இயற்கை மருத்துவம்
(தத்துவங்களும் செய்முறைகளும்)
- மகரிஷி க. அருணாசலம்
பகுதி-4
நலவாழ்வைப் பாதிப்பவைகளை 1. பரம்பரை, 2. சூழ்நிலை, 3. தனியாள் என்று மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
பரம்பரையிலிருந்து பெறுகிற நோய்நொடிகள், எண்ணப் போக்குகள் முதலியன உடலைப் பாதிக்கும் சூழ்நிலையும் மனித வாழ்வைப் பாதிக்கிறது. கெட்ட காற்று, கெட்ட தண்ணீர் போன்றவை இன்றைய நிலையில் மனிதனுடைய ஆரோக்கியத்தைப் பாதிப்பதில் முக்கிய இடம் பெறுகின்றன.
தனிப்பட்டவர்களும், தங்களுடைய வேண்டாத பழக்க வழக்கங்களால் தமக்கும் சமூகத்திலுள்ள மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பவர்களாக மாறுகின்றனர்.
இதைப்போலவே நலவாழ்வை நிர்ணயிப்பவைகளையும் மனநிலை, ஆன்மநிலை, உடல்நிலை என்று முக்கூறாகப் பிரிக்கலாம்.
இம்மூன்று நிலைகளையும் செம்மைப்படுத்துவது கல்வி, கேள்விகளேயாகும்.
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
"அஞ்சி அஞ்சித் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே"
என்று அவர் காலத்தில் இந்திய மக்களின் நிலைமையை நினைத்து வருந்திப் பாடியுள்ளார் மகாகவி பாரதியார். இந்தியா சுதந்திரம் பெற்று நாற்பது ஆண்டுகளாகியும் இன்னும் பெரும்பாலும் இதே நிலைமை தான். "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" உண்மைதான். எனினும் நோய்நொடிகளைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? "எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார். கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்." ஆரோக்கிய வாழ்வைப் பொறுத்த வரை, படித்துப் பட்டம் பெற்றவர் கூட இன்னும் கண்ணிலாக் குழந்தைகள் போலத்தான் நடந்து கொள்கின்றனர். பயத்தால், கண்டதையெல்லாம் செய்து மேலும் மேலும் துன்பத்தை விலைக்கு வாங்குகின்றனர். பெரும்பாலும் பயம் தான் காரணம்.
நோயைப் பெரும் பகைவனாகக் கருதி அஞ்சுதல் பேதமையிலும் பேதமை. நோய், கிருமிகளால் வருகின்றது என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்தக் கிருமிகளைக் பெரும் பகைவர்களெனக் கருதி அவைகளைக் கொல்வதற்காக நச்சுப் பொருட்களை உண்டு மேலும் சிக்கலாக்குகின்றனர். கிருமிகள் சாகலாம்; சாகின்றன. ஆனால் நச்சு மருந்துகள் உடலில் தங்கி வேறு பலவிதப் பயங்கர வியாதிகளை உண்டு பண்ணுவது இவர்களுக்கு விளங்குவதில்லை. கிருமிகள் நோயால் வளருகின்றன. இந்த உண்மை அறிவு வந்தால் இவர்கள் நோயின் மூலகாரணத்தைக் கண்டு அதனை நீக்குவர். அப்போது நோயும் போகும். கிருமிகளும் குறையும்.
பொருந்தா உணவு, அமித(தேவைக்கதிகமான) உணவு, தவறான பழக்க வழக்கங்கள், விபரீதமான எண்ணங்கள் முதலியவற்றால் உடலில் நச்சுப் பொருள் உண்டாகிறது. அவ்வப்போது மலநீக்கம் சரியாக நடந்தால் துன்பமில்லை ஏதாவது காரணத்தால் இதில் தயக்கம் ஏற்பட்டுக் காலந் தாழ்ந்தால் உடம்பில் கிருமிகள் பல்கி உஷ்ணமோ, வலியோ வீக்கமோ ஏற்படுகின்றது. இது உடம்பினுள் உறையும் பிராணசக்தியின் காலந்தாழ்த்திய முயற்சி. அதற்கு உதவியாகச் சூரியக்குளியல், தொட்டிக் குளியல், எனிமா முதலியன மூலம் மலத்தை வெளியேற்றினால் நோய் தணியும். அதற்கு மாறாக மருந்துகளை உட்கொள்ளுவதால் நோய் உருமாறுகின்றதே ஒழிய ஆரோக்கிய நிலை திரும்புவதில்லை. இதனாலேயே தான் இயற்கை மருத்துவர்கள் நோயினை நண்பனாகக் கருத வேண்டும் என்கின்றனர்.
(இயற்கை இன்னும் வளரும்..)