ஞாயிறு, 17 அக்டோபர், 2010

1. ஆரோக்கியம் ஆனந்தம்.
முந்தைய பகுதிகள்

அறிமுகம். 

இயற்கை உணவும் எனது அனுபவமும்.

எனது பெயர் இரதி லோகநாதன். என் வயது 33. நான் இந்தியாவில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி இரண்டு  பெண் குழந்தைகள் 10 மற்றும் 5 வயதில் உள்ளார்கள். நான் அசைவம், பால் மற்றும் பால் பொருட்கள் உண்பவளாக இருந்தேன். எனக்கு வீசிங் (இளைப்பு), உடல் வலி, அதிகமாக வியர்த்தல் மற்றும் அதிகாலையில் தும்மல் முதலிய பிரச்னைகள் இருந்தன. எனது மூத்த மகள் 5 வயதாக இருந்த போது அவளுக்கு நான் தினமும் 3 டம்ளர் பால் கொடுத்து வந்தேன். அவளுக்கு மிகுந்த சத்தான உணவான பாலும், முட்டையும் கொடுப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அவளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மாதம் ஒரு முறையாவது டாக்டரிடம் செல்வேன். 

நாம் மிகச்  சிறந்த உணவு என கூறப்படும் முட்டையும் பாலும் தானே  கொடுக்கிறோம் பிறகு ஏன் அவளுக்கு  அடிக்கடி உடல்நிலை  சரியில்லாமல் போகிறது?  என நான் சிந்திப்பதுண்டு. திரு. மு.அ.அப்பன் அவர்கள் எழுதிய ‘ இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்ற புத்தகத்தில் எனக்கு அதற்கான விடை கிடைத்தது.  

இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் வசித்து வருகிறார். 70 வயதிலும் ஆரோக்கியமாக உள்ளார். அப்புத்தகத்தின் முன்னுரையில் அவர் தனக்கு இளவயதில் தொழுநோய் வந்து கை, கால் அனைத்தும் அழுகிய  நிலையில் பிற மருத்துவம் எதுவும் பயன் தராத போது    தனக்கு இயற்கை உணவு எவ்வாறு  கைகொடுத்தது என்பதை கூறியிருப்பார். இதற்கு  வழிகாட்டியவர் அவருடைய மூத்த சகோதரராகிய அமரர் மூ.இராமகிருஷ்ணர் ஆவார். 

அப்புத்தகத்தில் இயற்கை உணவு உண்டு நோய் குணமானவர்களின்  அனுபவ உரைகள் இடம் பெற்றிருந்தது. அதில் கோமா, வலிப்பு நோய், ஆஸ்துமா, கேன்சர் மற்றும் ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்பட்டு  பிறகு இயற்கை உணவினால் குணமடைந்த  நோயாளிகளின் அனுபவ உரைகளும் அடங்கும். ஆச்சர்யமடைந்த நான் எனது உணவில் அசைவ  உணவை முழுமையாக நிறுத்தினேன். பால் பொருட்கள் கொண்ட உணவையும் குறைக்க ஆரம்பித்தேன். அதே சமயம் இயற்கை உணவையும் சிறிது  சிறிதாக எனது உடலில் சேர்த்த ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக எனது உடலில் இருந்து நோய்கள் எந்த மருந்தும், சிகிச்சையும் இல்லாமல் விலக  ஆரம்பித்தது.

 இயற்கை உணவை பற்றி அறிவதற்கு முன்னால் நான் தினசரி 2 லிட்டர் பால் வாங்குவேன். நான் தற்போது 4 வருடங்களுகு பிறகு  பால் மற்றும் பால் பொருட்களை முழுமையாக நிறுத்திவிட்டேன். தற்போது எங்கள் குடும்பம் ஆரோக்யமாக உள்ளது. முன்னதாக நான் எனது  இளைய மகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக் முட்டையை நிறைய உண்டதால் 75 கிலோவாக ஏறியிருந்த என்னுடைய எடை 51 கிலோவிற்கு  வந்தது. (எந்த வித யோகா மற்றும் உடற்பயிற்சியும் இல்லாமல்). 

தற்போது 1 வேளை மட்டும் சமைத்த உணவு உண்டு வருகிறேன். எனது குணங்களிலும் பல நல்ல மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்கிறது. நான் தற்போது சுறுசுறுப்பாகவும் ந்ல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடனும்  உள்ளேன். வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை இரண்டையும் பணியாள் இல்லாமல் சமாளிக்க முடிகிறது. நான் கம்ப்யூட்டரில் இரவு  தொடர்ந்து கண் விழித்து பணி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நான் இதுவரையில் கண்ணாடி அணியவில்லை. கண் எரிச்சல், கண்ணில் நீர்  வடிதல் போன்ற தொந்தரவுகள் இல்லை.

இந்த கட்டுரையை படிக்க நேரும் அனைவரும் இயற்கை உணவு உண்டு ஆரோக்கியமடைய வேண்டுகிறேன். 
இரதி லோகநாதன், கோவை.
(அடுத்த பகுதியில் தொடரும்)


முந்தைய கட்டுரையைப் படிக்க: ஆரோக்கியம் ஆனந்தம்