ஞாயிறு, 21 மார்ச், 2010

பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க!

அன்பர்களே. அமெரிக்க மோகத்தில் மேல்நாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு உடல் நலத்தை இந்தியர்களாகிய நாம் கெடுத்துக் கொண்டு வருகிறோம்.
ஆனால் அமெரிக்கர்கள் நமது பாரம்பரிய உணவு வழக்கங்களே சிறந்தவை என்று இந்திய உணவு முறைகளை பின்பற்ற தொடங்கி விட்டார்கள். அவர்களது வியாபாரம் தடை படாமல் இருக்க பெப்சி, கோக், லேய்ஸ், குர்கூரே மற்றும் பர்கர், பீட்சா போன்றவைகளை நம்மிடையே மார்க்கெட் செய்கிறார்கள். கீழே வரும் கட்டுரை உண்மை நிலையை விளக்குகிறது.
====================================================

அமெரிக்காவில், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும், 'பர்கர்' வகை தான், 'ஹாட் டாக்ஸ்' என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிக்கவும், ஒபிசிட்டி என்று உடல் எடை அதிகரிப்பதற்கும் இந்த சிக்கன், மட்டன் பர்கர் தான் காரணம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்த பின், இப்போது குழந்தைகளை இதன் பிடியில் இருந்து மீட்க பெற்றோர் போராடி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது, மதிய வேளையில் சாப்பிடும் உணவுகளில் அதிக கொலஸ்ட்ரால், உறைந்த கொழுப்பு உள்ள உணவு வகைகள் டிபன் பாக்சில் அதிகம் இடம் பிடிக்கின்றன; போதாக் குறைக்கு, 'ஹாட்டாக்ஸ்' பர்கரையும் குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவதால், பள்ளிப் பருவத்திலேயே ஒபிசிட்டிக்கு ஆளாகி விடும் ஆபத்து ஏற்படுகிறது; அதனால், புரோட்டீன், நார்ச்சத்துள்ள உணவுகளுக்கு மாற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதன் விளைவு, இப்போது அமெரிக்கர்கள் பலரும், நம்மைப் போல காய்கறி, பழங்களுக்கு மாறி வருகின்றனர்; கேக், ஐஸ்கிரீம், பர்கர், பிட்சா, கூல் டிரிங்ஸ்களை குறைத்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கான சத்துணவுகளை பட்டியலிட்டுள்ளது அமெரிக்க சுகாதார நலத்துறை. அதில் உள்ளவை—

* அரிசி, கோதுமை உட்பட தானிய வகை உணவு தினமும் முக்கியம்.
* சுகாதாரமான நொறுக்குத்தீனி பாப் கார்ன்.
* கேரட், வெள்ளரி, தக்காளி,வெங்காயம் கொண்டு தயாரிக்கப்பட்ட வெஜ் சாலட்.
* குழந்தைகளாக இருந்தால் பிசைந்த உருளைக்கிழங்கு உணவு.
* திராட்சை, பாதாம் உட்பட உலர்ந்த பழங்கள்.
* பழங்கள் அல்லது பழச்சாறுகள்.
* மீன், முட்டை, பால்.
* புரோட்டீன் தரும் சோயாபீன்ஸ்.
*வேர்க்கடலை போன்ற கடலை வகைகள்.
* பசலைக்கீரை உட்பட கீரை வகைகள்.


அமெரிக்காவில் உள்ள சராசரி மக்கள், தங்கள் வாழ்க்கை முறையை பல வகையில் மாற்றி வருகின்றனர். முந்தைய அதிபர் கிளின்டன், இந்தியா வந்தபோது, நம் திருமண, குடும்ப கலாச்சாரத்தை பார்த்து வியந்தார்.

அதுபோல, 'நான் ஒரு மகளை பெற்ற தந்தையாக கவலைப்படுகிறேன்; அவளை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்' என்று சமீபத்திய மாஜி அதிபர் புஷ் , இந்தியா வந்தபோது கூறினார்.

இப்படி அதிபர்கள் மட்டுமல்ல, சாதாரண அமெரிக்கர்களும், இந்தியாவை பார்த்து தான் தங்களை மாற்றி வருகின்றனர். குறிப்பாக, சத்துணவுகள் என்றால், இந்தியாவின் உணவுப்பழக்கம் தான் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் உணர்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் பல ஆண்டாக கொடிகட்டிப் பறந்த ஹாட் டாக்ஸ் என்ற பர்கர் உணவு வகை, இப்போது குட்டீஸ்களின் லஞ்ச் பாக்சில் இடம் பெறுவதில்லை. அதற்கு பதிலாக, பழங்கள் தான் இடம் பெறுகின்றன.
- எஸ்.ஏ.குருராஜ்
(நன்றி: தினமலர் மார்ச் 20,2010,12:56 IST)
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக