சனி, 23 அக்டோபர், 2010

4. ஆரோக்கியம் ஆனந்தம்.
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
இரதி லோகநாதன், கோவை.
முந்தைய பகுதிகள்

அறிமுகம். 
பகுதி: 1
பகுதி: 2 
பகுதி: 3 

7. இயற்கை உணவு உண்டால் நடப்பது என்ன?
நாம் இயற்கை உணவு உண்ணும் பொழுதோ அல்லது இயற்கை சக்திகளான மழை, சூரியன், சுத்தமான நீர், சுத்தமான காற்று  போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளும் பொழுதோ நம் உடலில் சமைத்த உணவினாலோ அல்லது தீய பழக்க வழக்கத்தினாலோ உண்டான கழி வுகள் உடலில் இருந்து வெளியேறத் தொடங்குகிறது. அதனால் தான் பழங்கள் உண்ணும் போது சளி பிடிக்கிறது, வெயிலில் செல்லும் போது  தலைவலியும் மழையில் செல்லும் போது காய்ச்சலும் வருகிறது. ஆனால் நாம் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும், வெயில், மழை ஒத்துக்கொள்ளாது  என்று கூறி இயற்கையை விட்டு விலகி இருக்கிறோம். மருந்து மாத்திரைகளை உண்டு கழிவுகளை வெளியேறவிடாமல் உடலுக்குள்ளேயே அடக்கி  உடல் நலனை மேலும் கெடுத்துக் கொள்கிறோம்.      
8. கழிவுகளின் நீக்கம் எப்படி நடக்கும்?
இயற்கை உணவு உண்ணும் பொழுது நம் உடலில் இருந்து பல வகையில் கழிவுகள் வெளியேறத் தொடங்கு கிறது. அவற்றை கண்டு நாம் பயப்படத் தேவையில்லை.  நம் உடலில் இருந்து அழுக்குகள் வெளியேறுகிறது என நாம் மகிழ்ச்சி அடையவேண்டும்.  
பல வகை கழிவுகள் வெளியேற்றம்
(1) தலைவலி
(2) உடல் வலி
(3) சோர்வு
(4) தூக்கம்
(5) காய்ச்சல்
(6) தோல் வியாதிகள்
(7) வயிற்று போக்கு
(8) சளி, இருமல்
(9) நகங்களின் வழியாக
(10) உடல் துர்நாற்றம்
(11) வாய் துர்நாற்றம்
(12) வாந்தி

இவை அனைத்தும் நம் உடலில்  இருந்து கழிவுகள் வெளியேறுவதன் அடையாளமே தவிர பயப்படத் தேவையில்லை.   நோயாளியின் மன உறுதி, தைரியம். ஒத்துழைப்பு இவையே முக்கியமாகும்.  இயற்கை உணவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஒருவர்  நன்றாக புரிந்து கொண்டால் அது அவர் விரைவில் குணமாக உதவும். 


9.  கழிவுகள் நீங்கும் பொழுது செய்ய வேண்டியது
கழிவுகள் நீங்கும் பொழுது இயன்ற அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.

தலை வலி

எனிமா எடுக்க வேண்டும். தலை வலி குறையும் வரை ஈரமண் பட்டி அல்லது ஈரத்துணிப் பட்டி தலையிலும் அடிவயிற்றிலும்  போட வேண்டும்.  வாழை இலை குளியல், சூரிய ஒளி குளியல் உகந்தது.  நீராவிக் குளியல் மழைக் காலங்களிலும் குளிர் பிரதேசங்களிலும் எ டுக்கலாம்.

உடல் வலி, சோர்வு, தூக்கம், சளி, இருமல் அதிக அளவு பழச்சாறுகள் (சாறுள்ள பழங்களான மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, நெல்லி, எ லுமிச்சை) எடுத்துக் கொள்ள வேண்டும்.  எலுமிச்சை சாறு குடிக்கும் போது 5 சொட்டு+200 மி.மி. தண்ணீர் எனக் குடிக்க வேண்டும்.  பேரிச்சம்  பழங்கள் நிறைய உண்ணலாம்.
காய்ச்சல் 
எனிமா, ஈரத்துணிப்பட்டி, ஈரமண்பட்டி தலையிலும் அடிவயிற்றுலும் போடலாம்.  பழச்சாறுகள் நிறைய அருந்தலாம்.  காய்ச்சல்  அதிகமாக இருந்தால் இடுப்புக் குளியல் எடுக்கலாம்.
உடல் துர்நாற்றம் மற்றும் வாய் துர்நாற்றம் 
இயற்கை உணவையே தொடர்ந்து கடைபிடிக்கவும்.  வாழை இலை குளியல், மண் குளியல் உகந்தது.

வாந்தி.
கல்லிரலில் உண்டாகும் வெப்பத்தினால் தான் வாந்தி ஏற்படுகிறது.  சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை  மற்றும் இளநீர் ஆகியவை குடித்து வந்தால் வெப்பம் தணியும்.  முழு ஓய்வு எடுக்க முடிந்தால் உண்ணா நோன்பு இருக்கலாம்.  

தோல் வியாதிகள்

காய்கறி மற்றும் பழச்சாறுகளை தோலில் பாதிக்கப்பட்ட இடங்களில் போடுவது உகந்தது.  சுத்தமான மண்ணையும் போடலாம். 
 
வயிற்றுப் போக்கு.
மாதுளம் பழச்சாறும் இளநீரும் நிறைய அருந்த வேண்டும். (அதிக அளவு பழம் வாங்க இயலாதவர்கள் பச்சை இலைச் சாறு  (புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை,கீரை வகைகள்) சேர்த்துக் கொள்ளலாம்.) அதில் நெல்லிக்காயும் சிறிதளவு இஞ்சியும் சேர்க்கலாம். 

10. சிகிச்சையின் போது நினைவில் கொள்ள வேண்டியவை
(1) நோயாளி முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியுது அவசியம்.
(2) உறக்கம் வந்தால் நன்றாக உறங்க வேண்டும்.
(3) யோகா, மூச்சுப் பயிற்சிகள் தேவையில்லை.
(4) ஒரு நேரம் எனிமா எடுக்க வேண்டும்.
(5) ஜுஸ் பாஸ்டிங் (பழச் சாறு உண்ணா நோன்பு) இருந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
(6) வலி, காயம், வீக்கம் இருக்கும் இடத்தில் ஈரத்துணிப்பட்டி அல்லது ஈர மண் பட்டி போடலாம்.  பூச்சிக்கொல்லி மருந்தோ உரமோ போடாத சு த்தமான மண்ணா இருக்க வேண்டும்.  பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும் முல்தானி மிட்டி என்ற மண்ணையும் உபயோகப்படுத்தலாம். 
(7) சிகிச்சை எடுக்கும் பொழுது தேங்காய் மற்றும் இதர கொட்டை பருப்புகளை தவிர்க்கவும்.  ஆனால் உடல் நலம் தேறிய பிறகு கொட்டை பரு ப்புகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.  கொட்டைபருப்புகள் சேர்த்தாமல் வெறும் பழ உணவில் இருக்க கூடாது.  நோயாளிக்கு பசி  எடுக்க ஆரம்பித்த உடன் சிறிது சிறிதாக கொட்டை பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.
(8) அக்கு பிரஷர் சிகிச்சை கொடுக்கலாம்.
(9) இரவில் தூக்கமின்மையால் தவிப்பவர்கள் பாதத்தின் நடுவிரலின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுக்கலாம்.
(10) முழு இயற்கை உணவுக்கு எனிமா தேவையில்லை.  நோயாளி ஒத்துழைத்தால் எடுக்கலாம்.
(11) நோயாளிகள் குளிராக உணர்ந்தால் ஈரமண் பட்டி, ஈரத்துணிப்பட்டி தேவையில்லை.  அதற்கு பதில் சூடான அல்லது மிதமான சூட்டில் தண் ணீர் உபயோகிக்கலாம். உடலில் இருந்து வெப்பம் வெளியேறாதபடி கால்கள், கைகள், தலை, காதுகளை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும்.   கையுறைகள், காலுறைகள், ஸ்வெட்டர், போர்வை போன்றவற்றை பயன்படுத்தலாம்.  மொசைக், மார்பிள் போன்ற குளிர்ந்த தரையில் நடக்க  காலணி உபயோகிக்க வேண்டும்.
(12) பசி இல்லா விட்டால் எலுமிச்சை சாறு மற்றும் எனிமா காலை, மாலை இருமுறை எடுக்கலாம்.
(ஆரோக்கியம், ஆனந்தம் தொடரும்)

வெள்ளி, 22 அக்டோபர், 2010

3. ஆரோக்கியம் ஆனந்தம்.
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
இரதி லோகநாதன், கோவை.
முந்தைய பகுதிகள்

அறிமுகம். 
பகுதி: 1
பகுதி: 2 
 
5. பால் மற்றும்முட்டை சைவமா?அசைவமா?

பால்
மனிதனுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதன் பிறகு பாலை ஜீரணிக்கும் என்சைம்கள் நம் உடலில் சுரப்பதில்லை. பால்  நம்முடைய உணவே அல்ல. அது பசு தன்னுடைய கன்றுக்காக சுரப்பது. நாம் அதை நம் சுயநலத்திற்காக திருடிக்கொண்டிருக்கிறோம். அதை  தாய்மை அடைந்த பெண்களாவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும். பாலில் கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதாக  அலோபதி மருத்துவர்கள் சொல்லுவார்கள்.  ஆனால் பசுவிற்கு அந்த சத்துக்கள் பச்சை புற்களை சாப்பிடுவதில் தானே கிடைக்கிறது.  நாமும்  அதை போலவே உண்டு அந்த சத்துக்களை பெற முடியும். சளி, இருமல், ஈஸ்னோபீலியா, மூச்சிரைத்தல், ஆஸ்துமா, போன்ற நோய்கள் அசைவம்,  பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினால் குறைவதை கண்கூடாக காணலாம்.

முட்டை
மேற்சொன்ன விளக்கம் முட்டைக்கும் பொருந்தும்.  முட்டை கோழி குஞ்சு பொறிப்பதற்கு தானே தவிர நாம் உண்பதற்காக அல் ல.  அது கருகலைப்பிற்கு சமமாகும்.


முட்டை மற்றும் பால் சைவமா, அசைவமா என நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

6. அசைவப்புரதம் நமக்கு தேவையா?
விலங்குகளிடமிருந்து கிடைக்கக்கூடிய புரதத்திற்கும், செடிகளிடமிருந்து கிடைக்ககூடிய புரததிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ள ன.  அசைவப் புரதம் (முட்டை, கறி, கோழி, பால், பால் பொருட்கள்) மனிதனுக்கு ஏற்றவை அல்ல. மனிதனின் ஜீரண மண்டலம் அசைவப் புரதத் தை ஜீரணிக்கும் வகையில் அமைக்கப்படவில்லை. அது மாமிச பட்சிணிகள் (கார்னிவோரஸ்) மற்றும் ஓம்னிவோரஸ் (சைவம் மற்றும் அசைவம்  இரண்டும் உண்பவை) ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிற்து. அவன் ஒரு பழந்தின்னி வகையை சேர்ந்தவன்.  பழங்களும், கொட்டைபருப்புகளும் தான்  அவனுடைய உணவு. அசைவப் புரதம் உடலில் மட்டுமல்லாமல் மனதிலும் நோயை உண்டு பண்ணுகிறது.  அசைவ உணவு நிறைய உண்போர்  மிகுந்த கோபம் கொள்பர். அசைவ உணவு மூளையின் சக்தியையும் துடிப்பையும் குறைத்து விடும். ஒரு மனிதன் அசைவ உணவையும் பால்  பொருட்களையும் தவிர்த்தால் 50% நோயுலிருந்து விடுதலை அடைந்து விடுவான்.  மாமிச பட்சிணிகள் கூட பச்சைக் கறியையே சாப்பிடுகிறது.  மனிதன் ஒருவன்  தான் பிணங்களை வறுத்து, பொரித்து சாப்பிட்டு தன்னை நாகரிகம் அடைந்தவன் என்று வேறு கூறிக் கொள்கிறான். 

(ஆரோக்கியம் ஆனந்தம்-தொடரும்)


வியாழன், 21 அக்டோபர், 2010

2. ஆரோக்கியம் ஆனந்தம்.


இயற்கை நலவாழ்வியல்.

முந்தைய பகுதிகள்

அறிமுகம். 
பகுதி: 1

2.  இயற்கை உணவு என்றால் என்ன?

இயற்கை அன்னை நமக்கு தயாரித்து வழங்கும் உணவையே இயற்கை உணவு என்கிறோம். (சூரிய வெப்பத்தால் சமைக்கப்பட்ட உணவு). இயற்கை உணவை அதன் தன்மை மாறாமல் சமைக்கமால், வேகவைக்காமல், வறுக்காமல் அப்படியே பச்சையாக உண்ண வேண்டும்.  நாம் உணவை சமைப்பதால் அதன் சத்துக்கள் அழிந்து விடுகின்றன. நாம் இறந்த உணவையே உண்கிறோம். அதனால் தான் மனிதன்  நோயாளி  ஆகிறான்.  உலகில் வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை.
        
3. மனிதன் சைவமா?

(1) மனிதன் மற்றும் தாவர பட்சிணிகள் நீரை உறிஞ்சி குடிக்கும். ஆனால் மாமிச உணவுகள் நீரை நக்கி குடிக்கும்.
 
(2) மனிதனுக்கும், தாவர பட்சிணிகளுக்கும் நீளமான சிறுகுடல் இருக்கும். ஆனால் மாமிச பட்சிணிகளுக்கு சிறுகுடல் நீளம் குறைவாக இருக்கும்.
 
(3) மாமிச பட்சிணிகளுக்கு மாமிசத்தை கிழித்து உண்ண கோரைப் பற்கள் உண்டு.  ஆனால் நமக்கு உணவை நன்கு மென்று உண்ணக் கூடிய  வகையில் பற்கள் அமைந்துள்ளது.
 
(4)சைவ உணவு உண்போருடைய ஆயுட்காலம் அசைவ உணவு உண்போருடைய ஆயுட்காலத்தை விட அதிகம்.
        
4. மனிதன் ஒரு பழந்தின்னி

(1)நிலத்திற்கு கீழ் விளையும் பொருட்களை உண்ணும் வகையில் பன்றி, எலி, முயல், போன்ற மிருகங்களுடைய வாய் அமைப்பு நிலத்தை தோண்டு வதற்கு ஏற்றாற் போல் அமைந்திருக்கும். 
 
(2)மேய்ச்சல் மிருகங்களின் பற்கள் மற்றும் வாய் அமைப்பு புற்களை அசை போட்டு சாப்பிடும் வகையில் 
அமைந்திருக்கும்.
 
(3)குரங்குகள், அணில்கள் போன்ற மிருகங்களுக்கு மரத்திற்கு மரம் தாவி பழங்களை உண்ணும் வகையில் அதனுடைய உடலமைப்பு இருக்கும். 
 
(4)மனிதனால் மட்டும் தான் இரண்டு கால்களால் நின்று பழங்களை பறிக்கவும், உயர்ந்த மரங்களில் ஏறவும் முடியும். 
    
இதனால் நாம் பழந்தின்னி வகையை சேர்ந்தவர்கள் என்பதை அறியலாம். அதனால் நாம் மெதுவாக அசைவ உணவிலிருந்து--- சைவ உணவிற்கும் பிறகு அதில் பால் பொருட்களை தவிர்த்தும் பிறகு  இயற்கை உணவிற்கும் பிறகு பழ உணவிற்கும் மாற முயற்சிக்க- வேண்டும்.

(தொடரும்)
நன்றி: இரதி லோகநாதன், கோவை.


முந்தைய கட்டுரையைக் காண: 1. ஆரோக்கியம் ஆனந்தம்.

புதன், 20 அக்டோபர், 2010

இதயநோய்

2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு
முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற... என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். 

கட்டுப்பாடான உணவு மற்றும் அதன் அளவுகோலும்
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 - 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்த மொத்த அளவில், 65% சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியை கொழுப்பிலிருந்தும், 15% சக்தியை புரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!

ஆரோக்கியமான சக்திகளை எந்த மாதிரி உணவுகளில் இருந்து பெறலாம்?
அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசி யையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்! பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும். 

கொழுப்புச் சத்து பற்றி?
அதைப் பற்றி விரிவாகவே கூற வேண்டும். கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகை உண்டு. ஆடு, மாடுகளின் மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய், வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும். தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு. இவற்றிலிருந்து கொழுப்புச் சக்தியை பெறுவதுதான் ஆரோக்கியம்! மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய் வகைகள் உள்ளன.

எண்ணெயைப் பற்றி:
‘சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றை தவிர்த்துவிட வேண்டும். ‘அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கடலை எண்ணெய் போன்ற ‘மோனோ அன்சாச்சுரேட்டட்’ வகை எண்ணெயிலுள்ள சத்தும் உடலுக்கு தேவை என்பதால், இவற்றையும் பயன்படுத்தலாம் என்கிறார்கள். இவற்றைவிட ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’ வகைதான் இதயத்துக்கு மிக நல்ல தோழன். இந்தச் சத்தை கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம். எப்போதுமே ஒரே வகை எண்ணெயை உபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க, பொரிக்கக் கூடாது. ஒரு முறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.

பயமில்லாமல் சாப்பிடக் கூடிய உணவு வகை
இயற்கை கொடுக்கும் காய்கறிகள் உள்ளனவே! அவை இதயத்தின் நண்பர்கள். அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்த கலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை. எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தொட்டுக்க வைப்பதை சாதமாகவும், சாதத்தைத் தொட்டுக்கவும் உபயோகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தேடி வரும்!

சில காய்கறியின் பயன்கள்
கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும் நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன. வெங்காயம், பூண்டு இரண்டுமே நல்லது. கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்கு நார்ச்சத்து மிகவும் நல்லது. எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டியது & உயிர் வாழத்தான் உண்ண வேண்டும். உண்ணுவதற்காகவே உயிர் வாழக் கூடாது!
உடல் எடை என்பது பேங்க் பாலன்ஸ் மாதிரி. சாப்பிடச் சாப்பிட, ஏறிக்கொண்டேதான் போகும். பணத்தை எடுத்து செலவழித்தால்தானே பாலன்ஸ் குறையும்? அதுபோல, உடலின் சக்தியை செலவழித்தால்தான் எடை குறையும்!’’

ஹெல்த் டிப்ஸ்...
எடை அதிகம் இருப்பவர்களுக்கு, கழுத்து குட்டை யாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். குறட்டை விடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், எடையைக் கட்டாயம் குறைக்க வேண்டும். எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. காலையில் ஒரு மகாராஜா போலவும் (விருந்து) இரவில் ஒரு பிச்சைக்காரர் போலவும் (குறைவான உணவு) சாப்பிட வேண்டும் என்பார்கள். மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்து குறைவு. ஆனால், அதன் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை! ‘‘டயட்டினால் எடையைக் குறைக்கலாம். ஆனால், உடற்பயிற்சியால்தான் அதை அப்படியே பராமரிக்க முடியும்’’
! 

‘‘ஹர்ரி (அவசரம்), கறி (மாமிசம்), வொர்ரி (கவலை) மூன்றையும் நிறுத்தினால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்!’

++++++++++++++

நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (Anti - Oxidants) Macula -வை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

பசலைக் கீரை, முருங்கை, அகத்திக் கீரை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நலம்.

தாவர உணவு வகைகளில் பெறப்படும் இரும்புச்சத்து, இறைச்சியில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட குறைவாகவே உடலில் கலந்தாலும், வைட்டமின் சி-ஆல் இரும்புச் சத்து உடலில் கலப்பது மேம்படுகிறது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. தினசரி சமையல் முறையில் பல வகையான பச்சை காற்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். ஆனால் அதை கூடிய மட்டும் அதன் சத்துகள் குறையா வண்ணம் சமைப்பது அவசியம்.

Anti oxidants

நம் உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் காரணம் Free Radical fns என்பது அனைவராலும் ஏற்கப்பட்ட மருத்துவ உண்மை, நம் உயிரைத் தக்கவைப்பது பிராணவாயு. ஆனால் அதே பிராணவாயுதான் நம் நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணம் என்று நம்மில் பலருக்கு தெரியாது.

வைட்டமின் இ, சி மற்றும் ஏ, தக்காளி, திண்ணிய பூக்கோசு வகை, காலிஃப்ளவர், பூண்டு, மிளகு, பசலை, தேயிலை, காரட், சோயா மற்றும் முழு தானிய வகைகளிலிருந்து நாம் Anti-oxidant களை பெறலாம். நிறக்கலவை அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவைகளில் தாவர உயிர்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய்.

காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. 

வைட்டமின் ஏ உணவு : தக்காளி, பசலை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

கண் பராமரிப்பில் அமினோ அமிலங்கள் :

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்புரை நோய், க்ளுகோமா என்ற கண் விழி விறைப்பு நோய், குறிப்பாக கண் உள்ளிருக்கும் ரத்தக் குழாய்களை சேதடையச் செய்யும் டயாபெடிக் ரெடினோபதி ஆகியவைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் அமினோ அமிலங்கள் அல்லது புரத அமிலங்கள் இந்நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு அமினோ அமிலச் சத்துகளை வாய் வழியாக கொடுப்பதன் மூலம் சர்க்கரை நோயின் புறவிளைவுகளை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறுபோன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

கண்கள் உங்களைக் காக்க, நீங்கள் கண்களை காத்துக் கொள்ளுங்கள்

++++++++++++++
யோகாவால் இளமையோடு வலம் வரும் 80 வயது இளைஞர் பயிற்சி

கிருஷ்ணகிரி: யோகா மற்றும் கட்டுப்பாடான உணவு பழக்க முறை காரணமாக தனக்கு வந்த ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய்களை விரட்டி 80 வயதிலும் இளைஞர் போல் கிருஷ்ணகிரி சேர்ந்த முதியவர் வலம் வருகிறார்.கால சக்கரத்தின் வேகத்தில் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் வேலைக்கு செல்வோர் தங்கள் கால்களில் சக்கரத்தை கட்டி கொண்டது போல் பரபரப்புடன் காலை முதல் இரவு வரையில் உள்ளனர். வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பணி சுமை முதல் பல்வேறு காரணங்களால் டென்ஷன் அடைந்து, வீட்டுக்கு திரும்பும் போது, ஓய்வை நாடி செல்கின்றனர்.

இந்த அவசரமான காலத்தில் உணவு பழக்கம் முதல் பல்வேறு பழக்க, வழக்கங்கள் இளைஞர்கள் கூட வயது முதியவர் போல் வலம் வரத்துவங்கி விட்டனர். பல்வேறு நோய்களும் நம்மை சுற்றி வரத்துவங்கி விட்டது.கிருஷ்ணகிரியில் 80 வயது முதியவர் தினம் யோகா, உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு பழக்க, வழக்கங்கள் மூலம் தனக்கு வந்த மிகப்பெரிய கேன்சர் நோயை  விரட்டி தற்போது, இளைஞர் போல் வலம் வருகின்றனர்.கிருஷ்ணகிரி சப்ஜெயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் பல்ராம் சிங் (80). வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருக்கிறார். இவர் தன் 25 வயது வயதில் யோகா செய்ய துவங்கினார். எந்த பணிகள் இருந்தாலும் தினம் யோகா செய்வதை நிறுத்தாமல் இன்று வரையில் தொடர்ந்து செய்து வருகிறார்.இவரது மனைவி பரிமளாபாய். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் ஒரு மகனும் உள்ளனர். மனைவி  ஐந்தாண்டுக்கு முன் இறந்து விட்டார். இவரது இரு மகள்களுக்கும் திருமணமாகி கணவர் வீட்டோடு உள்ளனர். மகன் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். தற்போது, கிருஷ்ணகிரியில் தனியாக வசித்து வரும் பல்ராம்சிங் தன்னம்பிக்கையோடு தனது வேலைகளை செய்து யாருக்கு இடையூறு இல்லாமல் இளைஞர் போல் வலம் வருகிறார்.

பல்ராம்சிங் கூறியதாவது:நான் 25 வயதில் இருந்து யோகா செய்து வருகின்றேன். யோகா மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை என் பயிற்சியின் மூலம் அறிந்து கொண்டேன், கடந்த 1992ம் ஆண்டு எனக்கு ஆஸ்துமா தாக்கியது. இதற்காக நான் மூச்சுபயிற்சி தினம் காலை, மாலையில் எடுத்தேன் ஆஸ்துமா குணமானது.கடந்த 2000ம் ஆண்டில் எனக்கு வயிற்றில் கேன்சர் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்த நிலையில், வயிற்றை சுருக்கும் யோகாசனங்கள், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடித்தேன். சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் கேன்சர் குறித்து பரிசோதனை செய்த போது, கேன்சர் குணமானது உறுதி செய்யப்பட்டது. தினம் காலையில் இரண்டு மணி நேரம் யோகாசனம் செய்து வருகிறேன். குறிப்பாக யோக நித்திரை, யாக பாத ஆசனம், சிரசாசனம், அஸ்வினி ருத்ராசனம், மயிலாசனம், கோமுக கூர்மாசனம், பத்மாசனம், சர்வாங்காசனம் ஆகிய ஆசனங்களை தவறாமல் செய்து வருகிறேன்.

வாரத்தில் இரு முறை 30 கி.மீ., சைக்களில் பயணம் செய்கிறேன்.இளைஞர்களுக்கு யோகா இலவசமாக கற்றுக்கொடுக்க நினைத்தாலும் கடுமையான யோகாசனங்களை செய்ய முடியாமல் பாதியில் இளைஞர்கள் நின்று விடுகினறனர். தற்போதுள்ள கால சூழ்நிலையில், பணி சுமை ஆகியவற்றை சமாளிக்க எந்த வயதினரும் யோகாசனம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார். பலராம்சிங் காலையில் இரு இட்லி, மதியம் ஒரு கப் சாதம், இரவு இரண்டு சப்பாத்தி ஆகியவற்றை உணவு பழக்கமாக வைத்துள்ளார்.

டாக்டர்கள் கருத்து என்ன?கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல டாக்டர்கள் கூறுகையில்,"கேன்சர் நோய் மனிதனை தாக்கிவிட்டால் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். யோகாசனம் மூலம் கேன்சர் நோயை முற்றிலுமாக சரிசெய்ய முடியும் என்று கூற முடியாது. மருத்துவ துறையில் இது போன்று எப்போதாவது அதிசயங்கள் நிகழும்' என்றார்.சென்னையை சேர்ந்த பிரபல யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் கூறியதாவது:கேன்சர் நோய் தாக்கியவர்கள் தொடர்ந்து யோகாசனம் செய்தால் நோயை முற்றிலும் சரி செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு அவர்கள் செய்யும் யோகாசனம் மட்டுமே கை கொடுக்காது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள், விரதம் இருப்பது போன்ற செயல்களும் கேன்சர் நோயை சரிசெய்ய உதவிகரமாக இருக்கும். மும்பையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் கேன்சர் நோய் வந்தவர்களை தங்க வைத்து அவர்களை யோகாசனம் செய்ய வைத்து நோயை குணப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர் . இதற்கு நோய் தாக்கியவர்களை கடுமையான உணவு பழக்க வழக்கம் மற்றும் விரதங்கள் இருக்க வைக்கின்றனர், என்றார்.
நன்றி: தினமலர் (25=07-2010)

செவ்வாய், 19 அக்டோபர், 2010உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை!

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரிய மல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.
உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரி யின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.
ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்க ளில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம்  கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவா கிறது.
ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தர மாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.
அதற்கான சில வழிகள்.  படித்து விட்டு பயனுள்ள தகவல் என்று மட்டும் கூறாமல்,  பயன்படுத்தி பலன் அடையுங்கள்.
பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப் பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.
இதற்கு நீங்கள் சாப்பிடும் அளவு கலோரி சக்தியை விட உடலில் அதிக கலோரிகள் எரிந்து செயலாற்றச் செய்தல் வேண்டும். சாப்பிடும் அளவைக் காட்டிலும் அதிக அளவு சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்ளுமானால், உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்க ஏதுவாகும். குறைவாக சாப்பிடும்போது,  உடலுக்குத் தேவை யான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படு கிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.
சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத் திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.
மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகை களில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடு வதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.
பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.
கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம்,  பால்,  கிரீம்,  சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள் வார்கள். இது தவறான அணுகுமுறை.
உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.
நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன் றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறை வாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய் தும் குறைக்க முடியும்.
குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற் படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.
உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.
உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.
சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்!  வாழ்த்துக்கள்.

திங்கள், 18 அக்டோபர், 2010

இயற்கை வாழ்க்கை முறை சிறந்தது ஏன்?

இயற்கை எப்படி நீர்,நிலம்,வாயு,அக்னி.ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதோ அது போன்றே நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது...

இயற்கை எவ்வளவு பவித்திரமானதோ அதே போன்றே இயற்கையிலே பிறந்து இயற்கையுடன் வளர்ந்து இயற்கையிலே கலந்து போகும் நம் தேகமும் அந்த அளவு பவித்திரமானது.ஆகவே இயற்கைக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லை.இதை அறிந்த நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொண்டார்கள்.அதனாலே நம் முன்னோர்களால் நோய்நொடி இல்லாமல் வாழமுடிந்தது.

உலகில் உள்ள 84 லட்ச உயிர்களும் இயற்கையையே ஆதாரமாகக்கொண்டு வாழ்கின்றன.ஆகவே அவைகளுக்கு எந்த வித மருத்துவ முறைகளோ,மருத்துவ மனைகளோ,மருந்துகளோ,மருத்துவர்களோ இல்லாமல் நோயின்றி வாழ்கின்றன.ஆனால் மனிதன் மட்டுமே உடலுக்கு தேவையானவற்றை உண்ணாமல் வாய்க்கு ருசியானவைகளை சாப்பிட்டு,உடலுழைப்பு இல்லாமல்,அருந்த வேண்டியதை அருந்தாமல், கழிக்க வேண்டியதை சரிவர கழிக்காமல், உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு தான் அவதிப்பட்டு அடுத்தவரை கஷ்டப்படுத்தி இயற்கைக்கு எதிராக நோய்நொடியுடம் காலம் கழிக்கிறான். இவையெல்லாம் இயற்கைக்கும் உடல் தர்மத்திற்கும் எதிராக செயல்பட்டதால் இயற்க்கை விதித்த தண்டனை.இந்த தண்டனையிலிருந்து வெளிப்பட இயற்கை வாழ்க்கைமுறையை நம்பி சரணடைவதே வழியாகும்.

இயற்கை வாழ்க்கை முறையை விடுத்து உடல் நலத்திற்கு பாடுபடுவதாலே நாட்டில் நாளுக்கு நாள் நோய்கள் அதிகமாகின்றன.குறைந்த பட்ச சுகம் கூட அரிதாகிவிட்டது.நம் வாழ்க்கை முறையில் ஏற்ப்பட்ட மாற்றங்களே இந்த கஷ்டத்திற்க்கெல்லாம் மூல காரணம்.இவற்றிலிருந்து நான் வெளிப்பட வேண்டுமெனில் நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றவேண்டியது அவசியம்.

நோய்கள், நோயாளிகள் அதிகமாக இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் இந்த உண்மையை அறிந்துக்கொண்டு இப்போதிப்போதே யோகாசனங்கள்,பிராணாயாமம்,தியானம் செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது, முளைக்கட்டிய பயறுகள் உண்பது, தண்ணீர் அதிகமாக குடிப்பது, புலால் உண்பதை நிறுத்துவது என்று பல இயற்கை முறைகள் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.ஆனால் நாம், நாமிழந்த நம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களை மறுபடியும் கொண்டு வர முடியாமலிருக்கிறோம்.இனியாவது விழித்துக்கொண்டு நம் பிரச்சனைகளுகு தீர்வு நம்மிடமே நம் வீட்டிலேயே இருக்கிறது என்று அறிந்து கொண்டவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள்.

நோய்கள் எத்தனை? எந்த உறுப்பில் வந்திருக்கிறது? எத்தனை நாளாக இருக்கிறது என்பது இங்கு பிரச்சனை அல்ல. நாம் மனம் மாறினாலே இவற்றிகெல்லாம் தீர்வு இயற்கை வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது... 

ஒழுகல் ஓரிடத்தில் இருந்தால் ரிப்பேர் வேறிடத்தில் செய்தால் எப்படி இருக்குமோ அதே போன்றே சாதாரணமாக ஆரோக்கியத்தை கொடுக்கும் இயற்கை முறையை விட்டு எல்லா பிரச்சனைக்கும் மருந்துகள் மீது ஆதாரப்படுவது போலிருக்கும், இயற்கை வாழ்க்கை முறையை விட்டு பல்வேறு வைத்தியங்களை இந்த உடலுக்கு செய்வது. 

மனிதன் ஆறறிவு படைத்தவனாதலால் தன் அறிவையும், புத்தியையும் பயன்படுத்தி இயற்கை வாழ்க்கை முறையினால் நல்ல ஆரோக்கியத்தையும், நல்லெண்ணங்கள் கொண்ட மனநிலையையும் நாளுக்கு நாள் பெருக்கிக்கொண்டால் நம்மில் மனிதாபிமானம் உயர்ந்து கொண்டிருக்கும்.

திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”        - (குறள் 942 - அதிகாரம் - 95)

உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.

மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார்.  இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்த அதிகாரமாகும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”

தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து  அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த  திருக்குறளின் பொருள்.

“பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு

பசித்த பின்பே உணவருந்த வேண்டும்.  பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும்.  அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

பஞ்சுப் பொதியல்ல நம் வயிறு.  வயிறு முட்ட சாப்பிடுவது நல்லதல்ல.  அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர்.  மீதி கால் வயிறு காற்றோட்டத்திற்கு.  இப்படி இருந்தால் மட்டுமே சிறப்பு.

மூன்று வேளை கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர்.  வயிறு செரிமானமாகாமல் இருப்பின் அடுத்த வேளை உணவை தவிர்த்து விடலாம்.  அதுவும் இரவு உணவு உண்பதில் எச்சரிக்கை வேண்டும்.  40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு உணவில் மாமிசத்தைத் தவிர்ப்பது  நல்லது.

உலக மக்கள் இருவகை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.  

ஒன்று உயிர் வாழ்வதற்காக உண்பவர்கள். இரண்டாம் வகையினர் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள்.  இந்த இரண்டாம் வகையினர் சாப்பாட்டுப் பிரியர்கள்.  இவர்கள் எப்போதும் எதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். 

தினமும் விருந்தும், கேளிக்கையுமாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே  குறுக்கிக் கொள்கிறார்கள். 

உணவு உண்பதில் ஒரு வரைமுறை வேண்டும்.  ஒரு கட்டுப்பாடு வேண்டும்.  கால இடைவெளி வேண்டும்.

“ஒருவேளை உண்பான் யோகி

இருவேளை உண்பான் போகி

முப்போதும் உண்பான் ரோகி

எப்போதும் உண்பான் துரோகி”

இப்பாட்டிலிருந்து நாம் அறிவது என்ன-

எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால் அவன் தனக்குத்தானே துரோகம் செய்துகொள்கிறான்.  எப்போதும் எதையாவது உண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகிப் போகிறது.  அதன்பின் அதற்கு ஓய்வில்லாமல்  போகிறது.  இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது.  

இதனால் நமக்கு தேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன.  இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது.  அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்து சாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது.    மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை.  இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம் இதுவரை உணரவில்லை.  இனியாவது இதனை பின்பற்றுவோமாக..

நன்றி: ஹெல்த் சாய்ஸ் (01-09-2010)

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

1. ஆரோக்கியம் ஆனந்தம்.
முந்தைய பகுதிகள்

அறிமுகம். 

இயற்கை உணவும் எனது அனுபவமும்.

எனது பெயர் இரதி லோகநாதன். என் வயது 33. நான் இந்தியாவில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி இரண்டு  பெண் குழந்தைகள் 10 மற்றும் 5 வயதில் உள்ளார்கள். நான் அசைவம், பால் மற்றும் பால் பொருட்கள் உண்பவளாக இருந்தேன். எனக்கு வீசிங் (இளைப்பு), உடல் வலி, அதிகமாக வியர்த்தல் மற்றும் அதிகாலையில் தும்மல் முதலிய பிரச்னைகள் இருந்தன. எனது மூத்த மகள் 5 வயதாக இருந்த போது அவளுக்கு நான் தினமும் 3 டம்ளர் பால் கொடுத்து வந்தேன். அவளுக்கு மிகுந்த சத்தான உணவான பாலும், முட்டையும் கொடுப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அவளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மாதம் ஒரு முறையாவது டாக்டரிடம் செல்வேன். 

நாம் மிகச்  சிறந்த உணவு என கூறப்படும் முட்டையும் பாலும் தானே  கொடுக்கிறோம் பிறகு ஏன் அவளுக்கு  அடிக்கடி உடல்நிலை  சரியில்லாமல் போகிறது?  என நான் சிந்திப்பதுண்டு. திரு. மு.அ.அப்பன் அவர்கள் எழுதிய ‘ இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்ற புத்தகத்தில் எனக்கு அதற்கான விடை கிடைத்தது.  

இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் வசித்து வருகிறார். 70 வயதிலும் ஆரோக்கியமாக உள்ளார். அப்புத்தகத்தின் முன்னுரையில் அவர் தனக்கு இளவயதில் தொழுநோய் வந்து கை, கால் அனைத்தும் அழுகிய  நிலையில் பிற மருத்துவம் எதுவும் பயன் தராத போது    தனக்கு இயற்கை உணவு எவ்வாறு  கைகொடுத்தது என்பதை கூறியிருப்பார். இதற்கு  வழிகாட்டியவர் அவருடைய மூத்த சகோதரராகிய அமரர் மூ.இராமகிருஷ்ணர் ஆவார். 

அப்புத்தகத்தில் இயற்கை உணவு உண்டு நோய் குணமானவர்களின்  அனுபவ உரைகள் இடம் பெற்றிருந்தது. அதில் கோமா, வலிப்பு நோய், ஆஸ்துமா, கேன்சர் மற்றும் ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்பட்டு  பிறகு இயற்கை உணவினால் குணமடைந்த  நோயாளிகளின் அனுபவ உரைகளும் அடங்கும். ஆச்சர்யமடைந்த நான் எனது உணவில் அசைவ  உணவை முழுமையாக நிறுத்தினேன். பால் பொருட்கள் கொண்ட உணவையும் குறைக்க ஆரம்பித்தேன். அதே சமயம் இயற்கை உணவையும் சிறிது  சிறிதாக எனது உடலில் சேர்த்த ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக எனது உடலில் இருந்து நோய்கள் எந்த மருந்தும், சிகிச்சையும் இல்லாமல் விலக  ஆரம்பித்தது.

 இயற்கை உணவை பற்றி அறிவதற்கு முன்னால் நான் தினசரி 2 லிட்டர் பால் வாங்குவேன். நான் தற்போது 4 வருடங்களுகு பிறகு  பால் மற்றும் பால் பொருட்களை முழுமையாக நிறுத்திவிட்டேன். தற்போது எங்கள் குடும்பம் ஆரோக்யமாக உள்ளது. முன்னதாக நான் எனது  இளைய மகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக் முட்டையை நிறைய உண்டதால் 75 கிலோவாக ஏறியிருந்த என்னுடைய எடை 51 கிலோவிற்கு  வந்தது. (எந்த வித யோகா மற்றும் உடற்பயிற்சியும் இல்லாமல்). 

தற்போது 1 வேளை மட்டும் சமைத்த உணவு உண்டு வருகிறேன். எனது குணங்களிலும் பல நல்ல மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்கிறது. நான் தற்போது சுறுசுறுப்பாகவும் ந்ல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடனும்  உள்ளேன். வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை இரண்டையும் பணியாள் இல்லாமல் சமாளிக்க முடிகிறது. நான் கம்ப்யூட்டரில் இரவு  தொடர்ந்து கண் விழித்து பணி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நான் இதுவரையில் கண்ணாடி அணியவில்லை. கண் எரிச்சல், கண்ணில் நீர்  வடிதல் போன்ற தொந்தரவுகள் இல்லை.

இந்த கட்டுரையை படிக்க நேரும் அனைவரும் இயற்கை உணவு உண்டு ஆரோக்கியமடைய வேண்டுகிறேன். 
இரதி லோகநாதன், கோவை.
(அடுத்த பகுதியில் தொடரும்)


முந்தைய கட்டுரையைப் படிக்க: ஆரோக்கியம் ஆனந்தம்