ஞாயிறு, 19 ஜூன், 2011

9. கனி இருப்ப...பெருகமணி இயற்கை நலவாழ்வியல் முகாம்.


அன்பர்களுக்கு வணக்கம்.

சில வாரங்களாக உங்களிடையே தொடர்ந்து வர இயலாமல் போனமைக்கும், உங்களை காக்க வைத்தமைக்கும் என்னை  மன்னியுங்கள்.

உங்கள் ஆதரவு, அன்பு, ஆசிகளுடன் எனது எம்.எஸ்சி (யோகா) தேர்வுகளையும், ப்ராஜெக்ட்களையும், தீசிசையும் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டேன். உங்களுக்கு என் இதய நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இன்னும் நிறைய நலவாழ்வுச் செய்திகளை உங்களிடையே பகிர்ந்து கொள்ள எனது கல்விப் பயணம் உதவி இருக்கிறது. நான் கற்றுக் கொண்டவற்றை வரும் நாட்களில்  உங்களிடையே அவற்றை பகிர்ந்து கொள்வேன்.

தமிழகத்தைச் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் மிக மிக முக்கியமாக கருதப்படுபவர்கள் அமரர் பிக்ஷு ஸ்வாமிகள், அமரர் ம.கி.பாண்டுரங்கனார், அமரர்  மூ.ராமகிருஷ்ணன் போன்றோர்கள் ஆவர்.

அவர்களிடம் அணுக்கத் தொண்டர்களாக குருகுலவாசிகளாக இருந்து நலவாழ்வுப் பாடங்களைப் பயின்றவற்றை தற்சமயம் வாழ்ந்து காட்டிக் கொண்டே வழிகாட்டிகளாக செயல்பட்டு வரும் ஆசான்கள் திருவாளர்கள் குலசேகரன்பட்டினம் மூ.ஆனையப்பன் (இவர் சிவசைலம் அமரர் மூ.ராமகிருஷ்ணன் அவர்களின் இளவல்).
சுவாமி நாகலிங்கனார், ஆடுதுறை இர. இராமலிங்கம்,  யோகா ஆசான் தி.ஆ.கிருஷ்ணன், தண்டரைப்பேட்டை ஸ்ரீராமுலு, சென்னை யோகா ஆசிரியர் மற்றும் இயற்கை நலவாழ்வியல் நெறியாளர் அ.மெய்யப்பன்  போன்ற பல ஆசான்களிடம் நேரடியாகப் பாடம் பயில எனக்கு தொடர் வாய்ப்பு கிடைத்து வருவது என் முன்னோர் செய்த நற்பலன்களே காரணம்.

அந்த வகையில் மேலே குறிப்பிட்ட பெரும்பான்மையான முன்னோடிகளிடம் நான் பெருகமணி முகாமில் பயின்றவற்றையும், கடந்த இருபது ஆண்டு காலமாக சேகரித்து வைத்திருக்கும் இயற்கை நலவாழ்வியல் செய்திகளையும் இனி ஒவ்வொரு வாரமும் தவறாமல் உங்களோடு பகிர்ந்து கொள்வேன். 

திரு மூ.ஆ. அப்பன் எழுதிய ''நோயின்றி வாழ'' என்னும் கட்டுரையை இங்கே வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.

நோயின்றி வாழ...
மூ.ஆ.அப்பன்

இயற்கையில் படைக்கப்பட்ட மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் இயற்கையாக கிடைக்கக் கூடிய உணவுகளை உட்கொண்டு, இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்வதால், அவ்வுயிரினங்களுக்கு மூளை நோய், கண் நோய், செவி நோய், இதய நோய், சிறுநீரக நோய், தொழு நோய், வாதம், காசம், ஆஸ்துமா, ஆட்கொல்லி புற்று நோய், எயிட்ஸ், எலும்பு முறிவு மற்றும் எவ்வித நோயுமின்றி நரை, திரை, மூப்பு இன்றி உடல், உள  ஆரோக்கியமிகுந்து  வாழ்கின்றன. எடுத்துக் காடாக, பறவைகள் தானியங்களை பச்சையாக உண்கின்றன. விலங்கினங்கள் புல், இலை, தழை 
மற்றும் பச்சைக் காய்கறிகளை உண்கின்றன. மண்புழுக்கள் மண்ணையே உணவாக உண்ணுகிறது.

பரிணாம வளர்ச்சியில் உயிரினங்களில் உயர்ந்த உயிரினமான மனிதனோ, தனக்குரிய இயற்கை உணவாக கொட்டைப் பருப்புகளையும், பழவகைகளையும் உண்ணாமல்,பறவையினங்களின் உணவான  தானியங்களையும்,விலங்கினங்களின் உணவான இலைகளையும்,காய்கறிகளையும், சமைத்து உண்பதால்தான் எண்ணற்ற உடல், உள நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுகின்றான். மனிதனது எண்ணற்ற நோய்களுக்கு, எண்ணற்ற மருந்துகள், மருத்துவமனைகள்  இருந்தும் அவற்றை முழுமையாக நீக்கி கொள்ள முடியாது, திசை மாறிய பறவையைப் போல மனிதன் திணறுகின்றான்.

இயற்கை உணவு.
ஆப்பிளை விட தேங்காய் மிகவும் உன்னதமான உணவு.

மனிதனுடைய அனைத்து உடல், உள நோய்களுக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து சிக்கல்களுக்கும் காரணம், சமைத்து உண்ணும் பழக்கம் தான்.எனவே மனிதனின் அனைத்து பிணிகளிலிருந்தும் குணம் பெறவும், பிணிகள் வராமலும், நோயின்றி வாழவும் விரும்பினால் அவன் தனது உணவாக கொட்டைப் பருப்புகள் (தேங்காய், முந்திரி, வால்நட், அக்ரூட், பாதம், பிஸ்தா போன்றவை), பழ வகைகள் (வாழை, மா, பலா, ஆப்பிள், பப்பாளி, சீதா, ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி மற்றும் இதர பழங்கள்), மற்றும் பச்சையாக உண்ணக் கூடிய காய்கறிகளுடன் கூடிய பழவகைகள், முளை விட்ட தானியங்களுடன் கூடிய பழவகைகள் என இயற்கைக்கு மாறுபாடு இல்லாத உணவு வகைகளை பசித்த போதெல்லாம் உண்டு வாழ முயலுதே உயரிய இயற்கை நெறியாகும்.

எனவே தான் பொய்யாமொழிப் புலவரான திருவள்ளுவரும்,  "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு" எனவும், "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்" என்றெல்லாம் மானிடருக்கு இயற்கை ஆரோக்கிய நெறியை உணர்த்தியுள்ளார்.

சமைத்த உணவின் தீமைகள் என்னென்ன? இயற்கை உணவுகளை எவ்வாறு தேர்ந்தெடுத்து உண்பது? என்பதை வருகிற தொடரில் காண்போம்.

(தொடரும்) 

தொடர்ந்து படித்து, பின்னூட்டம் தந்து வரும் அன்பர்களுக்கு என் இதய நன்றி.

அஷ்வின்ஜி.
வாழி நலம் சூழ...