வெள்ளி, 20 ஜனவரி, 2012

13. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வில் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்.

நான்காம் நாள் நிகழ்வுகள்-29-12-2011
வியாழக்கிழமை (முற்பகல்) 
தொடர்கிறது.
வண்ண ஓவியங்களாய் இயற்கை அன்னை எண்ணும் ஓவியக்காரி வரைந்து இறைத்திருந்த அழகிய சுற்றுச் சூழல்களை கண்களால் பருகிக் கொண்டே நாங்கள் சுமார் அரை மணிநேரம் நடந்த பின்னர் காட்டுக்குள் இருந்த கோவிலை அடைந்தோம். 
அதோ தெரிகிறது கோவில்.
உயரமான பாறை ஒன்று பின்னணியில் இருக்க ஆலமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க அந்த இடத்தில் கோவில் நேர்த்தியாக அமைந்திருந்தது.வலசு கருப்பண்ணன் என்கிற கிராம தேவதை (நம்மூர் ஐயனார் மாதிரி) சிவனின் அம்சம் என்கிறார்கள்.கோவில் பூசாரியும் அவரது மனைவியும் இன்முகத்தோடு வணங்கி எங்களை எதிர்கொண்டு வரவேற்றார்கள்.  விருந்தோம்பலின் அடையாளமாக எங்களுக்கு குடிக்க நீரும், மென்று தின்று பசியாற பச்சைக் கம்பும், இனிப்பு அவலும், பழங்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடந்த களைப்பு தீர முதலில் தண்ணீரை அருந்திய பின்னர் கடவுளை மனசாரத் தொழுதோம். பின்னர் அனைவரும் அமர்ந்திருந்து அவல் மற்றும் பழங்களை உண்டு கொஞ்ச நேரம் எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். 

 கோவில் வாசலில் யோகாசார்யாவுடன்...

 மலைக்கோவில் வாசலில்...

ரம்மியமான சூழலில் மலைக்கோவில்..

கம்பும் மலையூத்து தண்ணீரும் தந்த புத்துணர்வில் மேலும் அருவியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். 
 கம்பும், வேர்க்கடலையும்.

கோவில் பூசாரி, அவரது மனைவியுடன் 
எங்கள் வழிகாட்டி.

அருவியில் குளித்து முடித்து நாங்கள் திரும்பி வருகையில் மதிய பூசை நடத்தப்பெற்று மதிய உணவாக இயற்கை உணவு, பழங்கள், மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் எங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது என்று யோகா முருகன்ஜி சொன்னார். அருவியை அடைய மேலும் ஒரு மணி நேரத்துக்கு குறையாமல் நடக்க வேண்டிவரும் என்ற வழிகாட்டி எங்களை தொடர்ந்து வரச் சொல்லி விட்டு முன்னே நடக்கத் தொடங்கினார். 

நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம். மேலே செல்ல செல்ல பாதை கடினமாக இருந்தது. சில இடங்களில் தாவியும், குதித்தும், கம்பியில் நடப்பது போல பாலன்ஸ் செய்தும் செல்ல வேண்டி இருந்தது. குறுகலான பாதைகளை கடந்தோம். சில இடங்களில் பாறைகளில் நடக்க வேண்டி வந்த போது நீர் வழிந்து அந்த பாறை வழுக்குப் பாறையாக இருந்த போது கவனமாக அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டி இருந்தது. மேலே மேலே சென்ற பின்னர் வந்த வழியை திரும்பிப் பார்த்தோம். நாங்கள் கிட்டத் தட்ட அணைக்கட்டின் நேர்ப் பின்னால் இருந்ததை அறிந்து கொண்டோம். மலைகளில் வழிந்தோடி வரும் சிறு நீரோடைகள் ஒன்று திறந்து ஒரு அருவியாய் மாறி குதிரையாறு என்ற அருவியாறாக மாறுகிறது. 

செல்லும் வழியில் சில புற்களை பார்த்தோம். சாதாரண கோரைப் புற்களை போல இருந்த அவற்றை கசக்கி முகர்ந்து பார்க்கச் சொன்னார் எங்களது வழிகாட்டி. ஆஹா. என்னதொரு அற்புதம்! அது வெளிப்படுத்திய வாசனை தலைவலித் தைலத்தின் வாசனையாக இருந்தது.இந்த வாசனை தலைவலியை நீக்கி புத்துணர்ச்சியை தரவல்லதாம். இயற்கை அன்னையின் தைலப் புல்லைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன்.  நவீன மருத்துவத்தில் இரசாயனங்களை கலந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட தைலங்களைத் தானே நாம் பயன்படுத்துகிறோம். அதைப் பார்க்கையில் இந்த வாசனையும் அது தரும் பயனும் எவ்வளவு மேம்பட்டது என எண்ணி வியந்தோம்.

மேலும் முன்னேறி செல்கையில் யானை போட்டிருந்த லத்தி(சாணம்)களைக் கண்டோம். யானைக் காலடித் தடங்களும் ஆங்காங்கே தென்பட்டன. மாலை நான்கு மணிக்கு மேலே யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் அருந்த நீர்நிலைப் பக்கமாக வருமாம். அவை வருவதற்குள் நாம் இந்த இடத்தில் இருந்து திரும்பிச் சென்று விட வேண்டும். 

செல்லும் வழியில் செத்துக் கிடக்கும் கழுதை.

 
மனசை உருக்கி திகிலையும் ஊட்டிய காட்சி.

நாங்கள் செல்லும் ஒரு குறுகிய வழியில் கழுதை ஒன்று செத்துக் கிடந்ததைக் கண்டு நாங்கள் அனைவரும் திகைத்தோம். துஷ்டமிருகங்கள் ஏதாவது அதனை கொன்றிருக்கலாமோ என்ற கலவரம் ஏற்பட்டது. வழிகாட்டி எங்கள் பயத்தைப் போக்கினார். 

அவர் சொன்ன முதல் பாயின்ட்:- 
  • கழுதை எந்த விலங்காலும் தாக்கப்படவில்லை. அதன் உடம்பில் எந்தக் காயமும் இல்லை.  எனவே உடல்நலக் குறைவால் அது இறந்திருக்கலாம். 
  • இரண்டாவது பாயின்ட்: இது காட்டுக் கழுதை அல்ல. பழக்கிய கழுதை. சுமை தூக்கி வந்த போது இயலாமல் இறந்திருக்கலாம்.அதனால் பயப்பட ஏதுமில்லை .
காரணம் என்னவாக இருப்பினும் தனிமைக் காட்டில் உயிரற்ற ஒரு சடலத்தை கண்ட காட்சி மனசை என்னவோ செய்தது. வாழ்க்கையின் நிலையாமையை எண்ணிக கொண்டே மேலே நடந்தோம். இன்னமும் சற்று தூரம் மலையேறிய பின்னர் தூரத்தில் அருவியைக் கண்டோம்.



 தொலை தூரம் காத்திருக்கு.

கண்ணுக்கு எட்டிய தொலைவில் மலையின் உச்சியில் இருந்து காணக் கண் கொள்ளாமல் ஓவென்று இரைச்சலோடு ஒரு அருவி கொட்டிக் கொண்டிருந்தது. 
அதுதான் குதிரையாறு அருவி
வழிகாட்டியுடன் பேசிக் கொண்டே வந்தோம். 'ரொம்பத் தொலைவில் ஒரு அருவி தெரிகிறதே அதுதான் குதிரையாறு அருவி.' என்றார் அவர். நான் கேட்டேன்: 'நாம் அங்கேயா செல்லப் போகிறோம்.? '

அவர்: 'இல்லையில்லை. நாம் இந்த சீசனில் அங்கே செல்ல முடியாது. இப்போது அங்கே செல்ல சரியான வழி இல்லை. மார்ச்சு மாதத்தில் தான் அங்கே செல்லலாம்.'  

நான்: 'அப்படியானால் இப்போது நாம் செல்லப் போவது?'

அவர்: 'நாம் இப்போது போகப் போகும் இடம். ஜமுக்காளப் பாறை அருவி (carpet falls) எனும் இடம். அந்த அருவியை அடைவதற்கு இன்னமும் நிறைய தூரம் கடந்தாக வேண்டும். அதற்கான நேரம் போதாது. எனவே அதற்கு முன்னதாக வரும் வண்ணான் துறை எனப்படும் இடத்தில் விழும் சிறு நீரருவியில் குளிப்பது பாதுகாப்பானது. இதற்கு மேல் பயணித்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் மதிய உணவுக்கு கோவிலுக்கு திரும்ப இயலாமல் போய்விடும்.'

கொடைக்கானல் உச்சியில் இருந்து பேரிஜம் வழியாக பாப்பம்பட்டி பகுதிக்கு வரும் காட்டுப்பாதையில் தான் நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். இந்த மலைப்பாதையில் நிறைய ஊர்கள் உள்ளன. அவர்களது விளைபொருட்களை கீழே கொண்டுவர கழுதைகள் பயன்படுத்தப்படுமாம். அதில் ஒன்றுதான் நாங்கள் வரும் வழியில் பார்த்த செத்துப் போன கழுதை. இது போலவே கீழே உள்ள கிராமங்களில் இருந்தும் பல பொருட்கள் காட்டுப் பாதை வழியாக மலே உள்ள இந்த மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் கொண்டு செல்லப்படுமாம்.

பேசிக் கொண்டே நாங்கள் நடந்து வண்ணான் துறையை அடைந்தோம். அழகான சிற்றருவி ஒன்று எங்கள் கவனத்தை ஈர்த்தது. வண்ணான்துறை பகுதியில் பாதுகாப்பான ஒரு பாறையில் இருந்து நீர் அருவியாக கொட்டி கொண்டிருந்தது. அது ஒரு ஆழமான இடத்தில் தேங்கி மீண்டும் குறுகலான வழியில் ஒன்று திரண்டு குதிரையாறு அருவியில் சென்று சேர்கிறது. ஆழமான இடத்தில் அதிக பட்சமாக ஒரு ஆள் ஆழம்தான் இருக்கும். முதலில் இறங்கிக் குளித்த வழிகாட்டி எங்களை நீரில் இறங்கிக் குளிக்கச் சொன்னார்.

 
கச்சிதமாய் ஒரு சிற்றருவி

பாறையில் வழிந்தோடும் நீரருவி.

இந்த இடம் எங்(பெண்)களுக்கு ரொம்ப ரொம்ப பாதுகாப்பா இருக்கு.

யோகாசார்யா முருகன்ஜீயும் மற்றும் சில அன்பர்களும் தங்களுக்கு தேவையான இடங்கலாகப் பார்த்து தேர்ந்தெடுத்து குளிக்கப் போனார்கள். வண்ணான் துறை சிற்றருவிக்கும் சற்று தொலைவில் மேல் புறமாக ஏறிச் சென்று சரிவான பாறையில் வழிந்து வரும் அருவி நீரில் படுத்தும், அமர்ந்து தியானம் செய்தும், ஆசனங்கள் செய்தும் குளித்தார்கள். நானும் பிரேம்குமாரும், பி.எஸ்.என்.எல் பாஸ்கரும் சிற்றருவியில் குளித்தோம். 

தண்ணீர் தொடமுடியாத அளவுக்கு குளிராக இருந்தது. 

இறங்கி ஒரு முழுக்கு போட்ட பின்னரே குளிர் அடங்கியது. 

  பயணம் 'success' என்கிறார் பிரேம்.

 நடுக்கும் குளிரில் பனியன் பேண்டுடனே குளிக்கிறார் BSNL பாஸ்கர்.

எங்களுடன் வந்த இரு பெண்களும் இந்த இடம் பாதுகாப்பு என்பதினால் மகிழ்ச்சியாக குளித்தார்கள்.

 திருமதி பாஸ்கர், திருமதி தமிழ்செல்வி.

 மழலையாய் மனசு மாறி....

நேரம் போனது கூடத் தெரியாமல் குழந்தைகள் போல கவலை மறந்து குளித்துக் கொண்டிருந்த எங்களை வழிகாட்டி பெரியவர் இனிமேல் காலம் கடத்த வேண்டாம் என கூறி கோவிலுக்குத் திரும்ப சொன்னார். 

 
 மனமே இல்லாமல் கரை ஏறி..

 என்னாங்க அதுக்குள்ளவே வர சொல்றீங்க.?. (பிரேம்)

 டா.டா. பை. பை. போய் வருகிறோம்.

  'பசிக்குது பாஸ். கோவிலுக்குப் போலாமா?' -சொலாரிஸ் பாஸ்கர்.

'ச்சான்சே இல்லே.ரொம்ப ஜாலியா இருக்கு' -நாகராஜன்.

பிரிய மனமின்றி அனைவரும் அந்த அருவிப் பகுதியை விட்டு பிரிந்தோம். நன்கு குளித்ததில் பசி அதிகரித்து கோவிலை நோக்கி நடந்தோம்.
(பகிர்தல் தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக