சனி, 15 பிப்ரவரி, 2014

தோப்புக்கரணம்-முன்னோர்கள் தந்த வரம்

நலமே வளம்
தோப்புக்கரணம்
முன்னோர்கள் தந்த வரம்.
இன்றைய யுகத்தின் பெரும் சவாலான அட்டென்ஷன் டிஃபிசியன்ஸி (Attention Deficiency) என்னும் கவனச்சிதறல் பிரச்சினைக்கான தீர்வு நம் முன்னோர்கள் தந்த அறிவியல் பூர்வமான வரம்.

இன்றைய உலகம் மிகவும் இயந்திரத்தனமாகி விட்டது. எல்லோரும் நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பெரியவர்கள் ஆயிரம் வேலைகளையும் ஆயிரத்தோரு சிந்தனைகளையும் மனதில் நிரப்பி அடுத்து என்ன அடுத்து என்ன என உழன்று திரிகிறார்கள்.

குழந்தைகளோ பாவம் படிப்பு படிப்பு என்று ஒரு பக்கம் ஓடி, படிப்பு மட்டும் போதாது; ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று விரட்டி அடிக்கும் பெற்றவர்களால் அடுத்து என்ன வகுப்பு அடுத்து என்ன என்று இடை விடாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பெரியவர்கள் சிறியவர்கள் என எல்லோரும் நித்தம் மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு நம்மை நிலை நிறுத்திக் கொள்ள நாமும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இப்படி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தில் வரும் ஓரு பெரும் வேகத்தடை-வழியில் கவனக்குறைவு.

எதையும் சாதிக்கும் சக்தி கொண்ட மனித மனம் கவனக் குறைவு பிரச்சனையை வியாதிப் பட்டியலில் சேர்த்து வகைப்படுத்தி வைத்துள்ளது. இந்தக் கவனக் குறைவுப் பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகள் மனதை உத்வேகப்படுத்தும் சில பயிற்சிகள் தியானம் இத்யாதி என்று பல வழிகளில் தீர்வு காண முயலும் நவீன உலகம் நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்துச் சென்ற மிகவும் எளிமையான ஒரு பயிற்சி முற்றிலும் மறந்தே போய் விட்டது. குட்டிக் கரணம் போடும் குரங்கிலிருந்து வந்த மனிதனின் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆற்றல் பெறச் செய்யும் அந்த எளிய பயிற்சி தோப்புக் கரணம்.

நம் முன்னோர்கள் எதையும் காரணமில்லாமல் செய்யவில்லை. அன்றைய கால கட்டங்களில் குழந்தைகளுக்குப் படிப்பு சரியாக வராத போது அல்லது அவர்களின் கவனம் சிதறும் போது அந்நாளைய ஆசிரியர்கள் அவர்களை 50 அல்லது 100 முறை தோப்புக்கரணம் போடச் சொல்லிச் சரி செய்வார்கள். இன்று கல்வித்துறை ஆய்வாளர்களும் உளவியல் நிபுணர்களும் மருத்துவ நிபுணர்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பயிற்சியாளர்களும் கலைத் துறையைச் சேர்ந்தவர்களும் தோப்புக்கரணம் என்ற இந்த எளிய பயிற்சியை மூளையின் திறனை அதிகரிக்கும் பயிற்சியாகவே பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல் திறனை ஊக்கம் தந்து அதிகரிக்க இந்தத் தோப்புக்கரணத்தை 'சூப்பர் ப்ரெயின் யோகா' என்று பெயரிட்டுப் பயிற்சி செய்து வருகின்றனர். கவனக் குறைவு வியாதி கொண்ட சிறியவர்கள் பெரியவர்கள் அனைவருக்கும் சிறந்த தீர்வைத்தரும் பயிற்சி இந்தத் தோப்புக் கரணப்பயிற்சி என்று அடித்துச் சொல்கிறார் அமெரிக்காவின் ':யேல்' பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பு அணுவியல் மருத்துவ நிபுணர் யுகேனியஸ் ஆங்., இதைப் பல ஆய்வுகளைத் தந்து நிரூபிக்கிறார் அவர். தோப்புக்கரணம் நமக்கு நன்றாகவே தெரிந்த பயிற்சிதான் என்றாலும் அதை முறையாக எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போம்.

1. இப்பயிற்சியைச் சூரியன் எழும் நேரத்தில் கிழக்குத் திசையை நோக்கி நின்று கொண்டு செய்வது சிறந்தது. (காலைச் சூரியனின் கதிர்கள் மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் குறிப்பாய் எலும்புகளுக்கும் மிக நல்லது.)

2. நேராக நிமிர்ந்து நில்லுங்கள். கால்களின் இடைவெளி உங்கள் தோள்பட்டையின் அகலத்திற்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். முதலில் இடது கையால் வலது காது மடலையும் பிறகு வலது கையால் இடது காது மடலையும் பிடிக்கவும். பிறகு நாக்கை மேலண்ணத்தோடு ஒட்டும்படி வையுங்கள். உங்கள் கட்டைவிரல் காது மடலின் பின்புறத்தில் இருக்கட்டும்
மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுத்து (வாய்வழியே அல்லமெதுவாகக் கீழே செல்லுங்கள். (நாற்காலியில் அமர்வது போன்ற நிலைக்கு)). கீழே சென்றவுடன் சில நொடிகளுக்கு மூச்சை இழுத்துப் பிடிக்கவும்.பிறகு மெதுவாக மேலே வரவும்மேலே வரும்போது மூச்சை வெளியேவிடவும்வாய் வழியே அல்ல.)

3. இதேமாதிரி 7 அல்லது 14 அல்லது 21 முறை செய்யவும். வலது கை மேலேயும் இடது கை கீழேயும், கட்டைவிரல் காதுகளின் பின்புறத்திலும், நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டியும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் முழுவதும் காலை மடித்து முட்டியை மடக்கிக் கீழே உட்காரும் நிலைக்குக் கீழே செல்லவேண்டாம். நாற்காலியில் உட்கார்ந்து எழுந்து கொள்வதைப்போலச் செய்தால் போதுமானதாகும்.
இந்த தோப்புக் கரணப் பயிற்சி மூலாதாரம் மற்றும் சுவாதிஷ்டான சக்தி நிலைகளிலிருந்து உயிர்ச்சக்தியை மேலெழுப்பி மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் அளவை, ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. காதுகளைப் பிடிப்பது, காது மடல்களில் இருக்கும் மூளைக்கான அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி, மூளைக்குச் சக்தியினை ஓட்டத்தை அதிகப் படுத்துகிறது. நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டி வைப்பதால் மேல் நோக்கிச் செல்லும் சக்தியின் ஓட்டம் தடையில்லாமல் சீராக இருக்கும். தோப்புக் கரணப் பயிற்சியைச் சில வாரங்களுக்குத் தொடர்ந்து செய்தால், நிச்சயம் பலன் தெரியும். சிறியவர் பெரியவர் என எல்லோருக்கும் தேவையான இந்த எளிய பயிற்சியைத் தொடர்ந்து செய்வோம். கவனக்குறைவு என்ற பிரச்சனையைக் களைவோம்.

செய்வோமே
தினமும் 14 செட் தோப்புக்கரணம் போடுவேன். என் சக்திநிலை, மனநிலையை மேம்படுத்துவேன்.

நன்றி.: விஜயலட்சுமி.ஜெ
இன்ஃபினி ஜனவரி (16-31 2014) இதழ்
Pictures: Courtesy: Google images.