாகச் செய்யவும். இது ஒருசுற்று.சுற்றுக்கிடையில் ஓய்வு வேண்டாம்.

எட்டுச் சுற்றுகள் செய்யவும்.

மறுபடி மேலும் இரண்டு குவளை வெதுவெதுப்பான உப்பு கலந்த நீரைப் பருகவும். மறுபடி ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி செய்யவும். எட்டு முறை செய்யவும். மூன்றாம் முறை மேலும் இரண்டு குவளை வெது வெதுப்பான உப்புகலந்தநீரைப் பருகவும்.

மறுபடி ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி செய்யவும். எட்டுமுறை செய்யவும்.

மூன்றாம் சுற்றுக்குப் பிறகு கழிவறைக்குச் செல்லவும்.வயிறு அசைகிறதா மலக் கழிவு உணர்வு வருகிறதா என்பதைப் பார்க்கவும்..சிரமப்படவேண்டாம்.

மலங்கழிந்தாலும் கழியாவிட்டாலும் கழிவறையை விட்டு வெளியேவரவும்.

மறுபடி மேலும் இரண்டுகுவளை வெதுவெதுப்பான உப்புகலந்தநீரைப் பருகவும்.

மறுபடி ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி செய்யவும். எட்டுமுறை செய்யவும்.

பிறகு கழிவறைக்குச் செல்லவும். மலக்கழிவுஅழுத்தம் வந்தால் மலம்கழிக்கச் செல்க. கழிவறையில் குறைவான நேரத்தைச் செலவிடுக. குடலைத்தூய்மை செய்யும் அழுத்தத்தை உண்டாக்குவதுதான் குறிக்கோள்.

திடக்கழிவு முதலில் வெளியேறும். பிறகு திடக்கழிவும் திரவமும் வெளியேறும். பிறகு தண்ணீர் அதிகமாகவும் திடக் கழிவு குறைவாகவும் வெளியாகும்.

மேகம் போன்ற கலங்கல் மஞ்சள்நிறத்தில் நீர் வெளியேறும். பிறகு தெளிவாக வெளியேறும். கலங்கலாக வெளி வரும் போதே கிரியை முடித்துக் கொள்க. பொதுவாக 16தம்ளர் தண்ணீர் போதுமானது. ஆளுக்கு ஆள் அளவு வேறுபடும். மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். சிலர் விரைவாக முடிப்பார்கள். சிலருக்கு அதிகநேரம் எடுககலாம். தளர்வான ஓய்வான மனநிலையில் பயிற்சிசெய்க.

குஞ்சால்கிரியையும் ஜலநேத்தியையும் சங்கப்பிரச்சாலனாக்கிரியை முடித்து பத்து நிமிடம் கழித்துச் செய்க. பிறகு ஓய்வு கொள்க. முழுஓய்வாக இருப்பது அவசியம். சாந்திஆசனத்தில் 45நிமிடங்கள் இருக்கவும்.தூங்கக்கூடாது.தூங்கினால் தலைவலி ஜலதோஷம் உண்டாகலாம். ஓய்வான சமயம் உடலைச் சூடாக வைத்திருங்கள்.

மௌனம் சாதிக்கவும்.செரிமான உறுப்புகள் புதுப்பிக்க வாய்ப்பளிக்கிறோம். சிறுநீர் கழித்தல் இயல்பானதே.

(தொடரும்) 
நிறைவுப் பகுதி அடுத்து வருகிறது.

திங்கள், 23 டிசம்பர், 2013

யோக நலமே வாழ்வின் வளம். பகுதி இரண்டு: சங்கப்ரக்ஷாலனக் கிரியா.(தொடர்)

தொடக்கத்தில் இருந்து படிக்க இணைப்பில் சொடுக்குக:
பகுதி ஒன்று: சங்கப்ரக்ஷாலனக் கிரியா


சங்கப்பிரக்ஷாலனக் க்ரியா (தொடர்ச்சி-பகுதி 2)

2. திரியகதாடாசனம் [அசையும் பனைமரம்]
ஆசனம் செய்முறை:


கால்களை இரண்டு அடி அகட்டி வைக்கவும். பார்வையை நேரில் வைக்கவும். விரல்களைக் கோர்த்து உள்ளங்கைகளை வெளிப்புறம் புரட்டவும்.


மூச்சுமூச்சை உள்ளே இழுக்கும் போது கைகளைத் தலைக்கு மேல் உயர்த்துக. மூச்சை வெளி விடும் போது இடது பக்கம் இடுப்பிலிருந்து சாயவும்.

முன்புறம் பின்புறம் சாயாது உடலைத் திருப்பாது பக்கவாட்டில் மட்டும் சாயவும்.
 திரியகதாடாசனம் [அசையும் பனைமரம்]

மூச்சை வெளியில் நிறுத்தியவாறே அந்த நிலையில் சில விநாடிகள் இருக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு மேலே வரவும்.

வலப்பக்கமும் இதேபோல் பக்கவாட்டில் சாயவும். பிறகு நேரே வந்து கைகளைக் கீழே கொண்டு வரவும் .இது ஒருசுற்று.

நினைவு: மூலாதாரச் சக்கரம் மணிபூரகச் சக்கரங்களில் மனதைவைக்கவும்.

நன்மை: இடுப்பின் பக்கவாட்டை மஸாஜ் செய்கிறது தளர்த்துகிறது வலப்பக்க இடப்பக்கத தசைகளைச் சமன் செய்கிறது

3. கடிசக்கராசனம் [இடுப்பைத் திருகும்நிலை]

பாதங்களுக் கிடையில் அரைமீட்டர்அளவுக்கு இடைவெளி விட்டு நிற்கவும். கைகள் பக்கவாட்டில் தொங்கட்டும். ஆழ்ந்த மூச்செடுத்துத் தோள்மட்டத்திற்குக் கைளை உயர்த்தி நீட்டுக.இடப்பக்கம் திரும்புக. வலக்கையை இடதுதோளில் வைக்கவும். இடது புறங்கையை.முதுகில் வைக்கவும். இடதுகையை வலது இடுப்பருகில் கொண்டுவரவும் கழுத்தின் பின்புறத்தை நேராக வைக்கவும் மேலும் திரும்பி வயிற்றை நீட்டவும். மூச்சை உள்ளிழுத்துத் தொடக்கநிலைக்குத் திரும்புக அதே போல் வலப்பக்கம் திரும்பிச்செய்க.
கடிசக்கராசனம் [இடுப்பைத் திருகும்நிலை]

இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பும்போது பாதங்கள் அசையாது உறுதியாக இருக்க வேண்டும். பயிற்சியின்போது கைகளும் முதுகும் தளர்ச்சியாக இருக்கட்டும். விட்டுவிட்டுச் செய்யாது எண்ணெய் ஒழுக்காக  அழகாகத் திரும்புக. மூச்சின்மேல் கவனம் வைக்கவும்.

நன்மைஇந்த ஆசனம், இடுப்பு முதுகு இரண்டையும் பலப்படுத்தி, முதுகு விறைப்பாக இருப்பதைச் சரிசெய்கிறது. உடல் லகுவாகும். உடல், மனஇறுக்கங்கள் அகலும்.

(தொடரும்)

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

யோக நலமே வாழ்வின் வளம். பகுதி ஒன்று: சங்கப்ரக்ஷாலனக் கிரியா.(தொடர்)

சங்கப்பிரக்ஷாலனக் கிரியை

வலைப்பூ அன்பர்களுக்கு வணக்கம்.

மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளினால் பாதிப்படைபவர்கள் அதில் இருந்து மீள பல விதமான மருத்துவ முறைகளைப் பின்பற்றுகிறார்கள். மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள், வாழ்க்கை முறையினாலும், உணவுகளாலும் ஏற்படும் தொந்தரவுகள் என வெளிவர முடியாத ஒரு மாயச் சுழலில் சிக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.

நமது பாரத பண்டைய மரபுகளை நாம் பின்பற்றாமல் போனதே இந்தத் தொடரும் துயரங்களுக்கு முக்கிய காரணம். பல்லாயிரம் ஆண்டுகாலமாக ஆயுர்வேதம், யோக முறைகள் மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகளை நாம் கிட்டத் தட்ட மறந்தே போய் விட்டோம். நவீன உலகின் துயரங்களுக்கு அவை தீர்வுகள் வைத்து உள்ளன. மேலை நாடுகளில் இந்திய பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதம், மற்றும் யோகா பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார்கள். தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நமது பாரம்பரிய முறைகளின் நம்பகத் தன்மையை அவர்களது ஆய்வு முடிவுகள் நிரூபித்து வருகின்றன.

உணவே மருந்து; மருந்தே உணவு என்கிற சிந்தாந்தத்தின் அடிப்படையில் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் பெரிதும் உதவிகரமானதாக உள்ளன. குடலைக் கழுவி உடலை வளர் என்கிற சித்தாந்தமே அடிப்படை ஆரோக்கிய தத்துவமாகும்.

வாரிசார் தவுத்தி எனப்படும் இது சங்கப்பிரக்ஷாலனக் கிரியை எனவும் அழைக்கப்படுகிறது. சங்க என்றால் சங்கு.. பிரக்ஷாலனா என்றால் சுத்திகரித்தல்சங்கின் உள்புற அமைப்பு சுழன்று சுழன்று அமைந்திருப்பதை போல நமது குடல் பகுதி சுழன்று சுழன்று அமைந்திருக்கிறது எனவே இந்த பெயரால் இந்தக் கிரியா அழைக்கப்படுகிறது. குடலின் தொடக்கப் பகுதியான தொண்டைக் குழியில் இருந்து ஆசன வாய் வரை உள்ள நீண்ட அலிமென்டரி கனால் (Alimentary canal) பகுதியை சுத்தப்படுத்தும் மிக சக்தி வாய்ந்தது இந்தக் கிரியா முறை. 

சரியாக சீரணிக்காத உணவுகள் மலக் குடலில் தேங்குவதன் மூலம் நச்சுத் தன்மை உண்டாகி அவை உடலின் பல பகுதிகளை பாதிக்கின்றன. டீ-டாக் ஸ்(De-tox) எனப்படும் நச்சகற்றும் முறையில் யோகாவின் ஒரு அங்கமான கிரியா பெரும் உதவி புரிகிறது.

சங்கப்  பிரச்சாலனாக் கிரியை எனப்படும் இந்த மலக் குடல் கழுவும் உத்தி அதிக செலவில்லாததும், பக்க விளைவுகளை ஏற்படுத்தாததுமான ஒரு எளிய முறையாக விளங்குகிறது. 

பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா(Bihar School of Yoga)வின் நிறுவனர் சுவாமி சத்தியானந்தா தனது உலகப் புகழ் வாய்ந்த ஆசனா, பிரணாயாம, முத்ரா, பந்தா, க்ரியா எனும் நூலில் மிக அற்புதமாக யோகா எவ்வாறு பல நோய்களைத் குணப்படுத்தி நீண்ட நாட்கள் நலமாய் வாழ்ந்திட நமக்கு உதவுகிறது என்று விளக்கி உள்ளார். இந்த நூலில் இருந்து சங்கப் பிரக்ஷாலனக் கிரியாவைப் பற்றி யோகா ஆசிரியரும், இயற்கை நலவாழ்வியல் நெறியாளருமான திரு.Er.ஆ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G.Dip(Yoga) அவர்கள் தொகுத்து தந்துள்ளார்கள்.
 

ஏற்கனவே யோகா பயிற்சி உள்ளவர்கள் இந்த முறையினை தாமே செய்து கொள்ளலாம். முதன் முறையாக செய்பவர்கள் தகுந்த யோகா ஆசிரியர் மேற்பார்வையில் செய்து கொள்ளுதல் நலம். அக்கம் பக்கத்தில் நடைபெறும் பயிற்சி முகாம்களிலும் இதற்கான பயிற்சிகளை பெறலாம். இம்மாத இறுதியில் திருப்பனந்தாளில் நடைபெற உள்ள இயற்கை நலவாழ்வியல் முகாமில் (முகாம் பற்றி அறிய இணைப்பை சொடுக்குக) சங்கப்  பிரச்சாலனாக் கிரியைக்கென பிரத்தியேகமான பயிற்சிகளை தர இருக்கிறார்கள். 

நமது உணவு மண்டலம் - ஒரு பார்வை.

நமது உணவுக் குடல் ஐந்து வால்வுகளால் ஆனது.

1.     தொண்டைப் பகுதி (oesophageal)
2.     உணவுப் பை (pyloric)
3.     பெருங்குடல் (ileocecal)
4.     சிறுகுடல் (colon); மற்றும்
5.     ஆசனவாய்(anus).

உணவுக் குழாயின் இந்த பகுதி மிகவும் நுணுக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது. தினசரி ஏற்படும் மன உளைச்சல்கள் காரணமாகவும், உணவு உட்கொள்ளுதலில் தவறான முறைகளை கடைப்பிடிப்பதன் காரணமாகவும் இந்த கேஸ்ட்ரோ இண்டஸ்டினல் ட்ராக்ட் எனப்படும் நீண்ட அமைப்பானது தனது செயல் திறனை இழக்க நேரிடுகிறது. அதனால் இந்த நீண்ட குழலில் இயக்கங்களில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. அதனால் உணவுப் பயணத்தில் குறைபாடுகளும், இயக்கத்தில் மந்த நிலையும் ஏற்படக் கூடும். குடலின் இயற்கை செயல் திறனில் ஏற்படும்  இந்தக் குறைபாடுகள் காரணமாக உணவின் செரித்தல் திறன் குறைகிறது. அதனால் உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படாமல் போகிறது. இயக்கங்கள் மாறுபாடான இந்த சூழலில் முழுமையாக சீரணிக்கப் பட வேண்டிய உணவு தேங்க ஆரம்பிக்கிறது. அதனால் ஏற்படும் நச்சுத் தன்மை மீண்டும் உடலுக்கு ஊறுகளை விளைவிக்கிறது. சீரணித்தல், வெளித்தள்ளுதல் போன்ற செயல்களில் ஏற்படும் குறைபாடுகள் ஐந்து வால்வுகளில் மாறுபாடான இயக்கத் தன்மைகளை ஏற்படுத்தி வயிறு உபாதைகளை விளைவிக்கிறது. 

சங்கப்ரக்ஷாலனாக் கிரியா செய்வதன் மூலம் உடலின் மிக நீளமான உறுப்பான உணவுக் குழல் பகுதியை மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்க இயலும். வயிறு, ஜீரண உபாதைகளுக்கான தொல்லைகளை நீக்க கேஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட்டுகளிடம் சென்று மருத்துவம் பார்ப்பதை விட இந்தக் கிரியா உங்கள் உணவுப் பாதையை இயற்கையான முறையில் மிகக் குறைந்த செலவில் செப்பனிட்டு தந்து விடும். குடல் கேன்சர், டயபடிஸ் போன்ற உபாதைகளில் இருந்து இயற்கையான முறையில், பக்க விளைவுகள் இன்றி குடல் ஆரோக்கியத்தை மீட்டுத் தந்திட இந்த கிரியா உதவுகிறது. 

இந்த பதிவில் தொடங்கி நான்கு பதிவாக வரவிருக்கும் இந்தப் பகுதியை படித்துப் பயன் பெற இயற்கை நல வாழ்வியல் ஆர்வலர்களை அழைக்கிறேன். 

வருகிற புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்றுச் சிறந்திட வாழ்த்துக்களுடன் பதிவினை துவங்குகிறேன். நன்றி. 

அஷ்வின்ஜி,
வாழி நலம் சூழ..
 

சங்கப்  பிரச்சாலனாக் கிரியை

இந்தக் கிரியை செய்வதற்கு முன்னதாக சில தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்:

முதல் நாளிரவு: சங்கப் பிரச்சாலனாக் கிரியை செய்வதற்கு முதல்நாள் இரவு குறைவான பாதித் திரவ உணவை  உண்பது நல்லது. 

பயிற்சி நாளின் போது: பயிற்சி துவங்குவதற்கு முன்னதாக கீழ்க்கண்டவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.

சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீரும் மேலும் கலப்பதற்குத் தேவையான சூடான தண்ணீரும் வேண்டும். அதில் ஒருலிட்டர் தண்ணீருக்கு இரண்டுதேக்கரண்டி வீதம் உப்புசேர்க்கவும். உப்பின் அளவு குறைவாக அதே நேரம் நீரின் சுவை உப்பு கரிக்கும் அளவிற்கு இருந்தால் போதும்..

பொங்கல் கிச்சடி தயாரிக்க ஏற்பாடு செய்யவேண்டும். இந்தக் கிரியை செய்யத்தொடங்குமுன் எந்த ஆசனமும் கடினமான வேலையும் செய்யவேண்டாம். மலம் கழிக்காதிருந்தாலும் உணவு மற்றும் மலக் குடலின் விரிந்து சுருங்க அசையச் செய்யும் (Peristolic movement of bowels அதாவது மண்புழு இயங்குவது போன்ற) குடல் அசைவுக்கு அதுஉதவும்.

முழுக்குடல் கழுவல்

இரண்டு குவளை வெதுவெதுப்பான உப்புநீரைக் கடகடவென்று குடிக்கவும். பின்னர் கீழ்க்கண்ட ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி எட்டுமுறை விரைவாகச் செய்க

1. தாடாசனம்
2. திரியக தாடாசனம்
3. கடி சக்கராசனம்
4. திரியக புஜங்காசனம்
5. உதர கர்ஷனாசனம்

மேற்கண்ட ஐந்து ஆசனங்கள் கொண்டது ஒரு சுற்று. எட்டுச் சுற்றுகள் செய்யவும்  சுற்றுக்கிடையில்ஓய்வு எடுக்க வேண்டாம்..

தாடாசனம் [பனைமர ஆசனம்]

பத்துச்சென்டிமீடடர் இடைவெளியில் கால்களை அகட்டிவைத்து நிற்கவும். கைகளைப் பக்கவாட்டில் தொங்கவிடவும். உடலின் எடை இருகால்களிலும் சமமாக இருக்கட்டும். .தலைக்கு மேல் கைகளை உயர்த்தவும். விரல்களைக் கோர்த்து உள்ளங்கைகளைப் புரட்டித் தலைக்ககுமேல் வானத்தைப் பார்த்தபடி வைக்கவும். எதிரில் உள்ள சுவரில் தலைக்குச் சற்றுமேலே பார்வையை வைக்கவும். கைகளையும் தோள்களையும் நெஞ்சையும் மூச்சை உள்ளே இழுத்தவாறே மேலே நீட்டவும். அதேசமயம் குதிகால்களை உயர்த்தவும். கால்விரல்களில் நிற்கவும். குதிகால்கள் சேர்ந்திருக்கட்டும்.

தாடாசனம்

அடிமுதல் தலைவரை முழு உடலையும் சமநிலை இழக்காமல் நீட்டவும். சிறிதுநேரம் மூச்சை உள்ளே வைத்து அந்த நிலையில் நிற்கவும். மூச்சை வெளிவிட்டவாறு கால்களை இறக்கவும். கைகளையும் தலைக்குமேல் இறக்கவும்.

மூச்சு: உடலை மேலே நீட்டும்போது மூச்சை உள்ளே இழுக்கவும். கீழே தாழ்த்தும் போது மூச்சை வெளியே விடுக.

நினைவு: மூச்சில் கவனத்தை வைக்கவும் மனதைத் தொடக்கத்தில் மூலாதாரச் சக்கரத்திலும் பிறகு ஆக்ஞை சக்கரத்திலும் வைக்கவும்.

நன்மை: உடலையும் மனதையும் சமநிலையில் வைக்க உதவும். முதுகந் தண்டை நீட்டவும் தளர்த்தவும் செய்வதால் அங்கிருந்து வெளிச்செல்லும் நரம்புகளில் சேர்ந்திருந்த தேவையற்ற நச்சுக்களை அகற்ற உதவும்.

தாடாசனம் சிறுகுடல் பெருங்குடல் மலக்குடல் தசைகளை நீட்டுகிறது. தாய்மார்கள் கருவுற்ற காலத்தில் முதல் ஆறுமாதத்திற்கு வயிற்றுத் தசைகளையும் நரம்புகளையும் நல்லநிலையில் வைத்துக்கொள்ள உதவும்.


(தொடரும்)