1
. கனியிருப்ப...
உலகெங்கும் உள்ள வலைப்பதிவர்களுக்கும், வலைப்பதிவு வாசகர்களுக்கும் என் இனிய வணக்கங்கள்.
வலைப் பதிவுக்கு முற்றிலும் புதிதானவனான இந்த எளியவன் அண்மையில் துவங்கிய வாழி நலம் சூழ.. என்ற இந்த வலைப்பூவினை இந்த பதிவினை எழுதும் இன்று வரை சுமார் ஆறாயிரத்து நானூறு பேர்களுக்கு மேல் படித்திருக்கிறார்கள் என்பது உவகை தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.
நம் தாய்த்தமிழரில் பலர் இயற்கை நலவாழ்வியல் குறித்த ஆர்வம், ஈடுபாடு கொண்டோர் உலகெங்கிலும் பரவிக் கிடக்கிறார்கள், என்பதையே இது காட்டுகிறது. நீங்கள் காட்டி வரும் ஆர்வத்துக்கு முதற் கண் என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டைய ரிஷிகள் தொடங்கி கடந்த சில நூறு ஆண்டுகளுக்கு மேலாக நம் நாட்டில் தோன்றிய பல இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டிகள் வரை நம்மிடையே அற்புதமான இயற்கை நலவாழ்வியல் சிந்தனைகளை விதைத்து விட்டுச் சென்று இருக்கிறார்கள்.
வாழ்ந்து காட்டி வழிகாட்டிய அவர்களை அடியொற்றி இன்றளவிலும் பலர் வாழ்ந்து காட்டி நம்மிடையே நலவாழ்க்கை வாழ வழி காட்டி வருபவர்கள் இருக்கிறார்கள்.
அந்த அறிஞர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும், இயற்கை நலவாழ்வியல் துறை வல்லுனர்களின் செயல்பாடுகள் பற்றியும் இந்த வலைப்பூவில் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.
மனிதன் ஒருவன்தான் இப்பூவுலகிற்கு மிகப் பெரிய கேடுகளை விளைவித்து வருகிறான். இயற்கையின் வேறு எந்த படைப்பும் இந்தக் கொடிய காரியத்தை செய்யத் துணியவில்லை.
தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதாக எண்ணி செயல்பட்டு வரும் ஆறறிவு படைத்த மனித இனத்தின் இந்த தவறான செயல்பாடுகள் காரணமாக உலகின் அழிவு விரைவாக்கப் படுகிறதோ என்ற ஒரு அச்சம் தோன்றி உள்ளது.
சுற்றுப் புற சூழ்நிலைகளை மாசுபடுத்துதல், இயற்கை படைத்த தாவரங்களை நச்சு மயமாக்குதல், போன்ற பல பேரழிவுச் செயல்பாடுகளில் தொடர்ந்து அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் மனித குலம் ஈடுபட்டு வருகிறது.
ஓரிரு நற்செயல்களைத் தவிர அறிவியல் வளர்ச்சி பெரிய முன்னேற்றத்தை தந்து விடவில்லை என்பதை விஷயம் அறிந்தோர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.
வாழ்வியல் தத்துவங்களில் செயற்கைத் தன்மைகளை புகுத்தி வரும் நாம் கனி இருப்பக் காய் கவரும் மனப்பான்மையில் இருக்கிறோம்.
அணுசக்தியைக் கண்டுபிடித்ததால் ஜப்பானில் உலக போரின் போது ஏற்பட்ட நாசத்தையும், இப்போது ஆழிப் பேரலை காரணமாக ஜப்பானில் நிகழ்ந்து வரும் அணு உலைகளுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து போன்ற பின் விளைவுகளும் மனித குலத்திற்கு பெருமை தேடித் தருவனவாக இல்லை.
மனித இனம் முன்பொரு முறையும் இதே தவறைச் செய்திருக்கிறது. பேரழிவைச் சந்தித்திருக்கிறது என்பதை நமது வேதங்களும், விவிலியத்தின் பழைய ஏற்பாடும், சிலப்பதிகாரம் போன்ற பழம் பெரும் இலக்கியங்கள் உலகெங்கணும் பறை சாற்றி வருகின்றன.
நல்ல திசையில் செல்லாமல் இப்போது நாம் செய்து கொண்டிருப்பவை என்ன?
இனி எந்த ஒரு பேரழிவும் நேராமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை உணராமல் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால், நமது சந்ததியின் தொடர் வாழ்க்கைக்கு குழி பறிக்கிறோம் என்றுதான் பொருள்.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனித ஆரோக்கியம் மேம்பட்டதா ? என்றால் இல்லை என்று தான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது.
ஆரோக்கியம் மேம்பட்டிருந்தால் தினம் தினம் ஏன் இத்தனை புதிய நோய்கள்?
தினம் தினம் ஏன் இத்தனை புதிய மருந்துகள்?
தினம் தினம் ஏன் இத்தனை புதிய மருத்துவ மனைகள்?
விளக்கினில் வீழும் விட்டில் பூச்சிகள் போல, பேரழிவினை நோக்கி இட்டுச் செல்லும் செயற்கை வாழ்வினை நாடி, இயற்கை நலவாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் நாம்.
செய்ய வேண்டுவன என்ன என்பதை அறிவதை விட இனி நாம் செய்யக் கூடாதது என்ன என்பதை நாம் முதலில் அறிந்து கொண்டாக வேண்டும். செய்யக் கூடாததை முதலில் கண்டறிந்து, அதன் பின்னர் அவற்றினை செய்வதை நிறுத்திய பிறகே செய்யத் தக்கனவற்றை நாம் செய்ய இயலும்.
இயற்கை நலவாழ்வியல் பற்றிய உலகின் பல அறிஞர்களின் சிந்தனைகளை "கனி இருப்ப" என்னும் இந்தத் தொடர் மூலம் நாம் அறியலாம்.
அடுத்து வரும் தொடர்களை தவறாமல் வாசியுங்கள். உங்கள் நலவாழ்க்கைக்கு தேவையான அரும் பெரும் நலவாழ்வியல் தத்துவங்களை இவை உங்களுக்கு தெரிவிக்கப் போகின்றன.
ஏற்கனவே பெரியோர் பலர் தந்த தத்துவங்களை இங்கே தொகுத்தளிக்கும் ஒரு சிறிய செயலைத் தான் நான் செய்யப் போகிறேன்.
இங்கே எனது பங்களிப்பு ஒரு தொகுப்பாளன் என்ற வகையில் தான் இருக்கும். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற அளவில் ஒரு அணிலின் பங்கேடுப்பாக என் பணி இருக்கும்.
உங்கள் அனைவரின் ஆர்வம் மட்டுமே நான் வேண்டும் ஆதரவு.
வருகிற தமிழ்ப் புத்தாண்டு நந்நாளில் (கர ஆண்டு:2011) இருந்து இந்தத் தொடர் துவங்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகோரின் நல வாழ்வில் அக்கறை கொண்ட மேலோர் பலரது தத்துவங்களை இங்கே வெளியிட அவர்களது ஆசிகள் எனக்கு தொடர்ந்து கிடைக்க இறைவனை பணிந்து வணங்கி வேண்டுகிறேன்.
இந்தத் துறையில் ஈடுபடக் காரணமாக இருந்து வரும் திருவாளர்கள் ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்க செயலாளர் திரு.இராமலிங்கம் ஐயா, எனது யோகா ஆசான் திருமூலர் யோகா மற்றும் இயற்கை உணவு ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர், யோகி டாக்டர் திரு. தி.ஆ.கிருஷ்ணன் ஐயா, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் குலசேகரன் பட்டினம் (திருச்செந்தூர்)திரு.மூ.ஆனையப்பன் ஐயா, மற்றும் யோகா ஆசிரியரும், இயற்கை உணவாளர், நெறியாளர், என்னை தினமும் ஊக்கப் படுத்தி வரும் இயற்கை நலவாழ்வியல் புரவலர் திரு.மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும், நல்ல நூல்கள் மூலமாக என்னை வழிப்படுத்திவரும் மறைந்த பல பேரறிஞர் பலருக்கு இந்த தொடரை நன்றி பாராட்டி சமர்ப்பிக்கிறேன்.
விரைவில் சந்திப்போம்.
வாழி நலம் சூழ..