ஞாயிறு, 10 மே, 2015

புற்றுநோய் எனும் சேர்ந்தாரைக் கொல்லி - கேன்சர் நோய் - சிக்கல்கள், தீர்வுகள்.

வலைப்பூ அன்பர்களுக்கு என் வணக்கம்..

நலவாழ்வியல் தொடர்பான செய்தித் தொகுப்புக்களை சேவை எண்ணங்களுடன் நாம் ‘வாழி நலம் சூழ..’ வலைப்பூவில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அந்த வரிசையில் புற்று நோய் தொடர்பாக நான் படித்த பல செய்திகளை வலைத்தளங்களில் இருந்து தொகுத்து ஒரு தொடராக வெளியிட இருக்கிறேன். இந்தத் தொடரில் வழங்கப்படும் செய்திகள் தி இந்து தமிழ்ப் பத்திரிக்கை, பி.பி.சியின் இணைய தளம்., தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நலவாழ்வியல்  தொடர்பான பலவேறு  வலைத்தளங்களில் இருந்து தொகுக்கப்பட்டவை.

புற்று நோயில் இருந்து நிவாரணம் பெற்று மீளக் கூடிய இயற்கை நலவாழ்வியல் தொடர்பான செய்திகளையும், நமது அன்றாட வாழ்க்கை முறையில் செய்யக் கூடிய ஒரு சில மாறுதல்கள் மூலம் எவ்வாறு நாம் புற்று நோயின் தாக்கத்தில் இருந்தும், புற்று நோயின் பிடியில் உள்ளோர் அந்நோயின் தீவிரத்தில் இருந்தும் விடுபடலாம் என ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்..

நலவாழ்வியல் அறிஞர்களில் ஒருவரும், என் நலவாழ்வில் அக்கறை கொண்டவருமான பொறியாளர்.திரு.அ.மெய்யப்பன், B.E., MBA, PG Dip. (Yoga), (யோகா ஆசிரியர் மற்றும் இயற்கை நெறியாளர்) அவர்கள் கான்சர் பற்றி ஒரு தொடரை இந்த வலைப்பூவில் நான் வெளியிட வேண்டும் என்று ஆவல் தெரிவித்தார். அதற்கான பல இணையதள முகவரிகளை அடிக்கடி என்னிடம் தெரிவித்தும், ஒரு தொடரினை எழுதிட தொடர்ந்து ஆதரவினை தெரிவித்து வருகிறார். அவரது ஊக்கம் இல்லையெனில் இந்தத் தொடர் இங்கே வெளியாக வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு நல்அன்பும், பேராதரவும் தெரிவித்து வரும் அவருக்கு எனது நன்றிகளை இங்கே தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

தொடரை தொடர்ந்து படித்து தங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் படி வேண்டுகிறோம்.

புற்று நோய் (கேன்சர்) என்னும் சேர்ந்தாரைக் கொல்லி..
சிக்கலும், காரணங்களும், அதற்கான தீர்வுகளும்.

கான்சர் என்ற கொடிய நோயின் கோரப் பிடியில் சிக்கி மனித குலம் இன்று தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. புற்று நோய் என நமது பண்டைய ஆயுர்வேத, சித்த வைத்தியக் குறிப்புக்களில் இந்த நோய் அறியப்படுகிறது.  பண்டைய காலங்களில் இருந்தே உலகெங்கணும் மிக அரிதாக மனிதனைப் பாதித்துக் கொண்டிருந்த இந்த புற்று நோய் (கேன்சர்) தற்போது வெகு அதிகமாக பரவும் உயிர்க்கொல்லி நோயாக உலகெங்கணும்.அறியப்படுகிறது.

உயிரணுவின் அபரிமிதமான வளர்ச்சியும் அவை கட்டுப்பாடற்ற நிலையை அடைவதும் புற்று நோயின் அறிகுறியாகும். உடலின் பல பகுதிகளில் ஏற்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிப்புக்களை பொதுவான பேரான புற்று நோய் அல்லது கேன்சர் என்று அழைக்கிறார்கள். புற்று நோய் தீவிரமான நோயாக மாறி இறுதியில் உயிரை குடித்துவிடும் அபாயம் கொண்டது.

சாதாரணமாக மனித உடலில் பல லட்சக்கணக்கான செல்கள் இயங்குகின்றன. மனித உடலில் உற்பத்தியாகும் செல்கள் தோன்றி வளரும்.. பின்னர் பலவாக பிரிந்து புதிய செல்கள் உருவாகும், தமக்குரிய பணிகளை செய்துவிட்டு வயதானதின் காரணமாக பின்னர் அவை மடிந்து போகும். இளமைக்காலத்தில் அவற்றின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இதன் காரணமாகவே உடல் வளர்ச்சி ஏற்படுகிறது. மனிதன் வயதுக்கு வந்த பின்னர் இந்த வளர்ச்சி ஒரு உறுப்பின் வளர்ச்சி அல்லது சேதங்களை சரிப்படுத்தல் என அதனதன் தேவைக்கேற்றபடி நடைபெறும்.

உயிரிகளை ஓரணு உயிரி எனவும் பல்லணு உயிரி எனவும் இரு வகைப் படுத்தலாம். பாக்டீரியா போன்றவை ஓரணு கொண்டதாகவும் இருக்கலாம். தாவரங்கள்விலங்குகள், மனித இனம் போன்ற உயிரினங்கள் பல்அணுத் தொகுப்புக்களான உயிரினங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு உயிரினந்த்தின் வகைக்கேற்ப அணுக்களின் எண்ணிக்கை அமையும். மனித உடலில் 100 (1014) ட்ரில்லியன் செல்கள் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது.

உடலில் உள்ள உயிரணுக்கள் உயிர்ச் சக்தியால் இயங்க வல்லவை. அணுக்கள் வளரும் தன்மையும், பிரிந்து பிரிந்து புதிய அணுக்களை உருவாக்கும் தன்மையும், பின்னர் இறந்து போகும் தன்மையும் கொண்டவை.

கேன்சர் எப்படி உருவாகிறது?
உடலின் ஒரு பகுதியில் உள்ள அணுக்கள் உடலின் கட்டுப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டு தன்னிச்சையாக இயங்கத் தொடங்குவதை நாம் புற்று நோய் என்கிறோம். இந்த அணுக்கள் அழிந்துபோவதற்கு மாறாக வளரத் தொடங்கி, புதிய அணுக்களை உருவாக்கி ஒரு தொகுதியாக செயல்படத் தொடங்குகின்றன. அவை உடலின் பாகங்களுக்கு ஊறு விளைவிப்பதாக அமையும் போது அது நோய் விளைவிக்கும் புற்று நோய்க் கட்டிகளாக மாறுகின்றன. 

Cancerous Cell

அவை மற்ற திசுக்களை ஊடுருவி புதிய செயல்பாடுகளை விளைவிக்கத் துவங்குவதையே நாம் புற்று நோய் என்கிறோம். தன்னிச்சையாக இயங்குவதும், கட்டுப்பாடுகளை ஏற்க மறுப்பதும் ஒரு உயிரணுவை கேன்சர் செல் என அடையாளம் காட்டுகிறது. 

கார்சினோமா புற்றுநோய் என்று வழங்கும் மருத்துவச் சொல், எபிதேலியல்தோல் மேல் புறத்து உயிரணுக்களில் தோன்றும் புற்றுப் பண்பு கொண்ட கட்டியை குறிக்கும்.

கார்சினோமா என்ற இந்தப் பெயர் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றதாகும். செல்சஸ் என்பவர் கார்சிநோஸ் என்ற சொல்லை லத்தீன் மொழியில் கான்செர் என்று மொழி பெயர்த்தார், 

லத்தீன் மொழியில் கான்சர் என்ற சொல் நண்டு என்ற உயிரினத்தை குறிப்பிடும் சொல்லாகும். காலேன் என்பவர் "ஆன்கோஸ் " என்ற சொல்லை,அனைத்து வகையான கட்டிகளையும் விளக்க பயன்படுத்தினார்,

புற்றுநோயின் பொதுவான நவீனச் சொல்லான ஆன்கோலோஜியின் மூலம் இதுதான்.. நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போக்ரேடஸ் பலவகையான புற்றுநோய்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.

அவர் தீங்கற்ற கட்டிகளை ஆன்கோஸ் என்று அழைத்தார், கிரேக்க மொழியில் வீக்கம், மற்றும் மாலிக்னன்ட் ட்யுமர்களை (புற்றுப்பண்பு கொண்ட கட்டி கார்சிநோஸ். இது கிரேக்க மொழியில் நண்டு அல்லது க்ரேபிஷ் என்று பொருள்படும்.

ஒரு திடமான புற்றுப்பண்பு கொண்ட கட்டியை வெட்டியெடுத்து அதன் மேல்புறம் பார்க்கையில் கிடைக்கும் தோற்றத்தின் அடிப்படையில், "நண்டு என்ற விலங்கின் கால்களைப்போல அதன் நரம்புகள் எல்லா பக்கங்களிலும் நீட்டி இருந்ததால், அதிலிருந்து இந்தப்பெயர் நிலைத்தது."

(தொடரும்)