ஆரோக்கிய நலவாழ்வு புத்தகம் அறிமுகம்..
பிரஷர் இருக்கிறவங்க
இதைப் படிக்காதீங்க..!
நல வாழ்வியல் ஆர்வலர்களே! வணக்கம்.
உணவே மருந்து-மருந்தே உணவு என்னும் இயற்கை நலவாழ்வியல் தத்துவத்தில் உப்பின் பயன்பாடுகள் குறித்து நிறையவே எதிர்மறைக் கருத்துக்கள் நிலவுகின்றன. உப்பு தப்பு என்கிற சித்தாந்தமும் சர்க்கரை (வெள்ளைச் சீனி), உப்பு, பால் மூன்றுமே வெள்ளை
நிறப் பாஷாணம் எனவும் ஆரோக்கியத்தை விரும்பும் ஆர்வலர்கள் மத்தியில் நலவாழ்வியல் அறிஞர்களால் நிறைய பேசப்படுகின்றன. அலோபதி மருத்துவத்திலும் சமையலில் சேர்க்கப்படும் உப்பு இரத்த அழுத்த வியாதியை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிபூர்வமாக கண்டறிந்திருக்கிறார்கள். நமது பாரதத்தின் பாரம்பரிய ஆயுர்வேத, சித்த மருத்துவ அறிஞர்கள் நமது தினசரி உணவில் உப்பினைத் தவிர்க்கவே சொல்கிறார்கள்.
இவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தும் நமது தினசரி வாழ்க்கை முறையில் உப்பின் பயன்பாடு சற்றும் குறைந்தபாடில்லை. மாறாக உப்பின் பயன்பாடு கூடிக் கொண்டே போகிறது. இதிலிருந்து கடல் உப்பின் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடையே இன்னமும் முழுமையாக சென்று சேரவில்லை என தெளிவாக தெரிகிறது. ஏனெனில் மருத்துவ உலகில் இரத்த அழுத்தம் விளைவான சவால்களை முன்
எப்போதும் விட அதிகமாக தோன்றி இதன் துன்ப விளைவுகளை மனித குலம் சந்தித்து வருகிறது.
உணவில் சேர்க்கப்படும்
உப்பு எந்தவிதத்திலும் மனித குலத்துக்கு பயனுள்ளதாக அமையவில்லை என்பதினைப் பற்றிய ஆதார பூர்வமான அறிவியல் செய்திகளையும், தீர்வுகளையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்புத் தான் 'பிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க...என்ற இந்த புத்தகம்.
ஆசிரியர் பிரம்மஸ்ரீ கொ.எத்திராஜ் அவர்கள் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு, எந்த அளவுக்கு மனித குலத்துக்கு கடல் உப்பு ஆபத்தானது என்பதை விளக்கி இருக்கிறார். சுருங்கச் சுவைபடச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவரான இவர், சிறிய நூலான இந்த நாற்பது பக்கங்களில் சொல்லி இருக்கும் செய்திகள் மிகவும்
பயனுள்ளவை.
ஏன் இந்த நூலை எழுத முன்வந்தார்
என்பதற்கான காரணத்தை அவரது முன்னுரையின் துவக்கமே மிக வலிமையாக கூறுகிறது. 'கிரேக்க
நாட்டில் கைதிகளை துன்பமின்றி கொல்வதற்கு திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. அதன் படி
நாள்தோறும் சிறைக் கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவுகளில் உப்பு அதிகமாக
சேர்க்கப்பட்டது. நாளடைவில் கைதிகளின் இரத்த அழுத்தம் உயர்ந்து, குறுகிய
காலத்தில், மாரடைப்பில் துன்பமின்றி இறந்து போயினர். இந்த அதிர்ச்சி தரும்
செய்திதான் இச்சிறு நூல் உருவாகக் காரணமாக அமைந்தது.”
புத்தகத்தின் முன்னுரையின் ஆரம்ப வரிகளைப்
படிக்கும் போது நாம் வெகுவாகவே அதிர்ந்து போகிறோம். மேலும் படிக்க ஆர்வத்தை
தூண்டிடும் ஆரம்பம் இது.
மேலும் சிந்தனையைத் தூண்டும் சில
செய்திகள் சுருக்கமாக இதோ:
- பூமியின் மூன்று பங்கு நீராலும், ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டிருப்பது இயற்கையின் நியதி. இயற்கையின் முயற்சியில் கடலில் மட்டுமே உப்பு இருந்தது! மனித முயற்சியால் உலகம் முழுவதும் ‘உப்பு’ தனது ஆக்கிரமிப்பை உறுதி செய்தது. ‘உப்பின்றி அமையாது உலகு என்ற நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டது. விளைவு.... ‘எங்கெங்கு பார்க்கினும் பிரஷரடா!’ என்ற சூழல் உருவானது. இந்தச் சூழல் மனித இனத்தின் வாழ்வாதாரத்தையும், வாழ்வையும், நாளும் சுருக்கிக் கொண்டே வருகிறது.
- உண்பது நாழிகை; உடுப்பது ஒரு முழம்! எண்பது கோடி எண்ணி எண்ணி மாய்கின்றாய் மனமே என்ற ஔவைப் பிராட்டியின் வாய்மொழிக்கு இணங்க கலியுக மனிதனும் எண்ணங்களால் சிந்தித்து சிந்தித்து மாய்கிறான்.
புத்தக முழுதும் விரவிக் கிடக்கும் செய்திகளில் இருந்து சிலவற்றை காணலாம்:
- மூளையில் படியும் நச்சே சிந்தனைகளை சீர்குலைக்கின்றது. கடல் உப்பு மனித மூலையில் நச்சுப் படிவத்தை உண்டாக்குகிறது.
- மனித சமுதாயத்தின் மங்கலகரமான பொருட்களில் கல் உப்பும் ஒன்றாக இருந்தாலும், அது மனிதனுக்கு தரும் கேடுகள் எண்ணிலடங்கா !.
- ஓடை நீர் ஆற்றில் சேரும்; ஆற்று நீர் நதியில் சேரும்; நதி நீர் இறுதியில் சமுத்திரத்தை சென்று சேரும். கடல் நீரில் பல்வேறு இரசாயனங்கள் கலந்து இருப்பினும், அளவிற்கு அதிகமாக சோடியம் க்ளோரைடு கலந்திருப்பதால் கடல் நீர் கன நீராக மாற்றி விடுகிறது.
- மனித உடலும் எண்பது சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுதான் இருக்கின்றது. இரத்தத்தில் கூட மூன்று பாகம் தண்ணீர்தான் இருக்கின்றது. தினசரி உணவில் உப்பினை சேர்த்து உண்டு வருவதால், மனித உடலில் ஜீரணிக்க முடியாத இந்த உப்புக் கழிவுகள் இறுதியாக இரத்தத்தில் சென்று சேருகின்றன.
- இவ்வாறு தினசரி இரத்தத்திலும், நீர்ச்சத்திலும் உப்புக் கழிவுகள் சேரச் சேர நாளடைவில் இரத்தம் கடினத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடுகிறது. கடல் நீர் எவ்வாறு மானிட பயன்பாட்டுக்கு உதவிகரமாக அமைவதில்லையோ, அதுபோலவே நாளடைவில் உப்புக் கழிவுகள் அதிகம் கொண்ட மனித இரத்தத்தினையும் ஒரு கால கட்டத்தில் மனித உடலால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகிறது.
- உப்பிருந்த மண்பாண்டம் அரித்துப் போகும்; உப்புக் காற்றுப்பட்டால் நாளடைவில் கல்லும், இரும்பும் கூட வலுவிழந்து இற்றுப் போகும். அதே போல உப்புக் கழிவுகள் கொண்ட இரத்தமானது நரம்பு மண்டலம், மூளை, எலும்புகள், இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புக்களுக்கு செல்லும் போது அப்பகுதிகளில் நாளடைவில் அரிமானம் ஏற்பட்டு உடல் நலம் குன்றுகிறது.
பத்து அத்தியாயங்களில் இது போன்ற அறிவியல்
பூர்வமான செய்திகளை தொகுத்திருக்கிறார் ஆசிரியர். உப்பைத் தவிர்த்த உணவுகள் தரும்
நன்மைகளை பட்டியலிடும் ஆசிரியர் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் முயன்றால் நாளடைவில் உப்புச்
சுவை அடிமைத்தனத்தில் முழுமையாக இருந்து விடுபடலாம் என்கிறார்.
சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் சுவைபட சொல்வதில்
வல்லவரான ஆசிரியர் ஒரு புத்தகத்தின் நிறைவுப் பகுதியில் ஒரு உரையாடலை உலவ விட்டிருக்கிறார். சிரிக்கவும், சிந்திக்கவும்
வைக்கும் அந்த உரையாடலில் வெள்ளை உப்பும், பாலும்,வெள்ளைச் சர்க்கரையும்
சமயலறையில் உரையாடுகின்றன.
உப்பு: ஏண்ணே! பால் அண்ணே! இந்த மனுஷப்
பயலுவ ரொம்ப காலமாகவே ரொம்ப ரொம்ப நல்லவங்களாகவே இருக்கிறதைப் பார்த்தா எனக்கு ஒரே
ஆச்சரியமாக இருக்கு.!
பால்: உப்பண்ணே! எதை வச்சு அப்படிச்
சொல்றீங்க?
உப்பு: நம்மளால முடிஞ்ச அளவுக்கு
இவங்களுக்கு கெடுதல் பண்ணுனாலும், இவனுக இன்னமும் நம்மள ‘ரொம்ப நல்லவங்கன்னு”
நம்புறாங்கள்ல! அதை வச்சுத்தான் சொல்றேன்.
சீனி (வெள்ளைச் சர்க்கரை): ரொம்பச் சரியா
சொன்னேங்க உப்பண்ணே! நம்ம இங்கே இருக்கிற வரைக்கும் வேறு யாரையும் கெடுதல் பண்ண
விட்டுடுவோமா? என்று வெள்ளைச் சீனியும் ஆமோதித்து குரல் கொடுக்கும் நேரத்தில்
சமையலறைக்குள் யாரோ வரும் சப்தம் கேட்டு உரையாடல் முடிவுக்கு வருகிறது.
சிந்தையைத் தூதும் உரையாடல் இது. நிறைவாக ஆசிரியர் சொல்கிறார்: “உடலுக்கும்
மனதுக்கும் ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி அறிவானது உணர்த்தினாலும், மனமானது பல
கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று விடுகிறது. இதனைத்தான் சமூகத்தில் பல
பெரிய மனிதர்கள் “அறிவுக்குத் தெரியுது சார்! மனசுக்கு தெரிய மாட்டேங்குது சார்!”
என்று கௌரவமாக சொல்லி விடுகிறார்கள். இது மனித குலத்தின் நலவாழ்வின் மீது ஆசிரியர் கொண்டுள்ள ஆதங்கத்தையும், அக்கறையையும் காட்டுகிறது.
பொறியியல் பட்டதாரியான ஆசிரியர் வடகரை சிவானந்தரின் சித்த வித்தையை முறையாகப் பயின்றவர். ஒரு துறவியை போல இளம் வயதிலேயே பணியில் இருந்து வெளியேறி தவமையம் அமைத்து ஆன்மீக, சமூக வளர்ச்சிக்காக தமது வாழ்நாளை செலவிட்டு வருகிறார். எனவே தகுதி உடைய இவர் சொல்லும் கருத்துக்களுக்கு வலு இருக்கிறது என்பதை புத்தகத்தினைப் படித்து முடித்ததும் நம்மால் உணர முடிகிறது..
உங்கள் நலவாழ்வில் அக்கறை காட்டும்,
உங்கள் வாழ்வில் ஒரு ஆரோக்கிய விடியல் பிறக்க வழிகளை சொல்லும் இந்தப் புத்தகம்
எல்லோரும் படித்துப் பின்பற்றிப் பயனடைய வேண்டிய ஒன்று. உங்கள் நலவிரும்பிகளுக்கு
பரிசாகவும் தரலாம்.
புத்தகத்துக்கு நீங்கள் விலையாகத் தரும் பணம் ஆசிரியரின் பல்வேறு ஆன்மீகப் பணிகளுக்கும், தவமைய வளர்ச்சிக்கும் பயன்படுவதினால் புத்தகத்தினை வாங்கிய உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கியமும்,
ஆத்ம திருப்தியும் பலமடங்காக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இயற்கை நல வாழ்வியலை பின்பற்ற விரும்பும்
அன்பர்களுக்கு தேவையான பல செய்திகளை உள்ளடக்கிய அருமையான தொகுப்பு.
இந்த நூல், மூர்த்தி சிறிதாகினும், கீர்த்தி பெரிது என்பார்கள் பெரியோர். அது இந்தப் புத்தகத்தை
முழுமையாக படித்து முடிக்கும் போது உணரலாம்.
புத்தகம் பற்றிய விவரங்கள்.
புத்தகத்தின்
தலைப்பு: பிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க..!
ஆசிரியர்:
பிரம்மஸ்ரீ கொ.எத்திராஜ்
நூல் வெளியிடுவோர்:
பிரம்ம
வித்தை தவ மையம்,
சித்த வித்தியார்த்தி
பவுண்டேஷன்,
சித்தர் வழிச்
சாலை, சிவானந்தகிரி,
மல்லையாபுரம்-624707
ஆத்தூர் வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம்.
நாற்பது பக்கங்கள்
கொண்ட இந்த நூலின் விலை ரூ.40
மட்டுமே (இந்த பணம் தவமைய வளர்ச்சிக்கு பயன்படுத்தவே)
ஒரு வேண்டுகோள்: புத்தகம் தேவைப்படுவோர் ஆசிரியரின்
முகவரிக்கு எழுதி பெற்றுக் கொள்ளலாம். பத்து பேர் சேர்ந்து ஒரே வி.பி.பி. ஆர்டரில்
புத்தகத்தை வரவழைத்து உங்களுக்குத் தேவையான எண்ணிக்கையை பெற்றுக் கொள்வதே சிறந்த வழி.
வாழி நலம் சூழ...
4 கருத்துகள்:
நல்லதொரு விமர்சனம்... முகவரிக்கு நன்றி...
வணக்கம் தனபாலன் சார். நூலாசிரியர் உங்கள் ஊர்க்காரர் தான். நான் அவரை சந்தித்ததில்லை. நூல்களை படித்த பின் ஒருமுறை அவருடன் பேசியிருக்கிறேன். மிகவும் அற்புதமான மனிதர் என்பது அவரது புத்தகங்கள், மற்றும் பேச்சில் இருந்து தெரிகிறது.
வரவுக்கு நன்றி.
வாழி நலம் சூழ...
நல்ல நூல் விமர்சனம் .
நன்றி.
நன்றி கோமதி அரசு அவர்களே
வருகைக்கும், வாழ்த்துக்கும்.
கருத்துரையிடுக