பகுதி 9 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.
இயற்கை வாழ்வுக்கு அவ்வழியில் உடலில் தோன்றும் துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்கும் நோய்நாடலும் இன்றியமையாதன.
இதை உணர்ந்த பொய்யாமொழிப் புலவரும்
"நோய் நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
என்ற மருத்துவர் கடமையினை விளக்குகிறார்.
இயற்கை வாழ்வைப் போற்றும் பலர் நோய் நாடவே அவசியமில்லை என்ற கருத்துக் கொண்டுள்ளார்கள் வேறுசிலர் இதற்கு மாறாக நோய்நாடலை ஒரு சுவையாகவே வளர்ந்துள்ளனர். புற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது வாழ்க்கைத்தொழிலாகவே மருத்துவத்தைக் கொண்டுள்ள நிபுணர்கள் செய்வதையே தாங்களும் செய்கின்றனர். மிகச் சிலர்தான் வள்ளுவர் சொல்லுகின்ற நோய்முதல் நாடலை கருத்தில் கொண்டு முதலில் கவனம் செலுத்துகின்றனர். இக்காலத்தில் நோய்நாடும் முறை நன்க வளர்ந்துள்ளது. நோய் முதல் நாடும் முறை போதிய அளவுக்கு வளரவில்லை. இது ஆராய்ச்சிக்குரிய ஒன்று.
தலைவலி என்றவுடன் அது எந்த இடத்தில் நெற்றியிலா, வல இடப்பக்க பொட்டுக்களிலா, முண்மண்டையிலா, பின் மண்டையிலா என்று கேட்டு அறிந்து அந்த இடத்தில் பற்றுப் போடுகிறவர்கள் வலி உண்டாவது அதிகச் சூட்டினாலா, நரம்புத்துடிப்பினாலா என்று தெரிந்து வியர்வை உண்டு பண்ணும் ஒரு மருந்தைக் கொடுத்து சூட்டைக் குறைத்தோ, நரம்புத் துடிப்பினைத் தளர்த்தி விடும் உணர்வை மறத்துப்போகச் செய்யும் மயக்க மருந்துகளைக் கொடுத்தோ, குணப்படுத்துவோரும் உண்டு. ஆனால் இவற்றால் நோய் நீங்குவதில்லை. மேலும் இவர்கள் நோய் நாடினார்களேயல்லாமல் நோய்முதல் நாடவில்லை. தலைவலி எங்கு என்று கண்டார்கள். ஏன் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுமையில்லாமல் நோயமுதலைக் கண்டிருந்தால் இன்னும் சிறிது, ஆழமாகச் சென்று உண்மையைக் கண்டிருப்பார்கள்.
உலகில் உள்ள எல்லாபொருள்களும் அசைகின்றன. ஆண்டவன் கூட ஆடித்தான் தரிசனம் கொடுக்கிறான் இவன் கூத்துப்பெருமாள் ஆடும் கடவுள் ஒவ்வொன்றின் அசைவிற்கும் ஒரு அளவு உண்டு ஒரு வரையறையும் உண்டு கூடினாலோ, குறைந்தாலோ இசைவு குறைந்து துன்பம் நேரிடும்.
குறையும்போது, கூடும்போதோ துன்பமும் நோயும் தோன்றும். 'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்பார் வள்ளுவர்.
தலையில் உள்ள நரம்புத் துடிப்பு ஏன் கூடவோ குறையவோ செய்கின்றது? உடம்பின் தேவைக்கு நாம் உணவு உண்கின்றோம் அதில் வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டு விடுகின்றது. வேண்டாதது வெளியேற்றப்பட வேண்டும். இவை ஏதோ ஒரு காரணத்தால் அவ்வப்போது வெளியேற்றப்படாமல் உள்ளே வயிற்றிலோ, மலக்குடலிலோ தேங்கி நின்றால் அவை அழுகி அல்லது புளித்து நச்சுக் காற்றாகவும் நச்சுப் பொருள்களாகவும் மாறுகின்றன. இவையும் வெளியேறவே முயல்கின்றன. இவை வெளியேறும் முயற்சியில் அவ்வப்பகுதியில் துன்பம் ஏற்படுவதைதான் அந்தந்த இடத்தையும் வெளியேறும் பாங்கினையும் ஒட்டி வெவ்வேறு பெயர் கொடுக்கின்றோம். எனவே வேண்டாத பொருள்கள் வெளியேறும் முயற்சிதான் நோய்.
இது ஒன்றுதான் உண்மை. பிறவெல்லாம் பெயர்களேயாகும். பெயர்கள் பலவாயினும் நோய் ஒன்றுதான் இதனை ஆங்கிலத்தில் "யூனிட்டி ஆப் டிஸ்ஸிஸஸ்" (Unity of Diseases) என்கின்றனர். மனித இனம் ஒன்றே எனினும் குலத்தாலும் நிறத்தாலும், மொழியாலும், தொழிலாலும், இடத்தாலும், கூட்டத்தாலும் பிரித்து வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்.
எத்தனையோ பேதங்கள், இவைகள் கற்பிதம், நிரந்தரமல்ல.
நிலையானது ஒன்றே.
மனித இனம் ஒன்று என்பதுதான் உண்மை.
அதுபோலவே நோய்கள் நாலாயிரத்து நானூற்றி நாற்பது என்று பெயரிட்டழைத்த போதிலும் அவைகள் உண்மையில் அனைத்தும் ஒன்றே.
(இயற்கை இன்னும் வளரும்..)