புதன், 24 மார்ச், 2010

இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - 1

இயற்கை மருத்துவம்
(தத்துவங்களும் செய்முறைகளும்)
- மகரிஷி க. அருணாசலம்

நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கென அமைந்தது. உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் உடம்பைப் போல மனித உடம்பும் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும் தன்மையது. நிலையற்ற தன் இயல்பைக் கண்ட மெய் ஞானியர் சிலரும், சித்தர்கள் பலரும் இதனை இழிவாகவே கருதியுள்ளனர். சைவ சமயக்குரவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் இதனை,

''பொத்தை யூன்கவர் புழுப்பொதிந்துளுத்தகம்
பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதி நின்றிடர் கடற்
கழித்தலைப் படுவேனை.''

என்று பாடுகின்றார். பிறரும் இதனைப் ‘புன்புலால் யாக்கை’ என்றும் காற்றடைத்த பை என்றும் கருதி அலட்சியம் செய்துள்ளனர். திருமூலர் போன்ற யோகியர் கூட ‘உடம்பினை முன்னம் இழுக்கென்றி'ருந்திருக்கின்றனர். அவர்கள் இவ்வுடம்புள்ளே ‘உத்தமன்’ இருப்பதைக் கண்ட பின்னரே 'உடம்பினை ஓம்பும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்து'ள்ளனர். ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பது இவர்கள் கண்ட உண்மை. 'ஊன் உடம்பு ஆலயம்' இதனை உரிய வகையில் போற்றிப் பேண வேண்டுமென்பது இவர்களது உறுதியான முடிவு.

மனித உடல் அற்புதமான இயந்திரம். இது புரதம், மாவுப் பொருள், சர்க்கரை, கொழுப்பு, தாது உப்புக்கள், தண்ணீர் முதலியவைகளாலும் ஓரளவு பலவித வைட்டமின்கள் சேர்க்கையாலும் ஆனது என்று புறக்கருவிகள் கொண்டு ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இந்தப் பொருள்கள் ரசாயன முறையில் கூடுவதாலேயே உயிரும் தோன்றுகிறது. அதற்கு தனியே இருப்புக் கிடையாது என்பது இவர்களது கூற்று. மெய்ஞானியர்களோ இதற்கு மாறாக இப்பொருள்களைக் கூட்டுவதே உயிர்தான் இவ்வுயிரைப் பலரும் பல பெயரிட்டு அழைக்கின்றனர். ஜீவன் என்றும், ஆத்மா என்றும், பிராணசக்தி என்றும் பலர் பலவாறாகக் கூறுகின்றனர். உடல் பஞ்ச பூதங்களாலானது என்பது இவர்கள் கண்டது பஞ்சபூதங்களே புரதம், சர்க்கரைப்பொருள், மாவுப் பொருள், கொழுப்பு, தாதுப்பொருள், வைட்டமின் முதலியவையாக உருவெடுத்துள்ளன. இப்பொருட்கள் எல்லாம் சேர்ந்து 30 சதவிகிதம்தான். உடம்பின் எடையில் எஞ்சிய எழுபது சதவிகிதமும் தண்ணீர் இது மட்டுமல்லாமல் காற்றும் ஆகாயமும் மனித யாக்கையை பிணைத்து வைத்து இயக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

திருவள்ளுவர் போன்றவர்கள் வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள். பஞ்சபூதங்களைத்தான் இவர்கள் முக்கூறிட்டுக் கூறுகின்றனர். ஆகாயமும் காற்றும் சேர்ந்து வாதமாகவும், சூடு, பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும், கபமாகவும் பெயரிடப்படுகின்றன. ஒன்றை ஐந்தாகவும், மூன்றாகவும் பகுத்துப் பேசுவது நமது மரபு. தத்துவங்களை முப்பத்தாறாகவும், தொண்ணூற்றாறாகவும் பேசுவதும் உண்டு. விரிதலும், சுருங்குதலும் வசதி கருதியேயாகும்.

உண்மை என்னவென்றால் நுண்மையிலும் நுண்மையான ஒன்றாகிய இம்முதற்பொருளின் தன்மை அல்லது குணம். அறிவும் ஆனந்தமும் உடையது என்று பருமையிலிருந்து உண்மைக்கு ஆழ்ந்த தியானத்தின் மூலம் சென்ற சித்தர்கள் கண்டு கூறுகின்றனர்.

இந்நுண் பொருளே தனது ஆற்றலினால் அருவப் பொருளாகவும், அருவுருவப் பொருளாகவும், உருவம் தாங்கிய பருப்பொருட்களாகவும் மலர்ந்துள்ளது. இதனைத் திருமூலர் திருமந்திரப் பாடல் ஒன்றில் தெளிவாக விளக்குகின்றார்.

'ஒன்றவன்தானே, இரண்டவன் இன்னருள்
மூன்றுள் நின்றனன், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச்
சென்றனன், தானிருந்தான் உணர்ந்து எட்டேன்’

இவ்வாறு மூலப்பொருளாகிய அவ்வொன்றே பலவாக உருவெடுத்துள்ளது.

இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, ரசம் முதலியவற்றின் கூட்டால் ஆனது இவ்வுடம்பு என்பது சாதாரண மக்களும் பார்த்துத் தெரிந்து கொள்ளக்கூடியது. இதனையே துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்ற அறுசுவைகளின் சேர்க்கையாலும் உண்டாவது எனலாம். துவர்ப்பும் புளிப்பும் வாதம்; உப்பும் கசப்பும் பித்தம்; இனிப்பும் காரமும் கபம் என முப்பொருளாகப் பிரிக்கலாம். இப்படி பிரித்தறிதல் உடல் ஓம்பலுக்கு உதவியாக இருக்கும்.

இந்த உடம்பு தன்னிறைவுடையது; தானியங்கி. இதனுள் நாம் உணவுப்பண்டங்களைப் போட்டால், அவற்றை உயிர் பண்டங்களாக்கி, உடல் வளர்ச்சிக்கும் வேலையால் உண்டாகும், குறைவை நிரப்புவதற்கும் உடல் தானே பயன்படுத்திக் கொள்கின்றது.

உடல் ஒரு அற்புத இயந்திரம். இதனைப் பார்த்தே பிற இயந்திரங்களும் ஆக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையாகாது. இது தனக்கு வேண்டிய பொருள்களைத்தானே உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பெரிய பாக்டரி. இதில் எத்தனையோ பிரிவுகள் இயங்குகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றுவதை எண்ணி எண்ணி வியப்பிலாழ்கின்றனர் அறிஞர் அனைவரும்.

பஞ்சபூதங்கள் அல்லது வாத, பித்த, கபம் என்னும் முப்பொருள்களும் சரியான அளவில் இருப்பதே ஆரோக்கியநிலை. இதில் ஏதாவதொன்று மிகுதியாகவோ, குறைவாகவோ இருப்பது நோயின் அறிகுறி. இதனைத்தான் திருவள்ளுவர் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்கின்றனர். இம்மூன்றின் சமநிலை தவறியபோது உடம்புக்குத் துன்பம் உண்டாகும். மிகுதியானதைக் குறைப்பதும் குறைவை நிறைப்பதும் ஆரோக்கியத்திற்கு வழிகோலும்.

(இயற்கை வளரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக