புதன், 20 அக்டோபர், 2010

யோகாவால் இளமையோடு வலம் வரும் 80 வயது இளைஞர் பயிற்சி

கிருஷ்ணகிரி: யோகா மற்றும் கட்டுப்பாடான உணவு பழக்க முறை காரணமாக தனக்கு வந்த ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய்களை விரட்டி 80 வயதிலும் இளைஞர் போல் கிருஷ்ணகிரி சேர்ந்த முதியவர் வலம் வருகிறார்.கால சக்கரத்தின் வேகத்தில் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் வேலைக்கு செல்வோர் தங்கள் கால்களில் சக்கரத்தை கட்டி கொண்டது போல் பரபரப்புடன் காலை முதல் இரவு வரையில் உள்ளனர். வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பணி சுமை முதல் பல்வேறு காரணங்களால் டென்ஷன் அடைந்து, வீட்டுக்கு திரும்பும் போது, ஓய்வை நாடி செல்கின்றனர்.

இந்த அவசரமான காலத்தில் உணவு பழக்கம் முதல் பல்வேறு பழக்க, வழக்கங்கள் இளைஞர்கள் கூட வயது முதியவர் போல் வலம் வரத்துவங்கி விட்டனர். பல்வேறு நோய்களும் நம்மை சுற்றி வரத்துவங்கி விட்டது.கிருஷ்ணகிரியில் 80 வயது முதியவர் தினம் யோகா, உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு பழக்க, வழக்கங்கள் மூலம் தனக்கு வந்த மிகப்பெரிய கேன்சர் நோயை  விரட்டி தற்போது, இளைஞர் போல் வலம் வருகின்றனர்.கிருஷ்ணகிரி சப்ஜெயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் பல்ராம் சிங் (80). வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருக்கிறார். இவர் தன் 25 வயது வயதில் யோகா செய்ய துவங்கினார். எந்த பணிகள் இருந்தாலும் தினம் யோகா செய்வதை நிறுத்தாமல் இன்று வரையில் தொடர்ந்து செய்து வருகிறார்.இவரது மனைவி பரிமளாபாய். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் ஒரு மகனும் உள்ளனர். மனைவி  ஐந்தாண்டுக்கு முன் இறந்து விட்டார். இவரது இரு மகள்களுக்கும் திருமணமாகி கணவர் வீட்டோடு உள்ளனர். மகன் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். தற்போது, கிருஷ்ணகிரியில் தனியாக வசித்து வரும் பல்ராம்சிங் தன்னம்பிக்கையோடு தனது வேலைகளை செய்து யாருக்கு இடையூறு இல்லாமல் இளைஞர் போல் வலம் வருகிறார்.

பல்ராம்சிங் கூறியதாவது:நான் 25 வயதில் இருந்து யோகா செய்து வருகின்றேன். யோகா மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை என் பயிற்சியின் மூலம் அறிந்து கொண்டேன், கடந்த 1992ம் ஆண்டு எனக்கு ஆஸ்துமா தாக்கியது. இதற்காக நான் மூச்சுபயிற்சி தினம் காலை, மாலையில் எடுத்தேன் ஆஸ்துமா குணமானது.கடந்த 2000ம் ஆண்டில் எனக்கு வயிற்றில் கேன்சர் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்த நிலையில், வயிற்றை சுருக்கும் யோகாசனங்கள், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடித்தேன். சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் கேன்சர் குறித்து பரிசோதனை செய்த போது, கேன்சர் குணமானது உறுதி செய்யப்பட்டது. தினம் காலையில் இரண்டு மணி நேரம் யோகாசனம் செய்து வருகிறேன். குறிப்பாக யோக நித்திரை, யாக பாத ஆசனம், சிரசாசனம், அஸ்வினி ருத்ராசனம், மயிலாசனம், கோமுக கூர்மாசனம், பத்மாசனம், சர்வாங்காசனம் ஆகிய ஆசனங்களை தவறாமல் செய்து வருகிறேன்.

வாரத்தில் இரு முறை 30 கி.மீ., சைக்களில் பயணம் செய்கிறேன்.இளைஞர்களுக்கு யோகா இலவசமாக கற்றுக்கொடுக்க நினைத்தாலும் கடுமையான யோகாசனங்களை செய்ய முடியாமல் பாதியில் இளைஞர்கள் நின்று விடுகினறனர். தற்போதுள்ள கால சூழ்நிலையில், பணி சுமை ஆகியவற்றை சமாளிக்க எந்த வயதினரும் யோகாசனம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார். பலராம்சிங் காலையில் இரு இட்லி, மதியம் ஒரு கப் சாதம், இரவு இரண்டு சப்பாத்தி ஆகியவற்றை உணவு பழக்கமாக வைத்துள்ளார்.

டாக்டர்கள் கருத்து என்ன?கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல டாக்டர்கள் கூறுகையில்,"கேன்சர் நோய் மனிதனை தாக்கிவிட்டால் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். யோகாசனம் மூலம் கேன்சர் நோயை முற்றிலுமாக சரிசெய்ய முடியும் என்று கூற முடியாது. மருத்துவ துறையில் இது போன்று எப்போதாவது அதிசயங்கள் நிகழும்' என்றார்.சென்னையை சேர்ந்த பிரபல யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் கூறியதாவது:கேன்சர் நோய் தாக்கியவர்கள் தொடர்ந்து யோகாசனம் செய்தால் நோயை முற்றிலும் சரி செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு அவர்கள் செய்யும் யோகாசனம் மட்டுமே கை கொடுக்காது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள், விரதம் இருப்பது போன்ற செயல்களும் கேன்சர் நோயை சரிசெய்ய உதவிகரமாக இருக்கும். மும்பையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் கேன்சர் நோய் வந்தவர்களை தங்க வைத்து அவர்களை யோகாசனம் செய்ய வைத்து நோயை குணப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர் . இதற்கு நோய் தாக்கியவர்களை கடுமையான உணவு பழக்க வழக்கம் மற்றும் விரதங்கள் இருக்க வைக்கின்றனர், என்றார்.
நன்றி: தினமலர் (25=07-2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக