புதன், 10 மார்ச், 2010

கூல்டிரிங்ஸ் குடித்தால் உடம்புக்குக் கெடுதி!


”என்ன வெயில்…என்ன வெயில்…அப்பா… வெயில் மண்டையைப் பிளக்குதே” என்றபடி நிழல் தேடி ஒதுங்கி, “அதைக் குடிக்க மாட்டோமா? இதைக் குடிக்க மாட்டோமா?’ என்று பரபரக்கிறவர்கள் அதிகம். கூல்டிரிங்ஸ், இளநீர், மோர், லஸ்ஸி என்று திரவ வடிவில் கிடைப்பதையெல்லாம் குடித்துவிட்டு அதன்பின்னும் தாகம் தணியாமல் தவிப்பவர்கள் பலர். “வெயில் இந்தக் கொளுத்து கொளுத்துதே, ரெண்டு மழை பேஞ்சா எவ்வளவோ நல்லா இருக்கும்’ என்று கோடைமழைக்காகக் கனவு காண்பவர்கள் ஏராளம்.
கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க என்ன செய்வது? என்று மண்டை காய்ந்து நாம் ஒதுங்கிய இடம் சென்னை செயின்ட் தாமஸ் மருத்துவமனை. அங்கு சிறுநீரகவியல் துறை நிபுணரான டாக்டர் பழனி.ரவிச்சந்திரனைச் சந்தித்து நமது கேள்விகளை அள்ளி வீசினோம். அதற்கு அவர் அளித்த பதிலை இங்கே தருகிறோம்.
டாக்டர் பழனி.ரவிச்சந்திரன் மருத்துவம் எவ்வாறு வணிகமயமாகிவிட்டது என்பதை எளிய முறையில் விளக்கும் “பணநல மருத்துவம்’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“”மனித உடல் அடிப்படையில் காரத்தன்மை உள்ளது. அமிலத் தன்மை என்பது இதற்கு நேர்எதிரானது. நமது ரத்தத்தில் காரத் தன்மை இருக்கும். அதில் அமிலத் தன்மை அதிகரிக்கக் கூடாது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஜீரணம் ஆகும் போது ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இந்த அமிலத் தன்மையைக் குறைக்க நமது உடல் மூன்று விதங்களில் செயல்படுகிறது. மூச்சு விடுதலின் மூலமாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி அமிலத் தன்மையைக் குறைக்கலாம். இதற்கு ஆக்சிஜன் நிறைந்த நல்ல காற்று அவசியம். இரண்டாவதாக சிறுநீரின் மூலம் உடலில் சேர்ந்துள்ள அமிலத்தை வெளியேற்றலாம். மூன்றாவதாக வியர்வை மூலமாக அமிலத் தன்மையைக் குறைக்கலாம்.
நல்ல காற்று இப்போது அரிதான பொருளாகிவிட்டது. வாகனங்கள், தொழிற்சாலை புகைகள், கழிவுகளை எரிப்பது போன்றவற்றால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது. நாம் மரங்களை வெட்டிவிட்டு அந்த இடங்களில் வீடுகளைக் கட்டிக்
குடிவந்துவிட்டோம். ஒரு மரம் என்பது ஒரு நுரையீரல் போல. மரங்கள் குறைந்து காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுவதும் குறைந்து விட்டதால் காற்று கெட்டுப் போய் விட்டது.
அடுத்து சிறுநீரிலும், வியர்வையிலும் அமிலம் வெளியாக வேண்டும் என்றால் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். முதலில் எல்லாம் நமது முன்னோர்கள் “சொம்பிலும் லோட்டாவிலும்’ தண்ணீர் குடித்தார்கள். நாம் டம்ளரிலும், அதைவிடச் சிறிய கப்பிலும் தண்ணீர் குடிக்கிறோம்.
வெயில் நேரத்தில் தாகத்தைத் தணித்துக் கொள்ள கூல்டிரிங்ஸ் குடிக்கிறோம். இந்த கூல்டிரிங்ஸில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. உங்கள் பாத்ரூமில் ஒரு பாட்டில் கூல்டிரிங்ûஸக் கொட்டிவிட்டு ஐந்து நிமிடம் கழித்துச் சுத்தம் செய்தால் ஆசிட் ஊற்றிக் கழுவியது போல நன்றாகச் சுத்தமாகிவிடும். இது மிகைப்படுத்திக் கூறப்படுவது அல்ல. எனவே பலரும் குடிப்பதுபோல வெயில் நேரத்தில் கூல்டிரிங்ஸ் குடிப்பதால் தாகம் தணியாது. மேலும் உடலுக்கும் கெடுதி.
மினரல் வாட்டரிலும் அமிலத்தன்மை இருக்கவே செய்கிறது. எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் நமது முன்னோர் செய்தது போல நன்னாரி வேரைப் போட்டு ஊறவைத்து அருந்தலாம். சீரகத் தண்ணீரை அருந்தலாம். புளிப்பில்லாத மோர், இளநீர், பதநீர் போன்றவை வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றவை.
அடுத்து எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்பார்கள். அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்துக்கு அதிக வேலை தருவதாக ஆகாதா? என்று சந்தேகத்தைக் கிளப்புவார்கள். நமது சிறுநீரகங்கள் நாளொன்றுக்கு 30 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் ப்ராசஸ் பண்ணும் திறன் படைத்தவை. எனவே இதய நோய், சிறுநீரக நோய் போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் இல்லாதவர்கள் அவர்களால் குடிக்க முடிந்தவரை தண்ணீர் குடிக்கலாம். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.
தண்ணீர் குறைவாகக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இது ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்துவிட்டதைக் காட்டுகிறது.
அமிலத்தன்மை அதிகரித்தால் உடலில் கால்சியம் கரைந்து வெளியேறும். இதனால் கைகால் வலி, முதுகுவலி, உடல் வலி ஏற்படும்.
அமிலம் வெளியேறுவதற்கு இன்னொரு வழி, வியர்வை. உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் குறைந்துவிட்ட நாளில் வியர்ப்பது குறைவு. இப்போது பல அலுவலகங்களில், வீடுகளில் ஏஸியைப் பயன்படுத்துகிறார்கள். ஏஸி ரூமில் இருக்கும்போது வியர்க்காது. எனவே உடலிலிருந்து அமிலம் வெளியேறுவது குறையும். போதிய தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு
அதிகரிக்கும். பித்தபையில் கல், சிறுநீரகக் கற்கள், உடம்புவலி, முகத்தில் கறுப்பாக ஆதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
நீர்ச்சத்துள்ள பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல நிறமுள்ள பழங்கள், காய்கறிகள் உடலுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் தாது உப்புகள் அதிகம். மிளகாய் காரத்தன்மை உள்ளதால் உடலுக்கு நல்லது. ஆனால் அதை நேரடியாகச் சாப்பிட முடியாது. மோர் மிளகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் புளிப்பு. அமிலத்தன்மை உள்ளது. எனவே மாங்காயை கோடைக்காலத்தில் சாப்பிடக் கூடாது. மாங்காயை அதிலுள்ள புளிப்புப் போகும்படி பதப்படுத்திச் சாப்பிடலாம். ஆனால் மாம்பழத்தைச் சாப்பிடலாம். அதில் வைட்டமின்கள் அதிகம். ஆரஞ்சு, பப்பாளி போன்றவற்றைச் சாப்பிடலாம்.
உடைகளைப் பொறுத்தவரையில் தொளதொளப்பான பருத்தி ஆடைகள் சிறந்தவை. ஜீன்ஸ் அணிந்தால் வியர்வை அதிகமாகி பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புண்டு.
வெயில் காலத்தில் பூசுவதற்கென்று நிறைய சன்ஸ்கிரீன் லோஷன்கள், கிரீம்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அவற்றில் ஸிங்க் ஆக்ûஸடு, டைட்டானிக் ஆக்ûஸடு போன்றவை உள்ளதா எனப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தினால் கெடுதியில்லை. மெழுகு உள்ள கிரீம்கள்தாம் அதிகம் விற்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் வியர்வை தடைசெய்யப்படும். எனவே மெழுகு உள்ள கிரீம்களைத் தவிர்க்க வேண்டும். சில லோஷன்களில், கிரீம்களில் கற்றாழை சேர்க்கப்படுவதாக விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் கலக்கப்படும் கற்றாழையின் அளவு 1 சதவீதம்தான். எனவே அவற்றால் பெரிய அளவுக்குப் பயன்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம். சந்தனத்தைப் பூசிக் கொண்டு வெளியில் செல்ல முடியாது என்பவர்கள், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிட்டு சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.
மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். எத்தனையோ கோடைக் காலங்களை அவர்கள் பார்த்தவர்கள். ஆனால் அவர்கள் இயற்கையைச் சேதப்படுத்தாமல் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். நாம் பின்பற்றுவது மேற்கத்திய வாழ்க்கைமுறை. எல்லாம் வணிகமயமாகிவிட்டதால் லாபத்திற்காக மக்களுக்குத் தீங்குதரும் பலவற்றைத் தயாரித்து நன்றாக விளம்பரம் செய்து விற்கிறார்கள். அதன் கெடுதிகளை அனுபவிப்பது மக்கள்தான்”

நன்றி: http://bsubra.wordpress.com

செவ்வாய், 9 மார்ச், 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு... பகுதி 9

தேவையில்லாத பசி எடுக்கிறதென்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதற்குக் கிடைக்கவில்லை என்று அர்த்தமாகும். உடம்பிற்குத் தேவையானது விட்டமின்களும் தாதுக்களும் என்று புரிந்து கொள்ளாமல் நோயாளி கூடுதலாக மாவுச் சத்து மிகுந்த பண்டங்களைச் சாப்பிட்டால் உடம்பு வழங்கும் சிக்னலை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றாகிறது. அதனால் இந்தப் பசி மீண்டும் மீண்டும் திரும்ப வருகிறது.

இந்தப் பசி இரு வகையானது.

1. உணர்வு மயமான பசி,

2. உடல் ரீதியான பசி.

1. உணர்வுமயமான பசி: நாம் சர்க்கரையும், கொழுப்புச் சத்தும் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பொழுது நம் உடம்பில் செரடோனின் என்ற ஹார்மோன் இருக்கிறது. அது சுரக்கும் பொழுது நமக்கு சந்தோஷம் அதிகரிக்கிறது. இதனால்தான் வருத்தமாக இருப்பவர்கள் அந்த நேரம் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார்கள். இப்படி ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குப் பதிலாக இந்த வருத்தத்திலிருந்து விடுபடுவதற்காக நாம் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது யாரேனும் நண்பரோடு பேசலாம். இப்படி செய்வதாலும் வருத்தம் குறைவதற்கு வாய்ப்புண்டு. பண்டிகை நாட்களிலும், கொண்டாட்டங்கள் நிகழும் நாட்களிலும் மக்கள் அதிகமாகச் சாப்பிடுவதுண்டு. இதற்குப் பரிகாரமாக பண்டிகை நாட்களுக்கு முன்பே 5 நாட்களுக்கு நல்ல சாப்பாட்டை நிறைய சாப்பிட வேண்டும். அப்படி செய்யும் பொழுது பண்டிகை நாளன்று அதிகமாக சாப்பிட முடியாது. மேலும் பண்டிகை நாளுக்கு அடுத்த நாளும் நார்ச்சத்து மிகுந்த உணவுப் பண்டங்களை அதிகம் சாப்பிட்டு, அதே சமயத்தில் நிறைய தண்ணீரும் குடித்தால், பண்டிகையன்று சாப்பிட்டதெல்லாம் சீக்கிரம் வெளியேறிவிடும்.

2. உடல் ரீதியான பசி: ஒருவருடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது சர்க்கரை மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடத் தூண்டுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் வேகமாக ஏறுகிறது. ஆனால் எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ அதே வேகத்தில் பின்னர் இறங்கியும் விடுகிறது. அதற்குப் பரிகாரமாக நிறைய நார்ச்சத்தையும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களையும், ப்ராக்கோலி மற்றும் பழவகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகளை குடிப்பதற்குப் பதிலாக காய்கறி சாற்றை சாப்பிடுவது நல்லது.

நன்றி: www.abolishdiabetes.com

ஞாயிறு, 7 மார்ச், 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு... பகுதி 8

ஊட்டத்திற்காகச் சாப்பிடும் கூடுதல் பண்டங்கள்

இவற்றை சாப்பிடுகின்றவர்களுடைய அடிப்படை உணவு ஊட்டம் மிக்கதாகவும் அவர் நன்றாக உடற்பயிற்சி செய்பவராகவும், இருந்தால்தான் இந்தக் கூடுதல் தின்பண்டங்கள் உதவியாக இருக்கும். அடிப்படை ஊட்டம் போதுமானதாக இல்லாத பொழுது இந்தக் கூடுதல் தின்பண்டங்களால் பயனில்லை.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தால் அவர் முதலில் அந்த நோயை எதிர்க்கக்கூடிய சக்தியைக் கொடுக்கின்ற உணவை உட்கொள்வது நல்லது. அதற்கும் மேல் கூடுதலாக ஊட்டமயமான தின்பண்டங்களை சாப்பிட்டால் பலனிருக்கும். பொதுவாகவே நம்முடைய பிரதான உணவு ஊட்டமயமானதாக இருந்தால் நமக்கு வேண்டிய விட்டமின்களும், தாதுக்களும் அதிலேயே நிறைய கிடைக்கின்றது. அப்பட்சத்தில் நாம் கூடுதலாக சாப்பிடவும் தேவையில்லாமல் போகிறது.

உணவு விருப்பம்
சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் நிறைய கெமிக்கல்ஸ் நிறைந்த மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதால் நமக்குத் தேவையில்லாமல் பசி எடுக்கிறது. இந்த கூடுதல் பசியை அவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தக் கூடுதல் பசி எப்படி உண்டாகிறது என்று பார்ப்போம். ஹார்மோன்களுடைய நார்மல் பேலன்ஸ் கெட்டுப் போவதால் இந்த கூடுதல் பசி வருகிறது. உதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது நோயாளிக்கு பசி எடுக்கிறது. இந்தப் பசியை தவிர்ப்பதற்காக அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிடுகிறார். இதன் காரணமாக தற்காலிகமாக அவருடைய ரத்தத்தில் சக்தி அதிகரிக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது மீண்டும் எனர்ஜி லெவல் குறைகிறது. அவர் மீண்டும் சர்க்கரை சாப்பிட்டால் மீண்டும் இம்மாதிரியேதான் நிகழும். அப்பட்சத்தில் இதற்கு முடிவு இல்லாமல் போகிறது. ஆகவே இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் நோயாளி நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.

(நலம் தொடரும்...)