நான்காம் நாள் நிகழ்வுகள்-29-12-2011
வியாழக்கிழமை (முற்பகல்)
குதிரையாறு நீர்த்தேக்கம் மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்டிருக்கிறது. மார்கழிக் குளிரில் கொடைக்கானல் மலைச்சாரலின் காற்று சில்லென்று வீசி எங்களை நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தது.மரங்களும், செடிகொடிகளும் செழித்து வளர்ந்திருக்க நீர்வளமும், நிலவளமும் செழுமை கூடி மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் கொடைக்கானல் மலைப்பகுதியில் பசுமை நிறம் மட்டுமே பல பரிமாணங்களில் ஒளி வீசிக் கொண்டிருக்க நாங்கள் அருவியை நோக்கிச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.
குதிரையாறு அணைக்கட்டு.
அருவியில் குளிக்கப் போகும் மகிழ்ச்சியில்
மனமொருமித்த அணி.
பாஸ்கர் சாப்பிடும் பழத்தை பறிக்க முயல்கிறார் நாகராஜன்,
'இது என்ன கலாட்டா?' என்கிறார் பன்னீர்செல்வம்.
கலாட்டாவை ரசிப்பவர் ஹரிஹரன்(அஷ்வின்ஜி).
பறவைகள் எல்லாம் மீன் பிடித்து பசி தீர்ந்த களிப்பில் பல ராகங்களில் கீதங்களை இசைத்து இயற்கையின் உன்னதமான ஒலியான அமைதியைக் கவலைப்படாமல் கலைத்துக் கொண்டிருந்தன.முன்பின் அறிமுகம் இல்லாத புதியவர்கள் காட்டுக்குள் நுழைந்தால் அவை தமக்குள் சங்கேதங்களைப் பறிமாரிக் கொள்ளும் வகையில் ஒலி எழுப்பிக் கொள்ளும் என்று எங்கோ புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது.
''யாரோ நம்ம காட்டுக்குள்ளே வராங்க. எல்லாரும் கவனமா இருங்க'' என்று அவை அறிவிப்பதை மற்ற மிருகங்களும் புரிந்து கொண்டு பாதுகாப்புக்காக அடுத்த நகர்வுகளை (தப்பிப்போ அல்லது திருப்பித் தாக்கு) மேற்கொள்ளும் என்றும் படித்திருக்கிற நினைவு வந்தது.
நாங்கள் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தோம். ஒருபுறம் மலைப் பகுதி உயர்ந்து கொண்டே செல்ல, மற்றொரு புறத்தில் நீர் நிலை விரிந்து எங்கள் பாதை நடுவில் வளைந்து பாம்பு போல நீண்டு சென்று கொண்டிருந்தது. கொஞ்சமாக உயர்ந்து கொண்டே பாதை எங்களை வனத்துக்குள் அழைத்துச் சென்றது.முதலில் சமவெளியாக தொடங்கிய பாதை பின்னர் கரடு முரடான, சீரற்ற, குண்டும், குழியுமான பாதையாக மாற ஆரம்பித்தது. உயரம் அதிகரித்த அதே வேளையில் மரங்களின் அடர்த்தியும் அதிகரித்துக் கொண்டே போனது.
ஓங்கிய பெருங்காடு...
நெடிய பயணம் துவங்கிவிட்டது..
எழிலோவியமாய்..
நீர்ப்பரப்பின் பின்னணியில் மேற்கு தொடர்ச்சி மலைகள்.
இயற்கை அன்னை வரைந்த எழிலோவியம்.
அணைக்கட்டுக்கு பின்னே வந்தாச்சு.
இன்னொரு வண்ண ஓவியம்..
நீண்டு செல்லும் மலைப் பாதை.
அடர்ந்து காணும் காட்டு மரங்கள்.
இயற்கை தீட்டிய ஓவியம்..
கண்ணாடியாய் விரியும் நீர்ப்பரப்பில் மலையின் பிம்பம்..
மற்றொரு எழிலோவியம்...
எங்களுக்கு வழிகாட்டியாக வந்த பெரியவர் முன்னே செல்ல நாங்கள் அவரைப் பின்பற்றி முன்னேறிச் சென்றோம். நண்பர் பிரேம்குமார் காமிராவில் இருக்கும் இயற்கை காட்சிகளை வரும் வழியெல்லாம் படம் பிடித்துக் கொண்டே வந்தார். சில நேரங்களில் அவர் பின் தங்கிய போது வழிகாட்டி குரலெடுத்து அழைத்து எங்கள் அனைவரையும் ஒன்றாகவே தொடர்ந்து வரச் சொன்னார்.
ஒண்ணா நடக்கக் கத்துக்கணும்;
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்,
என்கிறார் யோகா முருகன்.
சில சமயங்களில் காட்டுப் பன்றி போன்ற சில மிருகங்கள் தனியாக வருபவரை மிரட்டவோ தாக்கவோ செய்யுமாம். வருபவர் தம்மை வேட்டையாட வருகிறார் என்ற அச்சமே இதற்குக் காரணம். கூட்டமாக செல்லும் போது இந்த மிருகங்கள் நம் பார்வையில் படாமல் பின் வாங்கி விடும் என்றார் யோகாச்சார்யா முருகன்ஜி. எனவே காட்டுவழிப் பாதையில் ஒன்றாகச் செல்லுவது நல்லது என்றார்.
(பகிர்தல் தொடரும்)
(பகிர்தல் தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக