வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் - இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்.


இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்.

இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல்


கழிவுகளின் தேக்கம்தான் நோய்க்கு காரணம். கழிவுகளை நீக்கினால் ஆரோக்கியம் தோன்றும் என்பது இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை. இயற்கை மருத்துவம் என்பது பஞ்சபூதங்களை கொண்டு சிகிச்சை செய்வதுதான். அது மூலிகை மருத்துவமல்ல; சித்த மருத்துவமல்ல. ஆயுர்வேத மருத்துவமும் அல்ல.. .உடல் நலத்தை கூட்டிக் கொள்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒரே செயல் சரியான உணவு முறையே.. மருந்து சாப்பிடுபவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் மருந்துகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள படி வைத்தியம் செய்து கொள்வதற்கு முன்னர் தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் செய்க. (நூல் ஆசிரியரின் முன்னுரையில் இருந்து)
"உங்க கிட்ட 230 ரூபாய் இருக்கிறது. அதை நீங்கள் செலவு செய்தால் நான் அதற்கு கிட்டத் தட்ட 25% தள்ளுபடி தருகிறேன்" என்றால் ரூ.230/-ஐக் கொண்டு என்ன வாங்குவீர்கள்? நீங்கள் எதைவேண்டுமானாலும் வாங்குங்கள். நான் வேண்டாமென்று சொல்லவில்லை. நீங்கள் அதே கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டால் “நான் ஒரு ‘ஆரோக்கியப் புதையலை’ வாங்குவேன்” என்று சொல்லுவேன். 

இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் என்ற மிக அற்புதமான இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டி நூல் ஒன்றை மின்னியல் பொறியாளர் திரு.ஆ.மெய்யப்பன் அவர்கள் எழுதி அந்த புத்தகத்தை பாப்புலர் பப்ளிகேஷன் நிறுவனத்தார் ரூ.176/-க்கு வெளியிட்டிருக்கிறார்கள்.

இப்போதைக்கு ஆரோக்கியத்தை வாங்கணும்னு டாக்டர்களிடம் போனால் ஐநூறு ரூபாய்க்கு குறையாமல் ஃபீஸ் வாங்குகிறார்கள். பின்னர் பலவித உடற்பரிசோதனைகள், மருந்து செலவு என்று தொடர் செலவுகள். அடுத்த முறை அதே டாக்டரிடம்/பரிசோதனை மையம்/மருந்தகம் போனால் தள்ளுபடி எல்லாம் கிடையாது. எல்லாரிடமும் கால் கடுக்கக் காத்திருந்து விட்டு பின்னர் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டுத் தான் வெளியே வரணும்.

இந்தச் சூழலில் ஓர் அற்புதமான ஆரோக்கியப் புதையலை கண்டடைய உங்களுக்கு கிடைத்திருக்கும் மந்திரச் சாவி தான் இந்த நூல். பயனுள்ள பல விவரங்கள் அடங்கிய 288பக்கங்களில் ரூ.230/- பெறுமானம் உள்ள இந்த அற்புத வழிகாட்டி நூலை வெறும் ரூ.176/-க்கு நூல் அறிமுகச் சலுகையாக பதிப்பகம் உங்களுக்கு தருகிறது.

நூலாசிரியர்: பொறியாளர் அ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G.Diploma in Yoga. நூலாசிரியர் தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் ஒருவரான சிவசைலம் இராமகிருஷ்ணரின் வழி வந்த பல்வேறு இயற்கை நலவாழ்வியல் அறிஞர்களிடம் நெருங்கிப் பழகி இயற்கை நலவாழ்வியல் கலையினை ஐயம் திரிபறக் கற்று தேர்ந்தவர். யோகக் கலையில் ஆசானாக விளங்கும் நூலாசிரியர், நிறைய இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்களை நெறிப்படுத்திய அனுபவம் கொண்டவர். 

இயற்கை நலவாழ்வியல் கருத்துக்களை பரப்புரை செய்ய உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அற்பணித்துச் செயல்படும் நேர்மையாளர். செட்டிநாட்டுக்கே உரித்தான விருந்தோம்பல் பண்பு கொண்டவர்; நோயால் வாடும், வசதியற்ற இயற்கை நல வாழ்வில் ஆர்வமுள்ளோருக்கு கணக்குப் பார்க்காது செலவிடும் புரவலர். 

இத்தனை செய்திகளையும் தெரிந்து வைத்திருந்தாலும் எல்லா முகாம்களிலும் மற்ற முக்கிய பேச்சாளர்கள் நடத்தும் வகுப்பில் முதல் வரிசையில், முதல் மாணாக்கராக அமர்ந்து குறிப்பு எடுத்துக் கொள்ளும் பண்பாளர். 

எழுபதுக்கும் மேல் அகவைகள் கடந்த நிலையிலும் கடினமான யோகாசனங்களை அனாயாசமாக செய்து காட்டும் வல்லுநர். இவரது தொடர்பு எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் நடத்திய முகாமில் கலந்து கொண்ட போது கிடைத்தது. அந்த தொடர்பு எனக்கு இன்றளவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் யோகா வகுப்பில் நான் சேர்ந்த போது அவ்வகுப்பில் நூலாசிரியரும் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். 'ஐயா, நீங்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர். உங்களுக்கு எதற்கு இந்தப் பட்டயப் படிப்பு என்று வினவிய போது அவர் அளித்த பதிலில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் தெரிந்தது. கல்விக்கு வயது கிடையாது. ஆர்வமும், முயற்சியும் தான் என்பதை அன்று நான் அறிந்து கொண்டேன். தொடர்ந்து நான் எம்.எஸ்.சி (யோகா) பயின்ற போது தம்மிடம் உள்ள நல்ல நூல்களையெல்லாம் எனக்குத் தந்து உதவிய பாங்கினை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். நான் தயாரித்த தீசிசுக்கு அவர் அளித்த உதவிகளை எப்படி மறக்க முடியும்? அந்த நாள் முதல் இந்த நாள் வரை அவரது சேவைகளை கண்கூடாக அருகில் இருந்து பார்த்து வருபவன் என்ற வகையில் இந்த நூலை பற்றி அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.
     
இந்த நூலுக்கான செய்திகளை இவர் பல ஆண்டுகளாக திரட்டிச் சேர்த்திருக்கிறார். அதற்கான உதவிகளை செய்தவர்களை எல்லாம் நன்றி மறவாமல் அவர்களை இந்நூலின் துணை ஆசிரியர்களாக கவுரவப்படுத்தி இருக்கிறார். தனது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டங்களிலும் தான் பெற்ற நலவாழ்வியல் அனுபவங்களை, அதற்குக் காரணமானவர்கள் எல்லாரையும் இந்தப் புத்தகத்தில் மறவாமல் நினைவு கூர்ந்திருக்கும் இவரது நேர்மைப் பாங்கு போற்றற்குரியது.

இந்த நூலின் அனைத்துப் பக்கங்களில் உள்ள அரிய பல செய்திகளை உள்வாங்கி, அவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்தினாலே போதும். வேறு எந்த நூலையும் நீங்கள் கற்க வேண்டியதில்லை என்ற உறுதியினை நான் உங்களுக்கு அளிக்கிறேன். ஏனெனில் நூலாசிரியர் மட்டுமின்றி, இந்நூலின் மற்ற ஆசிரியர்களையும் நான் நேரில் கண்டு பழகி இருக்கிறேன். அவர்களிடம் நலவாழ்வியல் பயிற்சிகளைப் பெற்றிருக்கிறேன். துறை வல்லுனர்களை இந்த நூலின் ஆக்கத்தில் ஈடுபடுத்தி இந்த நூலில் செழுமை, கருத்து வளம் மேம்பட உழைத்திருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. தமிழகம் எங்கும் இயற்கை நலவாழ்வு முகாம்கள் நடக்கும் இடம், நடத்துபவர்களின் பெயர்கள், அமைப்புகளின் முகவரி, மற்றும் நலவாழ்வியல் அறிஞர்களின் முகவரிகள், தொடர்பு எண்கள் போன்ற செய்திகள் அனைத்தும் ஒரு நூலுக்குள்ளேயே ஒருங்கமைந்து இருப்பது உங்கள் வாழ்நாள் முழுதும் பயன் அளிக்கவல்லவை. 

இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் உங்கள் வாழ்க்கைக்கு நலம் சேர்க்கும் பக்கங்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். நூலை முழுதும் ஊன்றிப் படித்து ஒவ்வொரு நடைமுறைகளையும் முயன்று பின்பற்றினால், அதன் பின்னர் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது. இந்தச் செய்திகளை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களை நலவாழ்வுக்கு இட்டுச் செல்ல, நீங்களும் ஒரு நலவாழ்வியல் ஆலோசகராக சேவை செய்ய இந்த புத்தகம் உதவும்... மேலும் மற்றவர்களுக்கு இந்த நல்லதொரு அற்புதப் புதையலைப் பரிசளிப்பதின் ஒரு நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நீங்களும் பங்கெடுக்கும் ஒரு அற்புத நல்வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.  

நூல் விவரம்:

தலைப்பு: இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல்

பக்கங்கள்: 288 (தரமான அச்சுக் கோர்ப்பு நேர்த்தியான கட்டுமானம்).

61 தலைப்புக்களில் அரிய செய்திகள்.

பதிப்பாசிரியர்; வி.சு.வள்ளுவன்

நூல் வெளியீடு/விற்பனையாளர்: 
பாப்புலர் பப்ளிகேஷன்ஸ், 
10/3, எத்திராஜ் தெரு, 
பத்மநாப நகர், 
சூளை மேடு, 
சென்னை – 94,

Mobile No.9787555182/9566063452
இது ஒரு சேவைச் செய்தி.

இயற்கை நல வாழ்வியல் ஆர்வலர்களின் நலவாழ்வுக்காக தொடர் சேவையில்... 

அஷ்வின்ஜி@ A.T.Hariharan, M.Sc (Yoga)
வாழி நலம் சூழ..