செவ்வாய், 17 ஜனவரி, 2012

11. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் அனுபவப் பகிர்வுகள்.

நான்காம் நாள் நிகழ்வுகள்-29-12-2011-
வியாழக்கிழமை (முற்பகல்/பிற்பகல்/மாலை)

அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து பழனிக்கு செல்லத் தயாரானோம்.முதல் நாள் இரவிலேயே மூன்று டூவீலர்களை எங்களிடம் தந்து விட்டார்கள். இனியன் குடும்பத்தினர் நால்வர் முதல் நாளிரவே சென்னைக்குப் புறப்பட்டு சென்று விட்டதால், எஞ்சி இருந்த நபர்களில் அறுவர் இருந்த மூன்று டூவீலர்களில் புறப்பட்டு பழநிக்குச் சென்றனர். இது போக மீதி மூவர்  பரிமளாதேவி, தமிழ்ச்செல்வி மற்றும் நான். எங்களை  கார் கொண்டு வந்து அழைத்துச் செல்வதாக முருகன்ஜி சொல்லி இருந்தார். வாகனத்தை எதிர்பார்த்து பள்ளி வளாகத்தில் நாங்கள் காத்திருந்த போது ஆறரை மணிக்கு முருகன்ஜியுடன் திருச்செந்தில் அடிகளார் எங்களை காரில் வந்து அழைத்துப் போனார். காலையிலேயே இரு சக்கர வாகனங்களில் சென்ற அன்பர்கள் எங்கள் பாதுகாப்பில் விட்டுச் சென்றிருந்த அனைத்து உடமைகளையும் வந்த காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு நாங்கள் பழனிக்குத் திரும்பினோம். உடைமைகளை யோகாச்சாரியாவின் வீட்டின் மேல் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள யோகபூரணவித்யா குருகுலத்தில் வைத்து விட்டு, அருவியில் குளிக்கத் தேவையான மாற்றுடை/துண்டு எடுத்துக் கொண்டு பழனி பேருந்து நிலையம் சென்றோம். 

அதற்கு முன்னதாக பரிமளாதேவி எங்களுடன் குதிரையாறு அணைக்கட்டுக்கு வராமல் பழனியில் உள்ள அவரது சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றுவிட்டு அன்றே கோவை செல்வதாக கூறி எங்களிடம் விடை பெற்றுக் கொண்டார். 

பேருந்து நிறுத்தத்தில் குதிரையாறு அணைக்கட்டுக்கு செல்லும் நகரப் பேருந்து எங்களுக்காக காத்திருந்தது. எங்களுடன் யோகாசாரியா முருகன்ஜி, BSNLபாஸ்கர் அவரது துணைவியார் மற்றும் முருகன்ஜீயின் நண்பர்கள் இருவர் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் முருகன்ஜீயுடன் பணிபுரிபவர்கள். குதிரையாறு அணைக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இவர்கள் தாம் எங்களை குதிரையாறு அணைக்கட்டு மற்றும் அருவிப் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்.

குதிரையாறு அணைக்கட்டு பழனி பஸ் நிலையத்தில் இருந்து இருபது கி.மீ தூரத்தில் உள்ளது. அணைக்கட்டுக்கு அடிக்கடி செல்லும் நேரடி பஸ்கள் அதிகம் இல்லை என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படும் பஸ்சில்தான் சென்றாக வேண்டும் அல்லது பாப்பம்பட்டி சாலை சந்திப்பில் இறங்கி அங்கிருந்து நான்கு கி.மீ. நடந்து சென்றால், அணைக்கட்டினை அடையலாம். பழனியில் இருந்து குதிரையார் அணைக்கட்டுக்கு பேருந்து கட்டணம் ஒரு நபருக்கு எட்டு ரூபாய் வசூலிக்கிறார்கள். செல்லும் வழியெல்லாம் பசுமையாக இருந்தது.பழனம் என்றாலே வயல் பொழில்கள் என்றல்லவா பொருள்? இப்போதும் பழனி மலை மேலிருந்து பார்த்தாலே நாலாப்புறமும் நிறைய நீர்நிலைகளும்,பசிய வயல்பொழில்களும் தென்படுவதை கண்டு மனம் குளிரலாம்.  

இன்னமும் நகரத்தின் கான்க்ரீட் காடுகள் பழனியின் புறநகர்ப் பகுதிகளை பெருமளவில் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் ஆங்காங்கே லேஅவுட்டுகள் உருவாகி வருவதைக் காணமுடிகிறது.விளைநிலங்களை வீடுகட்ட விற்றுவிட்டால் பின்னர் எதை உண்பது என்ற கவலை கொஞ்சம் கூட அரசுக்கோ,ரியல்எஸ்டேட் வியாபாரிகளுக்கோ,மக்களுக்கோ இல்லை.பழனி முருகன் தான் இவர்கள் கண்களைத் திறக்கவேண்டும் என வேண்டிக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

காலை ஒன்பது மணி:
குதிரையாறு அணைக்கட்டு:
இந்த எண்ண ஓட்டத்தில் பயணித்த இருபது நிமிடத்தில் பஸ் எங்களை குதிரையாறு அணைக்கட்டுப் பகுதியில் சென்று சேர்த்தது.  பஸ்சில் இருந்து இறங்கி நடை தூரத்தில் உள்ள அணைக்கட்டுப் பகுதிக்கு சென்றோம்.   குதிரையாறு அணையின் உயரம் எழுபத்தெட்டு அடி நேற்று நாங்கள் பார்த்த வரதமாநதி அணைக்கட்டை விட உயரம் சற்றே அதிகம். வரதமாநதி அணைக்கட்டு பழனி-கொடைக்கானல் செல்லும் பிரதானசாலையில் அமைந்திருப்பதைப் போலல்லாமல் குதிரையாறு அணை மிகவும் ஒதுக்குப்புறமாக அமைந்து அமைதிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது.பறவைகள் ஒலி எழுப்புவதைத் தவிர வேறொரு சப்தமும் இல்லாமல் மிகவும் ரம்மியமான அமைதி நிலவும் இடம் இந்தப் பகுதி. 

சென்னை நரகின் (பிழையில்லை!) ஒலி, காற்று, நீர் மாசு எதுவுமின்றி இங்கே மாசில்லா சூழலை உணரமுடிகிறது. எங்களது உடலில் அமைந்துள்ள கோடானுகோடி உயிரணுக்களும் சுத்தமான மாசற்ற காற்றையும், நீரையும் கடந்த நான்கு நாட்களாக அருந்தி சுவாசித்து குதூகலித்து புத்துணர்வு பெற்று இறைவா நன்றி இறைவா நன்றி என சொல்லிக் கொண்டிருந்தன. மனமும் மாசின்றி இருந்ததை உணர முடிகிறது.

எல்லோரும் அணைக்கட்டுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கையில் கொண்டு வந்திருந்த பழங்களை காலைச் சிற்றுண்டியாக சாப்பிட்டோம்.

இந்த அணைக்கட்டின் பின்புறமாக நீர்நிலையை ஒட்டிய மலைப்பாதையில் சுமார் ஆறு கி.மீ நடந்து சென்றால் அருவிப் பகுதியை அடையலாம். மான்கள், யானைகள், சிறுத்தை, ஓநாய், கழுதைப் புலி போன்ற காட்டு மிருகங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் பகுதி என்பதால் இந்த பகுதி வாழ் மக்களின் துணையின்றி உள்ளே நடந்து செல்வது அபாயகரமானது. சில நாட்களுக்கு முன்னர் தொடர் மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துக் கொண்டு தப்பித்தவறி ஊர்ப் பக்கமாக வந்த முதலை ஒன்றினை ஊர் மக்கள் பிடித்து வைத்த செய்தி ஒன்றினைப் பத்திரிகையில் படித்த நினைவு வந்தது.  

மேலும் மலைப்பாதை கரடு முரடானது மற்றுமின்றி அங்கங்கே வழி இரண்டு மூன்றாக பிரிவதால் சரியான பாதையை தவற விட்டு விட்டால் காட்டுக்குள் திசை மாறிச் சென்று விடக் கூடிய அபாயமும் இருக்கிறது. எனவே அந்த ஊரைச் சேர்ந்த இருவருடன் மேலும் ஒரு பெரியவரை வழிகாட்டியாக கொண்டு நாங்கள் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் காட்டுக்குள் செல்ல அந்தப் பகுதி வனச்சரகரிடம் ஏற்கனவே அனுமதியும் பெற்று வைத்திருந்தார்கள் உள்ளூர் நண்பர்கள்.அதுமட்டுமின்றி அருவிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் வலசுகருப்பன் கோவிலில் காலை போகும் போது இளைப்பாறி விட்டு திரும்பும் வழியில் எங்களுக்கு மதியம் இயற்கை உணவும், கோவிலில் பூசையும் நிகழ்த்திடவும் ஏற்கனவே முருகன்ஜீயால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலைக்கோவில் பூசை, மற்றும் மதிய உணவுக்கான பொருட்கள் யாவும் முன்பே அங்கே கொண்டு செல்லப்பட்டிருந்தன.பழனித் திருப்பதியில் அருள்பாலிக்கும் வேலவனே,எங்களுக்கு யோகாச்சாரியா முருகன்ஜி வடிவிலும், திருச்செந்தில் அடிகள் வடிவிலும், மற்றும் தமிழ்நாடு இரும்பு வணிக அதிபர் மணி அவர்கள் வடிவிலும் எங்களுக்கு எல்லா உதவிகளையும் அருளிக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. 
(பகிர்தல் தொடரும்)

4 கருத்துகள்:

guna சொன்னது…

very intersting sir. next programme date ?

Ashwin Ji சொன்னது…

நல்வரவு குணா.
அடுத்த பழனி முகாம் மே அல்லது ஜூன் மாதத்தில் இருக்கலாம். வேறு இடங்களிலும் முகாம்கள் நடக்கும். அவை பற்றிய அறிவிப்புகளை இங்கே வெளியிடுவேன்.இந்த வலைப்பூவை தொடர்ந்து படித்து வாருங்கள். நன்றி.

அஷ்வின்ஜி.

Iniyan சொன்னது…

If the program is in May 2012 (School Holidays), I shall attend the same with my family, without fail. -Iniyan

Ashwin Ji சொன்னது…

அன்பிற்கினியன், வருகிற மே மாதம் நடத்த இயலுமா? தெரியவில்லை. அந்த மாதத்தில் எனக்கு பலகலைக் கழகத் தேர்வு இருக்கும். தேர்வு தேதி முகாம் தேதிகளில் குறுக்கிட்டால் குழப்பமாகி விடும். பார்ப்போம்.

கருத்துரையிடுக