புதன், 2 மார்ச், 2011

7. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் 
 
 பகுதி ஒன்று.

எது மனிதனின் உணவு?
 
அமரர் ம.கி.பாண்டுரங்கனார்.

இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை பண்டைய ரிஷிகளும், சித்தர்களும் நமக்கு போதித்து அரும்பெரும் நூல்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். 
 
நவீன காலத்தில் என்று பார்த்தால், நம் நாடு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னதாக தமிழ் நாட்டில் பல அறிஞர்கள் பரப்பினார்கள். 
 
அமரர் பிக்ஷு ஸ்வாமிகள், ம.கி.பாண்டுரங்கனார், புதுக்கோட்டை டாக்டர் லக்ஷ்மண சர்மா போன்ற ஆன்றோர்கள் இந்த வகையில் இயற்கை நலவாழ்வியலுக்கு  மகத்தான சேவை செய்திருக்கிறார்கள். 
 
மேற்கத்திய நாகரிகம் அந்த கால கட்டங்களிலேயே தனது விஷ விதைகளை தூவத் தொடங்கி விட்டது. அதன் தீய பலன்களை இப்போது நாம் அறுவடை செய்து வருகிறோம். 
 
நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இயற்கை நலவாழ்வியல் பற்றிய விழிப்புணர்வை போதித்த மகான்களில் ஒருவரான அமரர் ம.கி.பாண்டுரங்கன் 01-01-1901-ல் பிறந்தவர். தமிழாசிரியராக இருந்த இவர் சுதந்திரப் போராட்ட வீரராக பலமுறை சிறை சென்றவர். அவரது துணைவியாரும் அவரோடு சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.  தமிழ்ப் பெரியார் திரு.வி.க, கவியோகி சுத்தானந்த பாராதியார் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களான மகாத்மா காந்தி போன்றோரின் நல்லெண்ணத்துக்கு பாத்திரமானவர் அமரர் ம.கி.பா அவர்கள்.  இயற்கை நலவாழ்வியல் முறைகளை தமது வாழ்க்கை முறையாக பின்பற்றி பலரையும் வாழ வைத்த, வழிகாட்டிய அமரர் சிவசைலம் மு.ராமகிருட்டிணன்  அவர்களை உருவாக்கிய பெருமை அமரர் ம.கி.பா அவர்களையே சேரும்.  தண்டரைப்பேட்டை ஸ்ரீராமுலு அவர்கள் அமரர் ம.கி.பா மற்றும் மு.ரா இருவரோடும் நெருங்கிப் பழகியவர். இன்றும் தண்டரைபேட்டை (மதுராந்தகம் அருகே)யில் இயற்கை நலவாழ்வு மையத்தை நடத்தி வருபவர். ''மகத்தான மனிதர் ம.கி.பா'' எனும் நூலில் அமர ம.கி. பாண்டுரங்கத்தின் வாழ்க்கை வரலாறை எழுதி இருக்கிறார். அந்நூலைப் பற்றி பிறகு சொல்கிறேன். 
 
இன்று நாம் எடுத்துக் கொண்டிருக்கும் நூல் அமரர் ம.கி.பா அவர்களின் ''எது மனிதனின் உணவு?" எனும் ஆராய்ச்சி நூல். தமிழில் மூன்று  பாகங்களாக வெளியிடப் பட்டிருக்கும் இந்நூல் ஒரு அரிய வகை நூலாகும். பதிப்பில் இப்போது இல்லை என்ற வகையில் ஒரு சிலரிடமே கிடைக்கும் இந்நூல் எனக்கும் கிடைத்தது நான் செய்த பெரும்பேறு என்று தான் சொல்லவேண்டும். ஒரு இயற்கை நலவாழ்வியல் முகாமின் போது ஐயா ஸ்ரீராமுலு (தண்டரைபேட்டை) அவர்களிடம் இந்த தொகுதிகளையும், ம.கி.பா அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் வாங்கினேன்.

ம.கி.பா அவர்களின் ''Man's Food Unveiled" என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கமே ''எது மனிதனின் உணவு?" என்னும் இந்த அற்புதமான ஆராய்ச்சி நூல்.
 
இந்த  நூலைப் பற்றி திரு ம.கி.பா அவர்கள், ''இது மாறா இயற்கைத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆராய்ச்சி நூல்'' என்கிறார்.

மேலும், "பெருமதி கொண்டு ஆராய்ந்தும் முடிவுதெரியாத அகிலமதை  முன்பின் அறியாத குறுமதி கொண்டு ஆராய முற்பட்டேன். பெரியோர் நிற்பவெவை கழிபவெவை காண்பர். நலம் வளர." என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார்.
 
இந்நூலுக்கு  அணிந்துரை வழங்கி இருக்கும் திரு.வி.க அவர்கள், "உயிர்கள் பெரிதும் இயற்கையோடு இயைந்து வாழாது அதனின்றும்வழுக்கிச் செயற்கைச் சேற்றில் வீழ்ந்து நெளிகின்றன. அதனால் உயிர்கட்குப் பலதிற நோய்கள் உண்டாகின்றன. எல்லா நோய்களுக்கும் பிறப்பிடம் மலச்சிக்கல் என்பது கவனிக்கத் தக்கது. 
 
இந்நூலின்  கண் நோயுறுதற்குக் காரணமும், நோயைப் போக்குதற்குரிய வழிகளும், இயற்கை முறையிலேயே விளக்கப்பட்டிருக்கின்றன. உடல் நலனுக்குரிய உணவுப் பொருட்கள் ஆராய்ச்சி முறையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
 
இந் நன்நூலை யாத்த திரு. ம.கி.பாண்டுரங்கனார்  முன்னே தேசத் தொண்டாற்றிப் பலமுறை சிறை சென்றவர். அவர் இப்போது இயற்கை நூல்களை ஆய்ந்து, இயற்கையோடு இயைந்து, தாமே வாழ்ந்து அதனால் தாம் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறுதல் வேண்டுமென்று மேலும் பல நூல்களை எழுதி தொண்டாற்றி வருகிறார். இத்தகைய தொண்டே இதுபோழ்து நாட்டிற்கு பெரிதும் வேண்டற்பாலது. பல்லாயிரம் இயற்கை பாண்டுரங்கனார் பெருக நாட்டகத்தே உரிமை மனம் கமழும். நாட்டில் புத்தர், திருவள்ளுவர் போன்றோர் தோன்றுவர். பொருந்திய தொண்டு செய்யப் புகுந்த நண்பர் பாண்டுரங்கனாருக்கு எனது நன்றி உரியதாகுக." என்று கூறுகிறார்:

யோகசமாஜ நிறுவனர் கவியோகி சுத்தானந்த பாரதியாரும் இந்த அருமையான நூலுக்கு அணிந்துரை செய்திருக்கிறார். அவர் கூறுகிறார்: "எது மனிதனின் உணவு?" இவரது  அரிய ஆராய்ச்சி நூல். பொறுமையாக படித்து நின்றால் உணவோழுக்கத்தலேயே நல்வாழ்வு பெறலாம். பாண்டுரங்கனார், தற்கால விஞ்ஞான அறிஞர் நூல்களையெல்லாம் அலசிப் பிழிந்து, சிந்தித்துப் பயின்று பார்த்து தமக்கென உணவு முறை வகுத்துக் கொண்டவர். அம்முறைப் படி வாழ நல்வாழ்வு நிலையம் நாட்டினார். அது ஆழ்வார்குறிச்சிக்கருகே சிவசைலத்தில் 33 ஏக்கர் நிலத்தில் அமைந்த சோலை மலைக்கருகே உள்ளது. இங்கே இவருடன் திரு.இராமகிருஷ்ணன் முதலியோர் இயல்வழி வாழுகின்றனர். மேற்கும் கிழக்கும் இந்த நல்வாழ்வைப் பயில இங்கே கூடுகின்றனர்.
 
நல்வாழ்வுத் திருவாளர் தேங்காய் பழமே உண்டு திருவுடன் வாழ்கின்றனர். உப்புப் புளி மிளகாய்ப் பேச்சே இல்லை! நோய் அந்தப் பக்கமே அணுகுவதில்லை; நோயாளர் வந்தால் அந்தத் தூய காற்றுப் பட்டதும் தூயாளராகின்றனர். 
 
இந்த நூலில் அரிய பொருட் செறிவுள்ளது. சிந்தனைக்கினிய நூல், இயற்கை உணவின் ஏற்றம், உணவு விஞ்ஞானம், பேரறிஞர் கருத்தும், ஆராய்ச்சியும், உணவுப் பாகுபாடு, உணவுப் பகுத்தறிவு, உணவின் அமைப்பு, சமைப்பு, நச்சுப் பொருட்களால் உண்டாகும் தீமை, மருந்தின் மாயம், மாந்தர் மதிமயக்கம் இவையெல்லாம் பல அறிஞர் கோட்பாடுகளுடன் இந்நூல் உணர்த்தும்.

பச்சையுனவுகள், கிழங்குகள், பச்சடிகள், தேங்காய், தக்காளி, கீரை வகைகள், மாங்காய், கொத்துமல்லி, பிஞ்சுக் காய்கறிகள், கனிகள், எலுமிச்சஞ்சாறு, துளசி, அவல், பேரீச்சை, திராட்சை, இளநீர் சேர்ந்த உணவு  தயாரிக்கும் முறை, எல்லாம் அனுபவித்துச் சொல்லுகிறார் பாண்டுரங்கனார்; படித்து பயன் பெறுக!" என்கிறார் கவி யோகி.

இயற்கை நலவாழ்வியல் பற்றிய இந்த அரிய நூலைப்  பற்றிய மதிப்புரை அடுத்த பதிவில் தொடரும்...

வாழி நலம் சூழ..

அஷ்வின்ஜி.