ஞாயிறு, 22 டிசம்பர், 2013

யோக நலமே வாழ்வின் வளம். பகுதி ஒன்று: சங்கப்ரக்ஷாலனக் கிரியா.(தொடர்)

சங்கப்பிரக்ஷாலனக் கிரியை

வலைப்பூ அன்பர்களுக்கு வணக்கம்.

மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளினால் பாதிப்படைபவர்கள் அதில் இருந்து மீள பல விதமான மருத்துவ முறைகளைப் பின்பற்றுகிறார்கள். மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள், வாழ்க்கை முறையினாலும், உணவுகளாலும் ஏற்படும் தொந்தரவுகள் என வெளிவர முடியாத ஒரு மாயச் சுழலில் சிக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.

நமது பாரத பண்டைய மரபுகளை நாம் பின்பற்றாமல் போனதே இந்தத் தொடரும் துயரங்களுக்கு முக்கிய காரணம். பல்லாயிரம் ஆண்டுகாலமாக ஆயுர்வேதம், யோக முறைகள் மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகளை நாம் கிட்டத் தட்ட மறந்தே போய் விட்டோம். நவீன உலகின் துயரங்களுக்கு அவை தீர்வுகள் வைத்து உள்ளன. மேலை நாடுகளில் இந்திய பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதம், மற்றும் யோகா பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார்கள். தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நமது பாரம்பரிய முறைகளின் நம்பகத் தன்மையை அவர்களது ஆய்வு முடிவுகள் நிரூபித்து வருகின்றன.

உணவே மருந்து; மருந்தே உணவு என்கிற சிந்தாந்தத்தின் அடிப்படையில் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் பெரிதும் உதவிகரமானதாக உள்ளன. குடலைக் கழுவி உடலை வளர் என்கிற சித்தாந்தமே அடிப்படை ஆரோக்கிய தத்துவமாகும்.

வாரிசார் தவுத்தி எனப்படும் இது சங்கப்பிரக்ஷாலனக் கிரியை எனவும் அழைக்கப்படுகிறது. சங்க என்றால் சங்கு.. பிரக்ஷாலனா என்றால் சுத்திகரித்தல்சங்கின் உள்புற அமைப்பு சுழன்று சுழன்று அமைந்திருப்பதை போல நமது குடல் பகுதி சுழன்று சுழன்று அமைந்திருக்கிறது எனவே இந்த பெயரால் இந்தக் கிரியா அழைக்கப்படுகிறது. குடலின் தொடக்கப் பகுதியான தொண்டைக் குழியில் இருந்து ஆசன வாய் வரை உள்ள நீண்ட அலிமென்டரி கனால் (Alimentary canal) பகுதியை சுத்தப்படுத்தும் மிக சக்தி வாய்ந்தது இந்தக் கிரியா முறை. 

சரியாக சீரணிக்காத உணவுகள் மலக் குடலில் தேங்குவதன் மூலம் நச்சுத் தன்மை உண்டாகி அவை உடலின் பல பகுதிகளை பாதிக்கின்றன. டீ-டாக் ஸ்(De-tox) எனப்படும் நச்சகற்றும் முறையில் யோகாவின் ஒரு அங்கமான கிரியா பெரும் உதவி புரிகிறது.

சங்கப்  பிரச்சாலனாக் கிரியை எனப்படும் இந்த மலக் குடல் கழுவும் உத்தி அதிக செலவில்லாததும், பக்க விளைவுகளை ஏற்படுத்தாததுமான ஒரு எளிய முறையாக விளங்குகிறது. 

பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா(Bihar School of Yoga)வின் நிறுவனர் சுவாமி சத்தியானந்தா தனது உலகப் புகழ் வாய்ந்த ஆசனா, பிரணாயாம, முத்ரா, பந்தா, க்ரியா எனும் நூலில் மிக அற்புதமாக யோகா எவ்வாறு பல நோய்களைத் குணப்படுத்தி நீண்ட நாட்கள் நலமாய் வாழ்ந்திட நமக்கு உதவுகிறது என்று விளக்கி உள்ளார். இந்த நூலில் இருந்து சங்கப் பிரக்ஷாலனக் கிரியாவைப் பற்றி யோகா ஆசிரியரும், இயற்கை நலவாழ்வியல் நெறியாளருமான திரு.Er.ஆ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G.Dip(Yoga) அவர்கள் தொகுத்து தந்துள்ளார்கள்.
 

ஏற்கனவே யோகா பயிற்சி உள்ளவர்கள் இந்த முறையினை தாமே செய்து கொள்ளலாம். முதன் முறையாக செய்பவர்கள் தகுந்த யோகா ஆசிரியர் மேற்பார்வையில் செய்து கொள்ளுதல் நலம். அக்கம் பக்கத்தில் நடைபெறும் பயிற்சி முகாம்களிலும் இதற்கான பயிற்சிகளை பெறலாம். இம்மாத இறுதியில் திருப்பனந்தாளில் நடைபெற உள்ள இயற்கை நலவாழ்வியல் முகாமில் (முகாம் பற்றி அறிய இணைப்பை சொடுக்குக) சங்கப்  பிரச்சாலனாக் கிரியைக்கென பிரத்தியேகமான பயிற்சிகளை தர இருக்கிறார்கள். 

நமது உணவு மண்டலம் - ஒரு பார்வை.

நமது உணவுக் குடல் ஐந்து வால்வுகளால் ஆனது.

1.     தொண்டைப் பகுதி (oesophageal)
2.     உணவுப் பை (pyloric)
3.     பெருங்குடல் (ileocecal)
4.     சிறுகுடல் (colon); மற்றும்
5.     ஆசனவாய்(anus).

உணவுக் குழாயின் இந்த பகுதி மிகவும் நுணுக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது. தினசரி ஏற்படும் மன உளைச்சல்கள் காரணமாகவும், உணவு உட்கொள்ளுதலில் தவறான முறைகளை கடைப்பிடிப்பதன் காரணமாகவும் இந்த கேஸ்ட்ரோ இண்டஸ்டினல் ட்ராக்ட் எனப்படும் நீண்ட அமைப்பானது தனது செயல் திறனை இழக்க நேரிடுகிறது. அதனால் இந்த நீண்ட குழலில் இயக்கங்களில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. அதனால் உணவுப் பயணத்தில் குறைபாடுகளும், இயக்கத்தில் மந்த நிலையும் ஏற்படக் கூடும். குடலின் இயற்கை செயல் திறனில் ஏற்படும்  இந்தக் குறைபாடுகள் காரணமாக உணவின் செரித்தல் திறன் குறைகிறது. அதனால் உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படாமல் போகிறது. இயக்கங்கள் மாறுபாடான இந்த சூழலில் முழுமையாக சீரணிக்கப் பட வேண்டிய உணவு தேங்க ஆரம்பிக்கிறது. அதனால் ஏற்படும் நச்சுத் தன்மை மீண்டும் உடலுக்கு ஊறுகளை விளைவிக்கிறது. சீரணித்தல், வெளித்தள்ளுதல் போன்ற செயல்களில் ஏற்படும் குறைபாடுகள் ஐந்து வால்வுகளில் மாறுபாடான இயக்கத் தன்மைகளை ஏற்படுத்தி வயிறு உபாதைகளை விளைவிக்கிறது. 

சங்கப்ரக்ஷாலனாக் கிரியா செய்வதன் மூலம் உடலின் மிக நீளமான உறுப்பான உணவுக் குழல் பகுதியை மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்க இயலும். வயிறு, ஜீரண உபாதைகளுக்கான தொல்லைகளை நீக்க கேஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட்டுகளிடம் சென்று மருத்துவம் பார்ப்பதை விட இந்தக் கிரியா உங்கள் உணவுப் பாதையை இயற்கையான முறையில் மிகக் குறைந்த செலவில் செப்பனிட்டு தந்து விடும். குடல் கேன்சர், டயபடிஸ் போன்ற உபாதைகளில் இருந்து இயற்கையான முறையில், பக்க விளைவுகள் இன்றி குடல் ஆரோக்கியத்தை மீட்டுத் தந்திட இந்த கிரியா உதவுகிறது. 

இந்த பதிவில் தொடங்கி நான்கு பதிவாக வரவிருக்கும் இந்தப் பகுதியை படித்துப் பயன் பெற இயற்கை நல வாழ்வியல் ஆர்வலர்களை அழைக்கிறேன். 

வருகிற புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்றுச் சிறந்திட வாழ்த்துக்களுடன் பதிவினை துவங்குகிறேன். நன்றி. 

அஷ்வின்ஜி,
வாழி நலம் சூழ..
 

சங்கப்  பிரச்சாலனாக் கிரியை

இந்தக் கிரியை செய்வதற்கு முன்னதாக சில தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்:

முதல் நாளிரவு: சங்கப் பிரச்சாலனாக் கிரியை செய்வதற்கு முதல்நாள் இரவு குறைவான பாதித் திரவ உணவை  உண்பது நல்லது. 

பயிற்சி நாளின் போது: பயிற்சி துவங்குவதற்கு முன்னதாக கீழ்க்கண்டவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.

சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீரும் மேலும் கலப்பதற்குத் தேவையான சூடான தண்ணீரும் வேண்டும். அதில் ஒருலிட்டர் தண்ணீருக்கு இரண்டுதேக்கரண்டி வீதம் உப்புசேர்க்கவும். உப்பின் அளவு குறைவாக அதே நேரம் நீரின் சுவை உப்பு கரிக்கும் அளவிற்கு இருந்தால் போதும்..

பொங்கல் கிச்சடி தயாரிக்க ஏற்பாடு செய்யவேண்டும். இந்தக் கிரியை செய்யத்தொடங்குமுன் எந்த ஆசனமும் கடினமான வேலையும் செய்யவேண்டாம். மலம் கழிக்காதிருந்தாலும் உணவு மற்றும் மலக் குடலின் விரிந்து சுருங்க அசையச் செய்யும் (Peristolic movement of bowels அதாவது மண்புழு இயங்குவது போன்ற) குடல் அசைவுக்கு அதுஉதவும்.

முழுக்குடல் கழுவல்

இரண்டு குவளை வெதுவெதுப்பான உப்புநீரைக் கடகடவென்று குடிக்கவும். பின்னர் கீழ்க்கண்ட ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி எட்டுமுறை விரைவாகச் செய்க

1. தாடாசனம்
2. திரியக தாடாசனம்
3. கடி சக்கராசனம்
4. திரியக புஜங்காசனம்
5. உதர கர்ஷனாசனம்

மேற்கண்ட ஐந்து ஆசனங்கள் கொண்டது ஒரு சுற்று. எட்டுச் சுற்றுகள் செய்யவும்  சுற்றுக்கிடையில்ஓய்வு எடுக்க வேண்டாம்..

தாடாசனம் [பனைமர ஆசனம்]

பத்துச்சென்டிமீடடர் இடைவெளியில் கால்களை அகட்டிவைத்து நிற்கவும். கைகளைப் பக்கவாட்டில் தொங்கவிடவும். உடலின் எடை இருகால்களிலும் சமமாக இருக்கட்டும். .தலைக்கு மேல் கைகளை உயர்த்தவும். விரல்களைக் கோர்த்து உள்ளங்கைகளைப் புரட்டித் தலைக்ககுமேல் வானத்தைப் பார்த்தபடி வைக்கவும். எதிரில் உள்ள சுவரில் தலைக்குச் சற்றுமேலே பார்வையை வைக்கவும். கைகளையும் தோள்களையும் நெஞ்சையும் மூச்சை உள்ளே இழுத்தவாறே மேலே நீட்டவும். அதேசமயம் குதிகால்களை உயர்த்தவும். கால்விரல்களில் நிற்கவும். குதிகால்கள் சேர்ந்திருக்கட்டும்.

தாடாசனம்

அடிமுதல் தலைவரை முழு உடலையும் சமநிலை இழக்காமல் நீட்டவும். சிறிதுநேரம் மூச்சை உள்ளே வைத்து அந்த நிலையில் நிற்கவும். மூச்சை வெளிவிட்டவாறு கால்களை இறக்கவும். கைகளையும் தலைக்குமேல் இறக்கவும்.

மூச்சு: உடலை மேலே நீட்டும்போது மூச்சை உள்ளே இழுக்கவும். கீழே தாழ்த்தும் போது மூச்சை வெளியே விடுக.

நினைவு: மூச்சில் கவனத்தை வைக்கவும் மனதைத் தொடக்கத்தில் மூலாதாரச் சக்கரத்திலும் பிறகு ஆக்ஞை சக்கரத்திலும் வைக்கவும்.

நன்மை: உடலையும் மனதையும் சமநிலையில் வைக்க உதவும். முதுகந் தண்டை நீட்டவும் தளர்த்தவும் செய்வதால் அங்கிருந்து வெளிச்செல்லும் நரம்புகளில் சேர்ந்திருந்த தேவையற்ற நச்சுக்களை அகற்ற உதவும்.

தாடாசனம் சிறுகுடல் பெருங்குடல் மலக்குடல் தசைகளை நீட்டுகிறது. தாய்மார்கள் கருவுற்ற காலத்தில் முதல் ஆறுமாதத்திற்கு வயிற்றுத் தசைகளையும் நரம்புகளையும் நல்லநிலையில் வைத்துக்கொள்ள உதவும்.


(தொடரும்)

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Ashwin Ji சொன்னது…

தங்களது மேலான வருகைக்கு
நன்றி திரு தனபாலன்.
வலைச் சரம் செய்திக்கும் நன்றி.

கருத்துரையிடுக