ஞாயிறு, 3 மே, 2015

வாழி நலம் சூழ.... சிறு/குறு தானியங்கள்.

நலமுடன் வாழ - குறு/சிறு தானியங்களை நம் அன்றாட உணவில் சேர்ப்போம். 
வரகு, திணை, சோளம், கம்பு, ராகி, குதிரைவாலி இந்தப் பெயர் கொண்ட தானியங்களெல்லாம் ஏழை மக்களின் உணவு தானியங்களாக நகரவாழ் மக்களால் உதாசீனம் செய்யப்பட்டவை.
மேய்ந்த மாட்டை நக்கிய மாடு கெடுத்த கதையாக நாளடைவில் கிராம மக்களும், நகர மக்களது வாழ்க்கை முறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி, சிறு/குறு வகைத் தானியங்களுக்குப் பதிலாக அரிசி, மைதா, சர்க்கரை மற்றும் பலமுறை பதப்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணை/தானியங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள் தாம் இரத்த சர்க்கரை, இரத்தக் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) மற்றும் அதன் பக்க விளைவுகளான இதய நோய்கள், உடற் பருமன், இரத்த அழுத்தம், பக்க வாதம், மூளை அடைப்பு பாதிப்பு நோய்கள், புற்று நோய் என பல வியாதிகள்... 

இவ்வியாதிகளின் பாதிப்பில் இருந்து வெளிவரத் தெரியாமல் மெல்லக் கொல்லும் நஞ்சாகிப் போன இவைகளின்  பிடிகளில் சிக்கிக் கொண்டு மனிதகுலமே தவித்து வருகிறது. 

இந்தச் சிக்கலில் இருந்து விடுதலை பெற என்ன தீர்வு?
சாவி இல்லாத பூட்டுக்களை எப்போதுமே தயாரிப்பதில்லை. சாவியைத் தொலைத்துவிடுவதினால் வரும் கேடுகளே இவை. மீண்டு வர சிறு/குறு தானியங்களை உணவில் சேர்ப்பதே சிறந்த வழி என ஊட்டச் சத்து உணவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். மருத்துவ ரீதியாகவும் இந்த சிறு/குறு தானியங்களை உணவில் சேர்ப்பதன் மூலமாக அரிசி, மைதா, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், எண்ணெய் வகைகளையும் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டே வரவேண்டும். இது ஒன்றே தான் தீர்வு.

அரிசி கொண்டு தயாரிக்கப்படும் அடை, தோசைகளை விட திணை (Foxtail Millet) கம்பு (Pearl Millet) போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் திணை அடை, கம்பு/ராகி தோசை போன்றவை சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் உள்ளன. சென்னை நகரின் பெருவாரியான ஆர்கானிக் (இயற்கை பொருட்கள் அங்காடி)கடைகளில் இப்போது இந்த சிறு/குறு தானிய வகைகள் தாராளமாகக் கிடைக்கின்றன.

வரகு (Kodo Millet), சாமை (little millet), திணை (foxtail millet) மற்றும் குதிரை வாலி (barnyard millet) போன்றவற்றை பயன்படுத்தி பிரபல உணவுவிடுதிகள் உணவுவகைகளை மீண்டும் அறிமுகப்படுத்தி வருவதை காணும் போது இவ்வகை உணவுகளின் தேவையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிகிறது.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் இந்த தானிய வகைகள் தாம் நாற்பது சதவீதம் வரை நமது உணவுகளை ஆக்கிரமித்து இருந்தன. 1960களின் உணவுப் புரட்சி (Green Revolution) காரணமாக நெல் மற்றும் கோதுமை விளைச்சலை அரசு ஊக்குவித்ததின் பயனாக விவசாயிகள் சிறு/குறு தானியங்கள் பயிரிடுதலை குறைத்துவிட நேர்ந்தது.

அரிசி கோதுமை பயிரிட நிறையத் தண்ணீர் மற்றும் இரசாயன உரங்கள் தேவை. சிறு/குறு தானியங்களை பயிரிட மிகக் குறைந்த தண்ணீரே போதுமானது. இவ்வகைத் தானியங்களுக்கு இரசாயன உரமும் தேவையில்லை. இயற்கை உரங்களே போதுமானது. இப்போதைய தண்ணீர் பற்றாக்குறை அரிசி, கோதுமை விளைச்சலை பாதிப்பதுமட்டுமின்றி உரங்களின் தேவைகளும் அதிகமாகிக் கொண்டே போவதினால் உற்பத்திச் செலவும் கூடிக் கொண்டே போகிறது.

அரிசி, கோதுமையினால் செய்யப்படும் பலவித உணவுப் பண்டங்களினால் ஸ்டார்ச் அதிகமாகி இரத்தச் சர்க்கரை நோய் அதிகமாகிறது. பலகாரங்கள் பல எனினும் பயன் படுத்தும் தானியம் ஒன்றேதான். Glycemic Index மிகவும் அதிகம் கொண்டவை அரிசி, மைதா, கோதுமை போன்றவை. அரிசியில் நார்ச்சத்து இல்லை. மாவுச் சத்தே அதிகம் உள்ளது. கோதுமையில் நார்ச்சத்து இருந்தாலும், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் கோதுமை மாவுகள் பலமுறை பதப்படுத்தபட்டு அவற்றில் உள்ள நார்ச்சத்து நீக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

மக்களுக்கும், கோதுமையை வாங்கி அரைத்து பயன்படுத்த நேரமோ, ஆர்வமோ இன்றி பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கோதுமை மாவுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் விளையும் தீமைகளே சர்க்கரை நோய் எனும் கொடிய அறிகுறியாகும். கோதுமையின் நார்ச்சத்து முழுவதுமாக நீக்கப்பட்டு உள்பாகத்தின் மென்மையான மாவுப்பகுதியே மைதாவாக வருகிறது. தற்போதைய உணவுகளில் மைதாவின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. அதுவுமின்றி, பேக்கரியில் கிடைக்கும் அனைத்து உணவுப் பண்டங்களிலும், பரோட்டா போன்ற தின்பண்டங்களிலும் மைதாவின் பயன்பாடே அதிகம். குழந்தைகள் அதிகமாக விரும்பி இவைகளை உண்ணுவதால் அவை அவர்களுக்கு அதிக ஊறு விளைவிப்பனவாக அமைகின்றன.

பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் உண்டாகும் இத்தனை சிக்கல்களுக்கும் தீர்வினை அளிக்கவல்ல விஷயம் இப்போது உங்களுக்கு வந்து விட்டது.

பிரச்சினைகளுக்கு நல்லதொரு மாற்றாக இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடப்படும் சிறு/குறு தானியங்கள் நார்ச்சத்து கொண்டவையாகவும், அதிக ப்ரோட்டீன் சத்து கொண்டவையாகவும் விளங்குகின்றன என்பதுதான் ஆறுதல் அளிக்கும் செய்தி. அரிசி மற்றும் கோதுமை ரவை சார்ந்த உணவு வகைகளான உப்புமா, கேசரி, பொங்கல், தோசை, புலாவ் போன்றவற்றை சிறு/குறு தானியங்களை கொண்டே செய்துவிடலாம்.

சிறு/குறு தானியங்களின் பயன்கள்.
  • சைவ உணவு உண்பவர்களுக்கு தேவையான ப்ரோடீன் சத்துக்கள் இவற்றில் மிகுதியாக கிடைக்கின்றன.
  • இவற்றில் பி விட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், காப்பர் மற்றும் மங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் நிறைய உள்ளன.
  • நோய் எதிர்ப்புத் சக்தியை வளர்க்கும் பினால் (Phenols) எனப்படும் ஆண்டி ஆக்சிடன்ட் இவற்றில் மிகுதியாக உள்ளன. இவை கேன்சர் மற்றும் இதய வியாதிகளை வரவிடாமல் தடுக்க வல்லவை என அறியப்படுகிறது.
  • இவ்வகைத் தானியங்கள் மாவுத் தன்மை அற்றவை (Gluten-free). க்ளூடன் அலர்ஜி மற்றும் கோதுமைப் பொருட்கள் ஒவ்வாமை உள்ளோருக்கு இவ்வகைத் தானியங்கள் வரப்பிரசாதமாக அமையும் என்கிறார்கள் உணவுவல்லுனர்கள்.
  • க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் இந்த தானியங்கள் டயாபெடிக்குகளுக்கு உகந்தவை.
அரிசி, ரவா, மைதா, கோதுமை போன்ற தானிய வகைகளைக் குறைத்து அதற்கு மாற்றாக சிறு, குறு தானியங்களை பயன்படுத்துவதன் மூலம் மனிதகுலம் தம்மை பேரழிவின் பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்..

(நன்றி: மே, 3, 2015 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியான கட்டுரையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)

வாழி நலம் சூழ... வலைப்பூவுக்காக வெளியிட்டவர்: அஷ்வின்ஜி