வியாழன், 29 மார்ச், 2012

சாப்பிடுவது எப்படி?

சாப்பிடுவது எப்படி?
மா.உலகநாதன், திருநீலக்குடி

என்னங்க, இதுகூட எங்களுக்குத் தெரியாதா?பெரிசா சொல்ல வந்தீட்டிங்கன்னு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது! 

ஆனால், நாம தெரிஞ்சு வச்சிருக்கிறதெல்லாம் தெரிஞ்சதா ஆகுமா? 

சாப்பிட வாங்க. அம்மா கூப்பிடறாங்க.

இன்னைக்கி இருக்கிற யந்திர உலகத்தில, மணி பாத்து சாப்பிடுறவங்க அதிகமா? பசி பாத்து சாப்பிடுறவங்க அதிகமா? 

மணியைப் பாத்துக்கிட்டே, நேரமாயிடுச்சி, இருக்கறதைக் குடு, நெறைய வேலை கிடக்குன்னு நின்ன நெலயிலேயே சாப்பிடறவங்க ரொம்பப்பேர்! 

அப்புறம் எப்படி ஆரோக்கியம் கிடைக்கும் ?  அதுனாலதான் இந்த முன்னுரை! 

எனவே ஆரோக்கியத்துக்காக உண்ணுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர் கடைப் பிடிக்கவேண்டிய டிப்ஸ்:
  1. உண்ணும உணவை நன்றாக மென்று கூழாக்கி, உமிழ் நீரோடு  உள் இறக்க வேண்டும். பல்லுக்கு நல்லா வேலைகுடுங்க (ஏன்னா வயத்துல பல் கிடையாதுல்ல!) 
  2. சாப்பிடுவதை ஒரு தவமாக, உணவின் மீது கவனம் வைத்து உண்ண வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்!
  3. எனவே, உணவு உண்பதற்கென சாவகாசமாக நேரம் ஒதுக்கி, குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக சாப்பிடலாமே. 
  4. சோறு இரண்டு பங்கும், நீர் ஒரு பங்கும் உண்ணவேண்டும். காற்றுக்காக கால் பங்கு இடம் காலியாக இருக்க வேண்டும். 
  5. சுவையுள்ள உணவு நிம்மதி, வலிமை, உற்சாகம் ஆகியவற்றைத் தரும். 
  6. வறண்ட உணவும், மிகக் குளிர்ச்சியான உணவும் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. இதனால் செரிமானக் கோளாறு வரலாம். மிகச் சூடான உணவு குடல் வலிமையைக் கெடுக்கும்.
  7. சுறுசுறுப்பு, உற்சாகம், பசி, தாகம் உள்ள நேரங்களில் சாப்பிடுவது உகந்தது. 
  8. உணவு உட்கொள்வதையும், மலம் சிறுநீர் கழிப்பதையும் , கலவியையும் தனிமையில் செய்ய வேண்டும்.இந்த விஷயத்துல காக்கை குணம் வேண்டுமாம். அது என்ன காக்கைக் குணம்? 
காலை எழுந்திருத்தல்,காணாமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல்---சால உற்றாரோடு உண்ணல், உறவாடல், இவ் ஆறும்
கற்றாயோ காக்கைக் குணம்.   (பழம் பாடல்) 
உணவு உண்ணும முறைமைகளைப் பற்றிய மேலும் சில பயனுள்ள குறிப்புகள்:
  • தினந்தோறும்,அறுசுவைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
  • அந்தந்தக் காலங்களில் கிடைக்கும் சுவையுள்ள உணவுகளை அதிகப்படுத்தி கொள்ளலாம். 
  • செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கடினமான உணவு பொருட்களை விலக்க வேண்டும்.  
  • சரி! ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை வேளை உண்ண வேண்டும்? .   
ஒரு போது உண்பவன் யோகி!
இரு வேளை உண்பவன் போகி!!
முப்போதும் உண்பவன் ரோகி!!!
அதற்கு மேலும் சாப்பிடுபவன் துரோகி!
ஏனெனில், அடுத்தவன் உணவையுமல்லவா எடுத்துக்கொள்கிறான் ? நம் முன்னோர்கள் உணவின் குணங்களை அறிந்திருந்தார்கள். அதனால், அவர்கள் உணவை வேண்டும் போது கூட்டியும், வேண்டாத போது குறைத்தும், விலக்கியும் மருந்து போலப் பயன்படுத்தி வந்தனர்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள்)

உண்ணும் போது தவிர்க்க வேண்டிய ஒன்று உண்டு: 
உண்ணும் போது சிலர் ஒரு வாய் சோறு ஒரு வாய் தண்ணீர் எனச் சாப்பிடுவர். இதனால் இரைப்பையில் சுரக்கும் செரிமான நீர் நீர்த்துப் போய், செரிமானம் கெடும். எனவே,சாப்பிடுவதற்கு முன்னரோ அல்லது சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்தோ தான் தண்ணீர் அருந்தவேண்டும். 
  • நம் உடலைச் சோற்றுத்துருத்தி என்பார் பட்டினத்தார்.
  • ஐயம் இட்டு உண்! என்று ஆத்திசூடி சொல்லும். 
  • இக் கருத்தையே, மருந்தே ஆயினும் விருந்தோடு உண்  என்று  கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.
  • வேளாளன்  என்பவன் விருந்திருக்க உண்ணாதவன்! என்ற முதுமொழியும் உண்டு..
பார்த்தீர்களா? உணவைப் பற்றி எப்படியெல்லாம், முன்னோர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். 

திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் பெருந்தீனி குறித்து நிறையவே பேசியுள்ளார். சிலர் அறியாமையின் காரணமாக ,கிடைக்கிறதை எல்லாம் வாரி உள்ளே தள்ளுவார்கள். உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ணவேண்டும். இதையே வள்ளுவப் பெருமானார் "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு" என்று தமது குறள் மொழியாக தருகிறார். ஒருவன் நிரம்ப உண்ண வேண்டும்என்னும் ஆசைக்கு இடங்கொடுக்காமல், வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்குமளவுக்கு குறைத்து உண்டால், அவனுக்கு நோயினால் துன்பம் உண்டாவதில்லை என்பார் வள்ளுவர்.  அக்காலத்தில் மன்னர்கள் மண்கலத்தில் சமைத்து, பொன் கலத்தில் உண்பார்களாம்.

சரி! நேரமாச்சு! சாப்பிடப் போகலாமா? ஆனா, சாப்பிடறதுக்கு முன்னே பசிக்குதான்னு   பாத்துக்குங்க!!

நன்றி:
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய முன்னாள் பயிர் நிபுணர் திரு.சு. வைரவன் அவர்கள்  ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தில் ஆற்றிய உரைக்கு கொஞ்சம் சொந்தச் சரக்கும் சேர்த்து நமது வலைப்பூவுக்கு அளித்திருக்கும் திரு.மா.உலகநாதன், திருநீலக்குடி அவர்களுக்கு என் நன்றி.